Search This Blog
19.11.08
இந்து மதத்துக்கும், வன்முறைக்கும் சம்பந்தம் உண்டா? இல்லையா?
இந்துமதம் சகிப்புத் தன்மை கொண்டதா?
இந்து தீவிரவாதிகள்பற்றி இந்திய மக்கள் மத்தியில் தெளிவான கருத்து உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இதுவரை இசுலாமிய தீவிரவாதிகள் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள், எழுதிக் கொண்டிருந்தவர்களின் பேனாமுனை இனி இந்துத் தீவிரவாதிகள் என்று தலைப்பிட்டு எழுதவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. நாட்டு நடப்புகள் அவர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டன.
இப்பொழுதுதான் அத்வானி போன்றவர்களுக்குப் புத்தம் புதிய ஞானம் பிறந்திருக்கிறது. தீவிரவாதத்திற்கு மதம் என்ற ஒன்று கிடையாது என்று திருவாய் மலர்ந்துள்ளார்.
இந்துத் தீவிரவாதிகள் என்ற சொலவடை எங்கே உருவாகி விடுமோ என்று அஞ்சித்தான் இப்பொழுது தட்டை திருப்பிப் போட்டுள்ளார்.
இந்து மதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்றும், அது சகிப்புத்தன்மை கொண்டது என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் கூறியுள்ளார்; இதனைக் கண்டு விலாநோகச் சிரிப்புதான் வருகிறது.
இந்துக்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என்றால், ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் எதற்கு? பெண்கள் உள்பட துப்பாக்கிப் பயிற்சி அளிக்கப்படுகிறதே எதற்கு? பூப்பறிக்கவா?
பாபர் மசூதியை ஒரு பட்டப்பகலில் ஆயிரக்கணக்கான இந்துத்துவாவாதிகள் கூடி அத்வானி தலைமையிலே அடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கினார்களே - அதற்குப் பெயர் வன்முறை இல்லையா? சகிப்பு மனப்பான்மை இருந்தால் இன்னொரு மதக்காரர்களின் வழிபாட்டுத் தலத்தை இடிப்பார்களா?
குஜராத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் கொல்லப்பட்டனரே - கர்ப்பிணிப் பெண்களின் வயிறுகள் கிழிக்கப்பட்டனவே, பேக்கரி நெருப்பில் ஒரு குடும்பமே விறகு போல எரிக்கப்பட்டதே - ஒரிசாவில் தொழுநோயாளிகளுக்குத் தொண்டூழியம் செய்து வந்த கிரகாம் ஸ்டூவர்ட் பாதிரியாரையும், அவர்தம் இரு மழலைச் செல்வங்களையும் ஜீப்பில் வைத்து உயிரோடு கொளுத்தி களியாட்டம் போட்டார்களே - இவையெல்லாம் வன்முறையல்ல - நன்முறையின் திருவிளையாடல்கள் என்று சொல்லப் போகிறார்களா?
ஒரிசாவில் கிறித்துவர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் போட்டு வருகிறார்களே - கிறித்தவ ஆலயங்களும், தொழில் நிறுவனங்களும் அடித்துத் துவைக்கப்படுகிறதே - இவையெல்லாம் வன்முறைகளே அல்ல - அல்லவே அல்ல என்று சத்தியம் செய்து கூவப் போகிறார்களா?
பவுத்தர்களையும், சமணர்களையும் படுகொலை செய்தும், அவர்களின் விகார்களையும், பள்ளிகளையும் அடித்து நொறுக்கியதும், சில இடங்களில் அவற்றை இந்துக் கோயில்களாக மாற்றி அமைத்ததும் எல்லாம் எந்தப் பட்டியலைச் சேர்ந்தது?
இராமாயணக் கதாநாயகன் - மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று அவர்கள் எழுதி வைத்துள்ள இராமன் சம்பூகன் என்ற தவசியை வெட்டிக் கொன்றானே - அது வன்முறையல்லவா? மகாபாரதத்தில் ஏகலைவனின் கட்டை விரலை குருதட்சணையாகக் கேட்டுப் பெற்றானே துரோணாச்சாரி. அதற்கு என்ன பெயர் சூட்டப் போகிறார்களாம்?
இந்துமதக் கடவுள்களின் கைகளில் எல்லாம் சூலாயுதம், வேலாயுதம், வெட்டரிவாள், சுத்தி, கோடாரி, வாள்கள் எல்லாம் இடம்பெற்று இருக்கின்றனவே! இவையெல்லாம் கொலைக் கருவிகள் அல்லவா?
கொலைகாரன், வழிப்பறிக்காரன், திருடன் கையில் இருக்கும் ஆயுதங்கள் எல்லாம் கடவுள்களின் கைகளில் இருக்கின்றனவே என்று தந்தை பெரியார் அவர்கள் பொதுக்கூட்டங்களில் நாக்கைப் பிடுங்க வினா எழுப்பினாரே - அதற்கு இதுவரை நாணயமான முறையில் பதில் கூறியதுண்டா?
இந்து மதக் கடவுள்கள் சண்டை போட்டது உண்டே; சூரபத்மனை எதிர்த்து சுப்பிரமணியனும், வினாயகனும் சண்டை போட்டுள்ளனரே! சிவன் பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்திருக்கிறானே!
பார்வதி தேவியார் தம் அழுக்கிலிருந்து பிடித்து வைத்த தேவியாரின் மகன் சிரசை சிவபெருமான் வெட்டவில்லையா?
மாவலி அரசனின் தலையில் கால் வைத்து அழுத்திக் கொன்றதும் இந்து மதக் கடவுள் அல்லவா?
கடைசியாக ஒரு கேள்வி காந்தியாரைக் கொன்றவன் ஒரு இந்து அல்லவா?
இந்த லட்சணத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் கூறுகிறார் - இந்து மதத்துக்கும், வன்முறைக்கும் சம்பந்தம் இல்லை என்று. புளுகுக்கும் ஒரு உச்சவரம்பு இருக்க வேண்டாமா?
---------------"விடுதலை" - தலையங்கம் 19-11-2008
Labels:
பார்ப்பனியம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment