Search This Blog

13.7.15

வியாபம்  ஊழலின் வியாபகம்! திகில்கள்! திடுக்கீடுகள்!! மர்ம மரணங்கள்!!!

வியாபம் ஊழலின் வியாபகம்!திகில்கள்! திடுக்கீடுகள்!! மர்ம மரணங்கள்!!!

எங்கே? எங்கே? பிஜேபி ஆளும் ம.பி.யில்!

வியாபம்  ஊழலின் வியாபகம்!

திகில்கள்! திடுக்கீடுகள்!! மர்ம மரணங்கள்!!!

எங்கே? எங்கே? பிஜேபி ஆளும் ம.பி.யில்!

பல திகில் கதைகளைப் படித்திருக்கிறோம் - பல மர்ம நாவல்களைப் படித்திருக்கிறோம் - விட்டலாச்சாரியா சினிமாக்களைக் கண்டிருக் கிறோம். இவை எல்லாம் பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் நடைபெற்று இருக்கும் அடுக்கடுக்கான நிகழ்வுகளிடத்தில் பிச்சை வாங்க வேண்டும்.
இதில் சில கொலைகள் உண்டு. தற்கொலை களுக்கும் பஞ்சமில்லை; அரை மணி நேரத் திற்கு முன் இருந்தாரே - அவர் எப்படி செத் தார்? நேற்றிரவு பார்த்தோமே - இப்பொழுது எப்படி நெடுந் தூக்கத்தில் உறைந்தார்?
தண்டவாளத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பிணமாகக் கிடந்ததன் பின்னணி  என்ன?
ஆளுநர் மகன் மர்மச் சாவுக்கு காரணம் என்ன? மருத்துவக் கல்லூரியின் டீன் எப்படி மரணம் அடைந்தார்?
காவல்துறையினரும் இந்த மர்ம மரணத்திலிருந்து தப்பிப் பிழைக்கவில்லை. அரசு வழக்குரைஞர் உணவிலும், நஞ்சு கலக்கப்பட்டு - மருத்துவமனையில் அனுமதி!
மர்ம மரணமடைந்த மாணவியின் பெற் றோரைப் பேட்டி கண்டு வந்த பத்திரிகையாளர் உயிர் பறிக்கப்பட்டது எப்படி?
ஆறாம் வகுப்பே படித்த ஒருவன் மருத்துவரான அதிசயம் எப்படி நிகழ்ந்தது?

இவர்களை நம்பி வைத்தியம் பார்க்கப் போனவர்களின் சாவுப் பட்டியல் எவ்வளவு?
இதுபோன்ற தகவல்கள் எல்லாம் அலை பாயும் மர்ம இரகசியங்கள் கொத்துக் கொத் தாகப் படம் எடுத்தாடும் திரைப்படத்தைக் காணத் தவறாதீர்!
மிக யோக்கியர் என்று அத்வானி அவர் களால் நற்சான்றுப் பத்திரம் கொடுக்கப்பட்ட பிஜேபியை சேர்ந்த மத்திய பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆட்சியில் தான் -இந்தத் திகில்களும், திடுக்கீடுகளும், மர்மங்களும், அதிர்ச்சிகளும் கூட்டணி வைத்து நிர்வாணக் கூத்தாடுகின்றன.
அடேயப்பா! இந்த பிஜேபியும் ஆர். எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலும் பேசும் வாய் நீளத்தைப் பாருங்கள்! பரிசுத்த நெய்யினால் பொரிக்கப்பட்ட கலப்பட மற்ற - ஜமக்காளத்தில் வடிகட்டப்பட்ட உத்தமப் புத்திரர்கள் என்று எச்சில் ஒழுக ஒழுகப் பேசும் வக்கணையைப் பாருங்கள்!!
இதுவரை இவர்கள் பேச்சில் ஏமாந்தவர் களை மத்திய பிரதேச ஊழல் உசுப்பி எழுப்பி மாரத்தான் ஓட்டம் ஓடச் செய்து விட்டது.  பணம் கொடுத்தால் டாக்டர் பட்டம் ரெடி! பணம் கொடுத்தால் எந்தப் பதவியும் கிடைக் கும் - கடைகளில் கத்திரிக்காய் வாங்குவது போல! இதில் என்ன இன்னொரு அதிர்ச்சி தெரியுமா? போகிற போக்கைப் பார்த்தால் என் உயிருக்கே  ஆபத்து வந்து விடுமோ என்று மத்திய அமைச்சர் உமாபாரதியே ஒப்பாரி வைக்கிறார்!
இது நாடு தானா? சுடுகாட்டு நரிகள் மத்தி யில் மக்கள் நடுங்கிக் கொண்டு இருக் கிறார்களா?!
இவ்வளவு நடந்ததற்குப் பிறகும் முதல் அமைச்சர் சவுகான் பதவி விலக மாட்டாராம்.
நெஞ்சைத் தைரியப்படுத்திக் கொண்டு மத்திய பிரதேச பிஜேபி அராஜக காட்டுக்குள் நுழையுங்கள். இதயப் பலகீனம் உள்ளவர்கள் வேண்டுமானால் படிப்பதைத் தவிர்க்கலாம். என்.டி.டி.வி விவாதத்தின் போது உயிருக்குப் பயந்து அடையாளத்தை தெரிவிக்க மறுத்த ஒரு மருத்துவர் பேசியது 6-ஆம் வகுப்பு மாத்திரமே படித்த ஒரு பெரிய புள்ளியின் மகனுக்கு மத்திய பிரதேச மிகப் பெரிய அரசியல்வாதியின் தலையீட்டின் பேரில் உடனடியாக உயர்கல்வி தேர்ச்சிக்கான சான்றிதழ் மதிப்பெண் பட்டியலுடன் கிடைக் கிறது,
அடுத்த சில நாட்களில் அவர் மருத்து வக்கல்லூரி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டதாக கூறி எம்.பி.பி.எஸ் வகுப்புகளுக்கு வர ஆரம்பித்துவிட்டார். மத்தியப்பிரதேச பாஜகவின் 15 ஆண்டு கால ஆட்சியின் அவலங்களில் சிறு துளியே. இது நடந்தது 2004-ஆம் ஆண்டு; இன்றோடு 11 ஆண்டுகள் முடிந்து விட்டன.
ஆண்டிற்கு 2000 மருத்துவர்கள் மத்தியபிரதேசத்தில் உருவாகிறார்கள், அப்படியென்றால் இன்று மத்தியப்பிரதேச மாநிலத்தில் 2010-க்குப் பிறகு இன்று மருத்துவர்களாக இருக்கும் மருத்து வர்களிடம் சிகிச்சைக்கு யாரும் சென்றுவிட முடியுமா? தமிழ்ப் படமான  வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தில் நாயகன் மருத் துவக் கல்லூரியில் சேருவது போன்றே மபியில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
மருத்துவம் மாத்திரமல்ல, மத்தியப் பிரதேச அரசுத் தேர்வு வாரியம் எனப்படும் வியாபம்(விவசாயிக் பரீக்ஷா மண்டல்-மபி) மூலம் நடந்த பல்வேறு அரசுப் பணி, பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வு போன் றவற்றில் ஊழல் நடந்துள்ளது. கடுமையான ஊழல்! பொதுவாக ஊழல் என்பது பணத் தோடு முடிந்து போன ஒன்றாக இருக்கும்; இந்த ஊழல் பணத்தோடு உயிர்களையும் தொடர்ந்து மாய்க்கும் - பறிக்கும் ஒன்றாக உள்ளது!
2004-ஆம் ஆண்டு நன்கு தேர்வு எழுதி தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று எதிர் பார்த்துக்கொண்டு இருந்த ஆனந்த் பான்சே என்பவர் தேர்ச்சி பெற வில்லை என்று வீட்டிற்கு கடிதம் வந்தது. அதே நேரத்தில் அவரது நண்பர் ஒருவர் தேர்வு எழுதாதவர், அதற்கான தகுதிக் கல்விகூட (12-ஆம் வகுப்பு தேர்ச்சி) பெறாதவர் சில நாட்களில் மருத்துவக்கல்லூரி செல்ல ஆரம்பிக்கிறார்.
ஆனந்த பான்சேவுக்கோ பெரும் அதிர்ச்சி! தனக்கு இழைக்கப் பட்ட அநீதி குறித்து  மருத்துவ நுழைவுத்தேர்வு அதிகாரிகளிடம் புகார் அளித்தபோது, இவ்வளவு பணம் கொடு, உடனடியாக உனக்கு இடம் கிடைக்கும் என்றார்கள், மேலும் தகுந்த கல்வித்தகுதி இல்லாதவராக இருந்தாலும் பரவாயில்லை என்று பதில் வந்தது. அதன் பிறகுதான் மெல்ல மெல்ல வெளிவரத் துவங்கியது இந்த வியாபம் ஊழல்,
ஊழல் தொடர்பாக முதல்முறையாக புகார் கூறியவர்:
குவாலியரைச் சேர்ந்த 26 வயதான ஆசிஷ் சதுர்வேதி என்பவர்தான் இந்த ஊழலை பகிரங்கமாக வெளியிட்டவர்களில் முக்கிய மானவர் ஆவார். இவர் இந்த ஊழல் பற்றிக் கூறும்போது 2009ஆம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்ட எனது தாயாரை சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தேன். அங்குள்ள மருத்துவர்களுக்கு மருத்துவம் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லை.
அங்கு ஒவ்வொரு நோயாளிகளுக்கும் தவறான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் எனக்கு சந்தேகம் வந்தது; பின்னால் எனது தாயார் சில நாட்களில் இறந்தார்.
இதைத் தொடர்ந்து நான் தனியாக விசாரணை செய்தேன். ரகுவன்ஷி என்ற மருத் துவ மாணவரை தற்செயலாகச் சந்தித்தேன். அவருடன் உரையாடிக் கொண்டு இருந்த போது அவர் லஞ்சம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக தெரிவித்தார்.
போலியாக ஒருவரை தயார் செய்து நுழைவு தேர்வை எழுத விடுவார்கள். தேர்வு எழுத வேண்டியவர்களை திரைப்படத்திற்கு அனுப்பி விடுவார்கள் என்று அவர் என்னிடம் கூறினார். அப்போது தான் எனக்கு இந்த முறைகேடு பற்றிய விவரம் தெரிந்தது.
மத்திய பிரதேசத்தில் திரையரங்கில் படம் பார்த்தவர்கள்தான் மருத்துவர்களாக இருக் கிறார்கள். அவர்களிடம் மருத்துவம் பற்றிய போதிய அறிவே இல்லை. வியாபம் முறை கேட்டில் முதலில் இறந்தது எனது தாயார்தான். தற்போது தொடர்ந்து மர்மச் சாவுகள் நடைபெற்று வருகின்றன. இது இயல்பான மரணம் அல்ல.
இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்த எனது உயிருக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. காவல்துறையினர் எனக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு தரவில்லை. எந்த நேரத்தில் எனக்கு என்ன நடக்குமோ என்ற பீதியில்தான் இருக்கிறேன்.
மருத்துவக் கல்லூரி பேராசிரியர் கூறும் அதிர்ச்சித் தகவல்
பிகே சிங் என்ற மருத்துவக் கல்லூரிப் பேரா சிரியர் கூறுகிறார். ஆங்கில எழுத்துகள் தெரி யாதவர்கள் எல்லாம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்று வெளியேறு கிறார்கள் என்றார். மருத்துவம் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, மபி மாநில காவல்துறை, அரசு வேலைவாய்ப்புகள் என அனைத்திலும் பணம் கொடுத்தால் எதுவும் கிடைக்கும் என்ற ஓர் அசிங்கமான ஊழல் மத்தியப் பிரதேசத்தில் தலைவிரித்தாடியுள்ளது.
ஆளுநரும் முதல் அமைச்சரும் சிக்குகின்றனர்
இந்த விவகாரம் மெல்ல மெல்ல வெளி வந்துகொண்டு இருக்கும் போது, இதில் தொடர் பானவர்கள் என்று முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான், ஆளுநர், தற்போதைய நீர்வளத் துறை மத்திய அமைச்சர் உமாபாரதி மற்றும் ஒட்டுமொத்த ம.பி. கேபினெட் அமைச்சர் களின் பெயர்கள் வெளியாயின. முதலில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் என்று கூறப் பட்டது.  இந்த நிலையில் தொடர் மரணங்கள் நிகழத் துவங்கின,
மாநில உள்துறை அமைச்சருக்குத் தெரியாதாம்!
மரணமடைந்தவர்கள் அனைவரும் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். மரண மடைந்தவர்கள் அனைவரும் வியாபம் ஊழ லில் தொடர்பானவர்கள், அல்லது சாட்சிகள் ஆவர்.  நிலைமை மோசமாகிக்கொண்டு வருவதை அடுத்து ம.பி. முதல்வர் தனது தலைமையில் உள்ள மாநிலக் காவல்துறையில் இருந்து சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஒன்றை உருவாக்கி, அதன் கைகளில் வியாபம் ஊழல் விசாரணையை ஒப்படைக்கிறார்.
ஆனால் மாநில் உள்துறை அமைச்சரோ அப்படி ஒன்று இருக்கிறது என்று எனக்குத் தெரியாது, அந்த அமைப்பு என்னிடம் இதுவரை எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என்று கூறுகிறார். இதில் மேலும் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால், புலனாய்வுத்துறைக்கு மபி மருத்துவத்துறையில் நடந்த ஊழல் குறித்து விசாரணை செய்துவரும் அதிகாரிபி.கே.குஹா என்பவருக்கு கிடைத்த ஓர் ஆவணத்தில் சிவ்ராஜ்சிங் சவுகான், அவரது மனைவி,
முதலமைச்சரின் முதன்மை தனிச்செயலாளர்,  ஆளுநரின் மகன் மற்றும் மத்தியப்பிரதேச அமைச்சரவையில் உள்ள அத்தனைப் பெயர்களும் அதில் அடங்கியிருந்தன.
காவல்துறை ஆய்வாளரும் பிணமானார்!
இதை அவர் சிறப்புப் புலனாய்வுத்துறையிடம் சமர்ப்பித்தார். ஆனால் சிறப்புப் புலனாய்வுத் துறையினர். அரசியல் வாதிகளின் பெயர்களை எல்லாம் அழித்துவிட்டு, அந்த இடங்களில் தேடப்படும் நபர்கள் என்ற குறியீட்டை போட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்கள் இதனடிப்படையில் சுமார் 3000 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டனர்.
இதில் சிறையில் 8 பேர் மரணமடைந்தனர். பிணையில் வெளி வந்த 6 பேர் விபத்தில் மரணமடைந் தனர். சாட்சிகளில் இருவர் பெண்காவல் துறை ஆய்வாளர் குஷ்வாகக் மற்றும் பொறியியல் பிரிவு விசாரணை அதிகாரி கடந்த காலத்தில் குளத்தில் பிணமாக மிதந்தனர். பல மருத்துவர்கள் விடுதிகளிலும் வீடுகளிலும் பிணமாக மீட்கப்பட்டனர்.
கடைசியாக காவல்துறை தலைமை ஆய்வாளர் ஒரு செவ்வாயன்று (7.7.15) காலை தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார். அவரது நண்பர்கள் அவர் படுக்கையில் செத்துக் கிடந்தார் என்றனர். ஆனால் காவல்துறையினர் வந்து பிணத்தை எடுத்துச் செல்லும் போது தூக்குப்போட்டு மரணமடைந்தார் என்று ஊடகத்தினரிடம் கூறுகிறார்கள், சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்படுகிறது.
தண்டவாளத்தில் பிணம்!  2012-ஆம் ஆண்டு 19-வயதான நம்ரதா தாமோர் என்ற மருத்துவக் கல்லூரி மாணவி ரயில் தண்டவாளத்தின் அருகில் பிணமாகக் கிடந்தார். வியாபம் ஊழலின் முதன் மைக் குற்றவாளிகளில் ஒருவனான விசால் சர்மா என்பவன் மரணமடைந்த மாணவியிடம்  கடைசியாக பேசியுள்ளான்.
இவன் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் முக்கிய உறவினரும், நண்பருமாவான்.      தாமோருக்கு இந்த ஊழல் விவகாரம் தொடர்பான பல உண்மைகள் தெரியவந்த காரணத்தால் இந்தக் கொலை நடந்துள்ளது என்று நம்ரதா தாமோரின் தோழிகள் கூறியுள்ளனர்.
முதலில் நம்ரதா பிணத்தைக் கைப்பற்றிய ம.பி. காவல்துறை தற்கொலை என பதிவுசெய்து வழக்கை மூடிவிட்டது, ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் நம்ரதா பாலியல்வன்கொடுமைக்காளாகிய பிறகு கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதற்கான அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கிறது, இந்தப் பிரேதப் பரிசோதனை அறிக்கை நகலைப் பெற்ற பிறகு தான் அக்ஷய் சிங் சந் தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந் துள்ளார்.
வழக்கை விசாரித்து வந்த அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஆதர்ஷ் முன்னி திரிவேதி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உணவில் விஷம் வைக்கப்பட்டுள்ளது என்று அவரின் வீட்டார்கள் கூறியுள்ளனர்.
சாவூருக்குப் போனோர் பட்டியல்
வியாபம் ஊழல் தொடர்பாக இதுவரை அய்யத்திற்கிடமான வகையில் மரணமடைந் தவர்கள் (காவல்துறை முதல் தகவலறிக் கையில் இருந்து)
1. அக்ஷய் சிங், 2. உதய் பாண்டே, 3. அருண் ராய், 4. விஜய் சிங், 5.  நம்ரதா தாமோர், 6.  மருத்துவர் டி.கே.சகாலே, 7.  ராமெந்திர சிங் பண்டோரியா, 8. நரேந்திர சிங், 9.  ராஜேந்திர ஆர்யா, 10.அமித் சாகர், 11. அனுஜ்பாண்டே, 12.  விக்ரம் சிங், 13. அர்விந்த் ச்க்யா, 14.  குல்தீப் மாராவி, 15.  அனதரம் தாகூர், 16.  அசுதோஷ் திவாரி, 17. கியான் சிங்(பிண்ட்), 18.  பிரமோத் சர்மா, 19.  விகாஷ் பாண்டே, 20.  வி தாகூர், 21.  சியாம்வீர் சிங் யாதவ், 22.  ஆதித்யா சவுதிரி, 23.  தீபக் ஜெயின், 24. க்யான் சிங்(போபால்), 25. பிரிஜேந்தர் ராஜ்புத், 26. நரேந்திர ராஜே, 27.  ஆனந்திங் யாதவ், 28. அனிருத் உகைய், 29.  லலித்குமார்,  30.பசுபதிநாத் ஜய்ஸ்வார், 31.ரகுவீந்திர சிங், 32. ஆனந்த் சிங், 33. மனீஷ் சமடியா, 34.  தினேத் ஜாதவ், 35. க்யான் சிங் (சாகர்), 36  ரமாகாந்த்பாண்டே,, 37 அன்கிதா குஷ்வாஜா, 38. அருண் துபே, 39  கிஷோர் ராய், 40திலிப் சாகர் பன்சாடே.
இவர்கள் அனைவரும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் மரணமடைந்ததாகக் கூறப்படுப வர்கள். மரணம் என்பது சரியான சொல்லா காது - தற்கொலைக்கோ, படுகொலைக்கோ ஆளானவர்கள்!     உத்தரப்பிரதேசத்திலும் மர்ம மரணங்கள்
உத்தரப்பிரதேசம் கான்பூரில் மருத்துவக் கல்லூரி மாணவர் (41). ஆனந்த் சர்மா, லக்னோவில் ஆளுநர் மகன் 42.சைலேஷ் யாதவ், டில்லியில் டாக்டர் (43). அருண் சர்மா, (44). தீபக் மாஜும்தார் லக்னோ, மற்றும் (45). பிரதீப் சர்மா போன்றோர் வியாபம் ஊழல் தொடர்பில் இருந்து வெளிமாநிலங்களில் அய்யத்திற்கிடமான முறையில் மரணமடைந் தனர். 2013 ஆம் ஆண்டு மரணமடைந்த வியாபம் அலுவலக அதிகாரி (46). குமார் ஜைஸ்வால், பேராசிரியர்கள் (47). உமேஷ் குப்தா, (48).
நரேஷ் விஜெயேந்தர் சிங் மற்றும் பொறியாளர் (49). கனோஜியா போன்றவர் களின் மரணமும் தற்போது வியாபம் ஊழல் தொடர்பான விசாரணையின் கீழ் வந்துள்ளன. நாடு முழுவதும் கடுமையான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள வியாபம் ஊழல் தொடர்பான  வழக்கை சி.பி.அய். விசாரணை செய்ய வேண்டும் எனக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர் களில் ஒருவரான தலைவர் விஸ்வாஸ் உள்பட பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்கள் தாக்கல் செய்த மனு விசா ரணைக்கு வந்தது. (9.7.2015) அப்போது, இந்த வழக்கை சி.பி.அய். விசாரணை நடத்த வேண்டும். மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவிட் டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து ஊழலில் நேரடித் தொடர்பு உள்ளதாகக் கருதப்படும் பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் ஆளுநர் இருவரையும் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் காங்கிரஸ் தலைவர் திக். விஜய்சிங்;  ஊழலில் தொடர்புடைய மாநில முதல்வர் பதவியில் இருந்துகொண்டே விசாரணையை எதிர்கொள்வதென்பது விசாரணையின்மீதான நம்பிக்கையைக் குலைத்துவிடும்;
ஆகவே நேர்மையான விசா ரணைக்கு வழிவிட்டு சிவ்ராஜ்சிங் சவுகான் தனது பதவியை விட்டு விலகவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியத் துணைக் கண்டத்தையே உலுக்கும் வியாபம் ஊழல் குறித்து சிபி.அய். விசாரணை  நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்திய நிலையில் முடியவே முடியாது என்று முரண்டு பிடித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். இப்பொழுது  உச்சநீதிமன்றமே சி.பி.அய்க்கு உத்தரவிட்டு விட்டது.
எவ்வளவுதான் நடந்தாலும் பிஜேபியைச் சேர்ந்தவர்கள் தார்மீகப் பொறுப்பு ஏற்று பதவியை விட்டு விலகவே மாட்டார்கள்- ஆனால், பேசுவதில் மட்டும் தார்மீக நெடி அடுத்தவர்களின் மூக்கைத் துளைத்தெடுத்து விடும்.
பிரதமர் மோடியும் வாயைத் திறக்கவே மாட்டார். அதுவும் தனக்குப் போட்டியாளராக இருக்கக்கூடியவர்கள் என்று சந்தேகப்படும் படியானவர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டால் அவருக்குக் கொண்டாட்டம் தான்! மவுனத்தால் அவர்களை ஏறி மிதித்து முடிவை ஏற்படுத்தி விடுவார்.
மதவாதமும், ஊழலும் கைகோர்த்துக் கொண்டு விட்ட பிஜேபியை இனியும் மக்கள் நம்புவார்களா? நம்ப மாட்டார்கள். காரணம் பிஜேபி - சங்பரிவார் வட்டாரத்தின் முழு முகமூடியும் நிர்வாணமாகக்  கிழிந்து தொங்கி விட்டதே!
------------------மின்சாரம் அவர்கள் 12-07-2015 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: