Search This Blog

21.11.08

என் கையில் இருப்பது எழுதுகோல்! -தருப்பைப்புல் அல்ல! கலைவாணர் என்.எஸ்.கே. பதிலடி




கலைவாணர் - சீரிய பகுத்தறிவாளர்


அண்ணா அவர்களையும், பெரியாரையும் கவர்ந்த அந்த அற்புதமான நடிப்புத்தான் என்னே!

மாணிக்கவாசகர் எனும் படத்தில் அரண்மனை நிர்வாகியாகக் கலைவாணர் நடிக்கிறார். அவருக்கும் அரசருடைய குடும்பப் புரோகிதருக்கும் தகராறு ஏற்படுகிறது.

புரோகிதர் அரச குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், நிர்வாகிக்கு உரிய மரியாதை கொடுக்க மறுத்து அவரை மிரட்டுகிறார். அதற்குச் சற்றும் பணியாத நிர்வாகி (கலைவாணர்) தம் நிர்வாக உடையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, மேசை முன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.

நிர்வாகி (கலைவாணர்) கால் மேல் கால் போட்டபடியே புரோகிதரைக் கீழும் மேலும் அலட்சியமாக முறைத்துப் பார்த்த வண்ணம் தலையை ஆட்டிக் கொண்டே என் கையில் இருக்கும் இது என்ன தெரியுமா? எழுதுகோல்! நினைவிருக்கட்டும். தருப்பைப்புல் அல்ல! தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு; ஜாக்கிரதை! என்று சொல்கிறார். இதுதான் மாணிக் கவாசகர் படத்தில் கலைவாணருக்குப் பாராட்டும் பெருமையும் பெற்றுக் கொடுத்த வசனமும் நடிப்பும். பெரியாரின் பழக்கம் ஏற்படக் காரணமாய் இருந்தவை.


***********************************************

கலைவாணரின் கலை உலகப் புகழை விண்முட்ட உயர்த்திய படம் சகுந்தலா. இந்தப் படத் தில் கலைவாணர் மீனவராக நடிக்கிறார். கதாநாயகி சகுந்தலை ஆற்றில் தவறவிட்ட மோதிரத்தை மீன் ஒன்று விழுங்கிவிடுகிறது. அடுத்த நாள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் வலையில் அம்மீன் அகப்படுகிறது. மீனை அறுத்துப் பார்க்க மோதிரம் கிடைக்கிறது. மோதிரத்தை அரசனிடம் கொண்டு கொடுக்கிறார் மீனவர். இந்தப் படத்தில் கலைவாணர் மீனவராக நடித்த காட்சியும், பாடலும் நாட்டு மக்கள் அனை வரையும் கவர்ந்துவிட்டன. கலைவாணர் மீனவர் உருவத்தில் இருந்தபடி பானை ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு, பானை மீது தட்டி தாளம் போட்டவாறு பாடுகிறார்: காலையிலே எழுந்திருச்சி கஞ்சித் தண்ணி இல்லாமே கஷ்டப்படுறேனே கடவுளே - நான் கஷ்டப் படுறேனே கடவுளே என்பதுதான் அந்தப் பாட்டின் பல்லவி. இவரது அந்தப் பாட்டிலும் நடிப்பிலும் அன்று மயங்காதவர்களே இல்லை என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு அற்புதமாக அமைந்திருந்தது.

*******************************************

கலைவாணர் பிறந்த நாஞ்சில் நாட்டை உள்ளடக்கிய திருவிதாங்கூர் ராச்சியத்தை ஆண்டு வந்தவர் சித்திரைத் திருநாள் மகாராசா ஆவார். இவரும், அரச குடும்பத்தாரும் கலை வாணரின் மேலான ரசிகர்கள். கலைவாணர் நடித்த படங்களை அரண்மனையில் திரை யிட்டுப் பார்த்து மகிழ்வர்.

கலைவாணரின் சகுந்தலா படத்தைப் பார்த்த பிறகு சித்திரை மன்னருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது. கலைவாணரை நேரில் பார்க்க வேண்டும். அவரைப் பாராட்ட வேண்டும். அவருக்குப் பரிசளிக்க வேண்டும் என்று எண்ணினார்.

சென்னைக்கு வந்தார். அப் போது சென்னையில் கலைவாணரும் மதுரமும் நியூடோன் ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். மன்னர் சித்திரைத் திருநாள் அங்கு சென்று அவர்களைப் பார்த்து அறிமுகம் செய்து கொண்டார். மன்னரின் விருப்பப்படி மன்னர் நடுவில் அமர கலைவாணரும் மதுரமும் மன்னரின் இரு பக்கங்களிலும் அமர போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

மன்னாதி மன்னர்களும் மதிக்க, முடிசூடா மன்னராகப் பெருவாழ்வு வாழ்ந்த பெருமைக்கு உரியவர் கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள்.

****************************************

கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கைகள் அவருடையவை. வாரி வாரி வழங்கிய வள்ளல் என வாழ்ந்த அவருடைய கைகள் நீண்டவைகளும்கூட.

அவர் அருள் உள்ளம் கொண்டவர். மனிதநேயம் மிக்கவர் என்பதற்கு இரண்டொரு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

ஒரு நாள் அவரது வீட்டின் முன்புள்ள தெருவில் வெந்து அவிக்கும் வெயிலில், கையில் உண்டியலை ஏந்தியவாறு கோவிந்தா! கோவிந்தா! என்று கூறிக் கொண்டே தரையில் உருண்டு கொண்டிருந்தான் ஒரு கோவிந்தன்.

கலைவாணர் அவனைக் கூப்பிட்டு, இப்படி உருண்டு உடலைக் கெடுத்துக் கொள்கிறாயே உனக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு கிடைக்கும்? என்று கேட்டார். அய்ந்து ரூபாய் கிடைக்கும் என்றான். அந்தக் காலத்தில் ரூபாய் அய்ம்பதைக் கொடுத்து இந்தத் தெருவிலாவது உருளாமல் போ. வேறு வேலை செய்து பிழைத்துக் கொள் என்றார்.


*************************************************

அவருடைய சிலை திறப்பு விழா நடக்கின்ற இந்த நேரத்தில் அவரோடு நெருங்கிப் பழகிய என் போன்றோர்க்கு ஆயிரத் தெட்டு எண்ணங்கள், நெஞ்சத்திலே அலைமோதத்தான் செய்யும். அவைகளையெல்லாம் எடுத்து விளக்கிக் கொண்டிருப்பதற்கு நேரமில்லை. என்னுடைய உடல்நிலை அதற்குத் தகுந்ததாகவும் இல்லை. ஆனால் நெஞ்சத்திலே எண்ணி, எண்ணி இன்றல்ல என்றென்றும், நாம் மட்டும் அல்ல; நாட்டு மக்கள் அனைவரும் போற்றிப் பாராட்டத்தக்க தலைசிறந்த தமிழ்மகனாக வாழ்ந்தவர் நம்முடைய கலைவாணர் அவர்கள். அவருடைய சிலையினை உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலக் குழுவினர் அமைத்துக் கொடுத்திருப்பது மற்றொரு பொருத்தமானதாகும். அவர்கள் உலகத் தமிழ் மாநாட்டிற்கு ஒரு ஊர்வலத்தின் மூலம் சிறந்த மதிப்பினைத் தேடிக் கொடுத்தார்கள்.

அதைப் போலவே அவர்கள் ஏற்றுக் கொண்ட இந்தச் சிலையமைப்பின் காரியத்தின் மூலமும் அவர்கள் கலைத் துறைக்கு நிரந்தரமான ஒரு தொண்டினை நிறைவேற்றிக் கொடுத்திருக் கின்றார்கள். அந்தக் குழுவினருக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றுபோல் என்றென்றும் கலை உலகத்திலே உள்ளவர்கள், கலையுலகத்தாலே பயன் பெற்ற வர்கள், சீர்திருத்த உலகத்திலுள்ளவர்கள். சமூகத்தின் தொண்டர்கள் அனைவரும் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களைப் போற்றுவார்களென்பதில் எனக்கு ஒரு துளி அய்யப்படும் இல்லை என்பதை தெரிவித்துக் கொண்டு, அவருடைய சிலையினை மகிழ்ச்சியாடும் பெருமிதத்தோடும் திறந்து வைக்கிறேன் என்று அறிஞர் அண்ணா பேசினார்.

****************************************


ரஷ்யா சென்று வந்த கலைவாணர் கூறிய செய்திகள்:

நான் நல்லதம்பி என்ற சினிமா படத்தின் மூலம் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தேன். ஆனால் அதற்காக நம் அரசாங்கத்திடமிருந்து ஒரு பாராட்டுக் கடிதம் கூட வரவில்லை. இதை எண்ணிப் பார்க்கும்போது வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

மேலும் நான் ரஷ்யா சென்று திரும்பியது குறித்து நம் அரசாங்கமும் காங்கிரசு நிறுவனமும் கவனிக்கவே இல்லை. ஒரு காங்கிரஸ்காரர் கூட என்னை விசாரிக்கவில்லை. இவர்கள் வெளிநாடு செல்லும் நம்நாட்டுக் கலைஞன் ஒருவனை வழியனுப்பவுமில்லை என்பதையும், அவன் திரும்பி வரும்போது வரவேற்கவுமில்லை என்பதையும் எண்ணிப் பார்க்கையில் நான் வெட்கித் தலை குனிய வேண்டியதாகின்றது.


--------------------நன்றி: "விடுதலை" 21-11-2008

0 comments: