Search This Blog

2.4.10

தமிழக வரலாறும் பெரியாரும்


பெரியாரைப் பற்றி பேராசிரியரிடம் கேளுங்கள்!

சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவு அறக்கட்டளை சிறப்புச் சொற்பொழிவினை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில், தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நிதியமைச்சருமான இனமான பேராசிரியர் மாண்புமிகு க. அன்பழகன் அவர்கள், தமிழக வரலாறும் பெரியாரும் எனும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகம் தந்தை பெரியார் மன்றத்தில் வழங்கினார்.

சுலபத்தில் உணர்ச்சிவயப்படாத பேராசிரியர் அவர்கள் தமது தொடக்கத்திலேயே ஒன்றைக் குறிப்பிட்டார். அய்யாவைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது, நானே உணர்ச்சிவயப்படும் இடங்கள் ஏற்பட்டு-விடுமோ என்று துணுக்குறுவதாகக் குறிப்பிட்டார்.

உண்மையைச் சொல்லவேண்டுமானால், தந்தை பெரியார் அவர்கள்பற்றி பேராசிரியர் எடுத்துக் கூறிய தகவல்களும், எடுத்துக்கூறிய விதமும் கேட்போர் கண்களைக் கசியச் செய்தது என்பதுதான் உண்மை.

தந்தை பெரியாரைப்போல உலகத்தில் ஒரு தலைவர் கிடையாது என்று அவர் கூறியதில் அளப்பரிய அழுத்தம் இருந்தது.

அவர்தம் உரையமுத மழையில் தெறித்த சில முத்துகள் இதோ:

1. வேறு பொருள் என்றால் தங்குதடையின்றி என்னால் பேச முடியும். ஆனால், அய்யா அவர்களைப்பற்றியல்லவா பேசுகிறேன். நிதானித்து உணர்ச்சிவயப்படாமல் பேசவேண்டும் என்று நினைக்கிறேன்.

2. எனக்குக் கிடைத்த எல்லா வாய்ப்புகளும், பேறுகளும் தந்தை பெரியாரால்தான் கிடைத்தன. சிறு குழந்தையாக நான் இருந்தபோதே எனது மாமா மாயவரம் நடராசன் அவர்களின் இல்லத்தில் எனது தந்தையாரோடு சென்று பெரியாரைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன்.

மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் காவிரியாற்று மணலில் பெரியார் பேசுவார். இரண்டு லைட்டுகள் இருக்கும். அவை பெட்ரோமாக்ஸ் விளக்குகள் அல்ல; அரிக்கேன் லைட்டுகள்.

ஒலி பெருக்கிக் கிடையாது. நூறு பேர் கூடியிருப்பார்கள். அதில் உரக்கப் பேசுவார் பெரியார்.

உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் காலம் வரைகூட பெரியார் பேச்சின் கருத்துகள் எனக்குப் புரிந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அடுத்தடுத்து அண்ணா-மலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதுதான் அய்யாவின் கருத்துகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் பெற்றேன்.

பல்கலைக் கழகத்தில் பேசவும் ஆரம்பித்தேன். குடிஅரசு இதழில் வரும் கட்டுரைகளைப் படிப்பேன். அவற்றைப் பரிமாறுவேன். ஆனால், இப்பொழுது நான் பேசும் பேச்சுக்குப் பொறுப்பேற்க வேண்டி-யுள்ளவனாக இருக்கிறேன்.

3. அந்தக் காலத்துச் சமுதாய அமைப்பு எப்படியிருந்தது? மயிலாடுதுறைக்கு கிராமப் பகுதிகளிலிருந்து வரும் ஆதிதிராவிடர்கள் டாக்டர் சாமி வீட்டுக்குப் போகிறேன். வக்கீல் சாமி வீட்டுக்குப் போகிறேன் என்றுதான் சொல்லுவார்கள். பார்ப்பனர்களை சாமி போட்டுதான் பேசுவார்கள்.

இன்றைக்குத் தமிழன் என்றால் புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழன் வளர்ந்து கொண்டு வருகிறான். பெரியார் ஊட்டிய சுயமரியாதை உணர்வு தமிழர்களின் கண்களைத் திறக்கச் செய்துள்ளது.

4. எந்த அளவுக்குச் சமுதாய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன? பெரியாருக்கு தியாகி மான்யம் அளிக்கப்படுமா என்று சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் சட்டப்பேரவையில் வினா எழுப்பியபோது, இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கைதான் என்றார் முதலமைச்சர் அண்ணா.

காரணம் என்ன? பெரியார் இல்லையென்றால், இந்த அமைச்சரவை ஏது?

1967 இல் தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில், திருச்சியில் இருந்த தந்தை பெரியாரைக் காணவேண்டும் என்று அண்ணா விரும்பினார். தேர்தலில் நமக்கு எதிர்ப்பாக இருந்தார்; நம்மையெல்லாம் திட்டியிருக்கிறார் பெரியார் என்று சிலர் சொன்னபோதுகூட அண்ணா நிதானமாகச் சொன்னார், அவர் இல்லையென்றால் நாம் எங்கேயப்பா? என்றுதான் சொன்னார்.

5. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக டாக்டர் அம்பேத்கர் பாடுபட்டார் என்றால், தாழ்த்தப்பட்ட மக்களையும் தாண்டி பிற புற சமூகத்தவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதன்மூலம் தந்தை பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்மீதான தாழ்நிலையைப் போக்க முனைந்தார்.

6. டாக்டர் கால்டுவெல் 30 ஆண்டுகள் இங்கு தங்கி தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளைப் பயின்று ஒப்பியல் நூலைத் தந்தார்.

வடமொழியிலிருந்து வந்ததுதான் தமிழ் திராவிட மொழிகள் என்ற எண்ணத்தை மாற்றியவர் கால்டுவெல். தமிழ் என்றால் நீச பாஷை என்றும், தமிழர்கள் என்றால் சூத்திரர்கள் என்றும் இழிவுபடுத்தப்பட்ட நிலை மாறத் தொடங்கியது.

தொடக்கக் காலத்தில் பிரச்சினை இல்லை இடையில் ஏற்பட்ட ஆதிக்கங்கள், ஊடுருவல்களால்தான் தமிழர்களுக்கு வீழ்ச்சி.

பல்லவர், களப்பிரர் காலத்தில் தமிழ், தமிழன்மீது ஆதிக்க நிலை உருவாக்கப்பட்டது.

திராவிடக் குடும்பம் என்ற ஒரு நிலையை நிறுவியதில் கால்டுவெல் அவர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.

இன்னும்கூட கருநாடக மாநிலத்தில் பழைய கன்னடம் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அதில் பெரும் பங்கு தமிழ்தான்.

7. திராவிடன் என்று சொல்கிறபோதுதான் ஆரியன் என்ற இனத்தோடு எந்த வகையிலும் ஒட்டாதவன் என்ற பொருள் கிடைக்கும்.

8. நாம் திராவிடன் என்று சொல்லும்போதுதான் தமிழன் என்பதற்குப் பாதுகாப்பு உண்டு. திராவிடன் என்று சொன்னால்தான் தமிழன் முழுமை பெறுவான். இன்றைக்கு திராவிடனாகிய தமிழன் செல்வாக்குப் பெற முடிகிறது என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியார்தான்.

அறிஞர்கள், புலவர் பெருமக்கள் என்போருக்கும், பொதுமக்களுக்கும் தொடர்பு கிடையாது. அந்த மக்களோடு ஒரு தொடர்பை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.

9. திராவிடர்கள் என்று நாம் சொன்னபோது நீங்களும் அந்த ஆதிதிராவிடர்களோடு சேர்ந்துவிட்டீர்களா? என்று கேட்டவர்கள் உண்டு. திராவிடர்கள் என்று சொன்னால், ஆதிதிராவிடர்கள் என்ற பொருளைத்தான் எடுத்துக் கொள்வார்கள். நான்கூட அப்பொழுது சொன்னதுண்டு. ஆதிதிராவிடர் என்றால், அதில் ஒன்றும் குறை கிடையாது. ஆதி முதல் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள்தான் மீதி திராவிடர்கள் என்றால், அதில் கொஞ்சம் குறைவுதான் என்று பதில் சொல்லியிருக்கிறேன்.

10. பகுத்தறிவு இயக்கம் என்றால், படித்தவர்கள் மத்தியில்தான் என்ற நிலைப்பாடு உலகம் முழுவதும் உண்டு மேற்கு நாடுகளில் முக்கியமாக உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கத்தை, அதன் கொள்கைகளை பாமர மக்கள் மத்தியிலும், கிராமப்புற மக்கள் மத்தியிலும் கொண்டு சென்றவர் தந்தை பெரியார்தான்.

11. இறைவழிபாட்டை மய்யப்படுத்தி பார்ப்பனப் புரோகித ஆதிக்கம் உருவாக்கப்பட்டது. இதனை Hindu Imperialism என்று சொல்லுவார்கள்.

புரோகித செல்வாக்கை உண்டுபண்ணுவதுதான் இந்தப் புரோகித மதம். இந்து என்ற பெயர்கூட பிறகு வந்ததுதான்.

இதுகுறித்து மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார்கூடக் கூறியிருக்கிறார்:

நல்லவேளை வெள்ளைக்காரன் வந்து நம்மையெல்லாம் இந்து என்று அழைத்தான். நாமும் தப்பித்தோம் என்று கூறியுள்ளார்.

இந்தப் புரோகித ஆதிக்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் பெரியார் அந்த ஆதிக்கத்தை ஒழித்தவரும் அவர்தான்..

12. தந்தை பெரியார் சுயசிந்தனையாளர். எதையும் ஏன்? எப்படி? என்று கேட்டு, கேட்டு அதன் உண்மைத் தன்மையை அறிவது என்பது தந்தை பெரியார் அவர்களுக்கு இயற்கையாக அமைந்துவிட்ட ஒன்று.

எல்லாம் உன் தலைவிதி என்று அடக்கப் பார்த்தார்கள். தலைவிதி என்றால் என்ன என்று வினா தொடுக்க ஆரம்பித்தார்.

எந்தச் சூழ்நிலையும் அவரை அடிமைப்படுத்திட முடியாது. எதுவும் அவரை ஆதிக்கம் செலுத்த முடியாது.

13. காங்கிரஸ் என்றால் அது ஒரு வைதீகப் பிடிப்பில்தான் இருந்தது. காங்கிரஸ் ஒழிக என்று ஆரம்பித்தார். அந்தக் காங்கிரசிலிருந்தும் வெளியேறினார்.

14. பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவது, பேசுவது, விவாதிப்பது என்பது தந்தை பெரியாருக்கு மகிழ்ச்சியூட்டக் கூடியது. அது அவருக்கு ஒரு என்ஜாய்மென்ட்!

மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது பெரியாருக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது.

ஜாதி இழிவை எதிர்த்துப் பேசுவது பெரியாருக்கு இன்பத்தை அளிக்கக் கூடியது. அந்த மகிழ்ச்சியும், உற்சாகமும்தான் தந்தை பெரியார் அவர்களுக்கு ஆரோக்கியத்தைத் தந்தது. Mental Relief என்பது அய்யாவுக்குப் பகுத்தறிவைப் பிரச்சாரம் செய்வதுதான்.

உபாதைகளையெல்லாம்கூட தூரத் தள்ளியது. உடல் நலனுக்கு மன நலன் என்பதும் மிக முக்கியமான ஒன்றே.

15. நான் என் சிந்தனைக்குப் பட்டதைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. அதனை ஏற்பதோ, தள்ளுவதோ மற்றவர்களுக்கு உரிமை உண்டு என்பவர் பெரியார்.

16. நான் தீர்மானிப்பதுதான் சரி மற்றவர்கள் அதனை ஏற்றுத் தீரவேண்டும், அந்த நிலைதான் நம் கொள்கைக்குப் பாதுகாப்பு என்று கருதியவர் பெரியார்.

மணியம்மையாரைத் திருமணம் செய்துகொண்டதுகூட அந்த எண்ணத்தின் அடிப்படையில்தான். தனக்குப் பிறகு இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்ற எண்ணம் பெரியாரை அந்த முடிவுக்கு இட்டுச் சென்றது.

17. பெரியாருக்கும், அண்ணாவுக்கும் உள்ள வேறுபாடு என்ன? பெரியார் தாம் நினைத்ததை, சிந்தித்ததை மற்றவர்களும் ஏற்கவேண்டும் என்று கருதியவர். அண்ணாவோ, ஜனநாயக முறைப்படி பல நேரங்களில் விட்டுக் கொடுத்துச் செல்லக்கூடியவர்.

பெரியார் எதிர்நீச்சல் போட்டு வெற்றி காணக்கூடியவர்; கரையேறக் கூடியவர். அறிஞர் அண்ணாவோ வெள்ளத்தோடு சென்று கரையேறக் கூடியவர்.

18. தனி மனிதர் என்று எடுத்துக்கொண்டால், பெரியாருக்கு இணையாக உலகில் வேறு எந்தத் தலைவரையும் கூறவே முடியாது.

19. பெரியார் யாரை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதனால் தமிழர்களுக்கு என்ன நன்மை? காமராசரை ஆதரித்தால் தமிழர்களுக்கு நன்மை என்றால், அண்ணாவையும் எதிர்ப்பார். அவர் எடுத்துக்கொண்ட இலக்குதான் அவருக்கு முக்கியமே தவிர, மற்றவையல்ல!

20. பெரியார் மெல்ல மெல்ல வெற்றி பெற்றுதான் வந்திருக்கிறார்.

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தபோது 300 மாணவர்கள் பார்ப்பனர்கள் என்றால், 100 மாணவர்கள்தாம் பார்ப்பனர் அல்லாதார்! இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதா, இல்லையா?

பெரியார் போராடி, மற்றவர்களும் அவருக்குத் துணை நின்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடுக்காக முதல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வராவிட்டால், நம் மக்களின் நிலை என்ன?

21. பெரியார்தான் தமிழனைக் கண்டுபிடித்தார். இதே பல்கலைக்கழகத்தில் தமிழுக்காகப் போராடவேண்டிய காலகட்டம் இருந்தது. மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும் என்ற நிபந்தனைகூட இருந்தது.

அந்த முட்டுக்கட்டை எப்பொழுது மாறியது? மாற்றத்திற்குக் காரணம் யார்? அதை இன்றைக்குத் தமிழர்கள் உணராமல் இருக்கிறார்களே, அதுதான் ஆச்சரியமானது! என்றார் இனமானப் பேராசிரியர்.

விழாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கினார். சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பேராசிரியர் முனைவர் சரவணன் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் முனைவர் வீ. அரசு நன்றி கூறினார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் F50 என்றால், கூட்டங்கள் நடைபெறும் மாநாட்டு அரங்கைக் குறிக்கும். துணைவேந்தர் திருவாசகம் அவர்கள் அந்த மன்றத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டியுள்ளார் என்பது மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரிய ஒன்றாகும்.

அந்த தந்தை பெரியார் அரங்கில்தான் இந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பேராசிரியர் அவர்களுக்குத் தமிழ்த்துறை சார்பிலும், திராவிடர் கழகத்தின் சார்பிலும் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் ஆறினையும் வழங்கினார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்குப் பல்கலைக் கழகப் பதிவாளர் பேராசிரியர் சரவணன் சால்வை அணிவித்தார்.

மன்றமே நிறைந்து வழிந்தது; பல்துறைகளைச் சார்ந்த பெருமக்களும், பல்கலைக் கழக மாணவ, மாணவிகளும், கழகத் தோழர்களும் கூடியிருந்தனர். இந்த மன்றத்தில் கூடிய பெரிய கூட்டம் இது என்று கருதப்படுகிறது.

-------------------- 1-4-2010 "விடுதலை” யில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: