Search This Blog

12.4.15

மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடையுத்தரவு


ஏப்.14- அம்பேத்கர் விழாவுக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுப்பு
உரிய முறையில் நீதி கோரி சட்டப் பரிகாரம் தேடப்படும்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை
இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்)  தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

சென்னை பெரியார் திடலில் வரும் 14ஆம் தேதி திராவிடர் கழகத்தில் சார்பில் நடத்தப்பட உள்ள அண்ணல் அம்பேத்கர் விழாவுக்கு  சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து உரிய முறையில் சட்டப் பரிகாரம் தேடப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார்.

உதவி ஆணையரின் ஆணை

சென்னை மாநகர காவல் வேப்பேரி சரக காவல் உதவி ஆணையாளரின் செயல்முறை ஆணை முன்னிலை:- ஜெ. அய்யப்பன்.
ந.க.எண்.15/உ.ஆ.(வேப்பேரி) முகாம் /2015 நாள்: 12.4.2015


சிறுதலைப்பு: திராவிடர் கழகம் - 14.4.2015 அன்று மாட்டுக் கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப் படுகிறது - தொடர்பாக.

பார்வை: திரு. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம், பெரியார் திடல், எண்.84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை -7 அவரது 29.3.2015 நாளிட்ட மனு.

***
ஆணை:

சென்னை காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை நகரில் தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-ன் படி, 9.4.2015 அன்று காலை 8.00 மணி முதல் 24.4.2015 அன்று காலை 8 மணி வரை (இரு நாட்களும் உட்பட), சென்னை நகரில் நடைபெறும் பொதுக் கூட்டம், தெருமுனைக் கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள், உண்ணாவிரதம், மனித சங்கிலி உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும், சட்டம், ஒழுங்கு பொது அமைதி மற்றும் போக்குவரத்தை கருத்திற்கொண்டு 15 நாட்களுக்கு தடை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. எனினும், தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-உட்பிரிவு 3(அ)ன் படி இந்நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவோர், 5 நாட்களுக்கு முன்னதாக முறைப்படி அனுமதி கோரி விண்ணப்பித்தால், உட்பிரிவு (ஆ)-வின்படி அம்மனுவை பரிசீலனை செய்து அனுமதி/மறுப்பு ஆணை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.


2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் 18.3.2015 அன்று காவல் அனுமதி பெற்று நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது திரு. கே. வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் கீழ்க்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை பெண்கள், எங்கள் பெண்கள் நிகழ்த்தி முன்னாலே நடத்துவார்கள், வந்து பார், ஒத்தக் கருத்துள்ளவர்கள் வரலாம். அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய வுடன் மாட்டுக்கறி விருந்து நடைபெறும். யார் யார் வரனும்னா இப்பவே ரிசர்வ் பண்ணிக்குங்க இடம் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும்தான் உண்டு. ஏன்னா நான் என்ன சாப்பிடனும்கிறத இராம கோபாலன் அய்யர் முடிவு பண்றதா?


3. மேலும், 14.4.2015 அன்று மாலை, சென்னை, பெரியார் திடலில் மாட்டுக் கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகக் பத்திரிகைகள் மூலமாக வும், தொலைக்காட்சி மூலமாகவும் அறிவிப்புகள் வெளி யிடப்பட்டுள்ளதை கண்டித்தும், இப்போராட்டத்தினால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்பதுடன், பொது அமைதி கெடவும், தாலியை தமிழ்நாட்டு பெண்கள் புனிதமாக கருதும் வழக்கம் உள்ள நிலையிலும், பசுவை தெய்வமாக கருதி வழிபடும் நிலையிலும், மேற்படி நிகழ்ச்சியை நடத்தினால், மத நல்லிணத்திற்கு குந்தகம் ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டு, மேற்படி நிகழ்ச்சியை  தடை செய்யவும், திராவிட கழகத் தலைவர் திரு. கே. வீரமணியை கைது செய்யவும் கோரி, இந்து அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் (25), தனி நபர்களும் மனு அளித்துள்ளனர்.


4. மேலும், அகில இந்திய இந்து மகாசபாவின் மாநில துணைத் தலைவர், பி.எஸ். தனசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி, 14.4.2015 அன்று மாலை பெரியார் திடலில் மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து அவரை கைது செய்ய காவல் ஆணை யாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் மனு கொடுக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருந்தால், லலிதாகுமாரி, வழக்கில் சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் பேரில் ஜி.1 வேப்பேரி காவல் நிலைய கு.எண்.634/2015 ச/பி 153(A), 295(A), 505 (i) (b) (c) & 505 (2) இதச-வின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மனுதாரர் மேற்படி நிகழ்ச்சியை நடத்த காவல் ஆணையாளர் தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு (W.P.No. 10585/2015) நிலுவையில் உள்ளது.


5. திரு. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம், பெரியார் திடல், எண். 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 7 அவரது 29.3.2015 நாளிட்ட மனுவில், அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 14.4.2015 அன்று மாலை, சென்னை, பெரியார் திடலில், மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும், இதைக் கொச்சைப்படுத்தியும், எதிர்த்து போராடுபவர்கள்மீதும், பெரியார் சிலையை உடைப்போம் என்று சொல்வோர்மீதும் நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


6. மனுதாரர் அமைப்பினர் தங்களது நிகழ்ச்சிக்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சென்னை நகரில் அமலில் உள்ள தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-ன் படி இதுவரை அனுமதி பெறப்படவில்லை.

7. இத்தகைய சூழலில், மேற்படி நிகழ்ச்சி, இதர தரப்பினரின் வெறுப்புணர்வை தூண்டி, சட்டம், ஒழுங்கு, பொது அமைதி மற்றும் மத நல்லிணத்திற்கு குந்தகம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாலும், மேலும், இந்நிகழ்ச்சிக்கு முறைப்படி காவல் துறை அனுமதி பெறாததாலும், மனுதாரர் 14.4.2015 அன்று மாலை பெரியார் திடலில், நடத்த உத்தேசித்துள்ள மாட்டு கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41 (2)-ன்படி சென்னை மாநகர காவல் ஆணையாளரின் ஆணைக்குட்பட்டு இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

காவல் உதவி ஆணையாளர்
வேப்பேரி, சரகம், சென்னை - 7

பெறுநர்:
திரு. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்,
பெரியார் திடல், எண். 84/1(50),
ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-7

தகவலுக்காக
காவல்துணை ஆணையாளர்கள், கீழ்ப்பாக்கம் மாவட்டம் மற்றும் போக்குவரத்து (கிழக்கு).

காவல் இணை ஆணையாளர்கள், கிழக்கு மண்டலம், நுண்ணறிவுப் பிரிவு மற்றும் போக்குவரத்து (தெற்கு)

காவல்கூடுதல் ஆணையாளர்கள், தெற்கு, வடக்கு மண்டலம் மற்றும் போக்குவரத்து, சென்னை காவல்.

காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை காவல்.

இவ்வாறு அந்த ஆணை கூறுகிறது.

இந்த ஆணையை எதிர்த்து சட்டப்படியான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதைக் கழகத் தோழர்களுக்கும் பொது மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-----------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை  12.4.2015

3 comments:

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

இண்டியா ஸ்பெண்ட் என்ற பத்திரிகை குழுமம் தரும் ஆய்வு அறிக்கை

மத்திய பிஜேபி அரசு அதிர்ச்சி

புதுடில்லி ஏப்ரல் 12, இந்தியாவில் திடீரென மாட்டிறைச்சி உண்போ ரின் எண்ணிக்கை அதிக ரித்து வருவதாக இந்திய பத்திரிகையாளர் குழுமம் நடத்திய கருத்துக்கணிப் பில் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் மாட்டிறைச்சித் தடைச் சட்டம் நிறைவேற்றிய பிறகு இந்தக் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இண்டியாஸ்பெண்ட் கருத்துக் கணிப்பு

மக்களிடையே மாட்டிறைச்சி ஆர்வம் குறித்து பத்திரிகையாளர் கள் குழுமம் அடங்கிய கருத்துக்கணிப்பு நிறுவன மான இண்டியாஸ்பெண்ட் என்ற நிறுவனம் இந்தியா முழுவதும் மக்களிடையே அசைவ உணவு குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியது, இந்த கருத் துக்கணிப்பின் படி சமீப காலமாக மாட்டிறைச்சி உண்பதில் இந்திய மக்கள் ஆர்வம் காட்டத் துவங்கி யுள்ளனர் என்ற உண்மை வெளிவந்துள்ளது. மேலும் 2005 முதல் 2012 வரை தொடர்ந்து இந்தியாவில் மாட்டி றைச்சி உண்பவர்களின் சதவீதம் அதிகரித்து வரு கிறது என்றும் தெரிவந் துள்ளது. முன்பு கிராமப் புறங்களில் மாட்டிறைச்சி அதிகம் உண்ணும் வழக்கம் இருந்து வந்தது, தற்போது நகரங்களிலும் மாட்டிறைச்சியை உண் ணும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். 2013 களில் 70 விழுக்காடாக இருந்த மாட்டிறைச்சி உண்பவர் களின் மொத்த புள்ளி விவரம் சமீபகாலமாக 82 விழுக்காட்டை தாண்டி யுள்ளது.

தற்பொது நகர்ப் புறங்களில் 17 விழுக்காடா கவும், கிராமப்புறங்களில் 39 விழுக்காடாகவும் மாட்டிறைச்சி உண்பவர் களின் எண்ணிக்கை அதி கரித்துள்ளதாக அந்த இண்டியாஸ்பெண்ட் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சைவத்திலிருந்து அசைவம்!

மாட்டிறைச்சி உண்ணு பவர்களில் பலர் சைவ உணவில் இருந்து நேரடி யாக அசைவ உணவிற்கு மாறியவர்கள் என்ற ஒரு புள்ளி விவரமும் கிடைத் திருக்கிறது, முக்கியமாக நகர்ப்புறங்களில் படித்த வர்களின் மத்தியில் மாட் டிறைச்சி பயன்பாடு அதிகரித்துள்ளது. அசைவ உணவில் முதலிடம் கோழி, இரண் டாமிடம் மீன் மூன்றாமி டம் ஆட்டிறைச்சி இருந் தாலும், ஆட்டிறைச்சிக்கு பதிலாக மாட்டிறைச்சியை உண்பவர்கள் எண்ணிக் கையும் அதிகரித்துள்ளது.

தற்போது மக்களிடையே மாட்டிறைச்சி உண்ணும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் விலைவாசி உயர்வு மற்றும் அடிக்கடி பத்திரிகைகளில் மாட்டிறைச்சி குறித்த செய்தி வருதும் என்று அந்த புள்ளிவிபரம் தெரி விக்கிறது, சாப்பிட்டுத் தான் பார்ப்போமே என்ற நிலையில் பலர் சாப்பிடத் துவங்கி பிறகு தொடர்ந்து சாப்பிட ஆரம்பிக்கின்ற னர். சமீபகாலமாக மாட் டிறைச்சி விற்பனை அதி கரித்துள்ளதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

பாஜகவிற்கு உள்ளூர உதறல் சமீபத்தில் நடந்த இந்த கணக்கெடுப்பில் மாட்டி றைச்சி உண்போர் அதி கரித்து வருவது குறித்து பாஜகவிற்கு பயம் ஏற்பட் டுள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் 11 மாநி லங்களில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. இந்த நிலையில் தங்களது மாநிலங்களில் விரைவில் தடை கொண்டு வரா விட் டால் மாட்டிறைச்சி உண் போரின் எண்ணிக்கை அதிகரித்து விடும் ஆகை யால் மாட்டிறைச்சி தடை குறித்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்திவருகிறன.

இந்தியாவில் மொத்த இறைச்சி ஏற்றுமதில் 52 விழுக்காடு மாட்டிறைச்சி ஏற்றுமதியாகிறது. மாட்டிறைச்சி ஏற்றுமதி மாத்திரமல்லாமல் தோல் மற்றும் கொழுப்பு, எலும்பு கொம்பு போன்றவைகளும் ஏற்றுமதியில் முக்கியபங்கு வகிக்கின்றன. 24 மார்ச் 2015 அன்று வெளியான எக்னாமிக் டைம்ஸ் இதழில் இந்திய மருத்துவத்துறையில் மாடுகளின் உடலில் இருந்து பெறப்படும் பொருட்களின் பயன்பாடு குறித்து பட்டியலிடப் பட்டது.

அதில் உடலில் எளிதில் கரையும் கப்சூல் கள் முதல் ஜெலட்டின், தோல் நோய்க்கு பயன் படுத்தும் களிம்புகள், ஜெல் (மென்கூழ்ம) போன்ற வைகள் மாட்டின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் மாட்டின் எலும்பில் இருந்து பெறப் படும் கால்சியம் மற்றும் எலும்புச் சாம்பல் மாத் திரைகள் எளிதில் கரைய உதவும் துணைப் பொருட் கள் ஆகும்.

Read more: http://viduthalai.in/e-paper/99574.html#ixzz3X5ovRVJB

தமிழ் ஓவியா said...

தாலிக்கு எதிரான போராட்டமா? பரபரக்கும் சர்ச்சை

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி பெண் களுக்கு பெருமையைத் தருகிறதா, சிறுமையைத் தருகிறதா என கடந்த மார்ச் 8ஆம் தேதி ஒளிபரப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என இந்துத்துவாவினர் அந்தத் தொலைக்காட்சி மீது வன்முறைத் தாக்குதல்களை நிகழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து தாலி சர்ச்சை பரபரத்த நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் தாலி அகற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவித்து மேலும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது திராவிடர் கழகம்.

இதனை தாலி அறுக்கும் போராட்டம் என இந்துத்து வாக்கள் திரித்துக் கூற, இதையே மீடியாக்களும் பிரதிபலிக்கின்றன. இது தாலி அறுக்கும் போராட்டமல்ல; தாலி அகற்றும் போராட்டம் என தி.க. தரப்பு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தாலி சர்ச்சை குறித்து, பெரியாரியல் - அம்பேத்கரியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான வே.மதிமாறனிடமும் பாஜகவின் மாநிலத் துணைத் தலை வரான வானதி சீனிவாசனிடமும் தனித்தனியே கேள்வி களை முன் வைத்தோம். அவர்களின் பதில்கள் இதோ...

கேள்வி: இந்து மக்கள் தாலியைப் புனிதமாகக் கருத்துகின்றனர். அவர்களைக் காயப்படுத்தும் வகையில் தாலிக்கு எதிரான இந்தப் போராட்டம் தேவையா?

வே.மதிமாறன்: முதலில் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகின்றேன். வீரமணி அய்யா அறிவித்திருப்பது தாலி அறுக்கும் போராட்டமல்ல; தாலி அகற்றும் போராட்டம். பெரியார் கொண்டு வந்த திருமண முறை என்பது இந்தியாவிலேயே யாரும் செய்யாத சிறப்பான திருமண முறை. இதில் புரோகித மறுப்பு. பார்ப்பன எதிர்ப்பு போன்றவற்றைத் தாண்டி முக்கியமான பங்கு என்ன வென்றால் பெண்ணுரிமை சார்ந்து இருப்பது.

இந்துக்களின் திருமண முறை என்பது முழுக்க முழுக்க பெண்களுக்கு எதிரான திருமண முறையாக இருக்கிறது என்பதால் இதனை மாற்றவே சுயமரியாதைத் திருமண முறையை பெரியார் கொண்டு வந்தார்.

சுயமரியாதைத் திருமண முறைகளை மூன்று விதமாகப் பெரியார் பிரிக்கிறார். சுயமரியாதைத் திருமணத்தில் பாதி என்று பெரியார் எதைச் சொல்கிறார் என்றால்... அய்யர் இல்லாமல் ஒரே சாதிக்குள் செய்து கொள்ளும் திருமணத்தை பாதி சுயமரியாதைத் திருமணம் என்று ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார். இதேபோல, அய்யரை வைத்து இருவேறு சாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் இதையும் பாதி அளவுக்கான சுயமரியாதைத் திருமணமாக ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்.

அடுத்து, அய்யரும் இல்லாமல் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் (சாதி மறுப்பு) திருமணம் செய்து கொள்வதை முழுமையான சுயமரியாதைத் திருமணம் என்கிறார் பெரியார்.

மூன்றாவதாக ஒன்றைச் சொல்கிறார் பெரியார். அது புரட்சிகரமான திருமண முறை! இந்தப் புரட்சிகர திருமண முறையில் அய்யரும் கிடையாது. எந்த மத அடை யாளத்தோடும் திருமணம் செய்யக் கூடாது. அது இந்து மதம் என்று கிடையாது; இஸ்லாம், கிறிஸ்தவம் உட்பட எந்த மதப்படியும் செய்யாமல் தாலியும் கட்டாமல் நடக்கிற திருமணம்தான் புரட்சிகரத் திருமணம் என்கிறார் அய்யா பெரியார்.

ஆக, கட்சிக்குள் வருபவர்கள் எல்லாருமே அய்யாவின் இந்த கண்ணோட்டத்தில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. கட்சிக்குள் வருபவர்கள், பெண் எடுக்கும் இடத்தில் (சாதி மறுப்பு திருமணமாக இருந்தாலும்) தாலி மட்டும் கட்டணும் என்று சொல்கிறவர்கள் வருவார்கள். சுயமரியாதை திருமணத்தில் தாலி கட்டும் நிகழ்ச்சி மட்டும் சிலவேளை நடக்கும்.

இப்படி தாலி கட்டி சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி விட்டு, அதன்பின் தாலி கட்டுவது என்பது பெண்ணை அடிமைப்படுத்துவது என்று திருமணமான தன் மனைவிக்கு அதை புரிய வைப்பது! பெரியார் எந்தக் கருத்தையும் சொல்வார். ஆனால் ஏற்றுக் கொள்ளச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார். அதுதான் அவருடைய ஜனநாயகம்!

தமிழ் ஓவியா said...


மனைவிக்கு புரிய வைத்து அவளின் சம்மதத் தோடுதான் தாலியை அகற்ற வேண்டும். பெண்ணின் சம்மதமில்லாமல் செய்தால் அது பெண்ணடிமைத்தனமாக, பெண் மீதான வன்முறையாக மாறிவிடும்.

அதனால், தாலியைக் கட்டி திருமணம் செய்து கொள்ளச் சொல்லும் பெரியார் அதன்பின், தாலி என்பது எவ்வளவு இழிவானது, உன்னை அடிமைப்படுத்தத்தான் ஆண் கட்டுகிறான் என்பதை அந்த பெண்ணுக்கு புரிய வைக்கச் சொல்கிறார்.
அந்தப் பெண், ஆமாம்.. இது அடிமைப்படுத்துதல்தான் என்று புரிந்து இந்த தாலி தனக்கு வேண்டாம் என்று முடிவு செய்தபின்னர் அதே சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்கள் இன்னொரு மேடையில் ஏறி, தான் கட்டிக் கொண்ட இந்தத்தாலி எனக்கு வேண்டாம்; இது அடிமைத்தனம் என்று அவிழ்த்துப் போடுவதற்குப் பெயர்தான் தாலி அகற்றும் விழா.

இது அந்தப் பெண்களே முழு சம்மதத்தோடு செய்வது. தன் மனைவியே ஆனாலும் கருத்தைத் திணிக்கக்கூடாது என்பது பெரியாரின் கொள்கை.
பெண்கள் தாலி கட்டிக் கொள்ள விரும்புகிறார்கள்; அதை அகற்றமுடியாது என்று சண்டை போடுகிறார்கள் என்றால் அதை அப்போதைக்கு விட்டு விடு! அவர்களுக்கு தொடர்ந்து புரியவை! அவர்கள் என்றைக்கு புரிந்து கொள்கிறார்களோ அன்றைக்கு அழைத்து வந்து தாலி அகற்றும் விழாவை நடத்திக் கொள். இதைத்தான் பெரியார் சொல்கிறார். தாலி அகற்றும் விழா இதுதான். இதை புரிந்து கொண்டால் பிரச்சினை இல்லை.

தாலி அகற்றும் விழாவில் மிக அதிகபட்சமாக பெண்ணுரிமை, பெண்களுக்கான சுதந்திரம், பெண்ணிய கருத்துதான் முதன்மையானது. அதனால்தான் தாலி கட்டக்கூடாது என்ற கருத்துடையவர் இத்தனை நாட்கள் அந்தப் பெண்ணோடு சேர்ந்து வாழ்ந்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு புரிய வைத்திருக்கிறார். ஒருவரை கொள்கை சார்ந்து மாற்ற வேண்டுமே தவிர வன்முறையால், பிடிவாதத்தால் மாற்றக்கூடாது என்பதுதான் பெரியாரின் கொள்கை.
14ஆம் தேதி நடக்கும் தாலி அகற்றும் விழாவை அய்யா வீரமணி தன் கட்சியில் உள்ளவர்களுக்காகத்தான் நடத்துகிறார் என்பது கூடப் புரியாமல் இந்துப் பெண்களின் தாலியை எல்லாம் அறுக்கிறார்கள் என்று பொய் பேசி திசை திருப்புகிறார்கள்.
இது இந்துப் பெண்களுக்கு எதிரானது அல்ல; தாலி கட்டிக் கொள்வதுதான் இந்துப் பெண்களுக்கு எதிரானது.
நன்றி: சமுதாய மக்கள் ரிப்போர்ட், ஏப்ரல் 10-15 (2015)

Read more: http://viduthalai.in/page-7/99552.html#ixzz3X5qWEx00