Search This Blog

9.7.15

எதற்காக வெள்ளைக்காரனே பாதிரியாக இருக்க வேண்டும்?-பெரியார்

ஜாதிக்குச் சர்க்கார் பாதுகாப்பா?


இந்த மேட்டுப்பட்டி (லால்குடி) கிராமத்திற்கு இப்போதுதான் முதல் தடவையாக வரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஊருக்கு வராவிட்டாலும் இதற்கு முன் 30-வருடங்களுக்கு முன்பே பக்கத்து ஊர்களுக்கு வந்திருக்கிறேன். ஓமாங்குடி, பூவாளூர், இன்னும் பல இடங்களுக்கு வந்துள்ளேன்; அப்போதே சாதிக் கொடுமையை எதிர்த்து இந்த வட்டாரத்தில் பெரிய கிளர்ச்சி செய்திருக்கிறோம்; பெரிய ரகளை நடந்தது.

அப்போது இங்கு கிறிஸ்தவர்களிடத்திலேயே ஜாதி உண்டு; கீழ் ஜாதிக்காரர்களைச் சர்ச்சுக்கு வெளியிலேயேதான் உட்காரவைப்பார்கள். ஆதிதிராவிடர்கள் சர்ச்சுக்குள்ளே நுழையக் கூடாது என்ற கொடுமை சர்ச்சுகளில் இருந்தது. இது இப்போதுள்ளவர்களுக்குத் தெரியாது. அன்றே இதைக் கண்டித்து இங்குப் பிரசாரம் செய்தோம். நண்பர்கள் ஆரோக்கியசாமி, இப்போது எம்.எல்.. ஆக இருக்கிற லாசர், அவர்களின் மாமனார் போன்றவர்கள் என்னுடன் சேர்ந்து கூப்பாடு போட்டார்கள்.

அன்று பார்ப்பானையே பூசைக்கு வைப்பது போல் எதற்காக வெள்ளைக்காரனே பாதிரியாக இருக்க வேண்டும்? என்று கேட்டோம். ஈரோட்டில் ஆசாரிகள் உண்டு. அவர்கள் ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்குள் வரக்கூடாது என்று அன்று பிடிவாதம் செய்தார்கள்; எங்கள் பிரச்சாரத்தின் பயனாக அங்குக் கிளர்ச்சி வலுத்தது; திருநெல்வேலியிலும் ரகளை நடந்தது. இங்குப் பெரிய ஜாதிக்காரர்கள் என்பவர்கள் கொடுமை விளைவித்து பயமூட்டினர்; ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் வீட்டுக்குத் தீவைத்து 200-வீடுகள் வரை எரிந்து போய்விட்டன. இப்படியெல்லாம் அந்தக் காலத்தில் கிளர்ச்சி செய்ய உணர்ச்சி வரும் அளவுக்கு எங்கள் பிரச்சாரம் இருந்தது. அதற்குப் பிறகுதான் நம்மவர்கள் பாதிரிகளாக வந்தார்கள். அதுவரை வெள்ளைக்காரன்தான் பாதிரியாக இருந்து வந்தான்!

இப்போது மாதாகோவில்களில் ஜாதிக் கொடுமை இல்லை; அப்போது இந்த வட்டாரத்தில் பல ஊர்களுக்குப் பிரசாரத்திற்கு வந்துள்ளேன்; அப்போது பெரிய ரகளை நடக்கும்; கல் போடுவார்கள்! சாணி அடிப்பார்கள்! இன்று 'விடுதலை'யைப் படித்தால் போலீசுக்கு வேலை போய்விடும்; பெரிய அதிகாரிகளே இரகசியமாகத்தான் படிக்க வேண்டும்.

இதுபோல் அன்று "குடிஅரசு" பத்திரிகை இருந்தது.

இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் பிரசாரம் செய்தோம்.

அன்று இந்த ஊர்கள் எல்லாம் காரைப் பார்த்தே இருக்காது. ஜட்கா வண்டிகூட வராது; மாட்டுவண்டித்தான் அன்று; அவ்வளவு கஷ்டப்பட்டு பிரச்சாரம் செய்து இயக்கத்தை வளர்த்தோம். இன்று இங்குக் கழகம் துவக்கப்படுகிறது. இது அதிசயம் தான்! கழகம் தோன்றி 33-வருடம் ஆகிறது! தமிழ்நாட்டில் மாத்திரம் கிட்டத்தட்ட இன்று 300-கழகங்கள் உண்டு. இங்கு இன்றுதான் 33-வருடத்திற்குப் பிறகு கழகம் தொடங்கப்படுகிறது என்றால் அதிசயம்தான்! இருந்தாலும் சிறப்பான ஆடம்பரமான வரவேற்பு! இங்கு இந்த ஊரில் உள்ளவர்களைப் போல 2, 3-பங்கு கூட்டம். இதைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சி.

திராவிடர் கழகம் ஏற்பட்டு 14-வருடங்கள் ஆகின்றன. ஆரம்பத்தில் சுயமரியாதை இயக்கம் என்று பெயர். நான் காங்கிரசில் காந்தி சீடனாக இருந்து காங்கிரசுக்கு வேலை செய்து காங்கிரசு பெயரால் கழுதையை நிறுத்தினாலும் ஜெயிக்கலாம் என்கிற நிலை வந்தபோது தேர்தலில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்கள். ஆள் நிறுத்தும் போது ஜாதி விகிதாச்சாரம் தந்து நிறுத்த வேண்டும் என்று சொன்னேன். அதை மறுத்துவிட்டார்கள். எனவே காங்கிரசை விட்டு வெளியே வந்தேன்.

காங்கிரசிலிருக்கும் போதும் ஜாதி ஒழிய வேண்டும் என்றுதான் சொன்னேன் - பாடுபட்டேன். காங்கிரசில் .வே.சு அய்யர் என்பவர் தேசீய வீரர்களை உண்டாக்குகிறேன் என்று சொல்லி குருகுலம் ஒன்றைப் பொதுப்பணத்தில் நடத்தி வந்தார்.

பார்ப்பானுக்கு உப்புமா! நம் பிள்கைளுக்குப் பழையசோறு! அவர்களுக்குத் தனியிடத்தில் உணவு; தனித் தண்ணீர்ப்பானை! இப்படிச் செய்தான். அது பொதுப்பணத்தில் நடந்த குருகுலம். காங்கிரசில் நான் பணம் வாங்கித் தந்தேன். பின்னர் தேசீய வீரர்களை உற்பத்தி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வர்ணாசிரம வீரர்களை உண்டாக்கிவிடுகிறாயே என்று சண்டைபோட்டோம். எதற்குச் சொல்கிறேன் என்றால் காங்கிரசில் உள்ள போதே சாதி ஒழிய வேண்டும் என்று பாடுபட்டுவந்தேன். இன்றும் அந்த வேலையில்தான் இப்போதும் உள்ளேன்.

இன்று ஜாதியைப் பலப்படுத்தும் முறையில் அரசமைப்புச் சட்டத்திலேயே மூலாதார உரிமை என்று எழுதிக் கொண்டு, அந்தச் சட்டம் பிடிக்கவில்லை என்றவர்களைச் சிறையில் போட்டுக் கொடுமை செய்து கிட்டத்தட்ட பத்துப் பேரைக் கொன்று விட்டார்கள்! இனி சட்டத்தைத் திருத்து என்பதும் பயன்படாது.


--------------------------------- (லால்குடி) மேட்டுப்பட்டியில் 23.08.1958-அன்று பெரியார் சொற்பொழிவு: ”விடுதலை”, 29.08.1958

0 comments: