Search This Blog

23.11.08

பார்ப்பனர்களும் - யூதர்களும்


விஞ்ஞான வளர்ச்சி தேவையென நாம் கூறினால் மின்சாரத்தில் ஆண்டவன் ஜோதி தரிசனம் காணலாம் என்றார் ஆச்சாரியார். புதுக்கருத்துக்களைக் கற்றுணர் என நாம் போதித்தோம். துளசிதாசரின் இராமாயணத்தைப் படித்து ரசிக்கச் சொல்கிறார்கள். பகுத்தறிவிற்காக நாம் பாடுபடுகிறோம். கட்டளைகளை மீறாதே, அலசாதே, வாய் பொத்தி, கை கட்டி, நின்று பணியாற்று என்கிறார் - காங்கிரஸ் சூத்திரதாரி. ஜாதி வித்தியாசத்தைத் தவிடு பொடியாக்க வேண்டுமென நாம் கூறுகிறோம். சேரிக்கு ஒரு நாள் சென்று எண்ணெய் ஸ்நானம் செய்துவிட்டு புதிய அடிமைப்பட்டம் சூட்டினால் போதுமே என்கிறார்கள்.

பண்டைப் பெருமைகளை எடுத்துக்காட்டி எளிய வாழ்க்கையே மேலென உபதேசம் செய்து மக்களை வறுமையிலேயே விட்டு விடுகிறார்கள். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் நாம் முன்னேற்றம் வேண்டுகின்றோம். அவர் ஆதி காலத்துக்கு நம்மை அழைக்கிறார்.
சாதாரணமாக அழைக்கவில்லை, ஒரு மகாத்மாவின் பெயரைக் கூறுகிறார்கள். ஒரு தேசிய இயக்கத்தின் பெயரால் அழைக்கிறார்கள்.

எவ்வெவ்வைகளை நாம் மூடத்தனமென விளக்கிக் காட்டிக் குப்பையில் வீசி எறிந்தோமோ அவைகள் எல்லாம் புதிய மெருகிடப்பட்டு விலையாகின்றன. இதனை நாம் தடுக்காவிடில் பலனைத் தமிழர் இழந்துவிடுவர்.

ஆகவே நாம் அரசியலின் பேரால் ஏற்பட்ட பார்ப்பன ஆதிக்கத்தையும், மூட நம்பிக்கையையும் எதிர்த்து முன்னிலும் அதிக பலமாகக் கட்டுப்பாடாக முறையுடன் வீரத்துடன் உண்மைத் தமிழன் என்ற உணர்ச்சியுடன் போரிட வேண்டியது மிக அவசியம்.
இனி நமது எதிர்காலப் போராட்டத்தின் அவசியத்திலே யாருக்கும் அய்யம் ஏற்படாதென்றே நான் நம்புகிறேன். நமது போராட்டத்தின் காரணத்தையும் விளக்கியுள்ளேன். அதனை உணரும் தோழர்களுக்கு நாம் எங்கிருந்து போர் புரிய வேண்டும் என்பதை எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதுகிறேன்.

மனுவைக் கொண்டு நம்மை அடக்கிய பார்ப்பனர் மகாத்மாவின் காங்கிரசைக் கொண்டு இன்று அடக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆகவே அந்தக் காங்கிரசிடமோ, அதனுடைய நிழலில் பதுங்கி ஒதுங்கி நின்று கட்டியங் கூறி வாழும் வேறு கோஷ்டியிடமோ நாம் சேர எத்தகைய நியாயமும் கிடையாது என்றே எண்ணுகிறேன்.
தேர்தல் தோல்வி கண்டு தலைவர்கள் திடுக்கிட்டுப் போய்விடக்கூடும். போலிகள் மருண்டு விடக்கூடும். சமய சஞ்சீவிகள் கூடுவிட்டுக் கூடு பாயக்கூடும். புகழ் மாலை வேண்டுவோர் புதிய தேவதைகளைப் பூசிக்கத் தொடங்குவர். ஆதாயம் கிடைக்கப் பெறாதவர் வேறு நாயகனை அண்டிப் பிழைக்க எண்ணுவர்.

ஆனால் இயக்கத்தில் இரண்டறக் கலந்தவர் வேறு இடம் நாடார். வேறு இடங்களிலிருந்து கொடுமைகளைக் கண்டு சகியாது குமுறிக் கொண்டிருக்கும் பலரை இங்கு இழுக்கவே முற்படுவர். நாம் ஒழிக்க விரும்பும் ஆதிக்கம் சாமான்யமானது அல்ல. அந்த வகுப்பார் தமது நிலைமையைப் பாது காத்துக் கொள்ள சமூகத்தின் ஜீவநாடிகள் அவ்வளவையும் பிடித்துக் கொண்டே நம்மை ஆட்டி வைக்கின்றனர்.

ஜெர்மன் அதிகாரியான ஹெர் இட்லர் ஜெர்மனி தேசத்தில் யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்ததை தம் சுயசரிதையில் விளக்கி இருப்பதைப் படிப்போர் தென்னாட்டிலே பார்ப்பனர் ஆதிக்கம் இருந்து வருவதனால் விளையும் சமூகக் கேட்டையும் நன்கு உணர்வர்.
பெரிய தொழிற்சாலைகளெல்லாம் யூதர்களிடமே இருந்தன. சர்வகலாசாலைகளில் யூதர்களே கலா மண்டபங்கள். அவர்கள் கரங்களிலே புலவர்கள் யூதர்களே. பத்திரிகைத் தொழில் அவர்களுடையதே. மந்திரி சபை அவர்கள் கைப்பாவை. விஞ்ஞானம் அவர்கள் சொத்து. சமதர்மம் அவர்களுடையது.

செல்வம் அவர்களிடம், வறுமை ஜெர்மனியரிடம், ஆதிக்கம் அவர்களிடம், அடிமைத்தனம் ஜெர்மனியரிடம். ஆனந்தம் அவர்களிடம், சோர்வு ஜெர்மனியரிடம்.

ஆகவே நான் யூதர்களை வெறுத்தேன். எனக்கு அரசியல் அதிகாரம் வந்தால் என் முதல் வேலை யூதர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதேயாகும் என இட்லர் தமது சுயசரிதையில் எழுதினார்; எழுதியபடி செய்தும் முடித்தார். எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் ஏதாவதொரு வகுப்பு சமூகத்தின் ஜீவநாடிகளைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டு மற்றைய வகுப்பினரை அடிமைப்படுத்தி சமூகத்திலே பிரிவுகளை வளர்த்து வருகிறதோ, அந்த வகுப்பின் ஆதிக்கத்தை ஒழிக்க மற்றைய வகுப்பினர் ஒன்று கூடிப் புரட்சி செய்வது சரித்திரம் சாற்றும் உண்மை.


---------------- அறிஞர்அண்ணா - "குடி அரசு" - 29-8-1937

3 comments:

இனியவன் ஹாஜி முஹம்மது said...

Dear Tamil Ovia,
I thought you are female but now I knew that you are male and same my age. We both are thinking and acting the same. Welldone. keep it up. Annathurai is a such a great man but Karunaanithi is business man. Our leader Arivaasaan. Periyar is the best in Dravidian

தமிழன் முழக்கம் - சங்கே முழங்க said...

அறிஞர் அண்ணா தலைச்சிறந்த சமூக சீர்திருத்தவாதி, பெரியாரிடம் உண்மையிலேயே பாடம் படித்தவர்.கலைஞர் போல அல்ல.ஆனால் தற்பொழுது கலைஞருக்கு மாற்றாய் எவரும் இல்லை என்பதும் வருத்தமே.

சங்கே முழங்கு

http://sangeymulangu.blogspot.com/

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி.