Search This Blog

14.4.15

புரட்சியாளர் அம்பேத்கர் வாழியவே!





இன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா! தலைவர்களுக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடுவது வெறும் பெருமை களுக்காக அல்ல; அவர்களின் கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும், அவற்றைப் பின்பற்றச் செய்யவுமான உணர்வுக்கு ஓர் உந்து சக்தியாகும்.

தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் இருவரும் இந்து மதத்தைக் கடுமையாக எதிர்த்தவர்கள்; பிறப்பின் அடிப்படையில் பேதம் ஏற்படுத்தும் வருணாசிரமத்தை, ஜாதியை - ஆணி வேர், பக்க வேர், சல்வி வேர்களோடு அழித்து முடிக்கப் புறப்பட்டவர்கள். தங்கள் வாழ்வினை ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணித்தவர்கள்.

தந்தை பெரியார் அவர்கள் அரசியலில் புகுந்து பதவி நாற்காலியை அலங்கரிக்க வேண்டும் என்று எண்ணாதவர் - விரும்பாதவர்.

இரண்டு முறை சென்னை மாநிலப் பிரதமர் பதவி தந்தை பெரியார் அவர்களை நோக்கி வந்த போதும்கூட, அதனை ஏற்க மறுத்தவர். அவர் பதவிக்கு செல்ல மறுத்ததால்தான் தமிழர்களுக்கெல்லாம் பதவிகளும் கல்வியும் கிடைத்தன.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்கூட பதவியை நோக்கிச் சென்றவரல்லர்; முதல் நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் பதவி என்பது அம்பேத்கர் அவர்கள் தேடிச் சென்று பெற்றுக் கொண்டதல்ல - பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் அந்தப் பொறுப்பில்  அம்பேத்கர் இருப்பது பொருத்தமானது - தேவையானது என்று கருதியே அந்த ஏற்பாட்டைச் செய்தார்.

அதே நேரத்தில் அதனைப் பதவியாக எண்ணிய தில்லை; அந்த அமைச்சர் பதவி என்பதன் மூலம் ஆடம்பர வாழ்க்கையில் திளைத்தவரல்லர். இந்து திருத்தச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர அவர் முயற்சித்தபோது, அதனைத் தொடக்கத்தில் ஆதரித்த பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் பிற்போக்குச் சக்திகளின் அழுத்தத்தால் ஒரு கட்டத்தில் சட்ட அமைச்சர் அம்பேத்கரின் முயற்சிக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயங்கியபோது பதவி பெரிதல்ல, கொள்கையே உயர்ந்தது என்ற முடிவில் சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்த உண்மையான புரட்சியாளர் அம்பேத்கர்!

இரு தலைவர்களும் அரசியல் மாற்றங்களைவிட சமூக மாற்றமே முக்கியமானது என்று கருதியவர்கள்.

ஒரு மாஜிஸ்ட்ரேட்டைவிட ஒரு புரோகிதன் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துகிறான் என்று கணித்துச் சொன்னவர் அம்பேத்கர்.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை தந்தை பெரியார் அவர்களும், புரட்சியாளர் அம்பேத்கரும் ஒரே மாதிரியாகச் சிந்தித்தார்கள் - கணித்தார்கள் என்பதை எண்ணும்பொழுது ஆச்சரியமாகவே இருக்கிறது.
1925ஆம் ஆண்டில் சேலத்தில் பேசிய பெரியார் வெள்ளைக்காரர்கள் இங்கு அதிகாரத்தில் இருக்கும் போதே இந்த பார்ப்பனர் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இந்த நாட்டில் ஜனநாயகம்  (Democracy)
இருக்காது; மாறாக, பிராமினோகிரசிதான்  இருக்கும் என்று சொன்னவர் தந்தை பெரியார் இந்து நாளேடு வெளியிட்ட நூற்றாண்டு விழா மலரில் பிராமினோகிரசி என்ற ஒரு புது வார்த்தையை பெரியார் ஆங்கில அகராதிக்குக் கொடுத்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கருத்தை புரட்சியாளர் அம்பேத்கர் எப்படி கூறுகிறார் பாருங்கள்.
தேசிய சர்க்கார் என்றால் பார்ப்பனர் சர்க்கார்தான்; 1937இல் தேசியம் வெற்றி பெற்ற ஏழு மாகாணங்களும் பார்ப்பன முதல் மந்திரிகளின் ஆதிக்கத்தில்தான் இருந்து வந்திருக்கிறது. நாளைக்கு எல்லா மக்களும் வாக்குக் கொடுத்து அதன் மூலம் ஒரு சர்க்காரை ஏற்படுத்தினாலும், அதிலும் பார்ப்பனர்கள் தானே ஆட்சி செலுத்துவார்கள்? பெண்களுக்கு ஸ்தானங்கள் வழங்கினாலும், அதிலும் பாப்பாத்திகளே மெஜாரிட்டியாய் வருவார்கள் (குடிஅரசு 30.9.1944) என்று அம்பேத்கர் கூறியுள்ள கருத்தை - தந்தை பெரியார் அவர்களின் கருத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த இரு பெரும் தலைவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது சொல்லாமலே விளங்கும்.

இன்னும் மத்திய ஆட்சியிலே தாழ்த்தப்பட்டவர் களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உரிய சதவீதத்தில் இடங்கள் கிடைத்திருக்கின்றனவா? மத்திய அரசின் முதல் நிலைப் பதவிகளில் (குரூப் ஏ) பல்வேறு துறைகளில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத் தப்பட்டவரோ கிடையாதே!

இந்தியா சுந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டு 68 ஆண்டுகள் ஆகியும்கூட, மக்கள் தொகையில் 25 விழுக்காடு தொகையுள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தி லிருந்து பிரதமராக ஒருவர் வர முடியவில்லையே - ஏன்?

பாபு ஜெகஜீவன்ராம் அவர்களுக்கு அந்தத் தகுதி இருந்தும்கூட, அந்த வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட வில்லையே! இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் பிரதமராக வருவதற்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படும் என்று அவர் சொன்னதன் பொருளை நுட்பமாக உணர்ந்தால், நூற்றுக்கு மூன்று பேர்களாக உள்ள பார்ப்பனர்கள்தான் எல்லா கேந்திரப் பதவிகளிலும்  அதிகார லாகனைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது எளிதில் விளங்குமே!
வரலாற்றை மாற்றுபவர்கள் தந்தை பெரியார், புரட்சியாளர்  அம்பேத்கரும் தவிர அரசியல்வாதிகள் அல்லர்.

இந்த இரண்டு தலைவர்களும் இந்தக் கால கட்டத்தில் மிகவும் தேவைப்படும் தலைவர்களாகவே ஒளி வீசுகிறார்கள் - இவர்களின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம் - இந்து ராஜ்ஜிய கனவின் கருவைச் சிதைப்போம்!

வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க புரட்சியாளர் அம்பேத்கர்!!

                    -------------------------"விடுதலை” தலையங்கம் 14-04-2015

0 comments: