Search This Blog

24.11.08

இன்றைக்குமக்களை நோக்கி வீறுகொண்டு எழுந்து நிற்கும் ஆபத்து!


முன்னிலைப்படுத்தப்பட வேண்டியது எதனை?


வட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து விரைவில் மக்களவைக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது.

இந்த இருவகைத் தேர்தல்களிலும் மக்கள் முன் வைக்கப்பட வேண்டிய பிரச்சினை என்ன என்பது மிக முக்கியமாகும்.

பொருளாதார நெருக்கடி என்பது இன்றைய தினம் உலகம் பூராவுமே ஏற்பட்டுள்ள ஒன்று. அதன் காரணமாக விலைவாசிகள் உயர்ந்து இருக்கின்றன என்பது யதார்த்தமாகும்.

இந்தக் காலகட்டத்தில் இன்றைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் ஆளும் கட்சியாக இருந்தாலும்கூட விலைவாசியின் நிலைமை இதேபோல்தானிருக்கும். எந்த மந்திரக்கோலைக் கொண்டும் அவர்களால் மாற்றியமைத்திட முடியாது.

எதிர்க்கட்சியினர் பாமர மக்கள் நாக்கில் தேனைத் தடவுவதுபோல விலைவாசிப் பிரச்சினையை பூதாகரப்படுத்தி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நிமிடமே அதனைச் சரி செய்துவிடுவோம் என்று கூறுவதைக் கண்டு பொதுமக்கள் ஏமாந்துவிடக் கூடாது.

குபேர பூமி என்று கூறப்பட்ட அமெரிக்காவிலிருந்து, பிரிட்டன், ஜப்பான் உள்பட நாடுகள் பொருளாதாரச் சிக்கலால் மிகவும் நொடிந்து போயிருக்கின்றன. அந்தந்த நாடுகளில் எல்லாம்கூட மக்கள் போராட்டம் இருக்கத்தான் செய்கிறது.

இன்றைக்கு மக்களை நோக்கி வீறுகொண்டு எழுந்து நிற்கும் ஆபத்து ஒன்று இருக்கிறது. அதுதான் இந்துத்துவா தீவிரவாதமாகும். மக்களை மதவாரியாகக் கூறுபோட்டு, வாக்குகளை அள்ளிக் கொண்டுவிடலாம் என்ற நப்பாசையில் பா.ஜ.க.வும், அதன் கூட்டாளிகளும் வாய்பிளந்து காத்துக் கொண்டு கிடக்கின்றன.

நாட்டில் நடக்கும் அத்தனைக் கலவரங்களும் முஸ்லிம்களால் நடைபெறுகின்றன என்ற ஒரு தோற்றத்தை பார்ப்பன ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்துள்ளன. இஸ்லாமிய தீவிரவாதம் என்ற அடைமொழியையே அதற்குக் கொடுத்துள்ளனர்.

ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடந்த வன்முறைகள் - ஒரு சதிக் கும்பலின் முகமூடியைக் கிழித்துக் காட்டிவிட்டன.

குஜராத் மாநில சபர்கந்தா மாவட்டம் மொடாகாவில் வெடிக்கப்பட்ட குண்டும்; (ஒரு சிறுவன் பலி - பத்துப் பேர் காயம், 29.9.2008) அது நடந்த பத்தாவது நிமிடத்தில் மகாராட்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் நகரில் நூராணி மசூதியின் முன் குண்டுவெடிப்பு (நான்கு பேர் பலி, 70 பேர் படுகாயம்), இவை இரண்டும் சங் பரிவார்க் கும்பலின் திட்டமிட்ட கைவரிசை என்று கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

இராணுவத்தினர் துணையோடு, பெண் சாமியார், சங்கராச்சாரியார் என்ற அளவுக்குத் தகுதியுள்ள ஆசாமிகள் எல்லாம் இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளனர் என்கிற தகவல் நாட்டையே குலுக்கிவிட்டது.

இந்திய இராணுவத்திலேயே இந்துத்துவா நுழைந்துவிட்டது - இராணுவத்தில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து இந்த வன்முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிற தகவல் பேரச்சத்தை ஏற்படுத்திவிட்டது
. இது எங்கு போய் முடியும் என்ற ஏக்கமும், திகிலும் இன்னொரு பக்கம்.

இந்த நிலையில், நடக்க இருக்கும் தேர்தலில் இந்தச் சதியில் சம்பந்தப்பட்டு இருக்கும் கும்பலின் அரசியல் வடிவமான பா.ஜ.க. முறியடிக்கப்படாவிட்டால், நாட்டு மக்களுக்கு, குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு வாழ்வுரிமை என்பதே கேள்விக் குறியாகிவிடும். அது ஒட்டுமொத்த சமுதாயத்தையே நாசப்படுத்திவிடும்.

இந்தியாவில் 17 மாநிலங்களில் இந்துத்துவா தீவிரவாதிகளின் அபாயகரமான நடவடிக்கைகள் கொம்பு சீவிக் கிளம்பியிருக்கின்றன.

பா.ஜ.க. சம்பந்தப்பட்ட ஆட்சி உள்ள மாநிலங்களில் மிகவும் வெளிப் படையாக அரசு அதிகாரங்களின் துணையோடு சிறுபான்மையினர் கொன்றொழிக்கப்படும் வேட்டை வேகமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

நரேந்திர மோடி முதலமைச்சராக உள்ள குஜராத் மாநிலம் இந்துத்துவாவின் பரிசோதனைக் கூடமாக ஆக்கப்பட்டு, அதிலும் அந்தக் கூட்டம் வெற்றி பெற்றுவிட்டதாகக் கணித்துள்ளனர் - இரண்டாயிரத் துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்ட பின்பும், அதே நீரோ மன்னன் நரேந்திர மோடி ஆட்சியைப் பிடித்துவிட்டார்.

அந்த நப்பாசையால் தான் அடுத்து ஒரிசாவில் அதே பாணி கலவரத்தை நடத்தியுள்ளனர். அடுத்து அந்த மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மாநிலத்தில் இதுவரை நூறு கிறித்துவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

2000 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் 6464 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன; 2393 பேர் பலியாகியுள்ளனர். 31,077 பேர் காயமடைந்துள்ளனர் என்று தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இவை பெரும்பாலும் பா.ஜ.க. ஆட்சியின் உதவியோடு அரங்கேறியுள்ளன.

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் ஆனாலும் சரி, மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி மக்கள்முன் எடுத்து வைக்கப்படவேண்டிய பிரச்சினை இதுதான்.

இந்தியத் துணைக் கண்டத்தில் சகோதரத்துவம் நிலைக்க வேண்டுமா? வேண்டாமா? சட்டப்படியான வாழ்க்கை முறை பாதுகாப்பு இவற்றிற்கு உத்தரவாதம் வேண்டுமா? வேண்டாமா?

வேண்டும் என்றால், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிகளை வாக்குகள்மூலம் ஆணிவேரோடு வீழ்த்துங்கள் என்ற குரல் வீறுகொண்டு எழவேண்டும். தேர்தல் களத்தில் முதன்மையானது - முடிவானது எல்லாமே இதுவாகவே இருக்கவேண்டும். இல்லையெனில், நாடே குஜராத்தாகும் - எச்சரிக்கை!


---------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 24-11-2008

0 comments: