Search This Blog

15.11.08

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஷாகா பயிற்சிகளை நிறுத்தாவிட்டால்,..வாலாட்டினால்...?காஞ்சிபுரத்தையடுத்த ஓரிக்கை கிராமத்தில் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி ஒன்று உள்ளது. 3500 மாணவ - மாணவிகள் அங்கு பயில்கின்றனர்.

கல்விசொல்லிக் கொடுக்கப்படும் அந்தப் பள்ளியில் வன்முறைப் பயிற்சி என்றால் எல்லோருக்கும் அதிர்ச்சியாகத் தானிருக்கும்.

ஆம். ஒரு பக்கத்தில் பள்ளிப் பாடங்கள்; இன்னொரு பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி! கேட்பதற்கே அதிர்ச்சியாக இருக்கிறது என்றால் பார்ப்பதற்கு எப்படியிருக்கும்? உள்ளூரில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டனர். மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு - உலக உத்தமர் என்று போற்றப்படும் காந்தியாரை சுட்டுக் கொன்று ஆனந்தத் தீர்த்தம் ஆடிய ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் சார்பில் பயிற்சி என்றால் பயங்கரம் தானே!

உண்மையை உணர்ந்திருந்தால் பிளைகளைப் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்கள் பதறிப் போயிருப்பார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கத்தியைத் தீட்டச் சொல்லிக் கொடுக்கும் காவிப் பயிற்சிக்கா எங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்தோம் என்று வெலவெலத்துப் போயிருப்பார்கள்.

எதையும் அந்தரங்கமாகச் செய்வது - இரகசியமாகச் செய்வது என்பதுதானே அந்தக் காவிக் கூட்டத்தின் செயல் முறை.

ஒரு பக்கம் தனி வகுப்பு (Special Class) நடந்து கொண்டு இருக்கிறது - இன்னொரு பக்கம் காந்தியைக் கொன்ற காலிகளின் கூடாரத்தின் கவாத்துப் பயிற்சி நடந்து கொண்டு இருக்கிறது. (8.11.2008).

பள்ளி நிருவாகியைப் பார்த்து, பொறுப்புள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்கள். பாரதிதாசன் பெயரில் உள்ள ஒரு பள்ளியில் இந்த அநியாயம் நடக்கலாமா? இதற்காகவா எங்கள் பிள்ளை களை அனுப்பி வைத்தோம்? என்று குமுறியிருக்கிறார்கள்.

இந்தச் செய்தியை அறிந்த ஆர்.எஸ்.எஸ். பயிற்சியாளர்களும், அவர்களுக்குப் பயிற்சி கொடுத்த ஓரிக்கை குண்டர்களும் குண்டாந்தடி சகிதமாகத் திரண்டு வந்து, நியாயம் கேட்ட தோழர்களை அடித்துத்துவைத்துள்ளனர். இவர்கள் ஆயுதப் பாணிகளாக அங்கு செல்லவில்லை; அவர்களோ ஷாகா பயிற்சிக்கான ஆயுதங்களுடன் தயாராக இருந்தவர்கள். இந்த நிலையில் வன்முறையின் தத்துப்புத்திரர்களான ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தகவல் அறிந்து காவல்துறையினர் அங்கு வந்து காலித்தனத்தை அடக்கினார்கள்.

இந்தச் செய்தி காஞ்சிபுரத்தை அங்லோல கல்லோலப் படுத்தியது. இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் சார்பில் கூட்டப்பட்ட - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் த.மு.மு.க.வினர் கூடி இந்த அராஜகத்தை எதிர்த்து கண்டனம் ஆர்ப்பாட்டம் ஒன்றை காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடத்தினர் (10.11.2008).

கல்வி நிறுவனங்களா? காலிகளின் கூடாரமா? கல்விக் கூடாரங்களா காவிகளின் கூடாரமா?

அனுமதியோம் அனுமதியோம்

ஆர்.எஸ்.எஸ். பயிற்சியை பள்ளிகளில் அனுமதியோம்! தடை செய்! தடை செய்!

ஆர்.எஸ்.எஸ். பயிற்சியை தடை செய் என்கிற


முழக்கங்களை தோழர்கள் விண் அதிர எழுப்பினர்.

தமிழ்நாட்டில் எப்படியும் சங்பரிவார் கால் ஊன்ற வேண்டும் என்ற திட்டத்தோடு இது மாதிரி பயிற்சிகளை ஆர்.எஸ்.எஸ். கும்பல் நடத்தி வருவதாகத் தெரிகிறது.

அமைதித் தென்றல் உலாவரும் தமிழ் மண்ணில் அமளியை உண்டாக்கத் திட்டம் தீட்டியிருப்பது புரிகிறது.

பகுத்தறிவால் பக்குவப்படுத்தப்பட்ட தந்தை பெரியாரின் மண்ணில் கலவரக் கலாச்சாரத்திற்குக் கொடியேற்று விழா நடத்துவதற்குக் கால்கோள் விழா நடத்திட காந்தியாரைக் கொன்ற கூட்டம் எத்தனிக்கிறது.

கட்சிகளை ஒதுக்கி வைத்து மதச்சார்பற்ற சக்திகள் தோள் தூக்கி எழ வேண்டிய நேரம் இது!

காஞ்சிபுரம் நிகழ்ச்சி இந்த அறைகூவலைத் தான் கண்ணியமான மக்களை நோக்கி விடுப்பதாக அர்த்தமாகும்.

நெருக்கடி நிலை காலத்தில் இந்து முன்னணி, ஆர்.எஸ். எஸ். வகையறாக்களுக்கு கைலாகு கொடுத்தவர் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி என்று இந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலன் எழுதியுள்ளார்.

காஞ்சிப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். முகாம் அவரின் அனுக்கிரகத்தாலும் ஊக்கத்தாலும், நிதி உதவியாலும் நடந்திருக்கும் என்பதில் அய்யமில்லை. காவல்துறை சரியான திசையில் விசாரித்தால் இந்த உண்மை விளங்காமற் போகாது.

பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் நடந்த போதெல்லாம் திராவிடர் கழகம் நேருக்கு நேர் தடுத்து நிறுத்தியதுண்டு.

சென்னை - புதுவண்ணை பெரியார் பூங்காவில் ஆர்.எஸ். எஸ்.காரர்கள் பயிற்சியை நடத்திய போது முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மானமிகு க. பலராமன் அவர்களின் தலைமையில் சுயமரியாதைச் சுடரொளி ப.கவுதமன் உள்ளிட்ட கருஞ்சட்டைத் தோழர்கள் திரண்டெழுந்து விரட்டியடித்தனர்.

அதேபோல சென்னை அரும்பாக்கத்தில் பள்ளி மைதானத்தில் இது போன்ற பயிற்சிகளை ஆர்.எஸ். எஸ்.காரர்கள் நடத்தியபோது செஞ்சட்டை பஞ்சாட்சரம் அவர்களின் அழைப்பின் பேரில் கருஞ்சட்டைத் தொண்டர்கள் அவர்களைத் துரத்தி யடித்தனர்.

மீண்டும் அந்த நிலை உருவாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா என்று தெரியவில்லை.

முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் எச்சரிக்கை

இதற்கு முன்பே எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராகயிருந்தபோது காவல் துறை மான்யக் கோரிக்கையின்மீது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ் நாடு சட்டப் பேரவையில் அறிவித்ததாவது: (29.3.1982).

மதவாதிகள் - அவர்களின் கொள்கைகள் எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப் படுத்துவதாக இருக்க வேண்டும். மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை இந்த அரசு அனுமதிக்காது என்பதைத் தெளிவாகச் சொல் லிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும்.

இந்துமுன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது போன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வது போல மற்ற மடாதிபதிகள் நடந்து கொள்ள வேண்டுமே தவிர மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது.

நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே. அதை அரசு ஏற்றுக் கொள்ளாது. குறிப்பாகச் சொல்லிக் கொள்கிறேன். ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறினால் அரசு அதனைச் சமாளிக்கும் என்று முதல் அமைச்சர் என்ற முறையில் தமிழ்நாடு சட்டப் பேர வையிலேயே எச்சரித்தார் எம்.ஜி.ஆர்.

கலைஞர் அவர்களின் எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தந்தை பெரியார் முழு உருவச் சிலையைத் திறந்து வைத்த அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் ஒரு முக்கிய அறிவிப்பினைக் கொடுத்தார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் ஷாகா பயிற்சிகளை ஒரு மாதத்திற்குள் அரசு நிறுத்தாவிட்டால், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ள நேரிடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் (11.4.1982) என்றாரே மானமிகு கலைஞர் அவர்கள்.

அதிகாரப்பூர்வமான ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளே இப்படி அறிவித்து விட்டபிறகு, அதுவும் முதல் அமைச்சர் என்ற தகுதியில் சட்டப் பேரவையிலேயே எம்.ஜி.ஆர். அவர்கள் அறி வித்த பிறகு -

கல்வி நிறுவனங்களிலோ, பொது இடங்களிலோ ஆர்.எஸ்.எஸ். பயிற்சியை அனுமதிப்பது சட்டப்படி குற்றம் தானே?

இது போன்ற பயிற்சி எங்கு நடத்தப்பட்டாலும் கழகத் தோழர்கள் உடனடியாக தலைமைக் கழகத்துக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நேர்முகமாகவோ, சட்டப் படியாகவோ - எந்த வகையிலும் சந்திப்போம்!

பெரியார் மண்ணில் பிற்போக்குச் சக்திகளின் கவாத்துகளா? பகுத்தறிவுப் பூங்காவில் - பார்ப்பனியப் பாம்புகளின் வாலாட்டமா?

சந்திப்போம் - தோழர்களே!


--------------------- மின்சாரம் அவர்கள் 15-11-2008 "விடுதலை" ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

0 comments: