ஏழுமலையான் - நாமமோ, நாமம்!
அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தங்கள் அணிதான் ஜெயிக்கவேண்டும், போட்டிகளை ஏலத்தில் எடுத்த பணத் திமிங்கலங்கள் திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டுதல் செய்தும், தரிசனம் செய்தும், காணிக்கைகளை குவித்தும் விண்ணப்பித்துக் கொண்டிருந்தனர்.
பெங்களூரு அணிதான் வெற்றி பெறவேண்டும் என்று அதன் தலைவர் விஜய் மல்லையா கடந்த 25 ஆம் தேதி நேரில் வந்து ஏழுமலையானுக்குக் கும்பிடு தண்டம் போட்டார்.
மும்பை அணிதான் ஜெயிக்கவேண்டும் என்று முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி 24 ஆம் தேதி இரவு _ கோயில் மூடியதற்குப் பிறகும்கூட, கதவைத் திறக்கச் சொல்லி காணிக்கைகளைக் கொட்டினார். இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பணமாம். ஒரு பெரிய பை நிறைய நகைகளாம். இவையெல்லாம் அம்பானி குடும்பத்தினர் தனி விமானத்தில் வந்து ஏழுமலையானுக்குக் கொட்டிய காணிக்கைகளாம்.
இந்த வகையில் அம்பானி குடும்பம் திருப்பதிக்கு வருவது மூன்றாவது முறையாம்!
ஏழுமலையான் கோயிலில் விமானத் தங்கத்தகடு திருப்பணிக்காக ரூபாய் 5 கோடி கொடுத்துள்ளாராம்.
பஞ்சாப் அணியை ஏலம் எடுத்த பிரபல நடிகை பிரித்தி ஜிந்தா என்ன செய்தார் தெரியுமா? இரண்டு ஹெலிகாப்டரில் இமயமலை அடிவாரத்தில் உள்ள ஹரித்துவாரில் சின்மயானந்த் சாமியார் ஆசிரமம் சென்றார். கங்கையில் நீராடினார். தர்மங்கேஷ்வர் கோயிலுக்குச் சென்று சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. பஞ்சாப் அணி வெல்லவேண்டும் என்பதற்காகத்தான் இந்த யாகங்கள்.
இதில் உள்ள வேடிக்கை விநோதம் என்னவென்றால், அய்.பி.எல். போட்டியில் பங்குகொண்ட எட்டு அணிகளில் கடைசி இடம் இந்தப் பஞ்சாப் அணிக்குத்தான்.
சின்மயானந்தா சாமியாரின் ஆசிக்கு என்ன மரியாதை? யாகங்களால்தான் என்ன புண்ணியம்? கும்பிடு போட்ட கோயிலால் ஏற்பட்ட பலாபலன் என்ன?
சாயிபாபாவிடம் ஆசி பெற்று களம் இறங்கிய கவாஸ்கரும், டெண்டுல்கரும் பரிதாபமாகத் தோற்று வெளியேறிய கதைகளும் உண்டு.
இவ்வளவுக்கும் பிறகும், பெங்களூரு அணி மண்ணைக் கவ்வியது; மும்பை அணியும் மூக்கறுபட்டது.
சென்னை அணிதான் வெற்றி பெற்றது. ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்லாத - காணிக்கைகளைக் கொட்டாத சென்னை அணிதான் கடைசியாக வெற்றிக் கோப்பையைக் கவ்வியது.
சென்னை அணியை ஏலம் எடுத்த இந்தியா சிமெண்ட் சீனிவாசனும், ஜோசியரிடம் சென்று இருக்கிறார். ஜோசியர் என்ன கூறினார் தெரியுமா? நான் சொல்லும் வரிசையில் வீரர்கள் களம் இறங்கவேண்டும் என்று கூறியுள்ளார். அணியின் தலைவர் தோனியோ அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று, தன் போக்கில் நடந்துகொண்டார் வெற்றியும் கண்டார்.
விளையாட்டில் வெற்றி பெறுவதுகூட வீரர்களின் திறமை, உழைப்பின் அடிப்படையில் அல்ல அதுகூட திருப்பதி வெங்கடாஜலபதியின் கடாட்சம் வேண்டும் என்று நம்பியவர்களுக்குக் கடைசியாகக் கிடைத்தது ஏழுமலையான் மொழியில் சொல்லவேண்டுமானால், குழைத்துப் போடப்பட்ட பட்டை நாமம்தானே!
------------ கருஞ்சட்டை 27-4-2010 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment