Search This Blog

12.11.08

தேச விடுதலைக்குப் போராடிய பெரியார் இராமசாமி பாரம்பரியம்2.4.1971-இல் தமிழக மேலவை விவாதத்தில் பெரியார் பாரம்பரியம்பற்றி மிகவும் சுவையானதொரு விவாதம் நடைபெற்றது!

அது 3.4.1971 விடுதலையில் அப்படியே தரப்படுகிறது.

திரு.ஆர். கிருஷ்ணசாமி நாயுடு: அரசியல் தியாகிகளில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்றைக்கு இடதுசாரி, வலதுசாரி, பி.எஸ்.பி., எஸ்.எஸ்.பி., தி.மு.க. ஆகிய அந்தந்தக் கட்சிகளிலும் அந்தக் காலத்தில் சென்றவர்கள் இருக்கிறார்கள் - அரசியல் ரீதியில்.

முதலமைச்சர் கலைஞர்: தியாகிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில்கூட இருக்கிறார்கள் என்று சொல்வதைக் கேட்டு மிகுந்த பெருமைப்படுகிறேன். தேசத் துரோகம் செய்தவர்கள் என்று நீண்ட நாள் சாட்டப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் இன்று காங்கிரஸ் கட்சியினுடைய பழம்பெரும் தலைவர் உங்கள் கட்சியில்கூட சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் இருக்கிறார்கள் என்று கூறுவதை எண்ணுகிற நேரத்தில், கே. ராஜாராம் (நாயுடு) அமைச்சராகவேகூட இருக்கிறார்கள்; எப்படி குறை சொல்வது?

முதல்வர் கலைஞர் - இது தேசத் துரோகக் கட்சி என்று சொல்லப்பட்டதே அல்லாமல், இந்த இயக்கத்திற்கு முழுமுதல் காரணமாக இருந்த பெரியார் அவர்களே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. ஆகவே, எங்களுடைய பாரம்பரியம் தேச விடுதலைக்குப் போராடிய பெரியார் இராமசாமி பாரம்பரியமே தவிர, நாங்கள் ஏதோ தேசத்துரோக பரம்பரையில் வந்தவர்கள் அல்ல. இப்போது எல்லாக் கட்சிகளும் கலந்துவிட்டன. மாண்புமிகு உறுப்பினர் அய்யாசாமி இங்கே உட்கார்ந்து இருக்கிறார் என்றால், அவர் எந்த அரசியல் போராட்டத்தில், எத்தனை முறை ஜெயிலுக்குப் போனார்? திராவிடர் கழகத்தில் இருந்து பலமுறை ஜெயிலுக்குப் போனவர்தான்.......
......28.7.1971-இல் தமிழக சட்டமன்றத்தில் நிதி ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் பேசும்போது, முன்பு பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர் டாக்டர் எச்.வி. ஹண்டே அவர்கள், இது மூன்றாந்தர அரசு (Thirdrate Government) என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டதை, முதலமைச்சர் கலைஞர் அவர்கள்,

இது மூன்றாந்தர சர்க்கார் என்றும், பாசிச சர்க்கார் என்றும் வர்ணித்தார்கள். இரண்டாந்தர, மூன்றாந்தர சர்க்கார்கூட அல்ல; நாலாந்தர சர்க்கார் என்றே தான் இந்த அரசைக் கூற விரும்புகிறேன்.

எங்களையெல்லாம் உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களுடைய மொழியில் சொல்கின்றேன். நாங்கள் நாலாந்தர அரசுதான்!

பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்கிற முறையில் நாலாந்தர அரசைத்தான் நடத்துகிறோம். நாலாந்தர (சூத்திர) மக்களின் நலனுக்காகவே இந்த அரசு செயல்படும் என்பதை இறுமாப்புடனும், பெருமையுடனும், கர்வத்துடனும் கூறிக் கொள்கிறேன். தந்தை பெரியார் அவர்களின் பெயராலும், தந்தை பெரியார் வழியில் எங்களையெல்லாம் ஆளாக்கிய அண்ணாவின் பெயராலும் இதை நான் கூறிக் கொள்கிறேன்.


இந்த ஆட்சியை பாசிச ஆட்சி என்று கூறினார்கள். எனது முதல் எதிரிகள் கம்யூனிஸ்டுகளே என்று கூறிய முனிபுங்கவர்கள் இங்கே முதல்வர்களாக (ஆச்சாரியார் - ஹண்டேயின் தலைவர்) அப்படிப்பட்டது அல்ல இந்த அரசு!

தி.மு. கழகத்தை மூட்டைப் பூச்சியைப்போல் நசுக்குவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று வீடு தேடிவரும் நிலையில் இருக்கிறோம்.

குலக்கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டபோது, சர்வாதிகாரிபோல் நடந்துகொண்டது போன்றது அல்ல இது!

பன்னீர்செல்வம் காலத்தில் கவனிக்கவில்லையே என்று சட்டமன்றத்தில் அவர் கூறியபோது, இந்தக் காதைத்தான் திருப்பி வைத்திருக்கிறேன் என்று கேளாக் காதைக் காட்டியவர்கள் போன்றது அல்ல இந்த அரசு! என்று சூட்டோடு சூடாக ஆணித்தரமான பதிலை அளித்தார் முதல்வர் கலைஞர் அவர்கள்.

இதனை உடனடியாக விடுதலைக்கு இந்தச் செய்தி கிடைத்தவுடன், திருச்சியில் இருந்த தந்தை பெரியார் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாகக் கூறினேன். அதைக் கேட்டு, அய்யா அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.

அப்படிங்களா, ரொம்ப சந்தோசம், ரொம்ப ரொம்ப சந்தோசம்! அதை அப்படியே நம் விடுதலையில் எட்டு கலம் தலைப்பிட்டு பேனர் செய்தியாக வெளியிடுங்கள். பெரியவருக்கு (கலைஞருக்கு) எனது மகிழ்ச்சியையும், பாராட்டையும் உடனடியாகச் சென்று தெரிவியுங்கள் என்று கூறினார்கள்!

நான், அய்யா தாங்கள் குறிப்பிட்டபடியே அதை முன்பக்க எட்டுக்கலச் செய்தியாக்கி, (பேனர் நியூஸ்) அச்சில் ஓடிக் கொண்டிருக்கிறது. நானே தலைப்புகள் முதற்கொண்டு எல்லாம் எழுதிக் கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது என்று கூறியது கேட்டதும், மேலும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார்கள்!

தலைவரின் சிந்தனையும், எண்ணமும்தான் தொண்டர்களின் சிந்தனையும், எண்ண ஓட்டமும் என்பதற்கு இது ஒரு சிறு எடுத்துக்காட்டாகும்!கி.வீரமணி அவர்கள் எழுதிவரும் "அய்யாவின் அடிச்சுட்டில்" இரண்டாம் பாகம் ( 7 ) ஆம் பகுதியிலிருந்து . "உண்மை" நவம்பர் 1-15 2008

0 comments: