Search This Blog

6.7.15

கிறித்துவ மதத்திலும் ஜாதியா?திண்டுக்கல் மாவட்டம், ஏ.வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் பி.ஜோசப்ராஜ். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இறந்த வர்களின் உடல்களை ஏ.வெள் ளோடு பொம்மச்சிக் கண்மாயில் அடக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும், அந்த கண்மாயில் ஏற்கெனவே புதைக்கப்பட்ட ஜஸ்டின் திரவியம், தோமையார் சடலங்களை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று முன்தினம் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ஏ.வெள்ளோடு பகுதியில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இரு பிரிவினர் இடையே இறந்தவர்களின் சடலங் களை அடக்கம் செய்வதில் பிரச்சினை இருப்பதாகவும், கடந்த 2012-இல் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு பிரிவைச் சேர்ந்த சடலங்களை அடக்கம் செய்ய தனி இடம் ஒதுக்கப் பட்டது. பின்னர், அந்த இடத்தில் ஊராட்சி சார்பில் கிணறு தோண்டப்பட்டது. இதனால், பொம்மச்சி கண்மாயில் ஒரு பிரிவைச் சேர்ந்த இருவரது சடலங்கள் அடக்கம் செய்யப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் ஒவ்வொரு ஜாதியினருக்கும் தனித்தனி மயானங்கள் உள்ளன. இது வருத்தம் அளிக்கிறது. இறந்தவரின் சடலத்தை நல்ல முறையில் அடக்கம் செய் வதற்கு, சண்டையிட வேண்டியுள்ளது. வாழும்போது உரிமை, சொத்து, மரியாதைக் காகப் போராடுகின்றனர். இறப்புக்கு பிறகும் இப்போராட்டம் தொடர்வது வலியை ஏற்படுத்துகிறது.

இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்யும் இடம், நினைவஞ்சலி செலுத்தும் இடமாகவும் உள்ளது. பெரு நகரங்களில் இடவசதி இல்லாததால் மின்மயானம் அமைக் கப்படுகிறது. கிராமங்களில் ஒவ்வொரு ஜாதியினருக்கும் தனித்தனி மயானம் இருப்பதாகத் தெரிகிறது.

சாதியம், வகுப்புவாதம் போன்ற கிருமிகளால் ஒட்டு மொத்த சமூகமும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்தக் கிருமிகள் நிரந்தர இடத்தை பிடித்துள்ளன. இறந்தவர் களின் சடலத்தை அடக்கம் செய்வதில் எவ்வாறு சண்டை யிடுகின்றனர் என்பதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம். மனித உடல் காயமே இது பொய்யடா, வெறும் காற்ற டைத்த பையடா என்பதை மறந்து விட்டனர். இதனால் மதத் தலைவர்கள் மக்களிடம் சமத்துவம், சகோதரத் துவத்தை வலியுறுத்த வேண்டும்.

திண்டுக்கல் கோட்டாட்சியர், ஒரு பிரிவில் இறந்தவர் களின் சடலங்களை அடக்கம் செய்ய, சிறுநாயக்கன்பட்டி யில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த இடத்தில் சடலத்தை அடக்கம் செய்ய யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. இப்பிரச்சினைக்கு மாவட்ட ஆட்சியர் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பில் குறிப் பிட்டுள்ளனர்.

இந்தச் செய்தியைப் படிக்கும் பொழுது வேதனை ஒருபுறம் இருந்தாலும் மதங்கள் மக்களுக்கு நன்மை செய்கின்றனவா என்ற வினாவைத்தான் எழுப்புகிறது. கிறித்தவர்களுள் பெந்தகோஸ்தே, கத்தோலிக்கர்கள் என்ற இரு பிரிவுகளுக்கிடையே ஏற்பட்டதுதான் இந்த  பிரச் சினை; ஒரே கிறிஸ்துவ மதம் என்றாலும் அதற்குள்ளும் பிரிவுகள் - பேதங்கள் - இதுதான் மதம் காட்டும் மாச் சரியமா? இயேசுவை வணங்குபவர்களாக இருக்கட்டும், கன்னி மேரியை வணங்குபவர்களாகவே இருக்கட்டும் - அவர் களுக்கு வழிகாட்டி பைபிள் தானே - அதனை ஏன் மறந்துவிடுகிறார்கள்?!

ஒவ்வொரு மதத்திலும் உட்பிரிவுகள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லீம்களிலும்  சியா, சன்னி இரு பிரிவுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஈராக்கில் சதாம் உசேன் அமெரிக்க வல்லாண்மைப் புத்தியால் தூக்கிலிடப்பட்ட போது ஒரு பிரிவினர் மகிழ்ந்து கூத்தாடினர் என்பதை மறந்து விடவும் முடியாது.

இந்து மதத்திலோ சொல்லுந்தரமன்று! ஸ்மார்த்தர்கள், வைணவர்கள் என்ற பிரிவு மட்டுமல்ல. அதற்குள்ளும் கணக்கில் அடங்கா உட்பிரிவுகள் உண்டு. வைணவர்களை எடுத்துக் கொண்டால் வடகலை, தென் கலைப் பிரிவுகள் - இவர்களுக்குள் நடந்திருக்கும் சண்டைகள் சாதாரண மானவை அல்ல.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்ற சண்டை வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில் இலண்டனில் இருந்த பிரிவி கவுன்சில் நீதிமன்றம் வரை சென்ற கதை ஊர் சிரிக்கவில்லையா?

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதிகள் மணிக்குமார், சொக்கலிங்கம் ஆகி யோர் கூறிய கருத்து கவனிக்கத்தக்கவை. செத்த பிறகும் கூட ஜாதியா? இந்த ஜாதிக் கிருமிகளின் தொல்லைகளுக்கு அளவேயில்லையா? இந்து மதத்தைத் பீடித்த இந்த ஜாதி கிறித்துவ மதத்தையும் தொற்றிக்கொண்டுள்ளதே என்ற கவலையையும் வெளிப்படுத்தி  இருக்கிறார்கள்.

கிறிஸ்துவ மதம் தோன்றிய நாடுகளில் உட்பிரிவுகள் உண்டே தவிர பிறப்பின் அடிப்படையிலான ஜாதி கிடையாது. அப்படி இருக்கும் பொழுது இந்தியாவில் உள்ள கிறித்துவ மதத்திற்குள் மட்டும் ஜாதிக் கிருமி உட்புகுந்தது ஏன் என்பது மிகவும் முக்கியமான கேள்வி யாகும். அதைத்தான் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்து மதத்தின் தாக்கம்தான் இதற்குக் காரணம். இந்தி யாவில் தீண்டாமைக் கொடுமை காரணமாகத் தான் இந்து மதத்திலிருந்து  பிற மதத்திற்கு மாறினார்கள் என்பது வர லாறு; பிற்படுத்தப்பட்டவர்களும்கூட பலவித உரிமைகள் கோரி மதமாற்றம் அடைந்தனர்.

இந்து மதத்தில் பல தலைமுறைகளாக வருணாசிரம அடிப்படையில் ஜாதிகளாக ஆயிரக்கணக்கில் பிறப்பி லேயே பிளவுபட்டுப் பிரிந்து கிடந்தவர்கள் கிறித்தவத்துக்கு மதம் மாறினாலும் பல தலைமுறைகளாகக் கட்டி அழுது கொண்டிருந்த அந்த ஜாதியையும் தங்களோடு கொண்டு சென்று விட்டனர். அவற்றின் பழக்க வழக்கங்களிலிருந்து மீள முடியாத அளவுக்கு மனமாற்றம் அற்றவர்களாகி விட்டனர் அதன்காரணமாகத் தான் நாடார் கிறித்தவர், முதலியார் கிறித்தவர்  தாழ்த்தப்பட்ட கிறித்தவர் என்ற நிலை இன்னும் தாண்டவமாடிக் கொண்டு இருக்கிறது.


திருச்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிறித்தவர்களைக் கல்லறையில் புதைப்பதற்கு மேல் ஜாதி கிறித்தவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்ததானது தமிழ்நாட்டில் புகழ் (?) பெற்றதாயிற்றே!
மதம் அபின் என்றார் மார்க்ஸ்; மதம் மனித சமூகத் திற்குக் கேடு என்றார் தந்தை பெரியார்; அதன் தன்மை களை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டினார் பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார்! மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது மக்கள் சிந்திப்பார்களாக!

                                      -------------------------------”விடுதலை” தலையங்கம் --6-7-2015

0 comments: