Search This Blog

29.4.10

ஆரிய திராவிடப் பிரச்சினைக்கு ஒரு விளக்கம்


திராவிடர் என்றே பதிவு செய்யுங்கள்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது கடைப்பிடிக்க தமிழர் தலைவர் வேண்டுகோள்!
திராவிட இன உணர்வே இன்றைய தேவை ஒரு வரலாற்றுப் பார்வை


சென்னையில் திராவிடர் கழக மாணவர் மாநாடு 16.4.2010 அன்று பெரியார் திடலில் நடைபெற்றபோது, மாணவர்களே ஆசிரியர் விரும்பியது போல் மிகச் சிறப்பாக எழுச்சியோடும், இடையிடையே பகுத்தறிவுப் பாடல்களுடனும் தொய்வில்லாமல் நடத்திக் காட்டிய மாண்பினைக் கண்டோம்.

அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் நிகழ்த்திய உரை இருக்கிறதே, அது எதிர்கால இளைஞர் சமுதாயம் பகுத்தறிவுப் பாதையில் ஏன் நடைபெறவேண்டும், எப்படி நடை போடவேண்டும் என வழிகாட்டும் உரையாக அமைந்தது.

அதில் குறிப்பிடத்தக்கது திராவிடர் என்ற சொல்லின் மகத்துவத்தை எடுத்துக்காட்டி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது தமிழர் என்றோ வேறு வகையிலோ பதிவு செய்யாது, திராவிடர் என்றே பதிவு செய்யுங்கள் என்று தமிழர் தலைவர் வலியுறுத்தினார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவில் திராவிடன் என்று சொல்லும்போதுதான் ஆரியன் என்ற இனத்தோடு எவ்வகையிலும் ஒட்டாதவன் என்ற பொருள் கிடைக்கும் என்றார்.

இது இளைய தலைமுறைக்கு இன்றியமையாத அறிவுரை. திராவிடர் என்பது தீண்டத்தகாத சொல் போலச் சிலர் பேசி வருகின்றனர். அதுவும் தந்தை பெரியாரையே ஒதுக்கிவிட்டுத் திராவிடர் வாழ்க்கையில் ஏற்றம் செய்வதாகத் திராவிடர் சிலரே கிளம்பியிருப்பதைப் பார்க்கிறோம்.

தமிழர் என்று பதிவு செய்தோமேயானால் நம் தனித்த அடையாளம் மறைந்துபோய்விடும். ஆரியரும் தங்களைத் தமிழர் என்று அழைத்துக் கொண்டு விடுவர். ஆரியஅடிமைத்தனம் புரியாமல் போய்விடும். எனவேதான் திராவிட மாணவர் இயக்கம் என்பது நீதிக்கட்சியானது திராவிடர் கழகம் என்று மாற்றம் பெறும் முன்னரே தோன்றியது என்பதை எடுத்துச் சொன்னார்.

திராவிடர் கழகம் என்னும் சேலம் மாநாட்டுத் தீர்மானம் 1944 இல் நிறைவேறிய தீர்மானம்! அண்ணாவின் தீர்மானம் என்று அழைக்கப்பட்டாலும், அது அய்யாவின் தீர்மானம், தந்தை பெரியாரின் தீர்மானம், குடிஅரசு அச்சகத்திலே பெரியார் அச்சிட்டு, சேலம் மாநாட்டிற்கு முன் சேலத்தில் அதனைக் கொண்டு சென்று அய்யா தொலை நோக்கோடு அண்ணா தீர்மானம் என்று தோன்றச் செய்ய அங்கிருந்து அனைவருக்கும் அனுப்பினார் தொலைநோக்கோடு என்று எடுத்துக் கூறினார்.

ஆசிரியரின் அன்றைய இந்த முழக்கம் இன்று, நேற்று தோன்றிய முழக்கமல்ல என்பதை வரலாற்றுப் புதிவுகள் எடுத்துக் கூறுகின்றன. கடலூர் வீரமணி என்று அழைக்கப்பட்ட காலத்திலேயே தொடங்கிய முழக்கம். இதற்கு ஆதாரம் 16.-1.-1955 விடுதலையில் காணக்கிடக்கிறது. தமிழா இன உணர்வு கொள் என்று கூறுவதற்குப் பதிலாகத் தமிழா திராவிட இன உணர்வு கொள் என்று இன்று கூறவேண்டியது காலத்தின் கட்டாயம். திராவிட விழிப்புணர்வு இன்றைய தேவை. இதனை அன்றே அதாவது இன்றைக்கு 55 ஆண்டுகளுக்கு முன், அதுவும் மும்பை நகரை எடுத்துக் காட்டாகக் கொண்டு காட்டுவதை இன்றும் சுட்டிக் காட்டுவது மிக மிகப் பொருத்தமாக இருக்கிறது.

16.-1.-1955 விடுதலையில் இடம் பெற்றது இது.

பம்பாயில் திராவிட இன முழக்கம் கடலூர் வீரமணி

என்ற தலைப்பு. தமிழர் தலைவர் இப்படி தொடங்குகிறார். தம் இன உணர்வுப் பிரச்சாரத்தினை அன்று அவருடைய உரை இன்றும் திராவிடன் என்ன நிலையில் இருக்கிறான்? ஏற்றம் பெறவில்லை முழுமையாக என்று காட்டும்.

பம்பாய் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள மூன்று முக்கிய நகரங்களில் ஒன்று. தென்னாட்டில் வடவர் சுரண்டிடும் செல்வத்தின் வளம், பெரிய ஆலைகளின் வடிவிலே காட்சியளிக்கும் இடம் வடக்கு உயருகிறது, தெற்கு தாழ்கிறது பாரத புத்திரர் ஆட்சியிலே என்பதற்கோர் எடுத்துக்காட்டு சென்னையிலிருந்து சுமார் 800 மைல்கட்கு அப்பால் உள்ள இந்த இடத்தில் நமது லட்சியமாகிய திராவிட நாடு திராவிடர்க்கே என்ற இன முழக்கம் எழாத இடமில்லை. நமது இயக்க வளர்ச்சியைப் பற்றிப் பேசாத ஆள்களில்லை. திராவிடத்தின் தனிப்பெரும் ஒரே தலைவராம் பெரியாரின் பெருந்தொண்டு தாயகத்தில் மட்டுமல்ல, தாயகத்தைத் தாண்டியும் கூட, வஞ்சக வடவர்கள் வாழும் இடங்களிலும் பரவுகிறது வேகமாக என்று எடுத்துத் தொடுக்கையில் தலை நிமிர்கிறோம்.

திராவிடரை மும்பையில் அடையாளம் காட்டுகிறார் தமிழர் தலைவர் இவ்வாறு:

பம்பாயில் தென்னாட்டவர்கள் வாழுகிறார்கள். அவர்களை இரு பிரிவாகத்தான் பிரிக்கலாம். வழக்கம் போல ஆரியர், திராவிடர் என்று. ஆரியராவது திராவிடராவது என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் பம்பாய் சென்று தாராவி, மாதுங்கா இந்த இரண்டு பகுதிகளையும் பார்த்தால் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டே தீருவார்கள் -தீரவேண்டும்.

அன்று திராவிடர்கள் மும்பையில் தாராவியில் வாழ்ந்த நிலையை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். அய்ம்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் திராவிடர் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இல்லையே.

தாராவி பஞ்சைகளாம் திராவிடர் வயிறு வளர்க்க வறுமையுடன் போராடிக் காலம் தள்ளும் வறண்ட பகுதி. எங்கு பார்த்தாலும் சாக்கடை. சிறுசிறு குடிசைகள் சுகாதாரத்திற்கும் தாராவிக்கும் வெகு தூரம்! திராவிடச் சமுதாயத்தில் மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுவது போல அங்கு ஒரே துர்நாற்றம். தோல் பதனிடும் தொழிற்சாலை-களிலேதான் நம் தோழர்கள் உழைத்து உருக்குலைந்து இருக்கிறார்கள். சிறந்த நிருவாகத்துடன் நடத்தப்பெறுவது என்று சொல்லப்படும் பம்பாய் கார்ப்பரேஷனின் ஒரு பகுதிதான் தாராவி என்று சொன்னால் நம்ப முடியாது. தமிழ்நாட்டில் வட்டமிடும் ஆரிய, வடநாட்டுக் கழுகுகளைப் போலவே அப்பகுதியில் மலைக் கழுகுகள் ஏராளமாக வட்டமிட்டுக் கொண்டுள்ளன. சகல நோய்களின் ஊற்றாக வறுமைக் கேணியில் வீழ்ந்தவர் வாழுமிடமாக அமைந்துள்ளது தாராவி. இது திராவிட இனத்தின் நிலை.

மும்பையில் வாழும் திராவிட இனம் குறித்துக் கூறும் ஆசிரியர் கண்களில் மறையோர் வாழும் மாதுங்கா படுகிறது. ஆரியர் வாழும் அற்புத வாழ்க்கை தோன்றுகிறது. இந்த அவலத்தை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

மாதுங்கா மறையவர்கள் வாழும் மயிலாப்பூரின் மற்றொரு மாடல்! சமுதாயத்தில் பார்ப்பான் ஏற்படுத்திய ஜாதிகளின் வரிசையை நினைவு படுத்துவது போன்று, அந்தச் சாலையோரங்களில் மரங்கள் நிற்கின்றன நிழலுக்கு! நான்கைந்து மாடிக் கட்டடங்களைத் தவிர்த்து சிறு வீடுகளைக் காண முடியாது. கோவில், விளையாட்டு மய்தானம், பள்ளிக் கூடம், பூங்கா இவைகள் இங்கு ஏராளம்.

ஆசிரியர் 16-.4.-2010இல் குறிப்பிட்டாரே, அதை நினைவூட்டுகிற அடுத்த வரிகள் இங்கே சற்று ஊன்றிக் கவனிக்க வேண்டும். தமிழர்கள்! என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள் அங்குத் தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள் வாழும் அக்ரகாரத்தின் அத்தனைப் பண்புகளும் காணப்படுகின்றன. அவர்கள் அறிந்த கலைகளை யெல்லாம் பயன்படுத்தி உயர்ந்த பதவியில் வாழ்கின்றனர். அந்த உஞ்சவிருத்திக்கும், இந்த நிலை ஆரிய திராவிடப் பிரச்சினைக்கும் புது விளக்கம் தருகிறது.

மானத்திற்காக வாழ்வின் தேவைகளையும் தியாகம் செய்து வாழ்வது திராவிடம், வாழ்வின் தேவைகட்காக, மானத்தையும் தியாகம் செய்து வாழ்வது ஆரியம்.

வடநாட்டானை வெளியேற்றினால் அங்குள்ள தென்னாட்டாரின் கதி என்ன என்று சில மரமண்டைகள் கேட்கிறார்களே! அவர்கள் சிந்திக்கட்டும். தாராவி என்ன சவுகார்பேட்டை போலவா இருக்கிறது? அங்கு சென்று பிழைப்பவர்கள், சுரண்டச் சென்றவர்களல்ல, உடலுழைப்பைக் கூலிக்கு விற்று வாழ்பவர்கள்.

இப்படிப்பட்ட திராவிட சமூகத்தின் இருள் நிலை ஒழிய, இங்குள்ள நிலை மாற திராவிட நாடு திராவிடருக்கே என்ற உண்மையை நாம் உணரச் செய்வதுதான் என்று கூறும் ஆசிரியர் தாராவியில்தான் நமது கழகம் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது. இன்று அது விரிந்து பரந்து வளர்ந்துள்ளது, ஓர் பெரிய ஆல மரம் போன்று நிலை புரியாது வாழ்ந்த திராவிடர்கள் இன்று நம் கழகத்திற்கு வரத் தலைப்பட்டுள்ளனர் என்கிறார். தமிழர் தலைவர் அன்று உரைத்தது இன்று மெய்ப்பட்டிருக்கக் காண்கிறோம்.

ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்திண்மை, எதிர்ப்புக்கஞ்சாப் பண்பாடு, எஃகு உள்ளம் இத்தகைய பண்பு கொண்டவர்களே இங்கும்போல் அங்கும் அதிகம் பெரியாரின் பெரும்படையில் இருக்கிறார்கள்.

பெரியாரின் இயக்கம் ஒன்றுதான் திராவிடத்தின் விடுதலையைக் காண ஜாதி வகுப்பற்ற சமுதாயத்தைக் காண சாதி மதத்தை ஒழிக்க, இழிவைத் தொலைக்கப் பாடுபடும் ஒரே இயக்கம் தென்னாட்டில் என்ற கருத்தை எல்லாத் திராவிடர்களும் அங்கு உணர ஆரம்பித்துள்ளனர் என்று கூறும் ஆசிரியர், திராவிடர் கழகம் ஏழைகள் கழகம். ஆனால் எஃகு உள்ளம் கொண்டவர்கள் கழகம் என்கிறார். இன்றும் அது உண்மைதானே. எனவே திராவிட விழிப்புணர்வு பெறுவோம்.


---------------------முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் அவர்கள் 28-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

Anonymous said...

ஏன் திராவிடன், திராவிடன்னு வெட்கம் இல்லாம்ம கத்துறிங்க. திராவிடன் கிட்ட இருந்து தண்ணி வாங்க முடியுமா. எந்த விஷயத்துலயாவது சுமுக உறவு இருக்கா. அவங்க எவர்கிட்டயாவது அந்த திராவிட உணர்வு இருக்கா. இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இந்த டயலாக்கை பேச போறிங்களோ.