Search This Blog

19.11.08

அய்யாவின் அடிச்சுவட்டில்!






அன்னை முகத்தைக்
காணாத குழந்தை
சிற்றன்னையின் அரவணைப்பில்
நடை பயின்ற பிள்ளை!
சகோதரர்களின் கையணைப்பில்
கல்வி பயின்ற மாணவன்
ஆசிரியர் திராவிட மணியின்
வழிகாட்டலில் பகுத்தறிவுப்
பாதை அறிந்த சிறுவன்!
பத்து வயதில் மேடை ஏறி
கேட்போர் நெஞ்சில் வேர்
பதித்த வித்தகன்!
பெரியாரின் கவனத்தையும்
அண்ணாவின் பார்வையினையும்
ஈர்த்த இளைஞன்!
பல்கலைக் கழகத்திலும்
பட்டொளி வீசிய மாணவன்
கல்லூரிப் படிப்பு ஒரு பக்கம்
கழக மேடை இன்னொரு பக்கம் என்று
கர்ச்சனை புரிந்த களப் பணியாளன்!

சட்டப் படிப்புப் படித்து
வழக்கறிஞர் தொழிலிலும் வாகை சூடிய ஆற்றலாளன்!
அய்யாவின் அழைப்பை ஏற்று
தொழிலைத் தூக்கி எறிந்து
விடுதலைப் பொறுப்பையும்
கழகப் பொறுப்பையும் ஏற்று
கடமையாற்றிய கண்ணியன்!
பெரியார் மறைந்தாலும்
வெறிச்சோடாது
கழகத்தையும், தமிழ்நாட்டையும்
பெரியார் வழியில்
காத்திட்ட காவலன்!

பகுத்தறிவுக் களத்தில் புலிப் பாய்ச்சல்
தமிழர் உரிமைத் திசையில்
தலைகொடுக்கும் துணிச்சல்
சமூகநீதிச் சித்தாந்தத்தில்
சளைக்காது வீசும் புயற்காற்று!
பெரியார் கொள்கையைப்
பேசாத நாளெல்லாம்
பிறவா நாளென
நாள்தோறும் பேச்சு
நாள்தோறும் எழுத்து -
நொடிதொறும் செயல்பாடு
என்று பழகிப்போன
வாழ்க்கை முறைக்குச்
சொந்தக்காரர்!
எதிர்ப்புக்கும் துரோகங்களுக்கும்
ஈடு கொடுத்து
ஈடில்லா வெற்றியைக்
குவித்துவரும் கொள்கை முரசம்!

பெரியார் கல்வி நிறுவனங்களை
வளர்த்து வளர்த்து
பல்கலைக் கழகம் வரை
கொண்டு சென்று - காண்போர்
வியக்க காட்சி தரும் கறுஞ்சட்டைத் தலைவர்!
பெரியாரின் மண்டைச் சுரப்பை
உலக மயமாக்கிவரும் பணியில்
ஓயாது உழைக்கும் உழைப்பாளி!
பிரச்சாரம் - போராட்டம்
என்ற அணுகுமுறையோடு
கழகத்தைக் கம்பீரமாக
நடத்திவரும் காலக் கடிகாரம்!
பொதுப் பணிக்காக நாற்பது
முறைக்குமேலும் சிறைவாசம் - கைது!

கொள்கைக் குடும்பம் முதலில்
சொந்தக் குடும்பம் அடுத்து என்ற
கொள்கைப் பயிர்
வளர்க்கும் கழனி!
கிடைத்தற்கரிய இணையர்
கீர்த்திமிகு பிள்ளைகள்!
75 ஆண்டு அகவையில்
65 ஆண்டு பொதுவாழ்வு என்ற கணக்கில்
தமிழகத்தின் மூத்த தலைவர்!
பெரியார் வைத்த நம்பிக்கையைப்
பொய்க்காது பெய்த வான்மழை!
வீட்டில் வைத்த பெயர் சாரங்கபாணி
கொள்கை ஆசிரியர் சூட்டிய பெயர் வீரமணி
வீரத்திற்கும் விவேகத்திற்கும் சொந்தக்காரர்
தளபதியாய் விளங்கி
தமிழர் தலைவராகப்
போற்றப்படும் புகழின் உச்சம்!
பொதுவாழ்வின் காலக்கட்டத்தில் 65 ஆண்டு தமிழகத்தின்
நீண்ட நெடிய வரலாற்றுத் துகள்கள்
சம்பவங்கள், திருப்பங்கள், போராட்டங்கள்,
அவற்றின் விளைவுகள் - விளைச்சல்கள், சமூக, அரசியல்
பொருளாதார மாற்றங்கள்
என்று எத்தனை எத்தனையோ
நடப்புகள் - விசித்திரங்கள்!
இவ்வளவையும்
தமிழர் தலைவர் மானமிகு
கி. வீரமணி அவர்கள்
புதிய பார்வை இதழில்
திறந்த புத்தகமாக எழுதியவை
அய்யாவின் அடிச்சுவட்டில் என்னும்
தலைப்பில் நூலாக
வெளிவரவிருக்கிறது.

இது ஒரு தனிமனிதரின் கதையல்ல. திராவிட இயக்கத்தின் பல்வேறு முக்கிய காலகட்டங்களை, தமிழ்நாட்டின் மிக முக்கிய நிகழ்வுகளை முத்திரைப் பதிப்புடன் படம் பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடி. தந்தை பெரியார் என்னும் மகாகாவியத்தின் ஒரு அத்தியாயம்!

டைரி எழுதும் பழக்கம் இவரிடம் இல்லையென்றாலும், நெஞ்சில் பூத்து நிற்கும் நினைவுக் குறிப்புகள் ஏராளம்! ஏராளம்!! நூலின் ஏடுகளைப் புரட்டுபவர்கள் இதனை யதார்த்தத்தில் அறியக்கூடும்.

தன் வரலாறு என்று சொன்னாலும் தமிழகத்தின் வரலாறும் இதில் அடங்கியிருக்கிறது.

ஏதோ எழுதுகிறேன் என்று தொடங்கினார் என்பதுதான் உண்மை.

எழுதி முடித்ததும் அடேயப்பா என்று மலைக்கும் அளவுக்கு அவ்வளவு தகவல்கள் ஆச்சரியப்படுத்து கின்றன.

தமிழர் தலைவரின் பவள விழா நிறைவினையொட்டி, அவர்தம் பிறந்த நாளில் வெளியிடப்படுகிறது.

காத்திருங்கள்! உங்கள் கைகளை அணி செய்திடும்!



---------------------நன்றி: "விடுதலை" 19-11-2008

2 comments:

Thamizhan said...

ஒரே தலைவர்,ஒரே கொள்கை,ஒரே இயக்கம் என்று அறுபது ஆண்டிற்கும் மேலே இருப்பவர்.
தங்கப்பதக்கத்துடன் வாங்கிய பட்டம்,
பேச்சு,எழுத்து,சிந்தனை ஆற்றல் இவை கோடிகளைக் குவித்திருக்கலாம் அதைவிடத் தொண்டர்களின் பாசமும்,பற்றும் விலை மதிக்க முடியாது என்று வாழ்பவர்.குறை கூறுபவர்கள் இவரது எளிமை,உழைப்பு
இவற்றை நேரிலே இருந்து பார்ப்பது நல்லது.இரண்டு நாட்கள் கூடப் பயணம் செய்தால் போதும்.
கடினமான நிலைப் பாடுகள் எடுக்க வேண்டிய போது யாரைப் பற்றியும் கவலைப் படாமல் பெரியார் என்ன செய்திருப்பார் என்ற ஒரே கணக்கு.
அடைந்த புகழ் மாலைகளை விட இகழ்
சொற்கள்தான் அதிகம்,அதைப் புறந்தள்ளி இனமானத்திற்காகத் தன் மானம் பற்றிக் கவலைப் படாதத் துணிவு,செயல்.
உன் தலைவன் யார் என்பதை உனது எதிரிகளின் முதல் எதிரி யார் என்ற பதிலில் தமிழின எதிரிகளின் முதல்
எதிரி இவர் தானே!
கல் எறிவது உடன் பிறப்புக்கள் எனும் போது வருத்தம் தான்,ஆனால் காலம் சரியாகப் பதில் சொல்லிக் கொண்டேதான் உள்ளது.

தமிழ் ஓவியா said...

மிகச் சரியாக தங்களின் கருத்தைப் பதிவு செய்துள்ளீர்கள்.
வருகைக்கு மிக்க நன்றி.