ஏழை என்பவன் யார்?
தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ள இக்கூட்டத்தார்களுக்குத்தான் பார்ப்பன மதப்படி சூத்திரன் என்கின்ற பெயர்.
முதலாளிகள் என்பவர்கள் யார்?
சரீரத்தினால் வேலை செய்யும் ஆண்களை வைத்து வேலைகளை வாங்கி, வேலை செய்தவர்களுக்கு ஒரு அளவுக்குட்பட்ட ஜீவனத்துக்கு மாத்திரம் போதுமான கூலி கொடுத்து விட்டு அவ்வேலையின் மற்ற எல்லா பலன்களையும் எல்லையின்றி அனுபவிப்பவர்கள்.
கீழ் ஜாதியார்கள் யார்?
ஏவலாள்கள். அதாவது, எவ்விதக் கூலியோ சம்பளமோ பேசாமல் இட்ட வேலையை செய்துவிட்டு கொடுத்த கூலியைப் பெற்றுக் கொண்டு கிடைத்ததற்குள்ளாகவே வாழ்ந்து திருப்தியடைய வேண்டியவர்கள்.
மேல் ஜாதியார்கள் என்பவர்கள் யார்?
தொழில்களில் கீழான தொழில், மேலான தொழில் என்று கற்பித்து மேலான தொழில்கள், மத்திய தொழில்கள் வரை என்பவைகளை மாத்திரம் செய்து கொண்டு கூடுமான சரீரத்தால் செய்யும் காரணமான வேலைகளைச் செய்யாது தப்பித்துக் கொள்வார்கள்.
குடியானவர்கள் என்பவர்கள் யார்?
பூமியைத் தானே உழுது, தானே பயிர் செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.
மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்?
தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆட்களை வைத்துப் பயிர் செய்கிறவர்களும் மற்றவர் களுக்கு குத்தகைக்கோ வாரத்துக்கோ விட்டு லாபத்தை மாத்திரம் அடைபவர்களுமான (பூமியை உடைய)வர்கள்.
பிராமணர்கள் என்பவர்கள் யார்?
எக்காரணம் கொண்டும் கரீரப்பிரயாசைப் படாமலும் எவ்விதத்திலும், நஷ்டமோ கவலையோ அடையவேண்டிய அவசியமில்லாமலும் இருக்கத்தக்க நிலையில் இருந்துகொண்டு, தங்கள் சமூகத்தைத் தவிர மற்றெல்லா மக்களுடையவும் உழைப்பால் திருப்தியான உயர் வாழ்க்கை வாழ்பவர்கள்.
பிச்சைக்காரன் என்பவன் யார்?
பாடுபடச் சோம்பேறித்தனம் பட்டுக் கொண்டு ஏமாற்றுவதாலும், சண்டித்தனத்தாலும் கெஞ்சிப் புகழ்ந்து வாழ்பவர்கள்.
செல்வான்கள் என்பவர்கள் யார்?
தன் வாழ்க்கைத் திட்டத்திற்குமேல் பணம் வைத்துக் கொண்டிருப்பவர்கள்.
தரித்தரர்கள் என்பவர்கள் யார்?
வரவுக்கும் மேலாக வாழ்வுக்காகத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் - நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள். தாங்கள் வரவுக்கும் தகுதிக்கும் மேல் வாழ்க்கை திட்டம் வகுத்துக் கொண்டு வாழ்பவர்கள்.
------------ "குடிஅரசு" - 31-1-1949
Search This Blog
22.11.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment