Search This Blog

5.11.08

பெரியாரின் நிலை பற்றி அண்ணா


உள்ளம் உடையும்முன்...

நம்பி மோசம் போகிறோம் என்ற எண்ணம் வருகிற போது, நாம் உழைத்தது வீணுக்கு என்று தோன்றுகிற போது, நாம் காட்டிக் கொடுக்கப்பட்டோமோ என்ற சந்தேகம் எழுகிறபோது, நாம் கையாண்ட முறை தவறோ என்ற எண்ணம் ஏற்படுகிற போது, நமது முயற்சிகள் முறிகின்றன என்ற அச்சம் வருகிறபோது, நமது திறமைப் பயனற்ற தாக்கப்படுகிறது என்ற எண்ணம் வருகிறபோது, நாம் அடிமைப்படுத்தப்படுகிறோம், அலட்சியப்படுத்தப்படுகிறோம், என்ற எண்ணம் ஏற்படுகிறபோது, நிச்சயம் உள்ளம் உடையும் நோய்க் கிருமி புகுந்துவிட்டது என்று பொருள். அலங்காரமாகச் சொல்லலாம், என் கடன் பணி செய்து கிடப்பதே என்று; அல்லது, யார் செய்தால் என்ன, எப்படியோ காரியம் நடந்தால் போதும் என்று. ஆனால், அவ்விதம் கூறுபவர்களின் உள்ளம் உடையாது என்று அர்த்தமில்லை. தங்கள் நோக்கமும், தங்கள் கூட்டுத் தோழர்களின் நோக்கமும் பார்வைக்கு ஒன்று போலவே தெரிகிறது - பணிபுரியும் போது அவ்விதமான நம்பிக்கைக்கு முறிவு ஏற்படுகிறது. நாம் கொண்டுள்ள நோக்கத்தை ஆதரிக்கும் எண்ணமின்றி, தட்டிக் கொடுத்து வேலை வாங்கத் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் போக்கு, கூட்டுத் தோழரிடம் இருக்குமானால், அதை அவர் நெடுநாள் மறைத்து வைத்திருந்து, பிறகு கண்டு பிடிக்க நேரிட்டால், உள்ளம் என்ன, சும்மாவா இருக்கும்? கண்களிலே நீர் கொப்பளிக்கும்! குரல் மங்கும்! தேகம் நடுங்கும்! உலகமே இருண்டு விட்டது போல் தோன்றும்!! என்றும் ஏற்பட்டிராத மாதிரியான அலுப்பு -களைப்பு உண்டாகும். வீணுக்குழைத்தோமடா தோழனே! விபரீதமாச்சுதடா! என்று ஜீவானந்தம் பாடல் உண்டே, அது போன்ற நிலை எட்டாம் மாதம் - இனி சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கணவன் கூற, முகம் மலர்ந்து செல்லும் மனைவிக்கு மருத்துவ மாது, அட சனியனே! அம்மா, விஷயம் வேறாக அல்லவா முடிந்தது. இது சூதகம் - கர்ப்பமல்ல என்று சொன்னால், எப்படி இருக்கும்? பரவாயில்லை. சூதகமானாலும் கர்ப்பமானாலும் கவலை என்ன? என்று கூறாள். அலி சொல்லக் கூடிய வார்த்தை அல்லவா, ஆரணங்குகள் கூறக்கூடியதா! இத்தகைய நிலையிலேதான் உள்ளம் உடையக் கூடிய அறிகுறி தெரியும். இதைக் கவனியாமல் விடுவது, அல்லது கவனித்தாலும் பரிகாரம் தேடாமல் இருப்பது இரண்டும் நோய்க்கு இடம் கொடுக்கும் முறையாக முடியும். யூகமுள்ளவர்களே, இத்தகைய நிலையைக் கண்டறிந்து உடனே, உள்ளம் உடையாதபடி பாதுகாத்துக்கொள்ள வழி தேடுவர். வழி தேடும் போது, சந்தேகிக்கப்படுவர், ஏசப்படுவர் - ஆனால், கவலை கொள்ளார். தலைவலி போக்கிக் கொள்ள நெற்றியில் பச்சிலை அரைத்துப் பூசிக் கொள்ளும் போது பார்ப்பவர் பரிகாசம் செய்வரே, என்று எண்ணிடும் பேர் வழிக்குத் தலைவலி எப்படிப் போகும்! மனவலி தீர்க்கும் மருந்து தேடும் போது, நமக்குள்ள வலிதான்; நம்மை நடத்தி வைக்குமே தவிர, நண்பர்களின் எச்சரிக்கை நடுநிலை தவறுவோரின் ஏசல், சமயத்தை எதிர்ப்பார்ப்போரின் சாகசம், அவசரக்காரரின் தூற்றல் இவைகளின் போக்குக்கு மனவலிக்கு மருந்தளிக்கும் சக்தி கிடையாது. அதனை அவர்கள் அறியார்கள்.

பெரியார் இராமசாமி அவர்களுக்கு, இத்தகைய நெருக்கடி ஏற்பட்டது - உள்ளம் உடையுமோ என்று அவரும் மற்றவர்களும் எண்ணிட வேண்டிய நிலை.

குரு குலப் போராட்டம் - என்று தமிழக அரசியல் குறிப்பேடுகளிலே பொறிக்கப்பட்டுள்ள சம்பவம் இருக்கிறதே, அதனையே நான் கவனப்படுத்துகிறேன்.

வணிக வேந்தராக இருந்த பெரியார் இராமசாமி, நாட்டு விடுதலைப் போரிலே ஈடுபட்டு உழைத்தார் - அலுக்காமல் சலிக்காமல் தமது அருந்திறனைப் பயன்படுத்தி அவருடன் அந்நாள் பணியாற்றின பல தலைவர்களில், ஆச்சாரியார், இன்றைய ஓமந்தூரார் - முதலமைச்சர் ஓமந்தூரார், டாக்டர் வரதராஜூலு, திரு.வி.க. ஆகியோர் முக்கியமானவர்கள்.

நாட்டு விடுதலையே, அனைவரின் நோக்கம்.

அனைவரின் திறனும் இந்தக் காரியத்துக்கே.

பெரியார் பணி புரிந்த போது, இந்தப் பொது நோக்கம் அனைவருக்கும் உண்டு என்று நம்பினார்.

குருகுலம் இந்த நம்பிக்கையைத் தகர்த்தது.

அதனை நடத்திய, வ.வே.சு.அய்யர், பள்ளியில் பார்ப்பன மாணவரும், அல்லாத மாணவரும் வேறு வேறு இருந்தே சாப்பிடவேண்டும் என்றார். இந்தச் சமயம் பள்ளியில் படித்தவர்களில் ஓமந்தூராரின் மகனும் ஒருவராம்.

ஓமந்தூரார், மனம் வேதனைப்பட்டது! திரு.வி.க. வின் மனம் புண்பட்டது! வரதராஜூலு அவர்களின் மனம் வாட்டமுற்றது! பெரியாரின் மனதிலேயே, ஒரு கீறலே ஏற்பட்டுவிட்டது.

வேதனை, ஆதரவு அன்புரை எனும் விருந்தால், குறைந்தது.

புகழ்ச்சி எனும் மருந்திட்டு திரு.வி.க.வின் மனப் புண்ணையும் ஆற்றினார்.

வாடிய வரதராஜூலு அவர்களைத் தேடிப் பிடித்து மோடி செய்யாதே, மடமானே! என்பது போன்ற பாடலைப் பாடியே குஷிப்படுத்தி விட்டனர்.

உள்ளம் உடையுமோ என்று அஞ்ச வேண்டிய அளவுக்கு மனதிலே, கீறல் விழுந்த நிலை பெற்ற பெரியார் இந்த முறைகளினால், சாந்தி கிடைக்காது என்பதை அறிந்து வேறு நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார். அதனால் தான் அவருடைய உள்ளம் உடைபடாமல் இருந்தது.

காந்தியைப் போற்றிக் கதரை உடுத்துமின்

என்ற உச்சாடனத்தைக் கூட விட்டுவிடவில்லை பெரியார். அதனையும் செய்து கொண்டே, பத்திரிகையில் அதனைப் பொறித்துக் கொண்டே, போர் முகாம் அமைக்கிறேன் என்று கூறாமலும் கூட தமது, உள்ளம் உடைபடாதிருக்கவும், ஊராரின் உழைப்பு வீணருக்குப் பலியாகாதிருக்கவும், காங்கிரசுக்குள்ளே நடக்கும் பார்ப்பனீயத்தை மட்டும் கண்டிக்க முனைந்தார் - இன்று? - புது முகாம்!! உள்ளம் உடையவில்லை.

உள்ளம் உடைந்துவிடக் கூடும் என்ற அச்சம் எழ வேண்டியபடி, நோய்க் கிருமி தெரிய ஆரம்பித்த உடனேயே, தடுப்பு முறையைக் கையாண்டதால், பெரியாரால், உள்ளம் உடையாதபடி பார்த்துக் கொள்ள முடிந்தது. அதன் பொருட்டு, அவர் அன்று கொண்ட போக்கும், நடவடிக்கையும் கேலிக்கும் கண்டனத்துக்கும் இடமளித்தது. ஆனால், அவரோ மனவலி போக்கும் முறைப்படி நடந்து கொள்வது நமது பொறுப்பு, அதை அறியாதாரின் கேலியும் கண்டனமும் அவரவர்களுக்கு ஏற்பட்ட மனவலியின் விளைவு - நாம் இவை பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை என்று தீர்மானித்தார்.

அதுதான் சிறந்த முறை - வெற்றிக்கான முறை -வேறு வகையிலே வெற்றிகள் கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, உள்ளம் உடைந்து போகாமலிருக்க இதுவே சிறந்த வழி.


------------------- அறிஞர் அண்ணா -"திராவிட நாடு", 20.4.1947

0 comments: