Search This Blog

14.11.08

மாணவர்களே ஜாதி உணர்வைத் தூக்கி எறிந்து படியுங்கள்! படியுங்கள்!! -பாதை தவறாதீர்கள்!


* படிக்கும் மாணவர்களிடத்தில் ஜாதி உணர்வா?

* தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் பாடுபட்டது இதற்காகவா?

* சட்டக்கல்லூரி முதல்வரும், காவல்துறையும் சரியான முறையில் செயல்பட்டு இருக்கவேண்டாமா?

* அரசியல் செய்யக் கிடைத்த மீனாக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாமா?

* 24 மணிநேரத்தில் முதலமைச்சர் அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்துள்ளாரே!

முதலமைச்சரைப் பதவி விலகக் கோரும் எதிர்க்கட்சித்
தலைவர் முன்பு எப்படி நடந்துகொண்டார்?

மாணவர்களே ஜாதி உணர்வைத் தூக்கி எறிந்து
படியுங்கள்! படியுங்கள்!! -பாதை தவறாதீர்கள்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை


சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற வன்முறைகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:-

12.11.2008 அன்று சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் களிடையே நடைபெற்ற வன்முறை, வெறியாட்டம் மிகவும் வெறுக்கத் தக்கவை; வேதனைக்குரியவை; கண்டனத்திற்குரியவையும்கூட!

சட்டத்தைப் பயின்று, எதிர்காலத்தில் வழக்கறிஞர்களாக, நீதிபதிகளாக, சட்ட மேதைகளாக வரலாறு படைக்கவேண்டிய நமது ஒடுக்கப்பட்ட சமூக மாணவக் கண்மணிகள் இப்படி வலது கை - இடது கையைத் தாக்கி சண்டையிடுவதும், மனிதாபிமானத்தை மறந்து சட்டத்தைக் கையில் எடுத்து, மிருகத்தனமான தாக்குதல்களில் ஒருவருக்கொருவர் ஈடுபடுவதும் கண்டு மிகவும் விசாரமும், வெட்கமும் அடைகிறோம்!

காவல்துறையும் - கல்லூரி முதல்வரும்

நடந்த இச்சம்பவங்களை, ஏற்கெனவே உளவுத்துறையினர் அங்கே கலவரம் வெடிக்கலாம் என்று முன்கூட்டியே தகவல் தந்துள்ள நிலையில், சென்னை மாநகரக் காவல்துறை போதிய முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும். சட்டக் கல்லூரியின் முதல்வர், காவல்துறைக்குத் தகவல் அளித்து போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முன் வந்திருக்கவேண்டும்.

ஜாதிய அடுக்கு முறையை உருவாக்கியவர்களின் நோக்கமே, பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டே இருந்தால்தான் தங்களது உயர்ஜாதி ஏகபோகம் என்றும் நிலைக்க முடியும் என்பதாகும்! மேல் ஜாதி - உயர்ஜாதி என்பவர்கள் ஏணியின் உச்சத்தில்; பிற்படுத்தப் பட்டவர்கள் அடிபட்டால், அதற்குக் கீழே வைக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் ஒருவருக்கொருவர் உரசிக்கொண்டு, உதைபட்டு மோதிக் கொண்டிருக்கவுமான நிலையில்தான் வர்ணாசிரம அடுக்குமுறை அமைப்பு உள்ளது!

இதை உடைத்தெறிந்து, புது சமுதாயம் - ஜாதியற்ற சமூகம் உரு வாக்கவேண்டிய மாணவர்கள் - அதிலும் சட்டக் கல்லூரி மாணவர் களிடையே அதுவே பிரச்சினை - வன்முறையாக, காரணியாக அமைந்துள்ளது என்பது எவ்வளவு கொடுமை!

24 மணிநேரத்துக்குள் முதலமைச்சரின் செயல்பாடுகள்!

தமிழக அரசைப் பொறுத்தவரை, நமது முதல்வர் கலைஞர் அவர்கள், இச்செய்தி கிடைத்த நேரம் முதலே, உடனடியாகச் செயல்படத் தொடங்கி, காவல்துறை, அதிகாரிகளிடம் தகவல்களைப் பெற்று, தனது அமைச்சர்களை - சட்ட அமைச்சர், கல்வி அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோரை அழைத்து உடனே சென்று, மாணவர்களைப் பார்த்து, உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகளை உடனடியாகச் செய்ய ஆணை பிறப்பிக்கவும், மாணவர்க ளுக்கு ஆறுதல் கூறி, நம்பிக்கையூட்டவுமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்துள்ளாரே!

அலட்சியமாக இருந்த கல்லூரி முதல்வர் பதவி நீக்கம், காவல் துறை அதிகாரிகள் பலர் பணியிடை நீக்கம், காவல்துறை ஆணை யர் மாற்றம், எல்லாவற்றிற்கும் மேலாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரது தலைமையில் நீதி விசாரணைக் கமிஷன், சட்டக் கல்லூரிகளை, விடுதிகளை மூடச் சொல்லி ஆணை, தேர்வுகள் தள்ளி வைப்பு என்று மளமளவென ஒரு நொடிப்பொழுதைக் கூட வீணாக்காமல் தனது அரசு இயந்திரத்தை மிகமிக வேகமாக முடுக்கிவிட்டுள்ளார்கள் - எல்லாம் 24 மணிநேரத்திற்குள்!

ஒரு தொலைக்காட்சியின் திருப்பணி!

ஒரு தொலைக்காட்சி இச்செய்தியைத் திரும்பத் திரும்பக் காட்டி, இந்த ஆட்சியின்மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படச் செய்ய, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய திருப்பணியையும் செய்தது.

வழக்கம்போல எதிர்க்கட்சித் தலைவர் (அ.தி.மு.க. பொதுச்செயலாளர்) உடனடியாக முதல்வர் கலைஞர் பதவி விலகவேண்டு மென்று அறிக்கை விடுத்துவிட்டார்.

எதற்கெடுத்தாலும் முதலமைச்சர் விலகவேண்டுமா?


நாட்டில் பொழுது விடிந்து பொழுதுபோனால், முதல்வர் பதவி விலகிடவேண்டும் என்ற கீறல் விழுந்த கிராமபோன் தட்டுபோல சொல்வது அவர்தம் வாடிக்கையான வேடிக்கை!

தமிழ்நாட்டில் பா.ஜ.க. போன்ற சில கட்சிகள், நாட்டில் சட்டம் ஒழுங்கே கெட்டுவிட்டது என்று கூறி, தங்களது பதவி அரிப்பைத் தீர்த்துக் கொண்டுள்ளன.

தமிழகக் காங்கிரசு கட்சியில் உள்ள ஒருவர் இருவர்கூட இந்தக் கோரசில் சேர்ந்துள்ளார்.

பாவம் அவர்கள், அவரவர் கட்சி ஆளும் மாநிலத்தில் - ஏன் டில்லி தலைநகரில், மகாராஷ்டிரத்தில், குஜராத்தில் மற்றும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் என்ன நடந்தது? சட்டம் ஒழுங்கு எத்தகைய அளவில் சீர்கேடு அடைந்தன? என்பதுபற்றி நாடே அறியும்!

அ.தி.மு.க. ஆட்சியில் தருமபுரியில் நடந்தது என்ன?

தருமபுரியில் - வேளாண்மைப் பல்கலைக் கழக மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்தினைக் கொளுத்தியபோது, இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா பதவி விலகினாரா, என்று மக்கள் கேட்கமாட்டார்களா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை இடையில் இப்படி பதவி விலகு என்று கேட்பதோ, உடனே ஆட்சியைக் கலையுங்கள் என்று சொல்வதோ ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானதாகும்.

மாணவர்களிடத்தில் ஜாதிய உணர்வா?


மாணவச் செல்வங்கள் - இப்படியெல்லாம் ஜாதி அடிப்படையிலோ அல்லது அற்பக் காரணங்களுக்காகவோ வன்முறை, அடிதடிகளில் ஈடுபடக்கூடாது என்று தலைவர்கள் விட்ட அறிக்கைகளில் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு நிலை, அவல நிலையல்லவா?

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஜாதி ஒழிப்புக்காக எந்த அளவு பாடுபட்டனர் என்பதை உணரவேண்டாமா? ஜாதியை ஒழிக்க படிப்பா? வளர்க்க படிப்பா? எண்ணிப் பார்க்கவேண்டாமா?

அரசியல் தூண்டிலுக்கு இப்போது கிடைத்த அருமையான மீன் இது என்று அரசியல்வாதிகள் நினைப்பது நாட்டிற்கு நல்லதா? சமுதாயப் பொது ஒழுக்கச் சிதைவுக்குத்தானே இது வழிவகுக்கும்?

ஓய்வு பெற்ற நீதிபதிகள் நம்பகத்தன்மை அற்றவர்களா?

ஓய்வு பெற்ற நீதிபதி கூடாது; பணியில் உள்ள நீதிபதிதான் விசாரிக்கவேண்டும் என்றால், ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் பல்லாயிரம் வழக்குகள் தேக்கத்தில் இருக்கும் நிலையில், உயர்நீதிமன்ற தலைமை அதற்கு இணங்குமா? இணங்கினாலும் அது மக்களுக்கு, குறிப்பாக வழக்காடிகளுக்குச் செய்யும் கேடாக அமையாதா?

ஓய்வு பெற்ற நீதிபதிகள் எல்லாம் என்ன நம்பகத்தன்மை அற்றவர்களா? இதுபோன்ற எத்தனையோ கேள்விகள் எழலாம்.

எனவே, தீயை அணைக்க முயலும்போது, அதில் சிலர் குளிர்காய எண்ணுவது மிகவும் மோசம்!

ஜாதி உணர்வுகளிலிருந்து விடுபடுவீர்!

மாணவச் செல்வங்கள் பொதுச்சொத்துக்களை அடித்து நொறுக்கி நாசமாக்குவதினால், யாருக்குக் கேடு? மீண்டும் மக்களது வரிப்பணத்தில்தானே அவைகளை அரசு புதுப்பிக்கப் போகிறது? அது புரியாமல், உணர்ச்சிவசப்பட்டு திசைமாறலாமா? சிந்தியுங்கள்!

வன்முறை, பொதுச்சொத்து நாசம், அப்பட்டமான அரசியல் பார்வை இவைகளைத் தவிர்த்து, ஜாதி உணர்வுகளிலிருந்து விடுபட்டு, சமூகநலப் பார்வையும், பொது ஒழுக்கம் வளர்க்கப்படவும், யோசனைகள் கூற முன்வருதல் அவசியம்!

மாணவர்களே படியுங்கள்! படியுங்கள்!! படியுங்கள்!!! பாதை தவறாதீர்கள்.


------------------ 14.11.2008

0 comments: