திராவிடர் வரலாற்று மய்யம்
சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைமையிடத்தில் எத்தனை எத்தனையோ சிறப்புமிக்க கருத்துகள், அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றபேராசிரியர்கள் பலரும் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் (Dravidian Historical Research Centre) ஒன்று உருவாக்கம் செய்யப்பட்டது.
இது உருவாக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? வரலாற்றில் மூத்த இனமான ஒரு காலத்தில் இந்தியா முழுமையும் பரவியிருந்த இனமான திராவிட இனம் பற்றி சரியான வரலாற்றுத் தகவல்களையும், ஆவணங்களையும் வெளிப்படுத்துவது என்பது அதன் முதன்மையான நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
ஆரியராவது திராவிடராவது என்று பார்ப்பனீயத்தை முதுகெலும்பாகக் கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் கும்பல் திட்டமிட்ட வகைகளில் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்துகொண்டு வருகின்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்களில் இத்தகைய தவறான தகவல்கள் பிஞ்சு உள்ளங்களில் திணிக்கப்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ் தங்களின் வசீகர கதாநாயகனாக பயன்படுத்திக் கொள்ளப்படுகிற விவேகானந்தரிலிருந்து, ஜவஹர்லால் நேரு, பி.டி.சீனிவாச அய்யங்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் உள்பட வரலாற்றில் ஆரியர் இனம் பற்றிப் பலபடப் பேசி இருக்கிறார்கள், எழுதிக் குவித்தும் இருக்கிறார்கள். இராமாயணம் என்பதே ஆரியர் திராவிடர் போராட்டத்தின் வெளிப்பாடே என்று எத்தனை எத்தனையோ பேராசிரியர்கள் ஆய்வுக் கண்ணோட்டத்தில் மறுக்க முடியாத ஆதாரங்களோடு நிறுவியும் இருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, ஒரு சுயநல நோக்கோடு பல திரிபுவாதங்கள் நாட்டிலே தலைதூக்கும் வண்ணம் திட்டமிட்ட வகையில் காரியங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, திராவிட இயக்கத்தால் ஏற்பட்ட நலன்களையும், மாற்றங்களையும், உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களே திராவிடர் என்பது. திராவிடர் இயக்கம் என்பது ஆகாத ஒன்று. கூடாத ஒன்று என்பது போல, ஆரியர்களின் கைப்பிள்ளைகளாக சிலர் மழலை மொழி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
திராவிடர்கள் பற்றிய முறையான வரலாறு இல்லாமையாலும், திராவிடர் இயக்கம்பற்றி போதுமான தகவல்கள் வெளிவராமையாலும், சிலர் குழப்ப முயற்சிக்கின்றனர். இந்தப் படுகுழியில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் நம் இளைஞர்கள் வீழ்ந்து விடக்கூடாது என்ற பொறுப்பான கடமை உணர்ச்சியோடு, இந்த அமைப்பு நேற்று பெரியார் திடலில் உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பு வரலாற்றால் வாழ்த்தி வரவேற்கப்படும் என்பதில் அய்யமில்லை. மிக பொருத்தமானவர்கள், இந்தத் தத்துவத்தில் உயிர் மூச்சு வைத்திருப்பவர்கள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டிருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.
இதற்கு உலகம் முழுவதும் உள்ள பார்ப்பனர் அல்லாத திராவிட இனத்தைச் சேர்ந்த அத்தனைப் பேரும் ஆதரவுக் கையை உயர்த்திக் காட்டுவார்கள் என்பதில் அய்யமில்லை. பல வகைகளிலும் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த அமைப்பு கூடி விவாதிக்கும், கருத்தரங்குகளை நடத்தும், காலாண்டு இதழ் ஒன்றையும் இரு மொழிகளில் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தொடங்கவும் உள்ளது.
காலங்கருதி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பை உருவாக்கியவர்களுக்கு உள்ளங் கனிந்த பாராட்டுகளை, நன்றியினை உரித்தாக்கிக் கொள்வோம். இந்த அமைப்பு மேலும் மேலும் வலுப்பெற, ஒளிபெற கட்சிகளைக் கடந்த அனைத்துத் தரப்பு இன உணர்வாளர்களும் ஆதரவு அளிப்பார்களாக!
------------------ ”விடுதலை” தலையங்கம் 26-4-2010
0 comments:
Post a Comment