Search This Blog

16.7.15

பலிகளைப் பார்த்த பிறகும் பகுத்தறிவு வேலை செய்யாதா?

பலிகளைப் பார்த்த பிறகும் பகுத்தறிவு வேலை செய்யாதா?


பக்தி  - மனிதனுக்கு நல்லது செய்யா விட்டாலும் பரவாயில்லை; கேடு செய்யாமலாவது இருக்கக் கூடாதா? ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியருகில் கோதா வரியாற்றில் மகாபுஷ்கரம் என்ற பெயரால் நடைபெற்ற இந்து மதச் சடங்கில் கூடிய பக்தர்கள் கூட்ட நெரிசலால் 35-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலியானார்கள். நூற்றுக் கணக்கான பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது புஷ்கரமாம்; 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது மகாபுஷ் கரமாம்; இப்பொழுது  வந்தது இந்த வகையைச் சேர்ந்ததாம். மக்களின் அறிவையும் பொருளையும் சுரண்ட ஏதாவது அறிவுக்குப் பொருத்தமற்ற பித்த லாட்ட மோசடிக் கதைகளைப் புனைந்துதான் வைத்திருப்பார்களே! இந்த மகாபுஷ்கரமும் அந்தப் பட்டியலில் வருவதே!
இந்தாண்டு குரு பகவான் சிம்மராசியில் பிரவேசிப் பதால் இந்த விழா மகா கோதாவரி புஷ்கரம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறதாம் 12 நாட்களுக்கு இந்தக் கேலிக் கூத்து நடைபெறுமாம். எந்த அளவு மனித உழைப்பு நாசமாகப் போகிறது! இதனை எடுத்துச் சொல்ல எந்தப் பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள்? எந்த அமைப்புகள் உள்ளன? எந்த ஊடகங்கள் உள்ளன?
தென்னாட்டில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தந்தை பெரியார் என்ற ஒரு யுகப் புரட்சியாளர் தோன்றியதால், அவரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகம்தான் இதுபற்றிக் கவலைப்படுகிறது - அக்கறை செலுத்துகிறது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் செய்து வருகிறது.
மற்றவர்கள் எல்லாம் இந்த மூடநம்பிக்கைக்கு ஊட்ட சக்தியாக, நடமாடும் பிரச்சாரப் பீரங்கிகளாகத் தானே செயல்படுகின்றனர். குருவாம், சனியாம், மேஷ மாம், மிதுனமாம், ரிஷபமாம், கன்னியாம், சிம்மமாம், துலாமாம், விருச்சிகமாம் இந்த புராண நட்சத்திரக் கூட்டங்களை மய்யப்படுத்தித்தான் இந்தக் கழுதைக் கூத்து களேபரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
இந்த நட்சத்திரக் கூட்டங்களில் உருவத்தைப் பல லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது கண்களுக்குத் தோன்றும் மாயை வடி வத்தைக் கொண்டு நாமகரணங்களை (பெயர்களை) சூட்டிக் கொண்டனர். ஆயிரம் ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னிருந்த அறிவின் அளவுகோல் கொண்டு ஏதோ உளறித் தொலைத்தார்கள் என்றால் அதனைப் புரிந்து கொள் ளவும் முடியும்.
புதிய கண்டுபிடிப்பான புளூட்டோவுக்கு ஏவு கணையை அனுப்பிய இந்தக் கால கட்டத்தில் விஞ்ஞான ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படாத குப்பைத் தொட்டி எச்சில் இலைகளான புராணப் புளுகுகளை அடிப்படையாகக் கொண்டு குருபகவான் ராசியில் பிரவேசிப்பதால் இந்தக் கோதாவரி புஷ்கரம் நடக்கிறது என்று கதை அளக்கிறார்கள். இவற்றிற்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் உண்டா? விண்ணியல் (Astronomy) வேறு, சோதிடம் (Astrology) 
என்பது வேறு - இரண்டும் ஒன்றல்ல - முரண்பட்டவை -

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பிரிவு நான்கில் (51) ணீ (லீ) என்ற பிரிவு என்ன சொல்லுகிறது? மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறுகிறது. இதன் அடிப்படையில் பார்க்கப் போனால் அறிவியலுக்கும், விஞ்ஞான மனப்பான்மைக்கு சற்றும் பொருந்தாத இந்தப் புஷ்கரம் பொய்களை அரசு தடை செய்ய வேண்டாமா?
ஒரு பொதுக் கூட்டம் நடத்த வேண்டும் என்று காவல்துறையிடம் அனுமதி கேட்டால் எதிர்ப்பு இருக் கிறது சச்சரவுகள் ஏற்படும் என்று ஏதேதோ காரணம் கூறி அனுமதி மறுக்கிறது காவல்துறை.
ஆர்ப்பாட்டத்தில் நூறு பேர்களுக்குமேல் கூடக் கூடாது என்று நிபந்தனைகளை விதிக்கிறார்கள்.
அப்படி இருக்கும் பொழுது ஒரு அய்ந்து கோடி மக்கள் ஒரு பண்டிகையின் போது கூடுவார்கள் என்று தெரிந்திருந்தும், இதற்கெல்லாம் எப்படி அனுமதி கொடுக்கிறார்கள்? இது போன்ற நிகழ்ச்சிகளில் பக் தர்கள் பரிதாபகரமாக நசுங்கிச் செத்ததற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள், புள்ளி விவரங்கள் உண்டே! அப்படி இருக்கும் பொழுது இவ்வளவுப் பெருந்தொகையில் மக்கள் கூடக் கூடிய மூடத்தன நிகழ்ச்சிகளைக் கட்டுப் படுத்தினால் என்ன? தமிழ்நாட்டில்கூட மகா மகம் என்று சொல்லி இதே போன்று 12 ஆண்டு களுக்கு ஒரு முறை கும்பகோணத்தில்கூடி ஊரை நாசப் படுத்துவார்கள்; சுகாதாரக் கேட்டின் உச்சம்தான் - ஒரு சிறிய குட்டையில் பல லட்சம் மக்கள் முழுக்குப் போட்டால் அதன் நிலைமை என்ன என்று தெரியாதா?
படித்தவர்களும் பக்தி வந்தால் புத்தியைத் தொலைத்து விட்டு, அந்த மூத்திரக் குட்டையில் முக்கி எழு கிறார்களே! 1992ஆம் ஆண்டில் கும்பகோணம் மகா மகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் பரிதாபமாக நசுங்கிச் செத்தனர். அடுத்த ஆண்டு 2016இல் அந்த மகாமகம் மறுபடியும் வருகிறது - ஊர் என்ன ஆகப் போகிறதோ என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் நிலைதான்.
ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டாமா? கடவுளை நம்பித்தானே செல்லுகிறார்கள் - புண்ணியம் கிடைக் கும் என்றுதானே பணத்தைச் செலவு செய்து கொண்டு போகிறார்கள். குறைந்தபட்சம் பக்தர்களின் உயிருக் காவது பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்க வேண்டாமா!
இவைகளுக்கு எந்தவித அடிப்படையும் கிடை யாது; அறிவின்முன் மண்டியிடக் கூடியவைகளாக  இருப்பவற்றை யதார்த்தமாக நேரிடையாகப் பார்த்து விட்ட பிறகும்கூட இன்னும் இத்தகைய முடைநாற்ற மெடுக்கும் மூடச் சேற்றில் மூழ்கி எழுகிறார்களே - இவர்களை என்ன சொல்ல!

பக்தி வந்தால் புத்தி போகும் என்று பகுத்தறிவுப் பகல வன் தந்தை பெரியார் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. ஆந்திராவில் நடந்த மகா புஷ்கரம் மூடத்தனத்துக்குப் பலியான மனித உயிர்களைப் பார்த்த பிறகாவது கும்பகோணம் மகா மக மடமையைப் புறக்கணிப்பார்களா தமிழ்நாட்டுப் பக்தர்கள்?
கழகப் பிரச்சாரம் சுழன்றடிக்கட்டும்; கழகத் தோழர்கள் பிரச்சாரத்துக்கு இப்பொழுதே தயாராகி விட்டார்கள்.
                  ---------------------------”விடுதலை” தலையங்கம் 16-07-2015

0 comments: