Search This Blog

Showing posts with label அம்பேத்கர். Show all posts
Showing posts with label அம்பேத்கர். Show all posts

14.4.15

புரட்சியாளர் அம்பேத்கர் வாழியவே!





இன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா! தலைவர்களுக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடுவது வெறும் பெருமை களுக்காக அல்ல; அவர்களின் கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும், அவற்றைப் பின்பற்றச் செய்யவுமான உணர்வுக்கு ஓர் உந்து சக்தியாகும்.

தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் இருவரும் இந்து மதத்தைக் கடுமையாக எதிர்த்தவர்கள்; பிறப்பின் அடிப்படையில் பேதம் ஏற்படுத்தும் வருணாசிரமத்தை, ஜாதியை - ஆணி வேர், பக்க வேர், சல்வி வேர்களோடு அழித்து முடிக்கப் புறப்பட்டவர்கள். தங்கள் வாழ்வினை ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணித்தவர்கள்.

தந்தை பெரியார் அவர்கள் அரசியலில் புகுந்து பதவி நாற்காலியை அலங்கரிக்க வேண்டும் என்று எண்ணாதவர் - விரும்பாதவர்.

இரண்டு முறை சென்னை மாநிலப் பிரதமர் பதவி தந்தை பெரியார் அவர்களை நோக்கி வந்த போதும்கூட, அதனை ஏற்க மறுத்தவர். அவர் பதவிக்கு செல்ல மறுத்ததால்தான் தமிழர்களுக்கெல்லாம் பதவிகளும் கல்வியும் கிடைத்தன.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்கூட பதவியை நோக்கிச் சென்றவரல்லர்; முதல் நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் பதவி என்பது அம்பேத்கர் அவர்கள் தேடிச் சென்று பெற்றுக் கொண்டதல்ல - பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் அந்தப் பொறுப்பில்  அம்பேத்கர் இருப்பது பொருத்தமானது - தேவையானது என்று கருதியே அந்த ஏற்பாட்டைச் செய்தார்.

அதே நேரத்தில் அதனைப் பதவியாக எண்ணிய தில்லை; அந்த அமைச்சர் பதவி என்பதன் மூலம் ஆடம்பர வாழ்க்கையில் திளைத்தவரல்லர். இந்து திருத்தச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர அவர் முயற்சித்தபோது, அதனைத் தொடக்கத்தில் ஆதரித்த பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் பிற்போக்குச் சக்திகளின் அழுத்தத்தால் ஒரு கட்டத்தில் சட்ட அமைச்சர் அம்பேத்கரின் முயற்சிக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயங்கியபோது பதவி பெரிதல்ல, கொள்கையே உயர்ந்தது என்ற முடிவில் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்த உண்மையான புரட்சியாளர் அம்பேத்கர்!

இரு தலைவர்களும் அரசியல் மாற்றங்களைவிட சமூக மாற்றமே முக்கியமானது என்று கருதியவர்கள்.

ஒரு மாஜிஸ்ட்ரேட்டைவிட ஒரு புரோகிதன் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துகிறான் என்று கணித்துச் சொன்னவர் அம்பேத்கர்.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை தந்தை பெரியார் அவர்களும், புரட்சியாளர் அம்பேத்கரும் ஒரே மாதிரியாகச் சிந்தித்தார்கள் - கணித்தார்கள் என்பதை எண்ணும்பொழுது ஆச்சரியமாகவே இருக்கிறது.
1925ஆம் ஆண்டில் சேலத்தில் பேசிய பெரியார் வெள்ளைக்காரர்கள் இங்கு அதிகாரத்தில் இருக்கும் போதே இந்த பார்ப்பனர் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம்  (Democracy)
இருக்காது; மாறாக, பிராமினோகிரசிதான்  இருக்கும் என்று சொன்னவர் தந்தை பெரியார் இந்து நாளேடு வெளியிட்ட நூற்றாண்டு விழா மலரில் பிராமினோகிரசி என்ற ஒரு புது வார்த்தையை பெரியார் ஆங்கில அகராதிக்குக் கொடுத்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கருத்தை புரட்சியாளர் அம்பேத்கர் எப்படி கூறுகிறார் பாருங்கள்.
தேசிய சர்க்கார் என்றால் பார்ப்பனர் சர்க்கார்தான்; 1937இல் தேசியம் வெற்றி பெற்ற ஏழு மாகாணங்களும் பார்ப்பன முதல் மந்திரிகளின் ஆதிக்கத்தில்தான் இருந்து வந்திருக்கிறது. நாளைக்கு எல்லா மக்களும் வாக்குக் கொடுத்து அதன் மூலம் ஒரு சர்க்காரை ஏற்படுத்தினாலும், அதிலும் பார்ப்பனர்கள் தானே ஆட்சி செலுத்துவார்கள்? பெண்களுக்கு ஸ்தானங்கள் வழங்கினாலும், அதிலும் பாப்பாத்திகளே மெஜாரிட்டியாய் வருவார்கள் (குடிஅரசு 30.9.1944) என்று அம்பேத்கர் கூறியுள்ள கருத்தை - தந்தை பெரியார் அவர்களின் கருத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த இரு பெரும் தலைவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது சொல்லாமலே விளங்கும்.

இன்னும் மத்திய ஆட்சியிலே தாழ்த்தப்பட்டவர் களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உரிய சதவீதத்தில் இடங்கள் கிடைத்திருக்கின்றனவா? மத்திய அரசின் முதல் நிலைப் பதவிகளில் (குரூப் ஏ) பல்வேறு துறைகளில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத் தப்பட்டவரோ கிடையாதே!

இந்தியா சுந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டு 68 ஆண்டுகள் ஆகியும்கூட, மக்கள் தொகையில் 25 விழுக்காடு தொகையுள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தி லிருந்து பிரதமராக ஒருவர் வர முடியவில்லையே - ஏன்?

பாபு ஜெகஜீவன்ராம் அவர்களுக்கு அந்தத் தகுதி இருந்தும்கூட, அந்த வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட வில்லையே! இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் பிரதமராக வருவதற்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படும் என்று அவர் சொன்னதன் பொருளை நுட்பமாக உணர்ந்தால், நூற்றுக்கு மூன்று பேர்களாக உள்ள பார்ப்பனர்கள்தான் எல்லா கேந்திரப் பதவிகளிலும்  அதிகார லாகனைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது எளிதில் விளங்குமே!
வரலாற்றை மாற்றுபவர்கள் தந்தை பெரியார், புரட்சியாளர்  அம்பேத்கரும் தவிர அரசியல்வாதிகள் அல்லர்.

இந்த இரண்டு தலைவர்களும் இந்தக் கால கட்டத்தில் மிகவும் தேவைப்படும் தலைவர்களாகவே ஒளி வீசுகிறார்கள் - இவர்களின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம் - இந்து ராஜ்ஜிய கனவின் கருவைச் சிதைப்போம்!

வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க புரட்சியாளர் அம்பேத்கர்!!

                    -------------------------"விடுதலை” தலையங்கம் 14-04-2015

30.3.15

தாலியைப்பற்றி புரட்சியாளர்அம்பேத்கரின் கருத்தென்ன? தாலி அறுப்பா? தாலி அகற்றமா?

தாலியைப்பற்றி புரட்சியாளர்அம்பேத்கரின் கருத்தென்ன?
புரட்சியாளர் அம்பேத்கர் அவர் களின் பிறந்த நாளில் (ஏப்ரல் 14) புரட்சிகரமான சிந்தனைகளை அரங் கேற்றுவதுதானே பொருத்தமானது!

தலைவரை மதிக்கிறோம் என் றால் தலைவரின் கொள்கைளை மதிப்பதில்தான் அதனைக் காட்ட வேண்டும்.

தாலியைப்பற்றிய விவாதத் தையே நடத்தக் கூடாது என்று இந்துத்துவாவாதிகள் மிரட்டும் போது, வன்முறையை ஏவும்போது, கருத்துச் சுதந்திரம் என்ற அடிப் படையில் நோக்கினாலும் சரி, பெண் ணுரிமைப் பார்வையில் பார்த்தாலும் சரி, அதனை எதிர் கொண்டு முறி யடிப்பதுதான் முற்போக்குச் சிந்தனை - அதனை வீழ்த்துவதுதானே புரட்சி! அம்பேத்கர் பிறந்த நாளில் தாலியை அகற்றுவதா என்று சில அருமைத் தோழர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆமாம். அண்ணலின் பிறந்த நாளில்தான் அவரின் இந்தப் புரட்சி கரமான சிந்தனையைத்தான் செயல் படுத்த வேண்டும்.

தாலியைப்பற்றி அண்ணலின் கருத்து என்ன? இதோ பாபாசாகேப் பேசுகிறார். சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ (Malabar and Anjengo) கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. கின்னஸ் அய்.சி.எஸ். பின்வரு மாறு சொல்கிறார்.

மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைப்பிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வேறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளி களின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது. புதுமையானது; வேறுபட்ட தன்மை யுடையது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவது தான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது.
அதற்குப்பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன்  அல்லது மணவாள னுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவ தற்காகத்தான் தாலி கட்டும் திரு மணம் என்னும் சடங்கு நடத்தப் படுகிறது என்று பொதுவாகக் கருதப் படுகிறது. சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல் லப்பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய் யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி (பக்.101)
(டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத் தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206)

இதற்கு விளக்கமும் வேண்டுமோ!
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எடுத்துக்காட்டிய இந்தக் கருத்துக்கும், தகவலுக்கும் பிறகு இணையதளத்தில் விளையாடும் நமது அருமைத் தோழர்கள் தெளிவு பெறுவார்களாக!

இந்து மதக் கொடுமை என்ற தளையிலிருந்து பெண்களை விடுதலை பெறச் செய்யத்தான் அன்று சட்ட அமைச்சராகவிருந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்துத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அது நிறைவேற் றப்பட வாய்ப்பு இல்லை என்ற நிலையில் அமைச்சர் பதவியைத் தலையைச்சுற்றித் தூக்கி எறிந்தார்.

இந்தப் பின்புலத்தைப் புரிந்து கொண்ட எவருக்கும் அவர் பிறந்த நாளில் அடிமைத்தளையாம் தாலியை அகற்றுவதன் அவசியமும், பெரு மையும் அருமையாகப் புரியும்.

ஒரு புரட்சியாளர் பிறந்த நாளில் இது போன்ற புரட்சிகரத்தை அரங்கேற்ற வேண்டுமே தவிர - புளியோதரை செய்வது எப்படி? பொரி உருண்டை செய்வது எப்படி? என்பதையா கற்றுத் தர முடியும்?

சிந்திப்பீர்!
இந்த செயல் வெற்றி பெற வீங்கு தோள் கொண்டு எழுவீர்! எழுவீர்!!


- கருஞ்சட்டை
குறிப்பு: பெண்ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றும் நிகழ்ச்சிகள் தாலி அறுக்கும் போராட்டம் என்று கொச்சைப்படுத்தும்  சிறுமதிக் கூட்டத்திடம் எச்சரிக்கை யாக இருங்கள் தோழர்களே!!
                   ---------------------------- "விடுதலை” 28-03-2015


Read more: http://viduthalai.in/e-paper/98721.html#ixzz3VgIUc8ug

********************************************************************************

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் (ஏப்ரல் 14) மாட்டுக் கறி விருந்து, தாலி அகற்றும் நிகழ்ச்சிகள் சென்னை - பெரியார் திடலில் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிவித்தார்.

இதனைக் கொச்சைப்படுத்தும் வகையில்  தாலி அகற்றும் என்பதை தாலி அறுப்புப் போராட்டம் என்று சில அனாமதேய மதவெறி அமைப்புகள் கொச்சைப்படுத்தி, காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளனர். சில ஏடுகளும் தாலி அறுப்புப் போராட்டம் என்றே செய்திகள் வெளியிடுகின்றன  -விபீஷணத்தனமாக!


தாலி என்பது பெண்ணடிமைச் சின்னமே! இத்தகு பகுத்தறிவுச் சிந் தனை பெண்ணுரிமைச் சிந்தனைகள் தந்தை பெரியார் அவர்களின் அழுத் தமான கருத்து இன்று நேற்றல்ல; 75 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கருத்தை திராவிடர் கழகம் பிரச் சாரம்  செய்து  வருகிறது.


திராவிடர் கழக மேடைகளில், ஏற்கெனவே தாலி அணிந்திருந்த வர்கள் துணைவரின் விருப்பத்தோடு தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்று தான் வருகிறது.


அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது நிறை வேற்றப்பட்ட சுயமரியாதைத் திரு மணச் சட்டத்திலும் தாலி கட்டாய மில்லை. இந்த நிலையில் திராவிடர் கழகம் முன்னெடுக்கும் பெண் ணுரிமைச் சிந்தனைக் கோட்பாட்டை கொச்சைப்படுத்தும் வகையில் தாலி அறுப்புப் போராட்டம் என்று கூறுவது பித்தலாட்டப் பிரச்சாரமாகும்.


தாலி கட்டிக் கொண்ட பெண்கள், கணவனை இழந்த நிலையில் நடை பெறும் மூடச் சடங்குதான் தாலி அறுப்பு என்பது; தாலிஅகற்றலையும் அறுத்தலையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது.  தாலி அடிமைத்தளை அது வேண்டாம் என்று கருதுகிறவர்கள் விரும்பி வந்து அகற்றும் நிகழ்ச்சி தான் அம்பேத்கர் பிறந்த நாளில் (ஏப்ரல் 14 - மாலை 4 மணி) சென்னை பெரியார் திடலில் நடக்க இருக்கிறது.


இது கட்டாயப்படுத்தி நடத்தப் படுவதல்ல - திராவிடர் கழகம் பகுத் தறிவு இயக்கம் - பெண்ணுரிமை இயக்கமாகும்!


பொய்ப் பிரச்சாரம் செய்தாலும் அது வேறு வகையில் பெரியார் திடல் நிகழ்ச்சிக்கு விளம்பரமாகத் தான் முடியும்.


தாலி புனிதம் என்பவர்களுக்கு ஒரு கேள்வி - கழுதைக்கும் கழு தைக்கும் கல்யாணம் என்று தாலி கட்டுகிறார்களே மத நம்பிக்கை யாளர்கள்  - இது தாலியைக் கொச் சைப்படுத்துவது ஆகாதா? அதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை யாம்?

                               ---------------------------”விடுதலை” 29-03-2015
Read more: http://viduthalai.in/e-paper/98755.html#ixzz3Vlx0RjHu

6.12.14

பார்ப்பனியம்,முதலாளித்துவம் இரண்டு எதிரிகள்-அம்பேத்கர்

இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டும்!
{(டிசம்பர்-6) அம்பேத்கர் நினைவு நாள் சிந்தனையாக இக்கட்டுரை பதிவு செய்யப்படுகிறது.}

நண்பர்களே! தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான் பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில் நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. நமது மனிதமே நசுங்குமளவுக்குப் பெரும் சுமைகளை சுமந்தோம் என்னும் குறைபாடு, நமக்கு இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நமது போராட்டத்தால் எந்தப் பயனும் விளையவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. அதே நோக்கில் தீண்டாமையை ஒழிப்பதில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதும் உண்மையில்லை.

மனிதர்களுக்குத் தேவையான சில அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் நாம் இன்னும் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். அரசியல் அதிகாரத்தைப் போராட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறோம் என்பதும் உண்மை. அதிகாரம் இருக்குமானால், விடுதலையும் இருக்கும் என்னும் கூற்றில் உண்மை இருக்கிறது. அதிகாரம் ஒன்றின் மூலம் மட்டுமே விடுதலை பெற முடியும். தடைகளைக் கடந்து தளையிலிருந்து விடுபட முடியும். அரசியல் அதிகாரம் அத்தகைய வீரியம் கொண்டது. மத, பொருளாதார அதிகாரத்தைப் போல் அத்தனை வலிமை அரசியல் அதிகாரத்திற்கு இல்லையென்றாலும், அரசியல் அதிகாரமும் உண்மையில் பலன் தரக் கூடியதாகும்.

புதிய அரசமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வென்றெடுத்த அரசியல் அதிகாரம், சிலரால் பறிக்கப்படுவதும் உண்டு, வீணாகப் போவதும் உண்டு. இதற்கு பகைவர்களின் சூழ்ச்சி, நம்முடன் உள்ள சில தான்தோன்றிகளின், சுயநலப் பேராசைக்காரர்களின் சீர்குலைப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணம். பின்னணியில் ஓர் அமைப்பு இல்லாத அதிகாரமும், பின்னணியில் ஓர் மனசாட்சியில்லாத அதிகாரமும் அதிகாரமே அல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அமைப்பு ரீதியாகத் திரளும் நாள், தங்கள் அதிகாரத்தை உணரும் நாள், அதை அறிவார்ந்த முறையிலும் திறன் வாய்ந்த முறையிலும் பயன்படுத்தி, சமூக விடுதலையை வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!

நம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக இல்லை. சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப் பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே, தீண்டத்தகாதோர் என்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் என்னும் அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம் இன்று திரண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு புதிய திருப்பம். ஆனால், சிலர் இந்தத் திருப்பத்திற்கு ஒரு தீய உள்ளர்த்தம் கற்பிக்கிறார்கள். இதில் நான் பங்கேற்பதற்காக என் மீது எதிர்மறை விமர்சனம் செய்தார்கள். தொழிலாளர் தலைவர்கள் அல்லாமல் வேறு இடத்தில் இருந்து இந்த விமர்சனம் வந்திருந்தால், நான் அதை லட்சியம் செய்திருக்க மாட்டேன். இத்தகைய மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் நாம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகிறோம் என்று தொழிலாளர் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும் போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம். தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால், இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று சொல்லவில்லை. அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது.

----------------------------பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175

7.8.14

பார்ப்பனப் பெண்ணும் துப்புரவுப் பணிப் பெண்ணும்


 

பவுத்தத்தைப் பரப்பிய ஒரு மக்கள் இனம் உண்டென்றால் _ அவர்கள் நாகர்கள்தான் என்பதை, பவுத்த வரலாற்று இலக்கியங்களைப் படித் தவர்கள் அறிவார்கள். ஆரியர்களுடைய மிகக் கடுமையான எதிரிகள் நாகர்கள், ஆரியர்களுக்கும் -ஆரியர் அல்லாத வர்களுக்கும் கடுமையான போர், பல காலம் நடைபெற்றுள்ளது. நாகர்களை, வந்தேறிகளான ஆரியர்கள் எப்படி யெல்லாம் துன்புறுத்தினார்கள் என் பதை புராணங்களில்கூடக் காணலாம்.

புத்தரின் அறிவுரைகளை, நாகர்கள் நாடு முழுவதும் பரப்பினார்கள். எனவே தான், நாம் அனைவரும் நாகர்கள் எனப்பட்டோம். நாகர்கள் பெருமளவில் நாகபுரியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. எனவேதான், இந்நகரம் நாகபுரி எனப் பெயர் பெற்றுள்ளது.
நாம் தன்மானத்திற்காகவே போராடுகின்றோம். மனித இனத்தையே சரியான பாதையை நோக்கி இட்டுச் செல்ல நாம் தயாராகிக் கொண்டிருக் கின்றோம். இதற்காக எந்தத் தியாகத் தையும் செய்ய நாம் தயார். நமக்குரிய உரிமைகளை நாம் வென்றெடுப்போம். நாம் பவுத்தர்களாகி விட்ட பிறகும், நமக்குள்ள அரசியல் உரிமைகளைப் பெற்றிட என்னால் முடியும். (`பாபா சாகேப் அம்பேத்கர் வாழ்க! -_ விண் ணைப் பிளக்கும் அதிரொலியுடன் கைதட்டல்கள்).

நான் இந்துவாகப் பிறந்திருந்தாலும் -_ இந்துவாகச் சாக மாட்டேன் என உறுதி ஏற்றேன். நேற்று அந்த வாக்கை நிறைவேற்றினேன். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி; எல்லையற்ற இன்பம், கடுங்கொடிய நரகத்திலிருந்து விடுதலை பெற்ற உளம்பூரிக்கும் உணர்வு. கண்மூடித்தனமான தொண்டர்கள் எனக்குத் தேவை இல்லை. பவுத்த மார்க்கத்தில் இணைந்திடுபவர்கள், பவுத்த நெறிமுறைகளை மிக நன்றாகப் புரிந்து கொண்டு - உளமாற உணர்ந்து பவுத்தத்தை ஏற்றிட வேண்டும். நாம் இந்துக்களாகவே இருப்பதால்தான், நம்மால் எதையும் செய்ய முடியவில்லை.


இந்து மதத்தில் இருக்கும்வரை, எவரும் முன்னேற முடியாது.
ஏற்றத் தாழ்வு என்ற கட்டுமானத்தின்மேல் கட்டப்பட்டுள்ள இந்து மதம், சிலருக்கு வேண்டுமானால் வசதியாக இருக்க லாம். குறிப்பாக, மேல் ஜாதியினருக்கு வசதியாக இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் நிலை என்ன?
ஒரு பார்ப்பனப் பெண் -_ குழந்தையைப் பெற்றால், அவள் குழந்தையைப் பெற்ற நாள் முதலே -_ எந்த உயர்நீதிமன்றத்தில் நீதிபதியின் நாற்காலி காலியாக உள்ளதோ, எப்பொழுது காலியாகுமோ என்பதைப் பற்றியே குறியாக இருக்கிறார். ஆனால், துப்புரவுப் பணி செய்யும் நம் சகோதரி, ஒரு குழந்தை பெற்றாள் எனில், தாம் பெற்ற குழந்தைக்கும் ஒரு துடைப்பக் கட்டை கிடைக்காதா? என்றே ஏங்கு கின்றாள்.

இப்படிப்பட்ட விந்தையான ஏற்பாடுகள், இந்து மத ஜாதி அமைப்புகள் விளைவித்துள்ள கூறுகளின் வெளிப்பாடே யாகும். இதுபோன்ற தொரு அமைப்பு முறையிலிருந்து நாம் எத்தகைய முன்னேற்றத்தைக் காண முடியும்?

பவுத்த மார்க்கத்தின் மூலம் மட்டுமே நாம் மேம்பாடு அடைய முடியும். நம்மடைய வழியில் நாம் போய்க் கொண்டிருக்கின்றோம். மற்ற வர்கள் அவர்களுடைய வழியில் போகட்டும்.

நமக்கென ஒரு புதிய மார்க்கத்தை நாம் கண்டுள்ளோம். இந்த நாள் ஒரு நம்பிக்கைக்குரிய நாள். வெற்றிக்கு வழிகண்ட நாள். வளமான வாழ்விற்கு வழி கண்ட நாள். மாபெரும் விடுதலை நாள். இவ்வழி ஏதோ புதிய வழி அல்ல. இவ்வழி வேறு எங்கிருந்தோ இங்கு இறக்குமதி செய்யப்பட்டதுமல்ல. இம் மார்க்கம் இங்கிருந்தே தோன்றியது தான்.பவுத்தம், இந்தியாவில் இரண்டா யிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலை பெற்றிருக்கிறது. புத்தரின் அறிவுரைகள் காலத்தால் அழிக்கப்படாதவை.

                    ----------------------------------15.10.1956 அன்று,- அண்ணல் அம்பேத்கர்
நாகபுரியில்  நிகழ்த்திய பேருரை. (இதே இடத்தில்தான் 14.10.1956 அன்று பத்து லட்சம் மக்களுடன் அம்பேத்கர் பவுத்தத்தைத் தழுவினார்)

15.4.14

மனுவும் சூத்திரர்களும்-அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் : ஏப்ரல் 14



மனுவின் திட்டத்தின்படி சதுர்வர்ணத்திற்கு உள்ளே உள்ளவர்கள், சதுர்வர்ணத்திற்கு வெளியே உள்ளவர்கள் என இரண்டு முக்கியமான சமூகப் பிரிவுகள் உள்ளன என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். இன்றைய தீண்டப்படாதவர்கள் சதுர்வர்ணத்திற்கு வெளியே உள்ளவர்களின் நகல்தான். சதுர்வர்ணத்திற்கு உட்பட்டவர்கள் வெளியே உள்ளவர்களுக்கு நேர்மாறானவர்கள். அவர்களை பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்ற நான்கு வேறுபட்ட வகுப்பினரைக் கொண்ட ஒரு கூட்டு அமைப்பு எனலாம்.

சமுதாயச் சிந்தனையை விட வகுப்பைப் பற்றிய எண்ணமே மேலோங்கி ஆட்சி செலுத்தும் ஓர் அமைப்பு இந்து சமுதாய அமைப்பு. அது, வகுப்பினர்களிடையே சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்டது.


எனவே தனி மனிதர்களுக்கிடையே ஏற்றத் தாழ்வை அடிப்படையாகக் கொண்டது. தெளிவாகச் சொல்வதென்றால், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் அந்தியஜாஸ், (தீண்டப்படாதவர்கள்) என்ற வகுப்பினர்கள் எல்லோரும் சமநிலையில் அதாவது ஒரே மட்டத்தில் உள்ளவர்களாக இல்லை. அவர்கள் படிநிலையில் அதாவது ஒருவரைவிட ஒருவர் உயர்வான நிலையில் இருக்கிறார்கள். இந்தக் கூற்றை எந்த இந்துவும் மறுக்க மாட்டார். ஒவ்வொரு இந்துவுக்கும் இது நன்கு புரியும். இதைப்பற்றி ஏதாவது அய்யம் கொள்பவராக யாராவது இருப்பாராகில், அவர் வெளி நாட்டவராகத்தான் இருக்க முடியும். ஆனால் வெளிநாட்டவருக்கு ஏற்படும் அய்யப்பாடு இந்து சமூகத்தின் தலைமைச் சிற்பியான மனுவின் சட்டத்தைப் புரட்டிப் பார்த்தால் கரைந்துபோகும். அந்தச் சட்டங்களின் அடிப்படையில்தான் இந்து சமூகமே கட்டப்பட்டுள்ளது. அவர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காக, இந்து சமூகம் ஏற்றத்தாழ்வுக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் கட்டப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க, மனு ஸ்மிருதியிலிருந்து தேவையான வாசகங்களை எடுத்தெழுதுகிறேன்.
மனு ஸ்மிருதியில் மனுவால் விதிக்கப்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுநிலை, வரலாற்று முக்கியத்துவம் மட்டுமே உள்ள ஒரு நிகழ்வு என்று வாதிடக்கூடும். அது பழைய வரலாறு, மற்றும் இன்றைய இந்துக்களின் வாழ்க்கை நடைமுறையில், அதற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் கூறலாம். இதைவிடப் பெரும் தவறு வேறு இருக்க முடியாது என்று நிச்சயமாகக் கருதுகிறேன். மனு நியதி என்பது ஒரு கடந்தகால நடைமுறையல்ல. தற்காலத்தின் இறந்தகாலத்தைவிட அது அதிகமெய்யானது. அது வாழ்ந்துவரும் கடந்தகாலம். எனவே எந்த நிகழ்காலத்தையும் போலவும் அது ஓர் உண்மையான நிகழ்கால விஷயந்தான்.

மனு நிர்ணயித்திருந்த ஏற்றத்தாழ்வுக் கோட்பாடு பிரிட்டிஷார் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இந்த நாட்டின் சட்டமாக இருந்தது என்பது பல வெளிநாட்டவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம். இதுதான் உண்மையான நிலை என்பதை சில விவரக் குறிப்புகளே தெளிவாகக் காட்டும்.
மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சியின்போது, பேஷ்வாக்களின் தலைநகராக இருந்த புனா நகரத்திற்குள் மாலை 3 மணியிலிருந்து காலை 9 மணிவரை தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், ஒன்பதுக்கு முன்பும் மூன்றுக்குப் பிறகும் அவர்களுடைய உடல்கள் நீண்ட நிழல்களை ஏற்படுத்தியதே இதற்குக் காரணம். இந்த நீண்ட நிழல்கள் ஒரு பிராமணரின் மீது பட்டுவிட்டால் அவர் குளித்துத் தனது தீட்டைப் போக்கிய பிறகே உணவு அருந்தவோ, தண்ணீர் குடிக்கவோ முடியும். இதே போன்று மதில் சுவரால் அரண் செய்யப்பட்ட நகரங்களுக்குள், தீண்டப்படாதவர்கள் வசிக்க அனுமதிக்கப்படவில்லை. கன்று காலிகளும், நாய்களும் சுதந்திரமாக நகருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டாலும், தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் சட்டப்படி தீண்டப்படாதவர்கள், தரையில் துப்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், அவர்கள் எச்சிலை ஓர் இந்து மிதித்தால் அவர் தீட்டுக்குள்ளாகக் கூடும். எனவே, எச்சிலைத் துப்புவதற்காக தீண்டப்படாதவர் தன் கழுத்தில் ஒரு பானையைக் கட்டிச் செல்ல வேண்டுமென்ற விதி இருந்தது. தனது காலடித் தடத்தை அழித்துவிட ஒரு புதர்ச் செடியை இழுத்துச் செல்ல வேண்டுமென்றும் இருந்தது. ஒரு பிராமணன் வருவது தெரிந்தால் தீண்டப்படாதவன் தரையில் குப்புறப்படுத்து தனது நிழல் பிராமணன் மீது விழுவதைத் தவிர்க்க வேண்டுமென்ற நிலையும் இருந்தது.
ஒருவன் தாழ்த்தப்பட்டவன் என்பதைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு அவன் கழுத்தைச் சுற்றியோ, இடுப்பைச் சுற்றியோ கறுப்புக் கயிறு அணிய வேண்டுமென்ற விதி மகாராஷ்டிராவில் நிலவி வந்தது.
குஜராத்தில், தீண்டப்படாதவர்கள் தங்களை வேறுபடுத்திக் காட்டும் சின்னமாக, ஒரு கொம்பை அணிய வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது.
பஞ்சாபில் ஒரு தெருக் கூட்டுபவன் தெருவில் நடந்து செல்லும்போது தான் ஒரு துப்புரவுப் பணியாளன் என்பதை வெளியார் அறிந்துகொள்ள தனது அக்குளில் ஒரு துடைப்பத்தை வைத்திருக்க வேண்டும்.
பம்பாயில், தீண்டப்படாதவர்கள் சுத்தமான துணிகளை உடுத்த அனுமதிக்கப்படவில்லை. கந்தல் துணிகளையே உடுத்த வேண்டும். தீண்டப்படாதவர்களுக்குத் துணிகள் விற்கும்போது, அந்தத் துணிகளைக் கந்தலாக்கியும் அழுக்கடையச் செய்தும் விற்பதில் கடைக்காரர்கள் கவனமாக இருந்தார்கள்.
மலபாரில் தீண்டப்படாதவர்கள் ஒரு மாடிக்கு அதிகமான மாடிகளுடன் வீடுகள் கட்ட அனுமதிக்கப்படவில்லை. இறந்தவர்களை எரியூட்டவும் அனுமதிக்கப்படவில்லை.
குடை எடுத்துச் செல்லவும், காலணிகள் அணியவும், நகைகள் அணியவும், பசுக்களிடமிருந்து பால் கறக்கவும், நாட்டில் சர்வசாதாரணமாகப் புழங்கும் மொழியை உபயோகிக்கவும் மலபாரிலுள்ள தீண்டப் படாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தென் இந்தியாவில் தீண்டப்படாதவர்கள் இடுப்பிற்கு மேலே எந்தத் துணியும் அணியக் கூடாது என்று திட்டவட்டமான விதியிருந்தது. தீண்டப்படாத பெண்மக்களும் உடலின் மேற்பகுதியை மூட அனுமதிக்கப்படவில்லை. பம்பாய் மாகாணத்தில் சோனர்கள் (பொற்கொல்லர்கள்) தங்கள் வேஷ்டியைத் தார்பாய்ச்சி உடுத்திக் கொள்ள அனுமதிக்கப் படவில்லை. ஒருவருக்கு வணக்கம் தெரிவிக்கையில் நமஸ்காரம் என்ற வார்த்தையை உபயோகிக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மராட்டியர்களின் ஆட்சியில் பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் வேத மந்திரங்களை உச்சரித்தால் நாக்கை வெட்டிவிடும் தண்டனை வழக்கத்தில் இருந்ததால் சட்டத்தை மீறி வேதத்தை உச்சரித்த துணிச்சலுக்காக பேஷ்வாவின் ஆணையினால் பல சோனர்களின் நாக்குகள் வெட்டப்பட்டதாக அறிகிறோம்.
இந்தியா முழுவதும் பிராமணர்களுக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விலக்களிக்கப் பட்டிருந்தது. அவன் ஒரு கொலை செய்திருந்தாலும் தூக்குத் தண்டனை விதிக்க முடியாது.
பேஷ்வாக்களின் ஆட்சியில் குற்றவாளிக்கு அவர்களின் ஜாதியின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டது. தீண்டப்படாதவர்களுக்கு எப்பொழுதும் மரண தண்டனையும், கடின உழைப்பும் தண்டனையாக அளிக்கப்பட்டு வந்தன.
பேஷ்வாக்களின் ஆட்சியில் பிராமண எழுத்தர்கள் வாங்கும் பண்டங்களுக்கு சில வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தானியங்களை ஓடங்களில் கொண்டுவருவதற்கு கூலி கிடையாது. பிராமண நிலக்கிழார்களின் நிலங்களுக்கு மற்ற வகுப்பினர்கள் செலுத்தவேண்டிய வரியைவிடக் குறைவாகவே விதிக்கப்பட்டுள்ளது. வங்காளத்தில் நிலத்திற்கான குத்தகை அதை அனுபவிப்பவரின் ஜாதியைப் பொறுத்திருந்தது. தீண்டப்படாதவர் அதிகமான குத்தகை கொடுக்க வேண்டியிருந்தது.
கிறிஸ்து பிறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது சில ஆண்டுகளுக்குப் பின்போ மனு பிறந்திருந்தாலும், இந்த விவரங்கள் அவர் இன்னும் மடிந்துவிடவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்து அரசர்கள் ஆட்சியில் இருந்தபோது இந்துக்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே, தீண்டப்படாதவர்கள் மற்றும் தீண்டத்தக்கவர்களுக்கும் இடையேயான உறவுகள் மனுவின் சட்டப்படி தீர்மானிக்கப்பட்டன. அந்தச் சட்டம் வெளிப்படையாகவே ஏற்றத்தாழ்வின் அடிப்படையில்தான் அமைந்து இருந்தது. இதைத்தான் மனுதர்மம் எடுத்துரைக்கிறது. அது மானவ தர்மம் என்று அழைக்கப்படுகிறது. அதனுடைய உள்ளார்ந்த சிறப்பினால் எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா மக்களுக்கும் அது பொருத்தமானது என்று கருதப்படுகிறது. இந்தியாவுக்கு வெளியே அது வழக்கத்தில் இல்லாதது ஒரு சாபமா அல்லது வரமா என்பதை நான் ஆராயப்போவதில்லை. இந்த மானவ தர்மத்தின்படி பிராமணர்களுக்கு எல்லாச் சலுகைகளும் அளிக்கப் படுவதுடன் சூத்திரர்களுக்கு மனிதப் பிறவி என்ற உரிமைகூட வழங்கப்படவில்லை. பிராமணன் அவனது உயர்ந்த பிறவியின் காரணத்தினால் மட்டுமே, மற்ற எல்லோரையும்விட எல்லா விஷயத்திலும் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான். சூத்திரன் எல்லோருக்கும் கடைசியில் தள்ளப்பட்டதுடன், அவனுடைய மதிப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அவனுக்கு எந்த சமூக அந்தஸ்தும் கிடையாது.

இந்த மானவ தர்மத்தின் வெட்கம்கெட்ட தன்மையையும் இழிவையும் அம்பலப்படுத்துவதற்கு அதைத் தலைகீழாகத் திருப்பிக் காட்டுவதைத் தவிர வேறு சிறந்த வழியில்லை. இப்பணியை கல்வியாளரும், அரசியல்வாதியும் சமூகச் சீர்திருத்தவாதியுமான டாக்டர் ஆர்.பி.பராஞ்சபேயைவிட வேறு யாரும் சிறப்பாகச் செய்துவிடவில்லை எனத் துணிந்து கூறலாம். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துகளை முழுவதுமாக அளிப்பதில் மிக்க மனநிறைவு பெறுகிறேன்.

எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வை
பம்பாய், சென்னை ராஜதானி மற்றும் மத்திய மாகாணங்களில் ஆட்சி புரிந்து வந்த பிராமணர்கள் அல்லாத கட்சிகளுக்கு எதிராக எழுதப்பட்டது இந்தக் கட்டுரை. அரசுப் பணிகளில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு, வகுப்பினருக்கு மட்டும் ஏகபோகம் இருக்கக்கூடாது என்ற தெளிவான குறிக்கோளின் அடிப்படையில்தான் பிராமணர்கள் அல்லாதவர்களின் கட்சிகள் துவங்கப்பட்டன. இந்தியாவில் எல்லா மாகாணங்களிலும் சமஸ்தானத்தில் எல்லாத் துறைகளிலும் அரசுப் பணிகளில் அனேகமாக பிராமணர்களின் ஆதிக்கமே முற்றிலும் ஏகபோகமாக இருந்தது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்று அறியப்பட்ட கொள்கையைப் பிராமணரல்லாத கட்சியினர் முன்வைத்தனர். அதாவது, குறைந்த தகுதியுடையவர்களை அரசுப் பணிகளில் வேலைக்கு அமர்த்தும்போது பிராமண வகுப்பினரைச் சேர்ந்தவர்களைவிட பிராமணர்கள் அல்லாதவர்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்க வேண்டுமென்ற கோட்பாடுதான் அது. இந்தக் கொள்கையில் எந்தவிதத் தவறும் இருப்பதாக என் பார்வையில் தெரியவில்லை. ஒரு தனிப்பட்ட வகுப்பினரின் கைப்பிடியில், அந்த வகுப்பினர் எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்தாலும், ஒரு நாட்டின் நிர்வாகத்தையே கொடுப்பது சந்தேகத்துக்கிடமின்றி தவறு என்று கூறலாம்.

ஒரு நல்ல அரசு ஒரு திறமையான அரசைவிடச் சிறந்தது என்ற கருத்தைப் பிராமணர்கள் அல்லாதவர்களின் கட்சி கொண்டிருந்தது. ஆனால், இது சட்டமன்றத்துக்கும் ஆட்சித்துறைக்கும் மட்டுமே உரித்தான கொள்கையாக இருந்துவிடக் கூடாது. மாறாக, அது நிர்வாக விஷயங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நிர்வாகத்தின் மூலமே ஓர் அரசு மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்கிறது. எந்த ஒரு நிர்வாகமும் அனுதாபத்துடன் செயல்படாவிட்டால் நன்மைகளைச் செய்ய முடியாது. பிராமணர்கள் மட்டுமே பொறுப்பில் இருந்தால் அந்த நிர்வாகம் அனைவரிடமும் அனுதாபத்துடன் செயல்பட முடியாது. மற்ற பொதுமக்களைவிட தன்னை மேன்மையாகக் கருதுபவன் ஒரு பிராமணன்; மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியினர், சூத்திரர்கள் என்று இகழ்பவன், அவர்களுடைய விருப்பங்களுக்கு எதிராகச் செயல்பட்டு, இயற்கையிலேயே தன் வகுப்பினருக்குச் சாதகமாகச் செயல்படுபவன். மக்களின் மீது அக்கறையில்லாததால் ஊழலுக்குப் பலியாகிறவனாக இருக்கும் இப்படிப்பட்ட ஒரு பிராமணன் எப்படிச் சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்? மற்ற எந்த அன்னியர்களையும் போலவே அவனும்  இந்தியப் பொதுமக்களுக்கு அன்னியனே. இதற்கு மாறாக, சுத்த சுயம்புவான திறமையே எல்லாம் என்ற நிலையைப் பிராமணர்கள் எடுக்கிறார்கள். கல்வியில் அவர்கள் முன்னணியில் இருப்பதன் காரணத்தால் இந்தத் துருப்புச் சீட்டைத்தான் வெற்றிகரமாகப் பயன்படுத்த முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். திறமை மட்டுமே அளவுகோலாக இருந்தால், அரசுப் பணிகளை இந்த அளவுக்கு ஏகபோகமாக வைத்திருக்க அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். திறமைதான் எல்லாவற்றையும்விட மிக முக்கியமானதென்றால் ஒரு ஆங்கிலேயரையோ, பிரெஞ்சு, ஜெர்மன் அல்லது துருக்கி நாட்டவரையோ, வேலைக்கு அமர்த்துவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. இது இப்படியென்றால் பிராமணரல்லாத கட்சியினர், திறமை மட்டுமே எல்லாம் என்று மூடத்தனமாக அதைப் பின்பற்றக் கூடாது, அரசுப் பணிகளில் வகுப்புவாரி விகிதாசாரம் புகுத்தப்பட வேண்டும், நிர்வாகத்தில் எல்லா வகுப்பினரின், பிரிவினரின் கூட்டமைப்பும் இருந்தால்தான் அது ஒரு நல்ல நிர்வாகமாக அமையுமென்று அவர்கள் பதவியில் இருந்தபோது எண்ணினர். நிர்வாகத்தில் பிராமண ஆதிக்கத்தை நீக்கும் ஆர்வத்தில் இந்தக் கொள்கையை அமலுக்குக் கொண்டுவருவதில், அரசுப்பணிகளில் பிராமணர்கள் மற்றும் பிராமணர்கள் அல்லாதவர்களிடையே ஒரு சமநிலை ஏற்படுத்தும் முயற்சியில் குறைந்த அளவு திறமை என்ற வரையறைக்கு தங்களை உட்படுத்திக்கொண்டதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். ஆனால் தங்களுக்கு வழிகாட்டியாக அவர்கள் மேற்கொண்ட கொள்கை பொதுமக்களின் நன்மைக்கு உகந்ததல்ல என்று இதற்கு அர்த்தமல்ல.

இந்தக் கொள்கை பிராமணர்களைப் பெருங்கோபத்திற்குள்ளாக்கியது. அவர்கள் கோபத்தின் உச்சியில் இருந்தனர். பிராமணர்கள் அல்லாத கட்சியினரின் கொள்கையைப் பற்றி டாக்டர் பரஞ்சிபே ஒரு மிகச் சிறந்த நையாண்டிச் சித்திரத்தை வெளியிட்டார். பிராமணர் அல்லாத கட்சியினரின் கொள்கைகளை அது பயங்கரமாக நையாண்டி செய்கிறது. அது வெளிவந்தபோது பல பிராமணரல்லாத தலைவர்கள் சினமுற்றதுடன் மௌனமாகிப் போயினர். டாக்டர் பரஞ்சிபே மீது எனது குற்றச்சாட்டு அதிலுள்ள நகைச்சுவையை அவர் பார்க்க மறுத்ததுதான்.
பிராமணரல்லாதவர்கள் கட்சி புதிதாக ஒன்றையும் செய்துவிடவில்லை. மனு ஸ்மிருதியைத் தலைகீழாக மாற்றினர். அதைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள். மனு சூத்திரர்களுக்கு எந்த இடத்தைக் கொடுத்தாரோ அந்த இடத்தைப் பிராமணர்களுக்குக் கொடுத்தார்கள். ஒருவன் பிராமணன் என்பதற்காகவே மனு அவனுக்குச் சலுகைகள் அளிக்கவில்லையா?

சூத்திரர்கள் உரிமைகள் பெறத் தகுதி பெற்றிருந்தும் மனு அந்த உரிமைகளை மறுக்கவில்லையா? இப்பொழுது சூத்திரர்கள் என்பதற்காகவே சில சலுகைகள் அளித்ததால் அதைப் பற்றி, குறை கூற முடியுமா? அது அபத்தமாகத் தோன்றலாம். ஆனால், இந்த விதிக்கு முன் உதாரணம் இல்லாமல் இல்லை. மனு ஸ்மிருதிதான் அந்த உதாரணம். பிராமணர்கள் அல்லாத கட்சியின் மீது யார் கல்லெறிய முடியும்? பிராமணர்கள் பாவம் செய்யாமலிருந்தால் அவர்களால் முடியும். ஆனால் மனு ஸ்மிருதியை உயர்த்திப் பிடிக்கும், வணங்கிப் போற்றும் அவர்கள் பாவிகள் இல்லை என்று சொல்ல முடியுமா? மானவ தர்மத்தின் ஏற்றத் தாழ்வுக் கொள்கைக்கு ஒரு சிறந்த சவுக்கடிதான் டாக்டர் பரஞ்சிபேயின் இந்தக் கட்டுரை. ஒரு சூத்திரனின் நிலையில் ஒரு பிராமணனை வைத்தால் அவன் எப்படி அதை எதிர்கொள்வான் என்பதை இதைவிட எதுவும் படம்பிடித்துக் காட்ட முடியாது.
இந்துக்கள் மட்டுந்தான் ஏற்றத்தாழ்வுக் கொள்கையைக் கொண்டிருந்தனர் என்று கூற முடியாது. மற்ற இடங்களிலும் இது நிலவியிருந்தது. இதுதான் சமுதாயத்தை உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் சுதந்திரமானவர்கள் அடிமைகள் என்றும் பிளவுபடுத்தியது.

 -------------------------------டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் (நூல் தொகுப்பு: தொகுதி 25) என்ற நூலிலிருந்து.

இந்து மதம் பற்றி அண்ணல் அம்பேத்கர்

இந்து மதம் ஒரு மிஷனரி மதமா? - அதாவது பிற மதத்தாரை இந்துக்களாக்கும் மதமா? அல்லவா? என்பதைப் பற்றி ஒரு காலத்து வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. இந்து மதம் ஒரு காலத்தும் மிஷனரி மதமாக இருக்கவில்லை யெனச் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். சிலர் மிஷனரி மதமாக இருந்ததெனக் கூறினர். ஆனால், ஒரு காலத்து இந்து மதம் மிஷனரி மதமாக இருந்ததென்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியதுதான். அது மிஷனரி மதமாக இருந்திராவிட்டால் இந்தியா முழுவதும் பரவியிருக்க இடமில்லை.

ஆனால், இன்று இந்து மதம் மிஷனரி மதமாக இருக்கவில்லை என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். எனவே, இந்த மதம் இப்பொழுது மிஷனரி மதமாயிருக்க முடியாததாயிற்று என்பதே எனது அபிப்பிராயம். மத மாற்றத்துக்கு சாதிக்கும் சம்பந்தமில்லை. மதமாற்றத்துக்கு மதக்கோட்பாடுகளும் நம்பிக்கையும் முக்கிய அம்சங்களாக இருக்கவில்லை. மதமாற்றம் பெற்றவனுக்குச் சமூக வாழ்வில் ஒரு இடம் அளிப்பது ஒரு முக்கியமான பிரச்சினை. மதமாற்றம் பெற்றவனுக்கு எங்கு இடமளிப்பது? அவனை எந்தச் சாதியில் சேர்ப்பது என்பது மதமாற்றத்தையொட்டிய முக்கியப் பிரச்சினைகளாக இருக்கின்றன. எனவே, அந்நியர் களை இந்து மதத்தில் சேர்க்க இந் துக்கள் தயங்குகிறார்கள். கிளப்க ளில் எல்லோரும் சேர்த்துக் கொள் ளப்படுவதுபோல் சாதியில் எல் லோரும் சேர்த்துக் கொள் ளப்படு வதில்லை. அந்தந்தச் சாதியில் பிறந்தவர்களே அந்தந்தச் சாதி யில் அங்கமாக இருக்க முடியும்.

சாதிகள் சுயமாகவே சர்வாதிகாரமுடையவை. மற்றவர் களைச் சாதியில் சேர்த்துக் கொள்ளும்படிச் செய்ய எவருக்கும் அதிகாரமில்லை. இந்துச் சமூகம் பல சாதிகள் சேர்ந்த ஒரு கதம்பமாயிருப்பதனாலும், ஒவ்வொரு சாதியும் கட்டுப்பாடாக அமைக்கப்பட்டிருப்பதனாலும், மதமாற்றம் பெற்றவர்கள் அங்கு இடம்பெற முடியாது. இந்து மதம் பரவாமலிருப்பதற்கும் பிற மதத்தார்களைத் தன்னுள் சேர்த்துக் கொள்ளாததற்கும் சாதியே காரணமாக இருக்கிறது. சாதி இருக்குமட்டும் இந்து மதம் மிஷனரி மதமாக இருக்கவே முடியாது. சுத்த முட்டாள்தனமான சடங்கு; அதனால் பயன் ஏற்படவே செய்யாது.

----------------------- அம்பேத்கர் எழுதிய சாதியை ஒழிக்க வழி எனும் நூலிலிருந்து

16.5.12

சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்த அம்பேத்கர்


அம்பேத்கர் அவமதிப்பு

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பது என்பது உயர்ஜாதி வர்க்கத்திற்கு வாடிக்கையாகவே இருந்து வருகின்றது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அம்பேத்கர் சட்ட வரைவுக் குழுவுக்குத் தலைவராக இருந்ததால்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஏராளமான குறைபாடுகள் ஏற்பட்டன என்று பூரி சங்கராச்சாரியார் என்ற பார்ப்பனர் கூறியதுண்டு.

பார்ப்பன எழுத்தாளரான அருண் ஷோரியும் அம்பேத்கரை அவமதித்து எழுதியதுண்டு. அதனைக் கண்டித்துத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இரண்டு நாள் தொடர் சொற்பொழிவுகளை சென்னை பெரியார் திடலில் ஆற்றினார்.

அம்பேத்கர் அவர்களே ஒரு முறை மிக அழகாக அதே நேரத்தில் ஆழமான கருத் தினைக் கூறினார்.

பார்ப்பனர்களுக்கு இராமாயணம் தேவைப்பட்டது. ஒரு வால்மீகியை அழைத் தனர் - வால்மீகி பார்ப்பனர் அல்லர்; பார்ப்பனர்களுக்கு ஒரு மகாபாரதம் தேவைப் பட்டது; வியாசரை அழைத்தனர்- வியாசர் பார்ப்பனர் அல்லர்; அவர்களுக்கு அரசமைப்புச் சட்டம் தேவைப் பட்டது - என்னை அழைத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்பனர்களுக்குத் தேவைப்படும் பொழுது நம் மக்களைப் பயன்படுத்திக் கொள்வார்களே தவிர, மற்றபடி அங்கீகரித்துவிட மாட்டார்கள்.

முதல் சட்ட அமைச்சராக - காங்கிரஸ்காரராக இல்லாத அம்பேத்கரை நியமித்துக் கொண்டார்கள். இந்துத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வர அவர் முயற்சித்த போது, தொடக்கத்தில் அவருக்குப் பச்சைக் கொடி காட்டிய பிரதமர் நேரு அவர்கள் - கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டாரே! தனக்குக் கொள்கைதான் பெரிதே தவிர பதவியல்ல என்று சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்து விட்டு வெளியேறிய இலட்சியவாதியல்லவா அண்ணல் அம்பேத்கர்.

இவ்வளவுக் காலத்திற்குப் பிறகு சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் 11 ஆம் வகுப்புப் பாடத்தில் கேலிப்படம் போட்டு, அவரை இழிவு படுத்துகின்றனர் என்றால் எவ்வளவு ஆணவம் இருக்க வேண்டும்?

நத்தை மீது அம்பேத்கர் அமர்ந்து செல்வது போலவும், சாட்டை கொண்டு நேரு அவரை விரட்டுவது போலவும் கேலி சித்திரம் தீட்டுகின்றனர் என்றால் இதன் உள்நோக்கம் என்ன?

என்.சி.ஈ.ஆர்.டி. என்பது பொதுவாக இந்துத்துவாவாதிகள் ஊடுருவி இருக்கும் அமைப்புதான். தலைவர் பிற்படுத்தப்பட்டவராக இருந்தாலும் அவ்வமைப்புக்குள் ஊடுருவி யிருக்கும் பார்ப்பன சக்திதான் இந்த வேலையைச் செய்திருக்க முடியும்.

தலைவர் பதவி விலகிவிட்டார் என்பதோடு விட்டு விடாமல், இதற்குக் காரணமான பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுவது அவசியமாகும்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் இந்துத்துவா வெறியைப் பிஞ்சு உள்ளங்களில் திணிக்கும் வேலை இன்னொரு பக்கத்தில் நடந்து கொண்டு தானிருக்கிறது.

இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தை (Indian Counsil for Historical Research) முற்றிலுமாகக் காவிமயமாக்கப்பட்டது பா.ஜ.க. ஆட்சியில் - இந்திய வரலாறு தலைமுறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (Bomb Factories) மாற்றப்பட்டு விட்டது என்று ஃப்ரண்ட் லைன் ஏட்டில் விரிவான கட்டு ரைகளே வெளிவந்தன என்றால் தெரிந்து கொள்ளலாமே! ஃபாசிஸ்டுகள் எங்கிருந்தாலும் கல்வியில் நஞ்சைக் கக்குவார்கள் எச்சரிக்கை!

------------------"விடுதலை”தலையங்கம் 15-5-2012

16.2.12

அம்பேத்கருக்கும் பூணூலா?

விட்டால் அண்ணல் அம்பேத்கருக்கும் பூணூல் போட்டு விடுவார்கள் போலிருக்கிறது.
ஒப்பற்ற தேசியத் தலைவர்! என்று தலைப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். வார ஏடான விஜயபாரதம் எழுதுகிறது.

நாகபுரியில் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி அவர் புத்த மதத்தைத் தழுவினார் (மதம் அல்ல - மார்க்கம்!) அவருடன் ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட சகோதரர்களும் புத்த மதத்தில் இணைந்தனர்.

தாழ்த்தப்பட்டவன் தீண்டாத்தகாதவன் என்றெல்லாம் சொல்லி, அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் கணக்கற்றவை. எனினும் அவர் தீண்டாமைப் பிரச்சினையை தேசியக் கண்ணோட்டத்துடன் அணுகினார். புத்த மதத்தில் இணைவதற்கு அவர் கூறிய காரணங்கள் இதைத் தெளிவாக்குகின்றன.

புத்த மதம் பாரதீய இந்து கலாச்சாரத்தில் பிரிக்கப்பட முடியாத அங்கம். எனவே, இந்த மாற்றத்தால் இந்த நாட்டின் கலாச்சாரத்திற்கோ, பாரம்பரியத்திற்கோ எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்

இவ்வாறு அண்ணல் அம்பேத்கர் சொன்னதாக ஆர்.எஸ்.எஸ். வார இதழ் வழக்கம் போல தனது வக்கணைப் புத்தியை, திரிபு வாதக் கொள்ளியைச் கழற்றிச் சொல்லி இருக்கிறது.

நாக்பூரில் அண்ணல் இந்து மதத்தை விட்டு உதறி புத்த மார்க்கத்தில் இணைந்த போது அவரும், அவரைச் சார்ந்த லட்சோப லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களும் (ஆயிரக் கணக்கில் என்று விஜயபாரதம் புளுகு வதைக் கவனிக்கவும்) இணைந்த போது மேற்கொண்ட உறுதிமொழிகளையும் வெளியிட்டு இருந்தால் அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பது.

அவர்களால் அதனை எடுத்துப் போட முடியாது. காரணம் அவர் அதில் இந்து மதத்தின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றியிருக்கிறாரே! அவர்கள் வெளியிடா விட்டால் என்ன? விடுதலை இதோ வெளியிடுகிறது.

1956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணாசிரம இந்து மதத்தி லிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த் தப்பட்ட தோழர்களும் பவுத்தம் தழுவியபோது அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும், மற்றவர்களும் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள் இதோ:

1. பிரம்மனையோ, விஷ்ணுவையோ, சிவனையோ நான் கடவுள் என்று கருத மாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

2. இராமனையோ, கிருஷ்ணனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன்; அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

3. இந்துத் தெய்வங்களான கவுரி, கணபதி, இத்தியாதிகளை நான் கடவுள் என்று ஏற்க மாட்டேன்; அவைகளை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

4. கடவுள் பிறவி எடுத்ததாகவோ, எந்தவொரு உருவத்தில் அவதாரம் செய்ததாகவோ நான் நம்பமாட்டேன்.

5. பகவான் புத்தர்; மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப்பிரச்சாரம் செய்வது விஷமத்தன மானது, தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

6. சாவு சம்பந்தப்பட்ட இந்து மதச் சடங்கான சிரார்த்தத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்; இறந்தவர்களின் பெயரால் நான் பிண்டம் கொடுக்கவும் மாட்டேன்.

7. பவுத்தத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக நான் என்றுமே நடக்க மாட்டேன்.

8. பார்ப்பனர்களால் நடத்தப்படும் சமஸ்காரங்கள் எதனையும் நான் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட் டேன்.

9. அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.

10. சமத்துவத்தை நிலைநாட்ட நான் முயல்வேன்.

11. பகவான் புத்தர் காட்டிய எட்டு அம்ச வழியை நான் பின்பற்றுவேன்.

12. தம்மதத்தின் 12 பரமிதங்களையும் நான் பின்பற்றுவேன்.

13. எல்லா உயிர்ப் பிராணிகளிடத்தும் நான் கருணை காட்டுவேன்; அவைகளைக் காக்க முயலுவேன்.

14. நான் பொய் சொல்லமாட்டேன்.

15. நான் திருட மாட்டேன்.

16. காமத்தில் நான் உழல மாட்டேன்; பாலுணர்வில் அத்துமீற மாட்டேன்.

17. போதைக்குக் காரணமான குடியையோ, மதுவையோ நான் அருந்த மாட்டேன்.

18. ஞானம், கருணை, அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையிலான புத்தரின் போதனைகளுக்கு இணங்க என் வாழ்வை உருவாக்க நான் முயலுவேன்.

19. பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும், சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும், மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டு விட்டு இன்று புத்த மதத்தைத் கைக் கொள்ளுகிறேன்

20. புத்த தம்மமே சிறந்த மார்க்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

21. இன்று புதிய பிறவி எடுக்கிறேன் என்று நான் நம்புகிறேன்.

22. புத்த தம்மத்துக்கு இணங்கவே இன்று முதல் நான் செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன். இந்த உறுதி மொழிகளில் இந்து மதத்தின் மீது ஏதாவது அபிமானம் காணப்படுகிறதா?

நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னவர் தம் வாழ்நாளில் அதனைச் சாதித்துக் காட்டினார்.

உண்மை இவ்வாறு இருக்க, மத மாற்றத்தால் இந்து மதக் கலாச்சாரத்துக்கோ பாரம்பரியத்திற்கோ எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று சொன்னாராம் அண்ணல். எங்கே சொன்னார்? எப்பொழுது சொன்னார்? ஆதாரத்துடன் வெளியிட வேண்டாமா? கொஞ்சம் அசந்தால் அண்ணல் அம்பேத்கர் அவர்களை அய்யங்காராக்கிப் பூணூலையும் போட்டு விடுவார்கள் போலும்!

------------------- “விடுதலை” 16-2-2012 இதழில் - கறுஞ்சட்டை - எழுதிய கட்டுரை

19.12.11

தீண்டாமையைக் கடைபிடித்த முகமதியர்கள்! -அம்பேத்கர்

மகமதியரும் தீண்டாமை பாராட்டினர்!

நான் ஒப்புக் கொண்டால் ஒரு சுற்றுலா செல்ல விரும்புவதாக, எங்கள் இயக்கத்தின் சகதோழர்கள் சிலர் 1934-இல் தெரிவித்தார்கள்; நானும் ஒப்புக் கொண்டேன். வெரூலில் உள்ள புத்தமதக் குகைகளையும் நமது சுற்றுப் பயணத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நாசிக்குச் சென்று மற்றவர்களுடன் நான் சேர்ந்து கொள்வது என்று ஏற்பாடு ஆயிற்று. வெரூல் செல்ல நாம் அவுரங்காபாத் செல்ல வேண்டும். அய்தராபாத் மேதகு நிஜாம் அவர்களின் மகமதிய சமஸ்தானத்தின் ஆளுமைக்குட்பட்ட ஒரு நகரம் அவுரங்காபாத்.

அவுரங்காபாத் செல்லும் முன் தவுலாபாத் என்னும் மற்றொரு நகரத்தை நாம் கடக்க வேண்டும்; இதுவும் நிஜாமின் அய்தராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. தவுலா பாத் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நகரம்; புகழ் பெற்ற இராம்தியோ ராய் என்ற இந்து மன்னரின் தலைநகராக அது ஒரு காலத்தில் விளங்கியது. தவுலாபாத் கோட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நினைவுச் சின்னம் என்பதால், அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதைக் காணத் தவறுவதில்லை. அதன்படி தவுலாபாத் கோட்டையைப் பார்ப்பது என்பது எங்கள் பயணத் திட்டத்திலும் சேர்க்கப்பட்டது.

சில சுற்றுலாக் கார்களையும் பேருந்துகளையும் நாங்கள் வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். நாங்கள் மொத்தம் 30 பேர் இருந்தோம். நாங்கள் நாசிக்கில் இருந்து புறப்பட்டு அவுரங்காபாத் செல்லும் வழியில் உள்ள யியோலாவுக்குச் சென்றோம். எங்களது சுற்றுப் பயணத்தை நாங்கள் வேண்டுமென்றே வெளிப்படையாக அறிவிக்கவில்லை. நாட்டின் புறநகர்ப் பகுதிகளில் தீண்டத்தகாத மக்கள் எதிர்கொள்ள வேண்டிய இடையூறுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் யார் என்பது வெளியில் தெரியாதவாறு பயணம் செய்ய விரும்பினோம். நாங்கள் தங்குவது என்ற முடிவு செய்த இடங்களில் இருக்கும் எங்கள் மக்களுக்கு மட்டும் நாங்கள் எங்கள் பயணத் திட்டத்தைத் தெரிவித்திருந்தோம். அதனால் நிஜாம் சமஸ்தானத்தில் பல கிராமங்களை நாங்கள் கடந்து சென்றபோது எங்கள் மக்கள் எவரும் வந்து எங்களைச் சந்திக்கவில்லை. ஆனால் நாங்கள் வருகிறோம் என்று தவுலாபாத் நண்பர்களுக்குத் தெரிவித்து இருந்ததால், எங்களை எதிர்பார்த்து அவர்கள் நகரின் வாயிலில் நின்று கொண்டிருந்தனர். வண்டியிலிருந்து இறங்கி, தேநீரும் சிற்றுண்டியும் அருந்திவிட்டு, பின்னர் கோட்டையைக் காணச் செல்லலாம் என்று அவர்கள் கூறினார்கள். எங்களுக்கு அப்போது தேநீர் மிகவும் தேவையாக இருந்தபோதும், இருட்டும் முன் கோட்டையைக் காண, போதிய நேரம் தேவை என்று கருதியதால் அதனை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் உடனே கோட்டைக்குப் புறப்பட்ட நாங்கள் திரும்பி வரும்போது தேநீர் அருந்துவதாக அவர்களிடம் கூறினோம். அதன்படி எங்கள் ஓட்டுநர்களை விரைந்து செல்லும்படி கூறினோம்; கோட்டை வாயிலுக்குச் சில நிமிடங்களில் நாங்கள் வந்து சேர்ந்தோம்.

அந்த மாதம் மகமதியர்களுக்குப் புனிதமான ரம்ஜான் மாதமாக இருந்தது. கோட்டை வாயிலுக்கு எதிரில் விளிம்பு வரை நீர் நிறைந்த ஒரு குளம் இருந்தது. அதனைச் சுற்றி ஒரு கல்நடைபாதை இருந்தது. பயணத்தின்போது எங்கள் உடைகளும், உடலும், முகமும் தூசு படிந்து அழுக்காகி இருந்த படியால், நாங்கள் முகம் கழுவிக் கொள்ள விரும்பினோம். அதிகமாக யோசனை செய்யாமல், எங்களில் சிலர் அந்தக் குளத்தின் கரையில் நின்று கொண்டே தங்களின் முகம், கை, கால்களைக் கழுவிக் கொண்டனர். பின்னர் நாங்கள் கோட்டை வாயிலுக்குச் சென்றோம். கோட்டையினுள் ஆயுதந்தாங்கிய இராணுவ வீரர்கள் இருந்தனர். பெரிய கதவுகளைத் திறந்து அவர்கள் எங்களை உள்ளே செல்லவிட்டனர். கோட்டையினுள் செல்வதற்கு அனுமதி பெற என்ன செய்ய வேண்டுமென்று நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தபோது, எங்களுக்குப் பின்னாலிருந்து, அந்தத் தீண்டத்தகாதவர்கள் குளத்தை அசுத்தப்படுத்தி விட்டார்கள் என்று கத்திக் கொண்டு நரைத்துப் போன தாடி கொண்ட ஒரு வயது முதிர்ந்த மகமதியர் வந்தார். உடனே அங்கிருந்த மகமதிய இளைஞர்கள், முதியவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து கொண்டு எங்களைத் திட்டத் தொடங்கினர். தீண்டத்தகாதவர்களுக்கு மிகவும் திமிராகி விட்டது. தங்களின் இழிந்த ஜாதியையும், தாங்கள் அடங்கி ஒடுங்கி இருக்கவேண்டும் என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்கள்.

அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று எங்களை அவர்கள் பயமுறுத்துவது போல் பேசிக்கொண்டே போனார்கள். நாங்கள் வெளியூர்க்காரர்கள் என்றும், உள்ளூர்ப் பழக்க வழக்கங்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது என்றும் நாங்கள் கூறினோம். அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த உள்ளூர்த் தோழர்கள் மீது அவர்கள் கோபம் திரும்பியது. இந்தக் குளத்தைத் தீண்டத்தகாதவர்கள் பயன்படுத்த முடியாது என்று நீங்கள் ஏன் இந்த வெளியூர்க்காரர்களுக்குக் கூறவில்லை என்ற கேள்வியை அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நாங்கள் குளத்துக்குப் போனபோது அவர்கள் அங்கே வந்தே சேரவில்லை. எங்கள் தவறு அல்ல என்று அவர்கள் மறுப்புத் தெரிவித்தார்கள். எதையும் கேட்காமல் செய்தது எங்கள் குற்றம்தான் அது. ஆனால் மகமதியர்கள் எனது விளக்கத்தைக் கேட்கத் தயாராக இருக்கவில்லை. எங்களை அவர்கள் தொடர்ந்து இழிவான சொற்களில் திட்டிக்கொண்டே இருந்தது எங்களை வெறுப்படையச் செய்தது. வெகு எளிதாக அங்கே கலகம் ஏற்பட்டு அதனால் மரணம் கூட சம்பவித்திருக்க இயலும். என்றாலும் நாங்கள் ஒருவாறு எங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டோம். எங்களது சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் எந்தக் குற்றவியல் வழக்கிலும் சிக்கிக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

ஒவ்வொருவரும் அவரவர் மதத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அங்கிருந்த ஒரு மகமதிய இளைஞர் கூறிக் கொண்டே இருந்தான். ஒரு பொதுக் குளத்திலிருந்து தீண்டத் தகாதவர்கள் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதையே அவன் குறித்துக் கூறினான். எனது அமைதியை இழந்த நான் அவனிடம் கோபமான குரலில், அதுதான் உன் மதம் உனக்குப் போதிக்கிறதா? ஒரு தீண்டத்தகாதவன் முஸ்லிமாக மாறி விட்டால், இக் குளத்திலிருந்து அவன் தண்ணீர் எடுப்பதை நீ தடுப்பாயா? என்று கேட்டேன். இந்த நேரடியான கேள்விகள் அந்த மகமதியர்களைப் பாதித்தன. எந்தப் பதிலும் அளிக்காமல் அவர்கள் அமைதியாக நின்றனர். காவல்காரரிடம் திரும்பிய நான் கோபமாகவே கேட்டேன், கோட்டைக்குள் நாங்கள் போக முடியுமா, முடியாதா என்று சொல். போகமுடியாது என்றால் இங்கே நின்றுகொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை என்று கேட்டேன். என் பெயரைக் கேட்ட அவர், நான் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்ததை எடுத்துக் கொண்டு கோட்டைக் கண்காணிப்பாளர் அறைக்குச் சென்று பின்னர் திரும்பி வந்தார். கோட்டைக்குள் போகலாம் என்று எங்களிடம் கூறிய காவலர், கோட்டைக்குள் எந்த இடத்தில் இருக்கும் தண்ணீரையும் நாங்கள் தொடக்கூடாது என்று கூறினார். அதை நாங்கள் மீறிவிடாமல் இருக்க, எங்களுடன் ஒரு ஆயுதந்தாங்கிய வீரர் அனுப்பப்பட்டார்.

ஓர் இந்துவுக்குத் தீண்டத்தகாதவர் எவ்வாறு ஒரு பார்சிக்கும் தீண்டத்த காதவர் ஆகிறார் என்பதற்கு நான் ஓர் எடுத்துக் காட்டு அளித்திருந்தேன். இப்போது இந்த நிகழ்ச்சி ஓர் இந்துவுக்குத் தீண்டத்தகாதவர் ஒரு மகமதியருக்கும் தீண்டத்தகாதவரே என்பதைக் காட்டுகிறது.

----------------------"விசாவுக்காக காத்திருக்கிறேன்" என்னும் நூலிலிருந்து டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நினைவலைகள் ....

21.7.11

புத்தர் கொள்கை, மதம்போல் ஆகிவிட்டதா?

பவுத்தர் அம்பேத்கர்

நூல் : அம்பேத்கர் வாழ்வும் பாடமும்
ஆசிரியர் : சு. அறிவுக்கரசு
வெளியீடு : விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர் - 641 001
பக்கங்கள் 128 விலை ரூ.65/-

இந்த நூலிலிருந்து...

இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும் என முடிவு செய்த பாபாசாகேப் அம்பேத்கர் பவுத்தத்தைத் தேர்ந்தெடுத்தார். மெட்ரிகுலேஷன் தேறியதற்காக அவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அவருக்குப் பரிசளிக்கப்பட்ட புத்தரின் வரலாறு நூல் அவருள் பலத்த கருத்து மாற்றத்தை விளைவித்தது. அதன் பயனாக புத்தம் தொடர்பான எல்லா நூல்களையும் படித்து அலசி ஆய்ந்தார். பார்ப்பன மேலாண்மை, வல்லாண்மை, ஜாதிக் கொடுமை போன்ற இந்துமதக் கொடுமைகளிலிருந்து மக்களை விடுவிக்கும் நோக்குடன் கவுதம புத்தர் நடத்திய சமுதாயப் புரட்சியின் விளைவுதான் பவுத்தம் என்பதைத் தெளிந்து தெரிவித்தார். ஆரிய வைதீக சனாதன இந்து மதத்தின் மூடக் கொள்கைகளான ஆன்மா, கர்மா தத்துவம், பூர்வஜென்ம வினைப்பயன், மறுஜென்மம் போன்றவற்றைப் பவுத்தம் எதிர்த்தது என்பதையும் விளங்கி மக்களுக்கும் விளக்கமளித்தார். புத்தரின் தர்மம் எனும் தலைப்பில் அவற்றை எடுத்துக் கூறினார்.

நான் யார், எங்கிருந்து வந்தேன், எங்கே போவேன் என்பன போன்ற வேதாந்த விசாரணைகளில் மனிதன் ஈடுபட்டுக் காலத்தை வீணாக்குவதைப் புத்தர் கண்டித்தார்.

ஆன்மா என்பதைப் பொய் என்றார். அதை உடலோடும் புலன்களோடும் உணர்வோடும் உயிரோடும் வைத்து எண்ணுவதைக் கண்டித்தார். ஆன்மா என ஒன்றில்லை என்று தெளிவாகக் கூறினார்.

உலகத்தைக் கடவுள் படைத்தது என்பதை அவர் ஏற்கவில்லை.

மனிதனையும் விலங்குகளையும் உயிர்களையும் கடவுள் படைத்தது என்பதை புத்தர் மறுத்தார்.

ஊழ்வினை என்பதை, மனிதனுக்கும் உலகிற்கும் எதிர்காலத்தில் நேரப் போவதைக் கடவுள் முன் முடிவு செய்து வைத்திருக்கிறது என்பதை அவர் ஒதுக்கித் தள்ளி, நம்ப மறுத்தார்.

சென்ற பிறவியில் செய்யப்பட்ட செயல்களின் தாக்கம் இப்பிறவியில் துன்பமுறச் செய்கிறது என்பதை அவர் ஒதுக்கித் தள்ளினார்.

மனம் பொருள்களுக்கு முந்தியது. அதுவே செயல்திறன் அனைத்துக்கும் தலைமையானது, மனத்தைப் பண்படுத்தும் பணியே முதலில் கவனிக்கப்பட வேண்டியது. இது கருத்துமுதல் வாதம். அறிவியல் கண்ணோட்டம் பொருள்முதல் வாதத்தை முன் வைக்கிறது. இதனை ஏற்காத அம்பேத்கர், பொருள்முதல் வாதத்தைக் கண்டித்தார். கம்யூனிசத்தைக் கண்டித்தார். பவுத்த நாடுகளில் கம்யூனிசம் பரவியதைக் கண்டித்தார்.

பிரபஞ்சத்தைப் படைத்தது கடவுள் என்பதைப் புத்தர் மறுத்தார். ஜைனமதமும் மறுக்கிறது. கடவுள் இருக்கிறது என்கிற கோட்பாட்டை புத்தர் ஏன் நிராகரித்தார் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன என்கிறார் அம்பேத்கர். கடவுளைக் கண்டவர் யாருமில்லை; ஆனால் கடவுளைப் பற்றிப் பேசுகிறார்கள். கடவுள் அறியப்படவும் இல்லை, காணப்படவும் இல்லை. கடவுள் உலகைப் படைக்கவில்லை. உலகம் பரிணமித்ததே தவிர படைக்கப்பட்டதல்ல. கடவுளை அடிப்படை யாகக் கொண்ட எந்த ஒரு மதமும் ஏற்பதற்கு உரியதல்ல. அது மூடநம்பிக்கையை உருவாக்குவதிலேயே முடியும்.

கடவுள் எல்லா வல்லமையும் பெற்றதாகவும் அனைத்துப் படைப்புக்கும் காரணமாகவும் இருக்குமேயானால், மனிதன் தானே எதையும் செய்ய இயலாதவனாகவும் எதையும் செய்யத் தேவை அற்றவனாகவும் ஆகிவிடுவானல்லவா? உலக விவகாரங்களில் பங்கேற்க லாயக்கில்லாத, செயல் ஊக்கமில்லாத அற்ப ஜீவனாக மட்டுமே மனிதன் நீடிக்க வேண்டி ஆகுமே! இதுதான் மனிதனின் கதி என்றால், அவன் ஏன் படைக்கப்பட வேண்டும்? (தன்னை வணங்குவதற்காக மனிதனைக் கடவுள் படைத்தது என்று இஸ்லாம் கூறுகிறது. அற்பத் தன்மைக்கு இது ஓர் அடையாளம்.)

கடவுள் நல்ல மனதுடையது என்றால், பின் அது படைத்த மனிதர்கள் ஏன் கொலைகாரர்களாக, திருடர்களாக நேர்மையற்றவர்களாக, பொய்யர்களாக, பழிநிறைந்த செயல் செய்பவர்களாக, தீய செயல் புரிபவர்களாக உருவாகிறார்கள்? இதற்கும் கடவுள்தானே காரணம்? அனைத்துக்கும் காரணமானது கடவுள் என்றால், கடவுள் நல்லதாக இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா?

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நீதிமானாக, கருணைமிக்கதாகக் கடவுள் இருக்குமேயானால் உலகில் ஏன் இவ்வளவு அநீதிகள் நிலவுகின்றன? எங்கும் துயரங்கள் நிறைந்திருக்கின்றனவே, தம்மால் படைக்கப் பெற்றவற்றை ஏன் கடவுள் சரிப்படுத்தக் கூடாது? எல்லையற்ற ஆற்றல் உடையது கடவுள் என்றால், எல்லாவற்றையும் நல்லனவாக்க ஏன் அதனால் முடியவில்லை? அதனால் படைக்கப்பட்டவை ஏன் பாதிப்புக்கும் துன்ப துயரத்துக்கும் ஆளாகின்றன? எல்லோருக்கும் ஏன் இன்பத்தை அளிக்கவில்லை? உண்மையும் நியாயமும் ஏன் தோல்வி அடைகின்றன? இத்தனை தீமைகளுக்கும் காரணமான கடவுளும் அநீதியானதே!

மதம் என்பதே மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு பற்றியதாக இருக்க வேண்டும். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவுக்குப் பாலமாக இருக்கக் கூடாது என்றார் புத்தர்.

புத்தர் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டிருந்தார். கூடுவிட்டுக் கூடு பாயும் (சன்சாரா) மறுபிறப்பு முறை என்பது புத்தரின் புதுப்பிறப்புக் கோட்பாட்டால் மாற்றியமைக்கப்பட்டது என்கிறார் அம்பேத்கர்.

புத்தரின் கோட்பாட்டின்படி, ஓர் உடலை உருவாக்கும் தனிமங்கள் நான்கு மட்டுமே! ப்ரித்வீ, அப்பு, தேஜ் மற்றும் வாயு எனப்படும் நிலம், நீர், தீ, காற்று ஆகியன. இந்நான்கு மூலங்களும் சேர்ந்ததுதான் உடல். பஞ்ச பூதங்கள் எனப்படுவதற்குப் பதில் நான்கு பூதங்கள் என்கிறது பவுத்தம். இந்தக் கருத்தையே பழங்கால சார்வாகம் கூறியது. வானம் என்பது மூலம் (தனிமம்) அல்ல என்பது இதன் கருத்து. வானத்துக்கும் மனித உடலுக்கும் தொடர்பில்லை.

உடல் (இறந்து) இயற்கையடைந்தபின், இந்த நான்கு மூலங்களும் அழிந்து போகின்றன என்பதை புத்தர் ஏற்கவில்லை. அவை விண்ணில் மிதக்கும் அவற்றையொத்த மூலங்களின் தொகுதியோடு இணைந்துவிடுகின்றன என்றார் புத்தர். அப்படி இணையும்போது புதிய பிறப்பு இடம் பெறுகிறது என்கிறது பவுத்தம்.
ஆணின் உயிரணு பெண்ணின் சினையுடன் காற்றும் வெளிச்சமும் புக முடியாத கருவறைப் பகுதியில் இணையும்போது புதிய உயிர் உருவாவதாக அறிவியல், வெட்ட வெளியில் காற்றும் வெளிச்சமும் கரியும் தூசும் கண்டதும் கலந்து மிதக்கும் விண்ணில் மிதக்கும் மூலங்களோடு செத்த உடலின் மூலங்கள் கலப்பதால் புதிய உயிர் பிறக்கிறது என்று புத்தம் கூறுகிறது. அந்தப் புதுப்பிறப்பு மனித உயிரா? விலங்கா? புழுவா? பூச்சியா? மரமா? செடியா? கொடியா? கொடிய பாம்பா?

மறுபிறப்பு பற்றிக் கூறும் பவுத்தக் குழப்பம் இப்படியாக இருக்கிறது. குழப்பம் தீர, சிறு விளக்கமும் உண்டு. இறந்த ஒரே உடலிலிருந்து வெளிவந்த மூலங்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லையாம். வெவ்வேறு இறந்த உடல்களிலிருந்து சேர்ந்த தொகுதியிலிருந்து ஈர்க்கப்பட்டு இருக்கலாமாம். உடல்தான் மரணிக்கிறது. மூலங்கள் எப்போதும் வாழ்கின்றன என்கிற ஒரு மாதிரியான மறு பிறப்பிலேயே புத்தர் நம்பிக்கை கொண்டிருந்தார் என டாக்டர் அம்பேத்கர் எழுதுகிறார்.

திராவிட இயக்கக் கவிஞர் ஒருவர் 1946இல் பாடினார்.

நரியது ஒன்று இறந்ததாலோ - இந்த நாட்டில் அமைச்சன் பிறந்து விட்டான்?
வெறிகொண்ட குக்கல் இறந்ததாலோ - இங்கு
வீரப்பேச்சாளன் பிறந்து விட்டான்?

..................

சிந்திப்பீர் நீங்கள் இறந்த பின்னர் - பெறும்
திருவடிவம் என்ன செப்புவீரா?

இதை எழுதிப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் பவுத்த மறுபிறப்பை ஏற்று வாதாடினார் பாரிஸ்டர் அம்பேத்கர். பகுத்தறிவுவாதிகள் ஏற்க முடியாத நிலை!

பவுத்தத்தைத் தழுவுவதற்கு முன்பு, பல மதங்களைப் பற்றியும் எடைபோட்டுப் பார்த்து எழுதும்போது கிறித்துவத்திற்குப் போனால் கிறித்துவர்களின் எண்ணிக்கை கூடிவிடும் என்பதால் ஒதுக்கிவிட்டார். முஸ்லீம் மதத்தைப் பற்றிய விமர்சனம் வந்தால் அதனைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத மதம் அது; மேலும் இசுலாமியர்களின் எண்ணிக்கை கூடிவிட்டால், பாகிஸ்தான் கோரிக்கை வலுவாகிவிடும். சீக்கிய மதத்திற்குப் போகலாமா என்று சிந்தித்து வருகிறேன் என்கிற மாதிரியாகப் பேசினார். தம் தளபதிகளில் சிலரைப் பஞ்சாபிற்கு அனுப்பி நேரிடையாகவே, அம்மதம் பற்றியும் மக்கள் பற்றியும் அறிந்துவரச் செய்தார். இதை அறிந்ததும் இந்துக்கள் மனம் மகிழ்ந்தனர். சட்டப்படி, சீக்கியர்களும் இந்துதானே! பவுத்தம், சமணம், சீக்கியம் ஆகியவை இந்து மதத்திலிருந்து பிரிந்து போனவைதானே! இந்து மதப் பிரிவுகள்தான் என்கிற எண்ணம் இந்துமதத் தலைவர்களுக்கு! குறிப்பாக, விநாயக தாமோதர சவர்க்கார் எனும் இந்து மகாசபைப் பார்ப்பனருக்கு மகிழ்ச்சியும் மன நிம்மதியும்! மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக் கொடுத்துவிட்டு, அந்தமான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, மராட்டிய மாநிலம் ரத்தினபுரி மாவட்ட எல்லையைத் தாண்டக்கூடாது என்கிற ஆங்கில அரசின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டுக் கையெழுத்துப் போட்டு முடங்கிக் கிடந்த வீர சவர்க்கார் சீக்கிய மதமாற்றத்தை வரவேற்றார்.

ஆனால், சீக்கிய மதத்தின் நிலை வேறுவிதமாக இருந்தது. குருநானக் போதித்தவை வேறு: நடைமுறையில் காணப்படும் நிலை வேறு! இந்து மதத்தைப் போலவே அதிலும் ஜாதிப் பிரிவினைகள். ஜாட், சுத்ரி, அரோரா போன்ற உயர்ஜாதிகளோடு, பார்ப்பனச் சீக்கியர்களும் உண்டு. தாழ்த்தப்பட்ட ஜாதிகளும் உண்டு. சமர் ஜாதியிலிருந்து சீக்கியரானவர்கள் ரவிதாசிய சீக்கியர் எனப்பட்டனர். நெசவாளர் ஜாதியிலிருந்து சீக்கியரானவர்கள் ராம்தாசா சீக்கியர் எனப்பட்டனர். பங்கி ஜாதியைச் சேர்ந்தவர்கள் சீக்கிய மதத்தில் மனூபி சீக்கியர் எனப்பட்டனர். இந்நிலை டாக்டர் அம்பேத்கரின் மனதை உறுத்தியது. சீக்கியத்தை மறுதலித்து விட்டார். பவுத்தக் கொள்கைகளை எவ்வித விமர்சனமுமின்றி ஏற்று பவுத்தராக 14.10.1956இல் மாறினார்.

புதுடில்லி மகாபோதி சங்கச் சார்பிலான கூட்டத்தில் 5.2.1956இல் பேசும்போது, மறுபிறப்பில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. மறுபிறப்பு என்பது தடுக்க முடியாது என்பதை விஞ்ஞானிகளுக்கு என்னால் நிரூபித்துக்காட்ட முடியும். என்னுடைய கருத்துப்படி, இயற்கை சக்திகள் மாறியிருக்கின்றனவே தவிர மனிதன் மாறவில்லை என்றார்.

மாறுவது ஒன்றுதான் மாறாதது என்றார் தந்தை பெரியார். மனிதன் மாறவில்லை என்றார் அம்பேத்கர். மறுபடியும் ஒரு மாறுபாடு.

இப்போது புத்தர் கொள்கை, மதம்போல் ஆகிவிட்டது. பர்மா, சிலோன் முதலிய இடங்களில் சாயபு என்றால் என்ன அடையாளம் உண்டோ, அதுபோல பவுத்தனுக்கும் கோயில், மண்டி போடுதல் இவையெல்லாம் பவுத்தமத அடையாளமாகி மதமாகிவிட்டது. இதைத்தான் நான் அம்பேத்கரிடம் சொன்னேன். இந்து மதத்தில் உள்ள பார்ப்பனருக்குப் பயந்து அங்கு போனால் இந்தப் பிட்சுகளைக் கட்டிக்கொண்டு யாரால் அழமுடியும் என்று தந்தை பெரியார் 1956இல் பேசினார். (விடுதலை 29.12.1956).

------------------- “உண்மை” ஜூலை 16-31 2011

14.4.11

நான் தேவையில்லாமல் இந்து மதத்தைக் குற்றம் சொல்லவில்லை -அம்பேத்கர் விளக்கம்


இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது

இந்த நாட்டில் நிலவும் இத்தகைய சூழல், புத்துணர்வற்ற நிலையை இனி ஆயிரம் ஆண்டு காலத்திற்கு அளித்துவிடும். இந்தச் சூழல் நிலவும் வரை, நம்முடைய முன்னேற்றத்திற்கானப் புத்துணர்வு ஒருபோதும் கிடைக்காது. இந்த மதத்திலிருந்து கொண்டு நாம் இதை எதிர்கொள்ளவே முடியாது.

மநுஸ்மிருதியில் சதுர் வர்ணம் இருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு முறை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக் கூடியது.
சூத்திரர்கள் அனைத்து வகையான இழிவான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று மநுஸ்மிருதி கூறுகிறது. அவர்களுக்கு ஏன் கல்வி அளிக்கப்பட வேண்டும்? பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க வேண்டும். சத்ரியன் ஆயுதங்களை எடுக்க வேண்டும். வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும். ஆனால், சூத்திரர்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும். இந்த அமைப்பு முறையை யார் அழித்தொழிப்பது? இந்த அமைப்பு முறையில், பார்ப்பனன், சத்ரியன், வைசியன் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகை பயன் இருக்கிறது. ஆனால், சூத்திரர்களுக்கு என்ன இருக்கிறது? இந்த மூன்று வர்ணத்தைத் தவிர, பிற சாதியினருக்குப் புத்துணர்வு எப்படி வரும்? சதுர்வர்ண முறை என்பது ஒரு வழக்கமல்ல. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது, அதுதான் மதம்.

இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. நான் ஒரு முறை காந்தியை சந்தித்தபோது, அவர் சொன்னார், ‘நான் சதுர்வர்ணத்தை நம்புகிறேன்.' நான் சொன்னேன்: உங்களைப் போன்ற ‘மகாத்மா'க்கள்தான் சதுர்வர்ணத்தை நம்புகிறார்கள். ஆனால், இந்த சதுர்வர்ணம் என்பது என்ன? சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது? இந்தக் கேள்விக்கு காந்தி பதில் சொல்லவில்லை. அவர் என்ன பதில் சொல்ல முடியும்? நம்மை அழித்தவர்களும் இந்த மதத்தால் அழிக்கப்படுவார்கள். நான் தேவையில்லாமல் இந்து மதத்தைக் குற்றம் சொல்லவில்லை. இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.

இந்து மதத்தில் படிநிலைப்படுத்தப்பட்ட ஜாதி முறையில், மேலிருக்கும் வர்ணத்தைச் சார்ந்தவர்கள்தான் பயன் பெற்றார்கள். மற்றவர்களுக்கு என்ன பயன்? ஒரு பார்ப்பனப் பெண் குழந்தை பெற்றால், அவருடைய மனம் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி எப்பொழுது காலியாகும் என்பது பற்றி சிந்திக்கிறது. ஆனால், இதற்கு நேர் மாறாக நம்முடைய துப்புரவுத் தொழிலாளர் பெண்மணி குழந்தை பெறும்போது, அரசாங்கத்தில் ஒரு துப்புரவுப் பணி எப்பொழுது காலியாகும் என்று நினைக்கிறார். இந்து மதத்தின் வர்ண அமைப்பு முறை தான் இத்தகைய விந்தையான சமூக அமைப்புக்கு காரணம். இதிலிருந்து என்ன வகையான மேம்பாட்டை நாம் காண முடியும்? பவுத்த மதத்தின் மூலமே நீங்கள் எதையும் சாதிக்க முடியும்.

பவுத்த மதத்தில் 75 சதவிகித பிக்குகள் பார்ப்பனர்களாக இருந்தார்கள். 25 சதவிகிதம் சூத்திரர்களும் மற்றவர்களும் இருந்தனர். ஆனால், புத்தர் சொன்னார் ‘பிக்குகளே! நீங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். அந்தந்தப் பகுதிகளில் ஓடும் ஆறுகள் தனித்தனியாகப் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், அவை கடலில் சங்கமிக்கும்போது, தங்களின் அடையாளத்தை இழந்து விடுகின்றன. அவை ஒன்றாகக் கலந்து விடுகின்றன. பவுத்த சங்கம் கடலைப் போன்றது. இந்த சங்கத்தில் அனைவரும் சமம். எல்லாரும் கடலில் கலந்த பிறகு கங்கை நதி தண்ணீரையோ, மகாநதி தண்ணீரையோ தனியாக அடையாளப்படுத்திப் பார்க்க முடியாது. அதேபோல, நாம் பவுத்த சங்கத்தில் சேர்ந்த பிறகு நாம் நம்முடைய சாதிகளை இழந்து சமமாகிறோம்.' இத்தகைய சமத்துவத்திற்கான கொள்கைப் பிரச்சாரத்தை மாமனிதர் புத்தர் மட்டுமே செய்தார்.

சிலர் என்னைக் கேட்கிறார்கள்: மதம் மாறுவதற்கு இவ்வளவு நாட்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு மதத்தை வலியுறுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அது தனி ஒரு மனிதனின் பணியும் அல்ல. மதத்தைப் பற்றி சிந்திக்கும் யாரும் இதைப் புரிந்து கொள்ள முடியும். உலகில் யாரும் சுமக்காத அளவுக்கு நான் பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறேன். நான் நீண்ட நாட்கள் வாழ்ந்தால், நான் திட்டமிட்ட இந்தப் பணியை முடித்தே தீருவேன். ஒரு மகர் பவுத்தராக மாறினால் என்ன நடக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். நீங்கள் இவ்வாறு கேட்கக் கூடாது. அது ஆபத்தானது. உயர்ந்த வசதியான வகுப்பினருக்கு மதம் தேவையில்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு பெரிய பங்களாக்களும், அவர்களுக்கு வேலை செய்ய வேலையாட்களும், பணமும், சொத்தும், மரியாதையும் கிடைக்கும். இத்தகைய மனிதர்கள் மதத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால், ஏழை மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மதம் தேவையாக இருக்கிறது. ஏழை மனிதன் நம்பிக்கையில்தான் வாழ்கிறான். அவனுடைய வாழ்க்கையின் வேரே நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை அவன் இழக்க நேரிட்டால், அவனுடைய வாழ்க்கை என்னவாகும்? மதம் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பயப்படாமல் இருக்க, நம்பிக்கையான வாழ்க்கையை அளிக்கிறது. எனவேதான் ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள், மதத்தின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்.

----------------15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து....

( அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் சிந்தனையாக இச் சொற்பொழிவு வெளியிடப்படுகிறது)

16.10.10

அம்பேத்கர் தொண்டர்களின் சிந்தனைக்கு ...


1956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணாசிரம இந்து மதத்திலிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட தோழர்களும் பவுத்தம் தழுவியபோது அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும், மற்றவர்களும் எடுத்துக்கொண்ட உறுதி மொழிகள்

1.பிரம்மனையோ விஷ்ணுவையோ சிவனையோ நான் கடவுள் என்று கருத மாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

2.இராமனையோ, கிருஷ்ணனையோ நான் கடவுள் என்று கருதமாட் டேன்; அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

3.இந்துத் தெய்வங்களான கவுரி, கணபதி, இத்தியாதிகளை நான் கடவுள் என்று ஏற்க மாட்டேன்; அவை களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

4.கடவுள் பிறவி எடுத்ததாகவோ, எந்தவொரு உருவத்தில் அவதாரம் செய்ததா கவோ நான் நம்பமாட்டேன்.

5.பகவான் புத்தர்; மகா விஷ்னுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப் பிரச்சாரம் செய்வது விஷமத்தனமானது, தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

6.சாவு சம்பந்தப்பட்ட இந்து மதச் சடங்கான சிரார்த்தத்தை நான் ஒரு போதும் செய்யமாட்டேன்; இறந்தவர்களின் பெயரால் நான் பிண்டம் கொடுக்கவும் மாட்டேன்.

7.பவுத்தத்தின் கோட்பாடு களுக்கு எதிராக நான் என்றுமே நடக்க மாட்டேன்.

8.பார்ப்பனர்களால் நடத்தப் படும் சமஸ்காரங்கள் எதனையும் நான் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட் டேன்.

9.அனைவரும் சமம் என்ற கொள்கையே நான் நம்புகிறேன்.

10.சமத்துவத்தை நிலைநாட்ட நான் முயல்வேன்.

11.பகவான் புத்தர் காட்டிய எட்டு அம்ச வழியை நான் பின்பற்றுவேன்.

12.தம்மதத்தின் 12 பரமிதங்களையும் நான் பின்பற்றுவேன்.

13.எல்லா உயிர்ப் பிராணிகளிடத் தும் நான் கருணை காட்டுவேன்; அவைகளைக் காக்க முயலுவேன்.

14.நான் பொய் சொல்லமாட்டேன்.

15.நான் திருட மாட்டேன்.

16.காமத்தில் நான் உழல மாட்டேன்; பாலுணர்வில் அத்துமீற மாட் டேன்.

17.போதைக்குக் காரணமான குடியையோ, மதுவையோ நான் அருந்த மாட்டேன்.

18.ஞானம், கருணை, அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையிலான புத்தரின் போதனைகளுக்கு இனங்க என் வாழ்வை உருவாக்க நான் முயலுவேன்.

19.பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும் சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும், மனிதர் களின் விடுதலைக்குக் கேடாக இருப்பது மான இந்து மதத்தை நான் கைவிட்டு விட்டு இன்று புத்த மதத்தைத் கைக் கொள்ளுகிறேன்

. 20.புத்த தம்மமே சிறந்த மார்க்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

21.இன்று புதிய பிறவி எடுக்கிறேன் என்று நான் நம்புகிறேன்.

22.புத்த தம்மத்துக்கு இணங்கவே இன்று முதல் நான் செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

--------------- நன்றி :- “விடுதலை” 14-10-2010

14.4.10

பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு பற்றி அண்ணல் அம்பேத்கர்

புரட்சியாளர் அண்னல் அம்பேத்கர் அவர்களின் 120 ஆம் ஆண்டு (1891-ஏப்ரல்14) பிறந்த நாள் நினைவாக அண்னலின் சிந்தனையை உங்கள் முன் சமர்பிக்கிறோம்.


****************************************************************************
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன்?

அரசமைப்புச் சட்டத்தின் 15வது பிரிவில் புதிய இணைப்பு (திருத்தம்) தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த விரும்பத்தகாத சூழலுக்கு மூலகாரணம், நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள்தான். இந்தத் தீர்ப்பை வழங்கியது, சென்னை உயர்நீதிமன்றம்.

1. சென்னை (எதிர்) திருமதி செண்பகம் துரைராஜன் 2. வெங்கட்ராமன் (எதிர்) சென்னை அரசு. இந்த இருவரின் வழக்குகளால், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற நிலை உருவாகியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற கருத்தை மய்யமாகக் கொண்டு நீதி மன்றம் தன்னுடைய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் விளைவாக, சாதி ரீதியான அரசாணை (Communal G.O.) உருவானது. இந்த அரசாணை செல்லாது என்று சட்ட வல்லுனர்களும், நமது மேதகு நாடாளுமன்ற அங்கத்தினர்களும் கூக்குரலிடுகின்றனர்.

அரசியல் அமைப்புச் சட்டம் 16(4) பிரிவு, மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி அல்லது எழுந்துள்ள தேவைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை முழுவதுமாக வழங்குகிறது. இந்த 16(4) பிரிவு, அரசமைப்புச் சட்டத்தின் 29ம் பிரிவுடன் முரண்படுவதால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு தரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.

மேலும், ‘சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது கூடாது; அது முற்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களிடையே பாரபட்சத்தைத் தோற்றுவித்துவிடும்' என்று உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளது. நான், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளையும் கூர்ந்து படித்தேன். இந்த இரண்டு தீர்ப்புகளும் மிகுந்த அதிருப்தியைத் தருகிறது.

இந்தத் தீர்ப்புகள், நமது அரசியல் சாசனத்தின் பிரிவுகளோடு ஒத்துப் போகவில்லை. இது, என்னுடைய வாதம். உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகளுக்காக நான் வருந்துகிறேன். (நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம். சபாநாயகர் இடைமறித்து, அம்பேத்கர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார். ஆனால், அம்பேத்கர் அதைப் பொருட்படுத்தவில்லை)

அரசியல் சட்டப் பிரிவு 29(2)இல், ‘மட்டும்' என்ற வார்த்தையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே இவற்றை நான் கருதுகிறேன். மதம், இனம் அல்லது ஆண், பெண் பேதம் ஆகியவற்றை ‘மட்டும்' அடிப்படையாகக் கொள்ளக் கூடாது. இது 29(2)இன் பொருள். இங்கு "மட்டும்' என்ற வார்த்தை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனிக்கவில்லை என்பது என்னுடைய வாதம்.

‘சாதியற்ற இந்துக்கள்' என்று இந்நாட்டில் எவரும் இல்லை. ஒவ்வொரு இந்துவுக்கும் சாதி உண்டு. பார்ப்பனர், மகராட்டா, குன்பி, கும்பார் அல்லது ஒரு தச்சன் இவர்களில் யாரும் சாதியை விட்டு வாழும் இந்துவாக இல்லை.

இந்த நாட்டில், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினராக இந்து மதத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்து மதத்தின் பன்னெடுங்கால கொடுமைக்கு ஓர் இடைக்காலத்தீர்வாக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சில உரிமைகள் வழங்குவது மிகவும் அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொள்ளும் போது, நமது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓர் அதிருப்தியான தீர்ப்பாகும்.
நான், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டவனாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அந்தத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. இது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள சுயேச்சையான உரிமை. இதை விட்டுவிட நான் தயாராக இல்லை. இதுவே என்னுடைய அழுத்தமான முடிவாகும்.

மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 46வது பிரிவு, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வகையான நலன்களை உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும் மாநில அரசுகளுக்கு போதிய அதிகாரத்தை நிர்ணயித்துள்ளது.

இந்த அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை, நாடாளுமன்றத்திற்கு எழுந்துள்ளது. நாடாளுமன்றம் 16(4) மற்றும் 29 ஆகிய பிரிவுகளை விரிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் பிரிவு 15 போதிய விளக்க இணைப்பு (சட்டத் திருத்தம்) சேர்க்கப்பட வேண்டும். இது, ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான உயர்வை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க உதவும்.

----------------பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 15 பக்கம் : 331

4.2.10

டாக்டர் அம்பேத்கரின் ஆசைகள் சமூக ஜனநாயகம் இருக்கிறதா? - 2



அவுட்லுக் வார ஏட்டில் ‘Ambedkar’s Desiderata’ எனும் தலைப்பில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ராமச்சந்திர குகா எழுதிய கட்டுரையின் முக்கிய பகுதிகள், இந்தியக் குடியரசின் 60 ஆம் ஆண்டு நிறைவையொட்டி தமிழில் தரப்படுகிறது.

நேற்றைய தொடர்ச்சி...

இத்தகைய முரண்பாடுகள் மலிந்த வாழ்க்கையை எவ்வளவு காலத்திற்கு நாம் வாழப் போகிறோம்? என்ற கேள்வியை எழுப்பிய அம்பேத்கர், எவ்வளவு காலத்திற்குத்தான் சமூக வாழ்க்கையிலும் பொருளாதார நிலையிலும் சமத்துவத்தை மறுத்துக் கொண்டிருக்கப் போகிறோம்? நீண்ட காலத்திற்கு சமத்துவத்தை மறுதலித்துக் கொண்டே இருப்போமானால், அரசியல் ஜனநாயகத்தை நாம் சவக்குழிக்கு அனுப்பப் போகிறோம் என்றே பொருள்படும்! மிக விரைவில் இத்தகைய முரண்பாடுகளைக் களையவேண்டும்; இல்லையேல், ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் கிளர்ந்து எழுந்து அரசியல் நிர்ணயசபை கட்டித் தந்துள்ள அரசியல் ஜனநாயகத்தை உடைத்து நொறுக்கிவிடுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்தார்.

சமமற்ற நிலையில் சரித்திர காலம் முதல் அவதிப்பட்டு வரும் இரண்டு பிரிவினர்கள் பற்றி இந்தியஅரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அட்டவணை இனத்தாரும் ஆதிவாசிகளுமே அந்த இரு பிரிவினர். அரசியல் நிர்ணய சபையில் ஆதிவாசிகளின் பிரதிநிதியாகக் குரல் கொடுத்தவர், ஜெய்பால் சிங் முண்டா ஆவார். நல்ல குணங்-களும் சிறப்பான நடையுடை பாவனைகளும் கொண்ட அவர் இன்றைய நிலையிலும் நினைவு கூர வேண்டியவராவார். அவர் சிறந்த ஹாக்கி ஆட்டக்காரர். 1928 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றபோது அணியின் தலைவராக இருந்து வழிநடத்தி வெற்றிக்கு வழி வகுத்தவர். நல்ல ஆற்றல் மிக்க பேச்சாளர். இந்தியா இறையாண்மை மிக்க ஜனநாயக நாடாக விளங்கும் என்கிற தீர்மானத்தை அவையில் ஜவகர்லால் நேரு, முன் மொழிந்தபோது, ஜெய்பால் உணர்ச்சிகரமான முறையில் அவருடைய இன மக்களின் கண்ணோட்டத்தில் வரவேற்றுப் பேசினார். காட்டில் வசிக்கும் ஆதிவாசி ஆகிய நான் இத்தீர்மானத்தைப் பற்றிய சட்டப் பிரச்சினைகள் என்ன என்பதை அறியேன். ஆனால் என் பொது அறிவு எனக்குக் கூறுவதெல்லாம், நாம் அனைவரும் ஒன்று பட்டு விடுதலைப் பாதையில் சென்று ஒற்றுமை யுடன் போராட வேண்டும் என்பது தான்.

ஆகவே, இந்திய மக்களில் மிகவும் மோசமாக நடத்தப்படுபவர் கள் என்னுடைய இனமக்கள்தான். கடந்த 6 ஆயிரம் ஆண்டுக் கால மாகப் புறக்கணிக்கப் பட்டு மிகக் கேவலமாக நடத்தப்பட்டு வருபவர்கள் எம் இனத்தவர். சிந்து வெளி நாகரிகத்தின் குழந்தை நான். இந்த நாட்டுக்குப் புதிதாக நுழைந்து வந்த வர்களாகிய நீங்கள் எல்லோரும் வந்தேறிகள் என்றுதான் நான் கருது கிறேன்; நீங்கள் எம் இன மக்களை சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து காட்டுக்குத் துரத்தி விட்டீர்கள். எம் இன மக்களின் வரலாறு முழுவதும், தொடர்ந்து கொடுமைக்கு ஆளாக்கப் பட்டதும், இந்நாட்டில் பூர்வ குடிகள் அல்லாதவர்களால் கைப்பற்றிக் கொள்ளப்பட்டதுமான வாழ்க்கை என்றாலும், பண்டித ஜவகர்லால் நேருவின் சொற்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் வார்த்தைகளையும் நான் நம்புகி றேன். நாம் ஒரு புதிய அத்தியாயத் தைத் தொடங்கவிருக்கிறோம். சுதந் தர இந்தியாவில், சம வாய்ப்பு நிலவி ஒருவர் கூட அலட்சியப்படுத்தப்படாத நிலையை உருவாக்க விருக்கிறோம் என அவர் முழங்கினார்.

இந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. ஜெய்பாலின் ஆதிவாசி இன மக்கள் மிகமிகக் குறைவாகவே எதையும் அடைந்தார்கள். ஆறு தலை முறை காலத்தில் தேர்தல் ஜனநாயகத்தில் அனைத்தையும் இழந்தார்கள். கல்வி பெறுவதில், சுகாதார வசதிகளில், கவுரவமான பணிகளைப் பெறுவதில் தாழ்த்தப்பட்டவர்களை விடவும் மோசமாக அவர்கள் இருக்கிறார்கள். இதற்கிடையில் பல பத்து லட்சக் கணக்கான ஆதிவாசிகள்அணைக் கட்டுகள், தொழிற்சாலைகள், சுரங்-கங்கள் போன்றவற்றை அமைக்கிறோம் என்ற போர்வையில் உற்பத்தியாளர்களும் நுகர்வோர்களும் பலன் பெற காட்டிலிருந்தும் அவர்கள் விரட்டப்பட்டு விட்டனர். அவர்களது உடைமைகள் அவர்களிடமிருந்து பிடுங்கப்படும் நிலை (சுதந்தரத்திற்கு முன்பு நிலவியதைப் போல) இன்றும் தொடர்கிறது...

1947க்கும் 1950க்கும் இடைப்பட்ட காலத்தில், இந்திய அரசியல் தலைவர்களின் பணியே ஒன்று பட்ட நாட்டை உருவாக்குவதாக இருந்தது. இப்போது 2010 இல் நாடு துண்டாடப்படும் என்கிற நிலை கிடையாது. ஆனாலும் 60 ஆண்டுகாலத் தேர்தல் ஜனநாயகத்திற்குப் பிறகும்கூட சமத்துவம் இல்லாமையும் ஏணிப்படி போன்ற அமைப்பும் நிலவிக் கொண்டிருக்கிறது. ஆண்களை விடப் பெண்களின் நிலை மோசம். நகர்ப்புற மக்களை விட கிராமப்புற மக்களின் நிலை மோசம். பார்ப்பனர்களின் நிலையை விடத் தாழ்த்தப்பட்டோரின் நிலை மோசம். தாழ்த்தப்பட்டவரின் நிலையைக் காட்டிலும் ஆதிவாசிகளின் நிலை மோசம்...

இந்திய அரசியல் நிர்ணய சபையில் நிகழ்த்திய இறுதிச் சொற்பொழிவில் டாக்டர் அம்பேத்கர் இவ்வாறு கூறினார்: சமூக ஜனநாயகம் என்றால் என்ன என்று கேட்டுவிட்டு அவரே பதிலும் கூறினார். வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்று சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை என்பதை அங்கீகரிப்பது என்றுதான் பொருள் என்பதாக! சமத்துவம் இல்லாமல், சுதந்தரம் என்பது வெகு சிலருக்கு மட்டுமே உயர் நிலை-யைத் தரும். சுதந்தரமில்லாத சமத்துவம் தனிநபர் முயற்சிகளைக் கொன்றுவிடும். சகோதரத்துவம் இல்லாமல், சுதந்தரம், சமத்துவம் ஆகியவை எதுவும் இயற்கையின் போக்கில் நடைபெறுவதாக அமையாது எனத் தெளிவு படுத்தினார்...

1950 இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தை வடித்தவர்கள் தந்த உறுதிமொழிகளைக் கடந்த 60 ஆண்டுகள் காலத்தில் மீட்டெடுத்துள்ளோமா? அம்பேத்கர் கூறியபடி, முறையான சமூக ஜனநாயகம் கிடைத்திருக்கிறதா அல்லது அரசியல் ஜனநாயகம் மட்டுமே கிடைக்கப் பெற்றிருக்கிறதா?

தரவு: அவுட்லுக் 10.2.2010 - தமிழில்: அரசு
- (நிறைவு) ---”விடுதலை” 3-2-2010

3.2.10

டாக்டர் அம்பேத்கரின் ஆசைகள் - சமூக ஜனநாயகம் இருக்கிறதா?


டாக்டர் அம்பேத்கரின் ஆசைகள்
சமூக ஜனநாயகம் இருக்கிறதா?

(அவுட்லுக் வார ஏட்டில் (Ambedkar’s Desiderata) எனும் தலைப்பில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ராமச்சந்திர குகா எழுதிய கட்டுரையின் முக்கிய பகுதிகள், இந்தியக் குடியரசின் 60 ஆம் ஆண்டு நிறைவையொட்டி தமிழில் தரப்படுகிறது.

அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்த ஆதிவாசிப் பிரதிநிதி (எஸ்.டி.) ஜெய்பால் சிங் முண்டா என்பவர் பேசிய பேச்சில், சிந்து வெளி நாகரிகம் பற்றியும் தாம் அதன் சொந்தக்காரர் என்றும் பெருமைப்படப் பேசி, ஆரியர்கள் நிறைந்திருந்த அந்த சபையில் அவர்களை வந்தேறிகள் (Intruders) என்று குறிப்பிட்டிருப்பது இன்றைக்கும், தேவைப்படும் கருத்தாக உள்ளது.)

...அண்மைக் காலங்களில் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபட்டவர் என்ற அளவில் மட்டுமே அறியப்படுகிறார். ஒடுக்கப் பட்டோர் மனதில் ஓர் உயர்வான கவுரவம் ஏற்படுவதற்கு அவர் காரணம் என்பதை மறுக்க இயலாது. போர்க்குணம் மிக்க தாழ்த்தப்பட்டவராக மட்டும் அவர் இருக்கவில்லை; அவர் அறிவுக்கூர்மையுள்ள ஜனநாயகவாதி. ஜாதி, மத வேற்றுமை ஏதுமின்றி எல்லா இந்தியர்களாலும் நன்மை பெறும் நோக்குடன் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவை அவருடைய வாழ்வும் சிந்தனையும்.

இந்தியக் குடியரசின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் கொண்டாடினோம். நம் குடியரசின் அரசமைப்புச் சட்டத்திற்காக அதனை மேற்பார்வையிட்ட அம்பேத்கர் அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம். அரசியல் நிர்ணய சபையின் கடைசிக் கூட்டத்தில் 1949 நவம்பர் 25 ஆம் நாள் பேசும்போது, அம்பேத்கர் மூன்று எச்சரிக்கைகளை விடுத்தார்; அவை இன்றைய காலகட்டத்திலும் இந்தியாவுக்குக் கட்டாயம் பொருந்தக் கூடியவையானவை.

முதல் எச்சரிக்கை: இரத்தம் சிந்தும் புரட்சிப் பாதையைக் கைவிடவேண்டும் என நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார். நாடு அந்நிய ஆட்சிக் காலத்தில் இருந்தபோது வீதிக்கு வந்து போராடவேண்டியதும், வன்முறையைக் கையாளவேண்டியதும் கூட தேவை என்பதற்கு அடிப்படை உண்டு. ஆனால், சுதந்தரமான, இறையாண்மை மிக்க, மக்களாட்சிக் குடியரசு மலர்ந்துவிட்ட பிறகு, சட்டத்திற்குப் புறம்பான முறையில் அமையும் போராட்டங்கள் இருப்பதற்கு அடிப்படை நியாயமே கிடையாது. அவை (அராஜக) ஆட்சியற்ற அரசமைப்புக்கான இலக்கணப்படி இருக்கலாம்; அவை எவ்வளவு விரைவில் ஒழிக்கப்படுகின்றனவோ, அந்தளவுக்கு நமக்கு நன்மை தரக்கூடியவை என்றே அவர் எழுதினார்.

அதே சமயத்தில் நாட்டின் தேசியக் கட்சிகள் எனப்படுபவற்றின் செயல்பாடுகள் பற்றியும் கடும் அபிப்பிராயம் கொண்டிருந்தார். இறுதியாக, அரசியல் நிர்ணய சபையில் பேசும்போது, ஜான் ஸ்டூவர்ட் மில் (ஆங்கிலப் பகுத்தறிவாளர்) கூறிய கருத்தை எடுத்துக் கூறினார்:

எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர் காலில் வீழ்வதும், தம் இயக்கத்தை சிறுமைப்படுத்தும் அளவுக்கு அவருக்கு அதிகாரங்களை அளிப்பதுமான செயல்களில் இந்தியர்கள் இறங்கக் கூடாது என்று குறிப்பிட்டார்!

நாட்டிற்காகத் தம் வாழ்நாளை அர்ப்பணித்த பெரிய மனிதர்களுக்கு நன்றி காட்டுவது தவறல்ல; ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு என்று அவர் தெளிவாகக் குறிப்பிட்டார். பக்தி, வழிபாட்டு மார்க்கம், தனி நபர் வழிபாடு போன்றவை வேறெந்த நாட்டின் அரசியலைக் காட்டிலும் இந்திய அரசியலில்அதிக அளவில் காட்டப்படுகிறது என்ற காரணத்தால் அவர் மிகவும் கவலைப்பட்டார். மதத்தில் பக்தி முக்திக்கு வழி காட்டலாம். ஆனால், அரசியலில் பக்தியோ, தனிநபர் வழிபாடோ நிச்சயமாகத் தரத்தினைத் தாழ்த்தி, சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் பாதையாகத்தான் அமையும் எனத் தெளிவாகத் தெரிவித்தார்.

இந்தச் சொற்களை உச்சரிக்கும் போது அம்பேத்கரின் மனதில், அப்போது கொல்லப்பட்ட மகாத்மா காந்தி தெய்வமாக்கப்பட்ட செயல் தோன்றி இருக்கலாம். பிற்காலத்தில் சிறிய காந்தி இதைவிடவும் மேலாகத் தெய்வம் ஆக்கப்படும் நிலை வரும் என்பதை அவர் ஊகித்திருக்க முடி யாது. 1970 களின் முற்பகுதியில் இந்தியா என்பது இந்திரா; இந்திராதான் இந்தியா என்று காங்கிரசுக்காரர்கள் பேசுவார்கள் என்பதையோ, அது நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தும் அளவுக்குச் சர்வாதிகாரத்தை அளிக்கப் போகிறது என்பதையோ, அம்பேத்கர் முன்கூட்டியே அறிந்திருக்க முடியாதுதான். ஒரு தலைமுறை கழிந்து அதே கட்சி, எல்லாவற்றிற்கும் மேலாக, நான்கு காந்திகளுக்குத் தன் மரியாதையைப் பங்குபோட்டுத் தருகிறது; அவர்களில் இரண்டு பேர் (இந்திரா; ராஜீவ்) இறந்து விட்டனர். இரண்டு பேர் (சோனியா, ராகுல்) உயிருடன் உள்ளனர்...

வன்முறைப் போராட்டங்களைத் தூண்டி விடும் கட்சிகள் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்பதைப் பற்றியும், அவைகளும் கூட பக்தி, தலைவர் வழிபாடு போன்றவற்றைக் கொண்டவையே என்பதைப் பற்றியும் அம்பேத்கர் எச்சரித்தார். அரசியல் குடும்பங்களின் செல்வாக்கு நமது பொது அமைப்புகளில் எந்த அளவுக்கு ஊடுருவி இருக்கின்றன என்பதையும் அவர் முன்பே உணர்ந்து அச்சம் தெரிவித்துள்ளார். புதுடில்லியில், அமைச்சர்கள், ஆளுநர்கள், அரசுத் துறைச் செயலாளர்கள் எல்லாமே அவர்-களின் தகுதிகளைப் பாராமல், அவர்களின் விசுவாசம், அடிவருடும் அளவு ஆகியவற்றின்-அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகிறார்கள்...

வாரிசு முறையிலான ஜனநாயகம் என்றுதான் இந்தியாவைக் கூறுகிறார்கள். தர்பார் ஜனநாயகம் எனக்கூறுவது கூட மிகப் பொருத்தமானதாக இருக்கும். இடைப்பட்ட வரலாற்றுக் காலத்திய அரச சபைகளைப் போலத்தான் தேசிய மாநிலத் தலை நகர்களில் செயல்பாடுகள் தோற்றமளிக்கின்றன. பொய்ச் செய்தி பரப்புவதும் சூழ்ச்சிகளும் பரவலாகக் காட்சியளிக்கின்றன. அரசுப் பணிக்கு ஆசைப்படுபவர்கள், ராஜா, ராணி அல்லது இளவரசர் ஆகியோரின் உள்-வட்டத்தில் நுழைந்தால்தான் அது கிடைக்கும் என்ற நிலை. அத்தகைய பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் அந்த நாற்காலி மீது ஒரு கண்ணும், அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே அடிவருடுவதில் நாட்டமுமாகவே இருந்து வரும் நிலை.

இறுதியாக, மூன்றாவதாக, அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கை முக்கியமானது_- சமூக ஜனநாயகம் அடிப்படையாக அமையாத இடத்தில் அரசியல் ஜனநாயகம் நீண்ட நாள் நிலைக்க இயலாது என்றார். இந்தியாவில் சமத்துவமற்ற படிநிலைத் தன்மை சமூகத் தளத்தில் நிலவுகிறது; அதனால் சிலருக்கு உயர்நிலையும், மற்றவர்களுக்கு தாழ்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத் தளத்தில், வெகு சிலர் ஏராளமான செல்வத்தில் திளைக்கவும் மிகப்பலர் மோசமான வறுமையில் வாடவும் அமைந்துள் சமூகத்தைப் பெற்றுள்ளோம். 1950 ஜனவரி 26 ஆம் நாள் இந்தியா அமைத்துக் கொண்ட அரசமைப்புச் சட்டப்படி, ஒரு மனிதன் ஒரு வாக்கு ஒரே மதிப்பு என்கிற இலட்சியத்தைத் தேர்ந்தெடுத்தது. ஆனாலும், நம் சமூகம் ஆழமான, ஏற்றத்தாழ்வான சமூகமாகவே நீடிக்கிறது; ஒரு மனிதன் ஒரே மதிப்பு என்பது மறுக்கப்படுகின்ற நிலையும் நீடிக்கிறது.

தரவு: அவுட்லுக் 10.2.2010 - தமிழில்: அரசு
- (தொடரும்) நன்றி:-”விடுதலை” -2-2-2010