Search This Blog
18.11.08
விழி பிதுங்கி நிற்கும் பா.ஜ.க.வும், அதன் பரிவாரங்களும்
குற்றவாளிகளுக்கு வக்காலத்தா?
இந்துத்துவா பேசும் பாரதிய ஜனதா, சங் பரிவார்க் கும்பலின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. இந்துத்துவா என்பது ஒரு வாழ்க்கை நெறிதான் என்று பதவுரை - பொழிப்புரை செய்து கொண்டவர்களின் அந்தரங்கம் வன்முறைதான் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
மாலேகான் குண்டுவெடிப்பு இதனை பட்டாங்கமாக அறிவித்துவிட்டது. சாமியார்களும், சங்கராச்சாரிகளும், இராணுவ அதிகாரிகளும் இந்தக் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்கிற ஆதாரம் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டே யிருக்கிறது.
இப்பொழுது இன்னொரு கூடுதல் தகவல்: காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் எஸ்.கே. சின்காவுக்கும் மிகப்பெரிய அளவில் இதில் தொடர்பு உண்டு என்று ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர்கள் முப்தி முகம்மது சையத் மற்றும் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் கூறியுள்ளனர்.
இந்த எஸ்.கே. சின்கா யார் என்றால், இராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியாவார்.
இராணுவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதிலிருந்தே இராணுவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இது நடந்திருக்காது என்பது வெளிப்படை.
ஒருமுனையைத் தொட்டு பதம் பார்த்தவுடன் - அதன் வழியாக பல சங்கதிகள், திடுக்கிடும், அதிர்ச்சியூட்டும் இரகசியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தலை நீட்டுகின்றன.
பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தங்களின் ஆள்களைப் பல இடங்களிலும் திணித்து இருக்கின்றது. வெளிநாட்டுத் தூதுவர் அலுவலகங்களிலிருந்து அய்.நா.வரை சங் பரிவார்ப் பேர்வழிகளை அவர்கள் திணித்திருக்கின்றனர். இராணுவத்திலேயே ஊடுருவச் செய்து இருக்கின்றனர் என்றால், இந்தப் படுபாதகர்கள் என்னதான் செய்யத் துணியமாட்டார்கள்!
விஷயம் முற்றிவிட்டது; வீதிக்கு வந்துவிட்டது என்றவுடன், வேறு வழியில்லாமல் தங்கள் ஆள்களைக் காப்பாற்றவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.
குற்றவாளிகளுக்காக பா.ஜ.க. போராடும் என்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். அதேபோல, விசுவ இந்துபரிசத்தின் தலைவர் அசோக்சிங்காலும் தொடை தட்டுகிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனும் தன் பங்குக்குக் குரல் கொடுக்கிறார்.
அவர் ஒருபடி மேலே சென்று இந்துப் பயங்கரவாதம் என்று பேசுவதே தவறு என்றும், இந்து என்றால் சகிப்புத் தன்மை என்று பொருள் என்றும் பாஷ்யம் செய்துள்ளார்.
இந்த அலறல்களுக்கெல்லாம் காரணம் தெரிந்த ஒன்றே! இவர்களின் குற்றங்கள், வன்முறை நடவடிக்கைகள் அம்பல மாகிவிட்ட நிலையில், தங்களை எந்த வழியிலும் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்கிற நெருக்கடியும், நிர்ப்பந்தமும் இந்தக் கும்பலுக்கு ஏற்பட்டுவிட்டன என்பதுதான் யதார்த்தமும், உண்மையுமாகும்.
சட்டம் தன் கடமையைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும். சங்பரிவார்க் கும்பலின் போராட்டத்துக்கு அஞ்சியோ, அச்சுறுத்தலுக்குப் பயந்தோ சட்டம் தன் கடமையைச் செய்வதில் கிஞ்சிற்றும் பின்வாங்கவே கூடாது.
பல நாள் திருடன் இப்பொழுது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளான். இந்தச் சந்தர்ப்பத்தை எந்த காரணத்தை முன்னிட்டும் நழுவ விட்டுவிடக்கூடாது.
1992 டிசம்பர் 6 இல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படாத நிலை இருக்கிறதே! அந்த நிலை மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் ஏற்பட்டுவிடக் கூடாது.
விழி பிதுங்கி நிற்கும் பா.ஜ.க.வும், அதன் பரிவாரங்களும் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட நிலையில், இது அரசியல் சதி என்று பினாத்த ஆரம்பித்துவிட்டனர். பயம் அவர்களை உலுக்கிக் கொண்டு இருக்கிறது. தேர்தல் நடைபெறவிருக்கும் ஒரு காலகட்டத்தில் மக்கள்முன் அம்பலப்படுத்தப்பட்டு விட் டோமே என்கிற தேர்தல் நடுக்க ஜூரமும் சேர்ந்து அவர்களை வாட்டி வதைக்கிறது.
அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் குற்றவாளிகள்மீது வழக்குகளை சரியான முறையில் பதிவு செய்து, சட்டத்தின் தண்டனையைப் பெற்றுத்தரவேண்டியது ஒரு ஆட்சியின் அடிப்படைக் கடமையாகும்.
வெகுமக்கள் துணையும் இதற்கு உண்டு! அரசு இயந்திரம் முடுக்கிவிடப் படட்டும்!
----------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 18-11-2008
Labels:
பார்ப்பனியம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நடமாடும் கடவுளாக நாட்டையே தன் கைக்குள் அடக்கி வைத்திருந்த ஜெகத் குரு சங்கராச்சார்ய ஸ்வாமிகாள்,
சங்கரராமன் கோவிலுக்குள்ளே இருக்கிறார்,வெளியே வரமாலே,நாங்கள் இங்கே அதிக நேரம் இருக்க முடியாது உள்ளேதான் போக வேண்டும் என்பதற்குப் "போட்டுத் தள்ளு" என்று உத்த்ரவிட்ட்தாகப் பதிவாகி இருக்கிறதாம்.
இவர்கள் பொய்யும்,புரட்டும்,வண்ட வாளங்களும் தண்ட வாளங்களில் வர பல வழக்குகள் பல உயர் நீதி மன்றங்களிலே தொடரப்பட வேண்டும்.
வழக்குறைஞர்கள் சங்கங்கள் உடன் நட வடிக்கை எடுக்க வேண்டும்.இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்குள்ளத் தொடர்புகள் வெளி வர வேண்டும்
தங்களின் வருகைக்கும்
ஆலோசனைக்கும் நன்றி.
Post a Comment