பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை நடத்தப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதுகுறித்து இந்து முன்னணி பிரமுகர் திருவாளர் இராம கோபாலன் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நாலடியார், தேவாரம், திவ்யபிரபந்தம் முதலான அற நூல்களும், நல்ல தமிழ்ப் பாடல்களும், ராமாயணம், மகாபாரதக் கதைகளும் இடம்பெறும் என்று நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிகளில் முன்பு நீதிபோதனை என்பதற்காக வாரத்தில் ஒரு வகுப்பு இடம் பெற்றதுண்டு. பெரும்பாலும் இந்த வகுப்புகளில் மதத் தொடர்பான சங்கதிகளைத்தான் சொல்லிக் கொடுப்பார்கள்.
அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே இருந்தனர். ராமாயணம் போன்றவைகளையும், சிவன் தொடர்பான புராணங்களையும் அள்ளிக் கொட்டுவார்கள்.
அது ஒரு காலம், இப்பொழுது காலம் வெகுவாக மாற்றத்திற்கு ஆளாகியுள்ளது. ஒழுக்கம் என்பது என்ன என்ற கேள்விக் குறிகள் எழுந்துவிட்ட காலகட்டம் இது.
தவம் செய்த சம்பூகனை இராமன் படுகொலை செய்தது வருண தருமம் என்று அப்பொழுது சொல்லிக் கொடுக்கப்பட்டு இருக்கலாம்.
இது விழிப்புணர்வு பொங்கும் காலகட்டம். தந்தை பெரியார் அவர்களும், பகுத்தறிவு இயக்கமும் சமூகத்தில் புதிய சிந்தனை வெளிச்சத்தைப் பரப்பியுள்ளது. இப்பொழுது இராமாயணம் சொல்லும் வருண தர்மத்தைப் போதித்தால் அது வீணான சர்ச்சைக்குத்தான் இடம் கொடுக்கும்.
ஏகலைவன் கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்ட துரோணாச்சாரிகளின் காலம் மலையேறிவிட்டது! குரு பக்திக்கு இதுதான் இலக்கணம் என்று சொன்னால் அதைவிட மோசடி உண்டா? இப்பொழுது மகாபாரதத்திலிருந்து அதனைச் சொல்லிக் கொடுத்தால் ஏவுகணைகள் எதிர் திசையிலிருந்து வரும் என்பதை நினைவில் நிறுத்தட்டும். பொதுவாக இந்த வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களின் மனப்பாங்குக்கு ஏற்ப இந்த வகுப்புகளின் நிறம் மாறக்கூடும்.
இது வரையறை செய்யப்படவேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்த வகுப்புகளில் எந்த மதத் தொடர்பான கதைகளும், கருத்துகளும் சொல்லிக் கொடுக்கப்படக்கூடாது. மாறாக மனித நேயக் கருத்துகளை, பகுத்தறிவைத் தூண்டும் தகவல்களை, முற்போக்குச் சிந்தனையாளர்களின் எண்ணங்களை, சீர்திருத்தச் சிந்தனைகளை, தன்னம்பிக்கையூட்டும் தத்துவங்களை, மூடநம்பிக்கைகளை முற்றாகத் துரத்தியடிக்கும் அறிவியல் வயப்பட்ட கண்டுபிடிப்புகளை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
முற்போக்கு பகுத்தறிவுச் சிந்தனையுடையவர்கள் அடங்கிய குழு ஒன்று இதற்கான பாடத் திட்டத்தை உருவாக்கவேண்டும். நீதிபோதனை என்றாலே மத போதனைதான் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது.
பகுத்தறிவாளரான கல்வி அமைச்சர் அதனை மனதிற் கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம்.
0 comments:
Post a Comment