Search This Blog
16.11.08
புரோகிதமற்ற திருமணங்களின் கதியென்ன?
புரோகிதமற்ற திருமணங்கள்
புதிய மந்திரி சபை ஏற்பட்ட பிறகு முதன் முதலாகக் கூடுகின்ற சட்டசபைக் கூட்டத்தில் புரோகிதமற்ற திருமணத்தைப் பற்றிய மசோதாவாதத்துக்கு வரப்போகின்றபடியால் இன்று மீண்டும் அதைப்பற்றியே எழுத வேண்டியிருக்கிறது.
இம் மசோதாவில் பழைய திரமணங்களைச் செல்லுபடியாக்குகின்ற சட்டதிட்டங்கள் மட்டுமேயிருக்கின்றவென்பதும், புதிய திருமணங்களைச் செல்லுபடியாகக்கூடிய குறிப்பு எதுவுமே இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்றுள்ள புரோகிதமற்ற திரமணங்கள் யாவும் இந்து சட்டப்படியாகமாட்டா என்று சென்னை உயர்நீதிமன்றத்தார் தீர்ப்பளித்ததன் விளைவாக இந்த மசோதா வந்திருக்கிறது. ஏதோ வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டதனால், எல்லாத் திருமணங்களும் எப்படிச் செல்லுபடியாகாமல் போய்விடும்? பெரிய சொத்துடையவர்கள் தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர்ந்து மீண்டும் தீர்ப்புப் பெற்றால்தான் முடியும். மற்றவர்களை இந்தத் தீர்ப்பு எந்த வகையிலும் பாதிக்காது என்பதே நம் கருத்து.
கடந்து 25- ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பதினாயிரக்கணக்கான திருமணங்கள் புரோகிதமற்ற முறையில் நடைபெற்றிருக்கின்றன. இவைகள் அவ்வளவையும் செல்லாதவைகளாக ஆக்குவதென்றால் அவ்வளவு சுளுவான காரியமா? இவ்வளவு மணமக்களுக்கும் பிறந்துள்ள குழந்தைகளெல்லாம் சட்ட விரோதமாகப் பிறந்த (Illegitimate) குழந்தைகள் என்று கூறினால், அது இதுவரையில் நடந்துள்ள எண்ணற்ற திருமணங்களைச் செல்லுபடியாக்குவதென்பது அவ்வளவு முக்கியமல்ல. முக்கியமென்று கருதினால், ஒரே வரியில் சட்டமியற்றப்பட வேண்டும்.
இனி நடக்கின்ற புரோகிதமற்ற திருமணங்களின் கதியென்ன என்பதே இப்போதுள்ள பிரச்சனை. சுயமரியாதைக்காரர்கள் மட்டும்தான் இப்பேர்ப்பட்ட திருமணங்களை நடத்துகின்றனர் என்று கூறமுடியாது. சர் பி.டி.இராஜன் அவர்களைப் போன்ற ஆஸ்திகர்களும் திரு.ஜி.டி. நாயுடு போன்ற விஞ்ஞானிகளும் புரோகிதமற்ற திருமணங்களைத்தான் செய்து வருகின்றனர். காங்கிரஸ்காரர்களில் பலர் சிறப்பாக நாடார் சமூகத்தினர் அனைவரும் புரோகிமற்ற (தாலிகூட இல்லாத) திருமணமே செய்கின்றனர். கம்யூனிஸ்ட்களும் அப்படியே. சுருக்கமாகக் கூறினால் பார்ப்பனர் மட்டுமே 100- க்கு 100- புரோகிதத் திருமணம் செய்கின்றர். மற்ற திராவிட மக்கள் யாவரும் 100- க்கு 90- க்கு மேல் புரோகிதமற்ற திருமணமே செய்கின்றனர். திராவிடர்களில் ஒரு சில நிலப்பிரபுக்களும், தொழிற்சாலைப் பிரபுக்களும், வைதிக வெறியர்களும், அக்கிரகாரத்துக்குப் பயந்த தொடை நடுங்கிகளும் உத்தியோகத் துறையில் உயர்நிலையில் இருப்பவர்களும் மட்டுமே புரோகிதத் திருமணம் செய்கின்றனர்.
அக்கிரகாரத்துக்குப் புறம்பான திருமண முறையாதலால்தான் புரோகிமற்ற திருமணத்தை எதிர்த்து அக்கிரகாரத் தலைவரான ஆச்சாரியார் அவர்கள் இந்த மசோதாவை உருவாக்கியுள்ளார். அதாவது சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான பிரச்சார சாதனமாகிய புரோகிதமற்ற திருமணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மசோதா. இதன் மூலம் சுயமரியாதைப் பிரச்சாரத்தையே குறைத்து விடலாம் என்ற திட்டத்துன் இந்த மசோதா உருவாக்கப்பட்டிருக்கிறது.
இல்லையேல் இனி நடக்கின்ற திருமணங்களும் செல்லுபடியாகக் கூடிய சட்டதிட்டங்கள் இம்மசோதாவில் இடம்பெற்றிருக்க வேண்டுமே!
சட்டப்படிச் செல்லுபடியாக வேண்டுமென்றால் இனி நடக்கின்ற திருமணங்கள் யாவும் ஸ்பெஷல் திருமணச் சட்டத்தின் கீழ்ப்பதிவு செய்யப்பட வேண்டும். இன்று சில திருமணங்கள் இம்முறையில்தான் செல்லுபடியாக்கப்படுகின்றன.
ஆனால், திருமணப் பதிவு செய்யும் அதிகாரம் ஒரு சிலருக்கே அளிக்கப்பட்டிருப்பதனால், பொதுமக்களுக்குப் பெரும் தொல்லையாயிருந்து வருகிறது. கிராமத்திலிருப்பவர்கள் பதிவு உத்தியோகஸ்தர்களைத் தேடிப்பிடித்து அழைத்து வருவதென்றால் எளிதா? ஒரே நாளில் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடக்கும் போது, இரண்டொரு பதிவு உத்தியோகஸ்தர்கள் எத்தனை திருமணங்களைப் பதிவு செய்ய முடியும்? பதிவு செய்யும் சர்க்கார் நிலையங்களுக்கே செல்வதென்றாலும் முடியும்?
ஆதலால் பிறப்பு, இறப்பு நிகழ்ச்சிகளைக் கிராம உத்தியோகஸ்தர்களிடமும், நகரசபை அதிகாரிகளிடமும் பதிவு செய்துகொள்ள வேண்டுமென்று சட்டமிருப்பது போலவே பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயுள்ள திருமண நிகழ்ச்சியையும் மேற்கண்ட உத்தியோகஸ்தர்களிடம் 24- மணி நேரத்திற்குள்ளாகப் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டமியற்றப்பட வேண்டும்.
மேலும், கட்டடங்கள் கட்டுவதற்கு நகரசபை எஞ்சினீயர், சுகாதார உத்தியோகஸ்தர் முதலியவர்களிடம் அனுமதி பெற வேண்டுமென்றிருப்பது போல், வாழ்க்கை என்ற கட்டடத்துக்கு அடிப்படையான திருமண நிகழ்ச்சிக்கும் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டியது அவசியமாகும். அதாவது திருமணம் செய்து கொள்ளுகின்ற ஆணும், பெண்ணும் சர்க்கார் டாக்டர்களிடமிருந்து உடல் பரிசோதனைப் பத்திரம் பெற்றாக வேண்டும்.
திருமணம் என்பது ஆடு, மாடுகளை விலைக்கு வாங்குவதைவிடப் படுமோசமாக இருந்து வருகிறது. பெற்றோர்கள் வைத்ததே சட்டமாயிருக்கிறது. சோதிடனும் தலையிட்டுப் பாழாக்கி விடுகிறான்.
ஆதலால் சென்னை ஆட்சியாளர்கள் இவற்றையெல்லாம் ஆராய்ந்து ஒரு நல்ல திருமணப் பதிவுச் சட்டம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். அதற்கு முன்பாக இந்த அவசரக்குப்பை மசோதாவை அதற்கான தொட்டியில் கிழித்துப் போட்டுவிட வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
------------------- 05-05-1954 - "விடுதலை" நாளிதழில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்.
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment