Search This Blog

15.11.08

மாலேகான் குண்டுவெடிப்பு பற்றி அ.மார்க்ஸ்,ஜவாஹிருல்லா



கடந்த செப்டம்பர் 29-ல் மகாராஷ்டிராவிலுள்ள மாலேகானில் குண்டு வெடிப்பு நடந்தது. ஆறு பேர் உடல் சிதறி இறந்தார்கள். முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதி அது. அந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நடந்த விசாரணையில் இப்போது அணுகுண்டே வெடித்திருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு அக்கிரமச் செயலைச் செய்ததற்காக ஸ்ரீகாந்த் புரோகித் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இவர் இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பொறுப்பை வகிப்பவர். அதேபோல் இந்தூரைச் சேர்ந்த பிரக்யா சிங் தாகூரையும் குற்றவாளி லிஸ்ட்டில் சேர்த்திருக்கிறது போலீஸ். இவர் இந்து மதப் பெண் துறவி. இந்தக் குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்களாக மேலும் சில இந்திய ராணுவ அதிகாரிகளும், இந்துமத அமைப்பினரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட, தேசம் இப்போது அதிர்ச்சியின் விளிம்பில். மதிப்பிற்குரிய ராணுவத்தின் நடுநிலைத் தன்மையையும் இந்துமத அமைப்புகளின் தீவிரவாத எதிர்ப்புக் கொள்கைகளையும் மாலேகான் குண்டுவெடிப்பு ஒரே சமயத்தில் காலியாக்கியிருக்கிறது.

``மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம் ஏதோ அபூர்வமான விதிவிலக்கு மாதிரி பேசுகிறார்கள். உண்மையில் அது பெரிய நெட்வொர்க்கின் ஒரு சின்ன பகுதிதான். திட்டமிட்டு குண்டு வெடிப்புகளை நடத்திவிட்டு, அந்தப் பழியை முஸ்லிம்கள் மேல் போடு கிற வேலையை இந்து அமைப்புகள் இதற்கு முன்பும் செய்துள்ளன.'' என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ். ``இதே மகாராஷ்டிராவிலுள்ள நந்தெத் பகுதியில் 2006லும் 2007-ம் இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்தன. பஜ்ரங்தள் அமைப்பினர் அதில் சம்பந்தப்பட்டிருந்ததை போலீஸ் கண்டுபிடித்தது. பிரபல மனித உரிமை ஆர்வலரும் நீதிபதியுமான கோஸ்லே பாட்டில் `இது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் இந்து பயங்கரவாதத்துக்கான அறிகுறி' என அப்போதே எச்சரித்தார். தமிழகத்தில் கூட இந்து மத அமைப்பினரின் சதி அரங்கேறியிருக்கிறது. கடந்த பிப்ரவரியில் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பிலும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களேதான் சம்பந்தப்பட்டிருந்தார்கள். முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகப் பிரசாரம் செய்கிற போக்கு இனியாவது இந்துமத அமைப்பினரால் நிறுத்தப்பட வேண்டும்'' என்கிறார் மார்க்ஸ்.


எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும், போலீஸ் கண்களை மூடிக்கொண்டு முஸ்லிம்களை கைது செய்யும் அணுகுமுறையையும் மாலேகான் குண்டுவெடிப்பு கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

``இதுவரை குண்டு வெடிப்புகளில் தொடர்புள்ளவர்களாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தானா என்ற சந்தேகத்தை மாலேகான் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. 2001-ல் நாடாளுமன்றத் தாக்குதல் முதல் சமீபத்தில் நடந்த மீரட் குண்டுவெடிப்பு வரை முஸ்லிம்கள் தொடர்பு படுத்தப்பட்ட அனைத்து பயங்கரவாதச் சம்பவங்களையும் மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்'' என்று வலியுறுத்துகிறார் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் .

இது போன்ற கொடூரமான தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் அபிநவ் பாரத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அமைப்பினர் இந்தியாவின் பல்வேறு துறைகளுக்குள்ளும் ஊடுருவி உள்ளனர் என்றும் உளவுத்துறை தகவல்கள் சொல்லுகின்றன.

``ராணுவம் உள்ளிட்ட பல முக்கியத்துறைகளில் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்பினரின் ஊடுருவல் இப்போது வெட்டவெளிச்ச மாகியுள்ளது. இந்த ஆபத்தான போக்குக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்று நடுநிலையாளர்கள் வைக்கும் கோரிக்கையை செவிமடுத்தால், இந்தியாவில் குண்டுவெடிப்புச் சப்தங்கள் குறையும்..

---------------நன்றி: "குமுதம்" 19-11-2008

0 comments: