Search This Blog

11.11.08

காஷ்மீர் பண்டிட்கள் நலனுக்காகக் கண்ணீர் வடிக்கும் பார்ப்பனப் பத்திரிகைகள் ஈழத்திலே தமிழினம் படுகொலை செய்யப்படுவதற்கு வாய் திறப்பதில்லையே, ஏன்?


காஷ்மீர் பண்டிட்கள் நலனுக்காகக் கண்ணீர் வடிக்கும் பார்ப்பனப் பத்திரிகைகள்
ஈழத்திலே தமிழினம் படுகொலை செய்யப்படுவதற்கு வாய் திறப்பதில்லையே, ஏன்?

பார்ப்பனர்களின் இரட்டை வேடத்தை தோலுரித்து தமிழர் தலைவர் பேச்சு


சென்னை, நவ. 11- காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக கண்ணீர் விடுகின்ற பார்ப்பனர்கள் எம் இனம் இனப்படுகொலை செய்யப்படுகிறது. அதைப்பற்றி நாம் கேட்டால் அது குறுகிய இனவெறியா? அது தேசத் துரோகமா? நீங்கள் காட்டுவது தேச பக்தியா? என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

சென்னை - பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் பற்றி எரியும் ஈழமும் - பார்ப்பனப் பத்திரிகைகளும்! என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் 6-11-2008 அன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை வருமாறு:

திராவிடர் கழகம் சார்பில் நாடு முழுக்க கூட்டங்கள்

திராவிடர் கழகத்தின் சார்பிலே இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் எல்லாம் ஈழப் பிரச்சினையிலே பார்ப்பன ஏடுகள் எவ்வளவு இன உணர்வுக்கு எதிரான ஒரு போரை நம்மக்கள் மீது திணித்துக் கொண்டிருக்கின்றன என்பதை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.

பரவுகின்ற நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற

பரவுகின்ற இந்த நோயிலிருந்து, இந்தக் கிருமியிலிருந்து, மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக ஒரு பிரச்சாரத்தை இந்த நாளிலே தமிழ் நாட்டின் முக்கிய நகரங்கள் எல்லாவற்றிலும் திராவிடர் கழகத்தின் சார்பிலே இதை நடத்த நாங்கள் முன் வந்திருக்கின்றோம். அதனுடைய அடிப் படையிலேதான் இந்தக் கூட்டம் - தலை நகரிலே நடத்தப்படுகிறது.

பார்ப்பனப் புத்தி காலத்திற்கும் மாறாது

பொதுவாக ஏடுகள் பத்திரிகைகள், இவைகளை முன்னிறுத்தி அவைகளினுடைய தயவினால்தான் எல்லோரும் வாழவேண்டும் என்பதைப்போல பல அரசியல் கட்சிகள் வாக்கு வங்கிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். என்ன செய்து அந்த ஏடுகளை தம் வயப்படுத்தலாம் என்பதற்காக, பல்வேறு வகைகளிலே அந்த ஏடுகள் தங்களைப்பற்றி சிறப்பாக எழுதாவிட்டாலும்கூட, மாறாக எழுதாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிக் கவலைப்படுகிற ஒரு சூழ்நிலையிலே, துணிச்சலாக பார்ப்பன ஏடுகள் என்று சொன்னால், அவர்களுடைய அந்த இனப் புத்தி ஒரு காலத்திலும் மாறாது.

பதவியைப்பற்றியோ ஓட்டைப்பற்றியோ கவலைப்படாதவர்கள்

அவர்களைத் தமிழர்கள் சரியாக அடையாளம் காணுங்கள் என்று சொல்லக்கூடிய துணிவு - ஓட்டைப்பற்றியோ, பதவியைப் பற்றியோ கவலைப்படாத திராவிடர் கழகத்திற்கும், அதை ஒட்டிய நண்பர்களுக்கும் இருப்பது இயற்கை (பலத்த கைதட்டல்).

அதனால்தான், தந்தை பெரியார் அவர்கள் ஒரு சமுதாய விஞ்ஞானியாக இருந்து எந்தப் பிரச்சினையிலும் தன்னை ஆசாபாசங்களுக்கு ஆட்படுத்திக் கொள்ளாமல், ஒரு பூரண பகுத்தறிவுவாதியாக இருந்து சிந்தித்து, தெளிவாக இந்த நாட்டிலே மூன்று பேய்களும், அய்ந்து நோய்களும் இருக்கின்றன என்று சொன்னார். அதைப்பற்றி விளக்கமாகப் பேசினால் பல்வேறு செய்திகளுக்குத் தடையாக இருக்கும். அய்ந்து நோய்களில் பத்திரிகை ஒன்று என்பதை தந்தைபெரியார் அவர்கள் கண்டறிந்து விளக்கினார்கள். மக்களுக்குள்ள நோய்களிலே மிக முக்கிய மான ஒரு நோயாக - இந்த நாட்டைப் பொறுத்த வரையிலே நம்முடைய சமுதாயத்தைப் பொறுத்த வரையிலே பத்திரிகைகள் இருக்கின்றன என்று தந்தை பெரியார் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அப்படியானால் என்ன பொருள் என்றால் - சகட்டு மேனிக்கும் எல்லா பத்திரிகைகளும் நோய் என்பது அதற்குப் பொருள் அல்ல. மிகப் பெரும்பா லான அளவிற்கு மக்கள் மத்தியிலே நோய்களை உற்பத்தி செய்யக்கூடிய கருவிகளாக பல ஏடுகள் இருக்கின்றன.

உண்மைக்கு மாறான செய்திகளைத் திரித்துக் கூறுகின்றன

அந்த ஏடுகள் உண்மைக்கு மாறான செய்திகளைத் திரித்துக் கூறுகின்றன என்ற அளவிலேதான் தந்தை பெரியார் அவர்கள் தெளிவாக எடுத்துச் சொல்லி, அந்த ஆயுதங் களை சக்தி வாய்ந்த ஆயுதங்களாக நம்முடைய இன எதிரிகள் கையிலே வைத்திருக்கிறார்கள்.

எழுதுகிறவர்கள் பார்ப்பனர்களாயிற்றே

பார்ப்பனர் அல்லாதவர்கள் முதலாளிகளாக இருந்தாலும்கூட எழுதுகின்றவர்கள் பார்ப்பனர்களாகத்தான் இருப்பார்கள். இமயமலையிலே தொடங்கி கன்னியாகுமரி வரையிலே பார்ப்பனர்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள். எனவே முதலாளிகளுக்கு அவர்களுடைய நலனை ஒட்டி சில காரியங்கள் நடந்தால் போதும்.

ஆனால், செய்திகளை எப்படிக் கொடுப்பது என்பதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், அவர்கள் அங்கே இருக்கின்றார்கள். இன்னொன்று நம்முடைய இனத்திலே ஏற்பட்ட வேடிக்கையான, விபரீதமான ஒரு சூழ்நிலை - என்னவென்று சொன்னால், நம்முடைய இயக்கம் திராவிடர் இயக்கம் - தென்னிந்தியர் நல உரிமைச் சங்கமாக பார்ப்பனரல்லாதார் இயக்கமாக இருந்து தொடங்கிய காலத்திலே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எண்ணிக்கை வெறும் ஏழு சதவிகிதமாகத்தான் இருந்தது.


ஏடுகள் மூலமாக பார்ப்பனர்களுக்கோ ஏகபோக அறுவடை!

அதற்காகப் போராடி, எல்லோரும் படிக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். எழுத்தறிவு, படிப்பறிவு, நாடெல்லாம் கல்வி நீரோடை பாய்ந்து பரவவேண்டும் என்பதற்தாகப் பாடுபட்டதன் பலனை நம்மினம் அறுவடை செய்ததைவிட இன்றைக்கு ஏடுகள் மூலமாக, விற்பனை மூலமாக பார்ப்பனர்கள்தான் அறுவடை செய்கிறார்கள் என்பதை அடிப்படையிலே முதலிலே தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் உண்மை. இதைப் பார்க்கும்பொழுது ஒரு வகையிலே ஆத்திர மாகக் கூட இருக்கிறது.

தமிழன் படிக்காமல் இருந்தாலாவது!

தமிழன் படிக்காமல் இருந்தாலாவது சொந்த புத்தியோடு கொஞ்சப் பேர் இருப்பானே. படித்துவிட்ட கோளாறினால்தானே பெரியார், காமராஜர் திராவிட இயக்கம், இன்று கலைஞர் ஆட்சி வரை இருக்கின்ற காரணத்தால் படி, படி என்று சொன்னவுடனே எதை படிப்பது என்று தெரியாமல் எது கிடைக்கிறதோ அதையெல்லாம் படிக்கிறான். அச்சிலே வருவதெல்லாம் உண்மை என்று நம்புகிறான். என்ன பிரச்சினை என்று புரியாமலே தெரிந்துகொள்ளாமலே கேள்வி கேட்கின்றான்.

ஒரு நூற்றாண்டாக இருக்கக்கூடிய பிரச்சினை

இது ஒரு நூற்றாண்டாக இருக்கக் கூடிய பிரச்சினை. இன்னமும் நாம் இந்த போராட்டக் களத்திலே நின்று கொண்டிருக்கின்றோம். இது சாதாரணமானப் பிரச்சினை அல்ல. ஈழப் பிரச்சினையிலே மட்டுமல்ல, இங்கே தெளிவாக நம்முடைய பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களும், கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை அவர்களும் சொன்னது போல, பார்ப்பனர்களைப் பொறுத்த வரையிலே அவர்கள் கட்டுப்பாடாக அது தேசிய பார்ப்பானாக இருந்தாலும் சரி, அல்லது மதவாதப் பார்ப்பானாக இருந்தாலும் சரி, வைதிகப் பார்ப்பனாக இருந்தாலும் சரி, அவர்களைப் பொறுத்தவரையிலே தந்தை பெரியார் அவர்கள் ரொம்ப அற்புதமாக அளந்து காட்டியதிலிருந்து அவர்கள் மாறு படவில்லை.

கன்னியாகுமரியிலே இருக்கிற பார்ப்பனருக்குத் தேள் கொட்டினால் இமய மலையில் இருக்கிற பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்று சொன்னார்களே - அது அந்த இனத்திற்கு இயல்பாக இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை.

நாங்கள் கேட்டால் குறுகலான இனவெறியா?

ஈழத்திலே இருக்கின்ற தமிழரைப் பற்றி நாம் பேசினால் அது ஏதோ தேசத்துரோகம் போல, வர்ணிக்கக் கூடியதும் அது ஏதோ ஒரு குறுகலான இன வெறியைப் பற்றி பேசக் கூடியதாகவும் இன்றைக்குக் காட்டுகிறார்கள்.

ஆனால், அதே நேரத்திலே காஷ்மீரிலே மிகப் பெரும்பாலானவர்களாக இருக்கக் கூடிய இஸ்லாமியர்களோடு ஒத்துப் போகாதவர்கள் ஜம்முப் பகுதியிலே இருக்கக் கூடிய பண்டிதர் கள் பார்ப்பனர்கள் காஷ்மீரப் பார்ப்பனர்கள்.

பார்ப்பனர் பண்டிதர்கள் முழு வசதியாக

அந்த பண்டிதர்கள் அங்கே முழு வசதியாக வேறு ஒரு தொழிலும் செய்யாமல் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவர்கள். முழு வசதியாக இல்லாத அளவிற்கு அவர்களில் அகதிகளாக வந்து விட்டார்களாம். அந்த அகதிகளுக்காக இவர்கள் எத்தனைக் காலம் அழுகிறார்கள்?

எவ்வளவு தூரம் நெருக்குகிறார்கள்? அய்யோ ஜம்முவிலே இருக்கக்கூடிய பண்டிட்களுக்காக அங்கிருக்கிறவர்களிலிருந்து இங்கு இருக்கின்ற ஜெயலலிதா அம்மையார் உட்பட அவர்களுக்காக எல்லோரும் வாதாடுகிறார்கள், எழுதுகிறார்கள்.

எங்கள் தமிழினம் மிருகங்களுடன் வாழுகிறது

காஷ்மீரப் பண்டிதர்களுக்காக ஒரு சிலருக்காக நீங்கள் கவலைப்படுகின்றீர்களே, 2,30,000 பேர் இலங்கையிலே சொந்த மண்ணிலேயே ஊரிலே வசிக்க முடியாமல் வெளி யேற்றப்பட்டு, காடுகளுக்குள் தள்ளப்பட்டு, மிருகங்களோடு போட்டி போட்டுக் கொண்டு அங்கே பாம்பு, தேள் இவைகளின் விஷக்கடியிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே, பசியால் பட்டினியால் பரிதவித்துக் கொண்டிருக்கின்றார்களே, இயற்கை வானத்தையே கூரை என்று எண்ணி வாழ்ந்து கொண்டிருக் கின்றார்களே! என்று கேட்டால் அதற்கு வழி வகை செய்யப்பட வேண்டாமா? ஈழத் தமிழர் களுடைய இன்னல்கள் களையப்பட வேண்டாமா? அவர்களுடைய வாழ்வுரிமை பாது காக்கப்படவேண்டாமா?

தமிழ் சாவனிசம்!

இன உணர்வோடு இன உணர்வையும் கூட ஒரு பக்கத்திலே தடுத்து நிறுத்தினால் கூட, அதை கொஞ்சம் தள்ளி வைத்தால் கூட, மனித நேயத்தோடு நாம் கேட்டால் அதை குறுகிய தமிழ் சாவனிசம் என்று ஆங்கிலத்தில் கண்டு பிடித்திருக்கின்றார்கள். அது மொழி வெறித் தனம் மாதிரி தமிழர்களின் வெறித்தனமாம். தமிழர்கள் ஒன்றுபட்டால், தமிழர்களுக்காக கண்ணீர் விட்டால், அது வெறித்தனமே என்று எப்படி சொல்லுகின்றீர்கள்? நேற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார் என்றால் இனத்தைத் தாண்டி அமெரிக்காவிலே வரலாறு படைத்திருக்கிறார் என்று பாராட்டக் கூடிய அளவுக்கு நீங்கள் இருக்கின்றீர்கள்.

எங்கள் இனத்திற்காக பேசினால் தேச விரோதமா?

ஆனால், எங்கள் இனம் இனப் படுகொலை செய்யப்படுகிறது. அதை நாங்கள் கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இல்லையா? இப்படி கேட்டால் அது மிகப் பெரிய தேச விரோதச் செயலா? அல்லது சமூக விரோதமான செயலா? எப்பொழுதுமே பார்ப்பனர்களுக்கு இரட்டை அளவு கோல் உண்டு. மனுதர்மத்தினுடைய அணுகுமுறையே என்னவென்றால், பார்ப்பான் கொலைக் குற்றவாளியாக இருந்தால், அவனுக்கு உச்சிக் குடுமியை சிரைத்தால்போதும். பார்ப்பானுக்கு சிரச்சேதம் இல்லை. பார்ப்பானுக்கு மரண தண்டனை இல்லை என்பது மனுதர்மம். நூற்றாண்டுகளுக்கு முன்னால் வரையிலே நம்முடைய நாட்டிலே தனியே கிரிமினல் கோட் என்று சொல்லக்கூடிய வகையிலே கிரிமினல் சட்டம் வருவதற்கு முன்னாலே இருந்த நிலை இது.

அதே நேரத்தில் நம்மவர்கள் என்றால் என்ன நிலை? சூத்திரன் கொலை செய்தால் அவனை தூக்கிலே போடவேண்டும். சூத்திரன் உயிரும், பார்ப்பான் மயிரும்

ஆனால், பார்ப்பான் கொலை செய்தால் அவனுக்கு சிகைச் சேதம். உச்சிக் குடுமியிலி ருந்து இரண்டு மயிரைக் கத்தரித்தால் போதும். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் ஒவ் வொரு வார்த்தையையும் செதுக்கிவைத்தார்.

தந்தை பெரியார் அவர்கள் சொல்லும் பொழுது மக்கள் கேட்கும்பொழுது அது நகைச்சுவை மாதிரி இருக்கும். எளிமையான முறையில் பொதுமக்களுக்குப் புரியும்படியாக பசுமரத்து ஆணி போல சொல்லுவார்கள்.

சூத்திரன் உயிரும் பார்ப்பான் மயிரும் சமம் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன் னார்கள். அவர் கொச்சைப்படுத்திச் சொல்ல வில்லை.

அதுதான் மனுதர்மம்

அவர் பச்சையான உண்மையை எடுத்துச் சொன்னார். அதுதான் மனு தர்மம். இன்றைக்கும் அதே அளவுகோலைத்தான் அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். நம்மவர்கள் லட்சக் கணக்கிலே, கோடிக்கணக்கிலே தாழ்ந்தால், வீழ்ந்தால் பிணமாக -ஆனால், அதைப்பற்றிக் கவலை இல்லை.

இதிலிருந்து விடுபடத்தான் தமிழர்கள் நூற்றாண்டுகளுக்கு முன்னாலே ஏடுகளைத் தொடங்கினார்கள். இதோ என்னுடைய கையிலே இருக்கின்ற ஒன்று திராவிடன் ஏடு. அடித்தளத்திலே இருந்து நாம் போகவேண்டும்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கிய காலத்தில்

தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம், 1916-ல் தொடங்கப்பட்ட காலத்தில் சர்பிட்டி தியாக ராயர், டாக்டர் நடேசனார், அதேபோல் டாக் டர் டி.எம். நாயர், இதேபோன்று அரசியல் தலைவர்கள் எல்லாம் இந்த உணர்வை உருவாக்கி அரசியலிலே உத்தியோகத் துறையிலே பார்ப்பனர்களின் ஆதிக்கம் தேசியத்தின் பெயரால் உள்ளே நுழைந்த அந்தக் கொடுமையை எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்த நிலையிலே, தங்களுடைய உணர்வுகளை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காக என்ன செய்யவேண்டும்? நாம் எதை சாதிக்க வேண்டும் என்று அவர்கள் சிந்தித்த நேரத்திலே, அவர்களிலே தொடர்ந்து, நமக்கு ஒரு அறிவாயுதம் தேவை! இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இருக்கின்ற நேரத்திலேதான் - திராவிடன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்கள்.

அந்த திராவிடன்தான் இன்றைக்கு விடுதலையாக

அந்த திராவிடன்தான் இன்றைக்கு பரிணாம வளர்ச்சிபெற்று விடுதலையாக உங்களுடைய கரங்களிலே திகழ்ந்து கொண்டிருக் கின்றது (பலத்த கைதட்டல்). திராவிடன் நாளேடு தொடங்கப்பட்ட நேரத்திலே 1917 ஜூன் 1 ஆம் தேதி திராவிடன் ஏட்டிலே வெளிவந்த தலையங்கம் என்னுடைய கையிலே இருப்பது.

நம்மில் பலர் பிறக்காத காலம். இன்றைக்கு ஏறத்தாழ 91 ஆண்டுகளுக்கு முன்னாலே நிலை. அன்றைக்கு இருந்த நிலைமை என்ன? இன் றைக்கு இவ்வளவு பாடுபட்டும்கூட இவ்வளவு பெரிய இயக்கங்கள் வந்தபிறகும் கூட, இவ்வளவு பெரிய அரசியல் கட்சிகள் வந்த நேரத்தில்கூட, இன்னமும் பார்ப்பனர்களுடைய சாம்ராஜ்யம் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று ஒரு காலத்திலே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைச் சொன்னார்களே, அது போலத்தான் பார்ப்பனர்களுடைய சாம் ராஜ்யம் இருந்து கொண்டிருக்கின்றது.

நமது பத்திரிகையின் நோக்கம்

நமது பத்திரிகையின் நோக்கங்கள் என்று திராவிடன் இதழிலே எழுதியிருக்கின்றார்கள். இதை எழுதுகிறபொழுது ரொம்பத் தெளிவாகச் சொல்கிறார் பெரியார். இந்துக்களில் பெரும்பாலோர் பிராமணரல்லாதவர்களாய் இருக்கிறார்கள். அன்றைக்கு எழுதப்பட்ட தலையங்கம் இது. 1917 ஜூன் 1 ஆம் தேதி தென்னிந்தியாவில் ஜனத்தொகை சுமார் நான்கு கோடி. பிராமணரல்லாதாரில் இந்துக்களின் தொகை மூன்றரை கோடிக்கு அதிகமாக இருக்கிறது. இவ்வளவு பெருந்தொகையினராகிய நம்மவர்களுடைய குறைபாடுகளையும், முறைபாடுகளையும் ராஜாங்கத்தாருக்கு தக்க படி தெரிவித்து, இவர்களுடைய செல்வாக்கை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு, இதுவரையில் இயலாமல் போயிற்று. பொதுவாக இந் துக்கள் என்ற மொத்த பெயர் வைத்துக் கொண்டே, இந்துக்களில் மிக மிகச் சிறிய பிரிவினராகிய சிலரே எல்லா நலன்களையும், எல்லா பலன்களையும் இதுவரைக்கும் அனுப வித்து வந்திருக்கின்றார்கள். இப்பொழுது அனுபவித்து வருகிறார்கள். முக்கியமாய் இதற்குக் காரணம் பத்திரிகைகள் என்ற பல முள்ள ஆயுதங்கள் அவர்களிடம் இருப்பது தான்.

திராவிடன் தலையங்க முதல் பாராவிலே

திராவிடன் பத்திரிகை தொடங்கப்பட்ட பொழுது தலையங்கத்தின் முதல் பாராவே இதுதான். தயவு செய்து இன்றைய தேதியை மறந்துவிடுங்கள். இன்றைக்கும் இவைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா? இல்லையா? இன்றைக்கும் அவருடைய பெரிய வஜ்ராயுதம், பெரிய அஸ்திவாரங்கள் யாரையும் மிரட்டுவது - அவரை ஏன் கைது செய்யக் கூடாது? என்று கேட்பது இவரை ஏன் கைது செய்யக்கூடாது? என்று கேட்பது.

உடனே இப்படி கேட்பவனுக்கு ஒரு விளம்பரம் கொடுப்பது. விளம்பரத்திற்காக நம்மாள் விபீஷணராகப் போய், அனுமாராகப் போய் விளம்பரம் பெறுவதற்கு முந்திக் கொண்டு நிற்பது. சடகோபங்களை சாத்துவது. இதுபோன்று செய்கிறார்கள். இங்கே சொல்லுகிறார்கள். திராவிடன் இதழில் வந்த தொடர்ச்சியை மேலும் படிக்கிறேன்.

பிராமணரல்லாதார் இதர இந்துக்கள்

இவ்வாறாக பிராமணரல்லாத இதர இந்துக்கள் வர, வர தமது செல்வாக்கை இழந்து ஈனஸ்திதிக்கு இறங்கிக் கொண்டிருப்பது நாளுக்குள் நாள் பொறுக்க முடியாததாயிற்றே.

அப்பொழுதே அவர்களுக்குப் பொறுக்க முடியவில்லை. இன்றுவரை நாம் நூறு வருடமாகப் பொறுத்தக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்காவது இது மாதிரி உணர்வு வர வேண்டாமா? என்பதற்குதான் இது மாதிரி கூட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

- தொடரும்


---------------------நன்றி: "விடுதலை" 11-11-2008

0 comments: