"பக்"தீ
திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி முள்ளிப்பட்டியைச் சேர்ந்த சக்தி என்பவர் விவசாய பம்பு செட்டுகளுக்குத் தேவைப்படும் டீசல், பெட்ரோல் ஆகியவற்றை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தார். 15.11.2008 அன்று பெட்ரோல், டீசல் கேன்களுக்கு வழக்கம் போல பூஜை செய்ய வந்தார். அப்போது பூஜைத் தட்டிலிருந்து கற்பூரம் கீழே விழுந்து பெட்ரோல் கேன் தீப்பற்றிக் கொண்டது. பக்தர் சக்தியின் மீதும் தீ பற்றிக் கொண்டது. தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் வந்து தீயைப் போராடி அணைத்தனர். தீக் காயம்பட்ட சக்தி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் செய்தி குறிப்பிட்ட தொலைக்காட்சியில் மட்டும் காட்டப்பட்டது. மற்ற தொலைக்காட்சிகளிலும் சரி, ஏடுகளிலும் சரி இடம் பெற வில்லை; திட்டமிட்டு மறைத்து விட்டனர்.
மூடத்தனத்தைப் பரப்புவதன் மூலமாகத்தானே மக்களை மடையர்களாக்கிக் காசு பறிக்கலாம். மூட நம் பிக்கையை எதிர்த்து - பரிகாசம் செய்து செய்தி பரப்பினால் முதலுக்கே மோசம் போய்விடுமே!
பக்தி எந்த அளவுக்குக் கண்களை மறைத்திருந்தால் அல்லது பக்தி போதையாகி அறிவை மயக்கியிருந்தால், டீசலுக்கு முன்னால் நெருப்புச் சம்பந்தமான பொருளைக் கொண்டு பூசை செய்திருப்பார்?
“Inflammable” என்று தீப்பற்றக் கூடிய பொருள் எச்சரிக்கை என்று இது போன்ற இடங்களில் விளம்பரமே செய்திருப்பார்கள்.
ஆனால், இங்கே என்ன நடந்தது? பக்தியின் காரணமாகப் பூஜை நடந்தது.
பெட்ரோல், டீசல் உள்ள இடமாயிற்றே - அங்கு எரிபொருளைக் கொண்டு செல்லலாமா? என்றுகூட சிந்திக்காமல் அல்லது சிந்திக்க முடியாமல் போனதற்குக் காரணம், புத்தி மக்கர் பண்ணியதற்குக் காரணம் பக்தீ தானே!
பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் சொன்னது 24 காரட் தங்கம் என்பது இப் பொழுதாவது விளங்குகிறதா?
திருட்டு வியாபாரம் செய்திருக்கிறார். அந்தப் பாவத்தைப் போக்கத்தான் இந்தப் பூஜை ஏற்பாடு. ஒரு தவறை மறைக்க எத்தனைத் தவறான காரியங்கள்.
பக்தி - ஒழுக்கத்தை வளர்க்கும் இலட்சணம் இது தானா? பெட்ரோலும், டீசலும், கடையும் மட்டும் எரிந்து சாம்பலாகப் போகவில்லை. அந்தப் பக்தி ஆசாமி உடல் மீதும் தீப்பற்றி இப்பொழுது மருத்துவமனையில் கிடக்கிறார். எந்தப் பூஜையும் எவரையும் காப்பாற்றவில்லை.
கடவுளைக் கும்பிட்டாலும் பெட்ரோலில் தீப்பட்டால் குபீர் என்று பற்றி எரியத்தான் செய்யும் என்கிற பால பாடத்தை - இந்த நிகழ்ச்சிக் குப் பிறகாவது மக்கள் உணர்வார்களா?
---------------- மயிலாடன் அவர்கள் 22-11-2008 "விடுதலை" இதழில் எழுதியது.
Search This Blog
22.11.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment