Search This Blog

24.11.08

பார்ப்பனர் வகுத்த ஜாதி அடுக்குமுறையின் நோக்கம் என்ன?


* பார்ப்பனர்கள் வகுத்த ஜாதி அடுக்குமுறையில் கடைகோடியில் இருப்பவர்கள் அருந்ததியர்கள்

* மனித மலத்தைத் தலையில் சுமப்பவர்கள் அவர்கள்

* கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அம்மக்களுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்!


அண்ணா நூற்றாண்டிலே மகத்தான சாதனை

தி.மு.க. மகுடத்தில் ஜொலிக்கும் மற்றொரு வைரக்கல்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


அருந்ததியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அறிவித்த முதல்வர் கலைஞர் அவர்களின் சாதனை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

நம் நாட்டின் சமூகக் கொடுமைகளிலேயே மிகவும் கோரமானது, அக்கிரமமானது வர்ணாசிரம - ஜாதி அடுக்குமுறையாகும்!

பிறவி அடிப்படையில் ஜாதிகளைப் பிரித்த சூழ்ச்சியைவிட அதனை ஒன்றன்பின் ஒன்று என்று கீழான அடுக்குகளாக்கியது தான் வெறுக்கத்தகுந்த கொடுமையாகும்!

பார்ப்பனர் வகுத்த ஜாதி அடுக்குமுறை

மேல்ஜாதி என்று ஆக்கிக் கொண்ட ஜாதியினரான பார்ப்பனர் அதற்கு அடுத்து கீழ் என்று ஏணிப் படிக்கட்டுகளைப் போல ஜாதிமுறை அடுக்கு பேத முறையாக ஆக்கியதன் உள்நோக்கம் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டே இருப்பதோடு, மிகவும் கீழான படிக்கட்டில் நிற்பவருக்குத்தான் ஆத்திரம் பொங்கும் அதிகமாக என்றாலும், அது மேல்தட்டில் உள்ள பார்ப்பனர்களோடு மோதலாக வெடிக்கக் கூடாது என்பதற்காகவே 1, 2, 3, 4 என்று பிரித்து 5 என்ற பஞ்சமர்களை - தாழ்த்தப்பட்ட மக்களை அய்ந்தாம் ஜாதியாக்கி விட்டதோடு, பெண்களை அதற்கும் கீழே 6 ஆவது இடத்தில் மனுதர்மம் வகுத்தது. சமுதாயத்தில் பேத நிலை பெரு நிலையாகவே ஆனதற்கு இதுவே அடிப்படையாகும்.

இதைத்தான் அண்ணல் அம்பேத்கர் (Graded inequality) அடுக்குமுறை பேதமுறை - ஜாதி முறை என்றார்!

இதில் 5 ஆம் ஜாதி என்ற தாழ்த்தப்பட்ட நமது ஆதிதிராவிட சகோதரர்களைக்கூட ஒரு பிரிவாக இருக்கவிடாமல், பறையர், பள்ளர், அருந்ததியினர் (சக்கிலியர்) என்று பிரித்து அவர்களுக்குள்ளேகூட ஒருவர் இன்னொருவரோடு இணையவிடாத பிரித்தாண்ட சூழ்ச்சியை ஆரியம் செய்தது!


வர்க்கப் பிரிவில் இப்படி அடுக்குமுறை அமைப்பு கிடையாது. முதலாளி - தொழிலாளி, ஆண்டான் - அடிமை என்ற அளவில் மட்டுமே - வருணப் பிரிவில் மட்டும் இந்தப் பெருங்கொடுமை!

இந்த ஒடுக்கப்பட்ட சகோதரர்கள்தான் அதிகமான உழைப்பைச் சமூகத்திற்குத் தந்துவிட்டு, தாங்கள் குந்தக் குடிசையின்றி, குடிக்கக் கூழின்றி, படுக்கப் பாயின்றி, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களாக மண் புழுக்களைவிட கேவலமாக, பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர் நமது பாரத புண்ணிய பூமியில்!


அருந்ததியர்க்கு 3 விழுக்காடு!

இந்த ஒடுக்கப்பட்ட மக்களில் உள்ள முக்கிய பிரிவுகளில் ஒன்றான அருந்ததியர் நிலை மிகவும் கீழே உள்ள அடுக்காக, அடுக்காத கொடுமையாக தொடர்ந்து வருவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க அவர்களை மனிதர்களாக்கி அவர்களுக்கென ஒரு தனி ஒதுக்கீட்டினைத் தருவது அவசியம் என்ற உரிமை முழக்கம் பல ஆண்டுகளாக இருந்தும், தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா வழியில் நடைபோடும் கலைஞர் அரசில்தான் அதற்கு விடியல் பிறந்துள்ளது!

அப்பிரிவினர்கள் எண்ணிக்கையும் கணிசமானது என்பதால் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு 18 இல் 3 விழுக்காடு அவர்களுக்கு ஒதுக்குவது மிகவும் பாராட்டி வரவேற்கவேண்டிய ஒன்றாகும்!

மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சர் ஆன பிறகுதான் தமிழ்நாட்டில் 16 விழுக்காடு என்று இருந்த (எஸ்.சி.) தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 18 ஆக உயர்த்தப்பட்டது.

மனிதக் கழிவை தலையில் சுமக்கும் கொடுமை!

அதில் குறிப்பிட்ட சதவிகிதம் அருந்ததியர் என்று அழைக்கப் படும் சகோதரர்களுக்கு, கடும் உழைப்பாளிகளுக்கு - கல்வி, உத்தி யோகத்தில் ஒதுக்குவது மிகவும் தேவை என்பதை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கருத்தறிந்து, நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களைக் கொண்டு அறிக்கை தருமாறு கேட்டுப் பெற்று அதனை வருகின்ற 27.11.2008 அமைச்சரவையில் முடிவு செய்து அறிவிப்பதாக உள்ளார்கள் என்ற செய்தி மிகமிக பாராட்டப்படவேண்டிய செய்தி மட்டுமல்ல, சமூகநீதிப் போராட்ட வரலாற்றில் ஒரு மகத்தான திருப்பமும் ஆகும்!

அதைவிட இப்பிரிவினர்தான் துப்புரவுத் தொழிலாளர்கள், உலகில் எங்குமில்லாத கொடுமையான மனிதக் கழிவை - மலத்தை இந்த மனிதர்கள் தலையில் சுமந்து செல்லும் கொடுமை மிகவும் கேவலமானது அல்லவா! இதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒழித்துவிட வேண்டும் என்பதை இந்த அரசு பதவியேற்ற காலம் முதலே நாம் வற்புறுத்தி வந்தோம்.

முதல் ஆளுநர் உரையிலேயே அது அவரால் அறிவிக்கப்பட்டதை வரவேற்றுப் பாராட்டினோம்.

முதல்வர் கலைஞரின் உணர்ச்சிமிகு கவிதை

இப்போது சட்ட ரீதியான அடித்தளத்துடன் அத்தகைய மனிதநேயம் மலரவிருப்பதற்கு, உவகை பொங்க, உணர்ச்சி கொப்பளிக்க நேற்று முதல்வர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் எழுதிய கவிதையிலே,

தலையில் கையில் மலந்தூக்குவோர் தலைவிதி மாற்றிட

தலையில் தூக்கி அறிக்கையை - வைத்துக்கொண்டு ஆடுகின்றேன் நான்

உள்ளத்தில் உற்சாகம் புன்னகை ஊக்கம்

அனைவர்க்கும் பொங்கும்

பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றி வைக்க;

பணிபுரிவோம் தொடர்ந்து!

பகுத்தறிவைத் துணைக்கொண்டு நடந்து!

என்று எழுதிய கவிதைமூலம் மக்களது மகிழ்ச்சியைப் படம் பிடித்துக் காட்டிவிட்டார்!

சமூகநீதியில் பூத்த மலர் நீதியரசர் ஜனார்த்தனம்

பாராட்டுதலுக்குரிய மாண்பமை நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்கள் சமூகநீதியில் பூத்த மலர். அம்மலர் இப்படி காய்த்து கனிந்துள்ளது வியப்பல்ல; அதற்கு வாய்ப்பளிக்கும் அரசும், முதல்வரும் அமைந்தது மிகவும் பொருத்தமாகும். அய்யாவும் - அண்ணாவும் என்றும் வாழும் தத்துவங்கள் - புத்துலகச் சிற்பிகள்; அவர்கள் உருவாக்கிய கலைஞர் இதனைச் செய்வது - அதுவும் அண்ணா நூற்றாண்டிலே செய்வது - மகத்தான சாதனைச் சரித்திரம். தி.மு.க. மகுடத்தில் மற்றொரு ஜொலிக்கும் வைரக்கல்.

-----------------------நன்றி: "விடுதலை" 24-11-2008

1 comments:

tamilan said...

தமிழ் OBC பட்டியல் இடி பெரும் ‘தமிழ்ர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!

நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

வந்ததா? இல்லை.

இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.