Search This Blog

17.7.15

கரு முட்டையில்கூட ஜாதியா?


திருமணத்தின் போதுதான் ஜாதி, சைவம், நல்ல படிப்பு மற்றும் நல்லவேளை என்று பார்த்து மண முடிப்பார்கள், ஆனால் திருமணமாகி குழந்தையில்லாத நிலையில் செயற்கைக் கருவூட்டல் முறையில் வாங்கப்படும் விந்தணு மற்றும் கருமுட்டையில் கூட ஜாதி மதம் பார்த்துவாங்கப்படுகிறது என்றால் நம்புகிறீர்களா? ஆம் நாம் அறிவியல் உலகில் தான் இருக்கிறோம். ஆனால் மெத்தப் படித்த முட்டாள்களின் கூட்டத்தில் வாழ்கிறோம் என்பதை மட்டும் இந்தச் செய்தி உறுதிப்படுத்துகிறது.

பெங்களூரைச் சேர்ந்த விந்தணு மற்றும் கரு முட்டை சேகரிப்பு மய்யத்தைச் சேர்ந்த மருத்துவர் கம்னிராவ் கூறுகிறார். நாங்கள் கடந்த சில ஆண்டு களாகவே எங்களிடம் கொடையாகப் பெறும் விந்தணு மற்றும் கருமுட்டைகளின் மீது (வெஜ்டேரியன்) அதாவது பிராமின் என குறித்து வைத்துவிடுவோம். மேலும் மெத்தபடித்தவர்கள், நல்ல வேலையில் உள்ளவர்கள் போன்றவர்களுடைய விந்தணுமற்றும் கருமுட்டைகளையும் சேகரிக்கும் போதே லேபில் எழுதி ஒட்டிவிடுவோம் என்றார்.   அதற்குக் காரணமாக அவர் கூறும்போது எங்களிடம் வரும் பெரும்பாலான குழந்தையில்லா தம்பதியினர் சைவ(பார்ப்பன) விந்தணு\ கரு முட்டையைத் தான் கேட்கிறார்கள். மற்றவைகளாக ஆரோக்கியமான, திடகார்த்திரமான ஆண் பெண் களின் உடலில் இருந்து எடுத்த விந்தணு மற்றும் கருமுட்டை குறித்து அவர்களது கேள்வி இரண்டா மிடத்திற்குத் தள்ளப்படுகிறது.
மிலன் என்ற கருமுட்டை விந்தணு சேமிப்பு மய்யம் கூறுவது கொஞ்சம் ஆறுதலளிப்பதாக உள்ளது அவர்கள் கூறும்போது மிகக்குறைந்த அளவு  கருமுட்டை மற்றும் விந்தணு சேகரிப்பு மய்யங்கள் இதுபோன்ற அநாகரிகமான வேலைகளைச் செய் கின்றன. மேலும் படித்த தம்பதியினர் குழந்தையின்றி சிகிச்சைக்காக வரும்போது இது போன்ற கேவலமான முட்டாள்தனமான கோரிக்கைகளை முன்வைப்பது வெட்ககேடே!
நாங்கள் ஒன்றுமட்டும் கூறுகிறோம் இங்கு கொடையாகப் பெறும் விந்தணுக்கள் மற்றும் முட்டைகள் ஆரோக்கியமான நபர்களிடமிருந்து பெறுகிறோம். அவர் அசைவமா, சைவமா என்பதெல் லாம் எங்களுக்குத் தேவையில்லை; சைவ உணவுப் பழக்கமுள்ளவர்களின் விந்தணுவையும் கருமுட்டை யையும் கேட்கும் தம்பதிகள் குறித்து உறுதியான தகவல்கள் இல்லை, முக்கியமாக சில செய்ற்கை கருவூட்டல் மய்யங்களின் வியாபாரத்தந்திரமாகக் கூட இருக்கலாம் என்று கூறினர்.
இந்த இடத்தில் அறிவியல் ரீதியாக ஒன்றை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். குஜராத், மத்திய பிரதேச  மாநிலங்களில் ஊட்டச் சத்துக் குறைவான குழந்தையின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குழந்தைகளுக்கு முட்டையாவது கொடுக்க வேண்டும் என்ற பிரச்சாரம் செய்யும் நிலைதான் அங்கு! குறிப்பாக வைட்டமின்கள் பி12, டி3 என்ற மிக அவசியமான ஊட்டச் சத்துகள் இறைச்சி, மீன், முட்டையில் தான் அதிகம் டாக்டர் ஹால்ஹெர்ஜாக் (Halherzog) என்ற உயிராய்வியல் அறிஞரின் கண்டுபிடிப்பும் - கணிப்பும் இதுவே!
உயிரினங்களுக்குத் தேவையான சத்துகள் மாமிசம் மற்றும் காய்கறிகளில் கிடைக்கின்றன என்றாலும், நில நடுக்கோட்டுப் பகுதியைத் தவிர்த்து, மற்ற பகுதிகளில் வாழும் மனிதர்கள் மாமிசத்தைத் தவிர்த்தால், இரு தலைமுறையின் முடிவில், அந்த சம்பந்தப்பட்ட வம்சமே அழிந்து விடும். காய்கறி சாப்பிடாமல் வெறும் மாமிச உணவையே உணவாக உண்டு வாழ்ந்து வருபவர்களுக்கு தொடர்ந்து சைவ உணவைக் கொடுத்தால், அவர்களின் இரண்டாம் தலை முறை நோய் எதிர்ப்பு வீரியமின்மை, நரம்புத் தளர்ச்சி, இளம் வயது மரணம் ஏற்பட அதிக வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.
உண்மை இவ்வாறு இருக்க, சைவ உணவு சந்ததியினரைத் தேடுவது ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையே!
இதில் ஒரு வெட்கக் கேடு பெங்களூர் விந்தணு சேமிப்பு வங்கியை நடத்தக் கூடிய கம்னிராவ் விந்தணு கருமுட்டைகளின்மீது வெஜிடேரியன் (Vegetarian) அதாவது பிராமின் என்று குறித்து வைத்து விடுவோம் என்கிறார்கள் மக்களை முட்டாள்கள் என்பதைவிட இத்தகைய விஞ்ஞான ரீதியான வங்கிகளை நடத்து பவர்கள் மூளையில் ஏன் இத்தகைய ஜாதி உணர்வு முட்டையிடுகிறது என்று தெரியவில்லை; ஒருக்கால் அவர் ராவ் என்பதாலா? விஞ்ஞானம் வளர்ந்தாலும், விஞ்ஞான மனப் பான்மை வளரவில்லை என்பது மிகவும் வெட்கக்கேடே! நம் நாட்டுக் கல்வியில் உள்ள குறைபாடும் முக்கிய காரணம்தான்.
                         ---------------------------------------------”விடுதலை” தலையங்கம் 17-07-2015

0 comments: