Search This Blog

12.4.19

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தந்தை பெரியார்
'நாகரிகம்' என்கின்ற வார்த்தைக்குப் பொருளே, பிடியில் சிக்காத ஒரு விஷயமாகும். ஒவ்வொருவரும் நாகரிகம் என்பதற்கு ஒவ்வொரு தனிப்பொருள் கூறி வருகிறார்கள். கண்ணோட்டம் என்கிற தலைப்பின் கீழ், குறளில் நாகரிகம் என்கிற வார்த்தை வள்ளுவரால் உபயோகப்படுத்தப் பட்டிருப் பதாக நான் 10, 20 வருஷங்களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம். அது தாட்சண்ணியம், அடிமை என்கிற பொருளில் உபயோகப் படுத்தப்பட்டிருப்பதாகவும் எனக்கு ஞாபகம்.
நாகரிகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக்கொண்டு பேசினாலும் மக்கள் சமுகம், நடை, உடை, ஆகாரம் மற்றும் எல்லாப் பாவனைகளிலும் பெரிதும் மாறுப் பட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் தான் இவைகள் வேறு பட்டிருக்கின்றது என்று கூறமுடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில்தான் போய்க்கொண்டிருக்கிறது. நம்முடைய பெண்கள் முன்பு முழங்கைக்குக் கீழும் இரவிக்கை அணிந்து வந்தார்கள். பின்பு மேலேறியது. மறுபடி கீழே இறங்கியது. இப்பொழுது மறுபடியும் மேலேயே போய்க் கொண்டிருக்கிறது. மேல் நாட்டு ஸ்திரீகளும் - தெருக்களில் தெருக் கூட்டுவது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். அந்தக் காலத்தில் துணிகளைத் தூக்கிப்பிடித்துக் கொள்ள பணம் படைத்தவர்கள் ஆள்களை நியமித்துக் கொண்டிருந்தார்கள். அது அக்கால நாகரிகம் இப்பொழுதோ என்றால், ஆடை விஷயத்தில் மேல் நாட்டுப் பெண்களும் எல்லாவற்றையும் சுருக்கிக் கொண்டு விட்டார்கள். அதை நாம் இப்பொழுது நாகரிகமென்றுதான் கருதுகிறோம்.
நாம் இவைகளைப் பற்றி எல்லாம் பேசும் பொழுதும், யோசிக்கும் பொழுதும் எந்த விதப் பற்றுதலும் இல்லாமல், அதாவது, ஜாதி, மதம், தேசம் என்பன போன்ற பற்றுகளை விட்டுவிட்டுச் சுயேச்சையாகக் சீர்தூக்கிப் பார்த்தால் தான், விஷயங்களை நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அதன் உண்மையும் அப்பொழுதுதான் விளங்கும். ஒரு காலத்தில் சாம்பலைப் பூசிக் கொண்டு சிவசிவா என்று ஜெபிப்பதுதான் யோக்கியமாகக் கருதப்பட்டது. இன்றைய கால தேச வர்த்த மானங்கள், மேல் சொன்ன விஷயத்தைக் கேலி செய்கின்றது.
புருஷன், பெண் ஜாதி என்கிற இரு சாரர்களை எடுத்துக் கொண்டாலும், முன்பு 'கல் என்றாலும் கணவன்,  புல் என்றாலும் புருஷன்' என்று மதித்து அடுப்பூதுவதே ஒரே கடமையென்று நடந்துவந்த பெண்களைப் பற்றிப் பெரிதும் மதித்து வந்தார்கள். ஆனால், இன்றோ புருஷனிடம் மனைவியானவள் நான் உனக்கு வேலைக்காரியா? அடிமைப்பட்ட மாடா? ஜாக்கிரதையாய் இருந்தால் சரி, இல்லாவிட்டால் எனக்கும் சம அந்தஸ்தும், சம உரிமையும், சர்வ சுதந்திரமும் உண்டு என்று கர்ஜனை செய்யும் பெண்களையே நாகரிகம் வாய்ந்தவர் களென்று கருதுகிறோம். முன்பு புராணத்தைப் பற்றியும், மதத்தைப் பற்றியும் பேசுவதுதான் வித்வத்தன்மையாக இருந் தது. ஆனால் அது இன்று குப்பையாகிப் பரிகசிக்கத்தக்கதாக ஆகிவிட்டது. புத்திக்கும் அறிவிற்கும் பொருத்தமில்லாத முரட் டுப் பிடிவாதத்தில் முன்பு நம்பிக்கையிருந்ததைச் சிலாக்கித்துப் பேசினோம். ஆனால் இன்றைய தினம் பிரத்தியஷமாக எதை யும் எடுத்துக் காட்டித் தெளிவுபடுத்துவதையும் - விஞ்ஞானம் போன்றதான அறிவியக்க நூல்களைக் கற்றுணர்ந்த வல்லுனர்களையுமே நாம் பெரிதும் மதித்து வருகின்றோம்.
நாகரிகம் என்பது நிலைமைக்கும் தேசத்திற்கும் - காலப் போக்கிற்கும் தக்கவாறு விளங்குகிறது. கால தேச வர்த்தமான - வழக்கத்தையே ஒட்டி நாகரிகம் காணப்படுகிறது. காலப் போக்கானது எந்தத் தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை-ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும் - புரட்சி ஏற்படவும் செய்கிறது.
மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுப் பேசினீர்கள். எது நாகரிகமென்று கருதுகின்றோமோ, அது பெருத்த அஜீரணத்துக்கு வந்து விடுகிறது. மீண்டும் அந்த நிலைமையானது மாறிக்கொண்டு போகத்தான் செய்கிறது.
ஒரு விஷயமானது வாய்ச் சாமர்த்தியத்தினால் செலாவணி யாகி விடும். அது மெய்யோ, பொய்யோ - சரியோ - தப்போ எப்படியும் இருக்கலாம்.
நாம் ஏன், எதற்காக உழைத்துப் பாடுபட வேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆக வேண்டுமா? நாகரிகம் என்பது சதா உழைத்துத்தான் உண்ண வேண்டுமா? என்கின்ற கேள்விகள் எழுந்து மக்கள் சமுகம் கஷ்டம் தியாகமின்றி-நலம் பெற முயற்சிக்கலாம். இது நாகரிகமாகக் கருதப்பட்டு பயன் அடைந்தாலும் அடையலாம்.
இன்றைய அரசியல் விஷயத்தில் இராட்டை சம்பந்தப் பட்டிருக்கிறது. இது ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்டு நாகரிகமாகப் பாவிக்கப்பட்டிருந்தது, பின்பு குப்பையில் தள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அது வெளிப்படுத்தப் பட்டு, அதற்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுக்கப்பட்டு, இராட்டை சுற்றுவதும் - தக்ளி நூல் நூற்பதும் நாகரிகமாகக் கருதப்பட்டது. ஆனாலும் அதுவும் ஒழிந்து போயிற்று என்றே சொல்லலாம். இவைகளையெல்லாம் எந்தவிதமான (தேசம், மதம்,ஜாதி) பற்றுதலுமில்லாத பொது மனிதன், பொது நோக்கோடு கவனித்தால் உண்மை விளங்காமல் போகாது.
நாம் ஒரு காலத்தில் தேசம் - தேசியம் - தேசப்பற்று என்பதை நாகரிகமாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால் இன்றோ அவைகளை எல்லாம் உதறித்தள்ளி, மனித ஜீவகாருண்யம், உலக சகோதரத்துவம், மக்கள் அபிமானம் (சிவீtவீக்ஷ்மீஸீ ஷீயீ tலீமீ ஷ்ஷீக்ஷீறீபீ) என்று கருதுவதையே பெரிதும் நாகரிகமாகக் கருத முன் வந்துவிட்டோம்.
ஒரு காலத்தில் நாகரிமாகக் கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வருகிறோம். ஒரு மனிதன் தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை போராடிக் கொண்டு, ஒவ்வொருவனும் தான் அதிக மேல் சாதிக்காரனாவதற்கு சைவ, வைணவப் போக்கைப் பற்றிக் கொண்டு, பூணூலையும் நாமத்தையும் போட்டுத் தனது மதத்தையும் சிலாகித்துப் பிதற்றிக் கொண்டும் வந்தான். ஆனால் இன்றைய தினம் இவைகளையெல்லாம் புத்தி கெட்டதனமென்றும், முற்போக் குக்கு முரணானதென்றும் கூறி, வெகு வாகக் கண்டனம் செய்து வருகிறோம். ஒரு காலத்தில் தனித் தனி தத்துவம் நாகரிகமாகக் கருதப்பட்டது. உதாரணமாக, ஒரு தனித்தனி ஜாதி நன்மையும் - தேச நன்மையும் சிலாக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால் ஒரு ஜாதியின் அனுகூலம் பிற ஜாதியானுக்குப் பாதகம் என்பதையும், ஒரு தேச நன்மை மற்றொரு தேசத்திற்குப் பொல்லாங்கு என்பதையும், நாம் இன்று நன்கு உணர ஆரம்பித்துவிட்டோம்.
தோழர்களே! நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப்பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது நாம் அனுபவ முதிர்ச்சியால், அறிவு ஆராய்ச்சியால், நாம் முற்போக்காகிக் கொண்டு வருகிறோம் என்பதேயாம். நாம் எல்லா மனிதர் களையும் அறிவின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக்கிறோம். உதாரணமாக, வியாபாரிகளை-மக்கள் சமுகத்தின் நலனைக் கெடுத்து லாபமடையும் கோஷ்டியைச் சேர்ந்தவர்களென்றும், லேவாதேவிக்காரர்களை - மனித சமுக நாச கர்த்தாக்களென்றும், மத ஆதிக்கங்கொண்ட வர்க்கத்தினர்களை-மனித சமூக விரோதிகளென்றும் கண்டிக்கின்றோம்.
நாகரிகம் என்பது பிடிபடாத ஒரு விஷயமென்று முன்பே கூறினேன். நம் நாட்டுப் பெண்கள் எப்படி பெல்ட் கட்டாமல் சேலை கட்டுகிறார்களென்றும் அது இடுப்பில் எவ்வாறு தங்கி இருக்கிறதென்றும், தலைக்கு ஊசி இல்லாமல் பெண்கள் எவ்வாறு மயிர்களைச் சேர்த்து முடிந்துகொள்ளுகிறார் களென்றும், நாம் சாப்பாட்டுக்கு தினம் ஒரு இலை எப்படிச் செலவு செய்கின்றோம், என்ன மகத்தான நஷ்டமென்றும், மேனாட்டார் ஆச்சரியப்பட்டு நம்மவர்களைக் கேட்பதையும் கேட்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் அவர்களின் செய் கையைச் சரியாக உணராததினால் சிலவற்றை ஆச்சரிய மாகக் கருத நேரிடுகிறது.
நம்மிடையேயுள்ள சாதி அபி மானம், சொந்தக்கார அபிமானம், பாஷா அபிமானம், தேசாபிமானம் எல்லாம் தொலைய வேண்டும். இல்லா விட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் முடிவு காணுவது சரியாக ஆகி விடாது.
காந்தியார் மேனாட்டில் முழங்கால் துண்டோடு-போதிய ஆடையின்றிப் போன பெருமையைப்பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்டார். இது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானதாகும். சவுகரியத்திற்காகவும்-நன்மைக் காகவும் அங்கு அதிக ஆடைகளைப் பந்தோபஸ்துக்காக அணிந்து கொள் ளாமல், பிடிவாதத்தோடு-கேவலம் இந்திய தர்மம் என்ற வெறும் எண்ணத்திற்காக, குளிரில் விறைத்துப் போக இங்கி லாந்து வாசம் செய்தது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்?
புதிய எண்ணங்களும், புதிய எழுச்சிகளும்-புதிய காரியங் களும் நிகழுகின்றன. நீங்களும் காலப்போக்கின் உயரியபலனை வீணாக்காது பகுத்தறிவை மேற்போட்டுக் கொண்டு ஜன சமுதாய நன்மையைத் தேடி பாடுபட முன் வாருங்கள். உங்களுடைய முயற்சிக்கு எல்லாம் வெற்றியே உண்டு. வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்களும் கூட, தங்களுடைய போக்கை மாற்றிக் கொண்டு முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்று சொல்லி வருகிறார்கள். ஆகவே தோழர்களே! நீங்கள் தன்னம்பிக்கை கொண்டு-மக்களின் விடுதலைக்குச் சரியான வழிகளில் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு போராட வாருங்கள்.


'குடிஅரசு' - கட்டுரை - 10.01.1948

2.4.19

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தந்தை பெரியார்
பஞ்சமர் - பெயர்ச்சொல்!
அருகிவரும் வழக்கு: நான்கு வகையாகப் பிரிக்கப்பட்ட (இந்துக்களில்) பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோர் அல்லாத அய்ந்தாவது ஜாதியினர்.
சூத்திரர்கள் தாழ்ந்தவர்களா? பஞ்சமர்கள் தாழ்ந்த வர்களா?
தீண்டாமை என்பது என்ன? தீண்டாமை காங்கிரஸில் ஒரு திட்டமாய் வருவானேன்? என இவ்விரண்டு விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும்.
தேசத்தில் நமது இந்து மதத்தில் மாத்திரம்தான் தீண்டாமை அனுஷ்டிப்பதாக நாம் காண்கிறோம். மனிதனுக்கு மனிதன் பார்ப்பது, பேசுவது, பக்கத்தில் வருவது, தொடுவது முதலானவைகள் தீண்டாமையின் தத்துவங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு ஆதாரம் என்னவென்றால் வேதமென்று சொல்லுவதும், சிலர் சாஸ்திரம் என்று சொல்லுவதும், சிலர் ஸ்மிருதி என்று சொல்லுவதும், சிலர் புராணங்கள் என்று சொல்லுவதும், சிலர் பழக்க வழக்கங்கள் என்று சொல்லுவதும் இப்படிப் பலவிதமாக ஆதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன.
பழக்கத்தில் தீண்டாமையானது வருணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும், வரிசைக்கிரமத்தில் ஒருவருக் கொருவர் தாழ்ந்தவரென்றும், வருணாசிரமமானது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என அய்ந்து வகை ஜாதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றன வென்றும், இவற்றிற்கு ஆதாரம் மனு ஸ்மிருதி என்றும் சொல்லப்படுகின்றது. தமிழர்களாகிய நமக்கு இவை எதுவும் சார்ந்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில் வருணாச்சிரமம் என்பதும், ஜாதி என்பதும், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும் மனுதர்ம சாஸ்திரமே, மனுஸ்மிருதியே என்பதும் ஆகிய வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளல்ல. தமிழ் நாட்டி னருக்கோ, தமிழருக்கோ இவ்வன்னியபாஷைப் பெயர்கள் பொருந்துவதற்கே நியாயமில்லை. தவிர இந்த ஜாதிகளுக்கே ஏற்பட்டிருக்கிற குணமும் தமிழர்க்குப் பொருந்தியது என்று சொல்லுவதற்கும் இடமில்லை. உதாரணமாக, நம்மில் பெரும்பான்மையோர் சூத்திரர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். நாமும் நம்மை அனேகமாய் சூத்திரர்கள் என்றே சொல்லிக் கொள்ளுகிறோமென்பதை பற்றி இப்பெழுது ஆராயத் தேவையில்லை.
சூத்திரர் என்பது என்ன ? நாம் சூத்திரர்களா என்பதைக் கவனிப்போம். சூத்திரன் என்றால் மனுஸ்மிருதியில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமை, யுத்தத்தில் ஜெயித்து அடிமையாக்கப்பட்டவன், அடிமைத் தொழிலுக்காக ஒருவனால் மற்றொருவனுக்குக் கொடுக்கப்பட்டவன், வைப்பாட்டியின் மகன் முதலிய ஏழுவித மக்களுக்கு சூத்திரர்கள் என மனுதர்ம சாஸ்திரத்தில் பெயரிடப்பட்டி ருக்கிறது. அப்பெயரை நாம் ஏற்றுக்கொண்டு நம்மை நாமே சூத்திரர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறோம்.
அடுத்தாற்போல் பஞ்சமர்கள் எனச் சொல்லப்படுவது யாரை என்பதே நமக்குச் சரியாய் ஆதாரத்தின் மூலமாய் தெரிந்து கொள்ளக்கூட முடியவில்லை. வழக்கில் சக்கிலி, பறையன், வண்ணான், நாவிதன், பள்ளன், குடும்பன், சாம்பன், வள்ளுவன் சிற்சில இடங்களில் தீயர், ஈழவர், நாடாரையுமே சேர்த்து மேலே சொல்லப்பட்ட பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர ஆகிய நான்கு வருணத்தாரும் மேற்கண்ட முறைப்படி கொடுமையாக நடத்தப்படுவதைப் பார்க்கிறோம். இவர்களையே பஞ்சமர்கள் என்று சொல்லுவதையும் கேட்கிறோம். அனேகமாய், நாம் கூட அவர்களை அதே மாதிரியாக நடத்துகிறோம். அப்படி நடத்தினபோதிலும் சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம் தாழ்ந்தவர்களா ? பஞ்சமர் என்று சொல்லப்படுகின்ற அவர்கள் தாழ்ந்தவர்களா? என்பதை யோசித்துப் பார்த்தால் பஞ்சமர்களைவிட சூத்திரர்களே தாழ்ந்தவர்கள் என்பது தெரியவரும். மேலே கூறப்பட்டபடி சூத்திரர் என்பதற்கு ஆதாரப்படி தாசிமகன் என்பதுதான் பொருள். தத்துவமாய்ப் பார்த்தால் பறையன், சக்கிலியை விட தாசிமகன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது தாத்பரியம். என்னை ஒருவன் சூத்திரன் என்று அழைப்பதைப் பார்க்கிலும் பஞ்சமன் என்று அழைப்பதில்தான் நான் சந்தோஷப்படுவேன்.
இவ்விதக் கெடுதியான பெயர் நமக்கு இருப்பதைப் பற்றி நாம் கொஞ்சமும் கவனியாமல் நிரபராதிகளாய் இருக்கும் நமது சகோதரர்களைக் காண, அருகில் வர, தொட, பேச, பார்க்கமுடியாதபடி கொடுமையாய் நடத்தி ஊருக்கு வெளியில் குடியிருக்கும்படியும், ஸ்நானம் செய்வதற்கே, வேஷ்டி துவைத்துக் கொள்ளுவதற்கே, வீதியில் நடப்பதற்கே, சில இடங்களில் தாகத்திற்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படும்படி நடத்துகிறோம். மேற்கண்ட கொடுமையான குணங்கள் அவர்களோடு மாத்திரம் நில்லாமல் அனேக சமயங்களில் நாமும் நமக்கு மேல் வருணத்தார் என்று சொல்லுகின்றவர்களும்கூட அனுபவிப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக, சூத்திரர்களை அதற்கு மேல்பட்ட மூன்று வருணத்தார்களும் தொடுவதில்லை என்பதையும், இவர்கள் முன்னிலையில் அவர்கள் ஆகாரம் எடுத்துக்கொள்வதில்லை என்பதையும், சிற்சில சமயங்களில் இவர்களேடு பேசுவதும் பாவம் என்பதையும் அனுபவிக்கிறோம். அதே மாதிரி வைசியர் களிடத்திலும் சத்திரியர்கள், பிராமணர்கள் நடந்து கொள்ளுவதையும், சத்திரியர்களிடத்திலும் பிராமணர் நடந்து கொள்ளுவதையும், பிராமணர்களுக்குள்ளேயும் ஒருவருக்கொருவர் தாழ்மையாக நடத்தப்படுவதையும் பார்க்கிறோம். உதாரணமாக, திருச்செந்தூர், மலையாளம் முதலிய இடங்களில் உள்ள பிராமணர்கள் தாங்கள் உயர்ந்தவர்களென்றும், மற்ற பிராமணர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கருதி, தங்களுக்கு அனுமதியுள்ள இடத்தில் மற்றொருவர் பிரவேசிப்பது தோஷமெனக் கருதுகிறார்கள்.
நம் நாட்டிலேயும் முறைப்படி நடக்கிற பிராமணர்கள் என்று சொல்லுவோர்கள் சத்திரியனிடத்திலேயோ, வைசியனிடத்திலேயோ, சூத்திரனிடத்திலேயோ பேசுகின்ற காலத்தில், ஜலமலபாதிக்குப் பேகும்போது எப்படி பூணுலைக் காதில் சுற்றிக்கெண்டு போகிறார்களோ அதுபோல பெரிய தீட்டென நினைத்துப் பூணூலைக் காதில் சுற்றிக்கொண்டு பேசுகிறார்கள். இப்படி நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை அல்ல. ஒருவர் தனக்குக்கீழ் இருப்பவரைத் தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்லுவதும், அதே நபர் தனக்குமேல் உள்ளவருக்கு தான் தீண்டாதவராகவும், பார்க்கக்கூடாதவராகவும் இருப்பது வழக்கமாயிருப்பது மாத்திரம் அல்லாமல், இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற ஜாதியாயிருக்கிற அய்ரோப்பியருக்குத் தீண்டாதவராகவும், இன்னும் தாழ்மையாகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம். இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது கேவலம். பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்ற வேண்டுமென்பதல்லாமல், அவர் களுக்கு இருக்கும் கொடுமைகளை மாத்திரம் விலக்க வேண்டுமென்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் இழிவையும், கொடுமையையும் நீக்கவேண்டும் என்பதுதான் தீண்டாமையின் தத்துவம்.
இதைச் சொல்லுகிறபோது ஆ! தீண்டாமை விலக்கா? பஞ்சமரையா தெருவில் விடுவது? அவர்களையா தொடுவது? அவர்களையா பார்ப்பதென்று ஆச்சரியப்பட்டு விடுகிறார்கள். நம்மில் ஒரு கூட்டத்தாராகிய சூத்திரர் என்று சொல்லிக்கொள்ளும் நாம், நம்மில் ஒருவன் சூத்திரன் என்று அழைக்கும் போது ஆ ! நம்மையா, சர் பட்டம் பெற்ற நம்மையா, ஜாமீன்தாராகிய நம்மையா, லட்சாதிகாரியாகிய நம்மையா, சத்திரம் சாவடி கட்டிய நம்மையா, தூய வேளாள னாகிய நம்மையா, பரிசுத்தனாகிய நம்மையா, உத்தமனான நம்மையா, மடாதிபதியான நம்மையா இன்னும் எத் தனையோ உயர்குணங்களும், எவ்வித இழிவுமற்ற நம்மையா தேவடியாள் மகன், வைப்பாட்டி மகன், அடிமையென்று அர்த்தம் கொண்ட சூத்திரன் என்று சொல்லுவதென ஒருவரும் வெட்கப்படுவதேயில்லை. மலையாளம் போன்ற சிற்சில இடங்களில் நாயர்கள் என்று சொல்லுவோர் தங்களைச் சூத்திரர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றனர்.
இந்த இழிவு, சூத்திரர்கள் என்பவரை எப்படிக் கட்டிக் கொண்டது என்பதைப் பார்ப்போமாகில் தங்களுக்குக் கீழ் ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களைத் தாழ்மைப்படுத்திய பாவமானது இவர்களைத் தேவடியாள் மகன் என்று இன்னொருவர் கூப்பிடும்படியாகக் கடவுள் வைத்துவிட்டார். நமக்கும் அதன் பலனாய் நமக்குக் கீழ் ஒருவர் இருந்தால் போதுமென்று நினைத்து மகிழ்ந்து கொண்டு நம்மை ஒருவன் வைப்பாட்டி மகனெனக் கூப்பிடுகிறானே, கூப்பிடுவது மாத்திரம் நில்லாது கல்லும் காவேரியும் உள்ளவரை அழியாமல் எழுதி வைத்து விட் டானே, அஃதோடு நில்லாமல் நம்மை நாமே வைப்பாட்டி மகனென்று சொல்லிக் கொள்ளும் நிலைமைக்கு வந்துவிட்டதே என்றுகூட கவலைப்படுவதேயில்லை. இது எதைப் போலிருக்கிற தென்றால் அரசியல் வாழ்வில் இந்துக்களுக்கு இந்துக்கள் என்று சொல்லுவதற்கில்லாமல் நம்முடைய அரசாங்கத்தார் முகமதியரல்லாதார் என்று அழைப்பது போலவும், நாமும் இந்துக்களாகவும், இந்தியாவின் புராதனக்காரராகவும் இருக்கிற நம்மை அல்லாதார் என்கிற அணியைக் கூட்டி மகமதியர் அல்லாதார் என்று ஏன் அழைக்க வேண்டும் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எப்படியானாலும் உத்தியோகமோ, பதவியோ கிடைத்தால் போதுமென்கிற இழிவான ஆசையில் பட்டு மகமதியரல்லாதார் பிரிவுக்கு யான் சட்டசபை அங்கத்தினனாய் நிற்கிறேன் என்று கவுரவமாய் நம்முடைய படித்தவர்கள், பெரியோர்கள், பணக்காரர்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியார்கள் என்று சொல்லக்கூடிய கூட்டத்தார் நடந்து கொள்வதுபோல் இருக்கிறது.
ஆகவே, நம்மில் யாரும் நமக்கு இவ்வித இழிவுப் பெயர்கள் இருப்பதை லட்சியம் செய்யாமல் சுயநலமே பிரதானமாகக் கருதி அலட்சியமாயிருக்கிறோம். யாராவது இவற்றைக் கவனித்து இவ்விதக் கொடுமையும், இழிவும் நமக்கு ஒழிய வேண்டுமென்று முயற்சித்தால் அது சுயநலக்காரரால் துவேஷமென்று சொல்லப்பட்டுவிடுகிறது.
பறையன், சக்கிலி முதலியோரை நாம் ஏன் தொடக்கூடாது, பார்க்கக்கூடாது என்கிறோம் என்பதைச் சற்று கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமாயிருக் கிறான்; அழுக்குடை தரிக்கிறான்; அவன்மீது துர்நாற்றம் வீசுகிறது; அவன் ஆகாரத்திற்கு மாட்டு மாமிசம் சாப் பிடுகிறான்; மாடு அறுக்கிறான்; மற்றும் சிலர் கள் உற்பத்தி செய்கிறார்கள் என்கிறதான குற்றங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இவர்கள் பார்வைக்கு அசிங்க மாகவும், அழுக்கான துணிகளுடனும், துர்வாடையுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும், இதற்கு யார் பொறுப்பாளி என்றும் யோசியுங்கள். அவர்களை நாம் தாகத்திற்கோ, தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது குளிக்கவோ, வேஷ்டி துவைக்கவோ வழியெங்கே? நாம் உபயோகிக்கும் குளமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ, கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய் கிறோம். அதனால் அவர்கள் அப்படியிருக்கிறார் களேயல்லாமல் அது அவர்கள் பிறவிக்குணமாகுமா ? நம்மை யாராவது குளிக்க விடாமலும், வேஷ்டி துவைக்க விடாமலும் செய்துவிட்டால் நம்மீது துர்நாற்றம் வீசாதா? நம் துணி அழுக்காகாதா? நாம் பார்வைக்கு அசிங்கமாய் காணப்பட மாட்டோமா? அவர்களுக்குக் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நாம் சவுகரியம் செய்து கொடுத்து விட்டால் பின்னும் இவ்விதக் குற்றமிருக்குமா? ஆதலால் நாம்தான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாயிருக் கிறோம்.
மாடு தின்பது முதலியவைகளால் எப்படித் தீண்டாத வனாய் விடுவான்? அய்ரோப்பியர், மகமதியர் முதலானோர் தின்பதில்லையா? அவர்களை நாம் தீண்டாதார், பார்க் காதார் என்று சொல்லக்கூடுமா? அப்படியே சொல்வ தானாலும் மாடு தின்பது என்ன ஆடு, கோழி தின்பதை விட அவ்வளவு பாவம்? ஆடு, கோழி, பன்றி தின்பவர்களை நாம் பஞ்சமரைப்போல் நினைப்பதில்லை. கோழியும், பன்றியும் தின்னாத வஸ்துவையா மாடு தின்கிறது? செத்த மாட்டைத் தின்பது உயிருள்ள ஜெந்துவை உயிருடன் வதைத்து கொலை செய்து சாப்பிடுவதை விட உயிரற்ற செத்துப்போன பிராணியின் மாமிசத்தை  - மண்ணில் புதைப்பதை வயிற்றுக்கில்லாத கொடுமையால் சாப்பிடுவது எப்படி அதிக பாவமாகும்? மாடு அறுப்பது பாவமென்றால் ஆடு, கோழி அறுப்பதும் பாவம்தான். மனித பிணத்தையும் கூட வைத்திய சாலைகளில் அறுக்கிறார்கள். அவரை நாம் பஞ்சமரென்று சொல்லுகிறோமா?
கள் இறக்குவது குற்றமென்றும், அது பாவமென்றும் அதனால் அவர்களைத் தொடக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்றும் சொல்வது எவ்வளவு முட்டாள்தனமாகும். அந்தக் கள்ளைக் குடிப்பவனும், அதற்காக மரம் விடுபவனும், அந்த வியாபாரம் செய்பவனும், அதைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவனும் தொடக்கூடியவன், தெருவில் நடமாடக்கூடியவன் என்றால் அதை ஜீவனத்தின் காரணமாய் இறக்குவது மாத்திரம் எப்படிக் குற்றமாகும்? உற்பத்தி செய்வது குற்றமென்றால் சாராயம், கஞ்சா, அபின், பிராந்தி இவைகள் உற்பத்தி செய்கிறவர்கள் எப்படித் தொடக் கூடியவர்களாவார்கள் ? இதில் பணம் சம்பாதிக்கும் நமது அரசாங்கத்தை இன்னும் சம்பாதிக்க விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உத்தியோகத்திற்கு நாம் தொங்குகிறேம். இந்தப் பணத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கல்வியை நாம் கற்கிறோம்; இவ்வளவு செய்பவர்கள் யோக் கியர்கள்; தீண்டக் கூடியவர்கள்; பார்க்கக் கூடியவர்கள். ஆனால் மேல் சொன்னவர்கள் மாத்திரம் தீண்டவும், பார்க்கவும் கூடாதவர்கள் என்றால் இது என்ன கொடுமை? இந்த ஜனங்களுக்கு சுயராஜ்யம் எப்படி வரும்? கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால் இப்படி கொடுமைப் படுத்தும் சமூகத்தை ஆதரிப்பாரா? இவர்களுக்கு விடு தலையை அளிப்பாரா? அல்லது இவர்களை அடியுடன் தொலைத்து அடிமைப்படுத்துவாரா? என்பதை நினையுங்கள்.
இந்தக் கொடுமையை நம்மிடம் வைத்துக்கெண்டு வெள்ளையர் கொடுமை என்றும், கென்யா, தென்னாப் பிரிக்காவில் வெள்ளையர் ஜாதி இறுமாப்பென்றும் நாம் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமும், பார்ப்பவர்க்குக் கேலியுமாகும் என்பதைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டில் பிறந்த நம் சகோதரரை நாம் பார்த்தால் பாவம், கிட்டவந்தால் பாவம், தொட்டால் பாவம் என்று சொல்லிக்கொண்டு அதற்கு ஆதாரம் காட்டவும், எழுதி வைத்துக் கொண்டி ருக்கும் அக்கிரமத்தை விடவா 1818 - வது வருஷத்து ஆக்ட்டும், ரௌலட் ஆக்ட்டும், ஆள்தூக்கிச் சட்டமும் 144, 107, 108 பிரிவுப் பிரயோகமும் அக்கிரமமானது என்பதைச் சற்று யோசியுங்கள். நம்மவரை நாமே செய்யும் கொடுமையைவிடவா அன்னியர் கொடுமை பெரிது? மதுரைக் கோவிலில் குடிகாரன், மாமிசம் சாப்பிடுகிறவன், குஷ்டரோகி முதலிய தொத்து வியாதியஸ்தர் முதலியவர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். அன்னிய மதஸ்தர்கள் சுற்றுப்பிரகாரம் கடந்து செல்லலாம். ஆனால் நமது சகோ தரர்களான நாடார்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களும், தர்மிஷ்டர்களும், ஜீவகாருண்யமுடையவர்களும், படித்த வர்களுமாயிருந்தாலும் வாசப்படி மிதிக்கக்கூடாது, மிதித்தால் தெய்வத்தின் சக்தி குறைந்துபோகுமாம். இதற்கு ஆதாரமும் இருக்கிறதென்றால், ரவுலட் சட்டத்திற்கும், ஆள்தூக்கிச் சட்டத்திற்கும் உள்ள ஆதாரங்களை நாம் குற்றம் சொல்வானேன்? இவ்விதம் கொடுமைகள் செய்யும் ஜனசமூகத்திற்கு சத்தியம், தர்மம் என்று பேசிக்கொள்ள யோக்கியதை ஏது? உண்மையில் ஆதாரம் என்று சொல்லக்கூடிய மாதிரியாவது நாம் நடக்கிறோமா? தந்தை பெரியார் அவர்கள் காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து...


குடிஅரசு - 7.6.1925, 21.6.1925, 28.6.1925 நூல்:- பெரியார் களஞ்சியம், குடிஅரசு தொகுதி -1
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தந்தை பெரியார்
எங்களைப் பார்ப்பனத் துவேஷிகள் (வெறுப்பாளர்கள்) என்று சொல்கிறார்கள், "எவனோ பண்ணினான்; பார்ப் பானை ஏன் திட்ட வேண்டும்?" என்ற சிலர் கேட்கிறார்கள். எவனோ பண்ணினால் இவன் ஏன் பூணூல் போட்டுக் கொள்கிறான்? ஏன் தன்னைப் பிராமணன் என்று  சொல்லிக் கொள்கிறான்? ஏன் உச்சிக்குடுமி வைத்துக் கொள்கிறான்? ஏன் அக்கிரகாரத்தில் தனியாக வாழ்கிறான்? அவனுடைய  பெண்டாட்டி மட்டும் ஏன் தனியான வகையில் புடைவை கட்டிக் கொள்ளவேண்டும்? இந்த மாதிரியெல்லாம் ஏன் அவன் தன்னைத் தனியாகப் பிரித்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள வேண்டும்? 'யாரோ பண்ணியதற்குப் பார்ப்பானை ஏன் குறை சொல்ல வேண்டும்?' என்று சட்ட சபையில் சிலர் பேசுகிறார்கள். எவனோ பண்ணியிருந்தால் இந்தப் பார்ப்பான் ஏன் அவனைப் பின்பற்ற வேண்டும்? அவன் சொன்னபடி ஏன் நடக்க வேண்டும்? இவன் தானே நம்மைச் சூத்திரன் என்று சொல்கிறான்?
எவனோ உழைக்க இவன் அள்ளிக் கொட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான் சமுதாய அமைப்பு, சாஸ்திரம், புராணம், சட்டம் என்றால், நாம் எப்படிச் சும்மா இருக்க முடியும்? இந்த நிலைமையை மாற்றத்தானே நாம் பாடுபடுகிறோம். மற்றப்படி எனக்கு எந்தத் தனிப்பட்ட பார்ப்பனர் மீதும் விரோதம் (பகைமை) கிடையாது.
சாதிக்கு ஆதாரமாக என்னென்ன இருக்கின்றனவோ அவையெல்லாம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும். அவற்றி லெல்லாம் கைவைக்கக்கூடாது. என்றால் எப்படி ஒழியும்? கெட்ட துஷ்ட ஜந்துக்கள் ஒரு இடத்தில் இருந்தால் அவைகளை ஒவ்வொன்றாகச் சுட்டுக் கொண்டிருந்தால் ஆகுமா? துஷ்ட ஜந்துக்கள் இருக்க எவை காரணமாக இருக்கின்றனவோ அந்தக் கல், மண், முள், காடு எல்லா வற்றையும் நெருப்பு வைத்து ஒழித்து சமமாக்கினால்தானே அங்கிருக்கும் தேள், பாம்பு, கரடி, புலி எல்லாம் ஒழியும்? அந்த மாதிரிதானே சாதிக்கு ஆதாரமாக யார் யார் இருக் கிறார்களோ, என்னென்ன இருக்கின்றனவோ அவைகள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.
'மதத்தில் பிரவேசிக்கமாட்டோம்; சாதி முறையைப் பழக்க வழக்கங்களைக் காப்பாற்றுவோம்; இவை தனிப்பட்ட உரிமைகள்; இந்த உரிமைகள் பாதுகாக்கப்படும்' என்று அழுத்தமாகச் சட்டம் செய்து வைத்துக் கொண்டார்கள்.
கடவுள் சாதியை உண்டாக்கினார் என்றால் கடவுளை உடை, கொளுத்து என்று சொல்லிப் பிள்ளையாரை உடைத்தோம்! இராமனைக் கொளுத்தினோம்.
சட்டத்தில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது. அந்தப் பாதுகாப்பு நீக்கப்பட வேண்டும்.
இல்லையென்றால் அதற்கான விளக்கமோ சாதிக்குப் பாதுகாப்பான பகுதிகளை நீக்குவதற்கு உறுதிமொழியோ அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும். இல்லையென்றால் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவோம். என்று 3ஆம் தேதி  (1957 - நவம்பர்) கூடிய தஞ்சாவூர் மாநாட்டில் தீர் மானம் போட்டு 15 நாள் வாய்தா (காலக்கெடு) கொடுத்தோம்.
இன்றோடு அந்த வாய்தா தீர்ந்து போய்விட்டது. நாம் கொடுத்த 15 நாள்களில் என்ன செய்தார்கள் தெரியுமா? சாதியைக் காப்பாற்ற பாதுகாப்பு செய்து கொண்டார்கள்!
இந்தச் சட்டம் சாதியைக் காப்பாற்றுகிறது; ஆகவே இதை நெருப்பு வைத்துக் கொளுத்தப் போகிறோம் என்று சொல்கிறோம்; இல்லை நெருப்பு வைக்கக்கூடாது  என்றால் அந்த மாதிரி சாதிக்குப் பாதுகாப்பு சட்டத்தில் இல்லை என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; அல்லது இருந் தால் சட்டத்தைத் திருத்துகிறேன் என்று சொல்ல வேண்டும்.
நீ சாதியைக் காப்பாற்றித்தான் தீருவேன் என்கிறாய். சாதியைக் காப்பாற்றும் சட்டத்தைக் கொளுத்துபவர்களுக்கும்
3 ஆண்டு சிறை என்று சட்டம் கொண்டு வந்து விட்டாய்; இந்தச் சட்டத்திற்குப் பயந்து கொண்டு கொளுத்தா விட் டால் நாளைக்கு நம்மைச் சூத்திரன் என்றே கூப்பிடுவான்!
சட்டத்தில் ஏதாவது குறையிருந்தால் அதனை முறைப்படி திருத்தலாம் என்று மந்திரி சொல்கிறார். அரச மைப்புச் சட்டத்தை வகுத்த பார்ப்பனர்கள், நம்முடைய மக்கள் என்றென்றைக்கும் அடிமையாய் இருப்பதற்கான சட்டம் வகுத்துக் கொண்டார்கள் அதை எளிதில் மாற்ற முடியாதபடி பாதுகாத்துக் கொண்டிருக் கிறார்கள். ஆகவே தான் கொளுத்துகிறோம். கொளுத்துவது அவசியமில்லை என்று சொன்னால் சட்டம் இந்த வகையில் செய்ய முடியுமென்று சொல்லட்டுமே?
இப்போது சாதியைக் காப்பாற்ற சட்டம் எழுதிவைத்துக் கொண்டுள்ளான். இன்னும் கொஞ்ச நாள் போனால் - நாங்கள் ஒழிந்தால் அவனவன் சாதி முறைப்படி வாழ வேண்டுமென்று கொண்டு வந்து விடுவான்!
நம் கண்முன்னாலேயே ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்தாரே? பாதி நேரம் குலத்தொழில் படிக்காத பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்காதே என்று உத்தரவு போட்டாரே? இது ஒரு வருடம் நடந்ததே! இத் தனைக்கும் அன்று எதிர்க்கட்சி மெஜாரிட்டி. (பெரும் பான்மை) ஒன்றும் அசைக்க முடியவில்லையே! கத்தியை எடு என்று சொன்னவுடன் ஓடினார். பிறகு காமராசர் வந்தார் குலக்கல்வித்திட்டத்தை எடுத்தார்.
நாளையதினம் காமராசர் ஒழிந்து இந்த நிலைமை திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அந்த மாதிரியான சட்டமும், அமைப்பும், வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் நாம் உயிருக்குப் பயந்து கொண்டுதானே வாழவேண்டியிருக்கிறது? இன் னமும் புதிது புதிதாக அதிகாரங்களையெல்லாம் அவன் (பார்ப்பான்) அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறான். இந்த நிலைமையில் நாம் சும்மா இருந்தால் எல்லாவற்றையும் நாம் ஒப்புக் கொண்டுள்ளோம் என்று அவன் மேலும் மேலும் நம்மை அழுத்துகிறான்!
சட்டத்தைக் கொளுத்துகிறோம் என்று சொன்னால் மேலே இருப்பவர்கள் கவனிக்க வேண்டும். ஏன் இவ்வாறு இவன் சொல்கிறான்? ஏன் இப்படிச் செய்கிறான் என்பதைக் கவனிக்க வேண்டும்; சும்மா பிடித்து அடை என்றால் அடைத்து விடுகிறார்கள். அதனால் எரிந்து கரியாகிய சட்டம் எரியாததாக ஆகிவிடுமா?
1957 - நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சாவூரிலே மாநாடு நடைபெற்றது உங்களுக்கெல்லாம் தெரியும். 6 ஆம் தேதி என்னைப் பிடித்து திருச்சி, குளித்தலை, பசுபதி பாளையம் ஆகிய மூன்று ஊர்களில் பேசிய பேச்சுக்களை வைத்து என்மீது கேசு (வழக்கு) போட்டிருக்கிறார்கள்.
சட்டசபையில் மந்திரியே சொல்லியிருக்கிறார் "ராமசாமி சொல்வது எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டே இருக்கின்றன" என்று; "இல்லை இல்லை, கொல்லு! குத்து! என்று பேசி யிருக்கிறார்" என்று பத்திரிகைக்காரர்கள் எல்லாம் கூப்பாடு போட்டார்கள்; "அப்படியானால் அவர் பேசியபேச்சுக்களை எழுதிய ரிப்போர்ட் களைக் கொண்டு வாருங்கள்" என்று பத்திரிகைக் காரர்களை மந்திரி கேட்டார்; இந்தப் பத்திரிகைக்காரர்கள் ஒருவரும் போகவில்லை.
நம் கண்முன்னாலேயே ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்தாரே? பாதி நேரம் குலத்தொழில் படிக்காத பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்காதே என்று உத்தரவு போட்டாரே? இது ஒரு வருடம் நடந்ததே! இத்தனைக்கும் அன்று எதிர்க்கட்சி மெஜாரிட்டி. (பெரும்பான்மை) ஒன்றும் அசைக்க முடியவில்லையே! கத்தியை எடு என்று சொன்னவுடன் ஓடினார். பிறகு காமராசர் வந்தார் குலக்கல்வித்திட்டத்தை எடுத்தார். நாளையதினம் காமராசர் ஒழிந்து இந்த நிலைமை திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அந்த மாதிரியான சட்டமும், அமைப்பும், வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் நாம் உயிருக்குப் பயந்து கொண்டுதானே வாழவேண்டியிருக்கிறது? இன்னமும் புதிது புதிதாக அதிகாரங்களையெல்லாம் அவன் (பார்ப்பான்) அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறான். இந்த நிலைமையில் நாம் சும்மா இருந்தால் எல்லாவற்றையும் நாம் ஒப்புக் கொண்டுள்ளோம் என்று அவன் மேலும் மேலும் நம்மை அழுத்துகிறான்!
சட்டசபையில் மந்திரி சொல்கிறார் நம்முடைய நடவடிக்கைகள் சட்டத்துக்கு உட்பட்டே இருக்கின்றன என்று; இதை இந்தியா முழுவதிலும் உள்ள பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
பிறகு இந்தப் பார்ப்பனர்கள் மேலிடத்தில் போய் ரகளை (கலகம்) செய்திருக்கின்றனர்; அதன் பின்னர் மேலிடத்தி லிருந்து உத்தரவு வந்திருக்கிறது!  மேலிடத்தாருக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதற்காக இப்போது கேசு (வழக்கு) எடுத்து இருக்கிறார்கள்; மேலிடத்து உத்தரவுக்காக நம்மீது நடவடிக்கை எடுப்பதனால் நமக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?
முன்பு கொடி கொளுத்துகிறேன் என்ற சமயத்தில் சட்டம் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் இப்போது சட்டம் செய்திருக்கிறார்கள். அவனுக்குத் தமிழ்நாடு சட்ட சபையிலே சட்டம் செய்திருக்கிறார்கள். அவனுக்கு நாடாளுமன்றத்திலே சட்டம் செய்ய வெட்கம்; உலக மெல்லாம் தெரிந்துபோகுமே. தமிழ்நாட்டில் காந்தி  சிலையை உடைக்கிறார்கள்; அரசமைப்புச் சட்டத்தைக்  கொடியைக் கொளுத்துகிறார்கள். அரசமைப்புச் சட்டத்தை எரிக்கிறார்கள் என்பது.
சட்டசபையிலே, என்மீது நடவடிக்கை எடுக்க சட்டமில்லை என்று சொன்ன விஷயத்திற்கே இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்; எது எப்படியிருப்பினும் கோர்ட்டில் (நீதிமன்றத்தில்) இருக்கும் வழக்கைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. அதற்காக வேறு நடவடிக்கை வந்துவிடுமே என்பதற்காக அல்ல; மனப்பூர்த்தியாகவே சொல்கிறேன்.
இந்த அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும், மதத்திற்கும் அவனவனுக்குண்டான பழக்க வழக்கங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மத சுதந்திரம் கொடுத்திருக்கின்றான். மாகாண அரசாங்கமே இதில் பிரவேசிக்க முடியாது. இந்து மதம் உள்ளவரையில் நாங்கள் சூத்திரர்கள்தான் - அடிமைகள்தான்; ஆகவே இந்த உரிமை கொடுத்துள்ள அரசமைப்புச் சட்டம் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.
இந்த நிலைமைக்கு வந்ததற்கே காரணம் ஒரு ஓட்டலில் "பிராமணாள்" என்று போட்டுள்ள போர்டை (பெயர்ப் பலகையை) எடுக்க மறுத்தான். அந்த ஓட்டல் (உணவகம்) முன்மறியல் செய்து 800 பேர்வரை சிறைக்குச் சென்றி ருக்கின்றனர். நம்முடைய சர்க்கார் (அரசு) ஏதும் செய்ய முடியாமல் விழிக்கிறார்கள். மேலே சொல்லிச் செய்யக் கூடாதா என்றால் அவனுக்கு மத சுதந்திரம் கொடுத் துள்ளோமே என்கிறான். ஏதோ ஓர் அளவுக்குச் செய்ய வேண்டும் என்றால் செய்யலாம். நாம் இங்கே மறியல் செய்கிறோம்; அங்கே கேரள ஆட்சியில் சாதிச்சொல் போடக்கூடாது என்று மிரட்டியிருக்கிறான்.
நாங்கள் தொடர்ந்து மறியல் செய்து கொண்டிருக்கிறோம். மேலும் மேலும் தொடர்ந்து செய்து கொண்டிந்தால் அதனால் ஏதாவது பயன் ஏற்படும் என்றால் செய்து கொண்டிருக்கலாம். நிலைமை மாறவில்லை. ஆகவே அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தப் போகிறோம். இதில் வெற்றிபெறாவிட்டால் காந்தி சிலையை உடைக்கப் போகிறோம்.
26ஆம் தேதி கிளர்ச்சியில்
நீதிமன்றத்தில் கூற வேண்டியது
நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப் பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப் படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.
ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக்கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்த பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்துகொள்ள விரும்பவில்லை. நான் எதிர்வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன்.
பெரியார் அறிக்கை ('விடுதலை' 23-11-1957)
நேற்று சட்டசபையிலேயே கேட்டிருக்கிறார்கள் "ஜவகர் லால் நேரு, ராஜேந்திரபிரசாத் இவர்களுக்குக் கொடும்பாவி கட்டி இழுத்து, இவர்களுடைய சிலையை உடைத்தால் நீ என்ன செய்வாய்?" என்று; வேண்டுமானால் அதற்குச் சட்டம் செய்; சட்டத்தினாலேயே உயிர்வாழ்! மக்களுடைய அன்பினால், திருப்தியினால் நீ (அரசாங்கம்) உயிர்வாழப் போவதில்லை. சுதந்திரம் (விடுதலை) வந்துவிட்டது என்று நீ சொல்கிறாய்; இன்னமும் நாங்கள் சூத்திரர்கள் தான்; வடநாட்டானால் கொள்ளையடிக்கப் படத்தான்  இந்தச் சுதந்திரம் என்றால், நாங்கள்  சட்டத்தைக் கொளுத்திவிட்டு அதன் விளைவை அனுபவிக்கிறோம்; எத்தனை பேரைத் தண்டிக்க முடியும்? எவ்வளவு நாளைக்குத் தண்டிக்க முடியும்?
போலீஸ்காரனுக்கு அடங்கி நட, சட்டத்திற்கு அடங்கி நட, என்று நான் சொல்கிறேன். இப்படிச் சொல்கிற என்னுடைய பேச்சைக் கூட மதிக்கவில்லையானால் என்ன பொருள்? இல்லை நான் சொல்வது பொதுமக்கள் கருத்தா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நேற்று நடந்தது தஞ்சாவூரில் மாநாடு; அதில் 2 லட்ச மக்கள் திரண்டனர். அவர்களுடைய உணர்ச்சியை நீ பார்த்திருக்க வேண்டும். இல்லை பொதுஜன வோட்டு எடு; சாதி ஒழிய வேண்டுமா வேண்டாமா என்று. ஒன்று மில்லை வெறும் அடக்குமுறை தான் என்றால் என்ன அர்த்தம்?
அடக்கு முறைச் சட்டம் செய்த பிறகு நாம் சும்மா இருந்தால் வெளியில் தலை காட்டமுடியுமா? இந்த நிலை யில் குடும்பத்துக்கு ஒருவர் சிறைக்குப்போக நாம் துணிந்து விட வேண்டியதுதானே! மூன்று வருடமா அது மூன்று நிமிடம் என்றால்தானே நாம் மனிதர்!
ஆகவே சாதிக்குப் பாதுகாப்பான அரசமைப்புச் சட்டத்தை வருகிற 26ஆம் தேதியன்று நாம் ஆயிரக் கணக்கில் கொளுத்த வேண்டும். இரகசியமாயல்ல, பகிரங்க மாகக் கொளுத்தி விட்டுப் பெயர் கேட்டால் சந்தோசமாகக் கொடுங்கள்! கோர்ட்டுக்கு (நீதிமன்றத்துக்கு) அழைத்துக் கொண்டு போனால் செல்லுங்கள்!
"இந்தச் சட்டம் சாதியைக் காப்பாற்றும் சட்டம்; இந்தப் பார்ப்பனச் சதிச்சட்டத்தை லேசில் மாற்ற முடியாது. இதற்கு எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் அறிகுறியாக இதைக் கொளுத்தினோம்" என்று சொல்லுங்கள்
முக்கியமாக உள்ள கழகத்தோழர்கள் நூற்றுக் கணக்கில் சட்டப் புத்தகம் வாங்கி ஊரில் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்; மக்கள் எல்லோரும் இதைக் கொளுத்த வேண் டும். கொளுத்திய அந்தத் துண்டு காகிதங்களையும் சாம் பலையும் ஒரு கவரில் போட்டு புக்போஸ்டில் (நூல் அஞ்சலில்) மந்திரிக்கு அனுப்ப வேண்டும்.
தைரியமுள்ளவர்கள் உங்களுடைய பெயர், விலாசம் (முகவரி) எல்லாம் அதில் போட்டு அனுப்புங்கள்.
"எங்களுடைய பிள்ளை குட்டிகளாவது சூத்திரத் தன்மையிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும்; அதற்காக எந்த விலை கொடுக்கவும் நாங்கள் யார் என்பதை 26ஆம் தேதியன்று நிரூபித்துக் காட்டுங்கள்!


17-11-1957 கடலூர் மஞ்சை மைதானத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : ('விடுதலை'  22-11-1957)
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தந்தை பெரியார்
நமது சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, மதத்தின் பேராலும், அரசியலின் பேராலும் பாமர மக்களை ஏமாற்றி வயிறு பிழைத்து வந்த பலருக்குக் கஷ்டமாகி விட்டது. பாமர மக்கள் கொஞ்சம் கண்விழித்துப் பகுத்தறிவு பெற்றுவிட்டமையால் அவர்களைச் சுலபமாக ஏமாற்ற முடியாமல் போய்விட்டது. ஆகையால், இவ்வியக்கத்தின் மூலம் தங்கள் பிழைப்பிற்குப் பாதகம் உண்டான கூட் டத்தார் அனைவரும், நமது இயக்கத்தை மறைமுகமாகவும், சில சமயங்களிலும் வெளிப்படையாகவும் எதிர்த்து வருகின்றனர். இவர்கள் எவ்வளவு தான் எதிர்த்தாலும் இவ்வெதிர்ப்பினால் நமது இயக்கத்தின் ஒரு உரோமங்கூட அசைக்கப்படவில்லை என்பதை நாம் பல தடவைகளில் எடுத்துக் காட்டியிருக்கின்றோம். இதற்கு மாறாக இவ் வியக்கம் ஒவ்வொரு நாளும் தேச மக்களின் மனத்தைக் கவர்ந்து வேரூன்றி வருகிறதென்பதை நாம் எடுத்துக் கூறுவது மிகையேயாகும்.
மதத்திற்காக மிகவும் பரிந்து பேசி, நமது இயக்கத்தை எதிர்க்கும் கூட்டத்தார் யார்? அவர்கள் செய்கையென்ன? அவர்கள் நமது இயக்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பதன் நோக்கமென்ன என்னும் விஷயங்களைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இவ்வியக்கத்தின் பெருமையும் இதை எதிர்ப்பவர்களின் சிறுமையும் விளங்காமற் போகாது. ஆகையால் அவ்விஷயமாகக் கொஞ்சம் கூற விரும்பு கின்றோம்.
இன்று நமது இயக்கத்தைப் பற்றி, மறைமுகமாகவும், சில சமயங்களில் வெளிப் படையாகவும் எதிர்த்துப் பிரசாரம் பண்ணிக் கொண்டிருப்பவர்களில் முதன்மையாக இருப்பவர்கள் கீழ்க்காணும் கூட்டத்தினரே யாவார்கள் அவர்கள். அரசியல்வாதிகள், பண்டிதர்கள், புரோகிதர்கள், புத்தக வியாபாரிகள், புராண பத்திரிகைக்காரர்கள், கோயில் தருமகர்த்தாக்கள், மடத்தலைவர்கள் முதலியவர்கள்,
இவர்களில் முதலில் அரசியல்வாதிகளை எடுத்துக் கொள்ளுவோம். நமது இயக்கந் தோன்றிய நாள் முதல், நாம் அரசியல்வாதிகளின் புரட்டுக்களையும், சூழ்ச்சி களையும் வெட்ட வெளிச்சமாக்கி வருகிறோம் 'சுயராஜ்யம்' என்பதும், 'சத்தியாக்கிரகம்' என்பதும், ஆகிய வார்த்தை களெல்லாம் பாமர மக்களை ஏமாற்றி ஒட்டுப் பறிப்பதற்காகக் கூறும் தந்திர வார்த்தைகள் என்று கூறி வருகிறோம். மக்களுக்குள் உள்ள வித்தியாசங்கள் ஒழிவதற்கு முன், ஜாதியினாலும், மதத்தினாலும் மனிதனை மனிதன் அடிமையாகவும், மிருகங்கள் போலவும் நடத்துகின்ற நிலை மாறுவதற்குமுன் இந்நிலைமையை கொஞ்சங் கூட மாற்றுவதற்கு முயற்சியும் செய்யாமல் 'சுயராஜ்யத்'திற்கும் பாடுபடுகிறோம் என்று கூறுவது சுத்த அயோக் கியத்தனத்தைத்தவிர வேறல்ல என்றே கூறி வருகிறோம். ஆகையால், அரசியலை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டி ருக்கும் கூட்டத்தார் நமது இயக்கத்தை எதிர்ப்பதும் இதைப் பற்றித் தப்புப் பிரசாரம் பண்ணுவதும் இயல்பேயாகும். இவ்வாறு, செய்வதன் நோக்கம் அவர்களுடைய வயிற்றுப் பிழைப்பில் மண் விழுகிறது என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை அறியலாம்.
இரண்டாவது, பண்டிதக் கூட்டத்தார், ஏன் நமது இயக்கத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள் எதிர்க்கிறார்கள்? என்று பார்ப்போம். நாம் குறிப்பிடும் பண்டிதர்கள் என்ப வர்கள் புராணங்களையும் இராமாயண பாரதக் கதை களையும், வேதங்களையும், ஆகமங்களையும், ஸ்மிருதிகளை படித்துவிட்டு மூளை மழுங்கி, சொந்த மூளை அதாவது ஆராய்ச்சி அறிவு கொஞ்சங்கூட இல்லாமல், தாங்கள் படித்த புத்தகங்களில் சொல்லப் பட்டவைகள் தான் உண்மை. அவைகளின் படி நடப்பதுதான் ஒழுங்கு. அவை களை மீறி நடந்தாலோ அல்லது அவைகளை நம்பா விட் டாலோ, 'பாவம்' 'நரகம்' முதலியவைகள் சம்பவித்துவிடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களேயாவார்கள். இப்படிப் பட்டவர்கள் யாராயிருந்தாலும் அவர்களையெல்லாம் நாம் 'பண்டிதர்கள்' என்று குறிப்பிடுகின்றோம். இப்பண்டிதர்கள் எதிர்ப்பதற்குக் காரணம் அவர்களுடைய வயிற்றுப் பிழைப் பாகும். அவர்கள் புராணப் பிரசங்கம் செய்வதன் மூலமும், வருணாசிரம தருமப் பிரசங்கம் செய்வதன் மூலமும் ஜனங்களிடம் காசு பறித்து வந்தார்கள். சுயமரியாதை இயக்கப் பிரசாரத்தால் பொய்ப் புராணங்களுக்கும், அர்த்தமற்ற வருணாசிரம தர்மங்களுக்கும் ஆட்டங் கண்டு விட்டபடியால், இவைகளை வயிற்றுப் பிழைப்பாக வைத் துக் கொண்டிருந்த 'பண்டிதர்கள்' பிழைப்புக்கும், கவுரவத் திற்கும் ஆபத்து ஏற்பட்டுவிட்டது. ஆகையால் இக்கூட்டத் தார் இவ்வியக்கத்திற்கு விரோதமாக இருப்பது ஆச் சரியமல்ல.
இனி மூன்றாவதாக, புரோகிதர்களை எடுத்துக் கொள் வோம். புரோகிதர்கள் என்பவர்கள் மதத்தின் பெயரைச் சொல்லி, பல சடங்குகளைப் பாமர மக்களின் தலையிற் சுமத்தி, அவைகளின் மூலம் பொருள் பறித்து ஜீவனம் பண்ணும் சோம்பேறிக் கூட்டத்தாரேயாவார்கள், இக்கூட் டத்தாரின் கையிலேயே உலக மக்கள் பல்லாயிரக்கணக் கான ஆண்டுகளாகவும் சிக்கித் துன்புற்று அடிமையாகக் கிடந்து வந்தனர். ஒவ்வொரு நாட்டிலும் தோன்றிய சீர் திருத்தவாதிகள் எல்லோரும் முதலில் புரோகிதர்களின் ஏமாற்றல்களை ஒழிக்கவே முயன்றிருக்கின்றனர். இம் முயற்சி காரணமாகப் பல, தேசங்களில் புரோகிதர்களின் ஆதிக்கங்கள் அழிந்து விட்டன. ஆனால், நமது நாட்டில் மாத்திரம் இன்னும் புரோகித ஆதிக்கம். அழியவேயில்லை, நமது நாட்டில் இந்த புரோகித ஆதிக்கம் இந்து மதத்திலும், கிறிஸ்தவ மதத்திலும், முசுலீம் மார்க்கத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆகையால் நமது இயக்கம் ஆரம்ப முதலே புரோகிதத்தையும், புரோகிதர்களையும் பலமாகக் கண்டித்து அவர்களின் சூழ்ச்சிகளை வெளிப் படுத்தி வருகிறது. இதன் பயனாக, இந்துக்களில் அநேகர் இப்பொழுது புரோகிதத்தை ஒழித்தும் புரோகிதர்களைப் பகிஷ்கரித்தும் தங்கள் காரியங்களை நடத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். முசுலீம்களிலும் முல்லாக்களின் ஆதிக்கத்தையும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட 'பஞ்சா' வணக்கம், சமாதி வணக்கம் 'கூடு' எடுத்தல் முதலிய மார்க் கத்திற்கு விரோதமான காரியங்களையும் ஒழிக்க வேண்டும் என்று கிளர்ச்சி ஏற்பட்டு வருகின்றது. முற்றும் புரோகி தர்களின் ஆதிக்கத்திலேயே இருந்து வருகின்ற 'ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மத'த்திலும் பல இடங்களில் புரோகிதர்களைப் பகிஷ்கரிக்கும் வேலை ஆரம்பித்து விட்டது. இதனால், ரோமன் கத்தோலிக்கப் பாதிரிகள், அவர்கள் கூட்டங்களிலும், மாதா கோயில்களிலும், சுய மரியாதை இயக்கத்தைத் தாக்கிப் பேச ஆரம்பித்திருக் கிறார்கள். இவ்வாறு புரோகிதர்களின் சோம்பேறிப் பிழைப்புக்கு ஆபத்து ஏற்பட்ட காரணத் தினாலேயே அவர்கள் நமது இயக்கத்தை எதிர்த்துப் பேசப் புறப்பட்டிருக்கிறார்கள் என்பதில் அய்யமில்லை.
இனி நான்காவதாக, புத்தக வியாபாரிகளில் சிலர் நம்மை ஏன் எதிர்க்கிறார்கள்? என்று பார்ப்போம்; இவர்கள் புராணக்கதைகளாகிய, பெரியபுராணம், திருவிளையாடல் முதலியவைகளையும், தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம் முதலியபுத்தகங் களையும் அச்சிட்டு பாடப் புத்தகங்களாக எழுதி வெளியிட்டும் ஒரு ரூபாய் புத்தகத்தை அய்ந்து ரூபாய் விலை வைத்து விற்றும் பணம் சம்பாதிக் கின்றவர்கள். இந்தப் புராண புத்தக வியாபாரிகள் சைவத்தை வளர்ப்பதாகவும் வைணவத்தை வளர்ப்ப தாகவும், தமிழை வளர்ப்பதாகவும் கூறிப் பணம் சம்பாதித் திருப்பவர்கள். நமது இயக்கம் தோன்றியபின் இத்தகைய புத்தகங்களின் மதிப்பும் விற்பனையும் குறைந்து விட்டதால், இவர்கள் வியாபாரமும் குறைந்து விட்டது. ஆகையால் இந்தப் புராணப் புத்தக விளம்பர வியாபாரக் கூட்டத்தார் நம்மைப் பற்றி தப்புப் பிரசாரம் பண்ணுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
அடுத்தபடி அய்ந்தாவதாக, நம்மை எதிர்க்கும் பத்திரிகைக்காரர்கள் யார்? என்பதைப் பார்ப்போம். 'சமயபோதனை' 'சன்மார்க்க போதனை' நல்லொழுக்க போதனை என்னும் பெயர்களால் சைவ மதப் பிரசாரம் பண்ணும் பத்திராசிரியர்களும் வைணவமதப் பிரசாரம் பண்ணும் பத்திரிகாசிரியர்களும் கிறிஸ்தவ மதப் பிரசாரம் பண்ணும் பத்திராசிரியர்களும் இன்னும் தேசியப் பத்திரிகை என்று பெயர் வைத்துக் கொண்டு மருந்து வியாபாரிகளும் புராணப் புத்தக வியாபாரிகளும் செய்யும் 'கேட்லாக்' பத்திரிகைக்காரர்ளும் நம்மை எதிர்க்கிறார்கள். இவர்கள் எதிர்ப்பதற்குக் காரணம் அவர்களுடைய வயிற்றுப்பிழைப்பு போகிறதே என்பதைத் தவிர, வேறு என்னவா யிருக்க முடியும் என்றுதான் கேட்கிறோம்.
இனி, ஆறாவதாக, கோயில் தருமகர்த்தாக்கள் ஏன் நம்மை எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் அதன் உண் மையும் விளங்காமல் போகாது. நமது இயக்கப் பிரசாரம் காரணமாக வரவர கோயில்களுக்குப் போகும் ஜனங்களும் குறைந்து வருகிறார்கள். கோயில் உண்டிகளில் விழும் பணமும் குறைந்து வருகிறது. அன்றியும் நாம் கோயில்களின் சொத்துக்களையெல்லாம் பறிமுதல் செய்து அவைகளைக் கல்வி, கைத்தொழில், சுகாதாரம் முதலியவைகளுக்குச் செலவு செய்யவேண்டுமென்று கூறி வருகிறோம். இவ்வா றாகி விட்டால், பரம்பரை யாகக் கோயில்களுக்குத் தரும கர்த்தாக்களாக இருந்து கொண்டு அவைகளின் செல் வங்களை அனுபவித்து வரும் கூட்டத்தாரின் சுக வாழ்விற்கு ஆபத்து ஏற்பட்டு விடுமல்லவா? ஆகையால் தான் இக்கூட்டத்தார் நமது இயக்கத்திற்கு விரோதமாக இருந்து வருகின்றார்கள்.
இனி, அடுத்தபடி ஏழாவதாக, மடாதிபதிகள் நமது இயக்கத்தை எதிர்ப்பதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம். இந்தக்கூட்டத்தார், ஏராளமான சொத்துக் களை வைத்துக் கொண்டுஅவைகளை நாட்டு மக்களின் நன்மைக்காக ஒரு சிறிதும் பயன்படுத்தாமல் தங்கள் தங்கள் சுக வாழ்வுக்கே செலவு செய்து கொண்டு வருகிறார்கள். ஆனால் இவர்களுடைய சொத்துக்களோ தேச மக்களுடைய சொத்துக்கள் என்பதில் அய்ய மில்லை. அன்றியும் இவர்கள் "மடாதிபதிகள்" என்று பெயர் வைத்துக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதற்குக் காரணம் மதமேயாகும். ஆகை யினால் மதத்தையும் அழிக்க வேண்டும் மதத்தின் பேரால் வீணாகச் செலவழித்து வரும் மடாதிபதிகள் சொத்துக்கள் போன்றவைகளையெல் லாம் தேச நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறோம், இதனால் இந்த மடங்களின் கூட்டத்தார் நமது இயக்கத்திற்கு எதிராக இருந்து வருகின்றார்கள்.
இனி எட்டாவதாக, நாடகக்காரர்களை எடுத்துக் கொள்வோம். மற்ற நாடுகளில் உள்ள நாடகக்காரர்களோ, சிறந்த படிப்பாளிகளாகவும், தேசத்தைச் சீர்திருத்த வேண்டும் என்னும் எண்ணமுடையவர்களாகவும் இருந்து வருகிறார்கள், இதற்குத் தகுந்தபடி பாமர மக்களின் மனத்தில் பகுத்தறிவு உணர்ச்சியை ஊட்டத் தகுந்த சிறந்த நாடகங்களை நடத்தி வருகின்றவர்கள். ஆனால், நமது நாட்டு நாடகக்காரர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் வயிற்றுப் பிழைப்யே குறியாகக் கொண்டவர்களாதலால் இவர்கள் பாமர மக்களின் அறியாமையை இன்னும் வளர்க்கக் கூடிய மத சம்பந்தமான புராணங்களையே நாடகங்களாக நடத்தி வருகிறார்கள். நமது இயக்கம் பரவுவதன் காரணமாக, இந்தப் புராணப் பிழைப்பு நாடகக் காரர்களுக்கு வருவாயும் குறைய ஆரம்பித்து வருகிறது ஆதலால், இவர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்குச் "சீன்"களும், நாடகம் நடத்தும் போதெல்லாம் அதிகப் பணத்தைச் செலவு செய்து விளம்பரமும் செய்ய வேண் டியிருக்கிறது. அப்படியும் சரியானப்படி பணம் வசூல் ஆவதில்லை. ஆகையால், இவர்களும் இப்பொழுது நம்மை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும், அதிகமாக நமது இயக்கத்தை மறைமுகமாகத் தாக்கும் நாடகக்காரர்கள் பார்ப்பனர்களே என்பதை நாம் கூற வேண்டியதில்லை. ஏனெனில், மதத்தினால் பாமர மக்களை ஏமாற்றி வருபவர்கள் பார்ப்பனக் கூட்டத்தார் அல்லவா? ஆகையால் நாடகக்காரர்கள் நமது இயக்கத்திற்கு எதிரான பிரசாரம் பண்ண ஆரம்பித்திருப்பதும் ஆச்சரியமில்லை. இனி இவ்வாறு மதத்திற்கும், வருணாசிரம தருமத்திற்கும் புராணங்களுக்கும் பரிந்து  பேசி, நம்மை எதிர்க்க மேற்கூறிய அரசியல்வாதிகள், பண்டிதர்கள், புரோகிதர்கள் முதலான கூட்டத்தார்க்கு அக்கறை உண்டாகக் காரணமென்ன? என்பதைப் பற்றி வாசகர்களே தெரிந்து கொண்டிருக்கலாம். இக்கூட்டத்தார்கள் அனைவரும் மதத்தின் பெயராலும் வருணாசிரம தருமத்தின் பெயராலும், புராணங்களின் பெயராலும், வயிறு வளர்க்கின்றவர்கள். இவைகளைக் கொண்டு ஏழை மக்களின் செல்வத்தைக் கொள்ளையடிக் கின்றவர்கள். ஆகையால் தான் இவற்றைத் தடுக்கும் நம்மைப் பற்றித் தப்புப் பிரசாரம் செய்து கொண்டு வருகிறார்கள் என்பதில் அய்யமில்லை.
ஆகையால், இனியும் இக்கூட்டத்தாரின் வார்த்தை களுக்கு ஏமாறாமல் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளும்படி பாமர மக்களுக்கு உதவி செய்வது தான் நமது கடமையாகும். அரசியல்வாதிகளின் பேச்சையும், புராணப்பிரசங்கிகளின் பேச்சையும், புரோகிதர்களின் பேச்சையும் நம்பி தாம் சம்பாதிக்கும் பொருளை இவர்கள் கையிற் கொடுத்து விட்டு தரித்திரமாகவும் அடிமையாகவும் வாழ வேண்டாம் எனப் பாமர மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டியதே சுயமரியாதைத் தோழர்களின் கடமை யாகும். மதத்திற்கு 'வக்காலத்து வாங்கிப்' பேசுபவர்களின் பேச்சை கேட்டு யாரும் ஏமாறப் போவதில்லையென்றும், இவர்களால் சுயமரியாதை இயக்கம் அழிந்துவிட போவ தில்லையென்றும் எச்சரிக்கை செய்வதுடன், இக்கூட்டத் தாரையும் மதத்தின் பெயரால் பாமர மக்களை ஏமாற்றுத் தொழிலை மேற்கொள்ளாமல் வேறு கவுரவமான தொழிலை செய்து ஜீவிக்குமாறு வேண்டுகிறோம்.


'குடிஅரசு' - தலையங்கம் - 04.09.1932
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தந்தை பெரியார்
"உலக மக்களுக்குத் தொண்டாற்றுவதற்கு ஆக 125 வயது வரை நான் உயிருடன் வாழ்ந்து வருவேன்" என்று கூறிக் கொண்டே, அதற்கு ஏற்ற வண்ணம் உடலையும் பாதுகாத்துக் கொண்டே, பெருவாரியான மக்களின் போற்று தலையும், பாராட்டுதலையும் பெற்று அதற்கு ஆக உண்மையாய் உழைத்து வந்த மகான் காந்தியார், தனது 79ஆம் ஆண்டில் அகால மரணத்தால் முடிவெய்தி விட்டார்.
இவரது முடிவைப் போல், கேட்டதும் மக்களுக்குத் திடுக்கிடும் தன்மையும், அலறிப் பதறித் துடிதுடித்துத் துக்கப்படும் தன்மையும் இதுவரை நம் நாட்டிற்கு வேறு எவருடைய முடிவும் தந்ததில்லை என்பதோடு, இப்படிப் பட்ட இவரே இக்கதிக்கு ஆளான பின்பு இனி எவர் எக்கதியானால் தான் என்ன? என்றும் கூறலாம்.
காந்தியார் கொள்கையில் அதிருப்தி கொண்டவர் சிலர் ஏன் பலர் இருக்கலாம் என்றாலும், அப்படிப்பட்டவர்களும் காந்தியாரி டத்தில் மரியாதையும், அன்பும் வைத்தவர் களாகவே இருந்தார்கள்.
கம்யூனிஸ்ட்டுகளும், சமதர்மவாதிகளும், காந்தியார் கொள்கையில் எவ்வளவு குறை கண்டாலும், அவரிடத்தில் மதிப்பும், மரியா தையும் வைத்தவர்களாகவே இருந்து வந் தார்கள். வெள்ளையர்கள் மீதில் இந்தியர் களுக்கு எப்படிப்பட்ட குரோத மனப்பான்மை ஏற்பட்ட காலத்திலும், வெள்ளையர் அர சாங்கம் காந்தியாரை மதிப்பதிலோ, அவரைப் பாதுகாப்பதிலோ சிறிதுகூடத் தவறியதில்லை. அனுபவத்திற்கு ஏற்றதோ ஏற்காததோ என்ற கவலையற்று, காந்தியார் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு இலட்சியவாதியாகவே இருந்த பெரியாராவார். ஆதலால், அவரிடத்தில் சொந்த விருப்பு வெறுப்புக் கொண்டு யாவரும் அவரை வெறுத்ததில்லை.
திராவிடர் கழகத்தாருக்கும் காந்தியாரிடம், அவர் வருணாச்சிரம தர்மத்தைக் காப்பதில் பிடிவாதமான கவலை கொண்டிருக்கிறாரே என்பது தவிர, மற்றக் காரியங்களில் அவருடன் பிரமாதமான முரண்பட்ட கருத்துக்கொண்டி ருக்கவில்லை என்பதோடு அவர்கள், 'காந்தி யார் கூடிய சீக்கிரத்தில் இந்த விஷயத்திலும் சரிப்பட்டு விடுவார்கள்' என்றே கருதி, அதை மாத்திரமே முக்கியமாய்க் காந்தியாருக்கு எடுத்துக் கூறிக் குறிப்பிட்டு வந்தார்கள்.
இந்துஸ்தானிலிருந்து திராவிட நாடு தனி நாடாகப் பிரியவேண்டும் என்பதிலும் காந்தி யாருக்குப் பிடிவாதமில்லாமலேயே இருந்து வந்தது என்றாலும், அவரது நண்பர்களான மார்வாடிகள், குஜராத்திகளின் தாட்சணியம் காரணமாக மாத்திரமே, அது விஷயத்தில் தனது அதிருப்தியைக் காட்டி வந்தார். எப்படி இருந்த போதிலும் திராவிடர் கழகத்தாருக்குள் ஒரு சிலருக்குக் காந்தியார் நட்புப் பெறவும், அவரிடம் தங்கள் கொள்கைக்கு ஆதரவு தேடவும் ஆசை துடித்துக் கொண்டிருந்தது. 1948ஆம் ஆண்டு முடிவ தற்குள் இது விஷயத்தில் ஒரு குறிப்பிடத் தகுந்த மாறுதல் கூட திராவிடர் கழகத்தில் ஏற்படலாம் போல் நிலைமை இருந்தது.
இப்படிப்பட்ட சமயத்தில் ஒரு பார்ப்பனப் பாதகன், மதவெறி காரணமாகக் கொடுஞ்செயல் செய்து தனது ஜாதிக்கே நீங்காப் பழியையும், மாசையும் உண்டாக்கிக் கொண்டான். காந்தியார் எப்படி இருந்தாலும் ஒரு நாளைக்குச் சாகக்கூடியவர் என்பதில் யாருக்கும் அய்யமில்லை . அவர் இளம் வயது உடையவருமல்ல. 80 வயதுடையவராய், உலகப் பெரியாராய், உத்தமராய் வாழ்ந்து விட்டார். அவர் அடைந்த சுகபோகம், ராஜ உபசாரம் என்பவை போதுமானதற்கு மேல் என்றே சொல்லலாம். மற்ற எவருக்கும் இதுபோல் சுலபத்தில் கிடைக்கக்கூடியதல்ல என்றும் சொல்லலாம். அவர் மக்களுக்குச் சொல்லவேண்டியவைகளை எல்லாம் சொல்லிவிட்டு அதுபோல் நடந்து காட்டவும் செய்தார். அவர் சாகும்போது அவருக்கு நினைவு, உணர்வு இருந்து இருக்குமானால், "கடவுள் என்னை அழைக்கிறார்" என்று கருதித் திருப்தியுடன் தான் உயிர்விட்டிருப்பாரே ஒழிய, சிறிதும் அதிருப்தியாய் உயிர்விட்டி ருக்கமாட்டார்.
என்றாலும், நடந்தது என்ன என்று பார்ப்போமேயானால், அவர் குறிப்பாக எந்த ஜாதி மக்களுக்குப் பாதுகாப்பாக இருந்து வந்து, எந்த ஜாதி மக்களை - "பிட்சாந்தேஹி" என்கின்ற உஞ்சவிருத்திக் கூட்டமாக இருந்து வந்தவர்களை - இன்று உயர்வாழ்வில் இருத்தி நாட்டை அவர்களது ஆட்சிக்கும், ஆக்கினைக்கும் உள்ளாக்கிக் கொடுத் தாரோ, அந்த ஜாதியே இன்று அவரை அழித்து விட்டதே என்பதுதான் இதில் ஆத்திரம் கொண்ட பரிதாபத்தோடு சிந்திக்க வேண்டியதாயிற்று.
உண்மையில் பிராமண (பார்ப்பன) ஜாதி என்பதாக ஒரு ஜாதி, அந்த ஜாதியின் நலனுக்கு ஆக, அதுவும் மற்ற ஜாதிகளை இழித்து, அழுத்திக் கசக்கிப் பிழிந்து, தாங்கள் மாத்திரம் நல்வாழ்வு வாழ்ந்தால் போதும் என்கின்ற கருத்துக்கு ஆக மாத்திரம் அல்லாமல், மற்றபடி வேறு எந்தக் காரியத்திற்கும் அந்த ஜாதி உலகத்துக்குத் தேவையே இல்லாத ஜாதியாகும். அப்படிப்பட்ட ஜாதியை அது ஒழியப்போகும் தருணத்தில் காப்பாற்றி அந்த ஜாதியாருக்குப் பொருந்தாத ஏற்றத்தைத் தந்து நிரந்தரமாய் நல்வாழ்வு வாழ வகையளித்தார். அப்படிப்பட்ட அந்த ஜாதிப் பாதகரே, அதற்குப் பிரதி உபகாரமாக இப்படிப்பட்ட பழிபாவத்திற்கு அஞ்சாத மகாபாதகமான காரியம் செய்தார் என்பது இது அவருடைய - அவ்வொரு வருடைய செய்கையாக மாத்திரம் ஆகிவிட முடியுமா? ஒரு நாளும் முடியவே முடியாது. இதை "ஜாதி தர்மம்" என்றுதான் சொல்ல வேண்டும்.
புத்த தர்மம் கெட்டது யாரால்? சமண தர்மம் கெடுக்கப்பட்டுச் சமணர்கள் கழு வேற்றப்பட்டது யாரால்? மற்றும் பாதகமானதும் வஞ்சனையானது மாகிய பல கொடுஞ்செயல்கள் புராண காலத்திலும், சரித்திர காலத்திலும் நடந்ததாகக் காணப்படுபவை யாரால் நடந்தவை?
இவை போன்றவைகளைக் கூர்ந்து கவனிப்போமேயானால், காந்தியார் போன்ற பெரியார்கள் பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்டது என்பது அதிசயமோ, சிறிதும் ஆச்சரியமோ அல்ல என்பதை உணருவோம். இதற்கு ஆக பார்ப்பன ஜாதியை குறைகூறுவது முற்றும் சரியானதாகி விடாது. அவர்கள் தங்கள் சுயநல வாழ்வுக்கு ஆக ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் மதக் கற்பனைகளே, இப்படிப்பட்ட பார்ப்பனர்களை உற்பத்தி செய்யும் விளைநிலமாக இருந்து வருகிறது. உண்மையிலேயே, மதமாச்சரியம், வகுப்பு மாச்சரியம், இனமாச்சரியம் முதலிய துவேஷங் களுக்குப் பார்ப்பன மதம் தவிர, மற்றபடி இந்த நாட்டில் வேறு காரணம் யாராவது சொல்ல முடியுமா? தனிப்பட்ட எந்தப் பார்ப்பனரை நாம் குற்றம் கூறக் கூடும்? என்று கேட்கிறோம்.
நன்றாக ஆழ்ந்து நிதான புத்தியுடன் கூர்ந்து சிந்திப்போமானால், "வெள்ளையன் ஆட்சி கூடாது" "முஸ்லிம் ஆட்சி கூடாது" என்ற உணர்ச்சியை இந்திய மக்களுக்கு ஊட்டவும், அதனால் குரோதம், துவேஷம் ஏற்படவும், அதனால் வெட்டு, குத்து, கொலை, கொள்ளை, நாசம் ஏற்படவும் பார்ப்பன மதம் காரணமல்லாமல், வேறு ஏதாவது கொள் கைகள், திட்டங்கள், ஆட்சி தர்மங்கள் காரணம் என்று யாராலாவது சொல்ல முடியுமா? சொல்லக் கூடுமானால் வெள்ளையன் ஆட்சியும், முஸ்லிம் ஆட்சியும் ஒழிந்தன. இந்துஸ்தான் சுயஆட்சி பெற்றது என்று சொல்லப்பட்ட பின்பும், இந்து முஸ்லிம் போராட்டம் என்னும் பேரால் இந்த ஒரு ஆண்டுகாலமாக நடந்துவரும் அட்டூழியமான நடத்தைகள் நடப்பதற்குப் பார்ப்பன மதம் காரணமல்லாமல், வேறு காரணம் என்று யாராலாவது எதையாவது சொல்லமுடியுமா?
திராவிட நாட்டில் இதுபோது நடந்துவரும் திராவிடர்-ஆரியர் நாடு பிரிவினைப் போராட் டங்களுக்கும், பார்ப்பன மதம் காரணம் என்ப தல்லாமல் வேறு காரணம் ஏதாவது சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட ஒரு மததர்மம் காந்தியாரைக் கொன்றதில்  அதிசயமென்ன? என்று திரும்பவும் கேட்கிறோம்.
பார்ப்பனிய மதக் கொடுமைக்கு திராவிட நாட்டில் எப்படியோ ஒரு விதத்தில் இதுவரை இப்படிப்பட்ட பாதகங் களுக்கு இடமில்லாமல் பலரால் பல காரியங்கள் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்றாலும், பார்ப்பனர்கள் இனி சும்மா இருக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.
இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனரும் தமது பார்ப்பன மதத்தைக் காப்பாற்றத்தான் அரசியலில் கலந்து கொண்டும், பத்திரிகைகள் நடத்திக் கொண்டும், காந்தியார் முன் ஆஷாடபூதி வேஷம் போட்டுக் கொண்டு தக்களி சுற்றுவதும், கதர் கட்டிக் கொள்வதும், கோணல் குல்லாயை போட்டுக் கொள்வதும், தேசியக் கொடி பிடித்துக் கொண்டு காங்கிரஸ் பித்தர்கள் போல் நடிப்பதுமாய் இருந்து வந்தார்களே ஒழிய, நாட்டுப் பற்றால் என்றோ, மக்களுக்கு விடு தலை ஏற்பட வேண்டும் என்ற விடுதலை வேட்கையால் என்றோ, எந்தப் பார்ப்பன ரையாவது அவர்களது எந்த நடவடிக்கை களையாவது சுட்டிக் காட்ட முடியுமா என்று கேட்கிறோம்.
வடநாட்டில் காந்தியாரை வீழ்த்தியதன் பயனாய் பார்ப்பனர்களின் செல்வாக்கு ஒரு அளவுக்கு இந்த நாட்டிலும் இனி குறைந்துதான் தீரும் என்பதோடு, இந்து முஸ்லிம் போராட் டமும் பெரும் அளவுக்கு அடங்கித்தான் தீரும் என்பதை உணர்ந்த தென்னாட்டுப் பார்ப்ப னர்கள், இங்கு திராவிட மக்கள் மீது அவ்வஞ்சகத் தன்மையைத் திருப்ப இப்போதே துவங்கிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
முதலாவதாக தென்னாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகள் காந்தியாரை சுட்டவன் பார்ப் பான் என்பதை வேண்டுமென்றே மறைத்து, மக்கள் முஸ்லிம்கள் மீதும், காங்கிரசுக்கு மாறுபட்ட கருத்துக் கொண்டவர்கள் மீதும் பாயும்படியான மாதிரியில் அயோக்கியத் தனமாக மறைத்தும் திருத்தியும் பிரசுரித்தார்கள். அதுமாத்திரமா என்று பார்த்தால், திராவிடர் கழகத்தார் மீதும் துவேஷம் ஏற்படும்படி இரட்டை அயோக்கியத்தனமாக, "கருப்புச் சட் டைக்காரர்களின் கலாட்டா" என்ற தலைப்புக் கொடுத்து மக்களை அவர்கள் மீது கிளப்பி விட்டிருக்கிறார்கள். இந்தக் காரியத்தைச் "சுதேசமித்திரன்" பத்திரிகையே முதன் முதலாக தைரியமாய்க் கையாண்டிருக்கிறது. உண்மை யாக, இந்த நாட்டில்  'இந்து'', ''சுதேசமித்திரன்'' என்ற இந்த இரண்டு பேயாட்ட வெறிகிளப்பும் விஷமப் பத்திரிகை இல்லாமல் இருந்திருக்கு மானால், இந்த நாடு எவ்வளவோ முன்னேற்ற மடைந்து, இந்த நாட்டு மக்கள் எவ்வளவோ அந்நியோன்ய பாவமடைந்து, ஞானமும், செல்வமும், ஆறாகப் பெருகும் நன்நாடாக ஆகி பல்லாண்டுகள் ஆகியிருக்கும், இன்றைய கலவரங்களிலும், கேடுகளிலும், நாசங்களிலும் 1000இல் 999 பாகமும் இல்லாமல் இருந்திருக்கும்.
இப்பத்திரிகைகள் தங்கள் ஜாதியார் செய்யும் அயோக்கியத்தனங்களை எல்லாம் "பொதுமக்கள் ஆத்திரம்" என்று போட்டுவிட்டு, "கருப்புச்சட்டைக்காரர்கள்" செய்தார் களோ இல்லையோ) கருப்புச் சட்டைக்காரர்கள் நடத்தையைக் குறிப்பிடும்போது "கருப்புச் சட்டைக்காரர்கள் கலாட்டா" என்று போடு வதின் காரணம், அதுவும் இந்தச் சமயத்தில் போடுவதின் காரணம் வேறு என்னவாய் இருக்க முடியும்? இந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட ஆட்சி ஏற்பட்டாலும் "இந்து," "சுதேசமித்திரன்" என்னும் இந்த இரண்டு விஷ ஊற்றும் ஒழிக்கப்பட்டால் ஒழிய, மக்களுக்குத் துவேஷம், குரோதம், வஞ்சகம் என்னும் விஷ நோய்கள் நீங்கப் போவதில்லை என்று உறுதியாய்க் கூறுவோம். இந்த சமயத்தில் பார்ப்பனர் செய்யும் அயோக்கியத்தனங்கள் ஏராளமாக இருக்கும்போது அவைகளை மறைத்து, சுட்டவன் ஜாதியைக் கூட மறைத்து விட்டு "கருப்புச் சட்டைக்காரர்கள் கலாட்டா" என்று எழுதுவதானது, சர்க்கார் அடக்கு முறையைப் பார்ப்பனர் பக்கம் திருப்புவதை விட்டுக் கருப்புச் சட்டைக்காரர் பக்கம் திருப்பு வதற்கல்லாமல் வேறு எதற்கு ஆக இருக்க முடியும்? இந்தப்படி செய்த மற்ற கூட்டத்தி னருக்குப் பெயரைக் கொடுத்து அது பிரசு ரித்ததா?
இப்படிப்பட்ட யோக்கியர்கள் உள்ள நாட்டில் எப்படி ஜாதி, வகுப்பு, ஒற்றுமை இருக்க முடியும்? மேலும் மேலும் துவேஷம், பிரிவு, ஏற்படாமல் எப்படி இருக்க முடியும்? மக்களுக்கு வெறி ஏற்பட்டிருக்கும் சமயத்தில் 'கருப்புச் சட்டைக்காரர் கலாட்டா'' என்று எழுதினால், அதன் உள்மர்மம் என்னவாய் இருக்க முடியும்?
எனவே, பார்ப்பனிய விஷம் மதம் அழிபட்டாலொழிய சாந்தியும், சமாதானமும் இந்த நாட்டுக்கு ஏற்படுவது அருமையிலும் அருமையாகத்தான் இருக்கும். கடவுள் இருப்பதாலேயே, மதம் இருப்ப தாலேயே இக்கேடுகள் நிகழ்கின்றன என்று நாம் சொல்ல வரவில்லை. உலகில் மற்ற பாகங்களில் உள்ள அளவுக்கு அவை இங்கும் நன்றாய் இருக்கட்டும். ஆனால், வருணாச்சிரம தர்மப் பிரிவு கொண்ட பார்ப்பன மதம் வேண்டவே வேண்டாம் என்றுதான் சொல்லு கிறோம். அது உள்ளவரை நாட்டில் இன்றுள்ள கேடுகள் எல்லாம் இருந்துதான் தீரும்.
பண்டித நேருவும், இராஜகோபாலாச்சாரி யாரும் எவ்வளவு தியாகிகளாகவும், யோக்கி யர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருந்தாலும், அவர்கள் இந்த வர்ண தர்மத்தை வைத்துக் கொண்டு எப்படிப்பட்ட நல்லாட்சியைக் கொண்டு வந்தாலும், அதில் காந்தியாருக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் - ஏன் நமக்கும்கூட ஏற்பட்டுத்தான் தீரும். பார்ப்பன மதம் அவ்வளவு விஷத்தன்மை கொண்ட மதமாகும். ஏன் இப்படிச் சொல்லு கிறோமென்றால், பர்மாவில் சுயராஜ்யம் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்துவிட்டது. இலங்கையில் சுயராஜ்யம் அவ்விடத்திய மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்துவிட்டது. எப்படிச் செய்ய முடிந்தது என்றால், அங்கு வருணாச்சிரம் ஜாதி முறை இல்லை. பார்ப்பான் இல்லை; இந்துக்கள் நாட்டில் - இந்துஸ்தானில் சுயராஜ்யம் வந்து என்ன செய்தது? காந்தியார் உயிரைப் பலி வாங்கி விட்டது. ஏன் என்றால் இங்கு வருண ஜாதியும் பார்ப்பானும் உண்டு. இனியும் என்ன என்ன செய்யப்போகிறதோ இவை? இன்றைய சுயராஜ்ய ஆட்சி மந்திரிகளில் - ஒருவர் மீது மற்றொரு மந்திரி சந்தேகப்பட்டுக் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார். அதாவது போதுமான பாதுகாப்பு முயற்சி எடுத்துக் கொள்ளாததாலேயே, உள்நாட்டுக் கலகமும் காந்தியார் கொலை பாதகமும் ஏற்பட்டது என்று பண்டித நேரு பாதுகாப்பு மந்திரி மீது குற்றமேற்படும்படி சொல்லுகிறார். நேருவின் நண்பரும் சமதர்மக் கட்சித் தலைவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் வெட்ட வெளிச்சமாகவே இதை "பாதுகாப்பு மந்திரி (சர்தார் பட்டேல் அவர்கள்) அந்தப் பாதுகாப்பு இலாகாவுக்குத் தகுதி அற்றவர்" என்று சொல்லு கிறார். பொதுமக்களும் இந்தக் கொலைக்குச் சர்தார் மீதும் பழிபோட இடமிருக்கிறது என்றே கருதுகிறார்கள். காந்தியாரும் உயிருடன் இருக்கும் போது எனக்கும் பட்டேலுக்கும் விரோதம் இருப்ப தாகக் கருதாதீர்கள்" என்று சொல்லி அவர் மீது மக்களுக்கு உள்ள தப்பபிப்ராயத்தை மாற்ற முயன்று இருக்கிறார். சர்தார் பட்டேல் அவர்களும் "காந்தியார் பட்டினியின் போதே செத்து இருந்தால் நன்மையாக இருந்து இருக்கும்" என்று தனது துக்கச் சேதியில் நுழைத்துச் சொல்லி இருக்கிறார். இதன் காரணமாய் மந்திரி களுக்குள்ளும் அபிப்பிராய பேதம் வலுத்து மந்திரி சபையில் மாற்றமோ, கோளாறோ ஏற்பட்டாலும் ஏற்படலாம்.
ஆகவே, பண்டித நேரு அவர்களும், ராஜ கோபால ஆச்சாரியார் அவர்களும், அவர்கள் விலகுவதற்கு முன்போ, ஓய்வெடுத்துக் கொள்ளுவதற்கு முன்போ, இல்லையானால், இனி இப்படி நேராமல் இருக்கப் பாதுகாப்பு முறைகள் கையாளுவதற்கு முன்போ "காந்தியார் பலியாக்கப்பட்டதின் காரணமாய் இந்து மக்கள் சமுதாயத்தில் வருணாச்சிரம தர்மமுறை அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதான பிரிவு (பிறவி உரிமை) முறை இனி கிடையாது. வருண முறையைக் குறிக்கும் சட்டம், சாஸ்திரம், சம்பிரதாயங்களும் இந்தச் சுயாஜ்யத்தில் இனி அனுஷ்டிக்கப்பட மாட்டாது. இவை ஒழியும்படியாக அவசியமான எல்லா ஏற்பாடுகளும் கையாளப்படும்" என்று சுயராஜ்ய சர்க்கார் பேரால் ஏற்பாடு செய்துவிடு வார்களேயானால், இந்த நாட்டைப் பிடித்த எந்தவிதமான கேடும், ஒரே அடியாய்த் தீர்ந்துவிடும். இதைச் செய்த உடனே அப்புறம் ஒரு உத்தரவு போட்டுவிடலாம். அதாவது "பிறவி ஜாதிமுறை எடுபட்டு விட்டதால் இனி இந்த நாட்டில் பிராமணர் பாதுகாப்புச் சங்கமோ, பிராமணர் சேவா சங்கமோ, வன்னிய சத்திரியர் மகாஜன சங்கமோ, நாடார் கட்சி மகாஜன சங்கமோ, வாணிய வைசியர் சங்கமோ, மருத்துவர் சங்கமோ, அருந்ததியர் சங்கமோ மற்றும், இப்படிப்பட்ட பல பல ஜாதி வகுப்புச் சங்கமோ, உள் வகுப்புச் சங்கமோ எதுவும் இனிச் சட்ட விரோதமாகக் கருதப்படும். அதனதன் தலைவர்களும் பிரமுகர்களும் பந்தோபஸ்தில் வைக்கப்பட்டு அவர்கள் சொத்துகளைப் பறிமுதல் செய்யப்படும்" என்று உத்திரவு போட்டு விடலாம்.
பிறகு நமக்கு என்னதான் வேண்டும். தானாகவே சமதர்மமும், பொதுவுடைமையும் தனித்தனி நாடு சுதந்திரமும் தாண்டவமாடும்.
இந்தப்படி சர்க்கார் செய்யாமல் வேறு எந்தவித முயற்சி செய்தாலும் அடுத்த பலிக்கு மந்திரிமார் உள்பட நாம் யாவரும் தயாராய் இருக்க வேண்டியதுதான். இந்த நல்ல சமயத்தில் இதைச் செய்யாமல் இந்து மகாசபை ஒழிக்கப்பட்டாலும் சரி, ராஷ்டிரிய சுயம் சேவக் சபை ஒழிக்கப்பட்டாலும் சரி, மாறுதல் ஒன்றும் ஏற்படப் போவதில்லை என்பது நமது கல் போன்ற உறுதியாகும்.
திராவிடர் கழகத்தார் முக்கியமாக இந்த சந்தர்ப்பத்தில் தங்கள்மீது எவ்விதமான குற்றமும் குறையும் எவரும் கூறுவதற்கு இட மில்லாமல் அடக்கமாய், அமைதியாய், உண்மையாய், நிரபராதியாய் நடந்துகொண்டு, தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம்.
"குடிஅரசு" - தலையங்கம் - 07.02.1948
எனது விண்ணப்பம்
திராவிட மக்கள் எப்படிப்பட்ட நிலையிலும் அமைதியுடனும்,  சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
- ஈ.வெ.ரா.


"குடிஅரசு" - வேண்டுகோள் - 07.02.1948