Search This Blog

30.11.08

நாம் எந்த மாறுதலையும் திருத்தத்தையும் செய்யத் துணிய வேண்டும்


மாறுதல்

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மனிதனும் அவனவன் வாழ்வில் முற்போக்கும், மாறுதலும் அடைந்துகொண்டே வருகின்றான். இதற்காகத் தனி இலட்சியம் தேவையில்லை. மரக்கட்டைபோல் உணர்ச்சியற்றவனாய் இருந்தாலும் அவன்கூட காலப்போக்கில் தானாகவே மாறுதலும் முற்போக்கும் அடைந்துதான் தீருவேன்.

ஆனால், அப்படிப்பட்ட விஷயங்களில் நம்போன்றவர்கள் செய்யும் விசேஷ காரியம் என்னவென்றால், எப்படிப்பட்ட மாறுதல் எப்படிப்பட்ட முற்போக்கு அவசியம் என்பதில் செலுத்தும் கவனமேயாகும்.

தானாகப் போய்க்கொண்டிருக்கும் முற்போக்குக்கும் மாறுதலுக்கும் தடையாயிருந்து அவற்றை வேறு வழியில் திருப்புவதனால் சில சமயங்களில் பெருத்த கிளர்ச்சி ஏற்பட்டு விடுகின்றது. அதற்கு எதிர்ப்பும் பழிப்பும் பலமாய் ஏற்பட்டு விடுகின்றது. இப்படிப்பட்ட சமயங்களில் சிலர் பழமையை யதாஸ்திதியைக் குரங்குப் பிடியாய்ப் பிடித்துக்கொண்டு உபத்திரவப்படுகிறார்கள்; தொல்லைகளை விளைவிக்கிறார்கள்; இத்தொல்லையும் உபத்திரவமும் தங்கள் அறியாமையால் செய்வதுண்டு.

எப்படியிருந்தாலும் அபாயகரமான வழியில்கெடுதி உண்டாக்கும் வழியில் மாறுதலும் முற்போக்கும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மக்கள் கடமையாகும். மாறுதல் வரும்போது அதைக் கையாளுபவர்கள் துன்பத்துக்கும் பழிப்புக்கும் ஆளாவது என்பது புதிதல்ல; சரித்திரகால இயற்கையாகும். சாக்ரடீஸ், புத்தர், கிறித்து, முகமதுநபி ஆகிய பெரியார்கள் இன்று எவ்வளவோ மக்களின் வணக்கத்திற்கும் மதிப்பிற்கும் உரியவர்களானாலும், அவர்கள் காலத்தில் எவ்வளவோ தொல்லைக்கம், இழிவுக்கும் பழிப்புக்கும் ஆளானதாகச் சரித்திரங்கள் சொல்கின்றன.

அதுபோலவே, சில மாறுதல்கள் தற்கால மக்களுக்குக் கசப்பாய் இருந்தாலும், பிற்கால மக்களால் மதிப்பும் பெருமையும் பெறும் என்ற துணிவு எனக்குண்டு. அந்த நம்பிக்கையின் பேரில்தான் நாம் எந்த மாறுதலையும் திருத்தத்தையும் செய்யத் துணிய வேண்டுமே ஒழிய, நாம் இன்றே பாராட்டப்படவேண்டும் என்று கருதிக்கொண்டு செய்வது பயன்படாது.

கலியாணம், இழவு, வாழ்வு முதலிய துறைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் சுயமரியாதை இயக்கத்தான் என்று முழுவதும் கூறுவதுதகாது. காலதேச வர்த்தமானம் மக்களை அப்படிக் காலத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளச் செய்கின்றது. அதில் சிலவற்றிற்குச் சுயமரியாதை இயக்கம் துணை புரிந்தது என்று சொல்லலாம்.

---------------- தந்தைபெரியார்- புதுக்கோட்டையில், 7-10-1934-இல் சொற்பொழிவு- 'பகுத்தறிவு' 14-10-1934

வி.பி. சிங், லாலு பிரசாத், கலைஞர், வீரமணி என்ற பெயர்கள் - பொறுக்குமா பார்ப்பனர்களுக்கு?


அம்பு!

1993 தேர்தலில் ஜனதாதளத் தேர்தல் அறிக்கை வெளிவந்தது. தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு அதில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. பொறுக்குமா பார்ப்பனர்களுக்கு?
தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடுகள் தீயைக் கக்கும் தலையங்கத்தைத் தீட்டி தம் ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டன.

துரதிர்ஷ்டவசமாக ஜனதாதளத்தின் தேர்தல் அறிக்கை நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மீது கவனம் செலுத்தவில்லை. தனியார்த் துறைகளிலும் மண்டல் கமிஷனை அமல்படுத்தக் கோருவது பெரும் பான்மை மக்களை அந்நியப்படுத்தும் என்று எழுதியது தினமணி.
பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்டமக்களும் பெரும் பாலான மக்கள்தானே. இந்த நிலையில், தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது எப்படி பெரும்பான்மை மக்களை அந்நியப்படுத்தும்?

வி.பி. சிங் பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனதா தளம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மறக்காமல் - கொண்ட கொள்கை யில் சிறிதும் நழுவாமல், தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிக்கு உகந்த நிலையை மேற்கொண்டார் வி.பி. சிங் என்பது - அந்த மாமனிதர் அக்கொள்கையில் கொண்டிருந்த பற்றையும், பிடிப்பையும் விளக்கவில்லையா?

அதனால்தான் துக்ளக் போன்ற பார்ப்பனர்கள் அனேகமாக ஒவ்வொரு இதழிலும் - வி.பி. சிங்கைப்பற்றி கொச்சைப்படுத்தி எழுதிடத் தவறுவதே கிடையாதே!

வி.பி. சிங், லாலு பிரசாத், கலைஞர், வீரமணி என்ற பெயர்கள் இந்தக் கூட்டத்திற்கு எப்பொழுதுமே எட்டிக்காயாகவே இருந்து வந்திருக்கிறது. தொட்டதற்கெல்லாம் இவர்கள் மீது பாய்ந்து பிராண்டாவிட்டால், தூக்கமே வராது இந்தக் கும்பலுக்கு.

ஒரு தகவல் - நவம்பர் ஏழு என்பது எப்படியோ இனப் பகைவர் கூட்டத்துக்குக் கூட்டாளி யாகவே இருக்கிறது.

நவம்பர் 7 (1990) இல் சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் பிரதமர் பதவிக்குக் குறி வைத்துத் தாக்கினர்.

அதே நவம்பர் 7 (1966) இல் இதே பி.ஜே.பி. கும்பல் (அன்று அவர்களுக்கு ஜனசங்கம் என்று பெயர்) காவிக் கூட்டம் சங்கராச்சாரி வகையறாக்கள் தான், இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் ஒரு பகல் நேரத்தில் பசுவதை தடுப்புச் சட்டம் என்பதைக் காரணம் காட்டி பச்சைத் தமிழர் காமராசரின் உயிருக்குக் குறி வைத்தது. இன்று ராமன் பாலம் என்கின்றனர்; அன்று பசு மாமிசம் என்றனர்.

குறி வைக்கப்பட்டவர்கள் அனைவரும் சூத்திரர்கள்! அது ஒன்று போதாதா அந்தத் துரோணாச்சாரிக் கும்பலுக்கு அம்பு எய்ய?

--------------- மயிலாடன் அவர்கள் "விடுதலை" 30-11-2008 நாளிதழில் எழுதியது.

எந்த தீவிரவாதிகளையும் நாம் ஆதரிப்பவர்கள் அல்ல!


மதவெறி சக்திகளுடன் கூட்டு சேருகின்ற அரசியல்
கட்சிகளை அடையாளம் காட்டி புறந்தள்ளுவோம்
சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு


சென்னை, நவம். 30- மதவெறி சக்திகளுடன் கூட்டு சேருகின்ற எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டி புறந்தள்ளுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சங்பரிவார்க் கும்பலும் வெடிகுண்டு கலாச்சாரமும் என்ற தலைப்பில் 20-11-2008 அன்று இரவு 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

தாங்கள் ஆண்கள் என்பதை காட்டி அந்தப் புடவைகளை எல்லாம் கழற்றி விட்டு, உடனே அந்தப் பெண்ணை - சொல்லுவதற்கே கூச்சமாக இருக்கிறது.

வன்புணர்ச்சி செய்த கொடுமை

வன்புணர்ச்சி செய்கிறார்கள். இந்த கொடுமையான செய்தி நடந்த செய்தி. ஏதோ திரைப்படத்திலேயோ அல்லது ஊடகத் துறையிலேயோ, வந்த செய்தி அல்ல. உண்மையாகவே நடந்த சம்பவம் இது. மீண்டும் பெரிய அளவிலே நடக்கிறது.

பழியை கிறிஸ்தவர்கள்மீது போட்டார்கள்

மலைவாழ் மக்களை கிறிஸ்தவர்களாக்கு என்று இவன் கட்டாயப்படுத்துகின்றான். அங்கே மாவோயிஸ்டுகள் என்று சொல்லக்கூடிய தீவிரவாதிகள் மலைவாழ் பகுதியிலே இருக்கிற சிலரைக் கொல்லுகிறார்கள்.

எந்த தீவிரவாதிகளையும் நாம் ஆதரிப்பவர்கள் அல்ல. அவர்கள் கொன்று விட்டு கிறிஸ்தவர்கள்தான் இப்படி செய்தார்கள் என்று கலவரத்திற்கு ஒரு சாக்கு வேண்டுமே என்பதற்காக அவர்கள் மீது பெரும் பழியைப் போட்டு மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கினார்கள்.

இலட்சக்கணக்கானோர் அகதிகளாக

இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகி காடுகளிலே முகாம்களிலே இருக்கிறார்கள். அங்குள்ள முகாம்களிலே கூட அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இது பத்திரிகையிலே வருகிறது.
தீவிரவாதிகள் சொல்லுகிறார்கள். நாங்கள் தான் கொன்றோம். அதற்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்ன காரணத்திற்காக என்று சொல்லக்கூடிய நிலைதான் இருந்தது.

கிறிஸ்தவர்களைத்தான் குறி வைக்கிறார்கள்

ஆனால் அதை அப்படியே அலட்சியப்படுத்திவிட்டு, மறுபடியும் மறுபடியும் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று சொன்னால் கிறிஸ்தவர்களைத்தான் குறி வைக்கிறார்கள்.
அதே போல குஜராத்திலே திட்டமிட்டு கலவரத்தைத் தொடர்ந்து செய்கிறார்கள்.

மோடி அரசு என்றைக்குப் பதவி ஏற்றதோ

மோடி அரசு என்றைக்கு அங்கே பதவி ஏற்றதோ அப்பொழுதே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களுடைய பொற்காலம் என்று கருதி செயல்படத் தொடங்கி விட்டனர்.
ரொம்பவும் அவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக அது அமைந்துவிட்டது. எனவே அந்த அளவுக்கு வெறித்தனம் மோடியை வரவேற்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.

மோடி சிறந்தவர் என்று இங்குள்ளவர் சொல்கிறார்

மோடிதான் சிறந்தவர் என்று சொல்லக்கூடியவர்களும் இங்கு இருக்கிறார்கள். இதை எல்லாம் நன்றாக நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும்.
கோத்ரா சம்பவம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். திட்டமிட்டு அது எப்படி நடந்தது என்று. ஒரு லாலு பிரசாத் ரயில்வே மந்திரியாக ஆகியிருக்காவிட்டால் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் உண்மையே வெளியே வந்திருக்காது (கைதட்டல்).

உச்சநீதிமன்றம் கண்டித்தும்

உச்சநீதிமன்றம் பல நேரங்களில் கண்டித்தும் கூட, அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஒரிசா ஒரு பக்கத்திலே குஜராத் இன்னொரு பக்கத்திலே என்ற நிலை இருக்கிறது.
அதுவும் அகமதாபாத் போன்ற இடங்களிலே எப்படி நடந்திருக்கிறது என்று சொன்னால் பயிற்சிப் பாசறை அங்கே நடந்திருக்கிறது. அய்நூறு பேரை தயாரித்தார்கள்.
அதுவும் எப்படி அவர்களை நடத்துகிறார்கள்? எதையும் திட்டமிட்டு செய்கிறார்கள்.

வாஜ்பேயி அரசிலே அத்வானி உள்துறை அமைச்சர்

வாஜ்பேயி அரசிலே அத்வானி உள்துறை அமைச்சராக இருக்கின்றார். அடுத்து பிரதமர் பதவிக்கு நாக்கைத் தொங்கப் போட்டிருக்கின்ற நிலை.

இந்த அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த கால கட்டத்திலே என்ன நடந்தது? அப்பொழுதுதான் இந்துத்துவா வினுடைய தத்துவத்தை இந்து மகாசபை தத்துவத்தை அப்படியே செயல்படுத்தினார்கள். இந்து மகாசபையின் தலைவர் மூஞ்சே.
இதைத்தான் ஆதாரப்பூர்வமாக அறிவுக்கரசு அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

இந்துத்துவா தத்துவத்தைப் பற்றி ஒரு புத்தகமே

வீரசவர்க்கார் தான் இந்துத்துவா தத்துவத்தைப் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கின்றார். இரண்டாம் உலகப்போர் யுத்தத்தை சந்தித்த சர்வதிகாரி பாசிச வெறி பிடித்த இத்தாலியின் முசோலினியை சந்தித்துப் பார்த்து விட்டு, அதற்குப் பிறகு அவர்கள் திட்டமிட்டு, அவர்கள் என்னென்ன முறைகளைக் கையாண்டார்களோ அதே முறைகளை கையாள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இந்தப் பணிகளை செய்தார்கள்.

யாருக்காவது இந்த விவரங்கள் தெரிய வேண்டுமானால் அவர்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தி சங்பரிவார் லீடர்

ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்புகள் எப்படியிருக்கின்றன? எப்படி செயல்படுவார்கள் என்பதை பிரான்சிலே இருந்து கிறிஸ்தவ ஜெஃபர்லே அவர்கள் தி சங்பரிவார் லீடர் ஆக்ஸ்ஃபோர்டு பிரஸ் மூலமாக ஒரு அற்புதமான புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றார்கள்.
இந்தப் புத்தகத்திலே வங்கிகளுக்கு ஆர்.எஸ்.எஸ்.சினுடைய வரலாறு, தத்துவம் அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி யெல்லாம் இருந்தது என்பதை 2005ஆம் ஆண்டு மூன்றாண்டு களுக்கு முன்னாலே வந்த நூல் இது.

இந்த நூலில் 69வது பக்கத்திலே வந்திருக்கக்கூடிய ஒரு செய்தி.

இத்தாலியில் இந்து மகாசபை தலைவர் மூஞ்சே

இந்து மகாசபை தலைவர் மூஞ்சே இத்தாலிக்குச் சென்றார். அங்கு முசோலினியை சந்தித்தார். எப்படி அவர்களுடைய இயக்கம் நடவடிக்கைகளைப் பற்றி ஆலோசித்தார். இயக்கம் நடவடிக்கைகளைப் பற்றி ஆலோசித்தார்.

1934ஆம் ஆண்டு இந்த தொடர்பு நெருக்கமாக இருந்தது. கல்கத்தாவில் உள்ள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஃபி.வி முகர்ஜி என்பவர் இந்து மகா சபை அமைப்பில் 1938இல் சேர்ந்தார். பல்கலைக்கழகத்திற்குள் உள்ளே நுழைந்தார்.
இன்னும் கேட்டால் மாளவியா. மண்ணுருண்டை மாளவியா மிகப்பெரிய தேசபக்தர். அவர் காசியிலே இந்து பல்கலைக்கழகம் என்பதைத்தான் உருவாக்கினார்.

இந்து பல்கலைக்கழகம் என்றுதான் பெயர்

இந்து பல்கலைக்கழகம் என்றுதான் பெயரிட்டார்கள். இவைகளை திட்டமிட்டு எப்படி செய்தார்கள் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தந்தை பெரியார் ஏன் பிரிட்டிஷை ஆதரித்தார் என்பதிலே இதற்கு விடைகிடைக்கும்.

இட்லர் சொன்ன ஆரிய தர்மம்

இரண்டாவது உலகப் போரிலே இட்லர் என்ன சொன்னார்? நாங்கள் ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள். ஆரிய தர்மம் - ஆரிய எண்ணம். ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதைப் பெருமையாகச் சொல்லுகிறோம் என்று சொன்னார்.

சவர்க்கார் ஒப்பந்தம் போடும் பொழுது கூட தெளிவாகச் சொல்லுகின்றார். நாங்களும் ஜெர்மானியர்களும் உறவினர்கள் என்று இங்குள்ளவர்கள் சொன்னார்கள். இட்லர் வருவதற்கு இங்கு வரவேற்பே பாடிக் கொண்டிருந்தார்கள்.
பாசிசம், நாசிசம் இவைகள் எல்லாம் வரவேண்டும் என்று சொன்னார்கள்.

இருகொடுமையாளருக்கும் ஸ்வஸ்திக்

இட்லருடைய சின்னம் ஸ்வஸ்திக் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் இங்கே அடையாளம் ஸ்வஸ்திக். அதை மறந்து விடாதீர்கள். எனவே இவர்கள் அந்த எண்ணத்திலேயே உருவாக்கப்பட்டவர்கள்.

ஆகவே அதனுடைய விளைவு என்ன ஆயிற்று? அவர் எழுதியிருக்கின்ற இந்துத்துவா என்ற புத்தகத்திலே சகோதரர் அறிவுக்கரசு அவர்கள் இங்கு சுட்டிக் காட்டினார்கள் அல்லவா?

இராணுவத்தை இந்துமயமாக்கு

இந்துக்களை இராணுவ மயமாக்கு, இராணுவத்தை இந்து மயமாக்கு. இதைத்தான் அவர்கள் கோஷமாக முழங்கு கின்றார்கள்.
புரோகிதம் பார்க்கிறவன் எல்லாம் லெப்டினன்ட் கர்னலாக வந்தால் என்ன ஆகும்? அவர்கள் மனுதர்மத்தை அப்படியே கையாளுவார்கள்.
இந்த குண்டு வெடிப்பு, மற்றவைகள் எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கக்கூடிய நிலை இருக்கிறது.
சோனியாவை வெளிநாட்டுக்காரர் என்று
எவ்வளவு காலமாக நடந்து கொண்டிருக்கின்றது? 2004-லிருந்து தான் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு வந்திருக்கிறது.
சோனியா காந்தி அவர்களுடைய தலைமையிலே. அவரையே வெளிநாட்டுக்காரர் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இவர்கள் ஜெர்மானியனோடு எங்கள் இரத்தம் பொது இரத்தம்.
எங்கள் உறவு பொது உறவு என்று சொன்னவர்கள். இந்த நாட்டிலே ஒருவரை மணந்து அவரை இழந்து இந்த நாட்டுக் குடிமகளாகவே ஆகியிருக்கின்ற சோனியா காந்தி அன்னியர் என்று சொல்லுவதற்கு என்ன தகுதியிருக்கிறது என்ற கேள்வியை நியாயமாகக் கேட்க வேண்டும்.


சோனியா குடும்பம் செய்த தியாகம்

இந்த நாட்டிற்காக அவர்களுடைய குடும்பம் தியாகம் செய்திருக்கிறது. இந்த குடும்பத்தினுடைய கொள்கையிலே நமக்கு மாறுபாடு இருக்கலாம். வேறுபாடு இருக்கலாம். அணுகுமுறையிலே. அது வேறு செய்தி.
ஆனால் ரொம்பத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள் என்ன சொல்லியிருக்கின்றார்கள்.

முசோலினியோடு கூட்டு

இவர்கள் முசோலினியோடு கூட்டு சேரலாம். ஆனால் அந்த நாட்டிலே இருக்கிறவர் வந்து இந்த நாட்டிலே ஒருவரை மணந்து இந்த நாட்டினுடைய மொழி கலாச்சாரத்தோடு ஒன்றிணைந் திருந்தால் அவர்கள் இன்னும் அந்நியர் என்று சொல்லு கிறார்கள்.

பேசு நா இரண்டுடையாய் போற்றி போற்றி
என்று ஆரிய மாயையிலே அண்ணா சொன்னாரே அது எவ்வளவு சிறப்பானது என்பதை நீங்கள் அழகாக எண்ணிப் பார்க்க வேண்டும்.

முற்போக்கு முத்திரையினரின் தவறு

ஆகவே அப்படிப்பட்ட நிலையிலே வாஜ்பேயும், அத்வானியும் அங்கே இருக்கின்ற நேரத்திலே என்ன நடந்தது? இந்த நிலையிலே மறுபடியும், மீண்டும் அத்வானி பிரதமராக வந்தால் என்ன ஆகும்?
எங்களுக்குப் பதவிதான் முக்கியம். நாங்கள் யாரோடும் கூட்டுச் சேருவோம் என்று நினைக்கின்ற முற்போக்கு முத்திரை குத்திக்கொண்டிருக்கின்ற நண்பர்கள் கூட தவறு இழைத் திருக்கின்றார்கள்.
அவர்கள் தவறிலிருந்து தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இன்னொரு நாள் தனியாக ஒரு சிறப்புக் கூட்டம் போட்டு விளக்கம் சொல்லுவதற்கு அது வாய்ப்பாக இருக்கும். ஆனால் ஒன்றே ஒன்று.

மதவெறி சக்திகளுக்கு மறைமுக உதவி

மதவெறி சக்திகளுக்கு மறைமுகமாக உதவி செய்வது ஒன்று நேரடியாக உதவி செய்வது என்பது ஒன்று. அதிலே இப்பொழுது நடக்கக்கூடிய அரசியல் கூட்டணி பேச்சுக்கள் எல்லாம் மதவாத சக்திகளுக்கு மதவெறி சக்திகளுக்கு இந்துத்துவா என்று சொல்லக்கூடிய சக்திகளுக்கு மறைமுகமான ஆதரவை தெரிந்தோ, தெரியாமலோ புரிந்தோ, புரியாமலோ முற்போக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் கூட, அதைக் கையாளுகிறார்கள்.
இது மிகப் பெரிய எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சந்தர்ப்பம்.

உங்களைப் புறந்தள்ளி - அடையாளம் காட்டுவோம்

எனவே கட்சி பெயர், அணுகுமுறை முற்போக்காக இருக்கிறதா என்று பார்க்காதீர்கள். இவர்கள் யாருடன் கூட்டு சேர்ந்து அவர்கள் உதவி செய்தால் அது மதவெறிக்குப் போய் சேருமா என்றால் உங்களையும் நாங்கள் புறந்தள்ளுவோம். சரியாக நாங்கள் அடையாளம் காணுவோம் என்று சொல்லக்கூடிய உணர்வை தமிழகத்திலே, தமிழ் நாட்டிலே நாம் உண்டாக்கிக் காட்ட வேண்டும் (பலத்த கைதட்டல்).

--------------- தொடரும்---------------------------"விடுதலை" 30-11-02008

மரண சாசனம் தயாரித்துவிட்டு, இந்த மகத்தான போராட்டத்தில், ஈடுபட்டுவிட்டோம்!


மரண சாசனம்

திராவிடர் கழகத்திலுள்ள தோழர்கள் ஒவ்வொருவரும், தயாரித்துக் கொள்ள வேண்டிய மரண சாசனம் இது. வீழ்ச்சியுற்ற இனத்தை எழுச்சி பெறச் செய்துவிட்டோம்; எந்த விலை கொடுத்தேனும், விடுதலையைப் பெற்றுத் தீர வேண்டிய கட்டத்தில் வந்துவிட்டோம்.

வெட்டும் குத்தும், இனி நம்மை விரைந்து தேடிவரும்; வாழ்வுக்கும், சாவுக்கும், இடையே அமைந்துள்ள ஊஞ்சலிலேயே நாம் உலாவ வேண்டியவர்களாக இருப்போம். வைகைக் கரையிலே - சென்ற கிழமை நடந்த அமளி, நமக்கு அறிவுறுத்தும் பாடம் அதுதான்; நாம் இருக்கு மட்டும் நமது ஆதிக்கத்துக்கு ஆபத்துதான் என்பதை அய்யந்திரிபற அறிந்து கொண்ட வர்ணாஸ்ரமம், நாம் செத்தால் மட்டுமே, தான் இன்னும் கொஞ்ச காலத்துக்கேனும் ஜீவித்திருக்க முடியும் என்று நன்கு தெரிந்து கொண்டு, நம்மைக் கொல்லக் கோர நாட்டியம் செய்தது. நமது இரத்தத்தையும் கொஞ்சம் குடித்து ருசி பார்த்தது. நமது வளர்ச்சியின் அறிகுறி நமக்கு மட்டுமல்ல, பிராமண சேவா சங்கத்தாருக்கும் தெரிந்திருக்கிறது. அவர்களின் மகஜர், நமது வளர்ச்சிக்கு ஆரியம் தரும் நற்சாட்சிப் பத்திரம்.

எல்லாம் சரி, ஆனால், இத்தகைய அறப்போரில் சேதம் நேரிடுகிறதே. இரத்தம் வீணாக்கப்படுகிறதே என்று எண்ணுகிறார்கள் சிலர். அவர்களுக்கு ஒரு வார்த்தை! நாம் எடுத்துக் கொண்டுள்ள மகத்தான காரியத்தின் தன்மையை ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.

யுகயுகமாக இருந்து வருவதாகக் கூறப்படும் ஏற்பாடுகளை நாம், திருத்தி அமைக்க விரும்புகிறோம். மமதை மலைக்கு வேட்டு வைக்கிறோம். நம்மீது சிறுசிறு துண்டுகள் சிதறி விழுந்து, மண்டையைப் பிளக்கின்றன என்றால், நாம் வைத்த வேட்டு மலையைப் பிளந்து வருகிறது என்று பொருள். மலையைப் பிளக்கும் காரியத்தில் இறங்கிவிட்டு, மலர் தலை மீது விழும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா? நம்மை நாமாகவே இந்தக் காரியத்துக்கு ஒப்படைத்து விட்டோம். உலகில் பல பாகங்களிலே, இதற்கு ஒப்பான காரியம் செய்யப் புகுந்தவர்கள் பட்டபாடுகள், இன்று பல்கலைக் கழகங்களின் பாடப் புத்தகங்களாகிவிட்டன. அன்று சாக்ரடீஸ் குடித்த விஷம், இன்று வரை, சாகா நிலையைச் சாக்ரடீசுக்குத் தந்து விட்டது. பழியையும் இழிவையும், எதிர்ப்பையும், ஆபத்தையும் தலை மீது ஏற்றுக் கொண்டு, பணி புரிந்து சென்று, அந்தப் பணியின் பலனைப் பின் சந்ததியார் அநுபவிக்கச் செய்யும் பரம்பரையில், நாம் சேர்ந்திருக்கிறோம். நமக்கு, இன்னலும் இடையூறும் இருக்கத்தான் செய்யும். ஆனால் நமது உழைப்பு ஒரு நாளும் வீண் போகாது!

கடு விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டோர், காரிருட் சிறையில் ஆயுட்காலம் முழுதும் தள்ளப்பட்டோர், கல்லால் அடித்துத் துரத்தப்பட்டோர், கழுத்து நெரிக்கப்பட்டோர், கனலில் தள்ளப்பட்டோர், கண்ட துண்டமாக்கப்பட்டோர் நாட்டு மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டோர், நாதியற்றுப் போனோர் என்று இவ்விதமாகத்தான் இருக்கும் - சமூகப் புரட்சிப் பணியிலே ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை வரலாறுகள். நாம் அந்த இனம். அவர்களெல்லாம் இன்று, அறிஞர் உலகின் அணிமணிகளாயினர். நம்மையும், பின் சந்ததி மறவாது.


காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிய காலம், கட்டிப் போட்டு விட்டு வீட்டுக்குத் தீயிட்ட காலம், கிணற்றில் தள்ளிக் கல்லிட்ட காலம், கண்களைத் தோண்டி எடுத்த காலம், தலையைக் கொய்த காலம், தணலில் தள்ளிய காலம் - இவையெல்லாம் இருந்தன. சீர்திருத்தம் பேசியோர் இவைகளிலேதான் உழன்றனர். பெரும்பாலானவர்கள் சாகவில்லை; கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டதாலேயே அவர்கள் இன்று சாகாதவராக உள்ளனர். எனவேதான், மரணசாசனம் தயாரித்துக் கொண்டு இந்த மகத்தான போராட்டத்திலே இறங்கவேண்டும் என்று கூறுகிறோம்.

சமூகத்தில் அடிப்படை மாறுதலை விரும்பும் நாம் கொல்லப்படக்கூடும் என்ற எண்ணத்திற்காக நாம் இப்பணி நமக்கேன் என்றிருந்துவிடினும் சாவு ஓய்வு எடுத்துக் கொள்ளாது. சாந்தம் பேசினாலும், இன்றைக்கிருப்பாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடமில்லை, அய்யோ! என்று தான் பதிகம் செவியில் ஒலிக்கும். செத்தால், செத்ததுதான்! ஆனால் கடமையைச் செய்கையில் கொல்லப்பட்டால், அது சாகா வரம் பெற்றதாகும்! நாம் வாழ்வோம், நமது உழைப்பின் பலனால் புது வாழ்வு பெறும் நமது பின் சந்ததியாரின் பேச்சில், பாட்டில், தொட்டிலருகே, பூந்தோட்டத்தருகே, கட்டிலருகே, பட்டி மண்டபத்திலே நாம் பேசப்படும். நமக்காகப் பணி புரிந்தனர் கொல்லப்பட்டனர் என்று அப்போது நாம் வாழ்ந்திருப்பதாகத்தான் பொருள். நமக்கென்ன, மரணம் நேரிடுகையில் மாளிகை என்னாகுமோ, மனோஹரிகள் என்ன ஆவரோ, தோட்டம் துரவு என்ன கதியோ, தோடு தொங்கட்டம் யாருக்குப் போகுமோ, வாணிபம் குறையுமோ, வட்டித் தொகை கெடுமோ என்ற எண்ணம் குறையப் போகிறதோ? இல்லை! ஆரியமே! என்னைக் கொன்றுவிட்டாய்! நான் உயிருடன் இருந்தால் உனக்கு ஆபத்து என்று தெரிந்து இதனைச் செய்தாய். திருப்தி அடையாதே! திரும்பிப்பார்! பிணமாகாது வேறு பலர் உளர் என்று கூறிக் கொண்டேதான் இறப்போம். எனவே, மரண சாசனம் தயாரித்துவிடுங்கள்!

மதுரைக்கு மறுகிழமை, குடந்தையில் கூடினர் நமது தோழர்கள், பல ஆயிரக்கணக்கிலே. மதுரையை விட இங்கு தாய்மார்கள் எராளம். இரு நாள் மாநாடுகள். இரு இரவும் நாடகங்கள்;எழுச்சியின் அளவும் தன்மையும், மதுரைச் சம்பவம், கனவில் கண்ட காட்சியோ என்று எண்ணக்கூடிய வகையினதாக இருந்தது. இதன் பொருள் என்ன? மதுரைச் சம்பவத்தால், மகத்தான நமது இயக்கம் மங்காது என்பதை நமது தோழர்கள் காட்டிவிட்டனர் என்றே பொருள். ஆர்வமும், ஆவேச உணர்ச்சியும் கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிலர் மதுரைத் தழும்புகளுடன் அங்கு கூடினர் - பணிபுரியத் தயார் என்று முழக்கமிட்டனர். மதுரை ஓய்ந்துவிட்டது. நமது தோழர்கள் மீது கல் வீசியர்களின் கரத்தின் வலி இன்னும் குறைந்திராது. ஆனால், கல்லடியும் கத்திக்குத்தும் பெற்ற நமது தோழர்கள், புண் ஆறா முன்பே என்றும் போலவே பணிபுரியக் குடந்தையில் கூடினர். ஆம்! மரணசாசனம் தயாரித்து விட்டே இந்த மகத்தான காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வீரத்தை, தியாக உணர்ச்சியை, உறுதியை நாம் பாராட்டுகிறோம்! அவர்களின் வீரத்துக்குத் தலை வணங்குகிறோம். மணலிலே இரத்தம் சிந்திய தோழர்களே! உங்கள் இரத்தம் வீணுக்குச் சிந்தப்படவில்லை. அந்தச் சேதி எண்ணற்ற தமிழரின் இரத்தத்தில் கொதிப்பேற்றி இருக்கிறது. வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசம் காணமுடியாத மனப்பான்மையைத் தந்துவிட்டது. நாம் கொல்லப்படக்கூடும், ஆகையினால் இருக்கும் இன்றே இன்னும் கொஞ்சம் இன எழுச்சிப் பணிபுரிவோம் என்ற எண்ணத்தை ஊட்டிவிட்டது. கொஞ்சநஞ்சம் நம்மவருக்கு இருந்துவந்த குடும்பப்பாசம் பந்தம் ஆகியவைகளையும் நாட்டு மொழிக் கலாச்சாரத்தைக் காக்க ஏற்பட்டுள்ள அறப்போர் போக்கடித்து விட்டது. இனி இருப்பது நாம் நமது தொண்டு, அதைக் கண்டு துடி துடிக்கும் ஆரியம். அது ஏவும் அஸ்திரம், அது பாயுமுன் பணிபுரிய வேண்டிய அவசரமான நிலைமை - இவ்வளவே! நாம், மரண சாசனம் தயாரித்துவிட்டு, இந்த மகத்தான போராட்டத்தில், ஈடுபட்டுவிட்டோம்! எனவே, நமது இலட்சியம் - குறிக்கோள் எப்படியும் வெற்றி பெற்றே தீருமென்பது உறுதி!

--------------பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தொகுதி-1

29.11.08

ஆயுதப் பேராட்டத்தை முதன் முதலில் விதைத்தவர்கள் யார்?


நாட்டிலே ஆயுதப் போராட்டத்தை முதன்முதலில் விதைத்தது
பார்ப்பன மதமான இந்துமதம்-புராணம் - இதிகாசம் - கீதை


சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு

சென்னை, நவம். 29- ஆயுதப் போராட்டத்தை முதன் முதலில் விதைத்தது பார்ப்பன மதமான இந்து மதம், புராணங்கள், இதி காசங்கள் கீதை போன்றவைகள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்க வுரையாற்றினார்.

சங்பரிவார்க் கும்பலும் வெடிகுண்டு கலாச்சாரமும் என்ற தலைப்பில் 20-11-2008 அன்று இரவு 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.

ஆர்.எஸ்.எஸ். என்பது பயங்கரவாதம்

ஆர்.எஸ்.எஸ். என்ற பயங்கரவாதம் என்பது புதிதல்ல. இந்து மதம் என்ற பார்ப்பன மதம் அதனுடைய மூலவேர். எங்கே இருக்கிறது என்று நாம் தோண்டித் துருவிப் பார்ப்போமேயானால், மனு தர்மத்திலேயிருந்து வருகிறது. வருணாசிரம தருமத்தை விலக்கிவிட்டு இந்து மதம் என்பது என்ன என்று கேட்டால் ஒன்றுமில்லை, பூஜ்யம் என்பதுதான் அதற்கு எளிய விடை.

எனவே இந்துவாக ஒருவன் பிறக்கிறான் என்று சொல்லும் பொழுதே அண்ணல் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் சொன்னதைப்போல ஜாதியோடுதான் அவன் பிறக்கிறான். இந்து மதத்தினுடைய தத்தவப்படி ஜாதியோடுதான் அவன் வாழுகிறான்.

புதைக்கிறவரையில் ஜாதி தொடருகிறது

ஜாதியோடுதான் அவன் மறைகிறான். மறைந்த பிற்பாடும் சுடுகாட்டிலும் அந்த ஜாதிதான் அவனை வரவேற்கிறது - புதைக்கிறது - எரிக்கிறதே தவிர அவனுக்கு மனிதத் தன்மையை நிலைநாட்டக் கூடிய அந்த நிலையை உரிமையை வழங்காத ஒரு அமைப்பு பார்ப்பன மதமான இந்து மதம் என்பதாகும்.

அந்த மனு தர்மத்திலே மிக முக்கியமான ஒரு பகுதி என்ன வென்று சொன்னால் தருமம் கெட்டுப்போகும் பொழுது, தர்மம் அழியும்பொழுது, ஆயுதம் எடுத்துப் போராட வேண்டும்.

ஆயுதப் பேராட்டத்தை முதன் முதலில் விதைத்தவர்கள்

சாம, பேத, தான, தண்டம் என்று சொல்லுகின்றபொழுது தண்டம் எடுத்துப் போராட வேண்டும். எனவே ஆயுதப் போராட் டம் என்பதை இந்த நாட்டிலே முதல் முறையாக மக்கள் மத்தி யிலே விதைத்த ஒரு கருத்து இருக்கிறதென்றால் அது பார்ப்பன மதமான இந்து மதத்தினுடைய இதிகாசங்கள் - கீதை போன்றவைகள்தான்.

சொந்த அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் பார்க்காதே. நீ ஆயுதத்தை எடுத்து போரிடு. களத்தில் நீ போரிடாவிட்டால் என்ன ஆகும் என்று சொன்னால், அதனுடைய விளைவைப் புரிந்து கொள்ளவேண்டும்.

கீதையைப் படிக்காத பலபேருக்கு

கீதையைப் படிக்காத பலரும் பகவத் கீதையிலே கண்ணன் சொன்னதைப்போல என்று ஆரம்பிப்பார்கள். ஆனால், இது வரையிலே கீதையை நாம் படித்த அளவுக்கு நாம் ஆய்வு செய்த அளவுக்கு வேறு எவரும் ஆய்வு செய்ததில்லை (பலத்த கைதட்டல்).

கீதையின் மறுபக்கத்திற்கு இதுவரை மறுப்பு தரவில்லை

இன்னமும் அதற்கு அதிகாரப் பூர்வமான உரை கீதையின் மறுப்பக்கத்திற்கு இதுவரை வரவில்லை. அந்தக் கீதையிலே எல்லோரும் ரொம்ப சுலபமாகச் சொல்லுவது ஒரு பெரிய நிகழ்ச்சி என்னவென்று சொன்னால், கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே, என்று என்ன அற்புதமாகச் சொல்லப்பட்டி ருக்கிறது என்று சொல்லுவார்கள். அந்த இரண்டு வரிகளை மட்டும் எடுத்துவைத்துக் கொண்டு சொல்லுவார்கள்.

கீதையின் கருத்து தவறு ரஜினிகாந்த் சொன்னது வரவேற்கத்தக்கது

எந்தச் சந்தர்ப்பத்தில் அவர் எதற்காக சொல்லியிருக்கின்றார்? ஆனால், இப்பொழுது கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே என்பது தவறு என்று ரஜினிகாந்த் போன்றவர்களுக்குக்கூட புரியக் கூடிய அளவிற்கு நம்முடைய இயக்கம் வளர்ந்திருக்கிறது.

கடமையைச் செய்; பலனை எதிர் பார் என்று சொல்லவேண்டிய அளவிற்குக் கீதையின் கருத்து தவறு என்று சொல்லக்கூடிய அளவிற்கு ரஜினிகாந்த் போன்றவர்களுக்குக் கூட அந்த உணர்வு வந்திருக்கிறது (பலத்த கைதட்டல்).

பெரியார் படத்தை ரஜினிகாந்த் அவர்கள் ரொம்ப ஆழமாகப் பார்த்ததன் விளைவாகவும் இருக்கலாம். அல்லது சொந்தமாக சிந்திக்கக் கூடியதன் விளைவாகவும் இருக்கலாம். அதை நாம் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம் - அந்தத் துணிச்சலுக்காக, அந்தத் தெளிவிற்காக!

அர்ஜூனன் ஏன் போரிட மறுக்கிறான்? இப்படியெல்லாம் தெளிவு ஏற்பட்டால் நாட்டிற்கும் நல்லது, கலைத்துறைக்கும் நல்லது. ஆனால், கீதையின் மறுபக்கம் நூலிலே நீங்கள் பார்த்தீர்களேயானால், பலபேர் கீதையைப் படித்தவர் களுக்குத் தெரியாது. போர்க் களத்திலே அர்ஜூனன் ஏன் போரிட மறுக்கிறான்? கண்ணன் கீதா உபதேசம் செய்கிறான். இவை யெல்லாம் நடைமுறையில் நடந்ததா? பகுத்தறிவுக்கு ஒத்ததா?

அது வேறு ஆராய்ச்சி, அது அடுத்த பக்கம். ஆனால், சொல்லும்பொழுது என்ன சொல்லுகின்றார்கள்?

போர்க்களத்தில் அவர்கள் வெற்றி பெற்றால்

நீ போரிடாவிட்டால் அவர்கள் போர்க்களத்தில் வெற்றி பெற்றால் உன் குலம் நாசம் ஆகும். உன் குலம் நாசமானவுடனே வெறும் ஆண்கள் எல்லாம் போரிலே ஈடுபடுகின்ற காரணத்தால் அவர்கள் எல்லாம் இறந்துவிடுவார்கள்.

பெண்கள் மாத்திரம்தான் மிஞ்சுவார்கள். உன்னுடைய வீடுகளிலே இருக்கின்ற பெண்கள்தான் மிஞ்சுவார்கள். அப்படி பெண்கள் மிஞ்சுகின்ற நேரத்திலே பிறகு அவர்களோடு இனக் கலப்பு ஏற்படும்.

இனக் கலப்பு ஏற்படும்பொழுது தர்மம் ஒழிந்து போய்விடும். எனவேதான் நீ போரிடவேண்டும். வேறு எதற்காகவும் இல்லை. வர்ணாசிரம தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக கரும வினைப் பயன், தருமத்தைக் காப்பாற்றிட நீ போரிட வேண்டும் என்று தான் கண்ணன் சொன்னதாக அந்தக் கீதை சொல்லுகிறது.

கீதை கற்றுக் கொடுப்பது வன்முறையை

எனவே கீதையின் மிக முக்கியமான அடிநாதம் என்னவென்று சொன்னால் வன்முறைக்குப் பயப்படாதே என்பதுதான் மிக முக்கியம்.

அதேபோல மனுதர்மம் இவைகளிலும் தாராளமாக அதிலே வலியுறுத்தக் கூடிய கருத்து உள்ளது. தருமத்திற்கு ஆபத்து ஏற்படும் பொழுது தண்டம் எடுத்துப் பேராட வேண்டும். எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

நீ எந்த முறையை வேண்டுமானாலும் கையாளலாம். அதைப் பற்றிக் கவலைப்படாதே. முறைகேடாக நீ நடந்தாலும் பரவா யில்லை. உன்னுடைய நோக்கம் நிறைவேற வேண்டும். அதற்காக நீ எதை வேண்டுமானாலும் செய் என்று அறவழிப்பட்ட முறையோ நேர்மையான முறையோ, நியாயமான முறையோ, வன் முறையற்ற முறையோ எடுக்கவேண்டும் என்று அதில் சொல்ல வில்லை.

இதிகாசங்களில் - புராணங்களில் இருப்பது

இதை ஒட்டித்தான் பல இடங்களிலே இதிகாசங்கள், புராணங்கள் இவைகளிலெல்லாம் இருக்கிறது. இன்று இவைகளைப் பற்றி எல்லாம் ஆதாரப்பூர்வமாக வந்திருக்கின்ற செய்திகளை உங் களுக்குச் சுருக்கமாகச் சொல்லுகின்றேன். ஆழமாக எல்லோரும் புரிந்துகொண்டு, இங்கு வந்திருக்கின்ற ஒவ்வொருவரும் ரொம்ப விசயம் தெரிந்தவர்கள் வந்திருக்கின்றீர்கள். அருள்கூர்ந்து நீங்கள் ஒரு பத்துப்பேருக்குச் சொல்லுங்கள்.

இது குறுந்தகடாக வரும்பொழுது யார் யாருக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அவர்கள் மற்ற இடங்களில் இந்தக் கருத்துக்களை எல்லாம் பரப்புங்கள். ஏனென்றால் இந்தத் தகவல்கள் எல்லாம் மறைக்கப்படுகின்றன.

ஈழத்திலே மிருகங்களைவிடக் கேவலமாக

ஈழத்திலே வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். காடுகளிலே நம்முடைய இனத்தைச் சார்ந்தவர்கள், மிருகங்களைவிடக் கேவலமாக ஒதுக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களைக் கப்பாற்றுகின்றவர்களை தீவிரவாதிகள் என்று அழைக்க கூச்சப்படாதவர்கள் எல்லாம் இன்றைக்கு நம்முடைய நாட்டிலேயே இருக்கிறார்கள். நம்முடைய நாட்டின் எல்லைக் குள்ளேயே அதுவும் டெல்லித் தலைநகரத்திலே தீவிரவாதம் படமெடுத்து ஆடுகிறது.

ஆனால், அதைப் பார்த்து மென்மையாக பாம்புக்குப் பால் வார்ப்பதைப் போல கண்டும் காணாதவர்களாக, பாம்புக்கும் நோகக் கூடாது, பாம்படித்த கோலுக்கும் நோகக் கூடாது என்று சொல்லுவதைப்போன்ற ஒரு அணுகு முறையைக் கையாளுகி றார்கள் என்று சொன்னால், அதை இன்றைய தினம் தொடங்கி தொடர்ந்து நாம் அதைக் கண்டிக்க வேண்டும், வற்புறுத்த வேண்டும். இருவகை சிறுபான்மைச் சமுதாயங்கள் ஏனென்றால் இங்கே இருக்கின்ற சிறுபான்மைச் சமுதாயம், ஒரு ஜனநாயகத்திலே ஆதிக்கம் செலுத்தாத சிறுபான்மைச் சமுதாயம், சிறுபான்மை என்று சொல்லுவதிலேகூட இரண்டு வகை இருக்கிறது.

ஒன்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய சிறுபான்மையினர். இன்னொன்று ஆதிக்கம் செலுத்த வாய்ப்பில்லாத சிறுபான்மையினர். அதிலே பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடிய சிறுபான்மையினர். இசுலாமியர்களும், கிறித்தவர்களும், ஆதிக்கம் செலுத்த இயலாத வாழ்வுரிமைக்காகப் போராடக் கூடிய சிறுபான்மையின
ர். இங்கே ஒரிசாவிலே நடைபெற்ற சம்பவத்தை பற்றி எடுத்துச் சொன்னார்கள், வழக்கறிஞர் அருள்மொழி, அறிவுக்கரசு அவர்கள் சொன்னார்கள்.

ஒரிசாவில் ஆர்.எஸ்.எஸ். மாநாடு


ஒரிசாவிலே எப்படிப்பட்ட கொடுமை நடைபெற்றது? மத்திய அரசின் உள்துறை ஒரிசா அரசுக்குத் தகவல் கொடுக்கிறது. ஒரிசாவிலே ஆர்.எஸ்.எஸ். மாநாட்டை விசுவ இந்து பரிசத் மாநாட்டை நீங்கள் அனுமதிக்கக் கூடாது. அங்கே கொதிக்கின்ற சூழ்நிலை இருக்கிறது. பதட்டமான சூழ்நிலை இருக்கிறது என்று சொல்லுகின்றார்கள். சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த செய்தியை நான் சொல்லுகின்றேன்.

அதாவது ஒன்றாம் தேதியன்று காலையிலே வந்த இந்து பத்திரிகையிலே நான் சொல்லுகின்ற செய்தி விளக்கமாக இருக்கிறது.

மத்திய அரசின் தாக்கீதை மதிக்காமல்

ஒரிசாவிலே இருக்கிற மாநில அரசு பி.ஜே.பி. ஆதரவோடு நடந்துகொண்டிருக்கின்ற பட்நாயக் அரசு என்ன செய்கிறது? மத்திய அரசினுடைய தாக்கீதை கொஞ்சம்கூட மதிப்புக் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை - அனுமதி கொடுக்கிறார்கள்.

அதிலே வன்முறையைத் தூண்டக்கூடிய பேச்சுப் பயங்கரமாக நடந்துகொண்டிருக்கின்றது. மறுபடியும் உங்களுக்குத் தெரியும். கிறித்தவர்கள் எந்த அளவுக்கு அவர்கள் சங்கடப்படுத்தப் பட்டார்கள் என்று.

அவர்கள் அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். யார் யார் அகதிகள்? ஒரு பக்கத்திலே இலங்கையிலே சிறுபான்மையினராக இருக்கக் கூடிய தமிழர்கள் அகதிகளாக அவர்களது சொந்த ஊரிலே இருக்கின்றார்கள்.

அதேபோல இங்கேயும் அகதிகளாக இந்த நாட்டின் மண்ணுக்குரியவர்கள் இங்கே மண்ணிலே பிறந்தவர்கள் வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்திற்காக அவர்கள் இங்கே அகதிகளாக இருக்கின்றார்கள். எங்களைப் பொறுத்தவரையிலே நாங்கள் மதங்களை விரும்பாதவர்களாக இருக்கலாம்.

மதம் என்ற பெயராலே

ஆனால் அதே நேரத்திலே மதம் என்ற பெயராலே மனித நேயம் கொல்லப்படக் கூடாது என்பதிலும் எங்களுக்கு அக் கறை உண்டு (கைதட்டல்). எதுநம்மைப் பிரிக்கிறது என்பதை விட, மனிதநேயம் என்பது முக்கியம். அந்த மனித நேய அடிப் படையிலே பார்க்கின்றபொழுது எவ்வளவு கொடுமைகள் நடக் கின்றன?

விசுவ இந்து பரிசத் சாமியாரின் மடம்

விசுவ இந்து பரிசத் சாமியார் ஒரு மடம் நடத்துகிறார். பார்ப்பனர்கள் அங்கு மடம் நடத்துகின்றார்கள். பெயரை மாற்றி வைத்துக் கொள்கின்றார்கள். நம்மூர் மஞ்சக்குடி அய்யர் இருக்கிறார் அல்லவா? மஞ்சக்குடி என்பது குடவாசலுக்குப் பக்கத்திலே திருவாருக்குப் போகிற பகுதியிலே இருக்கின்ற ஒரு ஊர். அந்த ஊரைச் சார்ந்த ஒரு அய்யர்தான் நடராஜ அய்யரோ, குப்புசாமி அய்யரோ, யாரோ ஒரு அய்யர்.

காவியைப் போட்டுவிட்டால் சரசுவதி சுவாமியாக

அவர்தான் இப்பொழுது ஸ்ரீலஸ்ரீ தயானந்த சரசுவதி சுவாமிகள். எல்லோரும் திடீரென்று சரசுவதிக்கே பிறந்தவர்கள் ஆகிவிடுவார்கள் (கைதட்டல்).

இப்படி பெயரை மாற்றிவிட்டால் எல்லோரும் உடனே காலில் விழுவார்கள். காவியைப்போட வேண்டும் - அவ்வளவுதானே தவிர, உடனே சரசுவதி சுவாமிகள் என்று அழைக்கின்றார்கள். நம் முடைய நாட்டு அரசியல் தலைவர்கள் குடியரசுத் தலைவரிலிருந்து ஆரம்பித்து சாதாரண குப்பன் வரையிலே, அவர்களைத் தான் சொல்லுவார்கள்.

பாபநாசத்திலிருந்து விரட்டப்பட்ட பார்ப்பனர்

அதுபோல கும்பகோணத்திற்குப் பக்கத்திலே பாபநாசம் என்ற ஊரிலே ஒழுங்காகப் பள்ளிக்கூடத்திற்குப் போகாமல் அந்தப் பள்ளிக்கூடத்திலேயே பிள்ளைகள் மத்தியிலே விசமத்தை செய்து சில பொருள்களைத் திருடியவன், ஊர் மக்களால் விரட்டப்படு கின்றான். அந்த ஊரை விட்டே ஒடிப்போனவன், இப்பொழுது அவர் யார் தெரியுமா? ரவிசங்கர் மகாராஜ் அவர் வளத்தோடு இருக்கின்றாரா? என்பதை அவரைப் பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும்.

அவருக்காக ஸ்பெஷல் ரயில்

அவருக்காக ஸ்பெஷல் ரயில்விடப்படும். அவருக்காக மத்திய அமைச்சர்கள் போவார்கள். பெருந்தலைவர்கள் போய் அவருடைய காலடியிலே விழுவார்கள். அவருடைய குடும்பமே வைரத் தோடோடு அங்கே வந்து நின்று வாழும் கலையை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

நம்முடைய ஏமாளிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இப்படிப்பட்ட ஒரு சூழல் நிறைய உண்டு. சாமியார்கள் ஜாக்கிரதை

இதை எல்லாம் தெரிந்துதான் சாமியார்கள் ஜாக்கிரதை என்று நீண்ட நாட்களுக்கு முன்னாலே குரல் கொடுத்தோம். ஒரே ஒரு உதாரணம் சொன்னார்கள். காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது - எங்கே? ஒரிசாவிலே - காந்தமால் பகுதியிலே என்ப தைச் சொன்னார்கள்.

சில வருடங்களுக்கு முன்னாலே கிரகாம் பாதிரியாரை எப்படி ஒரிசாவிலே கொன்றார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்ததே. அதை இங்கே விரிவாகப் பேசவேண்டிய அவசியமில்லை.

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த பாதிரியார்

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த பாதிரியார் கிரகாம் இங்கே இருக்கிற மலைவாழ் பகுதியிலே மற்றவர்கள் செல்ல அஞ்சக் கூடிய பகுதியிலே தொழு நோயாளிகளுக்கு மருந்தோடு வந்து, தன்னுடைய பிள்ளைகளோடு வந்து சிகிச்சை கொடுத்தார்.

அவன் இன்னொரு நாட்டுக்காரன். ஆனால் நம்முடைய நாட்டிலே உள்ளவன் தேச பக்தி மட்டுமே பேசுகிறான். ஆனால், தேசத்தைத் தாண்டி வந்த அவன் மனித பக்தியோடு இங்கிருக் கின்ற மக்களுக்கு சிகிச்சை கொடுத்து வருகின்றான். ஆனால் என்ன நடக்கிறது? தொண்டு செய்ய வந்த ஆஸ்திரேலியப் பாதிரியார் இரவிலே தன்னுடைய பிள்ளைகளோடு உறங்குகின்றார்ர்.

உயிருடன் எரித்து விடுகின்றனர்


அவர் ஒரு வெளிநாட்டுக்காரர். கடும் குளிர். கிராமங்களுக்குச் சென்று அந்த பிள்ளைகளும் சேர்ந்து சேவை செய்வதற்காகவே தயாராகி தன்னுடைய தந்தையோடு வந்து உறங்குகின்றார்கள்.

ஆஸ்திரேலியப் பாதிரியாரையும் அவருடைய பிள்ளைகளையும் உயிரோடு எரித்து விடுகின்றனர். மதவெறிக் கும்பலைச் சார்ந்தவர்கள்.

விருத்தாசலத்தைச் சார்ந்த கன்னியாஸ்திரி

அந்த காலகட்டத்திலே நம்முடைய ஊர் விருத்தாசலத்திலேயிருந்து, கன்னியாஸ்திரியாக போன ஒரு பெண்ணைப் பற்றிய செய்தி வந்திருக்கிறது. அந்த அம்மையார் ஒரு பேருந்து நிறுத்தத் திலே நின்றுகொண்டிருக்கின்றார். அப்பொழுது ஒரு கார் வருகிறது.

அந்தக் காருக்குள் இரண்டு, மூன்று பெண்கள் அமர்ந்திருக்கின்றார்கள். ஓட்டுநர் இருக்கின்றார். அது ஒரு வாடகைக் கார். அந்தக் கார் வந்த பேருந்து நிறுத்தத்திலே நிற்கின்ற கன்னியாஸ்திரி அவர்களிடம் அருகில் வந்து நிற்கிறது.

மனிதாபிமானத்துடன் அழைப்பதுபோல்

50 மைலுக்கு அப்பால் அந்த கன்னியாஸ்திரி வேலைக்குப் போகவேண்டும். பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது இந்த கார் வந்து நிற்கிறது. அந்தக் காரில் இருந்தவர்கள் கேட்கிறார்கள் கன்னியாஸ்திரி அவர்களே, நீங்கள் எங்கே போகவேண்டும்?

ஏன் காத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? என்று கேட்கிறார்கள். இல்லை நான் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றேன். நான் போய்விடுவேன் என்று சொல்லுகின்றார். இல்லை, இல்லை உங்களை அங்கே கொண்டுபோய் விடுகின்றோம் - வாருங்கள் என்று ரொம்ப மனிதாபிமானத்தோடு அழைப்பதைப் போல அழைக்கின்றார்கள்.

காரில் பெண்கள் இருக்கிறார்கள். ஆகவே இந்த அம்மையார் கன்னியாஸ்திரி என்ன செய்கிறார். இவர் விருத்தாசலத்தைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் அங்கே கன்னியாஸ்திரியாகப் போயிருக்கின்றார். இவர் இன்னொரு இடத்திலே தொண்டு ஊழியம் செய்துகொண்டிருக்கின்றார்.

காரில் பெண் வேடமிட்ட மதவெறியர்கள்

அந்த அம்மையாரைக் காரில் ஏறச் சொல்லுகின்றார்கள். அந்த கன்னியாஸ்திரி காரிலே ஏறி உட்கார்ந்தவுடனே எங்கே அவர் போகவேண்டுமோ - அந்தப் பாதைக்கு அந்தக் கார் போகவில்லை. வேறு இடத்தை நோக்கிப் போகிறது.

உடனே அந்த அம்மையார் வேறு பக்கம் போகிறதே என்று கேட்கின்றார். அந்தக் காரில் பெண்கள்போல் வேடம் போட்டிருந்தார்களே, அவர்கள் அத்தனை பேரும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்.


------- தொடரும்


-----------------------------"விடுதலை" 29-11-2008

பெரியார், அம்பேத்கர், ராம் மனோலோகியா கருத்துக்களின் அடிப் படையிலேயே மண்டல் பரிந்துரை


எத்தகையவரை இழந்தோம்?யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்.

சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் இன்று மறைந்திருக்கலாம். (27.11.2008 பிற்பகல் 2.45 மணிக்கு டில்லியில் அப்பலோ மருத்துவமனையில் மரணமுற்றார்).

ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் நிலை நிறுத்திய செயல்பாடுகள் அவர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கச் செய்யும்.

அவர் எத்தகைய மனிதர்? அவரால் அளிக்கப்பட்ட பேட்டியை (சன் ஒளிபரப்பு 16,17.9.1995) ஒளிபரப்பியது. அதில் ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் அவரின் உயர்நிலையையும் தன்னடக்கத் தையும் தன்னிலை விளக்கத்தையும் பறையடித்துக் கொண்டேயிருக்கும்.

கேள்வி: இந்த தேசத்தைப்பற்றி மிகுந்த கவலையோடு பேசுகிறீர்கள். ஆழ்ந்த அறிவோடு பேசுகிறீர்கள். தொடர்ந்து சமூக சேவையில், பொதுத் தொண்டில் ஈடுபட ஆவல் என்று கூறு கிறீர்கள். ஆனால் இந்த நூற்றாண்டின் இறுதிவரையில் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறுகிறீர்கள். நீங்கள் என்னதான் செய்யப் போகிறீர்கள்? தந்தை பெரியாரைப் போல சமூக சீர்திருத்தவாதியாக மாறப் போகிறீர்களா? உங்களுடைய திட்டம் என்ன?

பதில்
: தந்தை பெரியார் ஓர் மாபெரும் மனிதர். தந்தை பெரியார் ஒரு மகத்தான வீரர். சமூகப் புரட்சியாளர். அவரோடு என்னை ஒப்பிடாதீர்கள். நான் ஒரு சாமான்யன். நாம் இல்லை என்றால் இந்த உலகம் இருக்காது என்கிற வெற்று மாயையில் யாரும் இருக்க வேண்டாம். எந்த ஒரு தனி மனிதனுக்காகவும் பூமியின் சுழற்சி நிற்கப் போவதில்லை. நாளையே ஒரு விபத்தில் என் உயிர் போகலாம். நான் இல்லை என்பதற்காக எது நிற்கப் போகிறது? அரசியலுக்கு என்னுடைய 38-ஆவது வயதில் எனது சகோதரர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவருக்கு துணையாகச் சென் றேன். விஞ்ஞானம் படிக்க வேண்டும்; கவிதை, ஓவியம் பயில வேண்டும். பூமிதான் இயக்கத்தில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பன போன்ற எண்ணங்கள்தான் சிறுவயதில் என்னை ஆட் கொண்டிருந்தன. நம் மனது எதை விரும்புகிறதோ அதை செய்வது பெரும் மகிழ்ச்சிக்குரியது. எனக்கு இப்போது 64 வயது ஆகிறது. நான் சிறு வயதில் ஆசைப்பட்டதை இப்போதே செய்ய நினைக்கிறேன். அரசியலி லிருந்து நான் ஓய்வு பெற முடியாது. தேர்தலில் போட்டியிடா விட்டாலும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க இயலாது. அரசியலுக்காக நான் ஒதுக்கும் நேரம் குறைவாக இருக்கும்; அவ்வளவுதான். மனது எதில் லயிக்கிறதோ அதைச் செய்து விடுவது இன்பம். சாவின் விளிம்பில் இதைச் செய்ய விரும்பினோம்; ஆனால் முடியவில்லை என்று வருந்துவதைவிட, வாழ்கின்ற நாளில் நாமும் எண்ணியதைச் செய்து முடித்திடல் வேண்டும். இப்போது ஓவியம் தீட்டுவது, கவிதை எழுதுவது போன்றவற்றிற்குக் கூடுதல் நேரம் அளித்து செயல் படுகின்றேன். எனது வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிகளைப் பார்த்து விட்டேன், புதிதாக என்ன வேண்டும்?

என்மீது அன்பும், பாசமும் கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு எனது நன்றி; வாழ்த்துகள் என்றார் வி.பி.சிங்.

இவர் பிரதமராக இருந்த காலம் ஓராண்டுகூட அல்ல; ஆனாலும் அய்யாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட அடிமைச் சங்கிலி ஒன்றுக்குச் சம்மட்டி அடி கொடுத்தவர் அவர்;அதற்காக அவர் கொடுத்த விலை

பிரதமர் பதவியை இழந்ததாகும்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மிக அழகாகவே சொன்னார்! அது மண்டலுக்காகக் கொடுக் கப்பட்ட விலை என்றார். முன்பின் அறியாத அந்த நிலையிலேயே திராவிடர் கழகம் அதன் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் மிகச் சரியாக அடையாளம் கண்டு கொள்கைப் பார்வையில் அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்.

இந்த மாமனிதர் மண்ணுக்குள் போய் விட்டது என்று மகிழ்ச்சி வெள்ளத்திலே திளைத்திருந்த கூட்டத்தின் ஆசையை மண் மூடப் போகச் செய்வார் என்ற நம்பிக்கை இருந்ததுதான் அதற்குக் காரணம்.

மாண்புமிகு பிரதமர் விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) அவர்கள் நாடாளுமன்றத்தின் வரலாற்றில் என்றும் வீறு கொண்டு நிற்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் (7.8.1990)

மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு அளிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு!

இந்த அறிவிப்புக்கு இரு நாள்களுக்குமுன் (5.8.1990) ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் களின் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு ஒரு தந்தி அனுப்பினார். மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல் செய்யப்படுவதன் அவசியத்தை விளக்கும் தந்தி அது.

பெரியார் பெயரை உச்சரித்த பிரதமர்

பெரியார், அம்பேத்கர் ராம் மனோலோகியா ஆகியோர் வற்புறுத்திய கருத்துக்களின் அடிப் படையில்தான் மண்டல் பரிந்துரை அமலாக்கப் பட்டிருக்கிறது என்றார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் வி.பி. சிங் (9.8.1990) நன்றி உணர்ச்சியோடு மட்டுமல்ல - வரலாற்றுக் காரணத்தோடும் இப்பெரு மக்களின் பெயரை உச்சரித்து நாடாளுமன்றத்தில் பதிவும் செய்தார்.

சென்னையில் பிரதமர்

பிரதமர் பொறுப்பேற்ற மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் 3.2.1990 அன்று மாலை சென்னை வந்தார்.

விமான நிலையத்திருந்து திறந்த ஜீப்பால் - முதல் அமைச்சர் கலைஞருடன், வழி நெடுக அளித்த மக்களின் வரவேற்பை ஏற்று சென்னை பெரியார் திடலுக்கு வந்தார். ஜனதா தளம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அது.

பெரியார்திடலில் பொன்னாடை போர்த்தி பிரதமரை வரவேற்றார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி. மண்டல் குழுப் பரிந்துரைகளில் இடம் பெற்ற முக்கிய பரிந்துரைகள் அடங்கிய மனு ஒன்றினை பிரதமரிடம் அளித்தார் கழகப் பொதுச் செயலாளர் மேடையிலேயே அதன் முக்கிய பகுதிகளைப் படித்த பிரதமர் தன் உரையில் மண்டல் குழுப் பரிந்துரைகள் அமலாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

சொன்னபடியே அமலாக்கும் அறிவிப்பினையும்

நாடாளுமன்றத்தில் வெளியிட்டார் (7.8.1990). பிரதமர் வி.பி. சிங் அவர்களின் இந்த அறிவிப்பு - இந்துத்துவா வாதிகளை நிலை குலையச் செய்துவிட்டது. நாம் வெளியி லிருந்து ஆதரவு கொடுப்பதன் காரணமாகவே ஆட்சியில் இருப்பவர்கள், நம் ஆதிக்கத்துக்கே உலை வைத்து விட்டார்களே - மண்ணுக்குள் போன மண்டலை வெளியில் கொண்டு வந்து உயிர்ப்பித்து விட்டாரே என்கிற ஆத்திரம் அவர்களை புரண்டுப் புரண்டு படுக்கச் செய்தது.

ஆட்சியை விட்டு கீழே தள்ளி விட வேண்டியதுதான்; ஆனாலும் ஒரு கஷ்டம் - மக்கள் தொகையில் 52 சதவீதம் உள்ள பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்தது காரணமாகவே ஆட்சியைக் கவிழ்த்தது விட்டனர் என்ற அவப் பெயர் வந்து சேருமே, தேர்தலில் பெரும்பான்மையினரான அம்மக்கள் தக்க வகையில் பாடம் கற்பித்து விடுவார்களே என்ற அச்சமும் அவர்களைக் குடைந்தெடுத்தது!

என்ன செய்யலாம்? யோசித்தார்கள், ஆம் அவர்களுக்கு ஒன்று பிடிபட்டது. அதுதான் அயோத்தியில் ராமன் கோயி லைக் கட்ட வேண்டும் என்ப தற்காக அத்வானி தலைமையிலே ரத யாத்திரை என்று அறிவித்தனர் - அவ்வாறும் செய்தனர் - செல்லும் வழிகளில் எல்லாம் மதக் கலவரம் என்ற தீயை மூட்டவும் செய்தனர்.

ரத யாத்திரையைத் தடுத்தார் உ.பி முதல்அமைச்சர் முலாயம் சிங் - அத்வானியையும் கைது செய்தனர் என்று காரணம் காட்டி - ஆடு ஓநாய்க் கதையாக - வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவினை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர்.

இவர்களின் சூழ்ச்சியினை அறியாதவரா அந்த மண்டல் நாயகர்? அதனை அவர் அம்பலப் படுத்தி விட்டார். 7.11.1990 அன்று இரவு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்குகள் கோரி பிரதமர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் ஆற்றிய உரை காலத்தை வென்று நிற்கக் கூடியதாகும்.

மண்டல் பரிந்துரையை அமல்படுத்த முயன்றதுதான் எல்லாவற்றுக்குமே அடிப்படைக் காரணம். அதை நேரடியாக எதிர்க்க முடியாத சக்திகள் வேறு காரணங்களைக் காட்டி திரை மறைவிலிருந்து ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு செயல்பட்டனர் என்று அவையிலேயே கூறினார் பிரதமர் வி.பி. சிங்.

நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 142 வாக்குகளும் எதிராக 346 வாக்குகளும் கிடைத்தன.

எதிர்த்து வாக்களித்தவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

காங்கிரஸ்,

பாரதிய ஜனதா

அதிருப்தி ஜனதா தள உறுப் பினர்கள்

அஇஅதிமுக

அகாலிதளம்(மான்) (நடுநிலை வகித்தது)

பகுஜன் சமாஜ்கட்சி (நடு நிலை வகித்தது)

திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று இன்றைக்குக்கூட சொல்லிக் கொண்டிருக்கும் அஇஅதிமுக சமூகநீதியை நிலை நாட்டிய ஒரு ஆட்சியை மதவாத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு கவிழ்த்ததை தமிழர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கோரும் அத்தீர் மானத்தில் பேசிய பிரதமர் வி.பி. சிங் அவர்கள் பா.ஜ.க.வை நோக்கி மட்டுமல்ல - நாட்டை நோக்கி வைத்தது நறுக்கான கேள்விகள் நான்கு.

1) ஒரு சமூகத்தின் மத நம்பிக்கை அரசியல் சட்டத்துக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டுமா?

2) மதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மதப் பிரிவினரும் அணி திரளும் முயற்சி இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டுமா?

3) மதத்தையும், அரசியலையும் ஒன்றாக இணைப்பதற்கு நாம் வழி திறந்திட வேண்டுமா?

4) இந்த நாட்டில் ஒருமைப்பாடு உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை காப்பாற்ற வேண்டாமா?

இந்த நான்கு கேள்விகளும் அன்று மட்டுமல்ல - இன்றைக்கும் விடை காணப்பட வேண்டியவை அல்லவா?

எந்த பா.ஜ.க.வை நோக்கி 1990 நவம்பர் 7-இல் நாடாளுமன்றத் தில் வி.பி. சிங் வினா எழுப்பினாரோ - அதே பா.ஜ.க. அந்தக் கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் மூடு திரை போட்டு வாக்காளர்களைச் சந்திக்கவும் இருக்கிறது.

மாண்புமிகு வி.பி. சிங்கின் உடல் இன்றைக்கு எரிக்கப்படு கிறது. ஆனால் அவர் எழுப்பிய வினா உயிருடன் ஓங்கி நிற்கிறது; மதவாதச் சக்திகளிடம் எச்சரிக்கையாக இருங்கள் எனும் அபாய சிகப்பு விளக்கு அந்த நான்கு வினாக்கள் என்ற தம்பத்தில் ஒளியை உமிழ்ந்து கொண்டு தானிருக்கின்றன.

அறிவைச் சொன்னவர்களுக்கு மரணம் என்ற ஒன்று கிடையாதே!

பதவி விலகும்போதுகூட...

பதவி விலகும்போதுகூட அவர் காட்டிய பண்பாடு அரசியல்வாதிகள் கற்க வேண்டிய பாடமாகும்.

மரியாதையோடு ஆட்சியை விட்டு நாங்கள் வெளியேறுகிறோம். அதற்காகப் பெருமைப்படுகிறோம். அரசியல் நாள்காட்டிகளில் கடைசி தேதி எதுவும் கிடையாது என்று சொன்னரே!

அடடே, எத்தகைய மாமனிதர் அவர். அவர் விட்டுச் சென்ற எச்சம் இது.

தன்னை முதுகில் குத்தி அவரைத் தொடர்ந்து பிரதமர் நாற்காலியைப் பிடித்த சந்திரசேகர் பதவி ஏற்ற விழாவில்கூட, தன் துணைவியாருடன் கலந்து கொண்ட கண்ணிய மனிதர் வி.பி.சிங்!

இதுவும் நம் அரசியல்வாதிகளுக்கு அவர் விட்டுச் சென்ற மாபெரும் கருவூலமே!

இலட்சியத்துக்காக பதவியைப் பறிகொடுத்த அந்த மனிதர் இப்பொழுது மாமனிதராக காட்சியளிக்கிறார். அவரை புதுடில்லியில் வீட்டில் சந்தித்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து புகழ் மாலையைச் சூட்டினாரே - தமிழ்நாட்டுக்கு வர அழைப்பும் கொடுத்தாரே (12.11.1990) பதவியைத் தூக்கி எறிந்த 4-ஆம் நாள்)

தமிழ்நாட்டில் மறு மாதமே (டிசம்பரில்) முதல் அமைச்சர் கலைஞர் அவர்களுடன் இணைந்து ஒரு சூறாவளிச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அந்தக் கூட்டங்களில் தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும், திராவிட இயக்கத்தைப் பற்றியும் அவர் உதிர்த்த அனைத்தும் மணி முத்துகள் ஆகும்.

கோடானு கோடி சூத்திரர்களில் நானும் ஒருவன் என்று விருது நகரிலே வீர முழக்கமிட்டார் ("விடுதலை" 12.12.1990)

சமூக நீதியை நிலை நாட்டுவதற்காக ஆயிரம் நாற்காலிகளை இழக்கத் தயார் என்று விழுப் புரத்திலே வீறு கொண்டெழுந்து பேசினார் ("விடுதலை" 9.12.1990)

வகுப்புரிமையைக் காத்திட நூறு அரசுகளையும் தியாகம் செய்வோம் என்று நெல்லையிலே நெற்றியடி கொடுத்தார் ("விடுதலை" 11.12.1990)

நாம் எப்படிப்பட்ட மாணிக்கக் குன்றை -கொள்கைச் செங்கோலை - அரசியல் ஞானியை - இழந்து நிற்கிறோம் என்பதை இப்பொழுது நினைத்துப் பாருங்கள் அதன் கனபரிமாணம் புரியும்.


------------------கவிஞர் கலி. பூங்குன்றன் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் - "விடுத்லை" ஞாயிறுமலர் 29-11-2008

தமிழா! உனக்கு என்ன மீதி!

தமிழனுடைய நாடு படையெடுப்பால் இழக்கப்பட்டது!

தமிழனுடைய நூல்கள் கடல் நீரால் அழிக்கப்பட்டது!

தமிழனுடைய கல்வி பார்ப்பனரால் ஒழிக்கப்பட்டது!

தமிழனுடைய அறிவு புராணங்களால் மழுங்கப்பட்டது!

தமிழனுடைய ஒற்றுமை ஜாதியால் பிரிக்கப்பட்டது!

தமிழனுடைய பொருள் புரோகிதத்தால் பிடுங்கப்பட்டது!

தமிழனுடைய கட்சி உபாயத்தால் ஒடுக்கப்பட்டது!

தமிழடைய பதவி வஞ்சனையால் கவரப்பட்டது!

தமிழனுடைய வீரம் உபதேசத்தால் அடக்கப்பட்டது!

தமிழா! உனக்கு என்ன மீதி?

------------------ "குடிஅரசு" - 19-12-1937

மூட நம்பிக்கைகளை முறியடித்த கலைவாணர்


கலைவாணர்

இன்று - நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் (1908).

மக்கள் மத்தியில் நடமாடும் நச்சரவமான மூட நம்பிக்கைகளைக் களையும் ஒரு ஊடகமாகக் கலையை பயன்படுத்திய பகுத்தறிவாளர் அவர். அதனால் தான் கலைவாணர் - ஒரு சூழ்ச் சிக்குப் பலியாகி சிறைப்பட்ட போது, கலைவாணரே உமக்கா இந்த நிலை? என்று கண்ணீர் அறிக்கையை வெளியிட்டார் தந்தை பெரியார்.

சிறையிலிருந்து விடுதலையாகி - தந்தை பெரியாரை கலைவாணர் சந்திக்கச் சென்ற தருணத்தில், தந்தை பெரியார் தம் கண்களில் நீர்மல்க என் கண்ணே, ஒன்றும் கவலைப் படாதே! உனக்கு ஒரு குறையுமில்லை என்று கூறினார் என்றால், கலைவாணரின் மதிப்பு - எவரஸ்டு உயரத்தையும் விஞ்சிட வில்லையா?

திரைப்படத்தில் பகுத்தறிவுக் கருத்துகளையும், இயக்க வளர்ச்சிக் கண்ணோட்டத்திலும் அவர் புகுத்திய காட்சிகளும், பாடல்களும் (பொருத்தமாக உடுமலை நாராயணகவியும் அவருக்குக் கிடைத்தார்) தனித் தன்மையானவை.

தீனா - மூனா - கானா - எங்கள் தீனா - மூனா - கானா அறிவினைப் பெருக்கிடும். உற வினை வளர்த்திடும் திருக்குறள் முன்னணிக் கழகம் (தீனா...) பகுத்தறிவோடு நாட்டினர் வாழ திருக்குறள் தந்தவர் பெரியார்.

வள்ளுவப் பெரியார்! தங்கைகளுக்கு ஒரு தமக்கையைப்போலே,

தம்பியோருக்கொரு அண்ணாவைப் போலே

சரியும், தவறும் இதுவெனக் காட்டும்

தமிழன் பெருமைகளை நிலைநாட்டும்

தீனா - மூனா - கானா

இந்தப் பாடலின் மூலம் தந்தைபெரியார், அறிஞர் அண்ணா, தி.மு.க., பகுத்தறிவு என்பனவற்றை எவ்வளவு இலாவகமாகப் பயன்படுத்திப் பாடியிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

கலை என்பது களையாகிவிட்டதோ என்று கவலைப்படும் இந்தக் காலகட்டத்தில், கலை வாணர் என்.எஸ்.கே. நூற் றாண்டு விழா வந்திருக்கிறது.

கலைவாணரைப் போற்றாத கலைஞர்கள் கிடையாது.

உண்மையிலேயே அவரை மதிப்பது என்பது கலையை மக்களின் வளர்ச்சிக்குப் பயன் படுத்துவதே!

சிந்திப்பார்களாக!

---------------- மயிலாடன் அவ்ர்கள் 29-11-2008 "விடுதலை" யில் எழுதியது.

போர் நிறுத்தமே தீர்வு
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பெரிதும் தமிழர் கள் வாழும் பகுதிகள். கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர்களும் கணிசமாக உண்டு. இந்நிலையில், தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்கல் கொள்கையை சிங்கள அரசுகள் கட்சிகள் மாறினாலும் கூட, இதே உணர்வுக்கு அவர்கள் தொடர்ந்து ஆளாகியதால், தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைப் பெரிதும் திட்டமிட்டே அமைதியாக செய்வதில் குறியாய் செயல் பட்டே வந்தன.

இரண்டாவதாக தமிழர்களில் விபீடணர்களை விலைக்கு வாங்கி, அவர்களை ஆழ்வார்களாக்கி பதவியால் மயங்கச் செய்து தன் வயப்படுத்திக் கொண்டு, எந்த அமைப்பினர் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் போராடுகிறார்களோ அவர்களையே, இன எதிரிகள் என்ற ஒரு மாய்மாலப் பிரச்சாரத்தினை செய்ய வைக்கின்றன. இராணுவத்திற்கு சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு 7 விழுக்காடு கூடுதலாக நிதி ஒதுக்கியதற்கு விளக்கம் கூறிய (இலங்கை நாடாளுமன்றத்தில்) சிங்கள அதிபர் ராஜபக்சே விடு தலைப்புலிகளுக்கு எதிராக ஆயுதங்கள் வாங்கி இராணுவத் தைப் பலப்படுத்தியும், அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரத்திற் கெனவும் கூடுதல் நிதி என்று கூறியதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று உண்டு. கூலிப்படைகளை தன் நாட்டிலும், வெளிநாட்டிலும் உருவாக்கும் பணியில் மும்முரமாக இலங்கையின் சிங்கள ஆதிக்க அரசு ஈடுபட்டுள்ளது என்பது புரிகிறது!

இலங்கை அப்பாவித் தமிழ் மக்கள் (சிவிலியன்கள்) தங்கள் ஊர்களைவிட்டு உயிரைப் பாதுகாக்க, உறக்கமின்றி, 2 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் பிள்ளை குட்டிகளுடன் காடுகளில், பட்டினியோடு வதியும் நிலை - குண்டுமழைக்கு அஞ்சி, பதுங்கு குழிகளும் பயன்படாது என்று காடுகளுக்குச் சென்று பாம்புக் கும், தேளுக்கும் இடையில் பரிதாபமான வாழ்க்கை வாழும் நிலையை எண்ணினால் இதயம் வெடித்துவிடும் நிலை உள்ளது!

இதைத் தடுத்து நிறுத்திட, போர் நிறுத்தம் ஒன்றுதான் வழி; நிரந்தர அரசியல் தீர்வு காணவேண்டும். அதனை அடைய முறையான நடுவர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்துவது தான் சரி என்பதை கொள்கை அளவில் ஒப்புக்கொண்டு அதனை அடிக்கடி கூறிடும் நமது மத்திய அரசு குறிப்பாக பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் போன்றவர்கள் தமிழ்நாட்டில் கட்சி வேறுபாடின்றி ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான உணர்ச்சி வெள்ளத்தின் வேகத்தைப் புரிந்துகொண்டு, பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவு, மருந்துகளைக் கொண்டு செல்ல தனிக் கப்பல்கள், சர்வதேச செஞ்சிலுவை அமைப்புகள், அய்.நா. பொது அமைப்புகள்மூலம் அளிக்கும் ஏற்பாடு, அதனை ஒழுங்குபடுத்திட தமிழக முதல்வர் கலைஞர் அவர்களது அரசு செய்யும் ஏற்பாடுகள் எல்லாம் நமது நன்றிக்குரியன; ஈழத் தமிழர் நிவாரண நிதி சில நாள்களிலேயே 20 கோடி ரூபாய்களைத் தாண்டிவிட்டது என்பது தமிழ் மக்களின் ஆதரவு எவ்வளவு என்பதை சுட்டிக்காட்டுவ தாகும். இவை எல்லாம் முதலுதவி போன்றதே தவிர, முற்றானதாக அமைய முடியாது என்பதால்தான், போர் நிறுத்தம் தேவை என் பதை தமிழ்நாடு அரசு, தமிழக முதல்வர் கலைஞர் கூட்டிய கூட் டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முதன்மைப் படுத்தியது.

இருதரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்களது அறி வுரையை ஏற்று, விடுதலைப்புலிகள் தரப்பில், அதன் அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு. நடேசன்மூலம் அறிவித்துவிட்டனர். இதை வரவேற்ற முதலமைச்சர் அவர்கள் 10.11.2008 அன்று விடுத்த ஓர் அறிக்கையில் தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 14.10.2008 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் சுட்டிக்காட்டி,

அந்தத் தீர்மானம் படிப்படியாக நடைமுறைக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நமது பிரதமரின் கருத்தும், வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்தும் அமைந்துள்ளன. இனி அந்தக் கருத்தைச் செயலாக்கத்திற்குக் கொண்டுவர வேண்டியது இலங்கை அரசுக்குரிய தவிர்க்க முடியாத பொறுப்பும், கடமையுமாகும். இதனை இந்திய அரசு இலங்கை அரசுக்கு உணர்த்தி செயல்படச் செய்வது அவசர - அவசியத் தேவையாகும் என்று வற்புறுத்தியுள்ளார்கள்.

இந்த அறிக்கை வெளியாகுமுன்பே இலங்கை அரசின் சார் பாக அதன் இராணுவப் பேச்சாளரான சிங்கள அதிகாரி போர் நிறுத்தம் செய்யமாட்டோம், விடுதலைப் புலிகள் சரணடைந்து ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்றெல்லாம் கூறிய தோடு, விடுதலைப் புலிகளின் சார்பில் விடுக்கப்பட்ட நல் லெண்ண சமிக்ஞையைக் கொச்சைப்படுத்தும் வகையில் - (இங்குள்ள அவர்களின் ஊதுகுழல்களும் வழக்கமாகப் பேசுவது, எழுதுவதுதான் அது) அவர்கள் பலவீனமாகி, தோல்வியைச் சந் தித்துள்ளனர் என்று கூறியுள்ளது, விடுதலைப்புலிகளை ஒழிப்பது என்ற சாக்கில், தமிழினப் படுகொலையைத் (Genocide) தொடர்ந்து நடத்திடும் வெறியில் உள்ளனர் என்பதைத்தானே இது காட்டுகிறது?

மத்திய அரசுக்கும், நமது பிரதமருக்கும் உள்ள கடமை, இந்த காலகட்டத்தில், மிகமிக முக்கியமானது! தமிழ்நாட்டில் உள்ள அத்துணைக் கட்சிகளும் - காங்கிரஸ் உள்பட - போர் நிறுத்தம் தேவை; உடனடியாக அது ஒன்றுதான் அப்பாவித் தமிழ் மக்களை அழிவி லிருந்தும், பசி பட்டினி வாழ்க்கையிலிருந்தும் மீட்டுக் காப்பாற்ற உதவும்; நிரந்தர அரசியல் தீர்வு காண வற்புறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். 6 கோடி தமிழர்களின் ஒருமித்த உணர்வின் வெளிப்பாடுதான் முதல்வர் கலைஞர் அவர்கள் 10.11.2008 அன்று மத்திய அரசுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்.

இதனை அலட்சியப்படுத்தினால், அரசியல் ரீதியாகவும் காங்கிரசுக்கு - ஆளும் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவை தமிழ்நாட்டில் உருவாக்கும் என்ற கண்ணோட்டத்துடனும் மத்திய அரசும், பிரதமரும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் மரியாதைக்குரிய தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களும் யோசிக்கக் கடமைப்பட்டுள்ளனர்! தீவிரவாதிகளை ஒழிக்கும் போர் என்று கூறி, இன்னும் இரண்டொரு நாளில் முடியப் போகிறது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை - உண்மைக்கு மாறான - பிரச்சாரத்தினை இலங்கையின் சிங்கள இராணுவமும், அரசும் கூறி வருவதை, அங்கிருந்துவரும் செய்திகள் உறுதிப்படுத் தாததோடு, விடுதலைப்புலிகள் வலுவிழக்கவில்லை; கிளிநொச்சியைக் கைப்பற்றும் திட்டத்தையே சிங்கள இராணுவம் தள்ளிப் போட்டு, வேறு துறைக்குச் சென்றுள்ளது என்று (ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ், 10.11.2008) கொழும்புச் செய்தியாளர் எழுதியுள்ளார்.

Apparently, there are two reasons for putting the capture of Killinochi in back burner. One is that the area of Killinochi is full of people, locals as well as refugees from West Wavuni. Attacking this region with area weapons like artillery and the Air Force, is bound to cause civilisan casualties, inflame passions in Tamil Nadu and force New Delhi to intervene.

The other reason is that Killinochi and its environs are heavily defended by the LTTE, with mines, physical obstacles and good fighting cadre. The LTTE has built three earthbunds between Iranamed and Killinochi to stall troops.

இதன் தமிழாக்கம் வருமாறு:-

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான போரைக் கைவிட வேண்டும் என்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று, உள்ளூரில் வாழும் பொது மக்கள் மற்றும் மேற்கு வவுனியாவில் இருந்து வந்த ஏதிலிகள் கிளிநொச்சிப் பகுதியில் நிறைந்து இருப்பதால், இப் பகுதியை பீரங்கிகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்குவதும், விமானப் படைத் தாக்குதல் மேற்கொள்வதும் ஏராளமான அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்பு ஏற்படக் காரணமாக அமைந்தே தீரும் என்பதால், தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சியை அது தூண்டிவிட்டு, இந்தப் பிரச்சினையில் இந்தியாவைத் தலையிடச் செய்ய அது நிர்பந்திக்கும்.

மற்றொரு காரணம், கிளிநொச்சியும் அதைச் சுற்றியுள்ள பகுதியும், தமிழீழ விடுதலைப்புலிகளால், கண்ணி வெடிகள் மற்றும் நன்கு போரிடும் வீரர்கள்மூலம் ராணுவ முன்னேறத்துக் குத் தடை ஏற்படுத்தும் வகை யில் பலமாகப் பாதுகாக்கப்பட்டிருப் பது ஆகும். இரணா மடுவுக்கும் கிளிநொச்சிக்கும் இடையே விடு தலைப் புலிகள் மூன்று தரைத் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. இந்தப் போர் ஏதோ இரண்டொரு நாள்களில் முடியாது என்பது. அப்படியானால், அப்பாவி மக்களின் கதி என்ன? போர் நடை பெற்றுக் கொண்டுள்ள நிலையில், உணவும் மருந்தும் ஒழுங் காகப் போய்ச் சேருமா? சேர்ந்தாலும் ஒரு பக்கம் குண்டுமழை; சாவுகள்; மறுபுறம். முதலுதவி என்பது முரண்பாடாக அமைந்து விடாதா?

அத்தோடு கொழும்பு செய்தித்தாள்களில் வந்துள்ள மற்றொரு செய்தியும் சிங்கள இராணுவத்தின் பலம், வீரம் கேள்விக் குரியதாகி வரும் நிலையையும் காட்டுகிறது!

வன்னிப் போர் முனையிலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் ஓட்டம்; சிங்கள இராணுவத்திற்குத் திடீர் நெருக்கடி என்ற செய்தி (கொழும்பு ஏடுகளில் 5.11.2008) வந்துள்ளது. ராணுவத்திலிருந்து ஏராளமான ராணுவ வீரர்கள் ஓட்டம் பிடித்து வருவதாக கொழும்பு பத்திரிகைகள் கூறுகின்றன.

ஆயிரக்கணக்கான வீரர்கள் ஓட்டம் பிடித்துள்ளார்கள். இவர்களை இலங்கை அரசு மீண்டும் வலுக்கட்டாயமாக சேர்த்துள்ளது. அப்படி இருந்தும் பலர் ஓடிய வண்ணமே உள்ளனர்; போர் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 25,000 (இருபத்தைந் தாயிரம்) சிங்கள வீரர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட சிங்கள வீரர்கள் ஓட்டம் பிடித்துள்ளார்கள். இப்படி தப்பி ஓடுவதால், இராணுவத்திற்கு சிக்கல் ஏற்பட் டுள்ளது. கைப்பற்றிய பகுதிகளை நிலை நிறுத்திக் கொள்வதில், கஷ்டம் நிலவுகிறது. ஆகவே, அவர்கள் தப்பி ஓடாதபடி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போர் நடைபெறும் பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் சோதனை இடப்படுகின்றன. ராணுவ வீரர் போன்ற தோற்றத்தில் யாராவது இருந்தால், அவர்களைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

இதற்குப் பொருள் என்ன?

எனவே, உடனடி போர் நிறுத்தத்தை மத்திய அரசும், பிரதமரும், முதல்வரின் வேண்டுகோள் அறிக்கைக்கு ஏற்ப, அவசர அவசியமாகப் பார்த்து, ஒரு நிம்மதிப் பெருமூச்சினை அம்மக்கள் விடும் வகையில் செய்யவேண்டும் என்று மத்திய அரசின், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைமையை மிகுந்த அன்புடன் வேண்டுகிறோம். லட்சோபலட்சம் தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை இது!

------------------- கி.வீரமணி அவர்கள் நவப்பர் 16-31 2008 "உண்மை" இதழலி எழுதிய தலையங்கம்.

மதத்தின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்!


மக்கள் துயரம் நீங்க வழி

இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் மக்கள் சமூக அமைப்பின் அஸ்திவாரமே சரியில்லாமல் இருக்கிறது. இந்த அஸ்திவாரத்தின்மீது கட்டக்கூடிய எந்த அமைப்பும் மக்கள் சமூகத்துக்கு நன்மையளிக்கக்கூடியது அல்ல.

ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படி சம அந்தஸ்தும், சம உரிமையும் உண்டோ அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்கவேண்டியது அவசியமாகும். அப்போதுதான், மக்கள் சுகமாக வாழமுடியும். ஏதோ தான் பிறந்த வேளையின் பலன் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியதுதான், மற்றொருவன் சுகத்தை அனுபவிக்கப் பாத்தியதை உடையவன்தான் என்னும் சோம்பேறி எண்ணமே மக்களை அழித்து வருவதற்கு முக்கிய கருவியாய் இருக்கிறது. இந்த எண்ணம் மாறுபட வேண்டியது அவசியமாகும். இதற்கான எவ்வளவு தியாகம் செய்தாலும் அது வீணகாது.

மக்களின் மனோபாவமும் வாழ்க்கை நடத்தும் முறையும் மாறினால் ஒழிய வேறொரு முறையாலும் நன்மையுண்டாகாது என்பது திண்ணம். தற்போதிருக்கும் நிலைமையில் சுயராஜ்யம் வந்தால் குருட்டு நம்பிக்கையும் வைதிகமும்தான் வலுக்கும். தற்போது சுயராஜ்யம் அனுபவிக்கும் தேசங்களை எடுத்துக்கொள்ளுங்கள்; ஏழைகள் நிலைமை அங்கு எப்படியிருக்கிறது ? அமெரிக்கா ஜனநாயக ஆட்சியுடையதாகத்தான் இருக்கிறது. அங்கே இலட்சக்கணக்கானவர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றார்கள். அமெரிக்கா உலகின் செல்வத்திற்கே இருப்பிடமாய் இருந்தும் -அங்கே ஏழைகள் நிற்க நிழலின்றி, உறங்க இடமின்றித் தவிக்கிறார்கள்.

ஜெர்மணி நிலைமை என்ன? சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை உடையதென்று சொல்லும் இங்கிலாந்து சுயராஜ்ய தேசமேயாகும். ஆனால், அங்கு ஏழைகள் படும் துயரம் கொஞ்சநஞ்சமல்ல. சுயராஜ்யமுள்ள ஒவ்வொரு தேசமும் இப்படித்தான் இருக்கிறது. சுயராஜ்யமோ, அந்நிய ராஜ்யமோ, குடியரசோ, முடியரேசோ எந்த விதமான முறையாலும் மக்கள் சுகம் பெறமுடியாத நிலைமையில் உலகம் இன்று இருந்து வருகின்றது. ஆகையால், ஏழைகள் துயரத்தைப் போக்க இந்திய சுயராஜ்யம் இப்போது சிலரால் கருதப்படும் முறையில் யாதொரு நன்மையும் கொடுக்கப் போவதில்லை என்பது நிச்சயம். சமதர்மத்தையும் பொதுவுடைமையையும் அஸ்திவாரமாகக் கொண்ட அமைப்பு ஒன்றே மக்கள் சுகவாழ்க்கைக்குரிய வழியாகும். இதற்காக ஏன் நாம் தியாகம் செய்யத் தயாராய் இருக்கக்-கூடாதென்று கேட்கிறேன்.

உலகத்தில் பல வகைகளில் ஜீவராசிகள் மரணமடைகின்றன. பல நோய்களால் இறக்கிறவர்களின் தொகை சாதாரணமல்ல. மதத்தின் பெயரால் யாதொரு விவேகமு-மில்லாமல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இன்னும் பல வழிகளில் மரணம் அடையும்போது மக்களின் உன்னத வாழ்க்கை அமைப்பை உத்தேசிக்கச் சிலரோ, பலரோ உயிரைத் தியாகம் செய்வதுகூட பெரிய காரியமாகுமோ?

மனிதனுக்கு மனிதன் எதற்காக வித்தியாசம் காண்பிக்கப்படவேண்டும் ? அறிவுள்ள எவரும் இனி இந்நிலைமையைச் சகித்துக்கொண்டு ஒரு கணமாவது வாழமுடியாது. பலாத்காரம் கூடாது. இம்முறைகளை மாற்ற பலாத்காரம் ஒருபொழுதும் வெற்றியடைய முடியாது. பலாத்காரம் பலாத்காரத்தையே பெருக்கும். உண்மையை மறைத்துவிடும். ஆகையால், மக்களுடைய மனத்தை மாற்றப் பாடுபட வேண்டியதுதான் முறையே ஒழிய,

பலாத்காரத்தினால் சாதித்துவிடலாமென்று எண்ணுவது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமாகும். இந்தத் தேசத்திலும் முன்னேற்றமுள்ளவர்களென்றும், பிற்போக்கானவர்களென்றும் இரண்டு கட்சிகளே இருக்க முடியும். இப்படிப் பிரிக்கப்பட்டால் ஒழிய மக்கள் அபிவிருத்தியடைய மார்க்கமில்லை. நமது மக்களுக்கு விஷயத்தை அறியக்கூடிய பகுத்தறிவு விருத்தியடைந்தால் ஒழிய மற்ற எந்த ராஜ்ய முறையாலும் ஒரு நன்மையும் விளைந்துவிடப் போவதில்லை.

------------------- தந்தைபெரியார் -குடந்தையில், 8-7-1934-இல் சொற்பொழிவு - 'பகுத்தறிவு' 9-9-1934

28.11.08

பார்ப்பனர்களை சதா சர்வகாலமும் தூற்றிக் கொண்டிருப்பது ஏன்?


சூட்சுமம் இதுதான்!

புதிதாக, நமது இயக்கப் பிரச்சினைகளைக் கேள்விப்படும் சில நண்பர்கள், பார்ப்பனர்களை, நாம் அவசியமற்றுக் கண்டிக்கிறோம் என்றும், அவர்கள் சமூகத்திலே மிகமிகச் சிறுபான்மையோராக இருக்கிறார்கள், அப்படியிருக்க அவர்களை ஏன் சதா சர்வகாலமும் தூற்றிக் கொண்டிருக்கவேண்டும் என்றும் கேட்கிறார்கள்.

இது, நமது இயக்கத்துக்குப் பழைய கேள்வி - மிகமிகப் பழைய கேள்வி. ஆனால், கேட்பவர்களிலே பலர், இயக்கத்துக்குப் புதிய வரவு. எனவே, அவர்களின் கேள்வி, உண்மையிலேயே, சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளக் கேட்கப்படுவதேயாகும். அவர்களின் சந்தேகத்தைப் போக்க வேண்டியது நமது கடமையுமாகும். முதலில் அந்த நண்பர்களுக்கு நாம் தெரிவித்துக் கொள்கிறோம், நாம் பார்ப்பனர் என்ற ஆட்களை அவர்களின் அணிவகுப்புக் காரணமாக, விஷமத்துக்காகக் கண்டிக்கிறோம் என்று தயவு செய்து எண்ணிவிட வேண்டாம். நாம் கண்டிப்பது பார்ப்பனியம் எனும் ஒரு முறையே.

அதன் ஆரம்ப கர்த்தாக்களாகவும், காவலர்களாகவும் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் - பார்ப்பனரல்லாதாரிலே பலர் இதற்கு ஆதரவாளர்களாக உள்ளனர்.

ஆகவே, நமது கண்டனம், பார்ப்பனியத்துக்கேயாகும். இனிப் பார்ப்பனர், மிகச் சிறுபான்மையோர்தானே! அவர்களைக் கண்டிக்கவேண்டியதும், அவர்களின் முறையைக் கண்டிக்க வேண்டியதும், அவசியந்தானா என்று கேட்கப்படுவதைக் கூர்ந்து கவனிப்போம். பிரச்சினை, மக்களின் எண்ணிக்கையை மட்டும் கவனித்தால் விளங்காது. அந்தப் பார்ப்பனியம் எனும் முறைக்கு நாட்டிலே உள்ள செல்வாக்கின் அளவே, முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். அப்படி கவனித்தால் அய்யர், அய்யங்கார், சர்மா போன்ற பார்ப்பனர்களோடு இது நின்று விடுவதாக இராமல், பார்ப்பனரல்லாதாரில் பலருக்கும் சொந்தமான பிரச்சினையாகிவிடக் காணலாம்.

ஒருமுறையைக் கவனிக்கும்போது, அதனை உற்பத்தி செய்த மக்களின் எண்ணிக்கையை மட்டும் கவனிப்பது போதாது - அந்த முறைக்கு நாட்டிலே ஏற்பட்டுள்ள செல்வாக்கின் அளவே முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டும். அப்போது அந்தப் பிரச்சினையின் முழு உருவமும் தெரியும்.

பார்ப்பனரிடம் ஏனய்யா பயம்? அவர்களைக் கண்டு பொறாமை எதற்கு? அவர்கள் 100-க்கு 3 பேர் தானே! நீங்கள் 100-க்கு 97 பேரன்றோ! (மைனாரிட்டி) சிறுபான்மைச் சமூகத்திடம் பெரும்பாலான சமூகம் ஏன் பயங்கொண்டு, பாதுகாப்புக் கோரவேண்டும் என்று அடிக்கடி தேசியத் தோழர்கள் கேட்பதுண்டு. அப்படிக் கேட்கும் போதெல்லாம், தங்கள் அறிவின் திறத்தைத் தாமே மெச்சிக் கொள்வர் அத்தோழர்கள்.

சமூகத்தைக் கவனித்தால், பார்ப்பனர் சிறு தொகையினர். பார்ப்பனரல்லாதாரின் மூச்சு, பார்ப்பனரைத் திணற வைக்கும். அவ்வளவு அதிக எண்ணிக்கையுள்ளவர்கள்தான் பார்ப்பனரல்லாதார். ஆனால், பார்ப்பனியம் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல! இதுவரை அதற்குப் பல வழிகளிலும் தரப்பட்ட படை பலத்தைப் பொறுத்திருக்கிறது.

ஊரே அஞ்சும்படியான வீரர்தான். ஆனால், அவன், மயங்கும் வேளையிலே, மந்திரக்காரன் கையிலுள்ள சிறு வேப்பிலைக் கொத்துக்கு அஞ்சுகிறான். அந்த இலைக்கும், மந்திரக்காரனுக்கும் இருப்பதாகக் கற்பிக்கப்பட்டிருக்கும் மகத்துவந்தான் வீரனும் அஞ்சும்படியான நிலையை உண்டாக்குவதற்குள்ள காரணமாகும். அதைப்போலப் பார்ப்பனர் சிறுதொகையினராக இருப்பினும், மோட்ச, நரகத் திறவு கோலும், ஆண்டவன் அருளை அளக்கும் அளவுகோலும், அவர்களிடம் இருப்பதாகவும், பிற சமூகத்தினரின் சேவையைப் பெறுவது, அவர்களின் பிறப்புரிமை என்றும், அவர்களின் திருப்தி ஆண்டவனுக்கே திருப்தி அளிக்குமென்றும், எண்ணற்ற ஏடுகள் எழுதப்பட்டுப், பன்னெடு நாட்களாக மக்கள் இரத்தத்திலே அந்த எண்ணம் கலக்கப்பட்டு விட்டதால், அந்த சமூகத்திற்கு, எண்ணிக்கைக்குத் துளியும் பொருத்தமில்லாத அளவு, அமோகமான செல்வாக்கு வளர மார்க்கம் ஏற்பட்டிருக்கிறது.


கடிவாளம் சிறியது; ஆனால் குதிரை அதனிடம் படும்பாடு யாவரும் அறிந்ததுதான்! மூக்கணாங்கயிறு தனது வால் பருமன்கூடத்தான் இல்லை. ஆனால், மாடு அதனிடம் அகப்பட்டால் அடங்கித்தான்விடும்! அதைப்போலச் சிறிய சமூகமாயினும், அதற்கு ஏதேதோ மகத்துவத்தைக் கற்பித்துவிட்டால், பிறகு அந்தச் சமூகத்தவரின் செல்வாக்கு நிச்சயம் வளரும். ஊரின்மீது ஆகாய விமானம் வட்டமிட்டால், 9000 பேர் இருப்பினும் ஊரார் அஞ்சுகின்றனர். ஏன்? ஆகாய விமானத்திலிருந்து வெடிகுண்டு வீசப்படும் என்று தெரிந்ததால். இதனால்தான், பார்ப்பனியம் எனும் பிரச்சினை, கண்டிக்கப்பட வேண்டியதாகிறது.

பார்ப்பனர்களை ஏனய்யா கண்டிக்க வேண்டும்? என்று எத்தனையோ பார்ப்பனரல்லாதாரைக் கேட்கச் செய்யும் அளவு, அந்தப் பார்ப்பனியத்துக்குச் சக்தி ஏற்பட்டிருக்கிறதல்லவா? பார்ப்பனியத்தைக் கண்டிக்கும்போது, அனந்தாச்சாரிகள்கூடச் சும்மா இருப்பர், அவினாசிகளல்லவா ஆத்திரப்படுகின்றனர். ஏன்? அதுதான் சூட்சுமம். மிகமிகச் சிறுபான்மையோராக இருப்பினும், அவர்களின் முறை, அவ்வளவு பரவிச் செல்வாக்குப் பெற்றிருக்கிறது. எனவேதான், நமது இயக்கம், அந்தப் பிரச்சினையை முக்கியமானதாகக் கருதுகிறது. இதுவரையிலே, பார்ப்பனியத்துக்கு, நாம் உண்டாக்கிய எதிர்ப்புக்கு, மறுப்பும், எதிர்ப்பும் பார்ப்பனரிடமிருந்து கிளம்பியதைவிட, நம்மவர்களிடமிருந்தே அதிகம் கிளம்பிற்று. அவ்வளவு சக்தி வாய்ந்த ஒருமுறையைக் கண்டிப்பது, வீண் வேலையாகுமா? அந்த அளவு செல்வாக்குடன் உள்ள ஒருமுறையை, எதிர்க்க, நாம் துணிவுடன் பணியாற்றுவது, அவசியமற்றதாகுமா? என்பதைக் கேள்வி கேட்கும் நண்பர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டுகிறோம்.

- பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தொகுதி-1

வீரமணியிடமிருந்து பெறும் உணர்ச்சி: வி.பி. சிங்
நான் என்னுடைய நன்றியை வெளிப்படையாக நண்பர் வீரமணி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், மண்டல் ஆணையை நான் நடைமுறைக்குக் கொண்டு வந்தேன். அப்போது, வடபுலமே எனக்கு எதிராக கிளிர்ந்தெழுந்தது. ஆனால், ஒரு மாபெரும் கருங்கற் கோட்டையாக, மாபெரும் எஃகுக் கூடாரமாக நின்று எனக்கு நீங்கள் ஆதரவு அளித்ததை இப்போது நினைவு கூர்கிறேன்.

இரண்டு நாட்களாக நான் தமிழகத்திலே உலா வந்து கொண்டிருக்கிறேன். நான் எங்கே சென்றாலும் திராவிடர் கழகத் தோழர்கள் கருப்புச் சட்டையுடனும், திராவிடர் கழகக் கொடியுடனும் நின்று வரவேற்கிற காட்சியினை காண்கின்றேன். அது என் மனதை விட்டு அக லாத காட்சியாக இருந்து கொண்டிருக்கிறது.

மிகப் பெரிய தலைவர் தந்தைபெரியார் தாம் வாழ்ந்த காலத்திலே, இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமுதாயக் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பினார். அதன் காரணமாக இந்த சமூக அநீதியை - கொடுமையை துடைத்தெறிய வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி பூண்டார்கள். அதற்காகவே உழைத்தார்கள். ஒரு மனிதனுக்கு சாவைவிட மிகக் கொடுமையானது அவமானம் என்றே நான் சொல்லுவேன். இந்த நாட்டிலே கோடிக்கணக்கான மக்கள் சமூக அநீதியால், அவமானத்தால் பாதிக்கப்பட்டார்கள். நெருப்பிலே வெந்து கொடு மைப்படுவதைவிட கொடுமையானது தான் இந்த அவமானத்தால் ஏற்படுகின்ற கொடுமை. எனவேதான் அந்தக் கொடுமையை துடைத்து எறிவதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்கள்.

சாதி என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், அது உள்ளத்தை அடிமைப்படுத்தியிருக்கிறது. இந்த நாட்டிலே இருக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை - மனத்தை அடிமைப்படுத்தியிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். கைகளிலே போடப்பட்ட இரும்புக் கை விலங்குகளை நாம் உடைத்தெறிய முடியும். ஆனால், மனத்திலே, அறிவிலே பூட்டப் பட்டிருக்கின்ற விலங்கினை நாம் உடைத் தெறிய முடியாது. அந்த விலங்குகளை உடைத்தெறியத்தான் நமக்கு சுயமரியாதை என்ற உணர்வு வேண்டும்.

இந்த நாட்டிலே இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட மக்களை, சூத்திரன் என்று சொல்லப்படுகின்ற பிற்படுத்தப் பட்ட மக்களை, வருணம் என்று சொல்லக்கூடிய சாதி என்கிற அமைப்பு, அவர்களுடைய உள்ளங்களிலே விலங்கை மாட்டி, அவர்களை நடமாடும் வெறும் எந்திர மனிதர்களாக்கியது. அதனால்தான் தந்தை பெரியார், சுயமரியாதை என்ற ஆணியை, அந்த சாதி அமைப்பின் தலையைப் பார்த்து மிகச் சரியாகவே அடித்தார்கள்.

நாம் 400 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வரலாற்றுக்குச் செல்வதைவிட, 4000 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள வரலாற் றுக்குச் செல்வோம். 4000 ஆண்டுகளுக்கு முன்பு கைபர், போலன் கணவாய் வழியாக இந்த நாட்டுக்குள் படையெடுத்து வந்தவர்கள் இங்கே உருவாக்கி வைத்த அடிமைத்தனம் ஒழிந்தாலொழிய பிரச்சினைக்குத் தீர்வே இல்லை.

மண்டல் அமலாக்கம் என்பது வெறும் சம்பளத்திற்கான வேலை வாய்ப்பு மட்டுமல்ல. அதிகார வர்க்கத்தில் நமக்கு பங்கு கிடைக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால், சாதாரணமான ஏழை மக்களுக்கான ரேசன் கார்டு கிடைப்பதைக்கூட முடிவெடுப்பது அதிகார வர்க்கம்தான். எனவேதான், மண்டல் அமலாக்கம் என்பது அதிகாரப் பங்கீடு என்கிறோம். எனவே, திராவிடர் கழகத்தை எங்களோடு ஒப்பிட மாட்டேன். ஏனென்றால், அது அரசியலிலே ஈடுபடக்கூடிய இயக்கமல்ல. ஆனால், அரசியலில் ஈடுபடு கின்ற கட்சிகளில், எங்களுடைய ஜனதாதளம்தான் கட்சிப் பொறுப்புகளில் 60 சதவிகிதத்தை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட - சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதேபோல நாட்டின் அனைத்து அதிகார மட்டத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டாலொழிய நாட்டில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

வீரமணி அவர்களே, உங்களை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால், இங்கே இருக்கக் கூடிய மக்களுக்கு கல்வியை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எதன் மூலமாக இந்த சமுதாயத்தை உயர்த்த முடியுமோ, அந்த மூலத்தைத் தொட்டு, அந்த அடித்தளத்தைத் தொட்டு, பணி யாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் உங்களுடன் பணியாற்றக் கூடியவர்களும் ஒரு அடித்தளமான பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள்.

ஏனென்று சொன்னால், புரட்சி என்பதை வாளைத் தூக்கிக் கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்களெல்லாம் செய்கின்ற பணியை விட, உயர்ந்த பணியை, நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். எனவே, உங்களைப் பாராட்டுகிறோம்.

அரசியலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன். அதே போல், சமுதாயப் பணியிலே, நண்பர் வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்.

-------------------23.12.1992 அன்று திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு கல்வி வளாகத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் நினைவு நாள், பெரியார் - மணியம்மை குழந்தைகள் காப்பகக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு, கட்டடத்தை திறந்து வைத்து, முன்னாள் பிரதமர் சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆற்றிய உரையிலிருந்து "விடுதலை" 30.12.1992

இடஒதுக்கீடும் - பார்ப்பனர்களும்
மக்களாட்சித் தத்துவம் உலகின் பெரும்பாகத்தில் செல்லுபடியாகிவிட்ட நிலையில் தாம் இன்னும் மன்னனின் கீழிருப்பதா என்று நேபாள இளைஞர்களும் மாணவர்களும் ஜனநாயகத்துக்காக போராடினர். வேலைவாய்ப்பையும் பணிப்பாதுகாப்பையும் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளையும் பறிக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து பிரான்ஸ் இளைஞர்களும் மாணவர்களும் போராடினர். இதே காலகட்டத்தில் அவர்களுக்கு இணையாக/அவர்களை விடவும் தீவிரமாக நாட்டுநலனை முன்னிறுத்தி இந்திய இளைஞர்களும் மாணவர்களும் ஒருமித்து போராடுவதை போல ஆங்கில அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றின.

என்.டி.டி.வி சேனலும் அதிலிருந்து துரத்தப்பட்ட/வெளியேறிய ராஜ்தீப் சர்தேசாயால் விரிக்கப்பட்ட புதிய கடையான சிஎன்என்-ஐபிஎன் சேனலும் ஏழேழு லோகத்திலும் இதை விட்டால் வேறு பிரச்னையே இல்லை என்பது போல இந்த நாடகத்தின் காட்சிகளை திரும்பத் திரும்ப ஒளிபரப்புச் செய்தன. ஆங்கிலம் தெரிந்த நடுத்தர, உயர்வகுப்புப் பார்வையாளர்களை யார் கவர்ந்திழுப்பது/தக்கவைத்துக் கொள்வது என்கிற போட்டி, பரபரப்பான செய்திகளை வெளியிட்டு பிரபலமாகி விளம்பரங்களில் அள்ளிக் குவிக்கிற வியாபார உத்தி, இவற்றோடு இந்திய செய்தி ஊடகத்தின் இயல்பாக ஊறி நொதித்து நாறும் உயர்சாதி மனோபாவமும் சேர்ந்துவிடவே, இச்சேனல்களின் ஒளிபரப்பில் ஆத்மார்த்தமானதொரு சுய ஈடுபாடு வெளிப்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களும் விஷம் கக்கின. அந்த இளைஞர்களின் தரங்கெட்ட செயல்கள் யாவும் போராட்டங்களென சித்தரிக்கப்பட்டன. (இந்தக் கூத்து இன்றளவும் தொடர்கிறது.)

உண்மையில் உயரிய நோக்கங்களுக்காக - அதிகாரத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக பெரும்பான்மை எளிய மக்களால் நடத்தப்படுவதே போராட்டம். அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு ஆதிக்க கும்பல் தெருவிலிறங்கினால் அதை ரகளை/காலித்தனம் என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும். எனவே அரசியல் சட்ட அடிப்படையில் பிற்பட்டோருக்கு உயர்கல்வியில் 27 சதம் இடஒதுக்கீடு என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்த இந்த இளைஞர்களின் நடவடிக்கைகளை பன்னாட்டுக் கம்பனிகளின் ஆதரவில் நேரடி ஒளிபரப்புக்காக நடந்த ரகளை என்றே வகைப்படுத்த முடியும். ரகளையில் ஈடுபடும் சமூக விரோதிகள் எப்போதும் ஏந்தி வருகிற கத்தி கபடா சோடா பாட்டில் சுருள் பிச்சுவா சைக்கிள் செயினுக்குப் பதிலாக இம்முறை அவர்கள் கையில் தொலைக்காட்சிக் காமிராக்கள் இருந்தன. ஏனென்றால் இப்போதைக்கு அவர்களுக்கு எவரின் உயிரும் தேவைப்படவில்லை. மக்களின் மனங்கள்தான் அவர்களது இலக்கு. ஒரு நூற்றாண்டு காலமாக கருத்தளவிலும் நடைமுறையிலும் செயலூக்கத்துடனிருக்கும் இடஒதுக்கீடு குறித்து ஒரு சர்ச்சையை கிளப்புவதே அவர்களது உடனடி நோக்கம். இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டி கல்வியிலும் அரசு நிர்வாகத்திலும் மீண்டும் ஒருசாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் அவர்களது அகண்ட கனவிற்கான ஒத்திகையும்கூட இதற்குள் மறைந்திருக்கிறது.

பதினாறாண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றியிருக்க வேண்டிய ஒரு அரசியல் சட்டக்கடமை என்ற அடிப்படையில் உயர்கல்வியில் பிற்பட்டோருக்கு 27 சதம் இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு வெளியான கணத்திலிருந்தே அவர்கள் இந்த ரகளையைத் தொடங்கிவிட்டனர். சர்வசதா காலமும் பிறசாதிகள் மீதான துவேஷத்துடனேயே வளர்க்கப்படுவதால் யாரையும் யாரும் அணிதிரட்ட வேண்டிய அவசியமில்லாமலேயே தெருவுக்கு வந்தனர். வெளித்தோற்றம் என்னவாயிருந்தாலும் தன்னுணர்வாக மண்டிக்கிடக்கும் உயர்சாதி அகங்காரமும் இடஒதுக்கீட்டு எதிர்ப்புணர்வும் அவர்களை தெருவுக்கு கிளப்பிக் கொண்டு வந்தது.

அடுத்த வீட்டு பொம்மையை எடுத்து விளையாடும் குழந்தைகூட உரியவர்கள் கேட்டதும் திருப்பித் தந்துவிடுமளவுக்கு நியாயவுணர்ச்சி கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களோ தாம் இத்தனை நாளும் ஆக்ரமித்து வைத்திருந்ததை உரியவர்கள் எப்படி கேட்கலாம் என்று அதட்டுமளவுக்குச் சென்றனர். பாடுபட்டு ஈட்டிய தமது கைப்பொருள் பறிபோவதைப் போன்ற பதற்றத்துடனும் ஆத்திரத்துடனும் ஏசினர். இந்த ரகளையில் புதுடில்லி மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் பிற்பாடு நாடு முழுவதுமிருக்கிற ஐஐடி, ஐஐஎம் மாணவர்களில் ஒருபகுதியினரும் இணைந்து கொண்டனர். இதன் பொருள் மாணவர்கள் மட்டுமே இந்த ரகளையை நடத்தினர் என்பதல்ல. சாதியமைப்பினூடே அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் பொருளாதார நலன்களையும் பாதுகாத்துக் கொள்ளும் வெறியேறிய அனைவருமே நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கேற்றனர். இந்த தருணத்தைப் பயன்படுத்தி இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட தம்மால் என்னென்ன செய்ய முடியுமோ அதை மிகவும் விருப்பப்பூர்வமாக அனிச்சையாக செய்வதில் ஆர்வம் காட்டினர். அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அயல்நாட்டில் இருப்பவர் என்ற பாகுபாடு இல்லாமல் சாதிநலனைக் காப்பதற்காக எல்லோரும் அணிதிரண்டனர். செய்தி ஊடகங்களில் அவர்களுக்கிருக்கும் சாதிய செல்வாக்கு இதற்குப் பேருதவியாக அமைந்தது.

ஒரு வழக்கின் இருதரப்பையும் கண்டறிந்து நடுநிலையாக செய்தியளிக்கும் தார்மீக நெறிமுறைகள் தமக்கிருப்பதாக வெகுவாக அலட்டிக் கொள்ளும் தகவல் தொடர்புச் சாதனங்கள் இவ்விசயத்தில் எல்லாவற்றையும் உருவியெறிந்துவிட்டு ஒற்றைப் பூணூலோடு அம்மணமாக நின்றன. யூத் பார் ஈக்வாலிட்டி என்று அவர்கள் போர்த்திவந்த பதாகையால்கூட மறைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு அம்மணமாய் நின்றன. கட்சித் தலைவர்களையும் சமூக செயல்பாட்டாளர்களையும் ஸ்டுடியோவுக்கு அழைத்து குறுக்கு விசாரணை போல துருவித் துருவி பேட்டியெடுக்கும் இந்த புலனாய்வுச் செய்தியாளர்கள் அந்த மாணவர்களின் உளறல்களை சிறு குறுக்கீடோ மறுப்போ இல்லாமல் போர்ப்பிரகடனங்களைப் போல ஒளிபரப்பினர். நேரடி விவாதங்களின்போது இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்த போதிய கால அவகாசம் தரப்படாமல் மைக்குகள் பறிக்கப்பட்டன. எதிர்ப்பாளர்களுக்கோ விலாவாரியாக அவதூறு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது.

இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற எந்த இயக்கத்தையும் ஒளிபரப்ப முடியாதளவுக்கு அல்லது ‘முன்னாபாய்கள் ஊர்வலம்’ என்று கிண்டலடித்து ஒளிபரப்புமளவுக்கு வெளிப்படையாகவே செயல்பட்டன. யூத் பார் ஈக்வாலிட்டி- சமத்துவம் என்று முழங்கும் இந்த மாணவர்கள் இதுவரை சமூகத்தில் நிலவிய எந்தெந்த ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடி கிழித்திருக்கின்றனர், எங்கெங்கெல்லாம் சமத்துவத்தை நிலைநாட்டியிருக்கின்றனர் என்பது போன்ற எளிய கேள்விகளைக் கூட எழுப்பவில்லை. தாங்கள் எதிர்பார்க்கும் வகையில் பேசக்கூடிய பத்துப்பேரை இழுத்துவந்து இங்கிலீசில் பொளந்து கட்டினார்கள். புலம்பியும் தீர்த்தார்கள். ஒரு தகவல் தொடர்புச் சாதனம் என்ற நிலையிலிருந்து வெகுவாக இழிந்து பிரச்னையில் தொடர்புடைய இருசாரரில் ஒருதரப்பாக மாறி வாயில் நுரைதள்ள வாதிட்டன.

உழைக்கும் மக்கள் எவ்வளவு நியாயமான காரணங்களுக்காகப் போராடினாலும் பொதுஅமைதிக்குப் பங்கம் நேர்வதாகவும் மக்கள் அவதியுறுவதாகவும் வரிப்பணம் வீணாவதாகவும் அரற்றித் திரியும் ஊடகங்கள் இவ்விசயத்தில் எதுவும் பேசாமல் அமைதி காத்தன. அதாவது ஆதரவாக இருந்தன. பணிக்கலாச்சாரம் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும் பொதுநல விரும்பிகளும் உண்மை விளம்பிகளும், போண்டாவில் உப்பில்லை புண்ணாக்கில் சத்தில்லை என்று பொதுநல வழக்கு தொடுக்கிறவர்களும்கூட இம்முறை பொத்திக் கொண்டு சும்மாயிருந்தனர். ஒரு பேரணியினால் தன் பயணம் சற்றே தாமதித்து விட்டதற்காக ஊரில் ஒருவனும் பேரணி நடத்தக்கூடாது என்று (யாரும் வழக்கே போடாத நிலையில்) தீர்ப்பளிக்கின்ற நீதிபதிகள் கூட, சில மருத்துவ மாணவர்களும் மருத்துவர்களும் நடத்திய அட்டூழியங்களில் தலையிட முன்வரவில்லை. வேலைநிறுத்தம் செய்கிற நாட்களுக்கு No Work No Pay என்று கடந்த காலங்களில் நியாயம் பேசிய நீதிமன்றங்கள் ரகளை செய்த இந்த மருத்துவர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்ததற்கு அரசையே கடுமையாக எச்சரித்ததுகூட ஏனென்று யாருக்கும் விளங்கவில்லை.

இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தின் பிரிக்கமுடியாத பகுதி. எனவே இடஒதுக்கீட்டை எதிர்ப்பதென்பது அரசியல் சட்டத்தையே எதிர்ப்பதுதான். நேரடியான அர்த்தத்தில் அது ஒரு தேசவிரோதச் செயல். ஆனால் இந்த தேசவிரோதிகள் நாட்டின் அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் மிக உயரிய பொறுப்பிலிருக்கும் குடியரசுத் தலைவரைச் சந்திக்கின்றனர். தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோருகின்றனர். தற்கொலை என்கிற மனப்பிறழ்வுக்கு முறையான உளவியல் சிகிச்சைக்கும், இந்த மிரட்டல் போக்கிற்கான தண்டனைக்கும் உத்திரவிடுவதற்கு பதிலாக ‘பரிவோடு கவனிப்பதாக’ குடியரசுத்தலைவரும் ஆறுதல் கூறினாரென செய்திகள் வெளியாயின. உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பொறுப்புணர்வை கைவிட்டு சாதிவெறியேறி தெருவுக்குள் உலும்பித் திரிந்த அந்த மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு நிர்ப்பந்திப்பதற்குப் பதிலாக, இடஒதுக்கீடு அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர் பலமுனைகளிலும். குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து வேண்டியதை கொள்ளையிட்டுப் போகும் கயமைக்கு குறைவற்றது இந்த கனவான்களின் செயல். தங்களது சாதிநலனை காத்துக் கொள்ள எவரது உயிரையும் பலி கொடுக்கத் தயங்காதவர்கள் என்பது மறுமுறையும் உறுதியானது.

II

நடந்த சம்பவங்களின் மீது எதிர்வினை புரிய விரும்பும் சமூகநீதி ஆர்வலர் எவரொருவரும் ‘சமத்துவத்திற்கான இளைஞர் குழு’ என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலிருந்தே தன் பணியைத் தொடங்க வேண்டியிருக்கும். ஹிட்லனும் முசோலினியும் கோர்ப்பசேவும் எல்ட்சினும் சோசலிசம் என்ற போலி முழக்கத்தோடு செயல்பட்டதற்கு இணையான மோசடிதான் இவர்கள் சமத்துவம் என்று பேசுவதும். வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதபடிக்கு சமத்துவம் என்ற சொல்லும் பொருளும் இழிவுபடுத்தப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்குமாறு உண்மையான சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டு செயல்படும் அமைப்புகளை தூண்டிவிட்டாலும் கூட தவறில்லை. இவர்கள் சொல்லும் சமத்துவத்தின் பின்னே மறைந்திருக்கும் சூதுக்கள் குறித்து மக்களை எச்சரிக்கைப்படுத்துவதும்கூட ஒரு சமூகநீதி ஆர்வலனின் முக்கிய கடமையாகிறது.

சமத்துவத்திற்கான இளைஞர் குழு என்ற பெயரில் மறைந்திருப்பவர்கள் அனைவரும் உயர்சாதியினர் என்று தம்மைத்தாமே சொல்லிக் கொள்கிறவர்கள் தான். அவர்களிலும் பெரும்பாலானோர் பார்ப்பனர்கள். அவர்கள்தான் இந்த இடஒதுக்கீடு எதிர்ப்புக்குத் தேவையான தத்துவார்த்தப் பின்புலத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சுயசாதி அகங்காரங்களையும் போலிப் பெருமிதங்களையும் உதறிவிட்டு சாதி மறுப்பாளர்களாக செயல்படுகின்றவர்களைத் தவிர அனேகமாக மற்ற பார்ப்பனர்கள் அனைவருமே இடஒதுக்கீடு எதிர்ப்பை தமது வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ளனர். தொழிற்சங்கம், கலை இலக்கியம், பத்திரிகை, அரசியல் கட்சி என்று பல்வேறு சமூக இயக்கங்களில் உற்சாகமாகப் பிறசாதியாரோடு பங்கேற்கும் இவர்கள் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நடைபெறும் எந்த இயக்கத்திலும் தென்படுவதில்லை. அது தனிப்பட்ட முறையில் தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும் என்கிற மனோபாவம் அவர்களுக்கு இயல்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு அரசாங்க அலுவலகமும் ஒரு குட்டி அக்ரஹாரமாக திகழ்ந்த அந்தக் கடந்த காலத்தை எண்ணி அவர்கள் விடும் பெருமூச்சு கூட இடஒதுக்கீடு ஒழிக என்றுதான் அடங்குகிறது.

ஒரு பார்ப்பனர் எந்த அமைப்பில் இயங்கினாலும் இடஒதுக்கீடு பிரச்னை என்று வருகிறபோது தனக்கான தலைமையை வெளியே தேடுகிறவராகிறார். அந்த வகையில் 1902ல் பார்ப்பனரல்லாதாருக்கு முதன்முதலில் இடஒதுக்கீடு வழங்கிய கோல்காபூர் மன்னர் சாகு மகராஜ் பார்ப்பனருக்கு எதிரியாகவும் அவ்வொதுக்கீட்டை எதிர்த்த திலகர் தலைவராகவும் ஆகிவிடுகின்றனர். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்திலும் தாழ்த்தப்பட்டோருக்கு பங்கு வேண்டுமென்று 1890களிலேயே முழங்கிய அயோத்திதாசரும் ரெட்டைமலை சீனிவாசனும் அவர்களுக்கு முன்பே கோரிய ஜோதிராவ் பூலேவும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரிய பெரியாரும், தலித்களுக்கும் பழங்குடியினருக்குமான பிரதிநிதித்துவத்தை அரசியல் சட்டப்பூர்வமாக்கிய அம்பேத்கரும் விரோதிகளாகி விடுகின்றனர். சங்பரிவாரத்தை பல காரணங்களுக்காக எதிர்க்கும் பார்ப்பனரும்கூட இடஒதுக்கீடு பிரச்னையில் ஹெட்கேவாரையும் கோல்வால்கரையும் தலைவர்களாக ஏற்றுக் கொள்கிறவராகிறார். அதாவது அவர் ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து அரை டவுசரோடு நிற்கவில்லையே தவிர கருத்தளவில் அவ்வமைப்பினராகி விடுகிறார். இடஒதுக்கீடு பற்றிய கருத்தளவிலான இந்த முறிவு அல்லது பிளவு குடும்பம் தொடங்கி இந்திய சமூகத்தின் எல்லா அமைப்புகளிலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று தலித் சிந்தனையாளர் வி.டி.ராஜசேகர் கூறியது முற்றிலும் உண்மை.

மனிதகுலம் எப்படி தோன்றி பரிணாமம் பெற்றது என்பது குறித்த விஞ்ஞானப்பூர்வமான பார்வை கொண்டிருந்தாலும்கூட, கடவுளின் நெற்றியிலிருந்து பிறந்தவன் என்கிற பொருள்படும் பிராமணன் என்ற வர்ணாசிரம வார்த்தையால் தான் அழைக்கப்படுவதையே ஒரு பார்ப்பனர் பெரிதும் விரும்புகிறார். கடைசியாக வந்தவன், இளையவன் என்று பொருள்படும் பார்ப்பு என்ற அழகிய தமிழ்ச்சொல்லை அடிப்படையாய்க் கொண்டு பார்ப்பனர் என்று விளிப்பதை அவமதிப்பென குமைகின்றனர். (மற்ற எந்த அன்னியர்களையும் போலவே பிராமணனும் இந்தியப் பொதுமக்களுக்கு அன்னியனே என்று அம்பேத்கர் சொல்வதை இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும்.) எங்கிருந்தோ வந்து கடைசியாக இச்சமூகத்தில் சேர்ந்தவர்கள் என்று தமது பூர்வீகத்தை நினைவூட்டும் அவ்வார்த்தையின் உண்மைத் தன்மையை விடவும் பிராமணன் என்பதன் புராணத் தன்மையை அவர்கள் விரும்புவதற்கு காரணம், அது சமூகத்தில் தங்களுக்கு மிக உயரிய அந்தஸ்தையும் பெரும் செல்வத்தையும் அதிகாரத்தையும் கொடுத்த வார்த்தை என்பதால்தான். அந்த வார்த்தை உருவான வரலாற்றுப் பின்னணியில்தான் இந்திய சமூக வரலாற்றின் இருளடைந்த பக்கங்கள் வெளிச்சத்திற்கு ஏங்கி மறைந்து கிடக்கின்றன.

எல்லாவற்றையும் காரண காரியத்தோடும் அவை உருவான காலத்தோடும் பொருத்திப் பார்க்கும் தர்க்கப்பூர்வமான அணுகுமுறையையே வலியுறுத்தும் சில பார்ப்பனர்கள்கூட இடஒதுக்கீட்டின் மூலத்தை அறிய வரலாற்றுக்குள் நுழைவதை விரும்புவதில்லை. ஏனென்றால் அங்கே இவர்கள் ரசிக்கத்தக்க எதுவுமேயில்லை. இருப்பதெல்லாம் அவர்கள் இன்று பேசிக் கொண்டிருக்கும் தகுதி திறமை பரம்பரை அறிவுத்திறன்களை எப்படி கைக்கொண்டார்கள் என்பதை அம்பலப்படுத்தும் சான்றுகள் மட்டுமே. எப்போதோ நடந்ததைப் பற்றி இப்போதென்ன பேச்சு என்று சொல்வதன் மூலம் கடந்த காலத்தை நிராகரிக்கின்றனர். அதாவது நிகழ்காலத்தில் இருப்பதைப் போலவே காலகாலமாய் எல்லாமும் இருந்ததான ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

III

இந்திய சமூகத்தில் நடைபெற்ற ஒரேயொரு இடஒதுக்கீடு வர்ணாசிரமக் கோட்பாடு தான். தொழில் அடிப்படையில் பிரிந்திருந்தாலும் உயர்வு தாழ்வு, தீட்டு புனிதம் என்ற பாகுபாடு அற்றிருந்த இந்திய சமூகத்தை இந்த வர்ணாசிரமக் கோட்பாடுதான் இணக்கம் காண முடியாத வர்ணங்களாக பிரித்தது. வர்ணங்களை கிடைமட்டமாக சமதளத்தில் வைக்காமல் ஒன்றின் கீழ் ஒன்றான படிவரிசையில் தாழ்த்தியது. ஆகச்சிறந்த அனைத்தையும் பார்ப்பனர்களுக்கே - அதாவது பார்ப்பன ஆண்களுக்கே - என்று ஒதுக்கீடு செய்தது. எடுத்தயெடுப்பில் அது இங்கேயே எல்லா வர்ணத்துப் பெண்களையும் புனிதமற்றவர்கள் என்று கீழ்மைப்படுத்தி எல்லாவற்றிலிருந்தும் ஒதுக்கி வைத்ததன் மூலம் போட்டியாளர்களில் ஒரு பெரும்பகுதியை ஒழித்துக் கட்டியது. பிறகு அது ஆண் போட்டியாளர் பக்கம் திரும்பியது. பார்ப்பனர்களைத் தவிர்த்த அனைவரையும் பார்ப்பனர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யுமாறு பணித்தது. இந்த நியதி மீறப்படாமல் இருப்பதற்கான சட்டங்களை இயற்றியது. எதிர்ப்புகளையும் மீறல்களையும் ஒடுக்கும் கடும் தண்டனைகள் நடைமுறைக்கு வந்தன.

பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் முற்றுரிமைகளையும் கேள்விக்குட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை சமூகத்தில் தகவமைக்கும் நுட்பங்களோடு புராணங்கள் இதிகாசங்கள் காவியங்கள் நாடகங்கள் உள்ளிட்ட கலை இலக்கியப் படைப்புகள் வெளியாகின. இதன் மூலம் இயற்கை வளங்களான நிலம் நீர் காற்று, பொதுச்சொத்துக்களான கல்விச்சாலைகள், பண்டகசாலைகள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றில் பார்ப்பனர்களுக்கே முதலுரிமை வழங்கப்பட்டது. அரசனின் பட்டத்து மகிஷியை கன்னி கழிக்கும் உரிமைகூட பார்ப்பனர்களுக்கிருந்தது. ஒரு பார்ப்பனர் யாரைத் தொடுகிறாரோ அல்லது தொட மறுக்கிறாரோ அதைப் பொறுத்து ஒருவர் தீண்டத்தக்கவரா தீண்டத்தகாதவரா என்பது முடிவானது. எண்ணையும் தண்ணியும் யாரிடமிருந்து ஒரு பார்ப்பனர் பெற்றுக் கொள்கிறாரோ அதுவே ஒருவரின் சமூக அந்தஸ்தை தீர்மானிப்பதாயிருந்தது.

வேதங்களை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டு முறைகளான யாகங்கள், பரிகாரங்கள், மந்திரங்கள், சடங்குகள் நடைமுறைக்கு வந்தன. பார்ப்பனரல்லாதாரின் பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் இழிவுக்குரியதாய் அறிவிக்கப்பட்டன. அவர்களது உணவு, உடை, இருப்பிடம், நம்பிக்கைகள், தெய்வங்கள், பண்டிகைகள் எல்லாவற்றின் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கும் அதிகாரம் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டது. ஓட்டுவீடு கட்டிக்கொள்வது, குடை எடுத்துச் செல்வது, செருப்பணிவது, சவரம் செய்து கொள்வது, புத்தாடை அணிவது, இடுப்புக்கு மேலும் முழங்காலுக்கு கீழும் உடை அணிவது, நெய் உண்பது, தார்ப்பாய்ச்சி வேட்டி கட்டுவது, பொன்னாலான நகை அணிவது, தேர்/குதிரைசவாரி ஆகிய அனைத்தும் சூத்திரசாதியாருக்கும் பெண்களுக்கும் தடை செய்யப்பட்டது. சொத்து வைத்துக் கொள்ளும் உரிமையும் இவர்களுக்கு முற்றாக மறுக்கப்பட்டது. சூத்திரசாதியார் சமூகரீதியாகவும் பொருளாதாரரீயாகவும் பின்தங்கியதற்கான காரணம் இங்கே தொடங்குகிறது. இவர்களது மொழி இழிசனர் மொழியாக அறிவிக்கப்பட்டதால் இவர்களது கலை இலக்கிய வெளிப்பாடுகளும்கூட இழிசனர் வழக்காக ஒதுக்கப்பட்டன. இந்தத் துவேஷம் இன்றுவரை நீடிப்பதன் சான்றுதான் சிதம்பரம் கோயில் விவகாரம்.

வேதங்களை படிப்பது பயிற்றுவிப்பது என்பதே அன்றைய கல்வியாக இருந்த நிலையில் இந்த வேதகல்வி என்பது எட்டாண்டு காலம் நாளொன்றுக்கு சராசரியாக பன்னிரண்டே வரிகளை படிப்பது தான். ஆனால் இதை படிக்கும் திறமை சமூகத்தின் பெரும்பகுதியினராகிய பெண்களுக்கும் உழைக்கும் மக்களாகிய சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் கிடையாதென்று மறுத்துவிட்டு பார்ப்பன ஆண்கள் மட்டுமே கற்றனர். தேவபாஷையாகிய சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதஸ்லோகங்களை பெண்களும் பார்ப்பனரல்லாத மற்றவர்களும் ஓதினாலோ ஓதுவித்தாலோ அது தீட்டுக்குரியதாகிவிடும் என்று விளக்கம் தரப்பட்டது. அதை மீறி வேதம் பயில முயன்ற சம்புகனை ராமனே தேரேறிப் போய் கொலை செய்த கதை நாடறிந்த ஒன்றுதான். (இப்பேர்ப்பட்ட ராமனின் ராஜ்ஜியத்தைத்தான் இங்கே நிறுவப்போவதாய் சங்பரிவாரம் கூறுகிறது). வேதமந்திரங்களை உச்சரித்ததற்காக நாக்கை வெட்டிவிடும் தண்டனை மராட்டியத்தில் நமது தாத்தா பாட்டி காலம் வரை இருந்தது. புராணகாலத்தில் மட்டுமல்ல, தீட்டுக்குரியவர்களாகிய பொற்கொல்லர்கள் நமஸ்காரம் என்ற சமஸ்கிருத வார்த்தையை உச்சரித்து தீட்டுப்படுத்துவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று சித்பவன பார்ப்பனர்கள், கிழக்கிந்திய கம்பெனியின் தலைவருக்கு எழுதிய கடிதத்தின்பேரில் அப்படியொரு தடை உத்தரவு 09.08.1779 அன்று வெளியிடப்பட்டது. (அம்பேத்கர் தொகுப்புநூல் 25, பக்கம் 78,79). மகாத்மா ஜோதிராவ் பூலேவும் அவரது துணைவியாரும் நடத்திய பெண்களுக்கான பள்ளி எரிக்கப்பட்டது.

வேதத்தை ஏற்காதவர்களும் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தவர்களும் வர்ணப்பிரிவினைக்கு வெளியே அவர்ணர்களாக பஞ்சமர்களாக ஒதுக்கப்பட்டனர். உயர்வர்ணத்து ஆணும் கீழ்வர்ணத்து பெண்ணும் கலந்து அனுலோம சாதியும் உயர்வர்ணத்து பெண்ணும் கீழ்வர்ணத்து ஆணும் கூடி பிரதிலோம சாதியும் உருவானதாகக் கூறி இதில் பிரதிலோம சாதியை தீண்டத்தகாததாக அறிவித்து ஒதுக்கினர். இவர்கள் அனைவரும் சூத்திரர்களைவிடவும் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். இவர்களைக் கண்டாலும் இவர்கள் பேசுவதைக் கேட்டாலும் தீட்டு என்று அறிவிக்கப்பட்டது. சமூகத்தின் எந்த நடவடிக்கையிலும் இவர்கள் பங்கேற்பு தடை செய்யப்பட்டது. இவர்களுக்கு ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம் தொடங்குவதை 1850லும் கூட பார்ப்பனர்கள் எதிர்த்ததாக பம்பாய் மாகாண கல்விக்கழக அறிக்கை தெரிவிக்கிறது. சூத்திரர்களும் பெண்களும் பஞ்சமர்களும் கல்வியில் முற்றாக விலக்கி வைக்கப்பட்ட வரலாறு இதுதான்.

ஆட்சி நீடிக்கவும் ராஜ்ஜியம் விரிந்து பரவவும் ஆயுள் நீட்டிப்புக்கும் எதிரிகளை ஒழிக்கவும் இன்னின்ன யாகங்களை செய்தாக வேண்டும் என்று அரசனை நிர்ப்பந்தித்தனர் பார்ப்பனர்கள். அந்த யாகங்களுக்காக பிரம்மதேயம், ஆர்யவர்த்தம், சதுர்வேதி மங்கலம், வேள்விக்குடி, அக்ரஹாரம் போன்ற பெயர்களில் மானியமாக பெருமளவு நிலங்களையும் கால்நடைகளையும், ஹிரண்ய கர்பா, துலாபுருஷதானம் போன்றவை வழியாக பொன்னும் இதர பொருட்களையும் பெற்று சொத்துடைமையுள்ள குழுவாக பார்ப்பனர்கள் மாறினர். உடல் உழைப்பை பாவகரமானதாக ஏற்கனவே அறிவித்துவிட்ட பார்ப்பனர்கள் இப்போது தானமாகப் பெறுகிற நிலங்களில் வேளாண்மை செய்வதை சாஸ்திரம் தடுத்தது. எனவே பார்ப்பனரின் நிலங்களில் பாடுபட்டு விளைவித்துத் தரும் பொறுப்பு சூத்திர சாதிகளுக்குரிய கடமையாக அறிவிக்கப்பட்டது. அதாவது இவர்கள் நிலத்தை விட்டு உடல் உழைப்பை விட்டு வேறுபக்கம் நகர்ந்துவிட முடியாதபடி வலுவாக பிணைக்கப்பட்டனர். பெரும்பாலான சூத்திரசாதிகளின் வாழ்வாதாரமாக விவசாயம் சார்ந்த தொழில்களே இருப்பதற்கு இதுவே காரணம்.

ஆக, சமூக மக்கள் தொகையில் சரிபாதியாய் இருக்கும் பெண்கள், உழைக்கும் மக்களாகிய சூத்திரர்கள், தீண்டத்தகாத சாதியினர், பழங்குடிகள் ஆகியோர் சொத்தில்லாதவர்களாக, கல்வியற்றவர்களாக இப்படித்தான் மாற்றப்பட்டனர். (பின்பு இதையே காரணம் காட்டி வெள்ளையராட்சியின்போது வாக்குரிமையும்கூட மறுக்கப்பட்டது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்று அம்பேத்கர் முழங்கியது இதன் பொருட்டே) போட்டியாளர்கள் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிட்டு தன்னந்தனியாய் களத்தில் நின்றனர் இம்மாவீரர்கள். இந்த உயர்ந்த நிலையை அடைய அவர்களுக்கு துணையாக இருந்தவர்கள் சத்திரியர்கள். அரசாள்வதும் போர்புரிவதுமாகிய தொழில்களில் ஈடுபட்டு வந்த இந்த சத்திரியர்களை தமக்கு அடுத்த நிலையிலுள்ள உயர்வர்ணமாக அறிவித்ததன் மூலம் அரசனும்கூட தமது சேவகன்தான் என்ற நிலையை பார்ப்பனர்கள் உருவாக்கினர். சத்திரியர்கள் வேதம் படிக்கலாம் ஆனால் ஓதக்கூடாது. இப்படி பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக வேதம் படித்த இந்த சத்திரிய சாதியினர்தான், இப்போது இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் பார்ப்பனர்களோடு இணைந்து நிற்கிற பிற உயர்சாதி மாணவர்கள்.

சில வேத ஸ்லோகங்கள், யாக சடங்குகள், பரிகாரப் பூஜைகள் பற்றி தெரிந்து வைத்திருப்பது மட்டும்தான் வெள்ளையராட்சி வரும் வரை பார்ப்பனர்களிடமிருந்த அறிவு. இந்த அறிவு மனிதகுலத்திற்கு எவ்வகையிலும் பயன்படாத அறிவு. இந்த அறிவைப் பயன்படுத்தி உப்பு, புளி, மிளகாய், ஒருமுழக் கோவணத்துணி, ஒரு சட்டி, ஒரு துளி தண்ணீர், ஒரு விறகுக்குச்சி, ஒரு கவளம் சோறு, ஒரு சவரக் கத்தி, ஒரு கலப்பை என்று எதையும் பெறமுடியாது. கால்நடைகளை வெறுமனே யாகத்தில் பொசுக்கித் தின்னும் இறைச்சியாக பார்த்தது பார்ப்பனரின் அறிவென்றால், கால்நடைகளை செல்வமாகக் கருதி வளர்க்கவும் விருத்தி செய்யவும் பால் பொருட்களைப் பெறவும் பயன்பட்டது பார்ப்பனர் அல்லாத உழைப்பாளி மக்களிடமிருந்த அறிவுதான்.

நிலத்தில் இறங்கி உழுபடை வேலைகள் செய்வதை தீட்டாகக் கருதி பார்ப்பன அறிவு ஒதுங்கி நின்றபோது (ஒருவேளை ஏர் ஓட்டும் ஆசை வந்தால் கலப்பை பொம்மை செய்து விளையாடி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது சாஸ்திரம்) கால்நடைகளைப் பழக்கி விவசாயம் செய்யவும் புதிய தானியங்களையும் காய்கனி கிழங்குகளையும் உணவாகக் கண்டு கொடுத்த பெருமை எளியவர்களின் அறிவுக்குரியது. ஆடியில் நற்காரியங்கள் எதையும் செய்யக்கூடாது என்று பார்ப்பன அறிவு மிரட்டிக் கொண்டிருந்தபோது ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று பயிர்த் தொழில்களுக்கு ஏற்ற பருவங்களை கணிக்கும் அறிவு பார்ப்பனரல்லாதாருக்கு இருந்தது. விலங்குகளின் தோல்களை பதப்படுத்தி ஆடைகளையும் காலணிகளையும் கண்டுபிடித்ததும் இவர்களது அறிவுதான். இவர்கள்தான் இன்றைக்கு பார்ப்பனர்கள் பெரிதும் விரும்பிப் படிக்கும் Genetic Engineering, Tissue culture, Astronomy, Leather Technology போன்ற படிப்புகளுக்கு முன்னோடிகள்.

கடல்தாண்டுவது பாவம் சாஸ்திர விரோதம் என்று தடுத்தது பார்ப்பனர்களின் அறிவென்றால், கடலுள் மூழ்கி முத்தெடுக்கவும், மீன் பிடிக்கவும், கடல் மேல் பயணம்போய் வாணிகம் செய்யவும், கடல்நீரை உப்பாக மாற்றவும் பயன்பட்டது பார்ப்பனரல்லாத உழைப்பாளி மக்களின் அறிவு. இன்றைக்குள்ள Marine Technologyன் மூலவர்கள் பார்ப்பனரல்லாதவர்கள். பருத்தியை பஞ்சாக்கி பஞ்சை நூலாக்கி நூலை துணியாக்கும் தொழில்நுட்பச் சங்கிலியில் பார்ப்பனர்களின் கண்டுபிடிப்பு எது? பட்டுத்துணி உடுத்திக் கொண்டால் எந்தத் தீட்டும் அண்டாது என்று சொல்லத் தெரிந்த பார்ப்பன அறிவுக்கு ஒரு அங்குல நூல் நூற்கத் தெரியாது. சுட்டச் செங்கல்லை அறிந்ததும், சுதையை தயாரித்ததும் எவருடைய அறிவு?

ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி நிற்கும் கோட்டை கொத்தளங்களையும் கோவில்களையும் அணைகளையும் கட்டிய அறிவு எந்த பார்ப்பனரின் கொடையுமல்ல. பனையை தீட்டுக்குரிய மரமாக பார்ப்பனர்கள் ஒதுக்கிவைத்த போது (இன்றும் கூட அவர்கள் பனங்கிழங்கு சாப்பிடுவதில்லை என்கிறார் முனைவர் தொ.பரமசிவன்) பனையோலையை பதப்படுத்தி எழுத்தோலையாக மாற்றிக்கொடுத்த அறிவு ஒரு பனையேறிக்குரியது. கையெல்லாம் காப்பேற உளிபிடித்துச் செதுக்கி காலத்தின் வரலாற்றைச் சொல்லும் கல்வெட்டுக்களை தந்தவர்கள் இன்றைய ஒட்டர்களுக்கும் போயர்களுக்கும் முன்னோடிகளாக இருக்கக்கூடும். காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் கவினுறு வனப்போடு திகழும் சிலைகள், சிற்பங்கள் எதன்மீதும் ஒரு பார்ப்பனனின் ரேகையுமில்லை.

சகமனிதனைத் தொடுவதே பாவம் என்று பார்ப்பனர்கள் தீட்டு பாராட்டிக் கொண்டிருந்தபோது பிணி முறிக்கும் வைத்திய முறைகளை மூலிகைகளைக் கண்டறிந்தவர்கள் பார்ப்பனரல்லாதவர்கள் தான். பார்ப்பனர்களின் வைதீக மரபுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சித்தர்கள் கண்டடைந்த வைத்தியமுறை இன்றைய நவீனகால நோய்களுக்கும்கூட சிகிச்சையளிக்கும் வல்லமை கொண்டிருக்கிறது. குடிமைத் தொழிலாளிகளான நாவிதர்கள்தான் இந்திய கிராமங்களின் மருத்துவர்கள். அவர்கள் வீட்டுப் பெண்கள்தான் மகப்பேறு வைத்தியர்கள். AIIMSல் படித்த எந்த மருத்துவரும் கிராமத்திற்குச் செல்லாத நிலையில், அனுபவ வைத்தியர்களின் அறிவுதான் காலகாலமாக இந்திய சமூகத்தின் நோய்களைப் போக்கி வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய மருத்துவக் கல்வியின் முன்னோடிகள் இவர்கள்தான். தம்முடைய அலோபதியே சிறந்தது என்று நிறுவிட மண்சார்ந்த மருத்துவமுறைகளை பின்தள்ளினர் வெள்ளையர். சேவை என்ற நிலையிலிருந்து ஒரு தொழிலாக மருத்துவம் மாறியபோது பார்ப்பனர்கள் மருத்துவத் துறைக்குள் நுழைந்தனர்.

காட்டுவிலங்குகளை வேட்டையாடித் தின்ன அரசர்களுக்கு நேரம் கணித்துக் கொடுப்பதற்கும், வாழ்வின் அந்திமத்தில் வானப்பிரஸ்த கட்டத்திலும், சந்நியாச கட்டத்திலும் மட்டுமே ஒருவன் காட்டுக்குப் போகவேண்டுமென்று ஆசிரம விதிகளை வலியுறுத்திக்கொண்டும் இருந்தது பார்ப்பன அறிவு. ஆனால் காட்டின் மக்களாகிய பழங்குடிகள், அங்கிருக்கும் அரிய மூலிகைகளையும் வாசனைத் திரவியங்களையும் தேனையும் உண்ணத்தக்க கனிகளையும் கிழங்குகளையும் கண்டறிந்து சமவெளியின் மக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இயற்கையை வெற்றி கொள்வது என்கிற அழிவுச் சித்தாந்தத்திற்கு எதிராக இயற்கையோடு இயைந்து வாழும் நெறியை மனிதகுலத்துக்கு கற்றுக் கொடுத்தவர்கள் பழங்குடியினர்.

கலை இலக்கியத்திற்கு வந்தாலும் இரண்டு இதிகாசங்களை படைத்தவர்களும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றியவரும் பார்ப்பனரல்லாதவர்கள்தான். செய்யும் தொழில் சார்ந்த கருவிகள், உற்பத்தி, வினியோகம், வாணிபம் சார்ந்த சொற்களை உருவாக்கி மொழியை வளப்படுத்தியவர்களும் இவர்கள்தான். உழைப்பின் வழி பெற்ற அனுபவங்களை, இயற்கையின் மேன்மைகளை, வாழ்தலின் பாடுகளை தலைமுறைகளுக்கு மாற்றிக் கொடுக்கும் வகையிலான பாடல்களையும் கதைகளையும் நாடகங்களையும் பல்வேறு கலை வடிவங்களையும் உருவாக்கியவர்களும் இவர்களே. வேதத்தில் இல்லாதது எதுவுமேயில்லை என்று பார்ப்பன அறிவு தேக்கமுற்றுக் கிடக்கையில் பிறப்பின் தாலாட்டு தொடங்கி இறப்பின் ஒப்பாரிவரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திற்குமான பாடல்களும் ஆடல்களும் வீரவிளையாட்டுகளும் பார்ப்பனரல்லாதாரின் பெருமைமிக்கக் கொடையாக இன்றும் உள்ளன. தேவபாஷை என்று விதந்தோதப்பட்ட பார்ப்பனர்களின் சமஸ்கிருதம் செத்த மொழியாகவும் பார்ப்பனரல்லாதோரின் மொழிகள் தழைத்து வளர்கின்றவையாகவும் உள்ளன. சமஸ்கிருதம் முதலில் மக்களை ஒதுக்கியது. பின் மக்கள் அதை ஒதுக்கிவிட்டனர். வளர்வதற்கான வீர்யமற்ற அந்த மொழியால் பார்ப்பனர்களின் உண்டியல்களுக்கு தட்சணைகளைத்தான் இன்றும்கூட பெற்றுத்தர முடிகிறதே தவிர இந்திய சமூகத்திற்கு இதுவரை ஆக்கப்பூர்வமாக எதை வழங்கியிருக்கிறது?

மண்ணில் புரண்டு வாழ்கிறவனுக்குத்தான் அந்த மண்ணில் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரியும். விண்ணையே வெறித்துக் கிடப்பவனுக்கு தெரிவது நட்சத்திரமாகவோ சூரியனாகவோ நிலவாகவோ இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு சகமனிதனுக்கு என்ன பெற்றுத்தர முடியும்? எனவே பகுத்துப் பகுத்துப் பார்த்தால் பார்ப்பனர்களின் அறிவு சமூகத்திற்கு துளியும் பயன்படாத- இல்லாத கடவுளுக்கு பயன்படும் அறிவாகவும், பார்ப்பனரல்லாதவர்களின் அறிவு மனிதனின் வாழ்க்கைத் தேவைகளை உற்பத்தி செய்யக்கூடிய - வாழ்நிலையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு மேலேற்றிக் கொண்டு செல்லக்கூடிய அறிவாகவும் இருக்கிறது. ஆகவே வெள்ளையராட்சி வரும் வரை பார்ப்பனர்களுக்கிருந்த பரம்பரை அறிவு விஞ்ஞானப்பூர்வமானதோ மருத்துவம் சார்ந்ததோ உற்பத்தி சார்ந்ததோ அல்ல. அது வெறுமனே கோவிலில் மணியாட்டவும் மந்திரம் ஓதவுமான அறிவாக மட்டுமே முடங்கியிருந்தது. பார்ப்பனர்களுக்கு அடுத்திருந்த சத்திரிய சாதியினரின் அறிவும் ராஜ்ஜியங்களை காப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தேவையான போர்த்தொழில் அறிவாக- அழிவுக்கான அறிவாக- மனிதகுலத்திற்கு எதிரான அறிவாகத்தான் இருந்தது.

IV

சாம்ராஜ்யங்கள் வெள்ளையரால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அரசர்கள் இல்லாத பகுதிகளை விட்டு பார்ப்பனர் வெளியேறினர். நகரங்களை மையமிட்டு வளர்ந்த பிரிட்டிஷ் அதிகாரத்தில் ஒட்டிக் கொள்வதற்காக கிராமங்களை விட்டும் வெளியேறினர். கிராமங்களில் தமக்கிருந்த மானிய நிலங்களை பராமரிக்கும் பொறுப்பு அவர்களுக்கு அடுத்தடுத்த கீழ்நிலையிலிருந்த சாதியினரிடம் ஒப்படைத்தனர். தாங்கள் இதுவரை காத்துவந்த சாதி ஒழுங்குமுறை என்கிற ஒடுக்குமுறையும்கூட கைமாற்றித் தரப்பட்டது. பார்ப்பனர்களுக்குப் பதிலாக சாதியைக் காப்பாற்றும் பொறுப்புக்கு புதிய தலைமைகள் வந்தன. பார்ப்பனர்கள் இல்லாத நிலையிலும் இன்றளவும் கிராமப்புறங்களில் நிலவும் சாதி ஒடுக்குமுறைகளுக்கான உளவியல் பலம் பார்ப்பனர்களிடமிருந்தே பெறப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதே காலகட்டத்தில் உபரி உற்பத்தியை விற்பனை செய்வதில் ஈடுபட்ட வைசிய சாதிகள் பலம் பெறத் தொடங்கின. சத்திரியர்கள் செல்வாக்கிழந்த நிலையில் சமூகத்தின் அடுத்த சக்தியான வைசியர்களை தமக்கு அணுக்கமான சாதியாக பார்க்கத் தொடங்கினர் பார்ப்பனர். வைசிய சாதிகள் சிலவற்றுக்குப் பூணூல் அணிந்துகொள்ள அனுமதிக்குமளவுக்கு இந்த நெருக்கம் வளர்ந்தது. சமூகத்தின் மேல்நிலையிலுள்ள பார்ப்பன சாதி தம்மை அங்கீகரித்ததற்கு பிரதியுபகாரமாக அவர்களுக்கு விசுவாசம் கொண்ட புதிய தொண்டர்களாக மாறிய வைசிய சாதியினர் தமக்கு அடுத்தநிலையிலிருந்த சூத்திரர்களை ஒடுக்குவதில் விருப்பம் கொண்டிருந்தனர். பார்ப்பனர்களும் சத்திரிய சாதியினரும் நடத்தும் இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் இந்த பனியாக்கள் சிலர் சேர்ந்திருப்பதற்கான பின்னணி இதுதான்.

வேத மந்திரங்களை மனனம் செய்வதில் நூற்றாண்டு கால பயிற்சி பெற்றிருந்த பார்ப்பனர்கள் வெள்ளையராட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மனப்பாட கல்விக்குள் தங்களை எளிதாக பொருத்திக் கொண்டனர். (மனப்பாடம் செய்து மார்க் பெறுவதையே தகுதியாகவும் திறமையாகவும் இவர்கள் போற்றுவதற்கான வரலாற்றுக் காரணம் இதுதான்.) மாட்டிறைச்சி உண்பதால் இங்கே சிலசாதியினரை தீண்டத்தகாதவர்களென ஒதுக்கிவைத்த பார்ப்பனர்கள் அதே மாட்டிறைச்சியை மூவேளையும் தின்கிற வெள்ளையர்களுக்கு விசுவாசமான ஊழியர்களாகத் துடித்தனர். மன்னர்களுக்கு ராஜகுருக்களாயிருந்து மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான வழிமுறைகளை சொல்வதில் நீண்ட அனுபவம் பெற்றிருந்த பார்ப்பனர்கள் வெள்ளையருக்கும் கூட தேவைப்பட்டனர். இரண்டு ஒடுக்குமுறையாளர்கள் இணைவது ஒரு இயல்பான கூட்டணிதானே?

தவிர்க்கவியலாமல் கல்வி ஜனநாயகப்படுத்தப்பட்டது. கல்விக்கூடங்கள் பொதுவாக்கப்பட்டன. அவற்றில் யாரும் சேர்ந்து படிக்கலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட, சூத்திர சாதியார் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்ட கோவிலிலோ ஆதிக்கசாதியினரின் தெருக்களிலோ கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன. எனவே கல்விக்கூடத்திற்குள் நுழையும் உரிமை, ஆதிக்கசாதி தெருவில் நுழையக்கூடாதென்கிற சாதித்தடையின் மூலமாக மறுக்கப்பட்டது. இன்றைக்கும் கிராமப்புறங்களில் ஆதிக்கசாதியினர் தெருக்களில் அமைந்துள்ள கல்விக்கூடங்களுக்கு வந்துபோவது ஒரு தலித் மாணவனுக்கு அச்சுறுத்தலான காரியம்தான். மீறி வருகிறவர்கள் சைக்கிளில் வரக்கூடாது, செருப்பணியக் கூடாது என்பது போன்ற தடைகள் இதன் நீட்சியாகவே நீடிக்கின்றன. இப்போதும் பெண்களுக்கு வெளியுலகத் தொடர்புகள் முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்ததால் வீட்டைவிட்டு வெளியேறி கல்விக்கூடங்களுக்கு செல்லும் வாய்ப்பு தடைபட்டது. ஆகவே பிரிட்டிஷ் ஆட்சியிலும் சாதிய பாலின ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டப்படவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த நிலை நீடிப்பதற்கும் வலுவடைவதற்கும் இந்திய உயர்சாதியினருக்கு பிரிட்டிஷ் ஆட்சி உதவிகரமாய் இருந்தது.

பிரிட்டிஷாரின் மருத்துவக் கல்வியை படிப்பதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற முன்னிபந்தனை வைக்கப்பட்டிருந்ததை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும். உண்மையில் சமஸ்கிருதம் பார்ப்பன ஆண்களுக்கு மட்டுமே தெரிந்த மொழி. அதை ஒரு முன்னிபந்தனையாக பிரிட்டிஷார் மாற்றியதன் மூலம் பிறசாதியாரும் பார்ப்பன பெண்களும்கூட மருத்துவப் படிப்புக்கு செல்லமுடியாத ஒரு தடையை நுட்பமாக ஏற்படுத்தினர். இப்படி போட்டியாளர்களை வெளியே நிறுத்திவிட்டு பாதுகாப்பாய் பதுங்கிப் பெற்ற அறிவைத்தான் இன்று தங்களது பரம்பரை அறிவாக பார்ப்பனர்கள் பீற்றுகின்றனர்.

இந்திய மக்களைக் கொண்ட ஒரு ராணுவத்தை பிரிட்டிஷார் உருவாக்கியபோது அதில் முதலில் இணைந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்தான். பிறகு மற்ற சாதியினரும் வந்து சேர்ந்த நிலையில் அவர்கள், தாழ்த்தப்பட்டவர்களோடு ஒரே முகாமுக்குள் தங்கமுடியாது என்று மறுப்பு தெரிவித்தனர். ஊருக்குள் நிலவும் ஒதுக்குதலை ராணுவத்திற்குள்ளும் கொண்டுவரத் துடித்த ஆதிக்கசாதியினரின் விருப்பத்திற்குப் பணிந்து தாழ்த்தப்பட்டோரை ராணுவத்தில் சேர்க்க தடை விதித்தது அரசு. இதையெல்லாம் கண்டு வெகுண்ட அம்பேத்கர், ‘புதுத்துணியைக் கொடுத்து இதேமாதிரி ஒரு சட்டை தைத்துத் தா என்றவனுக்கு, புதுச்சட்டை தைத்து அதையும் பழைய சட்டை மாதிரியே கிழித்துக் கொடுத்த சீனா டைலர் கதையைப் போல’ ஏற்கனவே இருக்கும் கிழிசலை பிரிட்டிஷ் அரசும் அப்படியே பாதுகாப்பதாக குற்றம் சாட்டினார். அதாவது சமூகத்தை நிர்வகிக்கும் பொறுப்புகளில் கடந்த காலத்தைப் போலவே இப்போதும் பார்ப்பனர்களின் மேலாதிக்கம் நீடிப்பதாக குற்றம் சாட்டினார். அம்பேத்கரின் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக மேலும் சில விவரங்களை வரலாறு நமக்குத் தருகிறது.

1770ல் நியமிக்கப்பட்ட பதினைந்து இந்திய ஐசிஎஸ் அதிகாரிகளும் பார்ப்பனர்களாகவே இருந்தனர். 1840ல் இந்திய நிர்வாகத்துறையை ஆய்வு செய்த பிரிட்டீஷ் அதிகாரி ஒருவர், ஒரு நாட்டின் நிர்வாகத்துறை முழுவதும் ஒரு சாதியின் கட்டுப்பாட்டில் இருப்பது ஆபத்தானது என்று அரசாங்கத்தை எச்சரித்தார். ஆனாலும் நிலைமையில் மாற்றமேதுமில்லை. 1885ல் காங்கிரஸ் உருவானபோது இந்தியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வேண்டுமென்ற கோரிக்கையும்கூட பார்ப்பனர்களுக்கு சாதகமாகவே அமைந்தது. படித்த இந்தியர்கள் அனைவருமே பார்ப்பனர்களாக இருக்கும் நிலையில் இது இயல்பானதுதான். இந்தியர் என்ற போர்வைக்குள் பதுங்கி பார்ப்பனர்கள் ஆதாயமடைவதைத் தடுக்கும் வழியேதும் இல்லை.

தடைகளை மீறி படித்த சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் நிர்வாகத்திலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை 1870 தொடங்கி பூலேவும் அயோத்திதாசரும் ரெட்டைமலை சீனிவாசனும் எழுப்பி பார்ப்பன ஏகபோகத்திற்கு முடிவுகட்டும் முதல் மணியை ஒலிக்கச் செய்தனர். பார்ப்பனரல்லாதவர்களுக்கு பங்கு வேண்டுமென்ற கோரிக்கை நாடெங்கும் கிளம்பியது. 1902ல் கோல்காபூர் சமஸ்தானத்தில் நிர்வாகப் பதவிகள் அனைத்திலும் ஐம்பது சதவிகிதத்தை பார்ப்பனரல்லாதவர்களுக்கு ஒதுக்கி மன்னர் சாகுமகராஜ் உத்தரவிட்டார். இதுதான் பார்ப்பனர்களிடமிருந்த 100 சதவீத இடத்தை மறுபங்கீடு செய்து மற்றவர்களுக்கு வழங்கிய முதல் உத்தரவு. அன்று தொடங்கி படிப்படியாக நாட்டின் பல பாகங்களிலும் சாதி பலத்திற்கேற்ப பிரதிநிதித்துவம் வழங்கும் ஏற்பாடு நடைமுறைக்கு வந்தது. இதற்கு 1927ல் சென்னை மாகாணத்தில் நடைமுறைக்கு வந்த கம்யூனல் G.O. ஒரு முன்னோடியாக அமைந்தது. 1932ல் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே ஏற்பட்ட பூனா ஒப்பந்த அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு அதிகாரப் பகிர்வுகள் கிடைத்தன. 1950ல் இயற்றப்பட்ட அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் கம்யூனல் G.O. அரசியல் சட்டத்திற்கு முரணாக இருப்பதாகக் கூறி ஒரு பார்ப்பனர் தொடுத்த வழக்கினடிப்படையில் அவ்வுத்தரவை செல்லாததென்று அறிவித்தன சென்னை உயர்நீதி மன்றமும் பின் உச்சநீதி மன்றமும். பெரியாரின் போராட்டத்திற்குப் பிறகு அரசியல் சட்டம் முதல்முறையாக திருத்தப்பட்டு தமிழகத்தின் வகுப்புவாரி உத்தரவு காப்பாற்றப்பட்டது. 1953ல் காகா கலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட பிற்பட்டோர் கமிஷனின் பரிந்துரைகள் அரசால் ஏற்கப்படவில்லை. 1979ல் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்பட்டோர் கமிஷன் ஓராண்டுகாலம் ஆய்வுசெய்து 11 காரணிகளின் அடிப்படையில் சமூகப் பொருளாதார, கல்வி அடிப்படையில் பிற்பட்டவர்களாக 3743 சாதிகளை அடையாளம் கண்டது. மக்கள் தொகையில் 52 சதவீதம் உள்ள இவர்களுக்கு கல்வி, வேலை ஆகியவற்றில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக 1963 ல் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மக்கள் தொகையில் 52 சதவீதம் பேராக உள்ள பிற்பட்டோருக்கு 27 சதம் என்று பரிந்துரைக்க வேண்டியதாயிற்று.

பத்தாண்டுகளுக்குப் பிறகு இடதுசாரி, வலதுசாரிகளின் ஆதரவில் அமைந்த தேசிய முன்னணி அரசு 1990ல் மண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்றுக்கொண்டு முதல் கட்டமாக வேலை வாய்ப்புகளில் 27 சதவீதம் பிற்பட்டோருக்கானதென்று அறிவித்தது. உயர்சாதியினர் ரகளை செய்தனர். ரதயாத்திரை நடத்தினர். ராஜீவ் கோஸ்வாமியை எரித்தனர். அரசையே கவிழ்த்தனர். அத்வானியும் ராஜீவ்காந்தியும் ஒருகுரலில் எதிர்த்தார்கள். அப்போது ‘கல்வியில் வேண்டுமானால் இடஒதுக்கீடு கொடுத்து தகுதியூட்டம் செய்யுங்கள், வேலைவாய்ப்பில் ஏற்கமாட்டோம்’ என்று எதிர்த்தனர். ஆகவே இப்போது உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவை நியாயவுணர்ச்சியோடு அவர்கள் வரவேற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு பண்பு அவர்களிடம் வெளிப்பட்டதாக வரலாற்றில் எந்தப் பதிவுமில்லை. இப்போது உயர்கல்வியில் ஒதுக்கீடு கூடாது, ஆரம்பக்கல்வியில் வேண்டுமானால் சிறப்பு கவனம் செலுத்துங்கள் என்று எதிர்க்கின்றனர். நாளை ஆரம்பக் கல்வியில் தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் பிற்பட்டோருக்கும் சிறப்பு கவனம் செலுத்தும் திட்டம் ஏதேனும் அறிவிக்கப்படுமானால் அதை எதிர்க்க, பிறப்பதற்கு முன்பே வயிற்றிலிருக்கும்போதே ஏதாவது செய்யுங்கள் என்பது மாதிரியான வாதங்களைக்கூட அவர்கள் இப்போதே யோசித்திருக்கக்கூடும்.

இப்படி தங்களிடமிருக்கும் மொத்த இடங்களில் ஒரு பகுதியை பறித்தெடுத்து மற்றவர்களுக்குப் பங்கீட்டுக் கொடுக்கும் ஏற்பாடுகள் வரும்போதெல்லாம் எதிர்ப்பதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் எவையும் புதியவை அல்ல. கோயிலுக்குள் நுழையவும் குளத்தில் மூழ்கவும் கல்வி கற்கவும் சொத்து வைத்துக் கொள்ளவும் என்னென்ன காரணங்களை காட்டி மறுத்தார்களோ அதையேதான் இப்போதும் சொல்கிறார்கள். இட ஒதுக்கீட்டின் காரணமாக இந்திய சமூகம் சாதி ரீதியாக பிளவுண்டு போகுமென்று சமத்துவத்திற்கான இளைஞர் குழு தேசபக்த முழக்கமிடுகின்றது. ஆதிதிராவிடரும் அருந்ததியரும் அக்ரஹாரத்துக்குள் குடியேறி அர்ச்சகராகி விட்டதைப் போலவும், பார்ப்பனர்கள் அனைவரும் பறைச்சேரியில் மேளமடித்துக் கொண்டும் பொதுக் கழிப்பறையில் மலமள்ளிக் கொண்டும் இருக்குமளவுக்குச் சாதிப்பிரிவினைகள் மறைந்துவிட்டதைப் போலவும் கதையளக்கின்றனர். ஏற்கனவே சாதிரீதியாகப் பிரிக்கப்பட்டு சமத்துவமின்மையின் மீது சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளதால்தான் இப்போது இடஒதுக்கீடு தேவைப்படுகிறது என்கிற அடிப்படையான உண்மையை ஒத்துக்கொள்ள மனமின்றி நிலையை தலைகீழாக விவரிக்கின்றனர்.


இப்போது இந்திய சமூகத்தில் சாதி ஒரு பிரச்சினையே இல்லை என்பதைப்போல பாவனை காட்டுகின்றனர். ஆனால் ஒரு செத்த மாட்டிற்காக ஐந்து தலித்துகளை கொல்வதும், கோயில் கருவறைக்குள் பிறசாதியாரை நுழையவிடாமல் தடுப்பதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பதும், சமஸ்கிருதம் தவிர வேறொரு மொழியில் அர்ச்சனைகள் ஓதப்படாமல் இருப்பதற்கும் சாதிதானே காரணம்? ஆசி வாங்க வந்த தலித்கள் தொட்டுவிட்டால் தீட்டாகிவிடும் என்று தன் கால்களை பட்டுத்துணியால் காஞ்சி சங்கரன் மறைத்துக் கொண்டதற்கும், சங்கரமடத்தின் கல்லூரி விடுதிகளில் சாதியடிப்படையில் உணவுக்கூடம் பிரிக்கப்பட்டிருப்பதற்கும் சாதியல்லாமல் வேறென்ன காரணத்தை சொல்ல முடியும்? ஒரு வேலையைச் செய்வதற்கு தெரிந்திருப்பது ஒன்றே அதற்கு தேவையான தகுதியும் திறமையும். அப்படியானால் மணி ஆட்டத் தெரிந்த அனைவரையும் கோவிலில் அர்ச்சகராக்க வேண்டியதுதானே? ஆகவே தகுதி திறமை என்பதல்ல இவர்களது பிரச்சினை. மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடாது என்கிற சாதிவெறியே தடுக்கிறது.


தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடவும் குழந்தை பெற்றுக் கொள்ளவும் தேவையான உடல் மன ஆரோக்யம்தானே ஒரு திருமணத்திற்கு தேவையான தகுதியும் திறமையும்... பிறகெதற்கு இன்ன சாதியில் இன்ன கோத்திரத்தில் மணமகன்/ள் வேண்டும் என்று இங்கிலிஷ் பேப்பரிலும் இன்டர்நெட்டிலும் விளம்பரம் வருகிறது? ரத்தக்கலப்பு நடக்காமல் சாதியம் ஒழியாது என்று அம்பேத்கர் சொன்னதை ஏற்றுக் கொண்டு செயல்படுத்திய பார்ப்பனர்கள் எத்தனை பேர்? சொந்த வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் சாதியைக் கைவிடாமலே சாதி ஒழிந்து விட்டதைப் போன்று பிதற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது? அம்பேத்கர் சொன்னதைப்போல ஒவ்வொரு தனிமனிதனையும் பிறப்பிலிருந்து இறப்புவரை சாதியை அடிப்படையாகக் கொண்ட இந்துமத கோட்பாடுகள்தானே வழிநடத்தும் நெறியாக இருக்கிறது? ஒவ்வொரு கிராமமும் நகரமும் ஊர் என்றும் சேரி என்றும் கிழிந்து கிடக்கிற யதார்த்தத்தை மறைத்து சாதியே இல்லை என்று ஓலமிடுவது மிகப்பெரும் மோசடி. இன்றுவரையிலும் சுடுகாட்டில்கூட சமத்துவத்தை கொண்டுவர முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆகவே, இடஒதுக்கீட்டால் சமூகம் பிளவுறவில்லை, சமூகம் பிளவுண்டிருப்பதால்தான் இடஒதுக்கீடு என்பதே சரியானது.

உயர் கல்வியில் இடஒதுக்கீடு அமலானால் தகுதியும் திறமையும் வேலைத்திறமும் குறைந்துவிடும் என்பதும் இவர்களது முக்கியமான குற்றச்சாட்டு. இதன் பொருள் பரம்பரை பரம்பரையாக உடலுழைப்புத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பிற்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மூளையுழைப்பு சார்ந்த ஒரு மருத்துவராகவோ, பொறிஞராகவோ, மேலாண்மை வல்லுனராகவோ இருக்கும் தகுதி கிடையாது என்பதே. உடலுழைப்பு என்பதே மிகுந்த அறிவுப்பூர்வமான செயல்பாடுதான். குறிப்பிட்ட கருவியைப் பயன்படுத்தி குறைந்த சக்தியை செலவிட்டு கூடுதல் பலனை பெறுவதற்குத் தேவையான முழு அறிவோடும்தான் ஒரு உழைப்புச் செயல்பாடு நிகழ்கிறது. உடலுழைப்பை அறிவிலிருந்து துண்டித்துப் பார்ப்பது அறிவீனம். அல்லது உழைப்பில் ஈடுபடாததால் உணர்ந்து கொள்ள முடியாத அனுபவக் குறைவாகவும் இருக்கக்கூடும். எனவே உழைக்கும் சாதியினர் வீட்டுப் பிள்ளைகளை அறிவற்றவர்களாக சித்தரிப்பதில் உண்மையேதுமில்லை.

பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்து தேர்வெழுதி பெறுகிற மதிப்பெண்ணைத்தான் இவர்கள் தகுதி திறமை என்கின்றனர். இன்றைக்கு பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, +1 பாடங்கள் நடத்தப்படுவதேயில்லை. ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்புப் பாடமும் +1 வகுப்பிலேயே +2 பாடமும் நடத்தப்படுகிறது. ஓராண்டில் படித்து முடித்து பரிட்சையைச் சந்திக்க திராணியற்ற இம்மாணவர்கள் ஒரே பாடத்தை இரண்டு வருடங்கள் மனப்பாடம் செய்கின்றனர். இவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று தகுதியும் திறமையும் மிக்கவர்களாக கொண்டாடப்படுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் இருக்கும் அரைகுறை வாய்ப்புகளை பயன்படுத்தி அந்த வகுப்புக்கான பாடத்தை அந்த ஒரு வருடத்தில் மட்டுமே படித்து பரிட்சை எழுதுகிற மாணவன் அறுபதோ எழுபதோ மதிப்பெண்கள் பெற்று தகுதி குறைந்தவனாக புறந்தள்ளப்படுகிறான்.

இப்போது நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, ஒரேபாடத்தை இரண்டு வருடம் படித்தவன் திறமைசாலியா அல்லது ஒரே வருடத்தில் படித்தவனா? இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் பார்வையில் என்ன தகிடுதத்தம் செய்தேனும் அதிக மதிப்பெண் எடுத்தவன்தான் திறமைசாலி, அவன்தான் மருத்துவராகவோ பொறியாளராகவோ விஞ்ஞானியாகவோ வருவதற்கு தகுதியானவன். இப்படி இட்டுக்கட்டிய தகுதியும் திறமையும் நமக்குத் தேவையில்லை. அந்த அரசாங்கப் பள்ளி மாணவனின் திறமைதான் இந்த நாட்டின் உண்மையான சராசரித் திறமை. இந்த நாட்டு மக்களின் சராசரி அறிவுக்கும் திறமைக்கும் மீறிய தகுதியோ திறமையோ ஒருவனுக்கு இருக்குமானால் அது இந்த சமூகத்திற்கு பயன்படக்கூடியதாக இருக்கமுடியாது என்பதற்கு இந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கக்கூடியவர்களே உதாரணம். அவர்கள் இந்த நாட்டுக்கு பெரும்பாலும் பயன்படுவதில்லை. டாலர் பிச்சைகளாக ஓடிவிடுகின்றனர். (இந்த உயர் கல்வி நிறுவனங்களில் படித்து முடிக்கிறவர்கள் பத்தாண்டு காலம் வெளிநாடு செல்லக்கூடாது, உள்நாட்டிலேயே பணியாற்ற வேண்டும் என்று சட்டம் வருமானால் தேசம் பற்றி பேசும் இவர்களின் வாய் எந்தத் திசையில் கோணிக்கொள்ளும் என்பது அப்போது தெரியும்)

நகர்ப்புற/ வசதியான மாணவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்கும் கிராமப்புறத்திலிருந்து வருகிற பிற்பட்ட/தாழ்த்தப்பட்ட/பழங்குடி மாணவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்கும் இடையேயுள்ள இடைவெளியை குறைப்பதற்கான ஏற்பாடுதான் இடஒதுக்கீடு. இந்த இடைவெளி ஒருவரது சாதி, சாதிக்கேற்ற பொருளாதார மற்றும் கல்வி பின்புலத்தால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே இடஒதுக்கீட்டை வெறும் பொருளாதாரப் பிரச்னையாகவோ அல்லது வெறும் சாதிப் பிரச்னையாகவோ மட்டும் குறுக்கிப் பார்க்கக்கூடாது. சாதி அடிப்படைக்குப் பதிலாக பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வந்தால் ஏற்றுக் கொள்வதாக குறுக்குசால் ஓட்டுகிறவர்களும் உண்டு. ஓரிரு மதிப்பெண் குறைவாகப் பெற்றவர் சாதி அடிப்படையில் உள்ளே வந்தால் தகுதி குறைந்துவிடும் என்றும் அவரே பொருளாதார அடிப்படையில் வந்தால் தகுதி குறையாது என்றும் விந்தையான வாதத்தை முன்வைக்கின்றனர். சாதி அடிப்படை ஒதுக்கீட்டை எதிர்க்கும் இவர்கள், என்.ஆர்.ஐ கோட்டாவையோ தனியார் கல்லூரிகளில் நடக்கும் ஏலத்தில் படித்து வந்தவர்களையோ பற்றி வாய் திறப்பதில்லை. கோட்டா முறையே கூடாது என்று கொக்கரிக்கும் ஏஐஐஎம்எஸ்-சில் இளநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு முதுநிலை படிப்பில் 25 சதமாக இருக்கும் கோட்டா குறித்தும் மௌனம் காக்கின்றனர்.

இடஒதுக்கீட்டின் மூலம் வருகிறவர்களால் பணியின் தரம் குறைந்துவிடும் என்று தம் பங்குக்கு இந்திய முதலாளிகளும் குதிக்கின்றனர். தாராளமயத்தின் விளைவால் இந்திய சந்தைக்குள் நுழையும் பன்னாட்டுக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்களுக்கு அனுசரனையான ஆடுகளம் (Level playing field) வேண்டும் என்று கோரினர் இந்திய பெருமுதலாளிகள். அதாவது உலகம் முழுவதும் சுரண்டி கொழுத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களோடு போட்டியிட்டு வெற்றிபெற (கொள்ளையடிக்க) முடியாத நிலையில் இருக்கும் இந்திய தொழில்துறையைக் காப்பாற்ற ஒரு இடஒதுக்கீடு தேவை என்பதே இதன் உட்பொருள். முன்னூறாண்டு காலம் காலனிய ஆட்சியின்கீழ் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் தன் ஆளுமைகளை முழுமையாக வளர்த்துக் கொள்ளும் முன்பே தன்னை ஒடுக்கியவர்களோடு போட்டியிட வேண்டும் என்பது நெறியற்ற போட்டியாகும். எனவே இவர்களைப் பாதுகாக்க சில சிறப்பு ஏற்பாடுகளும் வலுத்தவர்கள் மீது சில கட்டுப்பாடுகளும் தேவைப்பட்டன. உள்நாட்டுத் தொழில்பாதுகாப்பு என்கிற கண்ணோட்டத்தில் இந்திய முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகை, கடனுதவிகள், மானியங்கள் அனைத்தும் ஒருவகையான இடஒதுக்கீடுதான்.

‘எங்களுக்குத் தகுதியும் திறமையும் இருக்கிறது. போட்டியில் வென்றால் களத்தில் இருப்போம், தோற்றால் வெளியேறி விடுகிறோம்’ என்று வெத்துச்சவடால் விடவில்லை இந்திய முதலாளிகள். சமமான வாய்ப்புள்ளவர்களுக்கிடையே தான் போட்டி நடைபெறவேண்டும், வலுத்தவனுக்கும் இளைத்தவனுக்கும் இடையே நடந்தால் தாம் அழிக்கப்பட்டுவிடுவோம் என்ற நியாயமான அச்சத்தில் கோட்டா கேட்டனர். பெற்றனர். முதலாளிகளை தமது ஓட்டு வங்கியாக ஆக்கிக்கொள்வதற்காக இப்படியான ஒதுக்கீடுகள் செய்யப்படுவதாக ஒருவரும் பேசுவதில்லை. சலுகை கொடுத்தால் உற்பத்தியின் தரம் குறைந்துவிடும் என்று யாரும் ஓலமிடவில்லை. ஆனால் உயர்கல்வியில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டால், எல்லோரும் சமம், திறமையிருக்கிறவன் ஜெயிக்கட்டும் என்று இந்திய முதலாளிகள் புதுநீதி பேசுகின்றனர்.

சர்வதேசச் சந்தையில் போட்டியிட வேண்டிய நெருக்கடியை உலகமயமாக்கம் ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்போட்டியை எதிர்கொள்ளத் தேவையான தகுதியும் திறமையும் ஆற்றலும் இடஒதுக்கீட்டினால் பாதிக்கும் என்பதாலேயே எதிர்ப்பதாக முதலாளிகள் விளக்கமளிக்கின்றனர். அப்படியானால் இடஒதுக்கீடு என்பதே அமலாகாத இந்த தனியார் தொழில்துறையில் ஏன் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன? இந்த ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் தகுதியும் திறமையும் என்ன? முறையான கல்வியும் பயிற்சியும் பெற்ற நிரந்தர ஊழியர்களை சொற்பமாகவும், போதிய கல்வித் தகுதி பெறாத ஒப்பந்த ஊழியர்களை பெரும்பான்மையாகவும் வைத்துக்கொண்டுதானே உற்பத்தி செய்கின்றனர்? சர்வதேச தரச்சான்றிதழுடன் சந்தைக்குள் புழங்கும் பல நூற்பாலைகளில் எத்தனை பேர் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்தவர்கள்?

வறுமைக்காளான பகுதிகளிலிருந்து கொத்தடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களை ‘சுமங்கலித் திட்டம்’ என்ற பெயரால் ஆலை வளாகத்திற்குள்ளேயே அடைத்துவைத்து வேலைவாங்குகிற அயோக்கியத்தனத்தில் என்ன தகுதியும் திறமையும் வழிகிறது? உதிரி பாகங்கள் முழுவதையும் அவுட்சோர்சிங் வழியாக பெறுகின்ற முதலாளிகள் அங்கே தகுதிக்கும் திறமைக்கும் என்ன அளவுகோல் வைத்திருக்கின்றனர்? சந்தையில் விற்கிற சர்வதேச தரச்சான்றிதழ்களை வாங்கி மாட்டி வைத்துக்கொண்டு அதில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா நியதிகளுக்கும் எதிராக இயங்கும் இந்திய முதலாளிகள் தகுதி திறமை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள்.

இடஒதுக்கீடு அமலாகும் அரசுத்துறைகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அங்கே காலியிடத்தின் எண்ணிக்கை பூஜ்ஜியமே. அந்த பூஜ்ஜியத்தில் எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினாலும் என்ன பலன்? எனவேதான் சமூகத்தின் பொதுவளங்களை உறிஞ்சி வளரும் தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கை வலுப்பட்டு வருகிறது. ஒருவேளை இடஒதுக்கீடு இங்கு வருமானால், வேலைக்கு அமர்த்துவதும் துரத்துவதும் தனது முற்றுரிமையாக இருந்துவரும் நிலை நீடிக்காது என்று அஞ்சுகின்றனர் முதலாளிகள். முதலாளியின் தயவினால் அல்லாமல் அரசியல் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீடு உரிமையின் அடிப்படையில் வேலையில் சேர்வதாய் நினைக்கின்ற ஒரு தொழிலாளி, தங்களது சட்டமீறல்களை சகித்துக்கொள்வானா... தமக்கு அடங்கி நடப்பானா என்பதே இந்த அச்சத்தின் உட்பொருள். தமது சுரண்டலுக்குத் தடையாய் இருந்த தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தையும் அனேகமாக ஒழித்துக் கட்டிவிட்ட நிலையில் புதிதாக வரும் எந்த கட்டுப்பாட்டிற்குள்ளும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதும்கூட அவர்களது எதிர்ப்பிற்கு காரணமாய் உள்ளது. எனவே தான் உயர்கல்வியில் இடஒதுக்கீடு எதிர்ப்பு/ரகளைக்கு இந்திய முதலாளிகள் ஆதரவளிக்கின்றனர்.

V

முதலில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்றவர்கள் நடப்பிலிருக்கும் அனைத்து இடஒதுக்கீடு ஏற்பாடுகளையும் மறுபரிசீலனை செய்து நீக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 60 ஆண்டுகாலமாக நடப்பில் இருக்கும் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யும் காலம் வந்துவிட்டது, இனியும் தாமதிக்கக்கூடாது என்று அத்வானி சொன்னதை இங்கு இணைத்துப் பார்க்கவேண்டும். மூவாயிரம் ஆண்டுகளாக நாட்டின் வளங்களையும் அதிகாரத்தையும் ஏகபோகமாக அனுபவித்து வந்தவர்கள் அதில் ஒரு சிறு பங்கை இழந்ததற்கே இத்தனை கூப்பாடு. பௌத்த மன்னர்களின் கீழ் இழந்த தனித்துவத்தை மீட்பதற்கு கொலைவாளேந்திய புஷ்யமித்ர சுங்கன் என்னும் பார்ப்பனன் கண்ணில் தெறித்த வெறி இன்னும் அடங்கவில்லை.

இவ்வளவு முட்டியும் இடஒதுக்கீட்டைத் தடுக்க முடியாத நிலையில் இப்போது கிரீமி லேயர் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். இடஒதுக்கீட்டின் பலன்களை வசதியானவர்களே வளைத்துக் கொள்வார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். இடஒதுக்கீட்டில் யாருக்கு முன்னுரிமை என்று முடிவெடுப்பது இடஒதுக்கீட்டின் பயனாளிகள் உரிமை. அதிலும் தலையிடுவதும், தாங்கள் சொல்கிறவர்களுக்கே தரவேண்டும் என்பதும் அப்பட்டமான ஆதிக்கசாதி கொழுப்பு.

உண்மையில் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதே பெரும்பாலான பார்ப்பனரல்லாத சாதியினருக்குத் தெரியாது. (அதை Iyer iyenkar technology என்று புரிந்துகொண்டு ஒதுங்கியவர்களும் உண்டு.) எனவே அவர்களும் விண்ணப்பிக்கப் போவதில்லை. இந்த சாதியினரிலேயே ஓரளவேனும் படித்து வேலையிலிருக்கிற ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவருக்குத்தான் இந்த விவரத்தையெல்லாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. தவிரவும் இப்படியான உயர்படிப்புகளுக்கு தன் பிள்ளையை தயார்படுத்தத் தேவையான தொகையை (குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம்) செலவழிக்கவும்கூட அவர்களால்தான் முடியும். ஆனால் அவர் கிரீமி லேயராகி வெளியே நிறுத்தப்பட்டுவிடுவார். சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் ஆட்பட்டிருக்கும் சவரத்தொழிலாளர் அல்லது சலவைத்தொழிலாளர் குடும்பத்திலிருந்து தக்கிமுக்கி ஒருவர் படித்து ஒரு இடைநிலை ஆசிரியராகி, அதே வேலையிலிருப்பவரை திருமணம் செய்து கொள்வாரெனில் அவர்களிவரும் அன்றிலிருந்தே கிரீமிலேயராகிவிடுவார்கள். எனில் ஒதுக்கீடு வந்தாலும் தகுதியான மாணவர் இல்லை என்று அவர்களுக்கான இடங்கள் நிரப்பப்படாத நிலை ஏற்படும். இந்த தந்திரத்தின் தொடர்ச்சியாகத்தான், பூர்த்தியாகாத கோட்டா இடங்களை பொதுஇடமாக அறிவித்து நிரப்பவேண்டும் என்று அசமத்துவத்திற்கான இளைஞர் குழு கோரியது. உச்ச நீதிமன்றமும் இதையே தீர்ப்பாக கூறியுள்ளது.

நடப்பிலுள்ள அனைத்து கோட்டா முறைகளையும் மறுபரிசீலனை செய்து ஆண்டுக்கு 2 சதவீதம் குறைத்துக் கொள்ளவேண்டுமென்றும், தகுதியானவர்கள் இல்லாமல் ஏற்படும் காலி இடங்களை பொதுஇடமாக அறிவிக்க வேண்டுமென்பதும் யூத் பார் (அன்)ஈக்வாலிட்டியின் அடுத்த கோரிக்கை. உச்சநீதி மன்றம் மிகுந்த பெருந்தன்மையோடு ஐந்தாண்டுக்கு ஒருமுறை பரிசீலிக்குமாறு பணித்துள்ளது.

இடஒதுக்கீடு பற்றிய உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு சமூகநீதிக் கோட்பாட்டையும் அதன் சாதனைகளையும் ஒரு நூற்றாண்டு காலம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. சமூகநீதிக்கு எதிரான கடைசி அஸ்திரத்தை நீதிமன்றங்களுக்குள் ஒளிந்துகொண்டும் எய்கிறார்கள். வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஓ.சின்னப்பரெட்டி என்று விதிவிலக்காய் ஓரிருவர் இருந்த காலங்கள் தவிர்த்து அனேகமாக மற்றெல்லா நேரங்களிலும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனோபாவத்தை வெளிப்படுத்துவதை வழக்கமாய் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். யூத் பார் (அன்)ஈக்வாலிட்டி உறுப்பினர்கள் கோருவதெல்லாம் தீர்ப்பாக வருமெனில், பூணூலால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாக நாட்டின் எல்லா அமைப்புகளும் தன்னுணர்விலேயே மாறிக் கிடக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. பெரியார் மொழியில் கேட்பதெனில் அது உச்ச நீதிமன்றமா உச்சிக்குடுமி மன்றமா? யூத் பார் (அன்) ஈக்வாலிட்டியின் வழக்கறிஞர் பிரிவைப்போல நீதிமன்றங்கள் கீழிறங்கி வரக்கூடாது என்ற நமது பேராசையில் வண்டிவண்டியாய் மண்விழுகிறது.

பார்ப்பனிய ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் தொகைக்கு ஏற்ப மறுபங்கீடு செய்வதற்கான தொடக்க முயற்சியே இடஒதுக்கீடு. இது விரிவடைந்து செல்லவேண்டிய தளங்கள் அனேகம் உண்டு. இடம் என்பதை வெறுமனே கல்வி வேலைவாய்ப்பு என்று சுருக்கிப் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. நாட்டின் இயற்கைவளங்களான நிலம்- நீர் நிலைகள், பொது சொத்துக்களான கல்வி நிலையங்கள்- சாலைகள்- போக்குவரத்து வாகனங்கள்- மின்சாரம்- தகவல் தொடர்பு சாதனங்கள்- மருத்துவமனைகள், நிதிநிறுவனங்களான வங்கிகள்- காப்பீடுகள், ஒப்பந்தங்கள், பண்பாட்டுக் கூறுகளான கலை இலக்கியம், பண்டிகைகள், நம்பிக்கைகள் ஆகிய அனைத்தும் இடமாக வரையறுக்கப்பட்டு அவை ஒரு நீதியானமுறையில் மறுபங்கீடு செய்யப்பட வேண்டும். சமூகத்தின் பின்தங்கிய நிலையில் ஒரு உடைப்பை ஏற்படுத்த நிலச்சீர்திருத்தம் தேவை என்னும் இடதுசாரிகள் கருத்தையே மண்டல் குழுவும் பரிந்துரைத்திருப்பது குறித்து சமூகநீதி ஆர்வலர்கள் கவனங்கொள்ள வேண்டும்.

இடஒதுக்கீடு என்றாலே அது தலித்களுக்கானது என்றெண்ணி அவர்களை கோட்டா பிள்ளைகள், கவர்மெண்ட் மாப்பிள்ளைகள் என்று ஏளனம் பேசிய பிற்படுத்தப்பட்டோர் இப்போதாவது தெளிவடைய வேண்டும். தமிழ்நாட்டில் 50 சதவீத இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகிற தாங்களும் கோட்டா பிள்ளைகளே என்பதையும் அது இழிவானதல்ல என்பதையும் உணரவேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை சமமாக கருதுவதற்கு எதிராக பிற்படுத்தப்பட்டவர்கள் என்னென்ன காரணங்களை முன்வைத்தார்களோ அதே காரணங்களைச் சொல்லித்தான் பார்ப்பனர்கள் இன்று பிற்பட்டோரை இழிவுபடுத்துகின்றனர். பிற்பட்டோர், மிகப்பிற்பட்டோர், குற்றப்பரம்பரையினர் என்ற வகைப்பாட்டிற்குள் நின்று இடஒதுக்கீட்டின் பயன்களை அனுபவித்துக் கொண்டே தலித்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையையும் கடைபிடிக்கும் மனவியாதியிலிருந்து பிற்பட்ட சாதியினர் விடுபடவேண்டும். இந்த ரட்டைக்குதிரைச் சவாரி ஆசை நிச்சயமாக இலக்கையடைய உதவாது.

தமக்கான பிரதிநிதித்துவம் அரசியல் சட்டத்திலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற மிதப்பில் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்து அக்கறை கொள்ளாத சில தலித் அறிவுஜீவிகளையும் அமைப்புகளையும்கூட இப்போது தெருவுக்கு இழுத்துவிட்டுள்ளது உச்சநீதி மன்றம். சமூகநீதியை தக்கவைக்கவும் பரந்த தளத்திற்கு முன்னெடுக்கவும் தலித்களும் பழங்குடியினரும் பிற்பட்டோரும் ஒன்றிணைந்து போராடும் நெருக்கடியை ஆதிக்கசாதியினர் உருவாக்கிவிட்டனர். நாம் எப்படி யாருடன் இணைந்து போராடவேண்டும் என்பதை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.

சாதி என்கிற வெற்றுக் கற்பிதத்தை முன்வைத்து ஒவ்வொரு சாதியும் மற்றவர்களை ஒடுக்கும் மனநிலைக்கு இந்திய சமூகத்தை ஆட்படுத்தியது மனுநீதி என்றால், அதன் கேடுகள் யாவற்றிலிருந்தும் விடுபடுவதற்கான முன்னிபந்தனையாக இடஒதுக்கீட்டை வலியுறுத்துவது சமூகநீதியாகும். மனுநீதிக்கும் சமூகநீதிக்கும் இடையேயான போராட்டத்தில் நீ எந்தப்பக்கம் என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் யாரும் தப்பித்துவிட முடியாது. இருதரப்பிலும் சில நியாயங்கள் இருப்பதாகப் பேசுகிறவர்கள், இருதரப்புக்கும் பாதகமில்லாமல் தீர்வு சொல்வதாய் பல்லிளிப்பவர்கள், ‘ஆனால்...’ என்று இழுக்கிறவர்கள் எல்லோரும் முன்வைக்கும் வாதங்கள் தவிர்க்க முடியாமல் இடஒதுக்கீட்டை மறுப்பதாகவே இருக்கின்றன. இருக்கும் இடங்களில் ஒதுக்கீடு என்பதை ஒப்புக்கொள்ளத் தயாரில்லாத சாதிவெறியர்களை சமாதானப்படுத்தும் கேடுகெட்ட முயற்சியாக உயர் கல்வி நிறுவனங்களில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனைகளும் வெளிவருகின்றன.

இடஒதுக்கீட்டிலுள்ள சமூகநீதியை ஒப்புக்கொள்ளும் நெருக்கடியை- புத்தித் தெளிவை அவர்களுக்கு உருவாக்காமலே நடைபெறும் எந்த விரிவாக்கமும் பயனற்றவையே என்பதை உணர்த்தும் இயக்கமாக, உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது.

இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் வைக்கும் வாதங்களுக்குள் மறைந்திருக்கும் ஆதிக்க சாதி வெறியை அம்பலப்படுத்தவும், சமூகநீதிக் கோட்பாட்டை சமரசமின்றி செயல்படுத்துமாறு அரசை நிர்ப்பந்திக்கவும் தேவையான கருத்தியல் போராட்டம் எல்லா முனைகளிலும் வீறுடன் நடத்தப்பட வேண்டும். ஒத்தக் கருத்துள்ளவர்களை திரட்டவும் உடன்படாதவர்களோடு விவாதிக்கவும் இணக்கம் கொள்ளவைக்கவும் நடத்தவேண்டிய இப்போராட்டத்திற்கான தத்துவ பலம் மார்க்சிய அம்பேத்கரிய பெரியாரிய சிந்தனைகளில் பொதிந்திருக்கிறது.

---------------------- ஆதவன் தீட்சண்யா அவர்கள் - அக்டோபர் - டிசம்பர் 2006 "புதுவிசை" இதழில் "பூனைக்கு மணி கட்டும் காலம்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை