Search This Blog
10.11.08
ஜாதி ஒழிகின்ற வரையிலே இட ஒதுக்கீடு தேவை.! - தமிழகத்தின் உண்மை வரலாறு - அவசியம் அனைவரும் படிக்கவும்
ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குச் செய்ய வேண்டிய அங்கீகாரத்தை,
மரியாதையை முதலமைச்சர் கலைஞர் நிச்சயம் செய்வார்
நீடாமங்கலம் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உணர்ச்சிகர உரை
ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதையை, அங்கீகாரத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நிச்சயம் செய்வார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்க வுரையாற்றினார்.
நீடாமங்கலத்தில் 31-10-2008 அன்று நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
நீண்ட இடைவெளிக்குப் பின்னாலே சந்திக்கிறேன்
நீண்ட இடைவெளிக்குப் பின்னாலே இந்த நீடாமங்கலத்திலே உங்களை எல்லாம் சந்திக்கக் கூடிய ஒரு அரிய வாய்ப்பினை இங்கே வழங்கியமைக்காகவும், இவ்வளவு நேரம் நீங்கள் அமர்ந்து அருமையாகக் கேட்பதற்காகவும், உங்களுக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அந்த வகையிலே இங்கு வரும்பொழுது எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. இங்கே ஒரு கட்டடம் அமைந்தது. இந்த மேடையிலே நாங்கள் நின்று கொண்டி ருக்கின்றோம் என்று சொன்னால் அதற்குப் பலமாக இந்த மேடை அமைக்கப்பட்டி ருக்கின்றது. அதனாலே அய்யா போன்றவர்கள் எல்லோரும் இங்கே அமர்ந்திருக்கிறோம் என்றாலும், உண்மையிலேயே இது போன்ற சுயமரியாதை மேடையைக் கட்டியவர்கள் யார், யார்? அதற்கு எப்படிப்பட்டவர்கள் உழைத்தார்கள் என்பதை எனக்கு முன்னாலே இரு நண்பர்கள் இங்கே சிறப்பாக எடுத்துச் சொன்னார்கள். அதிலும் குறிப்பாக நம்முடைய அய்யா சிவஞானம் அவர்களும், சுப்பிரமணியம் அவர்களும் சொல்லும்பொழுது, சிறப்பாக நம்முடைய சுயமரியாதைச் சுடரொளிகளை எல்லோரையும் அவர்கள் நினைவூட்டி னார்கள். அதிலே குறிப்பாகச் சொல்லும்பொழுது இன்றைக்கு அடுத்த தலைமுறைகள் எல்லாம் இருக்கிறார்கள். என்றாலும், அய்யா சுயமரியாதைச்சுடரொளி நீடாமங்கலம் ஆறுமுகம் அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். நீடாமங்கலம் என்றால் அனா ஆவன்னா என்று சொல்வார்கள்.
ஒவ்வொருவருடைய உருவமும் கண்ணில் நிழலாடுகிறது
அதேபோல நீடாமங்கலம் தோழர் சரவணன் அவர்கள், முல்லைவாசல் அய்யா அவர்களுடைய பெயர் இந்தப் பட்டியலில் எப்படியோ விடுபட்டிருக்கிறது. அது விடவேண்டும் என்பதற்காக அல்ல.
அந்தப் பட்டியலை நான் உடனே வாங்கிப் பார்த்தேன். எத்தனை பேருடைய பெயர் இருக்கிறது? இதை சொல்லுகின்ற நேரத்திலே அவர்களுடைய தும்பைப்பூ போன்ற உரு வத்தைப் பார்க்கிற நேரத்தில் இன்னமும் ஒவ்வொருவருடைய உருவமும் என்னுடைய கண்ணிலே இருக்கிறது. அதுவும் சிறிய வயதில் பார்க்கும்பொழுது இன்னும் ஆழமாக மற்றவர்கள் எல்லாம் கருப்புச் சட்டையை சில நேரங்களிலே விட்டுவிட்டு போடுகின்ற நேரத்திலே போட்ட கருப்புச் சட்டையை கடைசிவரை கழற்றாத ஒருவர் அந்தக் காலந்திலே இருந்தார் என்றால் அதற்கு அனா ஆவன்னாதான் வழிகாட்டியாக இருந்தார்கள் என்று சொல்லக்கூடிய அளவிலே அவர்கள் சிறப்பானவர்கள். அதேபோல நீடாமங்கலம் - நம்முடைய சரவணன் அவர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே அவர்கள் படித்தவர். மதியழகன், நாவலர், பேராசிரியர் ஆகியோரிடத்திலே ரொம்ப ஆழமான அளவிற்குப் பழகியவர். பிறகு அதிகாரியாக அவர் விற்பனை வரித்துறையிலே சென்றாலும்கூட, அவர் அந்த நிலையில் இருந்துகொண்டு கூட அவர்கள் இயக்கத்திற்கு ஒரு சோதனையான காலகட்டம் ஏற்பட்டு, விடுதலை அலுவல கத்திலே யார் இருப்பார்கள் என்று நினைத்த நேரத்திலே தன்னுடைய உத்தியோகத்திற்கு அவர் விடுமுறை போட்டுவிட்டு, விடுதலையி னுடைய பொறுப்பாளராக இருந்தவர் நம் முடைய நீடாமங்கலம் சரவணன் பி.ஏ. அவர்கள்.
1946-லே நான் மாணவனாக இருந்தபொழுது...!
அதேபோல விசுவநாதன் அவர்கள், பழைய பெரியவர்களைப் பற்றி நன்றாக நினைவு கூர்ந்தார்கள் - நம்முடைய ஆ. சுப்பிரமணியம் அவர்கள். அதிலே குறிப்பாக இந்த கட்டடம் இவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதைச் சொன்னார்கள்.
நான் 1946-லே பள்ளி மாணவனாக இருந்த நிலையில் இங்கே ஆற்றிலே நடைபெற்ற அந்த மாநாட்டில் நான் கலந்துகொண்டு மேசைமீது ஏற்றிவைத்து என்னைப் பேச வைத்த சம்பவங் கள் - இவைகள் எல்லாம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதற்கு பிறகு கூரைக் கட்டடம் என்று சொன்னார்களே படிப்பகம். அதிலேயே தங்கியிருக்கின்றோம். அதிலேயே படுத்துவிட்டு அடுத்த நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கின்றோம்.
அன்றைக்கு முடி திருத்தகங்கள்தான்
இப்பொழுதுதான் மற்ற இடங்களிலே தங்குவது என்ற பழக்கம் இந்த இயக்கத்திற்கு வந்திருக்கிறது. அதற்கு முன்னாலே நம்முடைய இயக்கத் தோழர்களுடைய வீட்டுத் திண்ணைதான்.
அதேபோல முடிதிருத்தகங்கள்தான், நமக்கு - பேச்சாளர்களுக்கெல்லாம் வரவேற்பறை. இப்படியெல்லாம் இருந்த நிலையிலே அந்தப் படிப்பகம் அவ்வளவு சிறப்பாக இருந்தது. அதேபோல இலட்சுமி விலாஸ் பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழாவிற்கு நாங்கள் வந்திருக்கின் றோம். தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் அவர்கள் தான் அழைத்தார்கள். நம்முடைய அமிர்தராஜ் சகோதரர்கள்கூட அங்கு படித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. உங்களுக் கும் நன்றாக நினைவிலே இருக்கும். இப்படி எத்தனையோ சம்பவங்கள் எல்லாம் வரிசையாகச் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
அந்த நேரத்திலே நம்முடைய விடுதலை ஏஜென்டாகவும் இருந்து ஜென்ரல் மெர்சென்ட்டாகவும் தன்னை ஆக்கிக் கொண்டு, அதேபோல கல்கி போன்ற பத்திரிகைகளுக்குக் கூட ஏஜெண்டாக இருந்தார் என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இந்த ஊர் கே. ராஜகோபால்.
தஞ்சை மாவட்டத்தில் பல ராஜகோபால்கள்
இரண்டு ராஜகோபால் இருப்பார்கள். தஞ்சை மாவட்டத்தில் ராஜகோபால்கள் ஏராளம். தஞ்சை மாவட்டச் செயலாளரே தஞ்சை ராஜகோபால் அவர்கள். வண்டிக்காரத் தெரு ராஜகோபால் அவர்கள் கலைஞர் அவர்களுக்கு மிகவும் தெரிந்தவர். அவர் இன்னமும் இருக்கிறார் - சென்னையிலே. இப்படி ராஜகோபால்கள் ஏராளம் உண்டு. நீடாமங்கலத்தில் கே. ராஜகோபால். இதில் சிலபேர் அய்யா அவர்கள் காமராஜரை ஆதரித்த நேரத்தில் காங்கிரசுக்குப் போனால்கூட தந்தை பெரியார் அவர்களிடத்திலே என்றைக்கும் மாறாத பற்றுள்ளவர்களாக மட்டுமல்ல, சுயமரியாதைக்காரர்களாகவே இருந்தார்கள். அரசியலிலே அவர்களுடைய வண்ணம் மாறியிருக்கலாம்.
ஆனால், சுயமரியாதைக் கொள்கையிலே அவர்களுடைய எண்ணம் மாறாத அளவிற்கு சுயமரியாதைச் சுடரொளிகளாக அவர்கள் திகழ்ந்தார்கள். அப்படிப்பட்ட தோழர் நம்முடைய கே. ராஜகோபால் அவர்கள். இன்னொரு நண்பர் வீ. ராஜகோபால் அவர்கள். அதேபோல செங்குட்டுவன் அவர்கள். செங்குட்டுவன் தீவிரமாக ஆவேசமாகப் பேசக் கூடியவர். அதேபோல் தோழர் சாரங்கபாணி இப்படி நிறைய பேரை எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருக்கலாம். அவர்கள் எல்லாம் உழைத்த உழைப்பைப் பார்க்கிறோம்.
அய்யா அவர்களின் கட்டளையை ஏற்று
தள்ளாத நிலையிலே எண்பது வயதைத் தாண்டியவர்கள் எல்லாம் அவர்கள் மேடை ஏற முடியாத அளவிற்கு அய்யா போன்றவர்கள் மற்றவர்கள் எல்லோரும் அன்றைக்குச் சிறைச்சாலையிலே இருந்தார்கள்.
தந்தை பெரியாருடைய கட்டளையை ஏற்று பல போராட்டங்களில் ஈடுபட்டார்கள். எல்லாவற்றிற்கும் சிகரமாக ஜாதி ஒழிப்புப் போராட்டம் - அரசியல் சட்ட நகல் தாளை எரிக்கின்ற போராட்டத்திலே அவர்கள் ஈடுபட்டார்கள். அதற்காக பல்வேறு கொடுமைகளை எல்லாம் அனுபவித்தார்கள். அவர் களுடைய அந்த உழைப்பு வீண் போகவில்லை.
அய்யா அவர்களுடைய படிப்பகமாக
இந்த கட்டடத்தைப் பொறுத்தவரையிலே வழக்குகள் எல்லாம் நடந்தன. நம்முடைய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும், இந்த இயக்கமும் தோழர் கே. ராஜகோபால் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டி ருக்கிறது. காரணம், இந்த வழக்கை நடத்துகின்ற நேரத்திலே சிக்கலாக இருக்கின்ற நேரத்திலே எங்களுடைய ஆலோசனைகளை எல்லாம் சட்ட ஆலோசனைகளை எல்லாம் கேட்டார்கள். கடைசியாக அவர்கள்தான் சொன்னார்கள். இந்த இடத்திலே நான் வெற்றிபெறுவது என்பது இந்த ஆலோசனைகளாலே எல்லாம் நடந்தால்கூட, இது மறுபடியும் சிறப்பான அளவிலே அய்யா அவர்களுடைய படிப்பகமாகவே இது ஆகவேண்டும். நீடாமங்கலத்திற்கு அந்தச் சிறப்பு இருக்கவேண்டும். அதை இந்த இயக்கம் செய்யும்.
உங்கள்மீது நம்பிக்கை இருக்கிறது. ஆகவே தான் அதைச் சிறப்பாக செய்யவேண்டும் என்று சொல்லி, அவர்களே எல்லாவற்றையும் முடித்த பிற்பாடு, அவ்வளவு பத்திரங்கள் உள்பட எப்படி இங்கே ராயபுரத்தின் படிப்பகப் பத்திரத்தை கொடுத்தார்களோ, அதேபோல அவர்கள் கொடுத்தார்கள்.
ஊர் மக்களுக்கு அர்ப்பணிக்கின்ற விழா
அந்தப் பணியை வைத்துத்தான் மறுபடியும் இன்றைக்கு இவ்வளவு பெரிய சிறப்பான கட்டடம் இங்கே உருவாகியிருக்கிறதென்றால், அது இன்றைக்கு இந்த ஊர் மக்களுக்கு அர்ப்பணிக்கின்ற விழாவாகத்தான் இந்த விழா அமைந்திருக்கிறது. எனவே இந்த சுயமரியாதை இயக்கத்தினுடைய வரலாறு என்ன? நீடாமங்கலம் சுயமரியாதை இயக்கத்தினுடைய தொட்டில். சுயமரியாதை இயக்கத்தைத் தாலாட்டிய பல பகுதிகள் இருக்கின்றன. இங்கே சொன்னார்கள், இதே நீடாமங்கலத்தில் நம்முடைய ஆதிதிராவிடத் தோழர்கள் மொட்டையடிக்கப்பட்டு அலங்கோலமாக ஆக்கப்பட்டார்கள்.
சர் ஏ.டி. பன்னீர்செல்வம் வாதாடினார்
சர் ஏ.டி. பன்னீர் செல்வம் அவர்கள் இதற்கு வழக்கறிஞராக இருந்து வாதாடினார்கள் என்பதை இதே மேடையிலிருந்து பல நேரங்களிலே எடுத்துப் பேசியிருக்கின்றோம். அப்படியெல்லாம் ஒரு பெரிய வரலாற்றைக் கொண்டது - இந்தப் பகுதி. அதிலும் ஒவ்வொரு நேரத்திலும் பல நேரங்களில் எப்படியோ சிக்கல்கள் இருந்தாலும்கூட அவ்வளவு பேரும் சுயமரியாதைக்காரர்களாக இருந்தார்கள்.
பெரியார் தொண்டர்களின் கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொள்கிறேன்
அரசியல் ரீதியாக சிலபேர் மாறியிருக்கலாம். ஆனால், அப்படியிருந்தாலும் கூட இன்றைக்கு அவர்கள் பெரியார் தொண்டர்களாகவும், என்றைக்கும் சுயமரியாதைக் காரர்களாகவும் இருப்பார்கள். வயதான, தள்ளாத வயதிலே வந்திருக்கின்ற இப்படிப்பட்ட பெரியவர்களை எல்லாம் பார்க்கும் பொழுது அவர்களின் கைகளைப் பிடித்து கண்ணிலே ஒற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அவர்களைப் பார்க்கின்ற பொழுது எனக்கு எல்லையற்ற உணர்ச்சிக் கொந்தளிப்பு என் உள்ளத்திலே ஏற்பட்டது.
ஜாதி ஒழிப்பு வீரர்கள் என்ற அங்கீகாரம் தேவை
இவ்வளவு முடியாதவர்கள்கூட இன்றைக்கு ஒரு நம்பிக்கையோடு இருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் தங்களுடைய ஜாதி ஒழிப்புத் திட்டம் என்று சொல்லுகிற பொழுது ஜாதி ஒழிப்பு வீரர்கள் என்ற அங்கீகாரம் தங்களுக்குத் தேவை என்பதை வலியுறுத்த வேண்டும் என்று சொன்ன நேரத்திலே - சென்ற டிசம்பரிலே வற்புறுத்தி நம்முடைய முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் அவர்கள் என்னுடைய பிறந்தநாளையொட்டி விழாவிலே என்னைக் கலந்துகொள்ள வைத்தார்கள்.
நம்முடைய முதல்வர் கலைஞர் சொல்லிவிட்டார் என் பிறந்தநாள் விழாவிலே வெளிச்சம் போட்டு இருக்கவேண்டும் என்று நான் நினைப்பதில்லை. நீண்ட காலமாக அதை ஒரு முறையாக ஆக்கிக் கொண்டு அமைதியாக இருந்துவிடுவேன். ஆனால், ஒருமுறை ஒரு நிகழ்ச்சியில் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் சொல்லிவிட்டார். அவர் எங்கே போய்விடுவார். நானே இருந்து விழா நடத்துகிறேன் என்று அவர் சொல்லிவிட்ட காரணத் தால், அவருடைய சொல்லைத் தட்டுவதற்கு எங்களுக்கு எண்ணம் இல்லை.
ஆகவே அந்த விழாவைத் தோழர்கள் குடும்ப விழாவாக நடத்திய நேரத்திலே நான் இரண்டு வேண்டுகோள் வைத்தேன்.
சமத்துவபுரங்களில் எல்லாம் - பெரியார் சிலை
ஒன்று அய்யா அவர்களுக்கு 95 அடி உயரத்திலே சிலை வைக்கவேண்டும். மற்றொரு கோரிக்கை ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்று கூறிய பொழுது இந்த இரண்டையும் ஏற்கின்றேன் என்று அவர்கள் சொன்னது மட்டுமல்ல, பிறகு அவர் சொன்னார், பெரியார் சமத்துவபுரங்கள் நாடெங்கும் இருக்கின்றன.
தந்தை பெரியார் சிலையை ஒரு இடத்திலே வைப்பதற்குப் பதிலாக அந்த சமத்துவபுரத்திலே நாடெங்கும் பல இடங்களிலே வைத்தால் எல்லோருமே அடுத்த தலைமுறை நன்றியுணர்ச்சியோடு தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று சொல்லி, அதை ஆளுநர் உரையிலே சட்டமன்றத்திலேயே திராவிடர் கழகத்தினுடைய பெயரைச் சொல்லியே அவர்கள் குறிப்பைச் சொல்லி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அமைக்கின்ற ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள்.
நீதிமன்றம் இன்னமும் இனஎதிரிகள் கைகளில்தான்
அடுத்த படியாக இந்தப் பிரச்சினையையும் அவர்கள் ஏற்றுக் கொண்ட நேரத்திலே மொழிப் போர் தியாகிகளுக்கு சில சிக்கல்களை சட்டத்திலே உருவாக்கினார்கள். இன்னமும் ஆட்சி மன்றம் நம்முடைய கையிலே வந்தாலும்கூட, மக்களுடைய பிரதிநிதிகளினுடைய கைகளிலே வந்தால் கூட, ஜனநாயகத்திலே நீதிமன்றங்கள் இன்னமும் நம்முடைய இன எதிரிகள் கைகளிலேதான் சிக்கிக் கொண்டிருக்கின்றன. ஆட்சி மன்றம் செய்கின்ற மிகப் பெரிய திட்டங்களைக்கூட நீதிமன்றங்கள் குறுக்கிட்டு அவைகளுக்கு கோணல்கள் காட்டக் கூடிய அளவிலே இன்னமும் இருந்து கொண்டிருக்கின்றன. கலைஞருக்குத் தெரியும்
மொழி காக்கத் தங்களை தியாகம் செய்த பல பேருக்கு ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்ததைக் கூட கொஞ்சம் அதற்கு ஒரு மாற்று சூழலை உருவாக்கி விட்டார்கள். ஆனால், கலைஞர் அவர்களுக்கு எதை எப்படி செய்வது என்பதிலே அவரைவிட கெட்டிக்காரர் இந்த நாட்டிலே வேறு யாரும் கிடையாது. ஆகவே அவர்களுக்கு அதை சட்டரீதியாக ஆய்வு செய்து எப்படி செய்ய முடியுமோ, அதை செய்யவேண்டும் என்று சொல்லக்கூடிய நிலையிலே அவர்கள் ஒப்புக்கொண்டிருக் கின்ற கொள்கையிலே, ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நிச்சயமாக அவர்களுடைய வாய்ப்பிலே எதை செய்தால் சட்டரீதியாக அடி படாமல் பாதுகாப்பாக செய்ய முடியுமோ அதற்குரிய சட்ட நிபுணர்களுடைய கருத்து களையெல்லாம் கேட்டுப் பெற்று அதைச் செய்யக்கூடிய நிலையிலே இருக்கிறார்கள். ஆனால், ஒன்று. இன்னொரு அங்கீகாரம் - ஜாதி ஒழிப்புப் போராட்டத்திற்குக் கிடைத் திருக்கிறது.
எதிர்பாராமல் முதலமைச்சரை சந்திக்கக்கூடிய வாய்ப்பு
- முதலமைச்சர் கேட்ட கேள்வியோ...
காலையில் வடசேரி திருமணம், மதியம் மன்னார்குடி - மாலையிலே நீடாமங்கலம் பொதுக்கூட்டம் ஆகிய மூன்று ஊர்கள் சுற்றுப்பயணத்திற்கு நாள் சென்னையிலிருந்து புறப்படுகின்ற நேரத்தில் எதிர்பாராமல் முதல்வரை சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது.
அப்பொழுது முதலமைச்சர் அவர்கள் சிரித்துக்கொண்டே கேட்டார்கள். நாளை சுற்றுப்பயணத்திற்கு எந்தெந்த ஊர்களுக்குப் போகிறீர்கள் என்று கேட்டார்கள்.
நான் வரிசையாகச் சொன்னவுடனே உடன் அமர்ந்திருந்த சில அமைச்சர் பெருமக்கள் மற்றவர்கள் எல்லோரிடத்திலும் முதலமைச்சர் அவர்கள் சிரித்துக்கொண்டே சொன்னார்கள், ஓகோ! நம்முடைய சுயமரியாதைக் கோட்டைகளுக்குச் செல்லுகிறீர்கள் என்று அந்த ஊர்களையெல்லாம் நினைத்து உடனடியாக மகிழ்ச்சியோடு சொன்னார்கள் (பலத்த கைதட்டல்). எனவே இன்னமும் அவர்களுடைய கணிப்பிலே எந்தெந்த ஊர் எப்படிப்பட்டது என்பதை 85 வயது இளைஞராக இருக்கக் கூடிய அவர்கள் 95 வயது இளைஞரைத் தலைவராக என்றைக்கும் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்களுடைய கணிப்பிலே இந்தப் பகுதி எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை எல்லாம் அறிந்தவர்கள் அவர்கள்.
எல்லா கிராமங்களிலும் எப்படி தந்தை பெரியார் அவர்களுடைய காலடி படாத இடமே இல்லை என்று நினைக்கின்றார்களோ, அதுபோல நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்களும் எல்லாப் பகுதிகளையும் புரிந்தவர்கள். அறிந்தவர்கள் - தெரிந்தவர்கள்.
(31-10-2008 அன்று நீடாமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து....)
---------- "விடுதலை" - 4-11-2008
சட்ட ரீதியாக ஜாதியை ஒழிக்க இன்னமும்
யோசித்துக் கொண்டிருக்கின்றார்களே!
நீடாமங்கலம் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் வேதனை
சட்டரீதியாக ஜாதியை ஒழிக்க இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பி விளக்கவுரையாற்றினார்.
அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பிரச்சினை
இங்கே நம்முடைய அன்பழகன் சொன்னார்கள் அல்லவா? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதுதான் நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் கடைசியாக 95 வயதிலே காலத்திலே நின்ற ஒரு போராட்டமாகும். தந்தை பெரியார் அறிவித்தார்கள்.
கலைஞர் சட்டம் கொண்டுவந்தார்
தொடர்ந்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். அந்தப் போராட்டத்திற்கு முன்னாலேயே கலைஞர் அவர்கள் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். ஆனால், அந்த சட்டம் நிறைவேறிய பிற்பாடுகூட உச்ச நீதிமன்றத்திலே அது செயல்படாத அளவிற்கு சாதகமான தீர்ப்பு வந்த பிற்பாடுகூட, ஒரு தேக்கமான சூழ் நிலை இருந்தது. அதற்குப் பிறகு ஆட்சிகள் மாறி, மாறி காட்சிகள் மாறின. எனவே இந்த நிலையி லேதான் அய்ந்தாவது முறையாக ஆட்சிக்கு வருவதற்கு முன்னாலேயே தெளிவாகச் சொன்னார்கள்.
முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே
நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுச் சொன்னார்கள். நான் ஆட்சிக்கு வந்தவுடனே முதல் வேலையாக தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவதுதான் என்னுடைய வேலை என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள். முதல் அமைச்சரவைக் கூட்டத்திலே முதல் தீர்மானமாக அவர்கள் நிறைவேற்றியது என்னவென்று சொன்னால் அனைத்து ஜாதியினர்களையும் அர்ச்சகராக்குவோம் என்ற அற்புதமான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டார்கள்.
69 சதவிகித இட ஒதுக்கீடுபடி அர்ச்சகர்
அப்படி நிறைவேற்றியது மட்டுமல்ல, 69 சதவிகித அடிப்படையிலே 213 பேர் எல்லா ஜாதியிலிருந்தும் பார்ப்பனர்களிலே இருந்து தாழ்த்தப்பட்டவர்கள் வரையிலே அய்ந்து அல்லது ஆறு இடங்களிலே தமிழ்நாடு முழுக்க வைஷ்ணவ ஆகமங்கள், சிவ ஆகமங்கள் என்ற பெயராலே இரண்டு பிரி வுகள் இருந்தாலும்கூட சட்டப்படி அதற்கு ஒரு குழுவைப் போட்டு, அதற்குப் பாடத் திட்டங்களை வரையறுத்து, அந்த பாடத் திட்டங்களுக்கு பயிற்சி கொண்டுவந்து சிறீரங் கத்திலே அதேபோல, திருவல்லிக்கேணியிலே, பழனியிலே இப்படி பல ஊர்களிலே பயிற்சிகளை வைத்து இந்த ஓராண்டிற்குள்ளே அனைத்து ஜாதியினரும் தயாராக இருக்கிறார்கள் - அர்ச்சகர்களாக. இன்னும் கேட்டால் இந்து போன்ற பத்திரிகையிலே ஒரு செய்தி வந்தது.
இவர்களிலே யார் யார் படித்தார்களோ பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களான இவர் களிடத்திலிருந்து இப்பொழுது பலர் இதற்கு முன்பு இருந்தவர்களும் சேர்த்து இவர் களிடத்திலே இருந்து பாடம் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்ற ஒரு செய்தி வந்தது என்று சொன்னால், கலைஞர் அவர்களுடைய சிந்தனையும், தந்தை பெரியார் அவர் களுடைய கோரிக்கையின் நிறைவேற்றமும் எப்படிப்பட்ட உரு எடுத்திருக்கிறது என்பதைப் பார்க்கும் பொழுது ஜாதி ஒழிப்பிற்காக எங்கள் தோழர்கள் இன்றைக்கு மறைந்தும், மறையாதவர்களாக இருக்கின்றார்களே அந்தச் சுயமரியாதைச் சுடரொளிகளினுடைய உழைப்பு. அதேபோல முறுக்கான இளமைக் காலத்திலே சிறைச் சாலைக்குப் போய், இன்றைக்கு முதியவர்களாக இருக்கிறார்களே, முழுமையாக தள்ளாடிய நிலையிலே இருக்கிறார்களே, இவர்களுடைய உழைப்பும் வீண்போகவில்லை என்பது தெளி வாக்கப்பட்டுவிட்டது.
அடுத்து வழக்கு வரவிருக்கிறது
உச்சநீதிமன்றத்திலே இன்னும் சில மாதங்களிலே வழக்கு வர இருக்கிறது. அந்த வழக்கு அடுத்த மாதம் 15-ஆம் தேதி வாக்கிலே வர இருக்கிறது. அந்த வழக்கிற்காக காத்திருக் கின்றார்கள். அது முடிந்தவுடனே நிச்சயமாக அந்த வாய்ப்பு நல்ல வாய்ப்பாக இருக்கும். எல்லாவற்றையும் சட்ட ரீதியாக ஆய்ந்து... முக்கியமானவர்களை வைத்து சட்ட ரீதியாக ஆய்ந்து ஒவ்வொரு அடியையும் அரசாங்கம் எடுத்துவைக்கக் கூடிய அளவிலே மிக முதிர்ச் சியோடு அவர்கள் செய்திருக்கின்றார்கள். அதனுடைய விளைவாக ஒரு பெரிய அமைதிப் புரட்சியை நாம் பார்க்கப் போகின்றோம். இன்னும் கொஞ்சம் நாளில் - ரொம்ப நாள் ஆகாது. இன்னும் ஒரு சில மாதங்களிலே நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
கருப்பு உருவம்தான் இனிமேல் பிரசாதம் தரும்
மன்னார்குடியிலே ராஜகோபாலசாமி கோவிலுக்கு போனால், அங்கே கருப்பாக ஒரு உருவம் வந்து துளசி கொடுக்கும். என்ன கருப்பாக இருக்கிறாரே என்று பார்த்தால் அய்யா நான்தான் ஆதிதிராவிட குப்பன் மகன் சுப்பன். நான் அர்ச்சகர் பயிற்சி பெற்று தகுதி பெற்று படிப்புபெற்று வந்திருக்கின்றேன் என்று சொல்லுவார்.
அங்கேதான் அய்யர், அய்யங்கார், சாஸ்திரி சர்மாக்கள் கூட அர்ச்சகர் பயிற்சிபெற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சகோதரர் கையிலிருந்துதான் தீர்த்தம் வாங்கக் கூடிய அந்த நிலை வரப்போகிறது என்று சொன்னால், ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் உழைத்தி ருக்கிறார்கள் என்றால் அந்த உழைப்புக்குப் பின்னாலே என்ன இருக்கிறதென்றால், சுயமரி யாதைச் சுடரொளிகளான நம்மவர்களுடைய உழைப்பு, நம்மவர்களுடைய தியாகம், நம் மவர்கள் சிறைச்சாலையை தவச்சாலையாகக் கருதி சென்றது என்பன போன்ற அத்தனையும் இதில் அடங்கும்.
சட்டத்தைத் திருத்த இன்னமும் யோசிக்கிறார்கள்
எனவே ஜாதி ஒழிப்பு என்பது - இன்னமும் சட்டத்திலே ஜாதிப் பாம்பு ஒட்டிக் கொண் டிருக்கின்ற ஓர் இடம் - கருவறைதான் என்பதைக் கண்டுதான் இந்த நிலை இருக்கிறது. இன் னமும் அதிகாரப் பூர்வமாக சட்டத்தைத் திருத்துவதற்கு யோசிக்கிறார்கள். அடுத்த கட்டம் அது வரும். முன்பெல்லாம் சுயுமரியாதை மாநாடுகளிலே எவை எவை எல்லாம் தீர்மானமாகப் போடப்பட்டனவோ, அந்தத் தீர்மானங்கள் எல்லாம் இன்றைக்கு சட்டங்களாக வருகின்றன.
கல்வி என்பது அடிப்படை உரிமை
இன்றைக்குக் கூட காலையில் வந்திருக்கின்ற செய்தி. கல்வி என்பது அடிப்படை உரிமை ஆகவேண்டும் என்று நாம் நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருந்தோம். இன்றைக்கு மத்திய அமைச்சரவையிலே சோனியா காந்தி அம்மையார் அவர்கள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியினுடைய வழிகாட்டும் தலைவராக இருந்து, பிரதமராக மன்மோகன் சிங் அவர்கள் இருந்து, இதை உருவாக்கி நடத் தக்கூடிய முக்கிய ஆலோசகராக நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் இருக்கின்ற காரணத் தினாலே பெரிய அமைதியான புரட்சிகள் அங்கும் நடந்துகொண்டிருக்கூடிய அளவிலே இருக்கிறது.
--------------- "விடுதலை" - 5-11-2008
சொந்த நாட்டிலேயே இரண்டரை இலட்சம் பேர் அகதிகள்,
40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் இலங்கையில்
கொடுமை அதிகரித்ததால் இன உணர்வுத் 'தீ' பற்றிக் கொண்டது
நீடாமங்கலம் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்
சொந்த நாட்டிலேயே இரண்டரை இலட்சம் பேர் அகதிகளாக இருக்கிறார்கள். இதுவரை நாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்தக் கொடுமை நாளுக்கு நாள் அதிகமானதால் தமிழர்களிடையே இன உணர்வுத் தீ இன்றைக்குப் பற்றிக் கொண்டது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
மத்திய கல்வி நிறுவனங்களில் இதுவரை திறக்காத கதவு
இல்லையானால், மத்திய கல்வி நிறுவனங்களிலே இது வரை திறக்காத கதவு திறக்கப் பட்டிருக்கிறது. தந்தை பெரியார் அவர்கள் போராடி அரசியல் சட்டம் திருத்தப்பட்டது 1951-லே. மத்திய கல்வித்துறையிலே எல்லா இடங்களுக்கும் கதவு திறக்கப்பட வேண்டும். அதற்கு முன்னாலே கம்யூனல் ஜி.ஓ. வகுப்புவாரி உரிமை செல்லாது என்று தீர்ப்பு கொடுத் தார்கள். அய்யா அவர்கள் போராடியதன் விளை வாக, அண்ணா அவர்கள் போராடியதன் விளைவால் காமராசர் போன்றவர்கள் ஒரு பின்பலமாக இருந்த காரணத்தாலே நேரு அவர்கள் பிரதமராக இருந்த காலத்திலேயே அந்த வெற்றியைப் பெறக்கூடிய வாய்ப்பை நாம் பெற்றாலும்கூட தோழர்களே, பெரியோர்களே, நன்றாக நினைத்துப் பாருங்கள்.
இந்த இயக்கம் ஏன் தேவைப்படுகிறது? ஏன் திராவிடர் கழகம் தேவைப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சட்டத் திருத்தங்கள் நிறைவேறின. ஆனால், நடைமுறைப்படுத்த விடவில்லை. நம்முடைய மாநிலத்திலே 69 சதவிகித இட ஒதுக்கீடு வந்ததே தவிர மத்திய கல்வி நிலையங்கள்பற்றி இங்கே சொன்னார்கள் அல்லவா நம்முடைய துணை வேந்தர் அவர்கள்.
கருவறைபோல் மத்திய கல்வி நிறுவனம்
சில நாட்களுக்கு முன்னாலே அகமதாபாத்திற்குப் போனேன் நிர்வாக துறை இயலிலே இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ் மென்ட் என்று சொல்லக்கூடிய அய்.அய்.டி. என்று சொல்லக்கூடிய மத்திய கல்வி நிறு வனங்கள் இவைகளில் எப்படி கருவறைக்குள் நம்மவர்கள் நுழைய முடியாதபடி ஒரு நிலை இருந்ததோ, அதேபோலத்தான் அதுவும். மத்திய அரசின் பல கோடி ரூபாய் கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் கல்வியைப் பொறுத்தவரையிலே, தாழ்த்தப்பட்டவர் களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
இப்பொழுது மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் அவர்கள், கலைஞர் அவர்கள் எடுத்த முயற்சி இவை அத்தனையும் சேர்ந்து தனியே இன்னொரு சட்ட திருத்தம் கொண்டுவந்த நிலையிலே உச்சநீதிமன்றத்திலே உயர்நீதி மன்றத்திலே உயர்ஜாதிப் பார்ப்பனர்கள் வழக்கின்போது அதையும் தடுக்கப் பார்த்தார்கள். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி அதிலும் வாதாடி வெற்றிபெற்று இப்பொழுது தான் கதவு திறக்கப்பட்டிருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவிகிதம் என்றால் சுலபத் தில் விட மறுக்கிறார்கள். ஒன்பது ஒன்பதாகக் கொண்டு வாருங்கள் என்று சொல்லுகின்றார்கள்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் கிரீமிலேயர்
அது மட்டுமல்ல, கிரீமிலேயர் வருமான வரம்பு கொண்டு வந்து அதிலேயேயும் இடைஞ்சல் செய்கிறார்கள். மூன்று அடுக்குகள் என்று வைத்துக்கொள்ளுங்கள். மேலே திறந்த போட்டி, கீழே தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு. முதல் முறையாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கதவு திறக்கப்பட்டிருக்கிறது.
நாம் எடுத்த முயற்சியினாலே - வி.பி. சிங், அர்ஜூன் சிங் போன்றவர்கள் எடுத்த முயற்சி யினாலே மண்டலுக்கு முதல் கதவு திறந்தது போல இதிலேயும் வாய்ப்புகள் திறக்கப்பட் டிருக்கின்றன.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள் - பாருங்கள். அதுமாதிரி இன்னமும் அவர்களுடைய சூழ்ச்சி ஆதிக்கம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
உச்சநீதிமன்றத்தில் இருந்த தடை நீக்கப்பட்டது. தீர்ப்பும் சாதகமாக வந்தது. இதில் ரொம்ப சாமர்த்தியமாக பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு மட்டும் வருமான வரம்பு என்று கொண்டு வந்தார்கள். பிற்படுத்தப் பட்டவர்களில் வசதியான பிற்படுத்தப்பட்ட வர்கள்தான் சலுகைகளை அனுபவிக்கிறார்கள்.
வசதி இல்லாத பிற்படுத்தப்பட்டவர்களுக்காக சலுகை காட்டிட இவர்கள் கண்ணீர் விடு கிறார்களாம். முதலாவதாக பிற்படுத்தப்பட்ட வர்களுக்கே கதவு திறக்கப்படவில்லை.
கிரீமிலேயர் மூலம் வடிகட்டல்
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய கல்வி நிறுவனங்களில் கதவே திறக்கப்படவில்லை. பந்தியிலே இவனுக்கு உட்கார இடமில்லை. ஆனால் சாப்பிட்டவனே மீண்டும் சாப்பிட்டு விட்டுப் போனால் என்ன நியாயம்?
பிற்படுத்தப்பட்டவர்கள் மத்திய கல்வி நிறுவனங்களில் நுழைந்துவிடக் கூடாது என்பதை கிரீமிலேயர்மூலம் வைத்து வடிகட்டு கிறார்கள். பொருளாதார அடிப்படை கூடாது என்பது அரசியல் சட்டத்திலே தெளிவாக எழுதப்பட்ட உண்மை.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபொழுது
எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது பிற்படுத்தப்பட்டவர்களில் ஏழைகளுக்கு உதவுகிறோம் என்ற பெயராலே ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பு ஆணையைக் கொண்டுவந்தார். திராவிடர் கழகம் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த பொருளாதார அளவுகோல் என்பது தவறானது. மக்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடியது என்பதைப் புள்ளி விவரத்துடன் ஆதாரத்துடன் கூறி கடுமையாக எதிர்த்தது.
தி.மு.க. போராடியது. காங்கிரசில் இருந்த சில நண்பர்கள் நம்மோடு ஒத்துழைத்தார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் போராடியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போராடியது.
எம்.ஜி.ஆர். தோல்வி அடைந்தார்
நாங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து போராடினோம். அதன் விளைவாக மக்கள் மத்தியிலே ஏற்பட்ட ஒரு பெரிய எழுச்சி பாராளுமன்றத் தேர்தல் 1980-லே வந்த நேரத்திலே இரண்டே இடங்களில் மட்டும் எம்.ஜி.ஆர். கட்சி வெற்றி பெற்றது.
மற்ற அத்துணை இடங்களிலும் தோல்வி அடைந்தவுடனே எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி. நாம் காட்டிய எதிர்ப்பு, கிளர்ச்சி, எம்.ஜி.ஆர் போட்ட உத்தரவை எரித்து அந்த சாம்பலை மூட்டை மூட்டையாக எம்.ஜி.ஆருக்கே கோட்டைக்கு அனுப்பினோம்.
எம்.ஜி.ஆர். கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம்
இவைகளுக்கெல்லாம் பிறகு எம்.ஜி.ஆர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். தனது கருத்தை மாற்றிக் கொண்டார். ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பு உத்தரவை அகற்றுகிறேன் என்று சொன்னார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்திக் கொடுக்கிறேன் என்று சொல்லி அறிவித்தார். ஏனென்றால் அவர் பட்ட அனுபவம்.
அதைச் செய்வதற்கு இந்த இயக்கங்கள் தேவைப்பட்டன. அப்படியெல்லாம் முயற்சி எடுத்த பிற்பாடுகூட வருமான வரம்பு கூடாது என்று அரசியல் சட்டத்தில் இருந்தாலும், மறைமுகமாக என்ன செய்கிறார்கள்? மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இரண்டரை லட்சம் வருமான வரம்பைக் கொண்டு வந்தார்கள். இப்பொழுது நான்கரை லட்சமாக உயர்த்திவிட்டார்கள்.
27 சதவிகிதம் படிப்படியாக கதவு திறக்கப்படுமாம்!
இதனால் என்ன ஆகிறது? கொடுத்த இடமே ஒன்பது சதவிகிதம்தான். 27 சதவிகிதத்திற்கு கதவு திறக்கவில்லை. 27 சதவிகிதம் என்றால் ஒன்பது, ஒன்பதாக மூன்று ஆண்டு களில்தான் கொண்டுபோக முடியும். அதாவது படிப்படியாகத்தான் கொண்டு போக வேண்டு மாம் என்று சொல்லி, 27 சதவிகிதத்திற்கு கதவு திறக்கப்படவில்லை.
27 சதவிகிதத்தில் மூன்றில் ஒரு பாகம் ஒன்பது. அந்த ஒன்பதை முழுமையாக நிரப் பினார்களா என்றால் இல்லை. நம்முடைய மக்களுக்கு தெரியவில்லை. இன்றும் பிற்படுத் தப்பட்டவர்களுக்கு, படித்துவிட்டு வந்தவர்களுக்கே தெரியவில்லை.
ஏன் திராவிடர் கழகம் தேவைப்படுகிறது?
இன்றைக்கும் ஏன் பெரியார் தேவைப்படுகிறார்? இன்னமும் ஏன் திராவிடர் கழகம் தேவைப்படுகிறது? இன்னமும் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் முதலமைச்சராக இருக்க வேண்டியது தி.மு.க.வுக்காகவா? திராவிடர் கழகத்திற்காகவா?
அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். சமூக நீதியில் நம்பிக்கையுள்ள ஓர் ஆட்சி மத்தியிலே இருக்கிறது. மத்தியிலே இருக்கக் கூடிய ஆட்சியை உருவாக்கக் கூடிய சக்தி மாநிலத்திலேயே இருக்கின்ற கலைஞர் அவர்களுக்கு வாய்ப்பாக இருக்கின்றது. தமிழகம், புதுவை உட்பட 40 இடங்களிலும், (பாராளுமன்ற) தொகுதிகளில் வெற்றிபெற்று கொடுத்ததன் விளைவுதான் நண்பர்களே! மதவெறி ஆட்சிக்கு இந்தி யாவிலே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இந்தியாவே காவி நிறமாகக்கூடிய ஒரு அபாயம். இந்தியா மீட்கப்பட்டது.
இட ஒதுக்கீட்டிற்குத் தடை
அது ஒரு கட்டம். அடுத்தபடியாக பல்வேறு பணிகள் . பெண்ணுரிமைச் சட்டங்கள் மற்ற சட்டங்கள், தகவல் அறியும் சட்டங்களி லிருந்து எல்லா சட்டங்களும் வந்தன என்பது ஒரு பக்கத்திலே இருந்தாலும், சமூக நீதியைப் பொறுத்த வரையிலே, மிகப் பெரிய இட ஒதுக்கீடு சட்டம் வந்திருக்கிறது.
ஆனால், அதை முழுமையாகப் பெற முடியாத அளவிற்குத் தடை செய்து கொண்டிருக் கின்றார்கள். எனவே போராட்டக் களத்திலே நாம் என்றைக்கும் இருக்கவேண்டியவர்களாக இக்கின்றோம். நாங்கள் முன்னாலே போராடி போராடி இந்தக் காரியத்தைச் செய்வோம்.
அடுத்தபடியாக பின்னாலே இருக்கக் கூடிய வர்கள் செய்யக்கூடிய அந்தக் கட்டத்திலே இருக்கிறார்கள். எனவேதான் ஜாதி ஒழிகின்ற வரையிலே இட ஒதுக்கீடு தேவை. இதுதான் மிக முக்கியமானது. சில பேருக்கு ஒரு குழப்பமாக இருக்கும். அதற்குப் பெரியார் அய்யா ரொம்ப அருமையான ஒரு விளக்கம் சொன்னார். அய்யா கேட்டார் - நோய்க்கு ஆங்கில மருந்துகளை கொடுப்பார்கள் - ஆன்டிபயாடிக். ரொம்ப கடுமையான நோய் இருந்தால் கடுமையான மருந்து கொடுப்பார்கள். அந்த மருந்தை நீங்கள் வாங்கிப் பார்த்தால் எந்தெந்த மருந்துப் பொருள் எத்தனை சதவிகிதம் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை போட்டிருப்பார்கள்
மருந்தில் விஷம் போல...!
அதிலே பாய்சன் என்று போட்டிருக்கின்றார்கள். விஷ சக்தி கிருமிகளை கொல்லுவ தற்காக அந்த விஷத்தைக் கூட ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அந்த மருந்திலே அளவோடு சேர்த் திருப்பார்கள். அதுமாதிரி தந்தை பெரியார் சொன்னார். ஜாதியை ஒழிப்பது என்பதுதான் என்னுடைய வேலை. ஜாதியை ஒழிப்பதற்காகத்தான் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு இடத்திலும் ஜாதியின் ஆதிக்கத்தை நான் ஒழித்துக் கொண்டிருக்கின்றேன்.
ஆனால், ஜாதி ஒழிகின்ற வரையிலே இட ஒதுக்கீடு இருக்கவேண்டும். காலம் காலமாக எங்களுடைய மக்கள் கல்வியிலே, உத்தியோகத்திலே, பின்தங்கப்பட்டு, கீழே தள்ளப்பட்ட காரணத்தால் எதிலே எந்த வழியிலே இருந்து அவர்கள் தள்ளப்பட்டார்களோ, அந்த வழியிலே இருந்துதான் அவர்களை வெளியே கொண்டு வரவேண்டுமே என்பதற்காக ஜாதியை எப்படி ஒரு மருந்திலே விஷத்தை அளவோடு சேர்க்கிறார்களோ அதேபோலத் தான் இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் பயன்படுத்தி யாகவேண்டும். வேறு வழியில்லை என்று தெளிவாக இந்தக் கருத்தைச் சொன்னார்கள். பிறகு இப்பொழுது தான் அது ரொம்ப தெளிவாக ஆகிவிட்டது.
கிரிமீலேயர் - ரூ.நான்கரை லட்சமாக
இந்த ஒன்பது விழுக்காடு பிற்படுத்தப் பட்டவர்களுக்கு கிரிமிலேயரில் ரூ.நான்கரை லட்சம் கொடுக்கலாம் என்று நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன் தலைமையிலுள்ள ஆணையம் சொன்னால்கூட அதை அப்படியே கொண்டுவந்து உள்ளே போட்டுவிட்டார்கள். நாம் சத்தம்போட்டு, கலைஞர், பிரதமருக்கு எழுதி, மற்றவர்களுக்கு எழுதி, நம்முடைய அமைச்சர்கள் அங்கு பேசி, பிறகு அமைச் சரவைக்கு வந்து இவ்வளவும் செய்த பிற்பாடு உச்சநீதிமன்றத்திலே அந்த வழக்கு என்ன ஆயிற்று என்று சொன்னால், ரொம்ப சுலபமாகச் சொல்லுகின்றார்கள்.
ஈரோட்டுக் கண்ணாடிக்கு மட்டும் தெரியும்
இல்லை, இல்லை, அதெல்லாம் பொதுப் போட்டிக்குப் போகவேண்டும் என்று சொல் லுகின்றார்கள். பொதுப் போட்டி என்றால் யார்? எல்லாம் அவாள்தான். பார்ப்பான் எவ்வளவு தந்திரமாக செய்கிறான் பாருங்கள்.
அவன் செய்வதை பெரியாருடைய ஈரோட்டுக் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான் தெரியும். இல்லையென்றால் சாதாரண மக்களுக்குத் தெரியாது. இதை விளக்குவதற்கு விடுதலை ஏடு தேவை. இதை விளக்குவதற்கு தமிழ்நாட்டிலே இருக்கக் கூடிய, திராவிடர் கழகம் மாதிரி இருக்கக்கூடிய இதுபோன்ற இயக்கங்கள் தேவை.
திராவிடர் கழகம் எதை எதிர்பார்க்கிறது?
உங்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்கிறோம்? அடையாளம் காட்டுகிறோம். ஆனால், நம்முடைய மக்களுக்கு இன்னமும் புரியவில்லையே. இந்த நாட்டிலிருக்கின்ற ஏடுகள் இன்னமும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையில் ஏடுகள் இருக்கின்றன. ஏடுகளை மற்றவர்கள் நடத்தினாலும், அதில் எழுதுகிறவர்கள் பார்ப்பனர்களாகத்தானே இருக்கிறார்கள். அதனால் இன உணர்வுள்ள ஓர் ஆட்சி வந்தால்கூட, இன உணர்வை அவன் மதிப்ப தில்லையே. பக்கத்திலே 30 கல் தொலைவிலே ஈழத்திலே மிகப் பெரிய இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கிறது.
சொந்த நாட்டிலேயே இரண்டரை லட்சம் பேர் அகதிகள்
இலங்கையில் இரண்டரை லட்சம் தமிழ் மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக் கிறார்கள். வெளிநாட்டில் வேறு நாட்டினர் தான் அகதிகளாக இருக்கிறார்கள். ஆனால், அன்புள்ளம் கொண்ட தாய்மார்களே, பெரி யோர்களே, இளைஞர்களே நீங்கள் சிந்தியுங்கள். எந்த நாட்டில் சொந்த நாட்டு மக்கள் அகதிகளாக இருக்கின்றார்கள்? அந்த மண்ணிலே பிறந்தவன் அந்த மண்ணிலே வாழக் கூடியவன், அந்த மண்ணிலே இருக்கக் கூடியவன் என்ன சொல்லுகிறான்? இதுவரை சிங்கள இராணுவத்தால் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். உள்ளூரில் இருக்கின்ற தமிழன் மீது தினமும் குண்டு விழுந்து கொண்டிருக்கின்றது. ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் போர் நடக்கின்ற பொழுது குண்டு விழுவது என்பது - விமானத் தாக்குதல் என்பது சரி.
ஆனால், சொந்த நாட்டு மக்கள்மீது அவன் குண்டு போடுகின்றான் என்றால், தமிழர்களை அவன் சொந்த நாட்டு மக்களாகக் கருதவில்லை என்ற நிலைதானே இருக்கிறது.
தமிழர்களுடைய ஒற்றுமையைக் காட்டிட
இந்தக் கொடுமை நாளுக்குநாள் அதிகமானது. தமிழர்களிடையே உணர்ச்சி ஏற்பட்டவுடனே முதல்வர் கலைஞர் யோசித்தார். தனியாகப் போராடுவது அந்தந்தக் கட்சிக்குரிய உரிமை. ஆனால், அதே நேரத்திலே அரசு தரப்பிலே நாம் அனைத்துக் கட்சியைக் கூட்ட வேண்டும்.
தமிழர்களுடைய ஒற்றுமையைத் தமிழ் நாட்டில் காட்டவேண்டும். இது தாய் மண். தமிழ்நாடுதான் கலாச்சார தாயகம். நாட்டிலே அரசியலாலே வேறுபட்டிருந்தாலும் இனத் தாலே நாம் ஒன்று பட்டிருக்கின்றோம்.
-------------------------- "விடுதலை" - 8-11-2008
ஒரு பீகார்க்காரன் கொல்லப்பட்டதற்காக பீகார் அமைச்சர்கள்,
கட்சியினர் ஒன்று சேருகிறார்கள்
தமிழகத்திலே ஒகேனக்கல் திட்டம் என்றாலும்,
ஈழப் பிரச்சினை என்றாலும்
தமிழர்களிடையே ஒற்றுமை இன உணர்வு பெருகி வர வேண்டாமா?
நீடாமங்கலம் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி
நீடாமங்கலத்தில் 31-10-2008 அன்று நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி வருமாறு:
இதிலேயா அரசியலைக் காட்டுவது?
ஆனால், தமிழ்நாட்டில் பாருங்கள்.
இதிலே போய் அரசியலைக் காட்டுகிறார்கள். அரசியலில் என் கட்சிக்குப் பெருமை வருவதா? உன் கட்சிக்குப் பெருமை வருவதா? பிரதான எதிர்க்கட்சி அதில் கலந்து கொள்ள வில்லை. ஈழத்திற்காகவே இருக்கிறேன் என்று சொல்லுகின்ற சகோதரர் வைகோ போன்றவர்கள் வராதது மிகுந்த வேதனையை அளிக்கக் கூடியது. நீங்கள் வர வேண்டும் என்று நாங்கள் கூறினால் நாங்கள் எழுதுவதற்கு அவர் உள்நோக்கம் கற்பிக்கிறார். இதற்கு என்ன அர்த்தம்? தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.
மும்பையில் ஆரம்பித்த பிரச்சினை
மகாராஷ்டிரத்திலே மும்பையிலே சிவசேனா கட்சி என்று ஒருவன் ஆரம்பித்தான். அவனுடைய மருமகன் ராஜ்தாக்கரே அந்தக் கட்சியிலிருந்து பிரிந்து இன்னொரு கட்சியை ஆரம்பித்துக் கொண்டார். மகாராஷ்டிரா நவ நிர்மாண் சமிதி என்ற கட்சியை ஆரம்பித்தார்.
வடஇந்தியாவிலிருந்து யார் வந்தாலும்
யார் யார் வடஇந்தியாவிலிருந்து உத்திர பிரதேசத்திலிருந்து பீகாரிலிருந்து, மற்ற இடங் களில் இருந்து ரயில்வேக்காக தேர்வு எழுதப் போனால் அவர்களை எல்லாம் அடித்து விரட்டுவதை தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். அவன் பாவம் அப்பாவி! படித்தவன். இங்கே வேலை கிடைக்காதா? என்று பார்த்து இங்கே எழுதுகின்றான்.
வேறு மாநிலத்துக்காரர்கள் இங்கு ஏன் வருகிறீர்கள் என்று அவன் அடித்து விரட்டுகிறான். உடனே அந்த ஊர்க்காரன் சும்மா இருப்பானா? இங்கே இந்திய ஒருமைப்பாட்டை நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். பீகார்க்காரன் மும்பைக்குப் போக முடிய வில்லை. நம்மைப் பிரிவினைவாதிகள் என்று சொல்லுகின்றார்கள்.
தமிழனுக்காகக் குரல் கொடுத்தால் , இங்கு இருக்கின்றவனே மொழி வெறி சக்திகள் எல்லாம் ஒன்று சேருகின்றன (சாவனிஸ்ட்டு) என்றெல்லாம் இங்கு பேசுகிறார்கள். ஆனால் அங்கு என்ன நிலவரம்? பீகார் மாநிலத்துக் காரர்களை மகாராஷ்டிராவில் அடித்து விரட்டினார்கள் என்பதற்காக பீகார்க்காரன் ஒருவன் துப்பாக்கி எடுத்துக் கொண்டு போயிருக்கின்றான்.
காந்தியாரை சுட்டுக் கொன்றவன் பார்ப்பனன்
வன்முறைக் கலாச்சாரத்தை நாம் யாரும் ஒப்புக் கொள்வதில்லை. காந்தியாரையே கோட்சே என்ற மராத்தி பார்ப்பான் சுட்டுக் கொன்றான். அவன் ஆர்.எஸ்.எஸ்.சிலே பயிற்சி பெற்றவன்.
காந்தியாரை சுட்டுக் கொன்ற நேரத்தில்கூட தந்தை பெரியார்தான் நாட்டில் அமைதியை நிலைநாட்டியவர். அதனால் வன்முறைக் கலாச்சாரத்தை அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி நாம் ஆதரித்ததே கிடையாது. மகாராஷ்டிரத்திலே அக்கிரஹாரங்கள் காலி செய்யப்பட்டன.
அக்கிரஹாரங்கள் சூறையாடப்பட்டன மராத்தி பார்ப்பனன் காந்தியைக் கொன்றதற்காக. அதே நேரத்திலே தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒரு பார்ப்பனனுக்குக்கூட, அவனது உச்சிக் குடுமியில் இருக்கின்ற ஒரு மயிருக்குக்கூட ஆபத்து வரவில்லை. காரணம் என்ன? தந்தை பெரியார் அவர்கள் இந்த மக்களை அறிவுப் பூர்வமாக ஆளாக்க வேண்டும் என்று நினைத்தார். நாம் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்குவதில்லை.
தத்துவத்திற்கு விரோதியே தவிர
நாம் தத்துவத்திற்கு விரோதியே தவிர, தனி மனிதர்களுக்கு விரோதி இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு இந்த நாட்டிலே போதிக்கின்ற ஓர் இயக்கம் நம் இயக்கம்.
பீகார்க்காரன் தன்னுடைய ஆட்களை இப்படி விரட்டி விட்டார்களே என்று ஆத்திரம். அவன் யாரையும் கேட்கவில்லை. டி.வி.யில் பார்த்திருப்பீர்கள். பத்திரிகையில் செய்தி வருகிறது. உடனே அவன் பேருந்தில் இருந்து துப்பாக்கியைக் காட்டினான்.
துப்பாக்கியைக் கீழே போடு!
துப்பாக்கியைக் கீழே போடு என்று போலீஸ்காரர்கள் கேட்டார்கள். அவன் டிரைவரை நோக்கி சுடுவதற்கு உள்ளே போய் விட்டான். மூன்று நாட்களுக்கு முன்னாலே நடந்த செய்தி பார்த்திருப்பீர்கள்.
உடனே போலீஸ்காரர்கள் பேருந்தில் இருந்தவனைப் பார்த்து, நீ துப்பாக்கியைப் போடவில்லை என்றால் என் கவுன்ட்டர் செய்வோம் என்று சொல்லி அந்த பீகார்க்காரனை சுட்டுக் கொன்று விட்டார்கள்.
பீகாரைச் சார்ந்த அமைச்சர்கள் ஒன்று சேர்ந்தனர்
இதைக் கண்டிப்பதற்கு பீகார் மாநிலத்தைச் சார்ந்த மத்திய அமைச்சர் லாலுபிரசாத், பீகார் முதல்வர் நித்திஷ்குமார் இவர்கள் இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் பிடித்துக் கொள் ளாதவர்கள். பிற்படுத்தப்பட்டவர்களில் திறமை எந்த அளவுக்கு உள்ளவர் என்பதை உலக வரலாற்றிலேயே ரயில்வே துறையில் 30 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்திக் கொடுத்த ஒரு கெட்டிக்காரர் லாலுபிரசாத் அவர்கள்.
லாலுவுக்கு ஹார்வர்டு அழைப்பு
அமெரிக்காவில் இருக்கின்ற ஹார்வர்டு பல்கலைக் கழகம் அவரை பாடம் நடத்தச் சொல்லி அழைக்கிறது.
இங்கே இருக்கிறவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்? லாலுபிரசாத் படம் போட வேண்டும் என்றால் ஒரு மாட்டுடன் சேர்த்து படம் போடுவான். இவரை ஏதோ மாட்டுக்காரன். பால்காரன் என்று கொச்சைப்படுத்து வதற்காக பார்ப்பன ஏடுகள் இதை எல்லாம் செய்வார்கள்.
ஆனால் அரசியலில் எவ்வளவு மாறுபட்டிருந்தாலும் லாலு பிரசாத்தும், அவருக்கு எதிரான நித்திஷ்குமாரும், அதே போல வேறு ஒரு கட்சியை வைத்து நடத்திக் கொண்டிருக்கின்ற மத்திய அமைச்சர் ராம்விலாஸ்பஸ்வான் அவர்களும் பீகாரைச் சேர்ந்தவர்கள். அதே போல முன்னாள் மத்திய அமைச்சர் ஜெக ஜீவன்ராம் அவர்களுடைய மகள் மீராகுமார் அய்.எஃப்.எஸ். அந்த அம்மையார் மத்திய அமைச்சர்.
பீகார்க்காரன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு
இவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்த பீகார்க்காரன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்கள். இவர்கள் எல்லோரும் போய் பிரதமரிடம் கேட்கிறார்கள். இந்த வன்முறையை நிறுத்துகிறீர்களா? அல்லது நாங்கள் ஏதாவது ஏற்பாடு செய்யட்டுமா? என்று கேட்கிறார்கள்.
ஒரு பீகார்க்காரன் பாதிக்கப்பட்டால் அவ்வளவு பேரும் ஒன்றாகப் போய்க் கேட்கிறார்கள். வித்தியாசமே இல்லையே.
ஒகேனக்கல் திட்டத்திற்கு ஒற்றுமை உண்டா?
கர்நாடகத்திலிருந்து நமக்கு வருகின்ற தண்ணீரை ஒகேனக்கல்லில் இருந்து தண்ணீர் எடுத்து தருமபுரிக்கும், கிருஷ்ணகிரிக்கும் கொடுப்பது என்று நாம் திட்டம் போடுகிறோம். வாஜ்பேயி ஆட்சி காலத்திலே திட்டம் போட்டோம்.
நாம் இப்படி திட்டம் போட்டால் கர்நாடக முதல்வர் எடியூரப்பா இடையூறப்பாவாக இருக்கிறார். இந்தப் பிரச்சினைக்கு நம்முடைய ஆட்கள் ஒன்று சேர்கிறார்களா?
கர்நாடகாவைப் பார்த்தீர்களேயானால் முன்னாள் அமைச்சர்களிலிருந்து இந்நாள் அமைச்சர் வரை, அங்குள்ள எல்லா கட்சியினரும் ஒன்றாக இருக்கிறார்கள்.
அத்தனை பேரிடமும் கட்சி இல்லை. ஜாதி இல்லை. மதம் இல்லை. கர்நாடகம் தமிழ்நாட் டிற்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று சொல்லுகின்றார்கள். கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் தண்ணீர் நிரம்பி, வழிந்து, அணை உடையும் அபாயம் என்றால் தான் மேட்டூருக்குத் தண்ணீர் வரும். இந்த நிலை அவர்களுக்கு.
அணைப் பிரச்சினையை எடுத்துக் கொண்டால்
அதே நேரத்திலே இங்கு அணையை உயர்த்த வேண்டும் என்று சொன்னால், கேரளத்தில் இருக்கின்ற அத்துணை பேரும் முடியாது முடியாது. நாங்கள் தனி அணை கட்டப் போகின் றோம். நாங்கள்விட முடியாது கம்யூனிஸ்ட்டு கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சி வரை இதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். கேரளாவில் எல்லோரும் ஒன்றாக இருக்கிறார்கள். தயாராக இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இந்த நிலை அசிங்கமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய காரியம் சாதித்து இது வரை அசையாத மத்திய அரசை அசைய வைத்த பெருமை முதல்வர் கலைஞரையே சார்ந்தது.
------------------------ "விடுதலை" - 9-11-2008
போர்நிறுத்தம் வேண்டும் என்று இலங்கை அரசு சொல்கிற அளவுக்கு தமிழர்களாகிய நாம் நம் அழுத்தத்தைக் காட்டியாக வேண்டிய நேரம்
நீடாமங்கலம் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் அறைகூவல் விடுத்துப் பேச்சு
நீடாமங்கலத்தில் 31-10-2008 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி வருமாறு:
கலைஞர் கொடுத்த அழுத்தம்
இலங்கையில் என்னமோ நடக்கிறது என்று இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு அப்படி இல்லை. முதலமைச்சர் கலைஞர் கொடுத்த அழுத்தம் - அதற்கு மற்றவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வராத நண்பர் ஒருவரைப்பற்றி டி. ராஜேந்தர் அவர்கள் பேசினார். உடனே கலைஞர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பதில் சொன்னார், தயவு செய்து வராதவர்களை இந்தப் பிரச்சினைக்கு எதிரி என்கிற மாதிரி பேசாதீர்கள். அவர்கள் என்னை எதிரியாக நினைத்துக் கொண்டுதான் இருக்கிறார்களே தவிர, இந்தப் பிரச்சினையில் அவர்களை எதிரிகள் என்று நாம் சொல்லவேண்டாம்.
நமக்குள் சண்டை போட்டுக்கொண்டிருப்பதா?
நமக்குள் வேற்றுமை இருக்கிறது என்று காட்டவேண்டாம் என்று சொன்னாலும் கூட - ஒன்றும் முடியவில்லையே. இவர் என்ன சாதித்தார்? என்று கேட்பதா? நமக்குள்ளே சண்டை போட்டுக் கொண்டிருப்பதா முக்கியம்? வீடு தீப்பிடித்து எரிகிறது. தீயை அணைக்கின்ற நேரத்தில் யார் யார் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுகிறார்கள் என்று பார்க்கவேண்டும். அதே நேரத்தில் பெட்ரோல் கொண்டுவந்து ஊற்றுகின்றவரையும் அடையாளம் காட்ட வேண்டும்.
வெளி விவகாரத்துறை அமைச்சர் வந்தார்
வெளி விவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இங்கே வந்தார். என்ன தீர்மானம் என்பதை இவை அத்தனையையும் சொல்ல, அங்கே குண்டு மழை பொழிகிறது. இலங்கை யில் உள்ள மக்கள் பட்டினியால் சாகின்றார்கள். அவர்களுக்கு உணவு கிடையாது, மருந்து கிடையாது. இவ்வளவையும் நீங்கள் அனுப்பலாம். அய்.நா. சபை கவுன்சில் மூலமாக அனுப்பலாம். அதேபோல செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்பலாம். இதுமாதிரி எடுத்துச்சொல்லி ஒப்பந்தம் போட்ட பிற்பாடுதான் இவை அத்தனையும் இன்றைக்கு நடக்கிறது. இன்னமும் குறுக்கு சால் ஓட்டிக்கொண்டு - இன்னமும் தனியாக நின்றால் என்ன அர்த்தம்? போர் நிறுத்தம் என்பதிருக்கிறதே அதுதான் நம்முடைய நோக்கம். போர் நிறுத்தம் நாளை முடியும், நாளை மறுநாள் முடியும் என்று சொல்வதற்கான சூழ்நிலை அங்கு இல்லை.
பார்ப்பனப் பத்திரிகைகள் திசை திருப்புகின்றன
இதை இங்கிருக்கின்ற பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாம் திசை திருப்பி, இவர்கள் எல்லாம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றார்கள் என்று பிரச்சாரம் செய்கின்றார்கள். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. விடுதலைப்புலிகளுக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை
காரணம் அவர்கள் சங்கதியை அவர்களே பார்த்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு அவர்கள் எல்லாவற்றிற்கும் தயாராகிவிட்டார்கள் (கை தட்டல்). விடுதலைப்புலிகளுக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை. யாருடைய ஆதரவும் இல்லாமல்தான் அவர்கள் சப்மரின் கப் பலைத் தயார் செய்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, கொழும்பில் எத்தனை விமானம் வந்து அடித்தது என்றே கண்டு பிடிக்க முடியவில்லை. இரண்டு விமானமா? ஒரு விமானமா? என்று இன்னமும் குழப்பத்தில் இருக்கின்றான். குண்டு போட்ட இடத்திலிருந்து மீண்டும் அனல் மின்சாரம் தயாரிக்க சிங்களனுக்கு ஆறு மாதம் ஆகும் என்று சொல்லுகின்றான். வேடிக்கையாக என்னிடம் ஒருவர் கேட்டார். அவரிடம் பதில் சொன்னேன். போர் நிறுத்தம், போர் நிறுத்தம் என்று இவர்கள் கேட்டார்கள்.
சிங்களன் போர் நிறுத்தம் கேட்கப் போகின்றான்
இன்னும் கொஞ்ச நாள் ஆனால், சிங்களன் போர் நிறுத்தம், போர் நிறுத்தம் என்று கேட்கப் போகின்றான். தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவா? என்று கேட்கிறார்கள். விடுதலைப்புலிகளே இங்கு இல்லையே, ஆனால், இவன் என்ன நினைக்கின்றான்? தமிழர்கள் வாழக்கூடாது என்று நினைக்கின்றனர். தமிழர்களுக்காக கலைஞர் எடுக்கின்ற முயற்சியையே திசை திருப்பி சொல்கின்றார்கள். ஒரு பத்திரிகையிலே எழுதுகின்றான் - இவர்கள் எல்லாம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்று. இரண்டரை லட்சம் மக்கள் அநாதைகளாக காட்டில் வாழுகிறார்கள். உண்ண உணவு இல்லை. குழந்தை களுக்குக் குடிக்கப் பால் இல்லை. குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை. சொந்த நாட்டிலேயே மிருகத்தை விட காட்டிலே கொடுமையுடன் வாழுகிறார்கள். மனித உணர்வு நமக்கு வேண்டாமா?
எல்லோரும் ஒன்று சேரவேண்டும்
இந்த உணர்வினாலே உந்தப்பட்டுதானே நாம் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்று சொல்லுகின்றார். தேர்தல் நேரத்தில் தனித்தனி ஆவர்த்தனம் வைத்துக் கொள்ளுங்கள். தேர்தல் நேரத்தில் யாருக்கு எந்தக் கொள்கையோ, யாருக்கு ஓட்டு போடவேண்டுமோ கேளுங்கள். அது நடக்கட்டும். ஆனால், பொதுவாக தமிழர்கள் இந்த நேரத்திலாவது ஒன்று சேர வேண்டாமா? பீகாரைப் பார்த்தாவது எப்பொழுதுதான் புத்தி வரப்போகிறதோ? பெரியார் தேவை, திராவிடர் கழகம் தேவை என்பது எவ்வளவு அவசியம் என்பதை நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். தமிழர்கள் ஜாதி, மதம் ஆகிய பிரச்சினைகளை எண்ணிக் கொண்டிருக்கலாமா? இதுவரை இவ்வளவு கடவுள்களை நாம் கும்பிடுகிறோமே, எந்த கடவுளாவுது நமது நாட்டை காப்பாற்றியிருக்கின்றதா? எல்லா கடவுள்களுக்கும் சேர்த்து இப்பொழுது ஏ.கே. 47 தேவைப்படுகிறதே. எந்த கோவிலுக்கு பக்தன் சாதாரணமாக சுலபமாகப் போய்விட்டு வரமுடிகிறது?
கடவுளை நாம்தான் காப்பாற்றுகின்றோம்
கடவுளுக்கும், பக்தர்களுக்கும் சேர்த்து ஏ.கே. 47 துப்பாக்கி பாதுகாப்பு. இப்பொழுது கடவுளை நாம்தான் காப்பாற்றுகின்றோமே தவிர, கடவுள் நம்மைக் காப்பாற்றுவதில்லை. கடவுளை மற - மனிதனை நினை என்று தந்தை பெரியார் சொன்னார்.இப்பொழுது எல்லா கோவில்களிலும் சென்று பாருங்கள். கடவுளை மற! போலீசை நினை! கலைஞரை நினை! கலைஞர்தானே இவ்வளவு கடவுள்களையும் பாதுகாக்க உத்தரவு போட்டுக் கொண்டிருக்கின் றார்.
உன் ஜாதி, மதம் ஒன்றுபடுத்தியதா?
எப்பொழுது தீவிரவாதி வருவானோ, என்று கடவுள் பயந்து கொண்டிருக்கின்றார். கடவுளில் கிறிஸ்தவக் கடவுளோ, இஸ்லாமியக் கடவுளோ, இந்துக் கடவுளோ அவனுக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆகவே ஒரு கடவுளுக்கும் சக்தி இல்லையே இப்பொழுது. உன் மதம் ஒன்று படுத்தியதா மக்களை? ஜாதி ஒன்று படுத்தியதா இல்லையா? தமிழின உணர்வு, மனித நேயம் - இதுதானே மக்களை ஒன்று படுத்தும். ஆகவே தான் தமிழின உணர்வை கொல்லுவதற்கு இதுதான் சரியான நேரம். தமிழன் என்று சொல்லுவது குற்றமா?
பிகார்க்காரன் அவனுடைய உணர்வைக் காட்டுவதில் தவறில்லை. வங்காளத்துக்காரன் அவனுடைய உணர்வைக் காட்டுவதில் தவறில்லை. கேரளத்துக்காரன் அவனுடைய உணர்வைக் காட்டுவதில் தவறில்லை. கன்னடத்துக்காரன் அவனுடைய உணர்வைக் காட்டுவதில் தவறில்லை.
தமிழனாகப் பிறந்தவன் மட்டும் தன் உணர்வைக் காட்டுவது தவறு என்று சொல்லுவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறதென்றால் அப்படிப்பட்ட பத்திரிகைகளை நீங்கள் ஆதரிக்கலாமா? அதைப் புறக்கணிக்க வேண்டாமா? (கைதட்டல்). யோசிக்கவேண்டும். நாடு பூராவும் இப்படிப்பட்ட ஓர் இயக்கத்தை நடத்தியாக வேண்டும். கலைஞர் ஆட்சி இல்லையென்றால்
தமிழன் என்று சொல்லுவதற்கு யோக்கியதை இல்லாத அளவுக்கு நாம் இருக்கின்றோமே, இன்றைக்கு கலைஞர் ஆட்சி மட்டும் இல்லை என்றால், மத்திய அரசிலே இருக்கிற வெளியுறவுத்துறை அமைச்சர் சென்னைக்கு வருவாரா?
இல்லை, இத்தனை காரியங்களை ஏற்கிறேன் என்று அவர் சொல்லுவாரா? எடுத்த எடுப்பிலேயே வந்து விடுமா? போரைப் பற்றிக் கூடத்தான் பேசுகிறார்கள். பேச்சுவார்த்தை நடக்கிறது. இதிலே வெற்றி, தோல்வி என்றா பார்ப்பது? எல்லோரும் விட்டுக்கொடுத்துப் போனார்கள். அதுமாதிரி 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பிரச்சினை நடக்கிறது. ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று சொல்லுகின்ற பொழுது அசையாத மத்திய அரசு அசைகிறது இன்றைக்கு.
மத்திய அரசு தலையிடக் கூடாதாம்!
மத்திய அரசு தலையிடக் கூடாது என்று சொன்னால் என்ன அர்த்தம்? 800 டன் உணவு, உடை மருந்தை கொடுக்கிறோம் என்று சொன்னாலே தலையீடுதானே. வெறும் ஆயுதம் கொடுத்தால்தான் தலையீடா? நாங்கள் இதைப்பற்றியே கவலைப்படமாட்டோம் என்றவர்களை கவலைப்பட வைத்த பெருமை கலைஞர் அவர்களுடைய ஆட்சியைச் சாரும். நான் தெளிவாகச் சொன்னேன். இது முடிவல்ல, முடிவின் தொடக்கம். நல்ல தொடக்கம். இந்த தொடக்கத்திற்கு தமிழர்கள் ஒன்று சேர்ந்து நிற்கவேண்டாமா? நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் இருக்கட்டும். நாட்டில் ஒரே கட்சிதான் இருக்கவேண்டும். ஒரே அணி தான் இருக்கவேண்டும் என்று சொல்ல மாட்டோம்.
தமிழர்களுடைய உரிமை என்று வரும்பொழுது
அவரவர்கள் அவரவர்களுடைய அணியை வைத்துக் கொள்ளுங்கள். தேர்தல் நேரத்தில் நீங்கள் சண்டை போட்டுக்கொள்ளுங்கள். ஆனால், தமிழர்களுடைய உரிமை என்று வரும்பொழுது, தமிழ் நாட்டின் உரிமை என்று வரும்பொழுது உலகத் தமிழர்களுடைய வாழ்வுரிமை என்று வருகின்றபொழுது, அவர்கள் மானத்தைக் காப்பாற்றப்பட வேண் டும் என்று வருகின்றபொழுது நமக்குத் தமிழின உணர்வு இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, தொலைந்து போகிறது. மனித நேயமாவது மிஞ்ச வேண்டாமா? இதை சொல்லுவதற்கு இந்த இயக்கம் தேவை. இதை சொல்லுவதற்கு இந்த மேடைகள் தேவை. இதை சொல்வதற்கு கருப்புச் சட்டைக்காரர்கள் தேவை.
காரியங்கள் நகர்ந்திருக்குமா?
இதை சொல்லுவதற்கு வாய்ப்பளிக்கக் கூடியதும், பாதுகாக்கக் கூடியதும் இது போன்ற ஓர் ஆட்சி தேவை. அதைத்தான் எண்ணிப் பார்க்கவேண்டும். மத்திய அரசில் இருக்கக் கூடிய ஆட்சி வேறுவிதமாக இருக்கக் கூடிய ஆட்சியாக இருந்ததென்றால் இன்றைக்கு இந்த அளவுக்கு காரியங்கள் நகர்ந்திருக்குமா? இப்பொழுதுதானே அரசியல் தீர்வு வேண் டும். இராணுவத் தீர்வு கூடாது என்று தெளிவாகச் சொல்லக்கூடிய அளவிற்கு வந்தார்கள். அந்தத் தீர்வு வேலை செய்யக்கூடிய வகையில் வரும்பொழுது எல்லாம் ஒரே நாளில் முடிந்து போய்விடும் என்று சொல்லமுடியுமா? ஆகவே, நண்பர்களே, உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம் மனித நேயம் வேண்டும்.
சுயமரியாதை என்பதே மனிதனுக்கு உரியதுதான். மிருகங்களுக்கு சுயமரியாதை கிடையாது. ஆகவே அந்தமாதிரியான சுயமரியாதைக்காகத்தான் இந்த மண் பாடுபட்டது. இங்கே இருந்த. மறைந்த தலைவர்கள் எல்லாம் பாடுபட்டார்கள். உழைப்பவர்கள் பாடுபட் டார்கள். எனவே அப்படிப்பட்ட இந்த மண் ணிலே உணர்ச்சியோடு இருங்கள் - அடையாளம் காணுங்கள். முதலிலே தமிழனுக்கு இருக்கிற மிகப் பெரிய குறைபாடு - புத்தகங்கள், ஏடுகளில் உண்மைகளைச் சொல்லுவதிற் கில்லை. மாறாக அதற்கு எதிர்ப்பான கருத்து களை பரப்புகிறார்கள்.
சிரஞ்சீவிகள்....!
அதிலும் கலைஞர் ஆட்சி எவ்வளவு நல்ல காரியங்களை செய்தாலும்கூட இந்த ஆட் சியை எப்படி குறை சொல்லாம் என்றுதான் நினைக்கிறார்கள். வேறு ஒன்றுமில்லை. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் என்கிற மாதிரியான விசயத்தில் கை வைத்தார்கள் பாருங்கள்.
அதனால்தான் இந்த ஆட்சி இருக்கக் கூடாது என்று நினைக்கின்றார்கள். எனவே அவர்கள் விரும்பியவர்கள் வந்தால் ஆழ்வார்கள், சிரஞ்சீவிகள் என்று பட்டம் கொடுப்பார்கள். அவர்களுக்கு சடகோபம் சாத்துவார்கள். ஆனால், அவர்களை எதிர்த்தால் அசுரர்கள், அரக்கர்கள் என்று சொல்லுவார்கள். இதுதான் இராமாயண காலத்திலிருந்து இன்று வரையிலே நடந்து கொண்டிருப்பது.
மூவருக்குப் பாராட்டு
எனவே, தமிழர்களே! தமிழர்களே! எச்சரிக்கையாக இருங்கள். தெளிவாகஇருங்கள், புரிந்துகொள்ளுங்கள், தமிழின உணர்வுக்கு அடையாளமாக இருங்கள் என்று கேட்டு வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி.
படிப்பகத்தை நன்றாகப் பயன்படுத்துங்கள். என்று கூறி இவ்வளவு சிறப்பான முயற்சியைச் செய்த மூன்று பேருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பாக, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம். நண்பர்கள் ஆ. சுப்பிரமணியன், சிவஞானம் இதை செய்வதற்கு முயற்சி எடுத்துக் கொண்ட துணை வேந்தர் அவர்களுக்கும் இந்த சிறப்புகளை செய்வதிலே மகிழ்ச்சி அடைந்து என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
-------------------- 'விடுதலை" - 10-11-2008
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment