Search This Blog

30.4.15

அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகே குழந்தை பெற வேண்டும்!-பெரியார்

அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகே குழந்தை பெற வேண்டும்!
பெரியார்


தமிழ் இலக்கியங்கள் யாவும் நம் பெண்கள் அடிமைப்படுத்துவதாகவே இருக்கின்றன. எந்த இலக்கியமானாலும் சரி அது பெண்களுக்கு இலக்கணம் சொன்னதெல்லாம் அச்சம், நாணம், மடம், பயிர்ப்புள்ளவர்களாக, அதாவது ஆண்களைக் கண்டு பயப்படக் கூடியவர்களாக, வெட்கத்தோடுள்ளவர்களாக, அறிவற்ற மடையர்களாக, மற்றவர்கள் பார்வைக்கு அசிங்கமாகத் தோற்றமளிக்கும் வகையில் பெண்கள் இருக்க வேண்டும். இதுதான் பெண்களுக்குச் சிறப்பு என்று எழுதி வைத்திருக்கின்றான். நம் பெண்களுக்கு அறிவுரை கூறிய - கூறுகிற யாவரும் பெண் கற்புடையவளாக இருக்க வேண்டும், கணவனுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று, அவர்களை அடிமைப்படுத்தும் வகையில் அறிவுரை சொன்னார்களே தவிர, அவர்களைச் சம உரிமையுடைய ஜீவனாக எவருமே கருதவில்லை. 


இதுவரை நம்மிலே நடைபெற்று வந்த திருமண முறைகள் யாவும் பெண்ணடிமையையும், ஜாதி இழிவினையும், மூடநம்பிக்கையையும் நிலை நிறுத்துவதே யாகும். நாம் முட்டாள்தனத்தையும் ஜாதி இழிவினையும் மூடநம்பிக்கை - முட்டாள்தனத்தையும் ஒழிக்க வேண்டுமென்று தொண்டாற்றுபவர்களானதால் இம்முறையினை மாற்றியமைக்க வேண்டியதாயிற்று. 


இம்முறையினை ஆரம்பத்தில் சிலர் எதிர்த்தனர். பல இன்னல்கள், இடையூறுகள் செய்தனர். பார்ப்பனர்கள் பலமாகத் தங்கள் எதிர்ப்பினைக் காட்டினர். எல்லா எதிர்ப்புகளையும் கடந்து மக்களிடையே இத்திருமண முறையானது செல்வாக்குப் பெற்று, பல்லாயிரக்கணக்கில் நடைபெற்று வந்துங்கூட, நீதிமன்றங்கள் இத்திருமணம் சட்டப்படிச் செல்லுபடியற்றதாகும் என்று தீர்ப்புச் செய்திருக்கின்றன. 


நம் அரசாங்கமும் இம்முறையையும் பல நாட்கள் சட்டப்படிச் செல்லுபடியற்றதாகவே வைத்திருந்தது. அதற்குக் காரணம் நம் மக்கள் அறிவு பெறக் கூடாது என்பதற்காகவேயாகும். இப்போது வந்திருக்கும் ஆட்சியானது பகுத்தறிவாளர்கள் ஆட்சியானதால் இம்முறையினைச் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்று என்று சட்டமியற்றி இருக்கிறது. என்றாலும் இன்னமும் பலர் பழைய முறையினைப் பழைமையானது, நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வருவது, நம் முன்னோர்கள் கடைபிடித்தது, ஜாதி வழக்கம் என்கின்ற காரணத்தைக் கொண்டு தங்கள் அறிவிற்கு இடம் கொடுக்காமல் பின்பற்றி வாழ்கின்றனர்.  


பழங் காலம் என்பது காட்டுமிராண்டி காலமே யாகும். நம் முன்னோர்கள் தீயினை உண்டாக்க, சக்கிமுக்கிக் கல்லினை உபயோகித்து வந்தனர். இப்போது தீ உண்டாக்க நாம் சக்கிமுக்கிக் கல்லினை உபயோகிக்கிறோமோ என்றால், இல்லை; அதுபோன்று நம் முன்னோர்கள் எவரும் மார்பை மறைத்துத் துணி போடுவது கிடையாது. அதனை மறைப்பதே குற்றமென்றும், இழுக்கென்றும் கருதிக் கொண்டிருந்தனர். ஆனால், இன்று பழைமை என்று அதனைக் கடைப்பிடிக்கிறார்களா என்றால், இல்லை. இரண்டு ரவிக்கைகள் போடுகின்றனர். இன்னும் கொஞ்ச நாள் போனால் மூன்று கூடப் போடுவார்கள்! 100-ஆண்டுகளுக்கு முன் நாம் எந்த வாகனத்தைப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தினோம். கட்டை வண்டி, வில் வண்டி, குதிரை வண்டி இவற்றைத் தான் பன்படுத்தினோம். இன்றைக்கு அதனைப் பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை. இப்படி நம் வாழ்க்கையில் எத்தனையோ காரியங்களையெல்லாம் நம்முடைய வசதிக்கும், வாய்ப்பிற்கும் ஏற்ப மாற்றிக் கொண்ட நாம், அதற்கெல்லாம் பழைமையைப் பின்பற்றாத நாம் இந்த ஒரு விஷயத்தில் மட்டுமே பழைமை - முன்னோர்கள் செய்தது என்று கூறிப் பின்பற்றுவது எப்படி அறிவுடைமையாகும் என்பதைச் சிந்திக்க வேண்டுகிறேன். இன்று நாம் எந்தக் காரியத்தைப் பழைமை என்பதால் கைவிடாமல் இருக்கிறோம் என்பதையும் அருமைத் தோழர்கள் சிந்திக்க வேண்டும். 


சில நாட்களுக்கு முன் அமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். முதலமைச்சர் அண்ணா அவர்கள் திருமணத்திற்குத் தலைமை வகித்தார்கள். நான் அதிக நேரம் பேசுவேன் எனக் கருதி மற்ற எல்லோரையும் முதலில் பேச அழைத்தார். என்னைக் கடைசியாகப் பேசும்படிப் பணிந்தார். நான் சில வாக்கியங்களிலேயே என் உரையினை முடித்துக் கொண்டேன்.


அங்கு நான் என்ன சொன்னேனென்றால் மணமக்கள் முன்னோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட புராண, இதிகாச இலக்கியங்களில் கண்டுள்ளபடியும், தமிழ் நீதி நூல்களில் கண்டுள்ளபடியும், பழக்க வழக்கங்களில் கண்டுள்ளது போலவும் நடந்து கொள்ளாமல் உங்கள் அறிவைக் கொண்டு, அறிவின்படி நடந்து கொள்வதோடு உங்கள் பெற்றோர்களைச் சீக்கிரம் தாத்தா ஆக்காமல் வாழுங்கள் என்று சொன்னேன். நான் நிறையப் பேசுவேன் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கெல்லாம் இது பொசுக்கென்று போய்விட்டது. பொதுவாகப் பார்த்தால் எந்தக் காரியமும் மனிதன் அறிவு வளர்ந்து தன் மானத்தைத் தொடும்படியாக இருந்தால் தானே மாறி விடும். அல்லது அவர்களே மாற்றிக் கொள்வார்கள். ஆனால், இந்நிகழ்ச்சி ஜாதியோடு பிணைக்கப்பட்டதால் மாற்றிக் கொள்ள அஞ்சுகிறார்கள். 


பார்ப்பனர் அல்லாத நம் மக்களுக்குத் துணிச்சல் வேண்டும். மனித சமுதாயம் முன்னேற வேண்டுமானால் பழைமை என்பவற்றைக் கைவிட்டுப் புதுமையைக் கைக்கொள்ள வேண்டும். புதுமையைப் பார்த்து நடக்க வேண்டும். என்ன நிலைமை இருந்தாலும் வரவிற்குள் செலவிட வேண்டுமே ஒழிய, வரவிற்கு மேல் செலவிடக் கூடாது. கியாதியாக - ஆடம்பரமாக வாழ வேண்டுமென்று கருதக் கூடாது. சாதாரண எளிய வாழ்வு வாழ வேண்டும். 


அய்ந்து வருடங்களுக்குக் குழந்தை பெறாமல் இருக்க வேண்டும். அதற்குள் பிறந்தால் அதனைத் திருட்டப் பிள்ளையாகக் கருத வேண்டும். அய்ந்து வருடம் கழித்து ஒன்று; அதன்பின் அய்ந்து வருடம் கழித்து ஒன்று, என்று ஒன்றிரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதிகப்படியான குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு அவஸ்தைப் படக் கூடாது. மற்றவன் குழந்தை சிறப்பாக வளர்வதைப் பார்த்து அதிகக் குழந்தைகளைப் பெற்றவன் கவலைப்படுகின்றான். தன் பிள்ளையையும் அதுபோல் வளர்க்கப் பிறரிடம் போய்ப் பல்லைக் காட்டிக் கெஞ்சுகிறான். ஒழுக்கக் கேடான காரியங்களில் ஈடுபடுகின்றான். அவர்களைக் காப்பாற்றத் தன் மானத்தைக் கூட விட்டுத் திரியும்படியான நிலைமை ஏற்படுகின்றது. பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் மனிதனின் ஒழுக்கக் கேடுகளுக்கு அதிகக் குழந்தைகளைப் பெறுவது பெரும் காரணமாகும். 


வாழ்வு தங்களுக்கு மட்டும் என்று கருதாமல், தங்கள் இனத்தை, சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தங்களால் இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும். இவ்வளவு அறிவுள்ள விஞ்ஞானக் காலத்தில் பார்ப்பான் இன்னமும் உயர்ஜாதிக்காரனாக இருப்பதற்கும், "நாம் சூத்திரர்களாக" இருப்பதற்கும் காரணம் பார்ப்பானுக்கிருக்கிற இன உணர்வால் தான் ஆகும். அவனுக்கிருக்கிற இன உணர்வு நமக்கு இல்லாத காரணத்தால் நாம் தான் இன்றைக்குச் சூத்திரர்களாக இருக்கின்றோம். இராமாயணத்தில் இராமன் தன் மனைவியை விட்டுக் கொடுத்து, தன் இனத்தைப் பாதுகாத்திருக்கின்றான் என்று எழுதி வைத்திருப்பது, பார்ப்பான் அதைப் பார்த்து அதன்படி தன் மனைவியை விட்டுக் கொடுத்தாவது தன் இனத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காகவேயாகும். 

நம் மக்களுக்கு இன உணர்ச்சி இல்லாத காரணத்தால் மனித சமுதாயத்தில் நாம் மிக அடிமையில் கிடக்கின்றோம். தலையில் பெரும் பாரங்களிருக்கின்றன. அவற்றிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். பழைய புராண - இதிகாச இலக்கியக் குப்பைகளை யெல்லாம் தூக்கி வீசி எறிந்துவிட்டு புதுமையை நோக்கிச் செல்ல வேண்டும். கோயில், குளம், தேர்த் திருவிழா, பண்டிகை என்றெல்லாம் போகாமல் தொழில் நகரங்களுக்குச் சென்று தொழிற்சாலைகளைப் பார்க்க வேண்டும். அங்குள்ள இயந்திரங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதைக் காணவேண்டும். பொருட்காட்சிகள் கண்காட்சிகள் இவற்றைச் சென்று காண வேண்டும். இவை நம் அறிவை வளர்ப்பதோடு, நன்மையான உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் சாதனங்களாகும். நம் சமுதாயம் மிகக் கெட்டுப் போன சமுதாயம். நாம் ரொம்பவும் முன்னேற்ற மடைய வேண்டியவர்களாக  இருக்கின்றோம். 


இந்தக் காலத்திலும் மக்கள் நெற்றியிலே சாம்பலையும், எண்ணெய்யையும் காணும்போது எனக்குப் பரிதாபம் ஏற்படுவதில்லை. கோபம் தான் வருகின்றது. எத்தனையோ ஆண்டுகளாக இவற்றை நாம் பின்பற்றி வந்து சூத்திரர்களாகத் தான் இருக்கின்றோமே ஒழிய, சூத்திரத் தன்மையிலிருந்து விடுபடுவதில்லை. சாம்பலும், மண்ணும் சூத்திரத் தன்மையை நிலைநிறுத்தும் குறிகள். நம் கடவுள், மதம், கோயில், குளம் நாம் கொண்டாடும் பண்டிகை விழா யாவும் நம் சூத்திரத் தன்மையை நிலை நிறுத்துவதேயாகும். 

அவற்றிலிருந்து நாம் விடுபட்டு, மானமுள்ள, சூத்திரத் தன்மையற்ற மக்களாக வாழ வேண்டும். 


-------------------------------- 03.11.1968 அன்று நடைபெற்ற இராசகோபால் - நீலமணி திருமணத்தில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 06.11.1968

0 comments: