Search This Blog

15.11.08

மயிலாப்பூர், மதுரை, திருச்செந்தூர் பக்தி விழாவினால் போக்குவரத்து பாதிப்பு இல்லையா?


மனிதச்சங்கிலியால் போக்குவரத்து பாதிப்பாம்!

மயிலாப்பூர், மதுரை, திருச்செந்தூர்
பக்தி விழாவினால் பாதிப்பு இல்லையா?

சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி


மனிதச் சங்கிலியினால் போக்குவரத்து பாதிப்பு என்று எழுதுகின்ற பார்ப்பனப் பத்திரிகைகள் மயிலாப்பூர், மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் பக்தித் திருவிழா நடக்கும்பொழுது போக்குவரத்து பாதிப்பைப்பற்றி எழுதுவதில்லை; வாய் திறப்பதில்லையே என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை - பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் பற்றி எரியும் ஈழமும் - பார்ப்பனப் பத்திரிகைகளும்! என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் 6-11-2008 அன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

சென்ற வருடம் அழகர் வந்தான். இரவில் வந்து தங்கினார். ரொம்ப டையர்டு ஆகிவிட்டார். அதனால் நேரத்திற்கு எழுந்திருக்க முடியவில்லை. அழகர் ஆற்றில் இறங்கியவுடன் திரும்பிவிட்டார் என்று சொல்லுகின்றார்கள்.

அய்ந்து லட்சம்பேர் மதுரை வைகை ஆற்றில் திரண்டார்கள் என்று எழுதுகின்றார்களே, அப்பொழுது டிராபிக் ஜாமைப் பற்றிச் சொல்லுகிறானா, பார்ப்பனப் பத்திரிகைகள், இதைப்பற்றி எழுதுகின்றனவா?

திருச்செந்தூரில் போக்குவரத்துப் பாதிப்பில்லையா?

திருச்செந்தூரிலே சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது. அசுரனை கொல்வதற்காக ஒரு விழா. அசுரனை ஒழிப்பதற்கு நம்மை ஒழிப்பதற்கே பார்ப்பான் எவ்வளவு அற்புதமாக நாம் கொண்டாடும்படி செய்துவிட்டார்கள்.

அசுரன் என்றால் யார்? அரக்கன் என்றால் யார்? நம்மவர்களும் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

நம்மாட்கள் இன்னமும் அசுரன், அரக்கன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான். ஆகவே நம்முடைய மூளையை எந்த அளவுக்கு காயப்படுத்திவிட்டான் பாருங்கள். இதைவிட பெரிய பிரெயின் டெத் வேறு என்ன இருக்கிறது? நாம் இந்த மூளையை கொண்டுபோய் கொடுத்துவிட்டு வேறு மூளை அ
தாவது புது மூளையை மாற்றி அமைக்க முடியுமா? என்பதைப் பார்க்கவேண்டும்.

போக்குவரத்துப் பாதிப்பு நான்கு மணிநேரம் - மனிதச் சங்கிலியால் ஏற்பட்டது என்று எழுதுகின்றான்.

ஈழத்தில் உள்ள மக்களின் சங்கடம்

ஈழத்தில் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, நாடு இழந்து , சோறு இழந்து இருக்கிறார்களே, அவர்களுக்காக கொஞ்ச நேரம் நாம் சங்கடப்பட்டால் என்ன நட்டம்? என்று மழையில் நனைந்து நின்றோம்.

அவனவன் என்ன செய்தான். இந்த வழியாகப் போனால், சீக்கிரம் போய்விடலாம் என்று எல்லோரும் சென்றால் விளைவு என்ன?

எல்லோரும் சந்தில் - பொந்தில் நுழைந்தார்கள்

இட நெருக்கடி, எல்லோரும் சந்திலும், பொந்திலும் நுழைந்தார்கள். வந்த சங்கடமே அதுதான். வேறு ஒரு சங்கடமும் இல்லை. நடைமுறை உண்மையே அதுதான்!

பள்ளி மாணவ - மாணவிகளின் மனிதச் சங்கிலி

இன்னொரு இடத்தில் பள்ளி மாணவ - மாணவியர் மனிதச் சங்கிலியால் நனைந்து கொண்டிருப்பதை படம் போடுகிறார்கள். பள்ளி கல்லூரி பிள்ளைகளுக்கு அந்த உணர்வு இருக்காதா? அந்தக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்வு இருக்காதா?

அவர்களும் மழையில் நனைந்து கொண்டு நிற்கின்றார்கள். உடனே அந்தப் படத்தைப்போட்டு பத்திரிகையில் எழுதுகிறார்கள். இவ்வளவு கொட்டும் புயல், மழையிலும் மாணவ மாணவி யர்கள் மனித சங்கிலியில் பங்கேற்றார்கள் என்று காட்டுவதற்கு பதிலாக என்ன சொல்கிறார்கள் என்றால் - இந்த மாணவர்கள் எல்லாம் கட்டாயப்படுத்தி அழைத்து வரப்பட்டார்கள் என்று எழுதுகின்றார்கள். மனிதச் சங்கிலியில் பங்கேற்க வேண்டும் என்று எங்கே உத்தரவு போட்டிருக்கின்றார்கள்? எங்கே இருந்து ஆணை வந்தது? பதில் சொல்லுங்கள் நாங்கள் என்று கேட்டோம். பதில் இல்லை.

அறிவு நாணயம் இருக்கிறதா?

அறிவு நாணயம் இருக்க வேண்டாமா? நாய் விற்ற காசு குரைக்காது. கருவாடு விற்ற காசு நாறாது என்று கருதுகிறார்கள். இதற்கு வேறு தொழில்களை செய்யலாமே (பலத்த கைதட்டல்).

இவ்வளவு பெரிய கூட்டம்! எந்தப் பத்திரிகையாவது செய்தி வெளியிடுமா?


இவ்வளவு பெரிய கூட்டம் வந்திருக்கிறது! நாளைக்கு எந்தப் பத்திரிகையிலாவது இச்செய்தி ஒருவரி வருமா? பார்ப்பனர்கள் ரசிக ரஞ்சனி சபா என்று ஒரு அமைப்பை வைத்திருக்கின்றார்கள் (பலத்த கைதட்டல்). இந்த மாதிரி திருவல்லிக்கேணி, மயிலாப்பூரில் பிராமண சபா, மற்ற சபாக்கள் என்று பெயர் வைத்திருப்பார்கள்.

ஓய்வுபெற்ற பார்ப்பனர்கள் எல்லாம் அங்குதான் இருக்கின் றார்கள். அவர்களில் ஒரு அய்ந்து பேர், பத்துபேர் சேர்ந்து ஒரு தீர்மானம் அவாளுக்காகப் போட்டால் அதற்கு எவ்வளவு பெரிய விளம்பரத்தைத் தருகிறார்கள். அது ஏதோ அகில உலக அய்.நா. சபை தீர்மானம் மாதிரி பெரிதாகப் போடுவார்கள். இதைப் போடமாட்டான்.

எங்களைப் பொறுத்தவரையில் எங்களுக்கு விளம்பரம் வேண்டுமா? என்பது முக்கியமல்ல. உங்களுக்கு புத்தி வந்ததா? என்பதுதான் மிக முக்கியமான செய்தி என்று தமிழர்களுக்காக கத்தி, கத்தி சாவோம் நாங்கள் (பலத்த கைதட்டல்). தமிழர்கள் இதை உணர வேண்டும். தமிழினத்திற்கு உணர்வை உண்டாக்க வேண்டும்.

ஆதித்தனார் காலத்தில் பெரியார் ஆதரித்த தினத்தந்தி பத்திரிகை


நீங்கள் விடுதலையை வாங்குங்கள். முரசொலியை வாங்குங்கள். தினத்தந்தியை வாங்குங்கள் என்று மட்டும் சொல்லமாட்டோம். அதை நீங்கள் இப்படி எண்ணிப் பார்க்கலாம். நல்ல வாய்ப்பாக ஒரு பெரிய சாதனை என்னவென்றால் தந்தை பெரியார் அவர்களுடைய தொலைநோக்கு இருக்கிறது பாருங்கள். அய்யா அவர்கள் அந்த உணர்வைப் பற்றித்தான் கவலைப்படுவார்.

தினத்தந்தி பத்திரிகையை ஆதித்தனார் அவர்களுடைய காலத்திலே முழுக்கப் பெரியாரே ஆதரித்தவர். அப்பொழுது சில பேர் கேட்டார்கள். அய்யா அவர்களிடமே போய் கேட்டார்கள். என்னங்க தினத்தந்தியிலும் மூடநம்பிக்கை செய்தியை நிறைய போடுகிறார்களே என்று.

பார்ப்பனர் ஆதிக்கத்தை ஒழித்த ஆதித்தனார்

அய்யா அவர்கள் சொன்னார். தினத்தந்தியில் மூடநம்பிக்கைச் செய்திகள் இருப்பது எனக்கே தெரியும். அவர்களுக்குப் பத்திரிகை விற்கவேண்டும் என்று பல விசயங்கள் இருக்கின்றன.

ஆனால் ஒன்றே ஒன்று. இந்தப் பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்தை ஆதித்தனார் அவர்கள் ஒழித்தார் - பாருங்கள் (பலத்த கைதட்டல்). அது ஒன்றிற்காகவே பாராட்டலாம் என்று அய்யா அவர்கள் சொன்னார். இன்றைக்கு அந்தப் பத்திரிகைக்கூட இல்லை என்றால் தமிழனுக்கு வேறு ஏது பத்திரிகை?

தினத்தந்திமூலம் மூடநம்பிக்கையைப் பரப்புகிறார்கள்

தினத்தந்தியில் எங்களுக்கு ஒவ்வாத செய்திகள் நிறைய இருக்கின்றன. அவர்களும் தினத்தந்தி மூலம் மூடநம்பிக்கைகளை நிறைய பரப்புகிறார்கள். நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் விட தமிழின உணர்வு என்பது இருக்கிறது பாருங்கள், அந்த இன உணர்வு என்று வரும்பொழுது நாங்கள் பாராட்டுகிறோம்.

நூற்றுக்கு நூறு சதவிகிதம் எங்களோடு வரவேண்டும் என்று சொல்லமாட்டோம். தமிழன் உத்தியோகத்திற்கு வரவேண்டும், தமிழன் நீதிபதியாக வரவேண்டும் என்று நாடு முழுக்க நாங்கள் கத்துகிறோம்.

தமிழன் நீதிபதியானால் திருப்பதிக்குத்தான் போகின்றான்


தமிழன் நீதிபதியாகி வருகிறான். தமிழனுக்கு கல்லூரியில் இடம் கொடு. படிக்க வாய்ப்புக் கொடு, என்று கத்துகிறோம். அப்படி நீதிபதியாக வருகின்றவன் உங்களால்தாங்க நீதிபதியாக வந்தோம், நீங்கள் சத்தம் போட்டுத்தான் நாங்கள் நீதிபதியானோம். பதவிக்கு வந்தோம் என்று நேராக வந்து எங்களிடம் சொல்லுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

நேராக திருப்பதிக்குப் போகின்றான் (சிரிப்பு - கைதட்டல்). ஏதோ திருப்பதி வெங்கடாஜலபதி கையிலே அப்பாய்ண்ட் மென்ட் ஆர்டர் வைத்திருக்கிற மாதிரி - அவர்தான், நீ போய் இந்த உத்தி யோகத்தைப்பார் என்று கையிலே கொடுத்த மாதிரி நினைக்கின்றேன்.

பதவி பெற்றவனுக்கு கலைஞர் - பெரியார் திடல் தெரியவில்லை


பதவி பெற்றுவன் - ஒன்று நேராக கலைஞரிடம் போகவேண்டும்; இல்லையென்றால் பெரியார் திடலுக்கு வரவேண்டும். அய்யா இந்த ஆட்சி இருப்பதை ஒட்டித்தானய்யா இந்த வாய்ப்பு. இல்லையென்றால் இந்த வாய்ப்பு இல்லையே என்று நினைக்கவேண்டும். அந்த எண்ணம் உண்டா?

முதலில் இன உணர்வு

எனவே இன உணர்வு என்று வருகின்றபொழுது கொட்டை போட்டவனாக இருந்தாலும் சரி, கொட்டை கட்டினவனாக இருந்தாலும் சரி, பொட்டு வைத்திருந்தாலும் சரி, திருநீறு பூசிய வனாக இருந்தாலும் சரி - பூணூல் இல்லாதவனா? முதலில் அதை பார். கொஞ்சம் கொஞ்சமாக வந்து, அப்புறம் திருத்தலாம். நம்மாளே சொல்லுவான் பாருங்கள். பெரியார் இல்லையென்றால் நம்மாளே உத்தியோகத்திற்குப் போயிருக்க முடியாது என்று சொல்லுவான் பாருங்கள்.

பெரியார் இல்லையென்றால் என் பிள்ளை படித்திருக்க முடியாதுங்க. அதையெல்லாம் சொல்லுகின்றான். ஆனால், நான் சர்ச்சுக்குப் போய் முட்டிப்போட்டுக் கொண்டுதான் இருப்பேன். அல்லது கோவிலுக்குப் போய் பஸ்கிப் போட்டுக் கொண்டுதான் இருப்பேன் என்று சொல்லுகிறவர்கள் - குறைந்த பட்சம் நாம் செய்யவேண்டியது என்ன?

தமிழர்கள், திராவிடர்கள் என்ற உணர்வு படைத்தவர்கள்

தமிழர்கள் என்ற உணர்வு படைத்தவர்கள் திராவிடர் என்ற உணர்வு படைத்தவர்கள், பார்ப்பன ஏடுகளை வாங்கமாட்டோம் என்பதிலே உறுதியாக இருக்கவேண்டும். (பலத்த கைதட்டல்). பத்து பேர்தான் பார்ப்பன ஏடுகளைப் புறக்கணித்தோம் என்று கவலைப்படாதீர்கள். கொஞ்சம், கொஞ்சமாக அந்த எண்ணங்கள் வரவேண்டும்.

முரசொலியில் சின்னக் குத்தூசி கட்டுரை


நாடு தழுவிய அளவிலே இந்த உணர்வு வேக வேகமாக வர வேண்டும். சில நாட்களுக்கு முன்னாலே நம்முடைய சின்னக் குத்தூசி அவர்கள் முரசொலியில் (4-11-2008) ஒரு கட்டுரை எழுதி யிருக்கின்றார்.

விடுதலைப்புலிகளும், விகடனும், தினமணியும், ஜெயலலிதாவும் என்கிற தலைப்பில் ஒரு அற்புதமான ஒரு தொகுப்பை எழுதிக் காட்டியிருக்கின்றார். பார்ப்பனர் என்று எழுதுவது விடுதலைக்கு அடுத்தது முரசொலி

தினமணி கருத்துக் கணிப்பு:

விடுதலைப்புலிகளை பார்ப்பனத் தலைவர்களும், இலங்கைத் தமிழர்களுக்கு இன்னல்கள் இழைக்கப்படும் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தமிழக மக்கள் சிங்கள அரசின் அராஜகத்தை எதிர்த்துப் போராட்டங்களை நடத்துவதும், உடனடியாகப் பார்ப்பனத் தலைவர்களும், பார்ப்பனப் பத்திரிகையாளர்களும் என்று எழுதியிருக்கின்றார். பச்சையாகவே முரசொலியில் பார்ப்பனர் என்று எழுதியிருக்கின்றார். எழுதியவர் சின்னக் குத்தூசி. தெளிவாக எழுதியிருக்கின்றார். ஏனென்றால் உண்மையை எழுதியிருக்கின்றார். ஒரு சமுதாய விஞ்ஞானி என்று பார்க்கும்பொழுது அதில் தயவு தாட்சண்யமே கிடையாது.

ஒரு ஏடு விடுதலைக்கு அடுத்தபடியாக பார்ப்பான் என்று எழுதுகின்ற துணிச்சல் உண்டு என்றால் அது முரசொலி ஏட்டிற்குத்தானே இருக்கிறது (பலத்த கைதட்டல்). நம்முடைய தமிழக முதல்வர் அவாள்! இவாள்! என்று சொல்லிவிட்டாராம். அதனால் உடனே தினமணி, தினமலரில் எழுதுகிறார்கள். அவாள்! இவாள்! என்று சொல்லுகிறார் என்று. அப்புறம் எவாள் என்று சொல்லுவது? (கைதட்டல்). எங்களுக்கு அது உறுதியாகத் தெரியாதய்யா. நாங்கள் எப்படி அதைச் சொல்ல முடியும்? (பலத்த கைதட்டல்). எங்களுக்கு ஆத்திரம் வருகிறது. ஏனென்றால் எங்களுடைய இனத்தை இந்த அளவுக்கு அழித்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இன்னமும் நரகாசுரவதம், இன்னமும் சூரசம்ஹாரமா?

நம் கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்துவதா?


அதற்கு நம்மாட்களின் கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்துவதா? வேதனையாக இருக்காதா? மேலும் குத்தூசி எழுதுகிறார்.

இலங்கைத் தமிழருக்கு இன்னல்கள் விளைவிக்கப்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும், தமிழக மக்கள் சிங்கள அரசின் அராஜகத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்துவதும், உட னடியாகப் பார்ப்பனத் தலைவர்களும், பார்ப்பனப் பத்திரிகை களும் இதை இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கும் ஆதரவு அல்ல. விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் முயற்சியே என்று கூக்குரலிடுவதும் வாடிக்கையாகியும் வருகிறது. விடுதலைப்புலிகளை ஆதரித்த சீமானோ, அமீரோ உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசினால் இவர்களை இன்னமும் ஏன் கைது செய்யவில்லை என்று தமிழின விரோதிகள் நினைப்பார்கள்.

அரசுக்கு சில கடமைகள் உண்டு

அரசாங்கத்திற்கு என்று சில கடமைகள் உண்டு. நாங்கள் போராட்டம் நடத்தினால் கைது பண்ணுகிறார்களா? இல்லையா? காமராஜரை ஆதரித்துக் கொண்டிருந்தார் தந்தை பெரியார்.

பெரியாரை தண்டித்தார்களே, உடனே நாங்கள் காமராஜர் ஆட்சி ஒழிக என்று சொல்லவில்லையே. தண்டனை அடைந்த பொழுதும் அப்பொழுதும் காமராஜரைத்தான் ஆதரித்தோம் என்று தந்தை பெரியாரும், திராவிடர் கழகத்தினரும் சொன்னார்களே, அதற்குப் பெயர்தான் இன உணர்ச்சி.


அதுமாதிரி அரசாங்கம் என்று வரும்பொழுது அவர்களுக்கு சில கடமைகள் உண்டு. அந்த கடமைகளை அவர்கள் செய்வார்கள்.

முதல்வருக்கு தர்மசங்கடத்தை உருவாக்கி


முதல்வர் அவர்களை நடவடிக்கை எடுக்கவைத்து சில தர்மசங்கடத்தை உண்டாக்கி சில பலனை அரசியல்லாபத்தை அடையவேண்டும் என்று நினைப்பதே கூட நியாயமா அது? அதேசமயம் தினமணி வைத்திய நாதய்யரோ, விகடன் சீனிவாச அய்யரோ தமிழக மக்களின் கருத்துக் கணிப்பு என்ற பெயரால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தமிழக மக்களின் பெரும்பாலானவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று எழுதினால் எவனும் (ரொம்ப கோபத்தோடு சின்னக் குத்தூசி எழுதியிருக்கின்றார் (கைதட்டல்). அவர் எப்பொழுதும் ரொம்ப மரியாதையோடு எழுதக்கூடியவர். அவருக்கே கோபம் வந்து எவன் என்று எழுதிவிட்டார்).

தினமணி வைத்தியநாதய்யரை கைது செய் என்றோ, விகடன் - சீனிவாசஅய்யரைக் கைது செய் என்றோ கூறமாட்டார்கள்.

தினமணி கருத்துக் கணிப்பு


தினமணி கருத்துக்கணிப்பு என்ற பெயரால் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வெளியிட்ட புள்ளி விவரம் இது.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என்று 51 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்தார்கள் என்று தெரிவித்தி ருப்பது தினமணி (கைதட்டல்). இப்படி தினமணி எழுதினால் தேச பக்தி. மற்றவர்கள் சொன்னால் எழுதினால் தேசத் துரோகம். ஜெயிலுக்குப் போகவேண்டும். இதுதானய்யா மனுதர்மம். ஒரு குலத்திற்கு ஒரு நீதி. இதுதானே பார்ப்பனர்களின் இரட்டை அளவுகோல். இதுதானே பார்ப்பன தர்மம்.

புலிகள் தோற்கடிக்கப்பட்டு பிரபாகரன் சுற்றி வளைக்கப் பட்டால் என்ற கேள்விக்கு தமிழ்நாட்டில் அரசியல் புகலிடம் தரப்பட வேண்டுமென்று 23 சதவிகிதத்தினரும் அய்க்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்று 25 சதவிகிதத்தினரும் அப்படி நடக்காமலிருக்க நமது இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று 31 சதவிகிதத்தினரும் கருத்து தெரிவித்தி ருக்கின்றார்கள்.

புலிகள் இயக்கம் பற்றி கருத்து

புலிகள் இயக்கம் பற்றி கருத்தென்ன? என்ற கேள்விக்கு கருத்து தெரிவித்த மக்களில் 12 சதவிகிதம் பேரே பயங்கரவாதிகள் என்ற பட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஈழ விடுதலைக் காகப் போராடுகிறவர்களுக்கு 30 சதவிகிதத்தினரும், ஈழத் தமிழர்களின் நலனுக்காகப் பாடுபடுகிறவர்கள் என்று 22 சதவிகிதத்தினரும் ஈழத் தமிழர்களின் ஒரே உண்மையான குரல் என்று 36 சதவிகிதத்தினரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள் (கைதட்டல்).

தமிழக அரசியல்வாதிகள் தலையிடுவது சரியா? என்ற கேள்விக்கு, அங்கே இருப்பதும் தமிழர்கள் என்பதால் சரியே என்று 44 பேர் பதில் அளித்திருக்கிறார்கள் என்பதாக புள்ளி விவரம் வெளியிட்டு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டு மென்று புலிகள் தோற்கடிக்கப்பட்டு பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்டால் தமிழ்நாட்டில் அவருக்கு அரசு புகலிடம் தரவேண்டும்.

அய்க்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும். அப்படி நடக்கா மலிருக்க இந்திய ராணுவத்தை அனுப்பவேண்டும். இப்படி யெல்லாம் விடுதலைப்புலிகளைப்பற்றி ஈழத் தமிழர்களுக்காக போராடுகிறார்கள். ஈழத் தமிழர்களின் நலனுக்கான ஒரே உண்மையான குரல் விடுதலை புலிகள் குரல்தான்.

ஈழத்தில் இருப்பவர்களும் தமிழர்கள். இங்கே இருப்பவர்களும் தமிழர்கள் என்பதற்காக ஈழப் பிரச்சினையிலே தமிழக அரசியல்வாதிகள் தலையிடுவது தவறல்ல.

------------------------------ நன்றி: "விடுதலை" 15-11-2008

0 comments: