Search This Blog

17.11.08

கந்தன் -முருகன் பெயர்களின் காரணங்கள்








கந்தன் என்ற தமிழ்ச் சொல்லுக்கு மூலச் சொல் "ஸ்கந்தன்" என்ற சொல்லாகும்.


ஸ்கந்தன் என்ற சொல் ஸ்கலிதன் என்பதாகும்.


ஸ்கலிதன் என்ற சொல்லுக்கு மூலக் கருத்து சிவனுடைய வீரியம் (விந்து) கலவி முற்றுப்பெறுவதற்கு இல்லாமல் வெளிப்பட வேண்டியதாக ஆகிவிட்டதால் அந்த வீரியம் பூமியில் விடப்பட்டு ஆறுபோல் ஒடிக்கங்கையில் (சரவணப் பொய்கையில்) ஆறு கிளைகளாகப் பாய்ந்து விழுந்து அந்த ஒழுகிய விந்திலிருந்து (அதாவது ஸ்கலிதமான விந்து) உறுப்பெற்றதால் ஸ்கலிதன் - ஸ்கந்தன்; இவன் கதை ஸ்காந்தம் என்று பெயர் பெறலாற்று.




இந்த ஸ்கலிதத்திற்கு ஆதாரம் இராமாயணத்தில் இருக்கிறது.


மற்றும் காஞ்சி புராணத்தில் இருக்கிற இதை மறைக்கச் சைவர்கள், சிவன் நெற்றியிலிருந்து ஒரு பொறி வந்தது என்று வேறு கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்; என்றாலும், ஸ்கந்தன் விந்துக் கடவுள்தான் என்பதை மேலும் பல ஆதாரங்களில் காணலாம்.

இது தவிர ஸ்கந்தனுக்கு முருகன் என்று ஒரு பெயர் உண்டு; இந்த முருகன் என்ற சொல்லுக்கு அதைத் தமிழ்ச் சொல்லாக வைத்து முருகு – அழகு என்று பொருள் கூறி அழகையே கடவுள் என்று ஆக்கிவிட்டார்கள் என்பதாகச் சைவப் புரட்டுப் புலவர்கள் கூறுவார்கள். முருகு என்பது தமிழ்ச் சொல்லே அல்ல. ஆதாரப்படி அச்சொல் வட மொழிச் சொல்லேயாகும். முருகு என்பது ஆண் கோழி – சேவலுக்குப் பெயர்; கந்தன் சேவல் கொடி உடையவன். சேவலின் பெரைக் கொண்டு அழைக்கும் கடவுள் தான் முருகா என்பது. அதைத் தமிழில் உச்சரிக்கும் போது முருகன் என்று உச்சரித்து விடுகிறார்கள்.


அழகு என்பது விஷ்ணுவின் பெயர். அது இராமம் - இராமா என்பதன் தமிழ்ச் சொல்லாகும்.



முருக என்பது தமிழில் அழகு என்பதாகி, அந்த அழகு என்னும் சொல்லுக்குச் சைவருக்கு ஒரு கடவுள் முருகன் என்றும், வைணவருக்கு ஒரு கடவுள் இராமன் - அழகன், அழகர் என்றும் ஏற்பாடு செய்து கொண்டார்கள்.



இதுபோலவே தான் கிருஷ்ணன் என்ற கடவுள் பெயரும், கருப்பன் என்ற பெயரிலிருந்து ஏற்படுத்திக் கொண்டதாகும். கிருஷ்ணன் என்ற வடமொழிச் சொல்லுக்குத் தமிழில் கருப்பன் - கருப்பண்ணன் என்பது தான் தமிழ்ச் சொல்லாகும்.



ஆரியரின் வேதகாலம் என்பதில் இந்தக் கடவுள்களோ, இந்தச் சொற்களோ புழங்கப்படவில்லை. ஆரியர்களுக்குத் தமிழர் - திராவிடர் சம்பந்தமேற்பட்ட பிறகே இம்மாதிரி சொற்களையும், கடவுள்களையும் ஏற்பாடு செய்து கொண்டார்கள்.


ஆனாலும்,



இன்றைக்கும் பார்ப்பனர்கள் கந்தன் என்கின்ற பெயரையோ, முருகன் என்ற பெரையோ, கருப்பன் என்கின்ற பெயரையோ தங்களுக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.


எனவே, இந்தக் கடவுள்களின் மூலங்களைத் துருவினால் பெரிதும் புராணங்கள் போல ஆபாசமாகத்தான் இருக்கும்.

மற்றும் இந்து என்றாலே கருப்பன் என்றுதான் கருத்து. ஆனால் தமிழனுக்குக் கல்வி இல்லை, அறிவு இல்லை, மான, அவமானமும் இல்லை. ஆனதால் எதையும் ஏற்றுக் கொண்டு தலைவணங்கி வந்துவிட்டான்!







--------------14-12-1970- "உண்மை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை.

0 comments: