Search This Blog

29.7.15

பூரண மதுவிலக்கு சாத்தியமில்லையா?தி.க.வின் நிலைப்பாடு என்ன?


மக்களைப் பாழ்படுத்தும் மதுவை ஒழிக்க, பூரண மதுவிலக்கு அவசியம் தேவைப்படும் கால கட்டம் இது!
பொது மக்களே கள்ளச் சாராயத்தை ஒழிக்க முன் வருவார்கள்
திருச்சி செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி


திருச்சி, ஜூலை 29- மதுவிலக்கின் அவசியம் குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு (28.7.2015).

தமிழ்நாட்டில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க. - அதன் தலைவர் கலைஞர் அவர்கள், அடுத்த தேர்தலுக்குப் பிறகு எங்கள் ஆட்சி வந்தால், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்பதை அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான கட்சிகள், ஆளும் கட்சியைத் தவிர, அத்துணை பேரும் மதுக்கடைகளால் ஏற்பட்டிருக்கின்ற தீமைகள் எப்படி மூன்று வயது குழந் தைக்குக்கூட ஊற்றிக் கொடுத்துப் பழகக்கூடிய அளவிற்கு கேவலமாக ஆகிக்கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் தமிழ்நாடு என்பது எடுத்துக்காட்டான மாநிலம் என்று பெயர் பெற்று இருந்தது. இப்பொழுதோ, ஒரு மாநிலம் எப்படி இருக்கக்கூடாதோ என்பதற்கு எடுத்துக்காட்டான மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது.
நேற்றுகூட ஒரு முக்கியமானவருடன் பேசும்போது, திருச்செங்கோட்டில் உள்ள ஒரு மேனிலைப்பள்ளிக்கு அருகிலேயே டாஸ்மாக் கடை இருக்கிறது. அங்கே சென்று அந்தப் பள்ளி மாணவர்கள் ஏழு, எட்டு பேர் குடித்துவிட்டு, அந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக இருக்கக்கூடிய ஒரு பெண் அம்மையாரிடம் கலவரம் செய்து, அந்தப் பள்ளி மாணவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கிய பிறகு, ஆளுங்கட்சியில் இருக்கக்கூடிய முக்கியமான பொறுப்பாளர்கள், அதிகாரிகளாக இருக்கக்கூடியவர்கள் கூட அந்த அம்மையாருக்கு நெருக்கடி கொடுத்து, எப்படியும் அந்த மாணவர்களை நீங்கள் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று வற்புறுத்துகின்ற நேரத்தில்,
இதனை அறிந்து, பெற்றோர்கள் அத்துணைப் பேரும், தாய்மார்கள் அத்துணை பேரும் பள்ளியின்முன் ஒன்று திரண்டு,  அந்தத் தலைமையாசிரியர் எடுத்த நடவடிக்கை சரிதான் என்றும்,  எங்களுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கை வீணாகக்கூடாது என்றுதான் அவர்கள் நட வடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள்.
மூன்று வயது குழந்தைக்குக் கூட..
மூன்று வயது குழந்தைக்கு ஊற்றிக் கொடுக்கக்கூடிய சம்பவமும், பள்ளி மாணவர்கள் குடித்துவிட்டு பள்ளிக்குச் செல்கிறார்கள் என்கிற சம்பவமும் எதனைக் காட்டுகிறது என்றால், பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்திலேயே டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன; இவைகளெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிற கருத்து எல்லோருக்கும் வந்திருக்கிறது.
முதலில் அதனை யார் கொண்டு வந்தார்கள்? எப்படி நிலைத்தது என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இதில் யாரோ சிலர், சில கட்சிக்காரர்கள் அவர்களுக்குள்ளேயே அரசியல் நடத்துவதற்காக, நாங்கள்தான் முதலில் சொன்னோம்; இவர்கள் பின்புதான் சொன்னார்கள் என்பது போன் றெல்லாம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

யார் எப்பொழுது சொன்னார்கள் என்பது முக்கியமல்ல; இப்பொழுது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை, இளைய தலைமுறையினரை நாம் காப்பாற்றியாகவேண்டும். தமிழ்நாட்டு மக்களெல்லாம் இன்றைக்குக் கேவலமாக, இளைய தலைமுறையினர் உள்பட ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் வேதனைப்படக்கூடிய அளவிற்கு இருக்கக் கூடிய நிலைகள் முற்றிலுமாக மாற்றப்படவேண்டும்.
அந்த வகையில், இவையெல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டு எல்லாக் கட்சிக்காரர்களும் வரவேற்கக்கூடிய ஒரு காலகட்டத்தில், ஒத்தக் கருத்துகள், தனித்தனியே சொல்கிறார்களா - மேடையில் சொல்கிறார்களா - முந்திச் சொன்னார்களா - பிந்திச் சொன்னார்களா என்பதெல்லாம் முக்கியமல்ல. இன்றைக்கு அனைவரும் ஒத்தக் கருத்தோடு இருக்கிறார்கள் என்பது - அந்தக் கருத்துக்கு ஏற்பட்டிருக் கின்ற தேவையை, வலிமையைத் தெளிவாக்குகிறது.
இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசு - ஏட்டிக்குப் போட்டி என்று சாதாரணமாக கிராமங்களில் சொல்வார்கள் - அதைப்போல, எலைட் மதுக்கடை - அதாவது மதுக்கடையிலே உயர்ந்தது - குடியில் என்ன உயர்ந்த குடி இருக்கிறது?
உயர்ந்த குடி என்றால், ஒழுக்கம் உள்ள குடி என்று அந்தக் காலத்தில் பெயர். இப்பொழுது உயர்ந்த குடி என்ற பொருளையே மாற்றி பொருள் கொள்ளக்கூடிய நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள்.
இது என்ன எலைட் மது?
எலைட் மதுக்கடைகள் வரப் போகின்றன என்று சொல்வது இருக்கிறதே, அது எதற்காக? எந்த நோக்கத்திற்காக என்றெல்லாம் பார்க்கும்பொழுது, வேதனையாகவும், வெட்கப்படக்கூடிய நிலையிலும் இருக்கிறது. இதனை எதிர்த்து, மக்கள் அத்துணைப் பேரும் சேர்ந்து கட்சி வேறுபாடு இல்லாமல், ஒரு மாபெரும் போராட்டத்தை, அறப்போராட்டத்தை, மக்கள் போராட்டத்தை அவர்கள் தானே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது எப் பொழுது வெடிக்கும் என்று சொல்ல முடியாது. எரிமலை வெடிப்பதற்குத் தயாராக இருப்பதுபோன்ற சூழ்நிலை.
எனவே, இதனை அறிந்தாவது இந்த மது விற்பனையை கைவிடவேண்டும். அல்லது முதற்கட்டமாக இந்த எலைட் திட்டம் என்பது, எங்களுக்குத் தெரியாமல் வந்துவிட்டது என்று வழக்கமாகச் சொல்வதைப் போலவாவது சொல்லி, தமிழக அரசாங்கம் அதனைக் கைவிடவேண்டும்.
செய்தியாளர்: பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்று சிலர் சொல்கிறார்களே?
தமிழர் தலைவர் பதில்: ஏன் சாத்தியமில்லை? கள்ளச்சாராயம் காய்ச்சுகிறவர்களுடைய தயவை நினைத்தால் ஒழிய, பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்று சொல்வதற்கு வழியே கிடையாது. ஒரே ஒரு செய்தி என்னவென்றால், மத்திய அரசும் இதில் இணைந்தால், மேலும் சிறப்பாக இருக்கும்.
முதல்வர் கலைஞர் சொன்ன காரணம்
கலைஞர் அவர்கள் முதல் முறையாக மதுவிலக்கை எடுத்துவிட்டு, பிறகு மதுவிலக்கு என்பதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று சொல்லும் பொழுது, ஒருமுறை அழகாக பட்ஜெட்டில் சொன்னார், கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்திற்குள், கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு இருந்து கொண்டிருக்கிறது என்று. பக்கத்து மாநிலங்களில் எல்லாம் நிறைய மது வந்து கொண்டிருக்கிறது. கேரளாவில் இருந்து தமிழகத்தின் எல்லைக்குள் வருகிறது. கருநாடகத்தில் மது இருக்கின்ற காரணத்தினால், கிருஷ்ணகிரி, ஒசூர் பகுதிகளில் உள்ளே நுழைகிறது.
பாண்டிச்சேரியில் மது இருக்கின்ற காரணத்தினால், தென்னார்க்காடு மாவட்டம், கடலூர் மாவட்டம் மற்ற பகுதிகளில் எல்லாம் உள்ளே வருகிறது.
எல்லா இடத்திலும் ஒட்டுமொத்தமாக பூரண மதுவிலக்கை செய்கின்ற போது, நிச்சயமாக கள்ளச்சாராயம் காய்ச்சுகின்றவர்களைக் கண்காணிக்கக்கூடிய அளவிற்கு, படைகள் தனியாக அமைத்து, அதனை செய்தால் போதும்.
கிராம மக்களே முன்வருவர்
இன்னுங்கேட்டால், பல ஊர்களிலே கிராமத்து மக்களே அதற்குத் தயாராக இருந்தார்கள். எங்கள் கிராமத்தில், கள்ளச்சாராயம் கிடையாது - ஒரத்தநாடு பக்கத்திலுள்ள ஒரு ஊரில் மிகச்சிறப்பான அளவிற்கு, அங்குள்ள மக்களே முன்வந்தார்கள். அதுபோல், மக்களே முன்வந்து கள்ளச்சாராயத்தை நிறுத்தி விடுவார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.
ஒரு பக்கம் இலவசம் என்று சொல்வது; இன்னொரு பக்கம் பணத்தைக் கொடுத்து வாக்கு வாங்குவது; அந்தப் பணத்தை டாஸ்மாக் மூலமாக மறைமுகமாக கொண்டு வருவது. டாஸ்மாக் என்பது அரசாங்கத்தின் சார்பாக வருகின்றது என்று சொன்னால், அரசாங்கத்திற்குக் கிடைக்கக்கூடிய வருமானம் எவ்வளவு? அரசாங்கத்திற்கு மது ஆயத்தீர்வின் மூலமாகக் கிடைப்பது மிகவும் குறைவு. அந்த மது தயாரிப்பாளர்களுக்குத்தான் கணிசமான தொகை செல்கிறது. அந்தத் தொழிற்சாலைகள் யாருடையது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு செய்திதான் - அதனை விளக்கவேண்டிய அவசியமில்லை.
எனவே, உண்மையிலேயே இதனால் லாபமடையக் கூடியவர்கள் யார்? அரசும் லாபமடையவில்லை. அது ஒரு புறத்தோற்றம் - அதேநேரத்தில், மக்களுக்கு மிகப்பெரிய கேடு. மக்களுக்கு இலவசங்களைக் கொடுப்பது போன்ற ஒரு புறத்தோற்றம் - மாயை.
ஆகவே, இவை எல்லாம் அகலவேண்டும் என்று சொன்னால், நிச்சயமாக பூரண மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும். எப்படி கூலிப் படையை ஒழித்தால், கொலைகள் ஒழியும் என்பது முக்கியமோ, அதுபோல, மிகத்தெளிவாக கள்ளச்சாராயத்தை நிச்சயமாக ஒழிக்கலாம். அதற்குத் துணையாக காவல்துறையோ, அல்லது வேறு யாரோ ஒரு சிலர் இருப்பார்களேயானால், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க - பொதுமக்களே இப்பொழுது முன்வந்து பிடித்துக் கொடுப்பார்கள். அந்த அளவிற்குப் பொதுமக்களுடைய மனநிலை பக்குவப்பட்டிருக்கிறது. இதுதான் சரியான நேரம்.

தி.க.வின் நிலைப்பாடு என்ன?

செய்தியாளர்: மதுவிலக்குபற்றி மக்கள் நலன் சார்ந்து இந்தக் கருத்துகள் வெளிவருகிறதா? அல்லது தி.மு.க. ஆதரவு நிலையால், இந்தக் கருத்துகளை சொல்கிறீர்களா?
தமிழர் தலைவர் பதில்: எங்களைப் பொறுத்தவரை நாங்கள்  கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி, தஞ்சை திராவிடர் கழகப் பொதுக்குழுவில் அதிகாரபூர்வமாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அவ்வளவு தூரம் போகவேண்டாம் - இந்த நாட்டில் மதுவிலக்கு என்பதைப்பற்றி முதன்முதலாக காந்தியார் அவர்கள் சொன்ன நேரத்திலேயே, 500 தென்னைமரங்களை வெட்டி, அதனை நடைமுறைப்படுத்திய ஒரே தலைவர், தந்தை பெரியார் அவர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவுறுத்திக் கொண்டால், இந்தக் கருத்து, எனக்குத்தான் சொந்தம், உனக்குத்தான் சொந்தம் என்று யாரும் சொல்லமாட்டார்கள். பெரியாருக்குத்தான் சொந்தம் என்று சொல்வார்கள் என்று செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் குறிப்பிட்டார்.
                                 -----------------------------"விடுதலை” 29-07-2015

28.7.15

அறிவியல் மனப்பான்மை கொண்ட மகத்தான மனித குல மாமணி ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம்

அறிவியல் விஞ்ஞானி ஒருவர் குடியரசுத் தலைவரானது இந்தியாவில் ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் அவர்கள்தாம்.
தமிழ் வழியில் படித்து அறிவியல் உலகில் சாதனை படைத்தவர் குடியரசு தலைவரும் ஆனவர்! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ்ப் புலவரின் பாடல் வரியை எடுத்துக்காட்டி பரந்து பட்ட உள்ளப் பாங்குடைய எங்கள் தமிழினத்தின் பண்பாட்டைப் பாரீர் என்று அய்.நா. மன்றத்தில் எடுத்துக்காட்டி அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்தவர்.
குடியரசு தலைவராக பதவி ஏற்ற நிலையில் திருக் குறளை எடுத்துக்காட்டி  உரை நிகழ்த்தியவர்.  

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வது குறித்து வேட்பாளர் அப்துல்கலா மிடம் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் தொடர்பு கொண்டு பேசினார்.

கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தாங்கள் எந்தத் தேதியில் மனுத் தாக்கல் செய்ய இருக்கிறீர்கள்?
பதில்: நீங்களும், மக் களும் எப்பொழுது நினைக் கிறீர்களோ அதுவே சரியான தேதியாகும்.

கேள்வி: நல்ல நேரத் தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்கிறதா?


பதில்: பூமி தன்னைத் தானே சுற்றுவதால் இரவு - பகல் வருகிறது. தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுவதால் ஓர் ஆண்டு மலர்கிறது. இவ்விரண்டு நிகழ்வுகளும் வானவியல் தொடர்பானது. ஜோதிடவியல் அல்ல. இதில் எந்த நேரமும் எனக்கு நல்ல நேரமே. என்று கூறிய  கூரிய அறிவியலாளர் அப்துல் கலாம் அவர்கள்.

சோதிட மூடநம்பிக் கையைப் பற்றி தோலுரித் தவர்; அக்னிச் சிறகுகள் என்ற புகழ் பெற்ற தம் வாழ்க்கை வரலாற்று நூலில் பின்வரும் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
நமது சூரிய மண்டலத் தில் நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள கோள் களுக்கு நமது மக்கள் இந்த அளவுக்கு அதிக முக்கியத் துவம் அளித்ததன் பின்னணி யில் உள்ள காரணத்தை உண்மையில் என்னால் எப்போதுமே புரிந்து கொள்ள முடியவில்லை;  ஜோதிடம் அறிவியல் என்ற போர்வை யில் ஏற்றுக் கொள்ளப்படு வதற்கு நான் வருந்தவே செய்கிறேன். இந்த கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை மனித உயிர்கள் மீது ஆற்றல் செலுத்த இயலுமென்ற கட்டுக் கதை கள் எவ்வாறு உருவாக்கப் பட்டன என்பதை நானறி யேன். விண்வெளியில் உள்ள இவற்றின் சரியான இயக்கத்தைச் சுற்றி, குழப்பம் மிகுந்த கணக்குகளை கற்பனையில் உருவாக்கி அவற்றிலிருந்து மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் பற்றிய முடிவுகளைப் பெறு வது என்பது சரியானதென எனக்குத் தோன்றவில்லை என்று எழுதியுள்ளாரே! அறிவியல் படித்தவர் மட்டுமல்ல; அறிவியல் மனப் பான்மையையும் கொண்ட ஒரு மகத்தான மனித குல மாமணியை இழந்து விட் டோமே!
--------------------------- மயிலாடன் அவர்கள் 28-07-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
******************************************************************************

அந்தோ ஏ.பி.ஜே.அப்துல்கலாம் என்ற தொண்டுமலை சாய்ந்ததே!


திராவிடர் கழகத் தலைவர்  இரங்கல் அறிக்கை

நம் நாட்டின் மேனாள் குடியரசுத் தலைவரும், ஒப்பற்ற தொண்டறத்தின் மாமலையும், இளை ஞர்கள்- மாணவர்கள் இடையே எழுச்சியை ஏற்படுத்திய நாயகனுமாகிய மாண்புமிகு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் இன்று (27.7.2015) திங்கள் இரவு ஷில்லாங்கில், ஒரு  பொது நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, மேடையில் மயங்கி விழுந்து திடீர் மாரடைப்புக் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிக்சை அளித்த நிலையில், பலனின்றி காலமானார் என்ற வேதனைமிக்க துயரச்செய்தி நம் நெஞ்சைத் துளைத்தது! (அவரது வயது 84)
எப்படிப்பட்ட மாமனிதர் கலாம் அவர்கள்! அந்தோ! நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் பெரும் அளவில் வளர்ந்து, தன்னிறைவு அடைய வேண்டும் என்று கருதியதோடு, கிராமங்களுக்கும் நகர்ப்புற  வசதிகள் அனைத்தும் கிடைக்க வேண் டும் என்பதற்கான “PURA” (Providing Urban Amenities to Rural Areas) என்ற  செயல் திட்டத்தை அறிவித்த அறிவியல் மேதை.
தந்தை பெரியார் அதை 60 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தார் என்பதை அறிந்ததும் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல் கலைக் கழகம் 69 கிராமங்களைத் தத்து எடுத்து செயல்படுத்துகிறது என்றவுடன், பெரியார் புரா என்று பெயர் சூட்டிய தோடு, நமது பல்கலைக்கழகத்திற்கு 6 முறை வந்து சாதனைகளைக் கண்டுவியந்து ஊக்கப்படுத்திய வித்தகர் அவர்!
பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்றும்கூட ஒதுங்காமல் கல்லூரிகளுக்கு வந்து இளைஞர்கள் - மாணவர்களது கல்வி, வாழ்க்கை முன்னேற்றத் திற்கென்று கடைசி மூச்சுள்ள வரை வாழ்ந்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்!
திருமணம் செய்துகொள்ளாத அவர் நாட்டு நலத்தையே தனது வாழ்க்கையின் இலக்காகக் கொண்டு வாழ்ந்து காட்டிய தொண்டறத்தின் தூய உருவம்! உழைப்பின் உருவம் அவர்! அவரது மறைவு எமக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.
அவர் சுடர்விட்டு எரியும் கல்வி ஒளிவிளக்கின் திரியாக என்றும் ஒளி தரும் உருவமாய் நம் நெஞ்சில் நிறைந்துவிட்டவர்.
இன்னொரு கலாம் இனி எப்போது இந் நாட்டுக்குக் கிடைக்கப் போகிறார்? என்று மக்கள் தம் கண்ணீர்ப் பூக்கள் மூலம் நாம் அவருக்கு நமது வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.


கி.வீரமணி    
தலைவர், திராவிடர் கழகம்

27.7.2015
திருச்சி
**************************************************************************************************************

27.7.15

மாட்டுக் கறிக்குத் தடை என்பது ஆரியர் - திராவிடர் போராட்டத்தின் இன்னொரு வடிவம்

எதை உண்பது என்பது தனி மனித உரிமையே!ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கான ஊதுகுழலாக இருந்து வரக் கூடிய ஆர்கனைசர் இதழ்  உத்தர காண்ட் மாநிலத்தில் ரூர்கியில் உள்ள அய்.அய்.டி. நிறுவனத்தில் உள்ள உணவுச் சாலையில் (கேண்டீனில்)  இந்து மதத்துக்கு எதிரான நிலை இருந்துவருவதாகவும்  குறிப்பிட்டிருந்தது. இது ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சிக்கலாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தது.


ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பொறுப்பில் உள்ள தலைவர்கள் பலரும் இறைச்சி உணவை விரும்பிச் சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, இறைச்சி உணவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இரட்டை நிலைப்பாட்டில் தான் இருந்துவருகிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த ஆய்வாளரும், எழுத்தாளருமாகிய திலீப் தியோதார் கூறுகையில், மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவ ராக (சர்சங்சாலக்)  பொறுப்பேற்ற 2009ஆம் ஆண்டு வரையிலும்கூட இறைச்சி உணவை விரும்பிச் சாப் பிட்டு வந்தவரே! பாலாசாகிப் தியோரா கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக பொறுப் பேற்கும் வரையிலும் கோழி மற்றும் ஆட்டிறைச்சி உணவுகளை வெளிப்படையாகவே சாப்பிட்டு வந்தவரே! ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரச்சாரக்கு களாக இருப்பவர்களில் பெரும்பான்மையோர் இறைச்சி உணவுப் பிரியர்களாகவே இருந்துவந்துள்ளனர். இதில் இந்துமதத்துக்கு எதிரான நிலை என்று ஏதும் கிடையாது என்றார்.   42 நூல்களை எழுதியவர் இவர்.

சந்தீப் சிங் எழுதியதற்கு ஆர்எஸ்.எஸ். அமைப் பைச் சேர்ந்தவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித் துள்ளனர் என்பதையும் ஆர்கனைசர் ஆசிரியர் பிரஃபுல்ல கேட்கார் ஏற்றுக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து விரிவாக எழுதி வருபவரான திலீப் தியோதார் கூறுகையில் இறைச்சி உணவை எப்போதுமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்தது கிடையாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பலரும் இறைச்சி உணவை விரும்பி சாப்பிட்டுவருகிறார்கள். மீன், கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி விரும்பி சாப்பிடும் அவர்கள் மாட்டிறைச்சியை மட்டும் ஏற்றுக் கொள்வதில்லை.

ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திலேயே இறைச்சி உணவை சாப்பிடத் தடையேதும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள பிரச்சாரக் பலரும் இறைச்சி உணவை உண்பவர்கள்தான்.  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவரான எம்.ஜி.வைத்யா கூறுகையில், பிரச்சாரக்குகள் இறைச்சி உணவை எடுத்துக்கொள்வதில் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. இறைச்சி உணவை உண்பவர்களும் இந்தியர்களே என்று கூறினார்.
(தகவல்: எகனாமிக் டைம்ஸ், 22.7.2015)


மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்தது முதல் வெகு மக்களின் உரிமைகளில் பார்ப்பனீய ஈட்டியை நீட்டி மிரட்டிக் கொண்டு தானிருக்கிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அசைவ உணவு வாடையே கூடாது என்பதில் கவனமாகவே உறுதியாகவே இருக்கிறார்கள். ஒருவர் உண்ணும் உணவு என்பது அவரது தனிப்பட்ட உரிமையாகும். உணவு என்பது அனேகமாக பழக்க வழக்கத்தைச் சார்ந்ததே! அதில் தலையிட எந்த அதிகார மய்யத் துக்கும் உரிமை கிடையாது. அரசோ, நீதிமன்றங் களோகூட மூக்கை நுழைக்க முடியாது.

இந்திய மக்கள் தொகையில் 19 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்கச் செல்லுகின்றனராம். உணவுப் பிரச்சினையில்கூட தன்னிறைவை எட்டுவது பற்றி அக்கறை கொள்ளாத தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசுக்கு (பிஜேபி தலைமையிலானது) ஒரு தனி மனிதன் எதை உண்ண வேண்டும், எதை உண்ணக் கூடாது என்று கூற எந்தவித உரிமையும் கிடையாது.

ஏழை மக்களுக்கு மாட்டுக்கறிதான் குறைந்த விலையில் கிடைக்கும் அதிக சத்துள்ள உணவாகும் - உழைப்பாளி மக்களுக்கு அது அவசியம் தேவை.

உழைப்புக்கும் உஞ்சி விருத்திப் பார்ப்பனர்களுக் கும் என்ன உறவு? உழைப்பை முன்னிறுத்தும் விவசாயத்தைப் பாவத் தொழில் என்று கூறுபவர்கள் பார்ப்பனர்கள் ஆயிற்றே -  இந்துத்துவாவின் மனுதர்மக் கூற்றாயிற்றே!

அப்படிப் பார்க்கப் போனால் மனு தர்மத்தில் பசு மாமிசத்தை எப்படி எப்படியெல்லாம் உண்டு சுவைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதே! இவர்கள் கொண்டு வரவிரும்பும் ராம ராஜ்ஜியத்தின் கதாநாயகன் இராமனே இறைச்சி உண்டவனாயிற்றே, மது குடித் தவன் ஆயிற்றே) ஏனிந்த இரட்டை வேடம்?

மாட்டுக் கறிக்குத் தடை என்பது ஆரியர் - திராவிடர் போராட்டத்தின் இன்னொரு வடிவம் என்பதில் எவ்வித அய்யப்பாடும் இல்லை. அருமைத் திராவிடரே பார்ப் பனர் அல்லாதாரே விழித்தெழுவீர்!
                                ----------------------”விடுதலை” தலையங்கம் 27-07-2015

26.7.15

காமராஜரின் சமதர்மம் என்பதே பார்ப்பனக் கொலை தர்மம் என்பதுதான்-பெரியார்

காமராஜரின் சமதர்மம் என்பதே பார்ப்பனக் கொலை தர்மம் என்பதுதான்
- தந்தை பெரியார்


டில்லியில் காமராஜர் தங்கி இருந்த வீட்டுக்கு நெருப்பு வைத்து விட்டார்கள், பார்ப்பனர்கள்! ஏன் இப்படிச் சொல் லுகின்றேன் என்றால் நெருப்பு வைத்த நாளில் சிருங்கேரி சங்கராச்சாரி, பூரி சங்கராச்சாரி முதலிய பார்ப்பன சமு தாயத் தலைவர்கள் டில்லியில் இருந்து இருக்கின்றார்கள்; தவிரவும் சன்னி யாசிகள் (சாதுக்கள்) என்னும் பேரால் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்கள் பல பாகங்களிலுமிருந்து அன்று டில்லிக்கு வந்து இருக்கின்றார்கள். ஏன் இந்த சன்னியாசிகளை பார்ப்பனர்கள் என் கின்றேன் என்றால், பார்ப்பனர் அல்லாத (சூத்திர) ஜாதிக்கு சன்னியாசம் கொள்ள உரிமை இல்லை. அவனை சாது வென்றோ, சன்னியாசி என்றோ சொல்ல மாட்டார்கள்.

ஆகவே அன்றைய கலவரத்துக்கு, காலித்தனத்துக்கு நேரடியாக சம்பந்தப் பட்டவர்களும், தூண்டிவிட்டவர்களும், ஆதாரமாக இருந்தவர்களும், தலைமை வகித்தவர்களும் பார்ப்பனர்கள் தவிர, மததர்ம சம்பிரதாயங்களில் பார்ப்பனர் களுக்கு சீடர்களாக இருந்தவர்களும் தான் காரணஸ்தர்கள் ஆவார்கள் என்ற உறுதியால்தான் சொல்லுகின்றேன். மற்றும் இராஜாஜி எலெக்ஷனுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியை ஒழித்தாக வேண் டும் என்றும், எந்த அதர்மத்தைச் செய் தாவது ஒழித்தாக வேண்டும் என்பதாகச் சொன்னதும், அகிம்சையைக் கடை பிடிக்க வேண்டியதில்லை என்பதாகப் பேசியதும் எனது உறுதிக்கு ஆதாரம் ஆகும்.
வருணாசிரம தர்மத்தை ஒழித்ததை எதிர்க்கவே இக்கலவரம்
பசுவதைத் தடுத்தல் என்பது ஒரு பொய்யான காரணமேயாகும். உண்மைக் காரணம் பார்ப்பனருடைய வருணாசிரம தர்மத்துக்குக் கேடுவந்து விட்டது என்பது ஒன்றேதான். அந்தக் கேட்டை உண்டாக் கினது. காமராஜர் என்கின்ற ஒரே காரணம் தான் காமராஜர் இருந்த வீட்டுக்கு நெருப்பு வைக்க முக்கியமான காரணமாகும். பார்ப்பானுக்கு மாட்டுக் கொலையைப் பற்றி அக்கறை இருக்கின்றது என்பது அப்துல்காதர் ஆடி அமாவாசை அன்று தன் தகப்பனாருக்கு தர்ப்பணம் கொடுத் தார் என்பது போன்ற கதையேயாகும். இந்த சாதுக்கள், சங்க ராச்சாரியார்கள், மற்றும் சர்வ பார்ப் பனர்களுக்கும் முன் னோர்களாகிய ரிஷிகள், முனிவர்கள், மகான்கள், தேவர்கள், இராமன், கிருஷ் ணன் முதலிய எல்லா ஆரியர்களுக்கும் மாடு தான் முக்கிய ஆகாரமாய் இருந் திருக்கின்றது! இவ்வுண்மை இன்றும் மனுதர்ம சாஸ்திரத்தில், பார்ப்பன தர்மமாய் இருந்து வருகின்றது.
உலகில் உள்ள மக்கள் 100-க்கு 100 பேர் மாட்டின் பாலைக் குடிப்பதும், மாட்டு உழைப்பைப் பயன்படுத்திக் கொள்வதும் 100-க்கு 50 பேருக்கு மேலாக மாட்டு மாமிசம் உண்பதும், 100-க்கு 90 பேர் வேறு பல மாமிசம் உண்பர்களாகவே இருந்து வருகின் றார்கள்.
இப்படிப்பட்ட மக்களுக்கு பசுவதைத் தடுப்பு உணர்ச்சி ஏற்பட்டது என்றால், இதை எந்த மடையன் தான் உண்மை என்று நம்புவான்? எப்படி அது யோக் கியமான காரியமாய் இருக்க முடியும்? காமராசர் பார்ப்பனரை வதை செய்யும் காரியத்தை உண்டாக்கியவர் அதுதான் சமதர்மம் என்பது. காமராஜரின் சமதர்மம் என்பதே பார்ப்பனக் கொலை தர்மம் என்பதுதான் தத்துவார்த்தமாகும்.
காமராஜர் சமதர்மத்தில் எல்லோ ருக்கும் படிப்பு, எல்லோருக்கும் வீடு, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் சம அந்தஸ்து ஏற்பட்டுவிடும் பிறகு இதில் மனித பேதம் எப்படி இருக்க முடியும்? மனித பேதம் தானே பார்ப்பனியம் என்பது.
முற்றிலும் பார்ப்பனர் - ஆதரவாளர் செய்த சதியே!
ஆகவே இதனால்தான் இந்த பார்ப் பனியக் கலவரத்துக்கும், காலித் தனத் திற்கும் பார்ப்பன குருமார்கள், பார்ப்பன சாதுக்கள், பார்ப்பன அதிகாரிகள், பார்ப் பனர்கள், பார்ப்பனப் பத்திரிகைக்காரர்கள், பார்ப்பன தர்மிகள் காரணமாக, காரிய சித்தர்களாக இருந்திருக்கின்றார்கள் என்ப தோடு, பிர்லா, பஜாஜ், டாட்டா முதலிய செல்வர்கள் பலபேர்கள் கூட்டமும், மற்றும் சொல்ல வேண்டுமானால் நந்தாக்கள் முதலிய மந்திரிகள் கூட்டமும் உடந்தை யாயும் ஆதரவாளர்களாகவும் இருந்திருக் கின்றார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
நேரு தங்கைக்கும், மற்றும் நேரு ஜாதிக் கும் இந்த சமதர்மம் எதிர்க்கப்பட வேண்டி யதாகவே இருந்து வந்திருக்கின்றது. மற்றும் நந்தாக்கூட்டம் பெரிய அழுக்கு மூட்டைக் கூட்டமாகும். இந்திய பிரதமர் தேர்தலுக்கு நடந்த போட்டியில் ஒருவராக நிற்க முனைந்தவர் நந்தா! அது வும் ஒரு பிரபல ஜோசியர் கட்டளைப்படி நின்றவர். தேதி மாற்றத்தால் விலகிக் கெண்டவர்! இப்படிப் பட்ட அவர் எப்படி சமதர்மத்துக்கு உடந் தையாக இருக்க முடியும்? எனவே, டெல்லி கலவரமும் காலித் தனமும் பார்ப்பனரின் மனுதர்மத் துக்கும் காமராஜரின் மனித(சம) தர்மத்திற்கும் ஏற்பட்டு நடந்துவரும் பலாத்காரப் போராட்டங்களில் ஒன்றேயாகும். எல்லாப் போராட்டங்களையும், கலவரத் தையும், காலித்தனங்களையும் விட நேற்று நடந்த டில்லி போராட்டத்தின் குறிப்பிடத் தகுந்த முக்கியம் என்னவென்றால்; காமராஜர் தங்கி இருந்த வீட்டை காமராஜர் உள்ளே இருந்து தூங்கிக் கெண்டு இருக்கும்போது நாலுபுறமும் சூழ்ந்து கொண்டு நாலு புறத்திலிருந்தும் நெருப்பு வைத்துக் கொளுத்தினதுதான் முக்கியமாக குறித்துக் கொள்ளதக்கதான சம்பவமாகும். இந்தச் செய்கை காலிக்கூட்டத்தினரால் இலக்கு வைத்துத் திட்டமிட்டு நடத்திய செய்கையாக இருக்க முடியாது, பார்ப்பன சங்கராச் சாரியார்கள் பலரும், சாதுக்களும், ஆனந்தாக்களும், பிர்லாக்களும், பஜாஜ், டாட்டாக்களும் அழுக்கு மூட்டை நந்தாக் களும் கூடி, கலகம் நடத்திட திட்டமிட்டு, பல லட்ச ரூபாய் உதவி, பல அதிகாரி களைச் சரிப்படுத்திக் கொண்டு நடத்திய சதித் திட்டமேயாகும்.
போலீஸ் 7-8 பேர்களை சுட்டது என் றால், ஏதோ அனாமதேயக் காலிகளைத் தான் சுட்டு இருக்குமே ஒழிய மேற்கண்ட கூட்டத்தினரில் ஒரு வரைக்கூட சுட வில்லை. சுட நினைக்கவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் 3ஆம் தேதி எழுதி 4ஆம் தேதி சென்னைக்கு பதிப்பிக்க அனுப்பிய, விடுதலை பெயர்போட்டு 6ஆம் தேதி எழுதிய சாதிப்பிரிவுகள் என்ற தலையங்கத்தின் நல்லவண்ணம் விளக்கிக் கூறி இருக்கின்றேன்.
அதில் இனி நடக்க வேண்டியது மந்திரி களைக் கொல்ல வேண்டியது தான் என்று எழுதி இருக்கின்றேன், ஆனால் டில்லி செய்கை மந்திரி களைக் கொல்லுவதாய் இல்லை.
மந்திரிகள் பல மாகாணங்களில் இச் செய்கைகளுக்கு ஆதரவானவர் களாக இருக்க நேர்ந்து விட்டதால் (காங்கிரஸ்) தலைவரையே கொல்லத் திட்டமிட்டு அவர் இருந்த வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும்போது வீட்டைச் சுற்றி 4 புறத் திலும் நெருப்பு வைக்கச் செய்து விட் டார்கள், காமராஜர் தங்கியிருந்த வீட்டிற்கு புழக்கடைப்பக்கம் வெளியேற ஒரு வழி இல்லாதிருந்தால் காமராஜரின் கதி அன்று என்ன ஆகி இருக்கும்?
நாடெங்கும் கலவரம் பரவும் ஆபத்து
இனி இது தேசத் தலைநகரில் மாத்திரம் அல்லாமல் மாகாணங்கள் முழுவதிலும் இக்கொலை, நெருப்பு வைத்தல் காரியங்கள் பரவும் என்பதிலும் ஆட்சேபணை இல்லை. இன்று பல மாகாண ஆட்சித் தலைவர்கள், பார்ப்பன அடிமைகள் வருணாசிரமக் காவலர்கள், சமதர்ம விரோதிகள் என்று சொல்லும்படியாகவே அமைந்து விட் டார்கள்! ஆதலால் இந்த மாடல் டில்லிக் காலித்தனங்கள் இனி எல்லா மாகாணங் களிலும் ஏற்பட்டே தீரும் பலவற்றில் ஏற்பட்டே விட்டதே!
அதாவது பார்ப்பன எதிரிகள், பார்ப் பனரின் எதிரிக் கட்சித் தலைவர்கள் என்பவர்களைக் கொல்லவும் அவர்கள் வீட்டையும் நெருப்பு வைத்துக் கொளுத்த வுமான நிலை ஏற்படலாம். அவற்றிற்கு அரசாங்கம் பாதுகாப்பும் அதற்கு ஏற்ற அளவில் தான் இருந்து வரும். எதிர்க் கட்சிக்காரர்கள் (பார்ப்பன அடிமைக்கட்சிக் காரர்கள்) இப்போதே அடிக்கல் நாட்டிக் கொண்டு விட்டார்கள். அதுதான் அண்ணா துரையைத் தாக்கினார்கள் என்பது போன்ற கற்பனைகளாகும்.
தமிழ்நாட்டு ஆட்சி அமைப்பை மாற்றாவிட்டால் காமராஜருக்கு பாதுகாப்பு ஏற்பட்டுவிடுமே என்றுதான் கருதுகின்றனர். என்னைப் பற்றி கவலை இல்லை, எனக்கு ஒரு கால் நாட்டிலும், ஒரு கால் சுடு காட்டிலும் என்ற பருவத்தில் இருக் கின்றேன். ஆதலால் என்னைப் பற்றிக் கவலை இல்லை.

நாட்டின் ரட்சகர் காமராசர் இன்றேல், நாதியற்ற நிலைதானே?

காமராசர் இன்று இந்த நாட்டுக்கு இரட்சகராக இருக்கின்றார். அதனால் தான் பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் காமராசர் மீது கண் வைத்து இருக்கின்றார்கள் - அவர் வீட்டைக் கொளுத்தினார்கள்.
காமராசருக்கு ஏதாவது ஏற்பட்டால் அவருக்கு ஒன்றும் நட்டம் இல்லை. அவரது தாயார்கூட மயக்கம் வரும்வரை அழுவார்கள் அவ்வளவுதான். பிறகு நம்நாடு வருணாசிரம தர்ம நாடாகி விடும்!
அதுமாத்திரம் அல்ல, இன்றைய பார்ப்பனக் கூலிகளான காங்கிரஸ் எதிர்கட்சிகளுக்கு, தலைவர்களுக்கு, பலர்களுக்கும் நாதியற்ற நிலை ஏற்பட்டு விடும். பழைய கருப்பர்களாக ஆகி விடு வார்கள், பிறகு நாடு என்ன ஆகுமோ? எப்படி ஆகுமோ? எப்படியோ இருக் கட்டும்; இனி காமராஜர் தக்க பாது காப்புடன் இருக்க வேண்டும். பார்ப்பன எதிர்ப்புக் கட்சித் தோழர்கள் ஒவ்வொரு வருக்கும் 6 அங்குல நீளத்திற்குக் குறையாத கத்தி ஒன்றை தற்காப்புக்காக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். கண்டிப்பாக சீக்கியர்களது மததர்மம் போல், கத்தி வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த காரியம் காமராஜரைப் பாது காக்க அல்ல. நம்நாட்டில் உள்ள 3 கோடி கீழ்ச்சாதி (சூத்திரனை) மக்களை இழி வில் இருந்தும், அடிமை நிலையில் இருந் தும், படுகுழிப்பள்ளத்தில், இருந்தும் வெளியாக்கிப் பாதுகாக்கவே ஆகும்.
நமது சரித்திரம் தெரிய, இந்த நாட்டில் காமராஜரைப் போல ஓர் இரட்சகர் இது வரை தோன்றியதே இல்லை. புராணங் களில் இரண்யர்கள், இராவணர்கள் தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றார்கள், அவர்கள் எல்லாம் கொல்லப்பட்டதாக - பிரகலாதன், அனுமார், விபீடணன்களைக் கொன்று அழிக்கப்பட்டதாக எழுதி புராணங்களை முடித்திருக்கின்றார்கள்.
அந்தக்காலம் அப்படி; ஆனால் இந்தக் காலம் அதுபோன்ற புராண - சரித்திர காலம் அல்ல; உண்மை பிரத் யேக நடப்புக்காலம். இதில் அந்த வித் தைகளைப் பலிக்க விடக்கூடாது.
கத்தி வைத்துக்கொள்ளுங்கள்! காம ராஜரை பாதுகாருங்கள்! மறுபடியும் எழுத இடம் வைத்துக்கொள்ளாதீர்கள்.
கண்டிப்பாய் கத்தி வைத்துக் கொள் ளுங்கள்! 
 ----------------------- காமராசர் கொலை முயற்சி சரித்திரம்  என்ற நூலிலிருந்து...

கலப்பு மணமும் சுயமரியாதை இயக்கமும் - பெரியார்


தாய்மார்களே! தோழர்களே!! குமாரராஜா அவர்களே!!!
இன்று மாலை 6 மணிக்கு இக்கூட்டம் கூட்டுவது என்று இருந்தேன். குமாரராஜா அவர்களுக்கு 6 மணிக்கு வேறு இடத்தில் ஒரு நிகழ்ச்சி அழைப்பு இருப்பதால் அதற்குப் போக வேண்டியிருப்பதை முன்னிட்டு சீக்கிரம் கூட்ட வேண்டியதாய் விட்டது. இவ்வளவு அவசரத்தில் கூட்டியும் மண்டபம் நிறைய தோழர்கள் வந்து கூடியிருப்பதைப் பார்த்தால் இம்மாதிரியான சீர்திருத்த காரியங்களில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உள்ள ஆர்வம் நன்றாய் விளங்குகின்றது.

இன்று நாம் பாராட்டக் கூடியிருக்கும் திருமணமானது தோழர் குருசாமி - குஞ்சிதம் அம்மையாரின் தங்கை தோழர் காந்தம் ஙி.கி., ஙி.ஷிநீ., பிஷீஸீ வி.நீ., அம்மையாருக்கும் செங்கல்பட்டு ஜில்லாவாசியும், செங்கல்பட்டு ஜில்லாஅசிஸ்டெண்ட் பஞ்சாயத்து ஆபீசராய் நேற்று வரை இருந்து, இன்று முதல் பொன்னேரி தாலுக்கா ஜூனியர் டிப்டி இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ் என்ற உத்தியோகத்தில் இருப்பவருமான தோழர் சுந்தரவடிவேல் எம்.ஏ.எல்.டி., அவர்களுக்கும் நடந்த திருமணமாகும்.
ஏனைய திருமணங்களில் இல்லாத மாறுதல்
இத்திருமணத்தில் இதற்கு முன் நடந்த திருமணங்களில் நடந்திராத மாறுதல் விஷயங்கள் ஒன்றும் அதிகமாக நடந்துவிடவில்லையானாலும் இரகசியமாக நடந்தது என்பதும், சர்க்காரில் பதிவு செய்ததும்  இக்கூட்டம் கூட்டினதுமல்லாமல் வேறு சடங்கும், அதாவது தாலி கட்டுதல் மாலை மாற்றுதல் முதலியவைகூட இல்லாமல் நடந்தது என்பதும் தான். மாப்பிள்ளை தொண்டை மண்டல வேளாளர் சைவ வகுப்பைச் சேர்ந்தவர். பெண் சாதாரண வேளாள அசைவ வகுப்பைச் சேர்ந்தவர். இருவரும் கல்வியில் இரட்டைப் பட்டம் பெற்றவர்கள். சம வயதினர். இதில் நாம் எடுத்துக் கொள்ளுவது ஜாதி, கலப்பு மணம் என்பதுதான் என்றாலும் இது ஒன்றும் அதிசயமில்லை. இதற்கு முன் 20, 30 வருஷங்களுக்கு முன்னாலேயே பல இம்மாதிரி நிகழ்ந்திருக்கின்றன.
ஆதலால் அதுவும் முக்கியம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இம்மாதிரி ஜாதி கலப்பு மணம் இன்னும் சர்வசாதாரணமாக ஆக்கப்படுவதற்கு ஒரு பிரசாரத்திற்காக இதை இப்படி விளம்பரப்படுத்துகிறோம்.
உதாரணமாக சரோஜினி அம்மாள் என்கின்ற பார்ப்பன பெண்ணுக்கும், கோவிந்தராஜுலு நாயுடு என்கின்றவருக்கும் 1910-க்கு முன்பே திருமணமாகியிருக்கிறது. டாக்டர் சுப்பராயன் என்கின்ற வேளாளக் கவுண்டருக்கும், ராதாபாயம்மாள் என்கின்ற பார்ப்பனப் பெண்ணுக்கும் 25 வருடங்களுக்கு முன்பே திருமணமாகி இருக்கிறது.
தேவதாசி வகுப்பு என்பதைச் சேர்ந்த முத்துலட்சுமி அம்மையார் என்கின்ற பெண்ணுக்கும், ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆகியிருக்கிறது.
முத்துலட்சுமி அம்மையார் தங்கை நல்லமுத்து அம்மையாருக்கும், டி.ஆர். வெங்கிட்ட ராம சாஸ்திரியார் குமாரரான ஒரு பார்ப்பனருக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
ஒரு சாயபுக்கும் எண்டோமெண்ட் போர்ட் பிரசிடெண்ட் நாயுடு பெண்ணுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
ஒரு அய்யங்கார் பெண்ணுக்கும் ஒரு சாயபுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
ஜட்ஜு குமாரசாமி சாஸ்திரியார் குமாரருக்கும், ஒரு அய்ரோப்பிய மாதுக்கும் திருமணம் நடந்திருக்கிறது. ருக்மணி அம்மாள் என்கின்ற ஒரு பார்ப்பன பெண்ணுக்கும், அருண்டேல் துரைக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் (பார்ப்பனர்) பெண்ணுக்கும், காந்தியார் (வாணியர்) மகனுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
மற்றும், சில ஆதி திராவிட பெண்களுக்கும், நெல்லை சைவ வேளாள வகுப்பு ஆண்களுக்கும் திருமணம் எனது வீட்டிலேயே ஒன்றுக்கு மேற்பட்டு நடந்திருக்கிறது. சென்ற மாதத்திலும் ஒரு தேவதாசி வகுப்பு ராஜம் என்னும் பெண்ணுக்கும் சம்மந்தம் என்னும் ஒரு சைவ பண்டிதர் மகனுக்கும் திருமணம் நடந்தது.
கலப்புமணம் செய்து கொண்டால் சொத்து இல்லையா?
ஆகவே, கலப்பு மணமோ உயர்வு - தாழ்வு ஜாதிமணமோ இக்காலத்தில் ஒன்றும் அதிசயமல்ல என்பது எனது அபிப்பிராயம். எனக்குமுன் பேசிய பல பெரியார்கள் இப்படிப்பட்ட திருமணங்களுக்கு நானும் சுயமரியாதை இயக்கமும் காரணம் என்பதையும், நான் ஒப்புக் கொள்வதற்கில்லை. நாம் செய்வதெல்லாம் இவற்றை விளம்பரம் செய்து மற்றவர்களையும் இதை பின்பற்றும்படி செய்ய ஆசைப்படுவதையும் தவிர வேறில்லை. கலப்புமணம் செய்து கொண்டால் சொத்து இல்லையென்றும், சட்டப்படி செல்லாது என்றும் சொல்வதுகூட சரியல்ல. பார்ப்பனப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டாலோ, அல்லது பார்ப்பன ஆணைக் கலியாணம் செய்து கொண்டாலோ மாத்திரம்தான் செல்லாதாம். அதைத்தவிர மற்றபடி பார்ப்பனரல்லாதார் இந்துக்கள் தங்களுக்குள் எந்த ஜாதியில் யாரை மணம் செய்து கொண்டாலும் அது செல்லுபடியாகும். ஆதலால் அதைப்பற்றிய சந்தேகம் இனி யாருக்கும் வேண்டாம்.
இந்துலா என்பதில் பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி கலந்து போகக் கூடாது என்பதற்காக ஏனெனில் தாங்கள் மற்ற ஜாதிகளைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்காக தங்களைப் பொறுத்த வரையில் வேறு ஜாதியில் கல்யாணம் செய்து கொண்டால் சொத்து பாத்தியமில்லை என்று செய்து கொண்டார்கள். ஆதலால் நமக்கு அதனால் கெடுதல் ஒன்றும் இல்லை.
பெரியதொரு வெற்றி
நாம் கோருவதெல்லாம் ஒவ்வொருவரும் தாங்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களை இம்மாதிரி அதாவது சரியான நல்ல ஜோடி சேர்க்கத்தக்க வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். குமாரராஜா அவர்களும் இதற்கெல்லாம் சுயமரியாதை இயக்கமும், நானும்தான் காரணம் என்றார். அவர் கலப்பு மணத்தைப் பற்றி மாத்திரம் அல்லாமல் செலவு சுருக்கத்தைப் பற்றியும், நாள் சுருக்கத்தைப் பற்றியும், ஆடம்பரம் ஒழிப்பு பற்றியும் சொன்னார். அவைகளுக்காக சுயமரியாதை இயக்கம் பாடுபட்டு வருவது உண்மைதான். அதை குமாரராஜா அவர்கள் ஒப்புக்கொண்டு ஆதரித்தது நமக்குப் பெரியதொரு வெற்றியாகும்.
ஏனெனில் அவர் பெரிய செல்வவான். செல்வவான்கள் சிக்கனமாகவும், ஆடம்பரமில்லாமலும் நடத்தினால்தான் அது வழிகாட்டியாகும். ஏழைகள் சிக்கனமாக நடத்துவது அதிசயமாகாது. ஆகவே சிக்கனத்தைப்பற்றி நான் பேசுவதைவிட அவர் பேசுவது மிகவும் சிறந்ததாகும்.
வள்ளல் சிவஞான தேசிகர் அவர்கள் நமது முறையைப் போற்றிப் பேசி என்னையும் புகழ்ந்து கூறி இதுதான் பழந்தமிழர் முறை என்று கூறினார். அவர் பெரிய கல்விச் செல்வம் படைத்தவர். அவர் கூறியவற்றை, என்னைப்பற்றிக் கூறியதைத் தவிர, மற்றவைகளுக்காக நான் நன்றி செலுத்துகிறேன்.
நான் ஒருவன் இல்லாவிட்டால் தமிழர் உலகமே முழுகிப் போயிருக்குமென்றார். அதற்காக நான் பெருமைப்படவில்லை. அவரது அன்பு அப்படி சொல்லச் செய்தது. ஆனால் அவரைப்போலவே என்னைப்பற்றி அதற்கு விரோதமாக அவதூறாகப் பேசுவதையும் கேட்கிறேன். ஆதலால் இரண்டையும் சரி செய்து விடுகிறேன். அதாவது என்னாலேயே தமிழர் சமுதாயம் மாத்திரமல்லாமல் மனித சமுதாயமே பாழ் ஆகி விடுகிறதென்றும், தங்கள் கடவுள்கள் ஒழிகின்றதெனவும் குறைகூறப்படுகின்றன என்றும் இனி சுயமரியாதை இயக்கத்தை ஒழிப்பது தங்கள் கடமையாகக் கொண்டிருப்பதாயும் பலர் சொல்லுவதையும் நான் காதில் கேட்கிறேன். இங்கு இவ்விடத்திலும், அம்மாதிரி எழுதிய சில கேள்வித்தாள்களை இதோ என் கையில் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் எதிரில் நின்று பேசாமல் கோழைத்தனமாக எழுதி மேஜையில் வைத்துவிட்டுப் போய் விடுகிறார்கள். இதோ அதில் கையொப்பமிட்டவர்கள் பெயரைக் கூப்பிடுகிறேன். தைரியமாக வந்தால் அவர்களது கேள்விக்கு சமாதானம் சொல்ல வணக்கத்தோடு நிற்கிறேன்.

20.7.15

கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மன நோயே!

கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மன நோயே!
அமெரிக்க உளவியல் சங்கத்தின் முடிவினைப் பாரீர்!
தந்தை பெரியார் கருத்துக்கு மேலும் ஓர் ஆதாரம்
துண்டறிக்கை மூலம் மக்களுக்கு எடுத்துச் செ(சொ)ல்வீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

கடவுள் நம்பிக்கை ஒரு மன நோயே என்று அமெரிக்க உளவியல் நிபுணர்கள் வெளி யிட்டுள்ள அரிய கருத்தினைத் துண்டறிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் எடுத்துச் செ(சொ)ல்ல வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:
வாஷிங்டனில் 1892ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமெரிக்க உளவியல் சங்கம் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை அவ்வப்போது அறிவியல் இதழ்களில் வெளியிட்டு வருகிறது. அச்சங்கத்தின் ஆய்வு முடிவுகள் உளவியல் மருத்துவ முறையில் பலவாறாக பயன்படுத்தப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகின்ற நிலை உள்ளது.
அதே போன்று நன்னெறிகள் குறித்த வழிகாட்டுதல் களை சங்கம் அளித்து அதற்கான சட்ட வடிவமும் அமெரிக்காவில் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
1892ஆம் ஆண்டில் தோற்றம்
31 பேரைக் கொண்டு 1892ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அமெரிக்க உளவியல் சங்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு அதிவேகமாக வளரத் தொடங்கியது. உளவியல் உட்பிரிவுகளாக 54 பிரிவுகளைக் கொண்டு சங்கத்தின் உறுப்பினர்களாக 1,37,000 பேர் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
1,37,000 பேர் உறுப்பினர்கள்
அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 1,37,000 பேரை உறுப்பினர் களாகக் கொண்டுள்ள அமைப்பாக அமெரிக்கன் உளவியல் சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தின் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 11.50 கோடி டாலர் (115 மில்லியன் டாலர்) செலவினங்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
காவல்துறையினரின் விசாரணையில் உள்ளவர்களின் நலன், மனிதக்கடத்தல், மன நலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை ஆகியவைகளை உள்ளடக்கிய மனித உரிமைக் கான செயல்பாடுகள், ஓரினச் சேர்க்கையாளர்களிடையே மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள், பல்வேறு நிலைகளிலும் சமூகத்தில் உள்ள பாலியல் வேறுபாடுகளைக் களைதல் போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
நிர்வாகம்
சங்கத்தின் நிர்வாகம் என்பது ஜனநாயக முறைகளைப் பின்பற்றி தேர்வு செய்யப்படுவதாகும். சங்கத்தின் உறுப்பினர்களால் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தலைவர் அவருடைய பணிக்காலத்தில் சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றும்படியாக செயல்படுவார். நிர்வாகத்தில் ஆறுபேர் இடம் பெறுகிறார்கள். மேனாள் தலைவர், தலைவர், அடுத்த தலைவர், பொருளாளர், பதிவு செயலாளர், தலைமை செயல் அலுவலர் ஆகியோர் நிர்வாகிகளாகவும் அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் பட்டதாரி மாணவர்களும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
ஆண்டு வருவாய் 6 கோடி டாலர்
அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவுக்குத்தான் நிறுவனத்தின் கொள்கைகளை வகுப்பதற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத்துக்கு கிடைக்கின்ற ஆண்டு வருவாய் சுமார்  6 கோடி டாலர் (60 மில்லியன் டாலர்) ஆகும். உளவியல் நிறுவனத்தின் சார்பில் நாட்டின் பல்வேறு மாநிலம் மற்றும் மாகாணங்களில் உள்ள உளவியல் சங்கத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு ஆண்டு வருவாய் 6 கோடி டாலர் சேகரிக்கப்பட்ட வருவாயாகும்.
அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் நிர்வாக முறை என்பதில் நடைமுறைப்படுத்துவது, படிநிலை செயல் முறைகள் மற்றும் அதற்கான கட்டமைப்புகள் ஆகிய வற்றில், அவ்வப்போது தேவைப்படும் மாற்றங்களை ஏற்படுத்தி, 2011ஆம் ஆண்டு ஜனவரியில் நல்ல நிர்வாகத் தன்மைக்கான திட்டம் தொடங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டில் மேலும் சிறந்த நிர்வாகத்துக்கான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. 31.7.2013 முதல் 2.8.2013 வரை நிறுவனத்தின் செயல்பாடுகளில் சிறப்பான நிர்வாகத் துக்குரிய மாற்றங்களை செய்வதற்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன்படியே பின்பற்றப்பட்டது.
சங்கத்தின் கட்டமைப்பு
செயல் அலுவலகம், பதிப்பகப் பணிகள், அலுவல கங்கள் மற்றும் நிர்வாக முகவரி, வணிகம், தகவல் தொழில் நுட்பம், இயங்குவதற்கான தேவை, கல்வித்துறையுடன் இணைந்து உளவியல் மருத்துவத்தை செயல் திட்டங்களை செயல்படுத்துவது, உடல்நலன் பேணுவோருக்கு உளவியல் சார்ந்த மருத்துவத்தை வழங்குவது என பல்வேறு திட் டங்களை அமெரிக்கன் உளவியல் சங்கம் கொண்டுள்ளது.
பொதுமக்களிடையே ஆர்வத்துடன் உளவியலைக் கொண்டு செல்வதில் அவர்களிடையே உள்ள அடிப்படையான பிரச்சினைகளை பேசுவதன்மூலமும், மக்கள் நலன் கருதி, உரிய அளவில் அவர்களுக்கான பங்களிப்பை வழங்குவது, அனைத்துப் பிரிவுகளிலும் உள்ளவர்களிடையே சமத்துவத்தைக் கொண்டுவருவது ஆகியவைகளில் பொது மக்களிடையே அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பில் இருந்து பொறுப்புடன் செயல் ஆற்றுவார்கள். அறிவியல் செயல்கள்மூலம் நிரூபிக்கவும், உளவியல் அறிவியலுக்காக குரல் கொடுக்கவும் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.
உறுப்பினர்கள்-உளவியலாளர்கள்
இச்சங்கத்தில் உறுப்பினர்களாக இணைந்தவர்கள் உளவியலாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதற்குரிய அளவில் கல்வியும், பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்படும்.
அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் செயல்பாடுகளாக பாலியல் மாறுபாடுகளைக் களைவது மற்றும் பாலியல் உரிமை, மனித உரிமை, நல்ல முறையிலான நிர்வாகங் களில் செய்யப்படவேண்டிய  மாற்றங்கள், கருக்கலைப்பு உரிமை, ஒருபாலின மண உரிமை, உடல்நலத்துக்கு இன்றி யமையாத உளவியல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வருகிறது.
உடல் நலம் பேண உளவியல் நிலை பாதுகாக்கப்பட வேண்டும், உளவியல் என்பது அறிவியலே, மாணவர் களிடம் உளவியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை முதன்மையானவை யாக முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது.
பணியிடங்கள்
மருத்துவர்களுக்கு ஈடாக ஆரம்பக் கல்வி முதல் பள்ளிக் கல்வி வரை பள்ளிகள், மருத்துவமனைகள், இராணுவப் படை முகாம்கள், நீதித்துறை, சிறைகள், வணிகம் மற்றும் தொழில்கூடங்கள் உள் ளிட்ட பல்வேறு துறை சார்ந்த இடங்களில் அங்கீ காரம் பெற்ற கல்வி நிறுவ னங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள், உள வியல் ஆய்வாளர்கள், உள வியல் கல்வி பெற்றவர்கள் அமெரிக்கன் உளவியல் சங் கத்தில் அங்கத்தினர்களாக சேர்க்கப்படுகிறார்கள். அமெரிக்க அய்க்கிய நாடுகள் மற்றும் கனடா மட்டுமன்றி பிற நாடுகளி லிருந்தும் உளவியல் கல்வி பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மன நல மருத்துவத் துறையினர் அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள்.
கடவுள் நம்பிக்கையாளர்கள் மன நோய் வயப்பட்டவர்கள்
கடவுள் அல்லது மேலான சக்தி என்று ஒன்று இருப்பதாக திடமாக, ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் பொது அறிவு சார்ந்த நிலைகளிலும்  தாங்கள் எடுக்கக் கூடிய முடிவுகளில் தன்னம்பிக்கை இழந்தவர்களாக, மன நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று   அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் ஆய்வுத் தகவல் கூறுகிறது.
அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் மத நம்பிக்கையாளர்களாக இருப்ப வர்கள் மிகுந்த கவலைகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும், உணர்ச்சிவயப்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் களாகவும், இயல்புக்கு மாறாக கற்பனை உலகில் உலவுபவர்களாகவும், மன நலம் பாதிக்கப்பட்டவர் களாகவும் இருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. 5 ஆண்டு கால ஆய்வின் முடிவாக அமெரிக்கன் உளவியல் சங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கருணையே வடிவானவன் என்று கருதுவதுடன் தங்களுக்கு மன அமைதியைத் தருபவர் என்றெல்லாம் கடவுள்குறித்து எண்ணிவரும் கடவுள் நம்பிக்கை யாளர்களாக இருப்பவர்கள்தான் தங்களின் உடல்நலக் குறைவு போன்ற நேரடி பாதிப்புகளுக்கு காரணமாக கடவுள் கொடுக்கும் தண்டனை என்று கருதுகிறார்கள். மத நம்பிக்கையில் உள்ள இரண்டு விதமான நடவடிக்கைகள் முற்றிலும் உண்மைநிலைக்கு தொடர்பற்று முரணாகவே இருந்துவருகின்றன.
பேராசிரியர் டாக்டர் ஆண்ட்ரியூஸ்
உளவியல் பேராசிரியர் டாக்டர் லில்லியன் ஆண்ட் ரியூஸ் கூறுகையில், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக் கானவர்கள் உயிர்காக்கும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளாமல் மத நம்பிக்கைகளால் உயிரிழக்கிறார்கள். அந்த சிகிச்சை அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் உயிரிழப்பார்கள் என்று எடுத்துச் சொன்ன போதிலும், அந்தக் கருத்தை மறுத்து, கடவுள் அவர்களைக் காப்பார் என்று கடைசிவரை நம்புகிறார்கள். ஆகவே, சிகிச்சை எடுத்துக்கொள்வதில் முடிவை எடுக்க தகுதி அற்றவர்களாக இருக்கிறார்கள் என்கிற முடிவுக்கு வரும்போதுதான், அந்த மக்களைக் காக்க முடிகிறது.
குருதிக்கொடை ஏற்காத மனக்கோளாறு
யகோவா என்கிற கடவுளே சாட்சியாக இருக்கிறார் என்பார்கள். அவர்களுக்கு ரத்தம் கொடுக்க வேண்டும் என்றால் எந்த சூழலிலும் ஏற்க மாட்டார்கள். அதேபோல் அடுத்தவர் ரத்தத்தைப் பெற்று உயிர் வாழ்வதைவிட இறப்பதேமேல் என்பார்கள். மதவாதிகளாக இருப்பவர்கள் பலரும் தங்களின் கைகளுக்கே குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதாக நம்புகிறார்கள். கடவுளுக்கு என தனியே மொழி இருப்பதாக நம்புகிறார்கள். அந்த மொழி யாருக்கும் தெரியாது. இடையில் தொடர்பாளராக இருப்பவர் களுக்கும், கடவுளுக்கும் மட்டுமே அந்த மொழி தெரியும் என்று எண்ணுகிறார்கள். (கடவுளும் மனிதர்களைப் போன்று நாவால் பேசுவதாக எண்ணுகிறார்கள்) அவ்வப் போது பலரும் ஆவிகளைக் கண்டதாகக் கூறிக் கொள்வார்கள். உண்மைக்கு மாறானவைகளாக உள்ள இவ்வாறான நிலையை மனக் கோளாறுகளின் அடை யாளமாகவே பார்க்க முடியும்.

கடவுளின் கோபம் எனும் மூடநம்பிக்கை
கடவுளின் கோபத்தால் குழப்பம், அழிவு, இறப்பு, நூற் றாண்டுகளாக போர்கள் ஏற்படுவதாக மத நம்பிக்கை யாளர்கள் கருதுகிறார்கள். காலத்தால் ஏற்பட்டு வரும் மாற்றங்களிடையே நவீன சமூகத்திலும் இவையாவும் தொன்மையான நம்பிக்கைகளாக, மூளை செயல்பாடு களின்றி நீண்ட காலமாக அப்படியே நீடித்த நிலையில் இருந்து வருகிறது. இவைகுறித்த முதல் அடியாக பல வகையிலும் நேர்மறை வழிகாட்டுதலாக இந்த ஆய்வு அமைந்துள்ளது என்று பேராசிரியர் ஆண்ட்ரியூஸ் கூறினார்.
உயிரைக் காக்க கட்டாய சிகிச்சை
புதிய விளக்கங்களின்படி, அமெரிக்க உளவியல் சங்கம் சட்டம் இயற்றுவதற்கான வழிகாட்டுதல்களை முன் னெடுக்கிறது.  அந்த சட்டத்தின்மூலமாக, மத நம்பிக்கை களால், மத காரணங்களால், மத சிந்தனையிலிருந்து விடுபட முடியாமல்,  அவர்களின் உடல் நலனைப் பொறுத்து தேவையான முடிவை எட்ட முடியாதவர்களுக்கு,  மத நம்பிக்கையின் பேரால் சிகிச்சை பெற மறுப்பவர் களின்  உயிரைக் காப்பதற் காக எந்த நிலையிலும், மருத்துவர்கள் கட்டாய சிகிச்சை முறைகளைப் பின் பற்றலாம் என்று மருத்துவர்களுக்கு முழு உரிமையை அளித்திட முடியும்.
விரைவில் இந்த ஆய்வு குறித்த முழு விவரங்கள் அமெ ரிக்கன் உளவியல் சங்கத்தின்மூலம் வெளியிடப்பட்டுவரும் இதழில் வெளிப்படையாக அனைவரும் அறிந்து கொள் ளும்படியாக வெளியிடப்படும் என்றும் அச்சங்கத் தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் www.thenewsnerd.com  எனும் இணையத் தில் மருத்துவச் செய்தித் தலைப்பில் வெளியிடப் பட்டுள்ளது.
மேற்கண்ட அமெரிக்கன் உளவியல் சங்கத்தின் ஆய்வுகளும், செயல்பாடுகளும், தகவல்களும் எவ்வளவு சரியானவை - துல்லியமானவை என்பதை  விரைவில் உலகம் அறியப் போகிறது. இவை சரியானவைகளே என்று முடிவு கட்டவும் இந்த ஆய்வுகள் பயன்படும்; இதற்கான சரியான பரிசோதனைக் கூடம் (Laboratory) ஒன்று உண்டு என்றால், அது இந்த இந்தியத் திருநாடுதான்.
இங்குள்ள பல கோடி மக்களை மதம் பிடித்துள்ளதோடு, கடவுள் நம்பிக்கை எத்தனை மோசமான நிலையில் அவர்களை வைத்துள்ளது!
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி  பேருந்திலிருந்து மனிதாபிமானமின்றி உருட்டி விடப்பட்டுக் கொன்ற பஞ்சாப் பெண்மணியினைப் பற்றி அங்குள்ள அமைச்சர் அது கடவுள் செயல் - கடவுள் சித்தம் என்று  இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கூறினார் என்றால் இதைவிட மனநோயாளிகளாக கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் தேவை?
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று வரும் ஆந்திர மாநிலம், கோதாவரி மகா புஷ்கர நீராடலில் 81 லட்சம் பேர் கூடினர் - கடந்த ஒரு வாரமாக நெரிசலில் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 30-க்கும் மேல் என்ற கொடுமையான கோர நிகழ்வுக்குப் பின்னரும் கூட்டம் அங்கே சென்றுள்ளது என்பது எதைக் காட்டுகிறது?
கடவுள் நம்பிக்கை முற்றிலும் ஒரு மன நோய் - பக்தி என்பது அதன் வெறித்தன வெளிப்பாடு என்பதைத்தானே அது காட்டுகிறது!
அதுபோலவே நேற்று முன்தினம் ஒடிசாவின் பூரி தேர் இழுப்பு விழாவில் 3,4 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இன்னமும் நரபலிக்கு ஆள்தேடும் அளவுக்கு தமிழ் நாட்டில்கூட அவ்வளவு மோசமான பைத்தியக்காரத்தனம் தலை தூக்கி - அடி வாங்கியவுடன் தலையை இழுத்துக் கொள்ளுகிறது என்பது எதைக் காட்டுகிறது!
அமெரிக்கா ஆய்வான இதை நாடு முழுவதும் துண்டறிக்கையாக பகுத்தறிவாளர்களும் பரப்ப வேண்டும்.
அறிவுப் பூர்வமான - உளவியல் பூர்வமான இந்த ஆய்வு செய்தவர்களை, துணிவுடன் வெளியிட்ட அமெரிக்க உளவியல் ஆய்வாளர்களையும் வெகுவாகப் பாராட்டுகிறோம்.
தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர்களும் நீண்ட காலமாகக் கூறி வருவதை ஆய்வு மூலம் அமெரிக்கன் உளவியல் ஆய்வு நிரூபித் துள்ளது மிகுந்த மகிழ்ச்சிக்கும், வரவேற்புக்கும் உரியதாகும்.
----------------------கி.வீரமணி  தலைவர்,    திராவிடர் கழகம் சிங்கப்பூர் 20.7.2015