Search This Blog

19.7.15

காமராசர் கொலை முயற்சி திட்டமிட்ட சதியே!-பெரியார்

காமராசர் கொலை முயற்சி திட்டமிட்ட சதியே!



- தந்தை பெரியார்
நமது சென்னை அரசாங்கம், பார்ப்பனர்களுக்கு நிபந்தனை அற்ற அடிமை என்பதைச் சிறிதும் மானம் வெட்கம் இல்லாமல் காட்டிக் கொள் கிறது. சுயநலம் மேலோங்கினால் எப்படிப்பட்டவர்களுக்கும் நீதி, நேர்மை மாத்திரமல்லாமல் பலருக்கு மானம் வெட்கம்கூட மறந்தும், பறந்தும் போய் விடும்.
இதற்கு சரியான எடுத்துக்காட்டு என்னவென்றால் இம்மாதம் 7-ஆம் தேதி டில்லியில் சங்கராச்சாரிகள், சாதுக்கள், நிர்வாண சாமியார்கள் என்ற பெயர்களைத் தாங்கி நிற்கும் பல அயோக்கியர்களும், பசு வணக்கக் காரர்கள், பொதுமக்கள் என்ற பெயர் களைத் தாங்கி நிற்கும் பல அயோக்கிய பார்ப்பனர்களும், அவர்கள் கூலிகளும் சேர்ந்து நடத்திய காமராசர் கொலை முயற்சியைக் கண்டிக்கக்கூடாது என்ப தாகத் தடை உத்தரவு போடப்பட்டிருப் பதேயாகும்.
காமராசரைக் கொல்ல முயற்சித்ததை கண்டிக்கக் கூடாதா?
டில்லியில் 7ஆம் தேதி நடந்த சம்பம், காமராசரைக் கொல்ல முயற்சித்த சம்பவம் என்பதையும் அதில் மேற் கொண்ட கொலைகாரக் கூட்டம் கலந்து வேலை செய்தது என்பதையும் இதற்குப் பண மூட்டைகள் பண உதவி செய்தன என்பதையும் சிறிதும் சந்தேகத்திற்கிட மில்லாமல், ஆட்சியாளர், முதல் அநேக பத்திரிகைகள் வரை பட்டாங்கமாகக் கூறி கண்டித்திருக்கின்றன. இது மாத்திரமல்லாமல் சில மந்திரிகளும், போலீஸ் அதிகாரிகளும், இரகசிய போலீஸ் இலாகாவும், சில மந்திரிகள் இலாகாவும்கூட இதற்கு ஆதரவாகவும், உதவியாகவும் இருந்திருக்கின்றன என்பதும் வெளியாக்கப்பட்டிருக் கின்றன. இதற்காக ஒரு பெரிய மந்திரி யும் புகார் ஏற்பட்ட பிறகு எங்கு தன்மீது நடவடிக்கை எடுத்து விடுவார்களோ என்று பயந்து இராஜினாமா கொடுத்து விட்டு இச்செயலுக்குத் தாம் உடந் தையாய் இருந்தது உண்மைதான் என்ற அளவுக்கு தனது பிதற்றலில் கக்கி இருக்கிறார். இந்த முயற்சியில் காம ராசரைக் கொல்ல முயற்சித்தது மாத்திர மல்லாமல் பஸ்கள், லாரிகள், கார்கள், ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள் மற்றும் நாற்காலி, மேஜை, கட்டில், அலங்கார சாமான்கள் முதலியவை மற்றும் பல வீடுகளும் கொளுத்தப்பட்டன என்று அரசாங்க அறிக்கைகளிலும் தெள்ளத் தெளிவாய்க் காணப்பட்டன. இவ்வளவு மாத்திரந்தானா? இதற்கு மேலும் பார்லி மென்ட் கட்டடத்தையே சூழ்ந்து கொண்டு அரசாங்க காரியங்கள் நடை பெறாமல் அளவிட முடியாத அளவுக் குக் கூச்சலும், குழப்பமும் பலாத்காரச் செய்கைகளும் நடத்தி காரியாதிகளை நிறுத்தி விட வேண்டிய அளவுக்கு பலாத்கார முறையில் பெரும் காலித் தனங்களும் நடந்ததாக ஆதாரங் களுடன் அரசாங் கத் தெளிவுகள் இருக்கின்றன.
திட்டமிட்ட சதியே
இவ்வளவும் மேற்கண்ட கூட்டத் தினர் மாத்திரம் அல்லாமல் அரசியல், கலாசார, சமூக இயல் வேஷம் போட்டுக் கொண்டு திரியும் சில கட்சிகளின் ஆதரவில் சதியாலோசனை செய்ய திட்டமிட்டே செய்யப்பட்டதாகவும், அரசாங்கத்தாலும், மற்றும் பல பத்திரி கைகளாலும் சிறிதும் சந்தேகத்திற் கிடமின்றி தெளிவாக்கப்பட்டிருக் கின்றன.
இந்த, இப்படிப்பட்ட கிளர்ச்சியின் பயனாக பல உயிர்கள் சேதமாக, நூற்றுக் கணக்கான பேர் காயம்பட்டு சிகிச் சையில் இருப்பதாகவும் தெளிவாக்கப்பட்டிருக் கிறது. இன்னமும் காமராஜர் போலீசு பந்தோபஸ்துடன் இருந்து வருகிறார் என்றும் சொல்லப்படுகின்றது.
இப்படியெல்லாம் காரியங்கள் செய்த மாபெரும் அயோக்கிய துரோகக் கும்பல் களை இன்றுவரை ஒரு அரசியல்வாதியோ, ஒரு காங்கிரஸ் வாதியோ, ஒரு பெரிய மனிதனோ, ஒரு ஸ்தாபனமோ, கண்டிக்க வில்லை என்பதுமாத்திரமல்லாமல், காமராஜருக்கு ஒரு பரிவு வாக்கியம்கூட சொல்லப்படவில்லை; நம் நாட்டில் ஒரு பத்திரிகையால் கூட (விடுதலையைத் தவிர) கண்டிக்கப்படவில்லை. இந்த நிலையில் நான் ஒருவன்தான் இந்த நிகழ்ச்சிகளைக் கண்டிப்பதற்கு என்றும், காமராஜர் உயிர் தப்பியதற்கு அவரைப் பாராட்டுவதற்கு என்றும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தேன். அதனால் கலவரம் ஏற்படும் என்று சென்னை அரசாங்கம் தடை உத்தரவு போட்டு இருக்கிறது! இந்த உத்தரவு சென்னைக்கு மாத்திரமல்லாமல தமிழ் நாட்டின் எல்லா நகரங்களுக்கும் போட லாம் என்று தெரிகிறது. அரசாங்க அக்கி ரமத்திற்கு ஒரு எல்லை வேண்டாமா?
இங்கேயுமா நந்தாக்கள்? இங்கேயுமா டில்லி போன்ற போலீசுகள், சி.அய்.டி.க்கள்? இதற்கு மேல் ஒரு அரசாங்கத்தின் அக் கிரமத்திற்கு, அரசாங்கத் துரோகத்திற்கு வேறு என்ன காரியம் செய்ய வேண்டும்?
காங்கிரசை தோற்கடிக்கும் சூழ்ச்சியா?
எலெக்ஷன் சந்தர்ப்பமாக இன்றைய நிலை இல்லாதிருக்குமானால் இந்த பிரச்சனையில் ஒரு பத்து ஆயிரம் பேரை, ஏன் ஒரு லட்சம் பேரை இந்த தடை உத்தரவை மீறும்படி அனுமதித்து இருப்பேன். அரசாங்க மந்திரிகளில் பலர் இன்றைய ஆட்சியை எதிரிகள் - பார்ப் பனர்கள் கையில் கொடுக்கத் துடிப்பதாலும், வரும் தேர்தலில் எப்படியாவது காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து வருணாசிரமக் கட்சி வசம் ஒப்படைக்கத் தங்களால் கூடிய எல்லா முயற்சிகளையும் செய்வதாலும், அம் முயற்சியில் இந்தத் தடை உத்தரவும் ஒன்று என்று நான் உண்மையாய், உறுதியாய் நம்புவதாலும் ஒரு மாபெரும் கோழை போல் இவ்வுத்தரவுக்குத் தலை வணங்குகிறேன். இதில் மற்றும் ஓர் அதிசய சம்பவம் என்ன வென்றால், பெரும் அதிகாரிகள் கொண்ட போலீஸ் படை ஒன்று, நான் சென்னை வந்தவுடன் என்னிடம் வந்து இந்த மாதிரி இந்த கண்டன நாள் - பாராட்டு நாள் கூட்டத்திற்கு தடை உத்தரவு போடப்பட்டி ருக்கிறது; என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார்கள். நான் எழுந்து அவர்களுக்கு வணக்கம் செலுத்தி என்ன அய்யா, ஒரு மனிதனை ஒருவன் கொன்றுவிட்டால் அந்த மனிதன் வீட்டார் அழக்கூடாது. அழுதால் கொன்றவன்மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும். கொன்ற கூட்டத்தார் கலகம் செய்வார்கள் என்று ஆக்கினை இடுவது போல் உத்தரவு போடுகிறீர்களே இது தர்மமா? என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் தலைவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? சென்ற வாரம் இப்படி ஒரு கூட்டத்திற்கு உத்தரவு போட் டோம். அவர்கள் மீறி நடத்தினார்கள்; கஷ்டப்பட்டார்கள்; கூட்டமும் நடக்க வில்லை; தெரியுமா? என்றார்கள். பின்னர் இந்த காரியத்திற்கு கேள்வி கேட்பாடு இல்லையா? நாளைக்கு இங்கேயும் இந்த நிகழ்ச்சி ஏற்பட்டால் எங்கள் கதி என்ன? என்று கேட்டேன், அதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்ளுவோம் என்றார்கள்.
நீங்கள் பார்த்துக்கொண்ட விஷயம் தான் 1965 பிப்ரவரி இந்தி எதிர்ப்பு மாணவர் காலித்தனத்தில் தெரியுமே! இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் துடிக்கத் துடிக்க உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு கொல்லப்பட்டார்களே! அதுபோல் நாங்கள் எரிக்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகுதானே நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள்? அதுவும் பட்டாளம் வந்துதானே அடக்கப்பட்டது; கலெக்டர் எதிரில் நெருப்பு வைத்தார்கள். கலெக்டர் பக்கத்தில் இருக்கும்போதே சட்டத்தை மீறினார்கள். அப்போது போலீசார் சுலபமாய் தப்பித்துக் கொண் டார்கள். எப்படி கலகக்காரர்களை ஒன்றும் செய்யாதீர்கள். அவர்கள் செய்யும் காரி யங்களைத் தடுக்காதீர்கள் என்று எங் களுக்கு மந்திரி உத்தரவு என்று சொல்லி விட்டீர்கள். செத்தவர்கள் கதி என்ன? அப்போது நாசமான சொத்து நஷ்டம் என்ன? அன்று நீங்கள் விதைத்த விதை தானே இன்று டில்லியில் காய்த்துப் பழுத்து பலன் கொடுத்து இருக்கிறது! இன்னும் உங்களுடைய இந்த மாதிரி உத்தரவுக் குப்பின் நம் நாடு என்ன கதியாகப் போகிறதோ! எங்கள் கதி என்ன ஆகும்? நாதியில்லாத மக்கள் ஆகி விட்டோமே உங்கள் ஆட்சியில் என்று வணக்கமாய்ச் சொல்லி விட்டேன்.
தடையை மீற உத்தேசமில்லை
நான் இப்படிச் சொல்லுவதால் இன்றைய உத்தரவை மீறுவேன் என்று கருதாதீர்கள்; நான் போலீசுக்கு மரியாதை செய்பவன்; போலீசு உத்தரவு எதுவானாலும் அதற்குக் கீழ்ப்படிபவன்; ஆட்சிக்கும், போலீசுக்கும் மதிப்பும் மரியாதையும் இருக்க வேண்டும் என்று உண்மையாகப் பாடுபடுபவன்; பின்னையேன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், இவ்வளவு பெரிய அக்கிரமம், காலித்தனம், கொலைக்காரத்தனம், கேள்வி யற்றுப்போக வேண்டியது தானா?

காமராஜர் அகஸ்மாத்தாய் எழுந்து புறக்கடை வழியாய் வெளியேறா மல் இருந்திருந்தால் இன்றைக்கு அவருக்கு 10ஆம் நாள் கருமாதி தானே நடக்கும்? என்று சொல்லிவிட்டு வாயை மூடிக் கொண்டேன். வந்த கூட்டத் தில் இருந்த ஓர் அதிகாரி நீங்கள் கூட்டம் நடத்தியே ஆகவேண்டு மானால் டில்லி விஷயத்தைப் பற்றிக் கூட்டத்தில் பேசுவதில்லை என்று சொன்னீர்களேயானால் கவனிக்கப்படும் என்று சொன்னார்.

உடனே நான் கூட்டத்தை நிறுத்தினால் எங்களுக்கு ஒரு பங்கு அவமானம் என்றால்; அதற்காகப் போட்ட கூட்டத் தில் அதைப் பற்றிப் பேசாவிட்டால் 10 பங்கு அவமானம் என்பதோடு நான் நாளைக்குத் தெருவில் கூட நடக்க முடியாதே என்று சொன்னேன்.
உங்கள் கடமைகளை நீங்கள் செய்வது போல் எங்கள் கடமைகளை நாங்கள் செய்ய வேண்டிய இருக்கிறது என்றார். சரி செய்யுங்கள்; வருவதை நாங்கள் அனுபவிக்கிறோம். காமராஜர் உயிரைவிட எங்கள் உயிர் பெரிதல்ல; சொத்து சுகமும் பெரிதல்ல என்று சொல்லி மரியாதை செய்து அவர்களை வழி அனுப்பினேன்.
இனி நமது கதி என்ன? கடமை என்ன?
இனி நமது கதி என்ன? நமது கடமை என்ன என்பதை யோசிக்க வேண்டும். முதலாவதாக தடை உத்தரவு பெற்ற வர்கள் கண்டிப்பாக ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்தக்கூடாது. போலீசுக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்று பொதுமக்களை வேண்டிக் கொள் ளுகிறேன்.
இப்படியானால் மக்கள் துயரத்தையும் ஆத்திரத்தையும் எப்படிப் பரிகாரம் செய்து அடக்குவது? என்று கேட்பீர்கள். அதற்கு, அப்படிப்பட்டவர்களுக்கு எனது யோசனை, ஊர்வல மில்லாமல் கூட்டம் நடத்தாமல், சங்கராச்சாரிபோல், சாதுபோல், மற்ற குண்டர்களை போல், அவர்கள் நெருப்பு வைப்பதுபோல் காகிதத்தில் எழுதி அந்த காகிதத்துடன் ஒரு பட்டாசையோ வெடியையோ பிணைத்து உங்கள் வீட்டு வாசலில் நின்று கொளுத்தி பொது இடம் அல் லாமல் உங்கள் இடத்திலேயே போட்டு விடுங்கள். அப்போது கண்டிப்பாய் போலீசு உத்தரவுக்கு மரியாதை செய் யுங்கள்; என்மீது கோபம் கொள்ளா தீர்கள்! 20.11.1966இல் பார்ப்பனர் காலித் தனத்துக்கு கண்டன நாளாகக் கொண் டாடும்படி தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கையும் விளக்கங்களும் கீழே தரப்படுகின்றன.
கண்டன நாள் அறிக்கை
சங்கராச்சாரியார்கள், சாமியார்கள், பார்ப்பன குண்டர்கள் டில்லியில் காம ராசரைக் கொல்ல, அவர் தங்கியிருந்த வீட்டிற்கு நெருப்பு வைக்க முயற்சித்த அடாத செயலைக் கண்டிப்பதன் அறி குறியாக 1966 - நவம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையை பார்ப்பனரின் கொலை பாதகக் கண்டன நாளாக தமிழ் நாடு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.
அன்று கருப்புக்கொடி ஊர்வலம் நடத்தி, கூட்டம் போட்டு, சங்கராச்சாரி யார்கள் - சாமியார்கள் - குண்டர்கள் ஆகியவர்களைக் கண்டித்துப் பேசி, யாவரும் கத்திவைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.
---------------------------------------------- காமராசர் கொலை முயற்சி சரித்திரம்  என்ற நூலிலிருந்து...

0 comments: