Search This Blog

29.7.15

பூரண மதுவிலக்கு சாத்தியமில்லையா?தி.க.வின் நிலைப்பாடு என்ன?


மக்களைப் பாழ்படுத்தும் மதுவை ஒழிக்க, பூரண மதுவிலக்கு அவசியம் தேவைப்படும் கால கட்டம் இது!
பொது மக்களே கள்ளச் சாராயத்தை ஒழிக்க முன் வருவார்கள்
திருச்சி செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி


திருச்சி, ஜூலை 29- மதுவிலக்கின் அவசியம் குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு (28.7.2015).

தமிழ்நாட்டில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க. - அதன் தலைவர் கலைஞர் அவர்கள், அடுத்த தேர்தலுக்குப் பிறகு எங்கள் ஆட்சி வந்தால், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்பதை அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான கட்சிகள், ஆளும் கட்சியைத் தவிர, அத்துணை பேரும் மதுக்கடைகளால் ஏற்பட்டிருக்கின்ற தீமைகள் எப்படி மூன்று வயது குழந் தைக்குக்கூட ஊற்றிக் கொடுத்துப் பழகக்கூடிய அளவிற்கு கேவலமாக ஆகிக்கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் தமிழ்நாடு என்பது எடுத்துக்காட்டான மாநிலம் என்று பெயர் பெற்று இருந்தது. இப்பொழுதோ, ஒரு மாநிலம் எப்படி இருக்கக்கூடாதோ என்பதற்கு எடுத்துக்காட்டான மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது.
நேற்றுகூட ஒரு முக்கியமானவருடன் பேசும்போது, திருச்செங்கோட்டில் உள்ள ஒரு மேனிலைப்பள்ளிக்கு அருகிலேயே டாஸ்மாக் கடை இருக்கிறது. அங்கே சென்று அந்தப் பள்ளி மாணவர்கள் ஏழு, எட்டு பேர் குடித்துவிட்டு, அந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக இருக்கக்கூடிய ஒரு பெண் அம்மையாரிடம் கலவரம் செய்து, அந்தப் பள்ளி மாணவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கிய பிறகு, ஆளுங்கட்சியில் இருக்கக்கூடிய முக்கியமான பொறுப்பாளர்கள், அதிகாரிகளாக இருக்கக்கூடியவர்கள் கூட அந்த அம்மையாருக்கு நெருக்கடி கொடுத்து, எப்படியும் அந்த மாணவர்களை நீங்கள் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று வற்புறுத்துகின்ற நேரத்தில்,
இதனை அறிந்து, பெற்றோர்கள் அத்துணைப் பேரும், தாய்மார்கள் அத்துணை பேரும் பள்ளியின்முன் ஒன்று திரண்டு,  அந்தத் தலைமையாசிரியர் எடுத்த நடவடிக்கை சரிதான் என்றும்,  எங்களுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கை வீணாகக்கூடாது என்றுதான் அவர்கள் நட வடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள்.
மூன்று வயது குழந்தைக்குக் கூட..
மூன்று வயது குழந்தைக்கு ஊற்றிக் கொடுக்கக்கூடிய சம்பவமும், பள்ளி மாணவர்கள் குடித்துவிட்டு பள்ளிக்குச் செல்கிறார்கள் என்கிற சம்பவமும் எதனைக் காட்டுகிறது என்றால், பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்திலேயே டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன; இவைகளெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிற கருத்து எல்லோருக்கும் வந்திருக்கிறது.
முதலில் அதனை யார் கொண்டு வந்தார்கள்? எப்படி நிலைத்தது என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இதில் யாரோ சிலர், சில கட்சிக்காரர்கள் அவர்களுக்குள்ளேயே அரசியல் நடத்துவதற்காக, நாங்கள்தான் முதலில் சொன்னோம்; இவர்கள் பின்புதான் சொன்னார்கள் என்பது போன் றெல்லாம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

யார் எப்பொழுது சொன்னார்கள் என்பது முக்கியமல்ல; இப்பொழுது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை, இளைய தலைமுறையினரை நாம் காப்பாற்றியாகவேண்டும். தமிழ்நாட்டு மக்களெல்லாம் இன்றைக்குக் கேவலமாக, இளைய தலைமுறையினர் உள்பட ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் வேதனைப்படக்கூடிய அளவிற்கு இருக்கக் கூடிய நிலைகள் முற்றிலுமாக மாற்றப்படவேண்டும்.
அந்த வகையில், இவையெல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டு எல்லாக் கட்சிக்காரர்களும் வரவேற்கக்கூடிய ஒரு காலகட்டத்தில், ஒத்தக் கருத்துகள், தனித்தனியே சொல்கிறார்களா - மேடையில் சொல்கிறார்களா - முந்திச் சொன்னார்களா - பிந்திச் சொன்னார்களா என்பதெல்லாம் முக்கியமல்ல. இன்றைக்கு அனைவரும் ஒத்தக் கருத்தோடு இருக்கிறார்கள் என்பது - அந்தக் கருத்துக்கு ஏற்பட்டிருக் கின்ற தேவையை, வலிமையைத் தெளிவாக்குகிறது.
இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசு - ஏட்டிக்குப் போட்டி என்று சாதாரணமாக கிராமங்களில் சொல்வார்கள் - அதைப்போல, எலைட் மதுக்கடை - அதாவது மதுக்கடையிலே உயர்ந்தது - குடியில் என்ன உயர்ந்த குடி இருக்கிறது?
உயர்ந்த குடி என்றால், ஒழுக்கம் உள்ள குடி என்று அந்தக் காலத்தில் பெயர். இப்பொழுது உயர்ந்த குடி என்ற பொருளையே மாற்றி பொருள் கொள்ளக்கூடிய நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள்.
இது என்ன எலைட் மது?
எலைட் மதுக்கடைகள் வரப் போகின்றன என்று சொல்வது இருக்கிறதே, அது எதற்காக? எந்த நோக்கத்திற்காக என்றெல்லாம் பார்க்கும்பொழுது, வேதனையாகவும், வெட்கப்படக்கூடிய நிலையிலும் இருக்கிறது. இதனை எதிர்த்து, மக்கள் அத்துணைப் பேரும் சேர்ந்து கட்சி வேறுபாடு இல்லாமல், ஒரு மாபெரும் போராட்டத்தை, அறப்போராட்டத்தை, மக்கள் போராட்டத்தை அவர்கள் தானே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது எப் பொழுது வெடிக்கும் என்று சொல்ல முடியாது. எரிமலை வெடிப்பதற்குத் தயாராக இருப்பதுபோன்ற சூழ்நிலை.
எனவே, இதனை அறிந்தாவது இந்த மது விற்பனையை கைவிடவேண்டும். அல்லது முதற்கட்டமாக இந்த எலைட் திட்டம் என்பது, எங்களுக்குத் தெரியாமல் வந்துவிட்டது என்று வழக்கமாகச் சொல்வதைப் போலவாவது சொல்லி, தமிழக அரசாங்கம் அதனைக் கைவிடவேண்டும்.
செய்தியாளர்: பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்று சிலர் சொல்கிறார்களே?
தமிழர் தலைவர் பதில்: ஏன் சாத்தியமில்லை? கள்ளச்சாராயம் காய்ச்சுகிறவர்களுடைய தயவை நினைத்தால் ஒழிய, பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்று சொல்வதற்கு வழியே கிடையாது. ஒரே ஒரு செய்தி என்னவென்றால், மத்திய அரசும் இதில் இணைந்தால், மேலும் சிறப்பாக இருக்கும்.
முதல்வர் கலைஞர் சொன்ன காரணம்
கலைஞர் அவர்கள் முதல் முறையாக மதுவிலக்கை எடுத்துவிட்டு, பிறகு மதுவிலக்கு என்பதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று சொல்லும் பொழுது, ஒருமுறை அழகாக பட்ஜெட்டில் சொன்னார், கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்திற்குள், கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு இருந்து கொண்டிருக்கிறது என்று. பக்கத்து மாநிலங்களில் எல்லாம் நிறைய மது வந்து கொண்டிருக்கிறது. கேரளாவில் இருந்து தமிழகத்தின் எல்லைக்குள் வருகிறது. கருநாடகத்தில் மது இருக்கின்ற காரணத்தினால், கிருஷ்ணகிரி, ஒசூர் பகுதிகளில் உள்ளே நுழைகிறது.
பாண்டிச்சேரியில் மது இருக்கின்ற காரணத்தினால், தென்னார்க்காடு மாவட்டம், கடலூர் மாவட்டம் மற்ற பகுதிகளில் எல்லாம் உள்ளே வருகிறது.
எல்லா இடத்திலும் ஒட்டுமொத்தமாக பூரண மதுவிலக்கை செய்கின்ற போது, நிச்சயமாக கள்ளச்சாராயம் காய்ச்சுகின்றவர்களைக் கண்காணிக்கக்கூடிய அளவிற்கு, படைகள் தனியாக அமைத்து, அதனை செய்தால் போதும்.
கிராம மக்களே முன்வருவர்
இன்னுங்கேட்டால், பல ஊர்களிலே கிராமத்து மக்களே அதற்குத் தயாராக இருந்தார்கள். எங்கள் கிராமத்தில், கள்ளச்சாராயம் கிடையாது - ஒரத்தநாடு பக்கத்திலுள்ள ஒரு ஊரில் மிகச்சிறப்பான அளவிற்கு, அங்குள்ள மக்களே முன்வந்தார்கள். அதுபோல், மக்களே முன்வந்து கள்ளச்சாராயத்தை நிறுத்தி விடுவார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.
ஒரு பக்கம் இலவசம் என்று சொல்வது; இன்னொரு பக்கம் பணத்தைக் கொடுத்து வாக்கு வாங்குவது; அந்தப் பணத்தை டாஸ்மாக் மூலமாக மறைமுகமாக கொண்டு வருவது. டாஸ்மாக் என்பது அரசாங்கத்தின் சார்பாக வருகின்றது என்று சொன்னால், அரசாங்கத்திற்குக் கிடைக்கக்கூடிய வருமானம் எவ்வளவு? அரசாங்கத்திற்கு மது ஆயத்தீர்வின் மூலமாகக் கிடைப்பது மிகவும் குறைவு. அந்த மது தயாரிப்பாளர்களுக்குத்தான் கணிசமான தொகை செல்கிறது. அந்தத் தொழிற்சாலைகள் யாருடையது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு செய்திதான் - அதனை விளக்கவேண்டிய அவசியமில்லை.
எனவே, உண்மையிலேயே இதனால் லாபமடையக் கூடியவர்கள் யார்? அரசும் லாபமடையவில்லை. அது ஒரு புறத்தோற்றம் - அதேநேரத்தில், மக்களுக்கு மிகப்பெரிய கேடு. மக்களுக்கு இலவசங்களைக் கொடுப்பது போன்ற ஒரு புறத்தோற்றம் - மாயை.
ஆகவே, இவை எல்லாம் அகலவேண்டும் என்று சொன்னால், நிச்சயமாக பூரண மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும். எப்படி கூலிப் படையை ஒழித்தால், கொலைகள் ஒழியும் என்பது முக்கியமோ, அதுபோல, மிகத்தெளிவாக கள்ளச்சாராயத்தை நிச்சயமாக ஒழிக்கலாம். அதற்குத் துணையாக காவல்துறையோ, அல்லது வேறு யாரோ ஒரு சிலர் இருப்பார்களேயானால், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க - பொதுமக்களே இப்பொழுது முன்வந்து பிடித்துக் கொடுப்பார்கள். அந்த அளவிற்குப் பொதுமக்களுடைய மனநிலை பக்குவப்பட்டிருக்கிறது. இதுதான் சரியான நேரம்.

தி.க.வின் நிலைப்பாடு என்ன?

செய்தியாளர்: மதுவிலக்குபற்றி மக்கள் நலன் சார்ந்து இந்தக் கருத்துகள் வெளிவருகிறதா? அல்லது தி.மு.க. ஆதரவு நிலையால், இந்தக் கருத்துகளை சொல்கிறீர்களா?
தமிழர் தலைவர் பதில்: எங்களைப் பொறுத்தவரை நாங்கள்  கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி, தஞ்சை திராவிடர் கழகப் பொதுக்குழுவில் அதிகாரபூர்வமாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அவ்வளவு தூரம் போகவேண்டாம் - இந்த நாட்டில் மதுவிலக்கு என்பதைப்பற்றி முதன்முதலாக காந்தியார் அவர்கள் சொன்ன நேரத்திலேயே, 500 தென்னைமரங்களை வெட்டி, அதனை நடைமுறைப்படுத்திய ஒரே தலைவர், தந்தை பெரியார் அவர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவுறுத்திக் கொண்டால், இந்தக் கருத்து, எனக்குத்தான் சொந்தம், உனக்குத்தான் சொந்தம் என்று யாரும் சொல்லமாட்டார்கள். பெரியாருக்குத்தான் சொந்தம் என்று சொல்வார்கள் என்று செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் குறிப்பிட்டார்.
                                 -----------------------------"விடுதலை” 29-07-2015

0 comments: