Search This Blog

19.11.08

தமிழ்நாடு மகாராஷ்டிரம் ஆகவேண்டுமா?


விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் குழந்தைகளையும், பெண்களையும், மாணவர்களையும் கொன்று குவிக்கும் கொடுமை மத்திய அரசின் காதுகளில் விழவில்லையா?

இதற்குமேலும் தமிழ்நாடு பொறுமையாக இருக்க முடியுமா?

* தமிழ்நாடு மகாராஷ்டிரம் ஆகவேண்டுமா?

* மேனாள் பிரதமர் இந்திரா காந்தி காட்டிய துணிவும், வீரமும், அணுகுமுறையும் எங்கே போயிற்று?

* அடுத்துவரும் தேர்தலைக்கூட மத்திய அரசு கருதவில்லையா?

தமிழ்நாட்டின் - தமிழக அரசின் அறவழிச் செயல்பாடுகளை
அலட்சியப்படுத்தாதீர்கள் - கடும் விலை கொடுக்க நேரிடும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை


தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரால் இலங்கை அரசு தமிழர்களைக் கொன்றொழிக்கும் கண்மூடித்தனமான போருக்குப் பிறகும் - இந்திய அரசு பொறுமை காட்டுவதைக் கண்டித்தும், தமிழர்களின் பொறுமையைப் பலவீனமான ஒன்றாகக் கருதக்கூடாது என்பதை வெளிப்படுத்தியும், வரும் தேர்தலில் அரசியல் ரீதியாக அதன் எதிர்விளைவு இருக்கும் என்பதைத் தெரிவித்தும், தமிழ்நாட்டின் அறவழிச் செயல்பாடுகளை அலட்சியப்படுத்தினால், கடும் விளைவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

இலங்கை வடக்கு மாகாணமான தமிழர்கள் வாழும் பகுதியைச் சுடுகாடாக்க ராஜபக்சேயின் சிங்கள இராணுவம் திட்டமிட்டு, ஈவிரக்கமின்றி தமிழினப் படுகொலை செய்வதை, விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம், தீவிரவாதிகளை அடக்குகிறோம் என்ற பொய்களைக் கூறி இடைவிடாது நடத்திக் கொண்டுள்ளது!

நெஞ்சை வெடிக்கச் செய்யும் நிகழ்வுகள்!

நித்தம் நித்தம் நெஞ்சுருக்கும் நிகழ்வுகள் நொடிதோறும் அங்கே நடந்து வருவதை அறியும் எவரது இதயமும் வெடித்துச் சிதறும் அளவுக்கு வேதனை ஒரு தொடர் படலமாக தொடர்ந்துகொண்டே இருக்கிறது!

இந்தக் கொடுமைக்கு இந்தியப் பேரரசின் ஆசியும், ஆதரவும் எங்களுக்கு உண்டு என்று ராஜபக்சேயும், சிங்கள அரசு அதிகாரி களும் உரத்து முழங்குவது ஏனோ நமது மத்திய அரசின் காதுகளில் - மதிப்பிற்குரிய நம் பிரதமரின் காதுகளில் விழாமல் இருக்கிறதோ என்று தெரியவில்லை.

அதிகாரிகளின் திசை திருப்பலா?


பிரதமர் நல்லவர்; மனிதாபிமானம் அறிந்தவர். அவரது பார்வையைத் திசை திருப்பியும், இத்துயரக் கொடுஞ்செய்திகள் காதில் விழாது தடுப்பவர்கள் அருகில் உள்ள தமிழினப் பகைவர் களான சிலர், அல்லது பல உயர் அதிகாரிகளா? ஆங்கிலப் பத் திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களா? என்ற கேள்வியைத்தான் நடுநிலையாளர்கள் இன்று கேட்கத் தொடங்கிவிட்டனர்!

ராஜபக்சேயிடம்
கண்டிப்பான குரலில் கூறாதது - ஏன்?


தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சியினரும் ஒன்று திரண்டு முதலமைச்சர் தலைமையில் ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றிய தீர்மானத்திற்குப் பிறகு தமிழக சட்டமன்றத்தில் எதிர்ப்பே இன்றி அனைத்து எதிர்க்கட்சிகளும், அ.தி.மு.க., ம.தி.மு.க. போன்ற ஆளுங்கட்சி எதிரணியினரும், காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்ட்டுகள் அனைவரும் ஒரே குரலில் கடந்த 12 ஆம் தேதி ஒன்றுபட்டு போர் நிறுத்தத்தை வலியுறுத்திய தீர்மானம் - இவைகளை மத்திய அரசு ஏற்று, டில்லிக்கு வந்து பிரதமரைச் சந்தித்த இராஜபக்சேயிடம் கண்டிப்பான குரலில் கூறியிருந்தால், இத்தகைய தமிழ் இனப் படுகொலை, அப்பாவித் தமிழர்கள்மீது குண்டுமழை பொழியும் அகோரம் தொடருமா?

தமிழ்நாடு மகாராஷ்டிரம் ஆகவேண்டுமா?


காங்கிரஸ் கட்சி ஆளும், மகாராஷ்டிரத்தில் தோன்றிய நிலை போல் தமிழ்நாடு ஆனால்தான், நாங்கள் கவனஞ்செலுத்துவோம் என்று கூறப் போகிறதா டில்லி அரசு?

போர் நிறுத்தம் தவிர, எதுவும் எங்களை சமாதானப்படுத்தாது! - முதலமைச்சர்

கோவையில் கூடிய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் சரி, செய்தியாளர் பேட்டியின் போதும் சரி, நமது தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் போர் நிறுத்தம் தவிர, எதுவும் எங்களை - தமிழர்களை - சமாதானப்படுத்தாது என்று திட்ட வட்டமாக முழங்கியுள்ளது, சுவர் எழுத்து போன்றதல்லவா?

டில்லியின் ஆட்சித் தலைமையும், காங்கிரஸ் தலைமையும் இதைப் புரிந்து செயல்படாமல் இருப்பது நியாயந்தானா?

இப்பொழுது என்ன நடக்கிறது?


இன்றுகூட இலங்கையில் நடக்கும் கடும் போரில் எப்படியெல்லாம் ஏதுமறியா எம் இனத்தவர் அல்லற்பட்டு, ஆற்றாது, அழுது கண்ணீர் விட்டு, சாவில் அமைதி காணும் இறுதி நிலைக்குத் தள்ளப்பட்டிருக் கிறார்கள் என்ற செய்திகளை படிக்கிற நேரத்தில் வேதனையால் வெந்து குமுறுகின்றோம்.

தப்பி ஓடும் குழந்தைகளையும், பெண்களையும்
கொன்று குவிக்கும் கொடுமை!


கிளிநொச்சியைப் பிடிக்க கடந்த 2, 3 மாதங்களாக முடியாத சிங்கள இராணுவம், இப்போது மீண்டும் பூநகரிக்கு நேர் கிழக்கே உள்ள பரந்தன் என்ற நகரத்தில் உள்ள மக்கள்மீது ஏவுகணைகளை யும், பீரங்கிக் குண்டுகளையும் சரமாரியாக வீசி, தமிழர்களின் வீடுகளைத் தரைமட்டமாக்கியதோடு, தப்பி ஓடும் பெண்கள், குழந்தைகளைக் கொன்று குவிக்கிறது.

நேற்று, பரந்தனில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் மீதும் குண்டு வீசி அங்குள்ளவர்களையும் தாக்கி அழித்துள்ளனர். 24 வயதுள்ள இளைஞர்கள், பெண்கள் (அவரது சகோதரிகள்) குண்டுவெடிப்புக்குப் பலியாகி உள்ளனர் என்பது செய்தி!

மாணவர்கள் பலி!

அங்கேயுள்ள இந்துக் கல்லூரி வளாகத்தில் படிக்கும் மாணவர் கள்மீதும் குண்டு வீச்சு! சிங்கள இராணுவத் தாக்குதலை எதிர் நோக்கிப் பயந்து, 15 விழுக்காடு மாணவர்கள் மட்டும்தான் படிக்க வந்து உயிர் துறந்துள்ளனர்!

தர்மாபுரம் என்ற மருத்துவமனையில் படுகாயத்தோடு சேர்க்கப் பட்ட ஒரு தமிழச்சி, எனது மூத்த சகோதரி ரத்த அழுத்த நோயால் (B.P.) பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் தப்பி ஓட முடியவில்லை; எனக்கு ஒரு குழந்தை உள்ளது. ஒருவேளை நான் இறந்துவிட்டால், எனது குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி என் சகோதரியிடம் கூறினேன். மூச்சுக்கூட விட முடியவில்லை என்னால் என்று தெரி வித்த செய்தி, எம் கண்களைக் குளமாக்குகிறது! அய்யகோ என்னே கொடுமை!

மக்கள் காட்டுக்கு ஓடும்போதும்
அவர்கள்மீது குண்டுமழை!


பரந்தன் நகரில் பள்ளிச் சிறுவர்கள், குழந்தைகள் என 750 பேர் நேற்று தப்பி காடுகளை நோக்கி ஓடினார்களாம்! குறுகிய தெரு வழியாக அவர்கள் ஓடும்போது அங்கும் அவர்கள்மீது குண்டு மழை!

இந்த நகர் வெறிச்சோடிய நிலையில், பலர் அகதிகளாக வெளியேறிய நிலையிலும், மீதியுள்ளவர்களையும் அழிக்க சிங்கள இராணுவம் இப்படி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்துகிறது!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள அகதிகளின் தங்குமிடங்களின்மீது இலங்கை இராணுவத்தினர் சுமார் 100 தடவைகளுக்குமேல் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் 17 ஆம் தேதி பிற்பகல் 1 மணிமுதல் 6.40 மணிவரை நடந்துள்ளது!

அகதிகள்மீதும் குறி வைத்துத் தாக்குதல்


மற்றும் உடுத்துறை, வத்திராயன், கட்டைக்காடு மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் தங்குமிடங்களின் மீதே குறி வைத்து தாக்கப்பட்டுள்ளது!

இதற்கு ஒரு முடிவில்லையா? இதுதான் தீவிரவாதிகளை ஒழிக்கும் லட்சணமா?

மத்திய அரசு
இனியும் வேடிக்கை பார்க்கலாமா?


மத்திய அரசே, மத்திய அரசே! இதை நீங்கள் இனியும் வேடிக்கை பார்க்கலாமா? விடுதலைப்புலிகளை ஒழிக்கிறோம் என்று கூறி, சிங்கள இராணுவம் குண்டு மழையை சொந்த நாட்டின் குடி மக்கள் மீதே நடத்துவது எவ்வகையில் நீதி, நியாயம், நேர்மை?

இதை உலகத் தமிழர்கள் முதல் தமிழ்நாட்டுத் தமிழர்கள் முதல்வரின் தலைமையில் திரண்டு அறவழியில் கேட்டதை மத்திய அரசு, பிரதமர் அலட்சியப்படுத்தலாமா?

மேனாள் பிரதமர்
இந்திரா காந்தி காட்டிய வழி என்ன?


மேனாள் பிரதமர் இந்திரா காந்தி காட்டிய வீரமும், துணிவும், பக்குவப்பட்ட அணுகுமுறையும் இப்போது அவர்களை வழிகாட்டி யாகக் கொண்ட மத்திய ஆட்சி காட்டவேண்டிய தருணம் வந்து விடவில்லையா?

முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் பிறந்த நாள் இன்று. மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அவர் ஏன் ஈழப் போராளிகளை வரவழைத்து, ஆயுதப் பயிற்சி தந்து, இலங்கை சிங்களவர்களின் ஏகபோகத்திற்குச் சரியான ஒரு தடுப்பு ஏற்படுத்தி, அமெரிக்க ஏகாதிபத்தியம், சீனாவின் ஆதிக்கங்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இல்லாது, திரிகோணமலையைக் குறி வைத்த பன்னாட்டு ஆதிக்கத்தினைக் கண்காணிக்க அருமையான ஏற்பாடாக ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதே சரியான வழி என்பதைப் புரிந்து செயல்பட்டார்.

அந்தப் பார்வை - அந்த அணுகுமுறை ஏனோ தற்போதுள்ள இந் திய ஆட்சித் தலைமைக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் இல்லை?

சிங்கள இராணுவத்திற்கு உதவுவது, அதைத் தீவிரவாதம் அடக்குதல் என்ற பெயரில் ஈழத் தமிழர் விரோதத்திற்குத் துணை போவது, நமது நாட்டின் இறையாண்மை, பாதுகாப்புக் கண் ணோட்டத்திலும் தவறு என்பதைக் காலம் சொல்லாமல் இருக்காது!

நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காதா?

விரைவில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதன் அரசியல் விளைவும், முடிவும் எப்படி அமையும் என்பதைக் கூடவா நீங்கள் சிந்திக்கக் கூடாது? ஏன் இந்தக் கண்மூடித்தனம்?

தமிழர்களைக் கொன்று குண்டு மழை பொழிந்துகொண்டே இருக்கும் நிலையில் மருந்து அனுப்புகிறோம் என்றால், அது எவ்வகையில் சரி?

கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்


சிங்கள அரசு ஏமாற்றுகிறது அல்லது நமது மத்திய அரசு தீவிரவாத ஒழிப்பு என்ற மயக்கத்தில் ஏமாறுகிறது என்பதுதானே பொருள்?

என்று தணியும் இந்தக் கொடுமை? அலட்சியப்படுத்தாதீர்; பிறகுகடும் விலை கொடுக்கவேண்டியிருக்கும்.


----------------------- "விடுதலை" -19.11.2008

2 comments:

சக்திவேல் said...

உழைப்பை ஒன்றே பிரதானமாக கருதி வாழும் தமிழ் நாட்டு மக்கள் (குறிப்பாக தென் தமிழ்நாடு) இதே போன்ற‌ சிரமங்களை எதிர்காலத்தில் கொள்வர் என்று அஞ்சுகின்றேன். ரிலையன்ஸ்களும், வால்மார்ட்களும் வியாபாரங்களை ஏகபோகமாக்கிக்கொள்ளும் செயல்கள் ஆரம்பமாகிவிட்டன. மகாராட்டிரம் விழித்துக்கொன்டதுபோல தமிழகமும் விழித்துக்கொள்ளனும் இல்லையென்றால் இலங்கைத்தமிழர் போலத்தான் இந்தியத்தமிழரும் ஆக்கப்படுவர் எதிர்காலத்தில்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும், ஆலோசனைக்கும் நன்றி.