ஈழத் தமிழர்கள் யார்?
இலங்கை சிங்களவர்களின் நாடு, இங்கிருந்து பிழைக்கப்போன இடத்தில் தனி நாடு கேட்டால் சிங்களவன் சும்மா இருப்பானா? ஈழத்தின் வரலாற்றை அறியாதவர்கள் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைகளை தமிழகத்தில் எதிரொலிக்கும்போது எழும்பும் சந்தேகம் இது. இந்தச் சந்தேகம் தவறானது. இங்கிருந்து போன தமிழன் அங்கு தனி நாடு கேட்கவில்லை. ஈழத்தின் பூர்வீகக் குடியினர் தமிழர்களே. அந்தத் தமிழர்களே தனிநாடு கேட்டுப் போராடுகிறார்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே என்பதை விளக்கும் வரலாற்றுக் குறிப்புகள் கீழே தரப்படுகின்றன.
இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் தமிழர்களே!
கி.மு.5ஆம் நூற்றாண்டில் லாலா (வங்காளத்துக்கும், ஒரிசாவுக்கும் இடைப்பட்ட பகுதி) நாட்டின் மன்னன் சிங்கபாருவால் நாடு கடத்தப்பட்டு மரக்கலங்களில் ஏற்றி அனுப்பப்பட்ட அவனது மகன் விஜயனும் தோழர்களும் இலங்கையைச் சென்றடைந்தனர். அந்த விஜயன் வழிவந்தவர்களே சிங்கள மக்களாவர். கி.மு. 2ஆம் நூற்றாண்டளவிலிருந்து இலங்கைக்குப் பவுத்தம் நுழைந்தபின் தான் பேச்சு வழக்கிலான சிங்கள மொழி தோன்றிற்று. ஏனெனில் பவுத்த மதத்தோடு தான் இலங்கைக்குப் பாலி மொழி சென்றடைந்தது. அந்தப் பாலி, சமஸ்கிருதம், தமிழ் என்ற மொழிச் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதே சிங்கள மொழியாகும். கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து பேச்சு வழக்கிலிருந்தபோதிலும் சிங்கள மொழி வரி வடிவம் பெற்று, சிங்கள எழுத்து கள் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தான் உருவாக் கப்பட்டன.
சிங்களவர்களின் முன்னோடியான விஜயன் இலங்கைக்கு சென்றதற்கு முன்னிருந்த தமிழர் கள் இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள். அந்தக் காலம் தமிழகத்திலும், ஈழத்திலும் வாழ்ந்த தமிழர்கள் இந்து மதம், கடவுள் என்ற ஆரியர்களின் மாயைகளுக்கு அடிமையாகி சீரழிந்து கொண்டிருந்த காலம். வலிமை மிக்க படைகளை வைத்து சேர சோழ பாண்டிய அரசுகள் பல போர்களை நடத்தி வந்த போதிலும் அவர்களின் ஆட்சிச் சிறப்புக்கான ஆதாரங் களோ கட்வெட்டுக்களோ எதுவும் கிடையாது. கரிகாலன் கட்டிய கல்லணையைத் தவிர, அவ்வாறு ஈழத்திலும் அன்று தமிழர் வாழ்ந்ததற்குக் கோயில்கள் தான் சான்றாக உள்ளன.
விஜயன் இலங்கைக்குச் சென்றடைந்த காலத்தில் தமிழகத்தில் இராமேஸ்வரம் போன்று ஈழத்தில் திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், நடுவேஸ்வரம் என்ற ஈஸ்வர தலங்கள் இருந்ததாகச் சிங்கள மக்களின் வரலாற்று நூலான மகாவம்சமும் கூறுகிறது. கி.மு. 2ஆம் நூற்றாண்டில் (கி.மு. 161-- 117) 44 ஆண்டுகள் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கை முழுவதையும் ஆண்டான் என்பதையும் சிங்கள வரலாற்று நூலான மகாவம்சமே எடுத்துக் கூறுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த கடைச் சங்கப் பாடல்களில் ஈழத்து புலவர் ஈழத்துப் பூதந்தேவனார் பாடல்கள் காணப்படுகின்றன.
கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை இலங்கை முழுவதையும் சிங்களவர்களும் தமிழர்களும் மாறி மாறி ஆண்டு வந்தனர். கி.பி. 15ஆம் நூற்றாண்டிலிருந்து அய்ரோப்பிய காலனியா திக்க வாதிகளால் இலங்கைத் தீவு கைப்பற்றப் படும்வரை இலங்கையின் வடக்கு, கிழக்கு, வட மேற்குப் பகுதிகளைத் தமிழர்கள் நிரந்தரமாக ஆண்டு வந்தனர். கி.பி. 1215ஆம் ஆண்டிலிருந்து 1618ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாண இராச்சியம் என அழைக்கப்பட்ட தமிழ் இராச்சியத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னர்களின் பெயர்களும் அவர்கள் ஆண்ட காலப் பகுதிகளும் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. 17ஆம் நூற்றாண்டின் பின் போர்த்துக்கீசியரும், டச்சுக்காரரும் இலங்கையை கைப்பற்றிய போதிலும் தமிழர்கள் ஆண்டு வந்த பகுதிகளைத் தனியாகவும், சிங்களவர்கள் ஆண்டுவந்த பகுதிகளைத் தனியாகவும் - தனித்தனியான சட்ட விதிகளின் கீழ் ஆட்சி செலுத்தினர். பிரிட்டிசார் இலங்கைத் தீவு முழுவதையும் கைப்பற்றியதன் பின், 1833ஆம் தமது நிருவாக வசதிக்காக அதுவரை கண்டி அரசு, கோட்டை அரசு, யாழ்ப்பாண அரசு, வன்னிக் குறுநில அரசு என இயங்கி வந்த ஆட்சிப் பிரதேசங்களை ஒன்றிணைத்து, ஒரே நாடாக ஆக்கினர்.
தமிழகத்தில் சேர சோழ பாண்டியப் பேரரசுகள் அழிந்ததற்குப் பின்னாலும் பிரிட்டிசாரை எதிர்த்து பாஞ்சாலங்குறிச்சிக் குறுநில மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்களும் போராட்டம் நடத்திய காலத்தில், ஈழத்தில் யாழ்ப்பாணத் தமிழரசு அழிந்ததற்குப் பின்னாலும் வன்னிக்குறுநில மன்னன் பண்டார வன்னியன் பிரிட்டிசாரை எதிர்த்து வீரப் போர் புரிந்தான். 1803இல் திறை கேட்டு வந்த பிரிட்டிஷ் அமில்தார் எனப்பட்ட அதிகாரியின் தலையைச் சீவி எறிந்ததுடன் பிரிட்டிசாரை எதிர்த்து 9 ஆண்டு காலம் வீரப் போர் புரிந்து 1811இல் வீர மரணமடைந்தான். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றிருந்த சேர சோழ பாண்டிய ஆட்சிகள் எல்லாம் சிதைக்கப்பட்டு ஏக இந்தியா என்ற ஒரே ஆட்சியின் கீழ் எப்படி வந்ததோ அதே போல நீண்ட காலமாகச் சிறப்போடு நீடித்த யாழ்ப் பாணத் தமிழ் அரசும், சிங்கள அரசுகளும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சிதைக்கப்பட்டு இலங்கைத் தீவு முழுவதும் ஒரே ஆட்சியின்கீழ், இணைக் கப்பட்டது.
தமிழகத்தவர்களுக்குத் தமிழகம் எப்படிப் பூர்வீகப் பூமியோ, அப்படி ஈழத் தமிழர்களுக்குத் தமிழீழப்பகுதி பூர்வீகப் பூமியாகும். இந்த வரலாற்று உண்மைகளைத் தெரியாதவர்கள்தான் இங்கிருந்து சிங்கள நாட்டுக்குப் போய் அங்கு தனிநாடு கேட்டால் சிங்களவர்கள் சும்மா இருப்பார்களா? என்று கேட்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின்போது இங்கிருந்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்க என அழைத்துச் செல்லப்பட்டவர்களை நினைத்துக் கொண்டு ஈழத் தமிழர்கள் இங்கிருந்து போனவர்கள் என்று குழம்புகிறார்கள்.
-----------நன்றி: "உண்மை" நவம்பர் 1-15 2008
Search This Blog
15.11.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment