Search This Blog
12.11.08
தேசாபிமானத்துக்குக் கர்த்தாக்கள் யார்?
பொதுவாகவே, சர்வதேச சங்கத்தை நாம் ஓர் உண்மையான உலகப் பாதுகாப்புச் சங்கம் என்று சொல்ல முடிவதில்லை.
அதை வலுத்தவர்கள், தந்திரக்காரர்கள் பாதுகாப்புச் சங்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.
யோக்கியமான ஒரு சர்வதேசப் பாதுகாப்புச் சங்கம் இருக்கவேண்டுமானால், அது உலக எல்லா தேசங்களுக்கும், ஒவ்வொரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பிரதிநிதிகள் அடங்கிய சபைக்கு உலக அரசியல், இராணுவம் ஆகியவை முழுவதையும் ஒப்படைத்து-விட்டு, இன்று தனித்தனி இராஜாவாகவோ, சர்வாதிகாரியாகவோ இருப்பவர்களுக்கு ஜீவனாம்சம் கொடுத்து உட்கார வைத்து, அச்சபைக்குத் தலைவராகத் தேசம், ஜாதி, மதம், கடவுள் செயல் என்கின்ற குறுகிய நோக்கமற்று உலகமெல்லாம் ஒரு தேசமாகவும், மக்களெல்லாம் ஒரே (மனித) ஜாதியாகவும் கருதுபவராகவும், உலக சொத்துக்கள் எல்லா மக்களுக்கும் சொந்தமானது என்கிற சகோதர உணர்ச்சி உள்ளவராகவும் உள்ளவரைத் தலைவராகப் போட்டு ஆட்சி நடத்தப்படுமானால் அது உண்மையான சர்வ தேசப் பாதுகாப்புச் சங்கமாக இருக்கலாம்.
பார்ப்பான் கூலி கொடுக்காமல் வேலை வாங்கிக் கொள்ள உரிமையுள்ளவனென்பதும்; பணக்காரன் ஏதாவது கூலி கொடுத்து வேலை வாங்க வேண்டும் என்பதும் தவிர - மற்றபடி மற்ற ஜனங்களைவிட தாங்கள் மேலானவர்கள் என்பதிலும், இந்நிலை கடவுளால் அளிக்கப்பட்டது என்பதிலும் வித்தியாசமான அபிப்பிராயம் இல்லவே இல்லை.
இப்படிப்பட்ட இந்த இரண்டு கூட்டத்தாரும் சேர்ந்துதான், இந்தியாவின் தேசாபிமானத்துக்குக் கர்த்தாக்களாய் இருக்கிறார்கள்.
எப்படியென்றால், பணக்காரன் பணத்தைப் பல இலட்சக்கணக்காய்க் கொடுக்கிறான்; பார்ப்பான் தந்திரத்தைப் பிரயோகிக்கிறான்; இருவரும் சேர்ந்து கூலிகளைப் பிடித்துத் தேசாபிமானப் பிரச்சாரம் நடத்தி அதற்குச் செல்வாக்கை உண்டாக்கி விடுகிறார்கள்.
ஆகவே, இந்த இரண்டு கூட்டத்தார்களாலும் இவர்களுடைய கூலிகளாலும் நடத்தப்படும் தேசாபிமானம் பாமர மக்களுக்குப் பயன்படுமா - அல்லது இந்த மூன்று கூட்டத்தையும் வெளியாக்கி அவர்களை ஒழிக்க முயற்சிக்கும் தேசத் துரோகம் பாமர மக்களுக்குப் பயன்படுமா என்பதை அறிஞர்கள் யோசிக்க வேண்டும்.
-----------------தந்தைபெரியார் - 'குடிஅரசு', தலையங்கம் 29.9.1935
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment