Search This Blog

29.2.12

பார்ப்பனர்களே துள்ளாதீர்கள்! துள்ளாதீர்கள்!


கலைஞரா பிராமணர்களை சீண்டுகிறார்? முதலில் உம்மை பிராமணன் என்று சொல்லிக் கொள்வது பார்ப்பனர் அல்லாத மக்களைச் சீண்டுவது ஆகாதா? நீவீர் பிராமணன் என்றால் நாங்கள் யார்? சூத்திரர்கள் என்று எங்களை மறைமுகமாகச் சொல்லிச் சீண்டுவது ஆகாதா?

உங்கள் மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்லுகிறது?

சூத்திரன் ஏழு வகைப்படும்: 1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் 2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன். 3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன். 4) விபசாரி மகன். 5) விலைக்கு வாங்கப்பட்டவன், 6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன் 7) தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்.
(மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415).

ஓ பிராமணர்களே! - எங்களை நீங்கள் விபசாரி மகன் என்று எழுதி வைத்துள்ளீர்களே.அதனை இன்று அளவுக்கும் உறுதிபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் என்று ஒரு நாளை ஏற்படுத்திக் கொண்டு, நாங்கள் துவி ஜாதியினர் இருபிறப்பாளர்கள், நாங்கள் பிராமணர்கள், பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று விடாப்பிடியாக இந்நாள் வரை பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு திரிகிறீர்களே இது எங்களைச் சீண்டுவது ஆகாதா?

விபசாரி மகன் என்று எங்களை இன்றுவரை சொல்லும் நிலையில்கூட பொறுமை காத்துக் கொண்டிருக்கிறோம் என்ற திமிரில் இன்றைக்கும் பூணூல் அணிந்து கொண்டு திரிகிறீர்களே,

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர், உரிமை என்றால் சூத்திரன் பஞ்சமன் கருவறைக்குள் நுழைவதா? சாமி தீட்டுப்படும் என்று கூறுகிறீர்களே - உச்சநீதிமன்றம் வரை சென்று தடுக்கிறீர்களே! இவ்வளவும் செய்துவிட்டு கருணாநிதி சீண்டுவதாகக் கூறலாமா?

தந்தை பெரியார் தனது இறுதிப் பேருரையில் (மரண சாசனம்) (19.12.1973) திட்டவட்டமாகவே கூறினாரே!

இந்து நூற்றுக்கு மூன்று பேர் பார்ப்பனர்களைத் தவிர பாக்கி 97 பேர் தேவடியாள் மக்கள், என்று பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்று சட்டத்திலே எழுத வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம், என்ன? திருப்பிச் சொல்லாத காரணம் அவர்களைக் கண்டிக்காத காரணம் என்ன? திருப்பிச் சொல்லாத காரணம், அவர்களைக் கண்டிக்காத காரணம், பார்ப்பானைக் கண்டால் வாப்பா தேவடியாள் மகனே, எப்ப வந்தே? என்று கேட்க வேண்டும். ஏண்டா அப்படிக் கேட்கிறாய்? என்றால் நீ எழுதி வைத்ததடா - என்னைத் தேவடியாள் மகன் என்று! எனவே உன்னைத் தேவடியாள் மகன் என்று கூப்பிடுகிறேன் என்று சொல்ல வேண்டும்! என்ன தப்பு?

- என்று தந்தை பெரியார் இறுதி உரையில் மரண சாசனமாக கூறியுள்ளார் என்பதை நினைவூட்டுகிறோம்.

பார்ப்பனர்களே துள்ளாதீர்கள்! துள்ளாதீர்கள்!

தந்தை பெரியார் சொன்னபடி நாங்கள் உங்களைப் பார்க்கும் இடங்களில் எல்லாம் கேட்கவும் நேரிடும் எச்சரிக்கை!

------------------"விடுதலை” 29-2-2012

28.2.12

பூணூல்கள் புலம்பல்; நல்ல துவக்கம்! பூணூல் மலரின் ஆவேசம்!

திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா இன்று (27.2.2012) துவங்க இருக்கிறது. திராவிடர் இனமான மறு எழுச்சிக்கு துவக்க விழா என்று நமது கலைஞர் அவர்கள் அறிவித்தவுடன், ஆரியம் அலறத் துவங்கி விட்டது!

பார்ப்பனர்களின் நலனுக்காகவே நடத்தப் பெறும் பூணூல் மலருக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்து பொங்கி வழியத் துவங்கிவிட்டது!

பலே பலே இதைத்தான் எதிர்பார்த்தோம். சுரபானம் சோமபானம் அருந்திய சுரர்கள் அல்லாதவர்களாகிய அசுரர்களான திராவிடர்கள் தங்கள் வரலாற்றை இளைய தலைமுறைக்கும் இனிவரும் தலைமுறைக்கும், நினைவூட்டுவது கண்டு அதிர்ச்சிக்காளாகி இருக்கின்றனர். நாம் இதை எதிர்பார்த்தோம். வரவேற்கிறோம்!

தந்தை பெரியார் சொல்வார்; நமது மாநாடுகளை நீங்கள் விளம்பரப்படுத்துவதைவிட நம் இன எதிரிகளே நன்கு விளம்பரப்படுத்துவார்கள்; சற்று பொறுமை காட்டுங்கள், அவசரப்பட்டு விளம்பரத்திற்காகக் காசை செலவழித்து விடாதீர்கள் என்று சொல்லுவார். அவர் தம் கூற்று எப்படிப்பட்ட அனுபவப் பாடம் பார்த்தீர்களா?

பூணூல் மலரின் ஆவேசம்!

இன்றைய பூணூல் மலர் முன் பக்கத்திலும், உள் பக்கத்திலும் இன்று மாலை தி.மு.க. நடத்தும் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவைக் கண்டு வெகுண் டெழுந்த ஆசாமிகளாக மாறி ஆவேசமாக, சில அநாமதேய விபீஷணர்கள் பெயர்களில் அறிக்கை நாடகம் நடத்தியிருக்கின்றனர்.

திராவிட இயக்க நூற்றாண்டு விழா; தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு என்று தலைப்பிட்டு ஒரு சிறப்பு நிருபர் என்ற பெயரில் அக்ரகாரவாசிகள் அலறல் சத்தம் ஓங்கி ஒலித்துள்ளது!

ஏதோ பெரிய பெரிய வாதங்களையெல்லாம் வைத்துள்ள மாதிரி கடும் எதிர்ப்பு கிளம்பி விட்டதாம்!

ஆச்சாரியாரை விடவா நீங்கள் புத்திசாலிகள்?

1952இல் இவர்களது இனத்தின் காவலர் ஆச்சாரியாரைவிடவா இவர்கள் புத்திசாலிகள்; வீராதி வீரர்கள்; சூராதி சூரர்கள்?

அவர் சொன்னார் - கம்யூனிஸ்டுகளும் திராவிடர் இயக்கமும்தான் எனது முதல் எதிரிகள் என்று! 1938-லேயே ஆளுவது நானா? இந்த இராமசாமி நாயக்கரா என்று சட்டசபையில் கொக்கரித்தார்!

பிறகு, அவரே தி.மு.க.வுக்கு வாக்களிக்கச் சொன்னார் பூணூலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு வாக்களிக்கச் சொன்னார். அதனை ஆதரித்த பிறகு தன் வழியில் வராமல் அண்ணா அய்யாவிடம் சென்று ஆசி வாங்கியதால் மனம் புழுங்கினார்; தி.மு.க.வுடன் நடத்திய தேனிலவு முடிந்தது என்று கூறி மூலையில் முக்காடிட்டு ஓய்ந்தார்! அந்த சாணக்கியரின் தந்திரமும், திராவிடர் இயக்கத் திடம் தோற்றது!

மண்ணெண்ணெய் வீரர் ம.பொ.சி.கள்

அதற்குப் பிறகு ம.பொ.சி.கள்கூட திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்தினர்!

ஹிந்தி எழுத்துக்கள் மீது பூசப்பட்ட தார்மீது மண்ணெண்ணெய்யைப் பூசி அழித்தார்!

பிறகு தி.மு.க.விடம் தான் புகலிடம் தேடினார்; தி.மு.க.வும் தியாகராயர் நகரில் அவருக்குச் சிலையையே எழுப்பியது!

திராவிட மாயை பேசிய கம்யூனிஸ்டுகள்

திராவிட மாயைபற்றி பேசிய பிறகு கம்யூனிஸ்ட் ராமமூர்த்திகள் கட்சிகள் திராவிடர் இயக்கத்துடன் கூட்டு சேரவில்லையா?

அப்படிப்பட்டவர்கள் நிலையே அப்படியென்றால் வெறும் கூலிக்கு ஆள் பிடித்து அறிக்கை விடும் அநாமதேயங்களால் அசைத்து விட முடியுமா?

திராவிடம் என்ற அடைமொழி பாகவதத்திலும், மனுதர்மத்திலும் உள்ளதே! இன்று தேசிய கீதம் பாடுவதிலும் இருக்கிறதே! எழுந்து நின்றுதானே கேட்கிறீர்கள்! காதில் பஞ்சு வைத்துக் கொண்டீர்களா மனதில் நஞ்சை வைத்துள்ள நீங்கள்?

பாகப்பிரிவினை நடப்பதால் அண்ணன் - தம்பி உறவு இல்லாது போகுமா?

மொழிவாரி மாகாணங்கள் பிரிந்தபிறகு திராவிடம் என்று அழைக்கலாமா? பேசலாமா என்று உளறும் உன்மத்தர்களே, 1947-க்கு முன்பும் இந்த தேசத்திற்குப் பெயர் இந்தியா. 1947 பாகிஸ்தான் பிரிந்த பின்பும் இந்தியாதான்; அதற்காகப் பெயர் மாறி விட்டதா?

தாயும் பிள்ளையும் ஒன்று என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்ற கிராமியப் பழமொழி உங்களுக்குத் தெரியுமா? திராவிட மாநிலங்கள் உரிமைக்குப் போராடுவதனால் அவர்கள் சகோதரர்கள் அல்லவென்று ஆகி விடுமா?

அண்ணன் - தம்பிகள் பாகப் பிரிவினைக்காக வழக்காடினால்கூட, அண்ணன் - தம்பி என்ற சகோதர உறவு சட்டப்படி, உரிமைப்படி, மறைந்துவிடாதே!

புத்தியற்ற பூணூல் புலம்பல்கள்

அட, புத்தியற்ற பூணூல் புலம்பல்களே, சற்று நிதானமாக யோசியுங்கள்.

பங்களாதேஷ் பிரிந்த பின்பும் அண்டை நாட்டுக்குப் பெயர் பாகிஸ்தான்தானே!

திராவிடர் எழுச்சிக்கண்டு இன்று சில அரைவேக்காடுகளும் அரைப் பைத்தியங்களும் ஊறுவதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்தனர். இதுவரை கேள்விப் படாத கட்சி பெயரில் அறிக்கைவிடும் முப்புரியார்களே மூளைக்கு வேலை கொடுங்கள்!

பிரபாகரனுக்குக் கருமாதி நடத்திய கருமாதி பத்திரிகை

சிங்களவர்கள் ஆரியர்கள், எங்கள் மூதாதைகள் ஒரிசாவிலிருந்து வந்தவர்களே நாங்கள் எனக் கூறிய போதே இந்த அக்கிரகார ஏடு கருமாதி நடத்தியதே பிரபாகரனுக்கு - பல ஆண்டுகளுக்கு முன்; அதை மறைத்து விட்டு இப்போது ஆடு நனைகிறது என்று இந்த அக்கிரகார ஓநாய்களா அழுவது?

எத்தனையோ முறை பகுத்தறிவாளர்களாகிய நாங்கள் விளக்கம் கூறி விட்டோம்!

மொழியால் - தமிழர்
இனத்தால் - திராவிடர் (ஆரியர் அல்லாதவர்)
நாட்டால் - இந்தியர் (இப்பொழுது)
பகுத்தறிவால் - மனிதர்கள்
என்று புரியவில்லையா?
பலம் அல்ல - பலகீனம்!

உரிமைக்குக் குரல் கொடுப்பதால் உறவுக்குக் கை கொடுக்கக் கூடாது என்று கூறுவது பேதமை அல்லவா?

சூத்திரர்களாகவோ சற்சூத்திரர்களாகவோ தொடர விரும்பும் இந்த இனத்தின் புல்லுருவிகள் சில பேரை உங்களின் துணைக்கு அழைப்பது உங்கள் பலத்தைக் காட்டாது;

பலவீனத்தையே காட்டும்!
----------------- சாட்டையடி ஜாபாலி அவர்கள் 27-2-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

27.2.12

மாணவர்கள் பொது தொண்டில் ஈடுபடலாமா? பெரியார்


மாணவர் கழகத்தின் சார்பாக அழைக்கப்படும் யாரும் மாணவர்களைப் புகழாமல் செல்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். மாணவர்கள் நிலை நிரந்தரமானதல்ல; என்றுமே ஒன்றுபோல் இருப்பதில்லை. நேற்று குழந்தைகளாய் இருந்தவர்கள்தான் இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களாய் படித்து வருகிறீர்கள். நாளை நீங்கள்தான் பெரியவர்களாய் வாழ்க்கை நடத்தப் போகிறீர்கள். இந்த நிலையற்ற பருவத்தில் எது நல்ல காரியம் என்று உங்களால் சிந்தித்துச் சுலபத்தில் அறிந்துகொள்ள முடியாது. மாணவர்கள் தாமாகவே ஒரு நல்ல காரியத்தை ஆராய்ந்தறிந்து அதைச் செய்து முடிக்கக் கூடிய சக்தி படைத்தவர்கள் என்று என்னால் நினைக்க முடிய வில்லை. அவர்களைக் கொண்டு பல நல்ல நல்ல காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்றுதான் நான் அபிப்பிராயப்படுகிறேன். ஆகவே, அவர்கள் தம்மைத் தம் முடைய திரண்ட சக்தியை நல்ல தலைவர்களிடம் ஒப்படைக்க வேண் டும். இப்படிக் கூறுவதற்காக மாணவர் கள் என்மீது கோபித்துக் கொள்ளக் கூடாது. மாணவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்கக் கூடியவர்கள். சொல்லிக் கொடுப்பதைப் படிக்கக் கூடியவர்கள். ஆதலால் தமக்கு எல்லாம் தெரிந்துவிட்டதாக அவர்கள் ஒரு போதும் நினைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி நினைப்பவர்களிடமிருந்துதான் காலித்தனம், கட்டுப்பாட்டுக்கு அடங் காத தன்னிச்சைத்தனம் விரைவில் புறப்படுகிறது. ஆகவே, அவர்கள் மிக ஜாக்கிரதையாக விஷயங்களைச் சிந்திக்கவேண்டும். தம்மால் கூடுமான அளவுக்கு நல்ல தலைவர்களை அவர்கள் தேடித் திரிதல் வேண்டும். எந்த அள வுக்கு தாம் அன்பு செலுத்துகிறார்களோ அந்த அளவுக்கேனும் தம்மீது அன்பு செலுத்தக் கூடிய, தம்மை நல்வழிப் படுத்துவதில் ஆசையும், அக்கறையும் உள்ள தக்க பெரியார்களைத் தேடிப் பிடிக்கவேண்டும் அவர்கள். அந்த வழியில் நாங்கள் முயற்சி செய்து அவர் களில் ஒரு சிலரையாவது எங்களையும், எங்கள் கொள்கைகளையும் நம்பச் செய்து, அப்படிப் பெற்ற சிலரை நாங்கள் எங்களுக்குச் சொந்தமான பெருஞ் சொத்தாக மதித்து நாங்கள் மகிழ்ந்து வருகிறோம்.

மாணவர்களின் உண்மையான தகுதி

மாணவர்கள் நல்ல சோல்ஜர்கள்; நல்ல ஜெனரல்களல்ல. மாணவர்கள் நல்ல சிப்பாய்கள், நல்ல கமாண்டர்களல்ல. ஆகவே, நல்ல சிப்பாய்களைப் போல அவர்கள் பல கட்டு திட்டங் களுக்குட்பட்டு நடக்கவேண்டும்.

தொண்டின் முன்பு சோதனை

மாணவர்கள் பொது நலத் தொண் டில் ஈடுபட நினைக்கும்போது, முதலில் பொதுநலத் தொண்டில் ஈடுபடத் தமக்குத் தகுதியிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். தங்கள் நலன்களை விட்டுக் கொடுக்க, அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும். தங்கள் உயர்வைக் கருதாமல், தங்கள் பட்டத்தைப் பெரிதாகக் கருதாமல், தங்களை சாதாரண சராசரி மனிதனாகக் கருதிக் கொள்ள அவர்கள் முதலில் சம்மதிக்க முடியுமா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். தங்கள் வாழ்க்கையையும், அவர்கள் கூடுமான அளவுக்குச் சராசரி மனிதனுடைய வாழ்க்கைக்கு உட்பட்டதாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.

தற்காத்தல்

ஒரு பக்குவமடைந்த பெண்ணை எப்படி எங்கு வெளியே சென்றால் கெட்டுப் போகுமே என்று தாய், தந்தையர் கவலையோடு காப்பாற்றி வருகிறார்களோ, அதேபோல், மாண வர்கள் தங்கள் புத்தியை, தங்கள் சக்தியைக் கண்ட இடத்திலெல்லாம் செலுத்தாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

தன்னலம் பேணாமை

நீங்கள் உங்களைச் சாதாரண மனிதர்களாக நினைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைச் சவுகரியங்களையும் எவ்வளவு குறைத் துக் கொள்ள முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்ளவேண்டும். உங் களுக்கு மிகமிக அடக்கம் வேண்டும். நீங்கள் மிகமிக தன்னலமற்றவர்களாய் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மாண வர்களால்தான் ஏதாவது உருப்படியான நன்மை ஏற்படும். மாணவர்கள் தம் மைனர் வாழ்க்கைத் தன்மையை அறவே விட்டொழிக்கவேண்டும். மைனர் வாழ்க்கை நடத்தக் கூடியவர்களை இயக்கத்தில் சேர்த்துக் கொண்டால், அவர்கள் தம் சொந்த வாழ்விற்காக இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தம் சொந்த வாழ்விற்குத் தடை ஏற்படும் போது பேசாமல் வெளியேறிவிடுவார்கள். அல்லது எதிர்ப்பு வேலை செய்வார்கள். அல்லது எதிரிகளின் கையாளாக ஆகி விடுவார்கள். அப்படிப்பட்ட நொண்டி மாடுகள் நுழையவொட்டாமல், மாணவர் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும்.
தொண்டிற்குத் தகுதியற்றோர்
பொதுத் தொண்டுக்கு வந்த உடனே தங்களைப் பெரிய மேதாவியாக நினைத்துக் கொள்ளக் கூடியவர்களும், தங்கள் தகுதிக்கு மேலாக போக போக்கியம், பெருமை, தங்களுக்குக் கிடைக்கவேண்டிய விகிதாச்சாரத்திற்கு மேலாக மதிப்பு, தங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று நினைப்பவர்களும், எந்த இயக்கத்திலும் இருக்கத் தகுதியற்ற வர்கள் ஆவார்கள். அப்படிப்பட்டவர் களால் பொதுவாழ்க்கையில் எப்போதும் எந்தக் கொள்கையிலும் நிலைத்திருக்க முடியாது.

அபாயகரமான நோய்

பொதுநலத் தொண்டர் எவருக்கும் உள்ளத்தில் அடக்கம் வேண்டும். தான் என்ற அகம்பாவம் கூடாது; ஏமாற்றம் ஏற்படுமானால், அதைச் சகித்துக் கொள்ளக்கூடிய பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு மற்று மொரு கெட்ட நோய் இருந்து வருகிறது. ஒன்றிரண்டு தடவை மேடை ஏறினால் போதும். ஒன்றிரண்டு தடவை கைதட்டல் கிடைத்துவிட்டால் அதைவிட மேலாகப் போதும். பத்திரிகைகளில் அவர்களால் எழுதப்பட்ட ஒன்று, இரண்டு கதை களோ பாட்டுகளோ வியாசங்களோ வந்துவிட்டால் போதும். உடனே தங்களைப் பெரிய தலைவர்கள் என்றும், ஆசிரியர்கள் என்றும், தங்களை மற்றவர் யாவரும் மதிக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு விடுவார்கள். இது மகா அபாயகரமான நோய். இந்நிலை வந்து விட்டால் எப்படிப்பட்ட இயக்கமும், கொள்கையும் அவர்களை சீக்கிரம் கைவிட்டு விடும். அதற்கப்புறம் அவன் சீக்கிரத்தில் பொது வாழ்வில் வெறுப்பேற்பட்டு எதற்கும் தகுதியற்ற வனாகி விடுவான். ஆகவே தான் அடக்கம் வேண்டும் என்று அவ்வளவு வற்புறுத்திக் கூறவேண்டியிருக்கிறது.

எனது அனுபவம்

நானும் மாணவனாய் இருந்திருக்கிறேன். ஆணவம் பிடித்த மைனராயும் இருந்திருக்கிறேன். சர்வாதிகாரக் காலி யும் இருந்திருக்கிறேன். ஆனால், பொதுத் தொண்டுக்கு வந்த பிறகு சகல சுகத்தையும் கைவிட்டேன். என்னை ஒரு சாதாரண மனிதனாகவே கருதிக் கொண்டு யாராவது கூப்பிடும் வரையில் பின்னணியிலேயே இருந்து வந்தேன். அதனால்தான் என்னால் சலிப்பு இல்லாமல், ஏமாற்றமில்லாமல் பொதுத் தொண்டைத் தொடர்ந்து செய்து வர முடிகிறது. எனக்குரிய பங்கோ மரியாதையோ கிடைக்கவில்லையே என்று நான் ஒரு நாளும் ஏமாற்றமடைந்ததில்லை.

என் வாழ்க்கையில் நடைபெற்ற சாதாரணச் சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அது, 1916 அல்லது 1917 இல் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது நான் ஈரோடு முனிசிபல் சேர்மன் ஆக இருந்த காலம். அப்போது நான் ஒரு பெரிய புரஹாம் வண்டி வைத்திருந்தேன். ஊத்துக்குழி ஜமீன்தார், ஆனரபிள் சம்பந்த முதலியார் மற்றும் 3, 4 பிரபலஸ்தர்கள் என் வீட்டிற்கு வந்திருந்தனர். எல்லோரு மாகச் சேர்ந்து ஒரு இழவு வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கப் போகவேண்டியிருந் தது. ஜமீன்தார் முதலிய எல்லோரையும் வண்டியில் அமர்த்தினேன். வண்டியில் மேற்கொண்டு இடமில்லை. நான் ஒருவன்தான் பாக்கி. வண்டி அவர்களைக் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பி வரவேண்டுமென்றால் நேரமாகி விடும். ஆதலால் என்னையும் உடன் வரவில்லையா என்று ஜமீன்தார் கேட்ட தற்கு, இதோ பின்னால் வருகிறேன் என்று பதில் கூறி, வண்டியை விடு என்று சொல்லிவிட்டு, அவர்கள் அறியாமலே நான் வண்டி மீதேறி கோச்மேன் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். குறிப்பிட்ட இடத்தை வண்டி அடைந்ததும், அவர்கள் இறங்கவும், கோச்மேன் பக்கத்திலிருந்து நான் இறங்குவதைப் பார்த்து அவர்கள் திடுக்கிட்டார்கள். அன்றையிலிருந்து என்னை அவர்கள் ஒருபடி உயர்வாகவே மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜமீன்தார் என்னைக் கண்டால் பெரிய ஞானி என்று குனிந்து கும்பிடுவார். நான் அவரைப் பரிகாசம் செய்வேன். கோச் மேன் பக்கத்தில் உட்காருவதை நான் கேவலமாக மதிக்கவில்லை என்பதையும், விருந்தினர்களுக்காக எனது சவுக ரியத்தை எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்து வருகிறவன் என்பதையும், அவர்கள் அறிந்து கொண்டதினால்தான் என்னை மிக மேலானவனாகக் கருதத் தொடங்கி விட்டார்கள்.

விட்டுக் கொடுப்பது வீணானதோ இழிவானதோ அல்ல

இப்படி நம் சவுகரியத்தைப் பிறருக் காக விட்டுக் கொடுப்பது இழிவல்ல. தப்பிதமுமல்ல. நான் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிய போதுகூட நான் மூன்றாம் வகுப்பில் தான் பிரயாணம் செய்வேன். ராஜகோ பாலாச்சாரியாரும், திரு.வி.க.வும் இரண்டாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வார்கள். திரு.வி.க. அவர்கள் அதற்காக வெட்கப்படுவார், கூச்சப் படுவார். உடம்புக்கு சவுகரியமில்லாத போது நீங்கள் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்வது தவறாகாது என்று நான் கூறி அவர்களைச் சமாதானப் படுத்துவேன். மாணவர்கள் இம்மாதிரி இளமை முதற்கொண்டே தம் வாழ்க்கைச் சவுகரியத்தை மிக எளிதாக்கிக் கொள்ள வேண்டும். சாதாரண உணவில் திருப்தி அடையவேண்டும். நான் காங்கிரஸ் தலைவனாய் இருந்தபோதுகூட எவ்வ ளவோ தர்க்க வாதம் செய்வேன். ஆயினும் ராஜகோபாலாச்சாரியார், திரு.வி.க. ஆகியவர்களின் ஆலோசனை யின் பேரில்தான் எதையும் செய்து வந்தேன். எதிலும் அவர்கள் அபிப்பிரா யப்படியே செய்வேன். விட்டுக் கொடுப் பதில் தலைவர்களை மதிப்பதில், நான் மிக்க தாராளமாக நடந்து வந்தேன். அந்தப்படியே நீங்களும் எதிலும் பிறருக் குக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கத் தயாராகத்தான் இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கே பாத்தியதை

திராவிடர் கழகம் கடைப்பிடித்துள்ள கொள்கைகள் மிகக் கஷ்டமானவை. திராவிடர் கழகம் கூறும் பரிகாரங்கள் கூட மிகக் கசப்பானவையாகத்தான் இருக்கும். இக்கொள்கைகள் பெரும் பாலும் மாணவர்களால்தான் ஈடேற்றப்பட வேண்டும். மாணவர்கள்தான் தம் பின் சந்ததியைப்பற்றி அதிகம் கவலைப் படவேண்டியவர்கள். ஆகவே, அவர்கள் தன் முதியோரைக் காட்டிலும் அதிக உற்சாகத்தோடு திராவிடக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றவேண்டும்.


அறிவின் அடையாளம் அகிம்சை

மாணவத் தோழர்களுக்கு அகிம்சையில் நம்பிக்கை இருக்கவேண்டும்; புண்ணியம் சம்பாதித்துக் கொள்வதற்காக அல்ல. ஹிம்சை சகலருக்கும் பொது, யாவருக்கும் துன்பத்தைக் கொடுக்கக் கூடியது என்பதற்காகத்தான்.

நமக்கு அறிவிருப்பதே நம் காரியங்களை இம்சையின்றி சாதித்துக் கொள் ளத்தான். அறிவு இருக்கும்போது மிருகத்தனத்தை ஏன் நாம் கடைப் பிடிக்கவேண்டும். மனிதத் தன்மைக்கு மிக அவசியமானது அகிம்சைதான்.

நாம்தானே இந்நாட்டில் பெரும் பான்மை மக்களாக இருக்கிறோம். பலாத்காரத்தை வளர்த்தால் நாம்தானே அதற்குப் பலியாக நேரிடும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். முடிவாக ஒன்று சொல்லுகிறேன். நீங்கள் நல்ல எளிய முறையில் வாழப் பழகிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை இலகுவானதாக, இன்பமானதாக இருக்கும். எல்லாவற்றிற் கும் மேலாக உங்களுக்கு அளவற்ற பொறுமையும், அடக்கமும் கீழ்ப்படிதலும் வேண்டும்.

---------------------21.2.1948 அன்று திருச்சியில் நடந்த திராவிடர் மாணவர்கள் மாநாட்டில், பெரியாரவர்கள் ஆற்றிய பேருரையில், மாணவர்கள் எவ்வாறு நடந்துகொள்வது அவர்களுக்கும், இயக்கத்திற்கும் மாண் பைத் தரும் என்ற முறையில் விளக்கிய சிறு பகுதி இது- " குடிஅரசு"- சொற்பொழிவு - 03.04.1948

26.2.12

மானமா? பார்ப்பனர்களுக்கா?மானம்
நமக்கெல்லாம் மானம் போனால் கஷ்டமாக இருக்கும். ஆனால் தி.மு.க.வின ருக்கு அப்படி இல்லை. நிறைய மானம் இருக்கிறது. திராவிட மானம், (கை தட்டல்) திராவிட இன மானம், தமிழ் மானம், தமிழ் இனமானம், அந்த மானம், இந்த மானம் என்று நிறைய வைத்திருக்கிறார்கள். ஒரு மெயின் மானம், ஒரு சப்மானம், ஒரு அஸிஸ்டென்ட் மானம் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள் (சிரிப்பு) - சென்னையில் துக்ளக் ஆண்டு விழாவில் திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாளால் பேசப்பட்ட உரையின் ஒரு பகுதியில் காணப்படுபவைதான் மேற்கண்ட பகுதி (துக்ளக் 29.2.2012 பக்கம் 4).

அவர்களுக்கெல்லாம் மானம் இருக்கிறதாம்! - நல்ல தமாஷ்தான் - கோமாளி நடிகர் அல்லவா - கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்.

அவர்களுக்கு மானம் இருப்பது உண்மையென்றால், அவர்களின் ஜெகத் குரு ஒரு கொலை வழக்கில் 61 நாள்கள் கம்பி எண்ணினாரே அப்பொழுதே பொத்துக் கொண்டு கிளம்பியிருக்காதா?

என் கையைப் பிடித்து இழுத்தார் ஜெகத் குரு - என் எதிரிலேயே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார் என்று பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் (அம்மையாரும் அக்ரகாரத்துக்காரர்தான்) தொலைக்காட்சியில் கண்ணீரும் கம்பலையுமாகச் சொன்ன பொழுதே பார்ப்பனர்கள் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கி இருக்க வேண்டுமே.

மானமா? பார்ப்பனர்களுக்கா? அப்படி ஒரு வார்த்தையே அவாள் அகராதியில் கிடையாதே.

அய்வருக்கும் தேவி, அழியாத பத்தினி என்பது தானே அவாளின் பத்தினித் தர்மம். உடல் முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு யாருடன் வேண் டுமானாலும் படுத்துப் புணரலாம் என்பதைத் தர்மமாகக் கொண்டவர்களா நமக்கெல்லாம் மானம் போனால் கஷ்டமாக இருக்கும்! என்று புலம் புவது.

அவாளின் மானம் என்ன என்று நமக்குத் தெரியாதா!

ஏன் நம்மிடம் வீண் வம்பு வளர்க்க வேண்டும். அவர்களுக்கு இல்லாதது மற்றவர்களுக்கும் இருக்கக் கூடாது என்கிற பரந்து விரிந்துபட்ட எண்ணமோ!

தமிழ்மானம், இனமானம், சப்மானம், அசிஸ் டென்ட் மானம் - என்று ஓர் இனத்தின் மானத்தையே கேலி செய்கிறார்கள். புலி வாலை மிதிக்க ஆசைப்படுகிறார்கள் போலும்.

மானம் ஒன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த என் மறவேந்தர் பூனைகள் அல்லர் புலி நிகர் தமிழ்மாந்தர் என்றார் புரட்சிக் கவிஞர்

அந்தப் புலிகளின் குணத்தைக் காட்ட வேண் டும் என்று எதிர்பார்க்கிறார்களா?

தமிழர்களைப் பார்ப்பனர்கள் சீண்டத் துவங்கியுள்ளனர் என்பதை நமது தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!

---------------- மயிலாடன் அவர்கள் 26-2-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

25.2.12

பகவத் கீதை மத நூலா?வாழும் நெறியா?

பகவத் கீதை மத நூல் அல்ல வாழும் நெறியாமே?


திடுக்கிட வைக்கும் தீர்ப்பு

28.1.2012 தினமணி நாளிதழில் பின்வரும் செய்தி வெளி வந்துள்ளது.

பகவத் கீதை மதநூல் அல்ல; அது வாழும் நெறி என்ற தலைப்பில் செய்தி வந்துள்ளது.

பகவத் கீதை மதநூல் அல்ல; அதுவாழும் நெறி எனவும்; சமூகநீதி தாக்கும் நூல்; நன்னெறியைப் போதிக் கிறது என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

பள்ளிகளில் பகவத் கீதையைக் கற்பிக்கும் மாநில அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக் கில் உயர்நீதிமன்றம் ஜனவரி 27 வெள் ளிக்கிழமை இவ்வாறு கூறியுள்ளது.

கருத்துக் கூறுவது கடமை

தீர்ப்புப்பற்றித் திறனாய்வு அல்லது மதிப்பீடு செய்வது என்றில்லாமல், அந்தத் தீர்ப்பில் கூறப்பட்ட கருத்து அடிப்படையில் ஆய்வு செய்வது தேவை என்ற நிலையில் இங்கே கருத்து கூறப்படுகிறது.

முதலில், பகவத் கீதை மதநூலா? அல்லவா? என்பதை ஆய்வு செய்வோம்.

பொதுவாக, நாம் கீதை எனக் குறிப்பிடுவது மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும் என்று சொல்லப்படும் பகவத் கீதையைத்தான்.
இதனை வழங்கியவர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா எனப்படும் கண்ணன் ஆவான்.

முதலில் நமது வினா இதுதான்:

மகாபாரதமும் கீதையும் எந்த மதநூல்? இந்துமத நூல் அல்லவா இது?

கண்ணன் எந்த மதத்தின் கடவுள் இஸ்லாமிய மதக் கடவுளா? இல் லையே?

இந்து மதத்தின் கடவுளல்லவா?

திருமாலின் தசாவதாரங்களுக்குள் ஓர் அவதாரக் கடவுளல்லவா?

நூலாக்கமும் நோக்கமும்

பக்தி, ஞானம், யோகம், தத்துவம், ஆத்மிகம் என்ற பெயரால் கீதை பன்னிப்பன்னி, வலை பின்னிப் பின்னிக் கூறுவதெல்லாம் வர்ண தர்மத்தைத் தானே?

கடவுகளாகிய தன்னால்தான் பிராமண, சத்திரிய வைசிய, சூத்திர என்னும் நான்கு வர்ணங்களும் படைக்கப் பட்டன என்கிறான் கண்ணன்.

சதுர் வர்ணம் மயாசிருஷ்டம் (அத்.4. சுலோ:13)

நான்கு வர்ணங்களும் என்னால் படைக்கப்பட்டவை என்கிறான் கண்ணன்.

நான்கு வர்ண ஜாதி அமைப்பு உலகிலுள்ள எந்த மதத்தில் உள்ளது?

இஸ்லாமியம், கிறித்துவம், யூதம், முதலான பெருமதங்களில் உள்ளனவா இவை?

இந்து மதத்திலேதான் உள்ளன

வேறு எம்மதங்களிலும் இந்த அமைப்பு இல்லையே?

சொல்ல முடியுமா?

வர்ண -- ஜாதி அமைப்பு இல்லை என்றால் இந்து மதமே இல்லையே?

பிறப்பினாலேயே வேறுபாடு கற்பிப்பதும் குலதர்மக் கோட்பாட்டை அப்படியே அணுவளவும் பிசகாது பேணிக் காப்பதும் தானே பகவத் கீதை!

இது எப்படி மத நூல் அல்ல என்று ஆகும்?

வேறு வர்ண - ஜாதிக்காரன் தொழிலைக் கற்றுக் கொண்டு ஒருவன் அதனை நன்றாகச் செம்மையாகச் செய்தாலும் அதுகூடாது.

தன் வர்ண-ஜாதிக்காரன் தொழிலைக் கற்றுக் கொண்டு ஒருவன் அதனை நன்றாகச் செம்மையாகச் செய்தாலும் அது கூடாது.

தன் வர்ண_ ஜாதி சுயதர்மத்தை _ தொழிலை அரைகுறையாகச் செய்து செத்துப் போனாலும் அதுதான் சிறந்தது!
ச்ரேயாந் ஸ்வதர்மோ விகுண:

பரதர்மாத் ஸ்வனுஷ்டிதாத் ஸ்வபாபகியதம்
கர்ம குர்வந்நாப் நோதி கில்பிஷம்
(அத்: 18 சுலோகம்: 44)
இவ்வண்ணம்
வர்ண - ஜாதி _ சுயதர்மத்தைப் பிசகாது செய்தே தீர வேண்டும் என்கிற குலதர்மம் பேணும் ஏற்பாடு இந்து மதத்தில்தானே உள்ளது? இப்படியிருக்க,கீதை மதநூல் அல்ல என்றால் அது எப்படி? எப்படி?

விரும்பத்தகாத வேள்வி முறை

வைதிகச் சடங்கான கேள்வி - அதாவது யாகத்திற்குக் கீதையில் மிகவும் முதன்மை கொடுக்கப்பட்டுள்ளதே!

யக்ஞம் (வேள்வி) செய்யாதவர் களுக்கு இவ்வுலகில் நல் வாழ்க்கை இல்லை அத்.4 : சுலோ: 32)

யாகம் செய்வது இந்து மதத்துக் குரியதல்லவா? இதை வலியுறுத்தும் கீதை எப்படி மத நூல் அல்ல என்று ஆகும்?

வலிமையான வாக்குமூலம்

பகவத் கீதை ஒரு (இந்து) மத நூலா? அல்லவா? - என்பதற்கு விடையாக இந்து மதப் பரப்புரையாளராக இருந்த ஒரு பெரியவர் கூறியிருக்கும் வலிமையான வாக்குமூலத்தினைக் கீழே பார்ப்போமா?

இந்தநூல் (பகவத்கீதை) எல்லா ஹிந்துக்களுக்கும், சம்பிரதாய வித்தியாசமில்லாமல் வேதம் போலவும், உபநிஷத்துக்கள் போலவும் ஒப்புக் கொண்டிருக்கும். ஒரு சாஸ்திரமாக முடிந்து, பல ஆயிர வருஷங்களாக அங்கீகரிக்கப்பட்டு வந்திருக்கிறது.

யாரோ இவர் யாரோ?

இப்படிச் சொன்னவர் யார் தெரி யுமா? சாட்சாத் சக்கரவர்த்தி சி. இராஜ கோபாலாச்சாரியார் அவர்கள்தான்!
தமது,

கண்ணன் காட்டிய வழி என்னும் நூலில் தான் இவ்வண்ணம் வாக்கு மூலம் வழங்கியிருக்கிறார்.
இந்து மதத்தின் சாஸ்திரம் ஆக, இன்று நேற்றல்ல, பல ஆயிரம் ஆண்டு களாக பகவத் கீதை அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளதாம்!
இப்படியிருக்க.

பகவத்கீதை ஒரு மதநூல் அல்ல என்று ம.பி. நீதிமன்றம் தீர்ப்புரை வழங்கியிருப்பது எப்படி என்றுதான் எம் சிற்றறிவுக்கு எட்டவில்லை!

சமூகநீதியைக் காக்கும் நூலாமே!

சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவினர்க்கும் ஏற்படுத்தப்பட்ட சமூக அநீதியை (Social injustice)க்களைந்து அனைத்துப் பிரிவினர்க்கும் முறையான இயல்பான நீதியை வழங்குவதுதானே சமூகநீதி (Social Justice) ஆக இருக்க முடியும்? அத்தகைய சமூக நீதி காக்கும் நூலாமே கீதை? இது சரியா?

வர்ண தர்மக் கட்டளையைப் பின்பற்றித்தான் வாழ வேண்டும்.

அதை நிறைவேற்றுவதைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை.

அவற்றை மீறுவதைவிடத் தாழ்ந்தது எதுவும் இல்லை என்றுதானே கீதை பறைசாற்றுகிறது?

பணிவான தொண்டூழியம் செய்வது தான் சூத்திரர்களின் இயல்பான கர்ம மாகும் கடமையாகும் (அத்:18: சுலோ: 44)
இதன்படி தொண்டூழியம் _ அடிமைத்தனம் மட்டும்தான் சூத்தி ரனின் கடமை.

அவன் படித்தல் கூடாது; பதவியில் அமர்தல் கூடாது; உயர் அலுவல் பார்த் தல் கூடாது. இதுதான் சமூகநீதியா? இப்படிக் கூறும் கீதைதான் சமூகநீதி காக்கும் நூலா! இந்த நூற்றாண்டின் இணை யற்ற நகைச் சுவையல்லவா இது?
மங்கையர் - உழவர் மாபாவியராமே?

பெருமைக்குரிய பெண்ணினத்தையும் உயர்வுக்குரிய உழவன் இனத்தையும்; பாட்டாளிகளையும், தொழிலாளத் தோழர்களையும் பாவப்பட்ட பிறப்பு உறுப்பினின்றும் (பாய யோனி) பிறந்தவர்கள் என்று இழித்துரைக்கிறது கீதை.

மாம்ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேபிஸ்யு பாப யோனிய: ஸ்திரியோ வைச்யாஸ் -_ ததா சூத்ராஸ்தே

பெண்களும் வைசியர்களும் சூத்திரர்களும் பாவ யோனியினின்றும் பிறந்தவர்கள் (அத்:9 -_ சுலோ_ 32)

வைசியர், சூத்திரர், பெண்டிர் பாவிகள் என்று கூடச் சொல்லவில்லை. அவர்கள் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்கிறது கீதை!
இவர்களைப் பெற்ற பெண்களின் பிறப்புறுப்பே(யோனியே) பாவப் பட்டதாமே?

இதுவா சமூக நீதி காக்கும் நூல்!

துடிக்கிறதே உள்ளம்?

பயனை எதிர்பாராத பணியாமே?

கடமையைச் செய்; பயனை எதிர் பாராதே! (அத்_ 2 : சுலோ: 47)

இதனை, நிஷ்காம்ய கர்மம் என் கிறது கீதை.

உழைப்பினால்தான் ஒரு சமுதாயம் உயர முடியும். அதிக உழைப்புக்கு இருக்கும் அடிப்படை ஊக்கமே அதில் உண்டாகும் பலன் _ பயன் விளைவுதானே/

சுரண்டல் கோட்பாடு

கடுமையாக உழை! ஊதியத்தை (கூலியை)ப் பற்றிக் கவலைப்படாதே! என்ற வகையிலான கீதையின் தத்துவம் _ கீதோபதேசம் முதலாளித்துவத்தின் பாதுகாப்புக் கோட்பாடு அல்லவா?

எதுவும் செய்யாமலேயே பலனை எதிர்பார்க்கும் ஏமாற்றுச் சுரண்டும் வர்க்கம் உழைப்பாளிகளை _ பாட்டாளிகளைப் பார்த்து பலனை எதிர்பார்க்காதே! என்று கூறுவது கீதை காட்டும் சுரண்டல் கோட்பாடு அல்லவா?
இதுதான் வாழும் நெறியா?

எடுத்த செயலை நிறைவேற்றும் வகையில் செயலாற்றும் போது, இடையில் உண்டாகும் தடை; முடியும் போது உண்டாகும் என்பனவற்றை முன்னரே எண்ணிப் பார்த்து எதிர் பார்த்துச் செயலிலாற்றுக என்று கருத்தமைந்த,

முடிவும், இடையூறும், முற்றி ஆங்(கு) எய்தும் படுபயனும் பார்த்துச் செயல் (குறள் : 676)
குறளைப்பாருங்கள்!

பயனை எதிர்பார்த்தே செயல்புரிதல் வேண்டும் என்று கூறும் குறள் நெறி வாழும் நெறியா?

பலனை எதிர்பாராமல் பணி செய்! என்று கீதை உரைப்பது வாழும் நெறியா? எண்ணிப் பார்க்க வேண் டாமா?

சிந்தனை செய்யக் கூடாதாமே?

செய்யத் தக்கது, செய்யத்தகாதது என்பதை முடிவு செய்வதில் சாஸ் திரம்தான் உனக்குப் பிரமாணம்.

ஆகவே,
சாஸ்திரங்களில் சொல்லிய முறையை அறிந்து செயல்களைப் புரிக
தஸ்மாச் -_ சாஸ்திரப் ப்ரமாணம்தே கார்யாகார்ய வய்வஸ்தி தவ்ஜ்ஞாத்வா சாஸ்த்ர _ விதானோக்தம் கர்மகர்த்து மிஹார்ஹஸி (அத்.16. சுலோ: 24)

எதையும் சாஸ்திரம் கூறுவதை ஒட்டியே செய்! உன் அறிவைக் கொண்டு ஆராய்ந்து உன்பகுத்தறிவு கூறுவதன் படி செய்யாதே! என்பது கீதை (கண்ணனின்)யின் கருத்து.

இதுதான் வாழும் நெறியா?
தாழும் நெறியல்லவா?

காலடியில் வீழ்ந்துகிட!

எல்லாத் தருமங்களையும் விட்டு விட்டு என் ஒருவனையே சரணமாக அடைவாயாக!
நான் உன்னைச் சகல பாபங்களி லிருந்தும் விடுவிக்கின்றேன் அத்:18 சுலோ:65)
எத்துணை ஒழுக்கக்கேடாக -_ தீயொழுக்கத்தில் திளைத்தவனாக இருந்தாலும் கவலைப்படாதே! சகோதரா!
என்னை வணங்கு! என்னைச் சரண் புகு.

உன்பாபம் எல்லாம் பறந்து போகும்! என்று கூறுவது,

தீவினை, ஒழுக்கக் கேட்டினை ஊக்குவிப்பதாக இல்லையா?

இதுதான் கீதை காட்டும் வாழ்வியல் பாதையா? வாழும் நெறியா? வெட்கம்! வெட்கம்!!

பக்தியும் பாவங்களும்

பக்தி இருந்தால் போதும்; அறச் செயல்; அறநெறி வேண்டியதில்லை; பாவங்கள் ஓடியே போய்விடும்_ என்று அறிவுறுத்தும் மிக மோச மான வாழ்க்கை வழிதான் வாழும் நெறியா?

உணர்வோம்! உணர்த்துவோம்!!

நீதிமன்றத் தீர்ப்பின் கருத்துப்படி, (இந்து) மத நூல் பகவத் கீதை, மக்களுக்கு நல்ல பாதைகாட்டவில்லை!

அது சமூக நீதியைக் காக்கவில்லை!!

அது, வாழும் நெறியாகவும் திகழவில்லை!! என்ற உண்மைகளை ஒவ்வொருவரும் உணர்வோம்! உலகுக்கு உணர்த்துவோம்!! நீதிமன்றத் தீர்ப்புகள் எல்லாம் நிலையானவை அல்ல!

தீர்ப்புகள் திருத்தப்படலாம்!!

--------------------- பேராசிரியர் ந. வெற்றியழகன் அவர்கள் 25-2-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

கம்யூனிஸ்டு தலைவர்கள் பின்னால் ஜாதிப் பட்டம்?


இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மத்தியக் குழுக்கூட்டம் கோல்கட்டாவில் கூடி புதிய திசை நோக்கிப் பயணிக்க முக்கிய முடிவினை எடுத்துள்ளது.

இதுவரை வருக்கப் பிரச்சினையே சகல நோய்களுக்குமான மாமருந்து என்று நினைத்து, கொள்கை களம் அமைத்துப் பயணித்த இக்கட்சி வருண பேதம் குறித்தும் கருத்தில் கொண்டு போராட முன் வந்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

வருக்கமா? வருணமா? என்ற சர்ச்சை மூண்டெழுந்து பல கட்டங்களில் திராவிடர் கழகத்தோடு, விடுதலையோடு மல்லுக்கட்டி மற்போர் புரிந்ததுண்டு.

இந்திய சமூக அமைப்பில் பிறப்பின் அடிப்படையில் பேதம் என்கிற கொடுமை வேறு எங்கும் காணமுடியாத கழிசடைத்தனமாகும். பிறவி முதலாளித் துவம் என்பது இந்த சமூக அமைப்பின் கொடிய நஞ்சாகும்.

பொதுவுடைமை பூக்க பொதுவுரிமை அடிப்படை என்ற சங்க நாதத்தைத் தந்தை பெரியார் எழுப் பினார்.

பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா. என்னும் நூலினை எழுதிய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரான தோழர் ஏ.எஸ்.கே. (அய்யங்கார்) அவர்கள் அந்நூலின் என்னுரையில் ஒன்றை அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா - நான் அந்த வேலையைச் செய்து வருகிறேனே. . . அவ்வாறிருக்க கம்யூனிஸ்டுக் கட்சி என்னை எதிர்ப்பதேன்? என்று பெரியார் அவர்கள் என்னிடம் விநயமாகவும், உருக்கமாகவும் பன்முறை கேட்டுள்ளார். இது முற்றிலும் உண்மை. பெரியார் அவர்களைப் பற்றிச் சரியான கணிப்புப் பல தோழர்களுக்கு இல்லை என்பது என் கருத்து. இந் நூலை எழுதுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்சினைகள் குறித்து மீண்டும் கிளப்பவோ, அசை போடவோ தேவையில்லை. இத்திசையில் தந்தை பெரி யாரும் திராவிடர் கழகமும் மேற் கொண்டுள்ள பிரச்சாரம் - போராட் டம் என்ற களம் அமைத்துப் போராடி வரும் திசையில் தன் போக்கில் பொதுவுடைமை கட்சி ஒன்று அடி யெடுத்து வைக்க எத்தனிக்கும்போது அதனை இரு கரம் கூப்பி வரவேற்கவே செய்கிறோம்.

(1) தீண்டாமை ஒழிப்பு என்கிற போது அது ஜாதி என்னும் வேரி லிருந்து வெடித்துக் கிளம்பக் கூடிய தாகும். அண்மைக் காலத்தில் தீண் டாமை ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் மாநாடுகளை நடத்தி வந்துள்ளது. அதனை ஜாதி ஒழிப்பு மாநாடாக பரிணமிக்கச் செய்துகொள்வது சரியானதாக இருக்க முடியும்.

(2) தனது பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தைச் சுமந்திருந்தவர் தான் தந்தை பெரியார்.

தன்மான இயக்கம் கண்ட நிலையில், குடிஅரசு பூகம்பத்தை உருவாக்கிய கால கட்டத்தில் தன் பெயரில் ஒட்டி யிருந்த நாயக்கர் என்ற ஜாதி வாலினை ஒட்ட நறுக்கித் தூக்கி எறிந்தார்.

1929 செங்கற்பட்டில் நடைபெற்ற சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டில் பெயருக்குப் பின்னால் தொங்கிக்கொண்டிருந்த ஜாதிப் பட் டத்தைத் துறப்பது என்ற தீர்மானத்தை ஏற்று அந்த மாநாட்டிலேயே ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிந்ததாகப் பிரகடனம் செய்தனர் இயக்க முன் னோடிகள்.

கம்யூனிஸ்டு கட்சியின் மிகப் பெரிய தலைவர்கள் கூட பெயருக்குப் பின் னால் ஒட்டிக்கொண்டிருக்கும் வருணா சிரமச் சின்னமான ஜாதிப் பட்டத்தைத் துறக்க முடியாமல் இருப்பது நல்லதல்லவே!

பட்டாச்சார்யா என்றும், குப்தா என்றும், சட்டர்ஜி என்றும், முகர்ஜி என்றும், சர்மா என்றும், நம்பூதிரிபாட் என்றும் அறிமுகமாவது நல்லதுதானா?

கேரள மாநிலத்தில் நடக்க இருக்கும் அவர்களின் அகில இந்திய மாநாட்டில் சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் முடிவு எடுத்தது போல ஒரு தீவிரமான முடிவெடுத்து ஜாதியைத் தூக்கித் தங்களைத் தாங்களே சுத்திகரித்துக் கொள்வது, இளைஞர்கள் மத்தியில் புத்தெழுச்சி வெடித்துக் கிளம்பிடவும், இந்துத்துவாவின் அடிவேரில் தீவைத்தது போன்றதுமான ஒரு புதிய நிலைப்பாடாக இருக்க முடியும்.

மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மக்களவைத் தலைவராக இருந்தவருமான திரு சோம்நாத் சட்டர்ஜி அவர்கள் தன் பெயரன் பூணூல் கல்யாணத்திற்கு அழைப்பிதழ் போட்டு நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கெல்லாம் கொடுத்தார் என்பது கொதி நிலையின் உச்சகட்டம் அல்லவா?

இது போன்ற மூத்த தலைவர்களே கம்யூனிஸ்டு தத்துவத்தை இந்த அளவுக் குத்தான் புரிந்து கொண்டுள்ளனர் என்று கருதவேண்டியிருக்கிறதே!

பகுத்தறிவுக் கோட்பாட்டிலும் மிக உயர்ந்த சிந்தனைப் போக்குத் தேவைப் படுகிறது.

(3) பகுத்தறிவுக் கோட்பாட்டு நிலையில் ஒரு கோடு கிழித்துக் காட்டி, இந்தக் கோட்டின் முன் பகுதியில் இருப்பவர்கள் மதக்கொள்கைகளைப் பின்பற்றலாம்; - பின்பகுதியில் இருப்ப வர்கள் மதக் கோட்பாடுகளிலிருந்து சந்தேகத்திற்கிடமின்றி விலகி இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்தினை கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் அவர்களின் கட்டுரை கட்சியின் தமிழ் மாநில அதிகார பூர்வமான தீக்கதிர் நாளிதழில் (27.-1.-2010) வெளியாகி யிருந்தது.

இந்தக் கருத்தினை ஏற்றுக் கொள்ளாமல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் மனோஜ் கட்சியிலிருந்து விலகினார். கண்ணனூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த அப்துல் வகாப்பும் இதே காரணத்துக்காக கட்சிக்கு முழுக்குப் போட்டதுண்டு.

கேரள மாநில முதலமைச்சராக இருந்த திரு.ஈ.கே. நாயனார் அவர்கள் வாட்டிகன் சென்று போப்பைச் சந்தித்தபோது, வருணாசிரமத்தின் ஒட்டு மொத்த வடிவமான (நான்கு வருணங்களையும் நானே உண்டாக்கினேன். அப்படி என்னால் உண்டாக் கப்பட்ட அந்த நான்கு வருணங் களையும் நானே நினைத்தால் கூட மாற்றியமைத்திட முடியாது என்று கிருஷ்ணன் கூறுவதாக கீதை கூறு கிறது.) கீதையை அன்புப் பரிசாக அளித்தது அண்டத்தையே குலுக்கிய அசாதாரணமான நிகழ்ச்சியல்லவா?

இதில் அழுத்தமாகக் குறிப்பிட வேண்டியது ஒன்று உண்டு. அந்தச் செயலுக்கு அவர் நியாயம் கற்பித்தது தான். மகரஜோதி மோசடி என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையிலும் அதில் தலையிடமாட்டேன் என்று கூறுவதற்கு ஒரு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆட்சி தேவையா என்ற கேள்வி கட்சியைத் துரத்திக்கொண்டேயிருக்கும் என்பதில் அய்யமில்லை.

இந்து சமூக அமைப்பில் நாத்திகம் என்பதேகூட ஜாதி மறுப்பே தவிர கடவுள் மறுப்பல்ல.

அதே நேரத்தில் ஜாதியின் பாது காப்பை கடவுளின் அரவணைப்பில் முடிச்சுப் போட்டு வைத்துள்ளனர்.

பிர்மாவின் நெற்றியில் இருந்து பிராமணன் பிறந்தான். தோளிலிருந்து சத்திரியன் பிறந்தான். இடுப்பிலிருந்து வைசியன் பிறந்தான்.

பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தான் என்று ஏற்பாடு செய்து வைத்துள்ள வருணாசிரம அமைப்பில் பிர்மாவைத் தனியே பிரித்து வைத்து விட்டு ஜாதியை ஒரு கை பார்க்கிறேன் என்பது நிஜத்தை விட்டு நிழலைத் தாக்கும் பரிதாப முயற்சி யாகும். கேரளாவில் சாஸ்தா கோவிலில் செத்துப்போன குரங்கு ஒன்றுக்கு இரண்டு அமைச்சர்கள் (சி.பி.எம்.) செங்கொடி போர்த்தி புரட்சி ஓங்குக என்று முழக்கமிடும் அளவுக்குச் சீர் கெட்டுப் போகக் கூடாதல்லவா?

சமூக நீதிக் கொள்கையில்கூட தடுமாற்றம் உண்டு. சி.பி.எம். கட்சியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்பதற்குப் பதிலாக பொருளாதாரத்தையும் இதற்குள் திணிப்பதற்கு அனுசரணையாக இருந்த போக்கு கடந்த காலத்தில் உண்டு.

எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்து கொண்டு வரப்பட்ட (வருமான வரம்பு) ஆணைக்கு ஆதரவு தெரிவித்த நிலை யில், அதே நேரத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (சி.பி.அய்.) அதில் தெளிவாகவே இருந்திருக்கின்றது.

பெரும்பாலான தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக, பொருளா தாரத்தில் கீழ் மட்டத்தில் தள்ளப் பட்டு இருக்கும் நிலையில், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது பெரும்பாலான தொழிலாளர்களுக்கும் பாயக் கூடிய நீர்ப்பாசனமேயாகும்.

குறையைச் சுட்டிக்காட்டி சங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ப தல்ல திராவிடர் கழகத்தின் நோக்கம்.

காலம் கடந்தாலும் சரியான திசையில் பயணத்தைத் தொடர்ந்திருப்ப தாக எடுத்த முடிவுக்கு ஆக்கம் தரும் வகையில் கோடிட்டுக் காட்ட வேண் டிய கடப்பாடாகக் கருதி இவற்றைத் திராவிடர் கழகம் முன் வைக்கிறது - மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியைப் புதிய பாட்டையில் வாழ்த்தி வரவேற்கிறது.

--------------- கலி.பூங்குன்றன் அவர்கள் 25-2-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

24.2.12

திராவிடத்தால் வீழ்ந்தோமா?


டாக்டர் நடேசனார், டாக்டர் டி.எம். நாயர், முத்தையா முதலியார் சிலைகள் நிறுவுவோம்

திராவிடர் கழகத் தலைவரின் கொள்கை அறிக்கைடாக்டர் சி.நடேசனார் நினைவு நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

டாக்டர் சி.நடேசனார் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1937).

இந்த மாமனிதருக்கு பார்ப்பனர் அல்லாதார் சமுதாயம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. நன்றி உணர்வென்னும் உணர்வின் கண்ணீர்த் துளிகளால் மாலை சூட்டி நம் மரியாதை உணர்வை வெளிப்படுத்த வேண்டும்.

திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்று நெஞ்சில் ஈரமின்றி, வரலாற்று அறிவுமின்றி நுனிப்புல் மேயும் சிலர் நம்மினத்திற்குக் கிடைத்திருப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

நன்றி விசுவாசம் இல்லையே!

நன்றி விசுவாசம் காட்டுவதும் நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு என்றார் தமிழினப் பாதுகாவலராம் தந்தை பெரியார். இந்தக் கண்ணோட்டத்தில் இந்த நன்றி கெட்ட மனிதர்களையும் புறந்தள்ளி நாம் நடந்து வந்த பாட்டையை ஒரு கணம் எண்ணுவோம்.
முதன்மையான மனிதர் நடேசனார்

1912 இல் - இன்றைக்குச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனர் அல்லாதா ருக்கென ஓர் அமைப்பு வேண்டும் என்று நினைத்ததே கூட சாதாரணமானதல்ல.

அப்படி நினைத்த பெருமகனார்களில் டாக்டர் சி.நடேசனார் முதன்மையான மனிதர். சென்னை பெரிய தெருவில் உள்ள அவரது இடமே அதற் கான பிரசவ அறையாகும்.

சென்னை அய்க்கிய சங்கம் (Madras United League) உருவாக்கப் பட்டது. அதுவே பின்னர் 1913-இல் திராவிடர் சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

பிற்காலத்தில் 1916 நவம்பர் 20 இல் தென்னிந் திய நல உரிமைச் சங்கமாகிய நீதிக்கட்சி தோற்றுவிக்கப் பட்டதற்கான உந்து சக்தி டாக்டர் சி.நடேசனார் அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிட சங்கமேயாகும்.

அதனால்தான் நீதிக்கட்சி என்பதை திராவிடர் சங்கத்தை நிறுவிய நடேசனாரின் குழந்தை என்றார் கே.எம்.பாலசுப்பிரமணியம்.

தியாகராயரையும், நாயரையும் இணைத்த பாலம்

காங்கிரஸ்காரர்களாக இருந்து தங்களுக்குள் மாறுபட்டு நின்ற வெள்ளுடை வேந்தர் பி.தியாக ராயரையும், டாக்டர் டி.எம். நாயரையும் இணைக் கும் பாலமாக இருந்தவரும் டாக்டர் சி.நடே சனாரே!

இந்த மும்மூர்த்திகளும்தான், திராவிடர் இயக்கத்தின் முக்கிய மூன்று தூண்கள்!

அந்தக் காலத்தில் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமானால் பெருநகரங்களாகிய சென்னை, திருச்சியைத் தேடித்தான் செல்லவேண்டும். ஆனால் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு விடுதிகள் கிடையாது. இருந்த விடுதிகளும் பார்ப்பனர்களுக்கானது. அங்கே பார்ப்பனர் அல்லாதார் தங்குவதற்கு அனுமதி கிடையாது. வேண்டுமானால் எடுப்புச் சாப்பாடு எடுத்து வரலாம்.

இந்த நிலையில் பார்ப்பனர் அல்லாத மாணவர் தங்கிப் படிப்பதற்கென்றே ஒரு விடுதியை ஏற்படுத் தினார் (1916) டாக்டர் நடேசனார். இந்த ஆக்கபூர்வமான - ஆதார சுருதியான செயலை செய்த இந்த ஒன்றுக்காக மட்டுமே அந்தப் பெருமகனுக்கு நம் நெஞ்சத்தில் நிரந்தர இடத்தை அளிக்க வேண்டும்!

அந்த இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள்தான் பிற்காலத்தில் துணை வேந்தராக விளங்கிய டி.எம்.நாராயணசாமி பின்னை, பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார்.

இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக வந்த ஆர்.கே.சண்முகம் (செட்டியார்) பாரிஸ்டர் ரங்கராமானுஜ (முதலியார்) போன்றவர்கள் கூட இந்த இல்லத்தில் தங்கிப் படித்தனர் என்கிறார் திராவிடப் பெருந்தகை தியாகராயர் என்ற நூலில் மயிலாடுதுறை கோ. குமாரசாமி அவர்கள்.

டி.எம்.நாயர் ஊட்டிய ஊக்கம்

ஒவ்வொரு ஆண்டும் பட்டம் பெற்று வெளி யேறும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தியதும் திராவிடர் சங்கமே.

டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்கள் எல்லாம் உரையாற்றி உற்சாகப்படுத்தியுள்ளனர். அப்பொ ழுது ஒரு முறை டாக்டர் நாயர் “Awake, Arise or Be Forever Fallen” என்று கூறியிருந்தார்.

பார்ப்பனர்கள் அல்லாத பட்டதாரிகளே, விழியுங்கள்! எழுங்கள்! இன்றேல் நீவிர் வீழ்ச்சி அடைவீர்! என்று எழுச்சிக் குரல் கொடுத்தார் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு. உளவியல் ரீதியான தூண்டுதலையும் எழுச்சியையும் ஊட்டி நின்றார்.
1912 இல் நம் நிலை என்ன?

1912 இல் பார்ப்பனர் அல்லாதாருக்கான ஓர் அமைப்பைத் தொடங்கிய கால கட்டத்தில் நம் நாட்டின் நிலை என்ன?

டெபுட்டி கலெக்டர்கள் 55ரூ , சப் ஜட்ஜ்கள் 83ரூ, மாவட்ட முன்சீப்புகள் 72ரூ பார்ப்பனர் களாகவே இருந்தனர் என்ற நிலையை நினைத் துப் பாருங்கள்.

1901 ஆம் ஆண்டில் கல்வியின் நிலை என்ன?

பார்ப்பனர்கள் (தமிழ்நாடு) 73.6% }

தெலுங்குப் பார்ப்பனர்கள் 67.3%

நாயர்கள் 39.5%

செட்டியார் 32%

இந்தியக் கிறிஸ்தவர் 16.2%

நாடார் 15.4%

பலிஜா நாயுடு, கவரை 14.3%

வேளாளர் 6.9%

கம்மா 4.8%

காப்பி, ரெட்டி 3.8%

வௌமா 3.5%

(Census of India, Madras 1921 XIII Part I, 128-129)

இந்தப் புள்ளி விவரங்களை அறிந்தால்தான் இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதாரின் வளர்ச் சிக்கு எந்த இயக்கம் அடிப்படை? எந்தத் தலைவர்கள் காரணம்? என்பதை ஒழுங்காக அறிய முடியும்.

திராவிடத்தால் வீழ்ந்தோமா?

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறி பார்ப்பனர்களுக்குச் சேவை செய்யத் துடிக்கும் பேர்வழிகளின் அடையாளத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை பற்றிய ஒரு புள்ளிவிவரம் இதோ:

திறந்த போட்டி 460 இடங்கள்

பிற்படுத்தப்பட்டவர்கள் 300 பேர்

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 72 பேர்

தாழ்த்தப்பட்டவர்கள் 18 பேர்

முசுலிம்கள் 16 பேர்

முற்படுத்தப்பட்டோர் 54 பேர்

200-க்கு, 200 கட் ஆஃப் மதிப் பெண்கள் பெற்றவர்கள் 8 பேர். இதில் பிற்படுத்தப்பட்டவர் 7 பேர். மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ஒருவர்.

இன்றைக்குச் சென்னைப் பல்கலைக் கழகம் உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் பார்ப்பனர் அல் லாத மாணவர்களின் எண்ணிக்கை 1,45,450 (89 விழுக்காடு) என்று துணைவேந்தர் முனைவர் திருவாசகம் சொன்னாரே! (20-11-2010). இந்த வளர்ச்சிக்கு அடித்தள மிட்டு வளர்த்தது திராவிடர் இயக்கம்தானே! மறுக்க முடியுமா?

பார்ப்பனர்களின் ஆதிக்கபுரியாக இருந்த உத்தியோக மண்டலத்துக்கு முடிவு கட்ட பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கொண்டு வரப்படக் காரணமாக இருந்தவரும் டாக்டர் சி.நடே சனாரே!

அதிர்வை ஊட்டிய நடேசனாரின் தீர்மானம்

பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விகிதாச்சார அளவுக்கு உத்தியோகம் கிடைக் கும் வரையில் இனிமேல் அரசாங்க உத்தி யோகங்கள் யாவும் பார்ப்பனரல்லாதாருக்கே கொடுக்கப் படவேண்டும் என்ற தீர்மானத்தை அன் றைய சென்னை மாநில சட்டசபையில் கொண்டு வந்து சபையையே அதிர வைத்த சமூக நீதியின் சண்டமாருதம் நடேசனாரே!

பெண்களுக்கு வாக்குரிமை வந்தது எப்படி?

பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டதும் நீதிக் கட்சி ஆட்சியிலேயேதான்! மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற பார்ப்பன சதி வலையை கிழித்தெறிந்ததும் நீதிக் கட்சியே!

தேவதாசி முறை ஒழிப்பு, இந்து அறநிலையத் துறைப் பாதுகாப்புச் சட்டம் இவற்றைக் கொண்டு வந்ததும் திராவிடர் இயக்கமாகிய நீதிக்கட்சி ஆட்சியே!

நீதிக்கட்சியின் சாதனைக் குவியல்கள்

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை (1920-23) சாதனைகள் பற்றி தனி அரசாணையே வெளியிடப்பட்டதே! (ஆணை எண் 116).

 • பொதுத் துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன

 • துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர்களுக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.

 • தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.

 • தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

 • *தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் தனி அலுவலர் என்பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.

 • தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. * குறவர்களை எல்லா வகையிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 • கோவை மாவட்டத்திலுள்ள வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25- நிதி உதவிகள் (ஸ்காலர்ஷிப்புகள்) அளிக்கப் பட்டன.

 • ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப் பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற சாதியினரிடமிருந்து பாதுகாப்பு - அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன. தாழ்த்தப்பட்டவர் களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.

 • ஆதி திராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்குகிற போது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.

 • அருப்புக் கோட்டையில் குறவர் பையன் களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப் பட்ட தொகையை உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டுள்ளது.

 • மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.

 • கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.

 • நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்து வோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.

 • பி. அண்டு சி வேலை நிறுத்தத்தின் விளைவு களால் ஏற்பட்ட பாதிப்பு களுக்கு உதவிகள் செய்யப்பட்டன.

 • தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டு கோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.

 • ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டு கோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.

 • குடிப் பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற மக்களை நெறிப்படுத்த ஆணை வெளி யிடுதல்.

 • ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.

 • தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.

 • மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

 • சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளை களுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.

 • கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

 • உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும் போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.

 • மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (Stipend) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

 • *அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டு தோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.

 • *தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

 • *சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப் பட்டு இருந்தது.

 • *கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.

 • *தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.

  அரசு ஆணைகளின் தொகுப்பு:

1. பெண்களுக்கு வாக்குரிமை அரசாணை எண். 108 நாள்: 10.05.1921

2. பஞ்சமர் என்ற சொல் நீக்கப் பெறல் - ஆதிதிராவிடர் என அழைக்கப்பெறல். அரசாணை எண். 817 நாள் 25.3.1922

3. கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைத்தல். அரசாணை எண். 536 நாள் 20.5.1922.

4. கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாத பிள்ளைகள் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் அரசாணை எண். 849 நாள் 21.6.1923.

5. தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்க வேண்டும். அரசாணை எண். (அ) 205 நாள்: 11.2.1924; (ஆ) 1825 நாள்: 24.9.1924.

6. இந்து சமய அறநிலையச் சட்டம் அரசாணை எண். 29 நாள். 27.01.1925.

7. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைச் சேர்ப்பது குறித்த ஆணை அரசாணை எண். (அ) 636 நாள்: 20.5.1922. (ஆ) 1880 நாள் 15.9.1928

8. வகுப்புரிமைக்காகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை அரசாணை எண்.226 நாள் 27.2.1929

9. சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கல் அரசாணை எண். 484 நாள் 18.10.1929.

எடுத்துச் சொன்னால் ஏடு தாங்காது.

69 சதவிகிதம் வரை...

இந்தி திணிப்பு முறியடிப்பு, தமிழ்மொழியின் மறுமலர்ச்சி (பெயர்கள் சூட்டுவது உட்பட) செம்மொழி, சுயமரியாதைத் திருமணச் சட்டம், சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், 69 சதவிகித இடஒதுக்கீடு என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
திராவிடத்தால் வாழ்ந்தோமா? வீழ்ந்தோமா என்பதை நேர்மையுடன், அறிவு நாணயத்துடன் சிந்தித்துப் பார்க்கட்டும்!

தந்தை பெரியாரின் இரங்கல்

திராவிட இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய பெருமான் சி. நடேசனார் தமது 62ஆவது வயதில் மறைவுற்றார். அப்பொழுது தந்தை பெரியார் எழுதினார் குடிஅரசில் (21.2.1937).

டாக்டர் நடேச முதலியார் நலிந்தார் என்ற சேதி கேட்டு நம் நாட்டில் வருந்திடாத பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அவரது சேவையைப் பாராட்டி, அவருக்கு நன்றி விசுவாசம் காட்டக் கடமைப்படாத தமிழ் மகன் எவனும் எந்நாட்டிலும் இருக்க மாட்டான். தோழர் நடேச முதலியாரிடம் உள்ள அருங்குணங்களில் சூது, வஞ்சகம் அற்ற தன்மையே முதலாவதும் இரண்டாவ தும் மூன்றாவதுமாகும்.

சூதற்றவனும் - வஞ்சகமற்றவனும் உலகப் போட்டியில் ஒரு நாளும் வெற்றி பெற மாட்டான் என்கிற தீர்க்க தரிசன ஆப்தவாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த நடேசன் அவர்கள், தனது தொண்டிற்கும், ஆர்வத்திற்கும், உண்மையான கவலை கொண்ட ஊக்கத்திற்கும் உள்ள பலனைத் தம் சொந்தத்திற்கு அடையாமல் போனதில் நமக்குச் சிறிதும் ஆச்சரியமில்லை. ஏன்? தனக்கென வாழாதார் தான் பிறர்க்கென வாழ முடியும். ஆதலால் நடேசன் அவர்களால் தமிழ் மக்களுக்கு எண்ணரிய நன்மைகள் ஏற்பட்டிருப்பதை அவரது எதிரிகளும் மறுக்கார்.

கொள்கை வீரர் - தன்னலமற்ற பெருந்தகை நடேசனார் நலிந்ததாலேயே தமிழ் மக்களுக்கு உழைக்கும் தயாளர் இல்லை என்ற நிலை ஏற்படக் கூடாது என்பது நமது அவா. ஆதலால் ஒரு நடேசன் நலிந்ததால் நாம் நலிவு கொண்டு விடாமல் ஆயிரம் நடேசனார் காணுவோமாக! நாம் ஒவ்வொருவரும் நடேசனாக நாடுவோமாக! என்று எழுதினார் தந்தை பெரியார்.

தலைநகரில் நடேசனாருக்குச் சிலை!

திராவிடர் இயக்கத்தின் பிரசவ அறையாக இருந்த டாக்டர் நடேசனாருக்கு தலைநகரில் ஒரு சிலை இல்லை. திராவிடர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு நூற்றாண்டு காணும் இவ்வாண்டிலாவது அவரது சிலையை - அவர் வாழ்ந்து வந்த சென்னை திருவல்லிக்கேணி வட்டாரத்தில் நிறுவிட வேண்டும் - அது நமது கடமை. அதே போல தென்னாட்டு லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் போற்றப் பெற்ற டாக்டர் டி.எம். நாயர், முதல் வகுப்புரிமை ஆணையக் கொண்டு வந்து செயல்படுத்திய சிற்பி எஸ். முத்தையா முதலியார் ஆகியோர்களின் சிலைகள் தலைநகரில் நிறுவப்பட வேண்டும். இவ்வாண்டில் நீதிக்கட்சி - திராவிடர் இயக்கத் தொடர்பான முக்கிய நூல்களும் வெளியிடப்படும். இதற்கான முயற்சியில் திராவிடர் கழகம் மேற்கொள்ளும். திராவிடர் சங்க நூற்றாண்டு விழாவையும் நாடு தழுவிய அளவில் கொண்டு சென்று - திராவிடர் இயக்கத்தையும், திராவிடர் என்ற இனப்பெயரையும் சிறுமைப்படுத்தும் சக்திகளை முறியடிப்போம்!
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம்!

நீதிக் கட்சியின் பவள விழாவினை 1991இல் சேலத்தில் சிறப்பாக நடத்திய திராவிடர் கழகம் இதனையும் உரிய வழியில் கொண்டாடும்.

வாழ்க நடேசனார்! வளர்க திராவிட இயக்க இலட்சியம்!

---------------கி.வீரமணி ----தலைவர், திராவிடர் கழகம்


குறிப்பு: இந்த அறிக்கையும் தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் அறிக்கையும் ஒரே நேரத்தில் வெளிவருவது மகிழ்ச்சி; உண்மையான திராவிடர் இயக்கத்தினர் ஒரே மாதிரியாகத்தான் சிந்திப்போம் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டே!

------------------ "”விடுதலை”18-2-2012


23.2.12

பெரியார் தந்த சமதர்ம வேலைத் திட்டம்

1. அரசாங்க உத்தியோக சம்பளங்கள் மக்களின் பரிசுத்தத் தன்மையைக் கெடுக்கக் கூடியதாகவும், பேராசையை உண்டாக்கக் கூடியதாகவும், இந்தியப் பொருளாதார நிலைமைக்கு மிக மிகத் தாங்க முடியாததாகவும் இருப்பதால், அவைகளைக் குறைத்து உத்தியோகஸ்தர்களுடைய வாழ்க்கையின் அவசிய அளவுக்கு ஏற்றதாகவும் மீத்துப் பெருக்கி வைப்பதற்கு இலாயக்கில்லாததாகவும் இருக்கும்படி செய்ய வேண்டும்.

2. பொது ஜனத் தேவைக்கும், சவுகரியத்துக்கும், நன்மைக்கும் அவசியமென்று உற்பத்தி செய்யப்படும் சாமான்களின் தொழிற்சாலைகள், இயந்திரசாலைகள், போக்குவரவு சாதனங்கள் முதலியவை அரசாங்கத்தாராலேயே நடைபெறும்படிச் செய்ய வேண்டும்.

3. ஆகார சாமான்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், அவற்றை வாங்கி உபயோகிக்கும் பொதுஜனங்களுக்கும் மத்தியில் தரகர்கள், லேவாதேவிக்காரர்கள் இல்லாதபடி கூட்டுறவு ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி அதன் மூலம் விவசாயிகளின் கஷ்டத்தையும் சாமான் வாங்குபவர்களின் நஷ்டத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

4. விவசாயிகளுக்கு இன்றுள்ள கடன்களை ஏதாவது ஒரு வழியில் தீர்ப்பதுடன் இனிமேல் அவர்களுக்குக் கடன் தொல்லைகள் ஏற்படாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

5. குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள், ஒரு குறிப்பிட்ட அளவு கல்வியாவது எல்லா மக்களுக்கும் ஏற்படும்படியாகவும், ஒரு அளவுக்காவது மதுபானத்தின் கெடுதி ஒழியும் படியாகவும். ஓர் அளவுக்கு உத்தியோகங்கள் எல்லா சாதி - மதங்களுக்கும் சரிசமமாய் இருக்கும்படிக்கும் உடனே ஏற்பாடு செய்வதுடன், இவை நடந்து வருகின்றதா என்பதையும் அடிக்கடி கவனித்துத் தக்கது செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

6. மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படிச் செய்வதுடன், அரசியலில் - அரசியல் நிருவாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். சாதிக்கென்றோ, மதத்திற்கென்றோ எவ்விதச் சலுகையோ, உயர்வு - தாழ்வு அந்தஸ்தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாள்வதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.

7. கூடியவரை ஒரு குறிப்பிட்ட ரொக்க வரும்படிக்காரருக்கோ அல்லது தானே விவசாயம் செய்யும் விவசாயிக்கோ வரிப் பளுவே இல்லாமலும், மனித வாழ்க்கைக்குச் சராசரி தேவையான அளவுக்கு மேல் வரும்படி உள்ளவர்களுக்கும், அன்னியரால் விவசாயம் செய்யப்படுவதன் மூலம் பயனடைபவர்களுக்கும் வருமான வரி முறைபோல் நிலவரி விகிதங்கள் ஏற்படுத்த வேண்டும்.

8. லோக்கல் போர்டு, முனிசிபாலிட்டி, கோவாப்பரேட்டிவ் இலாக்கா ஆகிவைகள் இன்னமும் அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு, இவற்றின் மூலம் மேலே குறிப்பிட்ட பல காரியங்கள் நிருவாகம் செய்ய வசதிகள் செய்து, தக்க பொறுப்பும் நாணயமும் உள்ள சம்பள அதிகாரிகளைக் கொண்டு அவைகளை நிருவாகம் செய்ய வேண்டும்.

9. விவகாரங்களையும், சட்டச் சிக்கல்களையும் குறைப்பதுடன் சாவுவரி விதிக்கப்பட வேண்டும்.

10. மேலே கண்ட இந்தக் காரியங்கள் நடைபெறச் செய்வதில் நாமே சட்டங்கள் செய்து, அச்சட்டங்களினால் அமலில் கொண்டுவரக் கூடியவைகளைச் சட்டசபைகள் மூலமும், அந்தப்படி சட்டங்கள் செய்து கொள்ள அதிகாரங்கள் இல்லாதவைகளைக் கிளர்ச்சி செய்து அதிகாரங்கள் பெறவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

----------------தந்தை பெரியார், 29, 30.9.1934-இல் நடந்த சென்னை தென்னிந்திய நல உரிமைச்சங்க மாநாட்டிற்கு அனுப்பிய வேலைத்திட்டம் - பகுத்தறிவு - 23.9.1934

22.2.12

அபிமன்யு, பிரகலாதன் கதையில் அறிவியலா?

அம்மாவின் கருவறையில் அதிசயமாமே?

தினமணி 2012 புத்தாண்டுச் சிறப்பிதழில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அந்தக் கட்டுரையை, கரூரை மய்யமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சித்த நிறுவன இயக்குநர் திரு. டி.என்.சேதுலிங்கன் என்பார் கருவறையில் ஓர் அதிசயம் - என்கிற தலைப்பில் எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையில் அறிவியலுக்குப் புறம்பான சில கருத்துகள் அறிவியல் கருத்துகள் போல உள்ளன. அவற்றுள் ஒரு பகுதி பின்வருவது:

5ஆம் மாதம் கருக்குழந்தைக்குக் காது கேட்கும்; 6ஆம் மாதத்தில் நாம் சொல்வதைப் புரிந்து கொள்ளவும், 7ஆம் மாதத்தில் பிரதிபலிக்கவும் செய்கிறது; தாய், தன் வயிற்றில் கைவைத்துக்கொண்டு, கையை அசைக்கச் சொன்னால் அசைக்கும். காலை அசைக்கச் சொன்னால் காலை அசைக்கும். படித்தீர்களா? மேலும் படியுங்கள்.

கருவறைக்குள்ளேயே கற்குமாமே?

பக்த பிரகலாதன் கதையில், பிரகலாதன் கருவறையில் இருக்கும்போதே, முனிவரால் தன் தாயாருக்குப் போதித்த விஷயங்களைக் கேட்டு, உணர்ந்ததாகவும், அர்ச்சுனனுக்கு மகாபாரதப் போரில், சக்ரவியூகம் பற்றி எடுத்துச் சொன்னபோது, வயிற்றில் வளரும் அபிமன்பு கேட்டதும் கதை என்று ஒதுக்கிவிட்டோம்.

நல்ல நல்ல விஷயங்களைக் கருக்குழந்தைக்குப் போதித்து வந்தால் ஒரு ஞானக் குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். என்ன ஆராய்ச்சி? என்ன கண்டுபிடிப்பு?

அன்னையின் ஆணை!

கருப்பையில் இருக்கும் ஒரு குழந்தையிடம், தாய் தன் வயிற்றில் கைவைத்து, கை, கால்களை அசை என்று சொன்னால், இல்லை ஆணையிட்டால் அதனைக் கேட்டு, அக்கருக் குழந்தை கைகால்களை அசைக்குமாமே!

எந்த மகப்பேறு மருத்துவ அறிவியல் இவ்வாறு கூறுகிறது? எந்த கருவியல் அறிஞர் இப்படிச் செப்பியுள்ளார்? வயிற்றில் வெளியே கைவைத்தால் கருப்பைக்கு அந்தக் கையில் தொடுஉணர்ச்சி எப்படிக் கருப்பைக்குப் போகும்?

கையை அசை, காலை அசை என்றால் இந்த அன்னையின் ஆணையைக் கேட்டுப் பொருள் புரிந்து அந்தக் கருக்குழந்தை ஆடுமா? துள்ளிக் குதி, கூத்தாடு என்றால் அக்கருக்குழவி, துள்ளித் துள்ளிக் குதிக்குமா? கூத்தாடுமா?

ஆடு பார்க்கலாம் ஆடு! - உன்
அழகைப் பார்க்கும் என்னோடு-
என, தாய் கூறினால், அந்தக் கருக்குழவி,
தாம் தரிகிட, தீம்திரிகிட
ததிங்கிணத்தோம், ததிங்கிணத்தோம்! - என்று தாளம் தப்பாமல் பாவம் பிசகாமல் நடனம் ஆடுமா? அந்த நடனம், பரத நாட்டியமா? கதகளியா? குச்சுப்புடியா? மணிப்புரி நடனமா? இல்லை, தமிழையும் தமிழனையும் கொச்சைப்படுத்தி எழுதி, நடிகர் தனுஷ் பாடிய, ஒய் திஸ் கொலவெறி கொலவெறி

கொலவெறி, கொலவெறி டீ!

என்ற பாடலைக் கேட்டால், அந்தக் கருக்குழவி கொலைவெறி பிடித்து கைகளையும் இடுப்பையும் கழுத்தையும் அசைத்து அசைத்து வெட்டிவெட்டிப் பாடி ஆடுமா?

எங்கே ஆதாரம்?

என்னமாய் கதை அளக்கிறார் கட்டுரையாளர்? இக்கருத்துகளை எந்த அறிவியல் ஆதாரம் கொண்டு கூறி, நிறுவுகிறார்? நுண்ணிய ஒளிப்படக் கருவி (Micro Camera) கொண்டு படம் பிடித்தாரா? இல்லை, ஸ்கேன் (Scan) எடுத்துக் கண்டறிந்தாரா? ஒருவேளை, பக்தர்கள் பீற்றிக் கொள்ளும் ஞான திருஷ்டியால் கண்டு சொல்கிறாரோ?

கதை கதையாம் காரணமாம்!

இவர், தமது கூற்றுக்குச் சான்றுகள் (Evidences) ஆகக் கூறுவதெல்லாம் பக்த பிரகலாதன் கதையும் மகாபாரத அபிமன்யு கதையும்தான்!

இரணியன் என்னும் அசுரன் மனைவி கருவுற்றிருந்த காலத்தில், முனிவர் ஒருவர் அவருக்குப் போதித்த பக்தி -பிரபாவங்கள் பகவத் - மகாத்மியங்கள் - இவற்றைக் கேட்டுக் கேட்டு, கருக்குழந்தையான பிரகலாதன் திருமாலடியனாக மாறினானாம்! அதுபோலவே, போரில், சக்ர வியூகம் எவ்வாறு அமைப்பது? எவ்வாறு அதனுள் உடைத்து வியூக மய்யத்திற்குப் போவது என்பதுபற்றி எல்லாம் அர்ச்சுனனுக்குப் போதிக்கப்பட்டதாம்!

இதனை, அர்ச்சுனன் அருகில் இருந்த அவன் மனைவி சுபத்ராவின் கருப்பையிலிருந்து பின்னாளில் அபிமன்பு என அழைக்கப்பட்ட கருக்குழந்தை கேட்டதாம்!

அந்தப் போர் அணிவகுப்பு (வியூகம்) பற்றிய நடைமுறை மகாபாரதப் போரில் தான் கருக்குழந்தையாக இருந்தபோது கேட்டதற்கிணங்க பின்பற்றிப் போரிட்டானாம்!

ஏற்றுக்கொள்வது எப்படி? அபிமன்பு கதையையும், பிரகலாதன் கதையையும் நாம் கதை என்று ஒதுக்கி விட்டோமாம்! நிரம்பவும் வருந்துகிறார். மனம் புழுங்குகிறார், ஏங்குகிறார் இந்தக் கட்டுரையாளர். கதைகள் கற்பனைதானே? புராணப் புளுகுகள்தானே. ஒதுக்கப்பட வேண்டியவைதானே இவைகள்? அறிவியல் அடிப்படை அற்றதை ஏற்பது எப்படி?

கண்டுபிடி, என்ன சத்தம்?

தாயின் குரலையும் பிற ஒலிகளையும் கருக்குழவி கேட்கும். அதேசமயம் அந்தக் குரல் ஒலியில் உள்ள சொற்கள் இன்ன என்றோ, அவற்றின் பொருள் இன்னவைதான் என்றோ அதற்குத் தெரியாது. அது என்ன மொழி (Language) என்றே அதற்குத் தெரியாது, தெரியாது, அதற்குத் தெரிவதெல்லாம் தாயின் குரலைத்தான்! ஒலியைத்தான்!

உள்ளே, வெளியே!

ஏனென்றால், தன் தாய் பேசும் மொழி என்ன என்று அதற்கு எப்படித் தெரியும்? பிறந்து, வளர்ந்து ஒரு காலகட்டத்தில்தானே ஒலிக்குறியை உணர்ந்து கொள்கிறது? பிறகு, கேள்வி அறிவால் தாயோ, பிறரோ பேசும் சொற்களைப் பையப்பைய அறிந்து கொள்கிறது. அவற்றின் பொருளைத் தெரிந்து கொள்கிறது. அந்தப் பொருளுக்கேற்ப எதிர்வினை புரிகிறது. பின்னர், பிறந்த குழந்தைக்கு எந்தச் சொற்களை - எந்த மொழியைக் கற்றுக் கொடுக்கிறானோ அந்த மொழியைத்தான் அந்தக் குழந்தை தன் தாய்மொழியாகக் கருதும்; பேசும்; செயல்படும். எல்லாமே, தாயின் கருவறையின் உள்ளேயிருந்து வெளியே பிறந்து வந்த பிறகுதானே? அது கருப்பையிலிருக்கும்போது தாய் தமிழச்சியாக இருந்தாலும் குழந்தை தமிழ்க் குழந்தை ஆகாது. எம்மொழியும் அறியாத, எம்மொழிக்கும் உரிமையில்லாத வெறும் கருக்குழந்தைதான் அது!

என்ன அந்தப் பயிற்று மொழி?

அப்படியிருக்க, கருப்பையில் இருந்த எம்மொழியும் அறியாத பிரகலாதனோ, அபிமன்யுவோ எப்படிச் செய்திகளை அறிந்து கொள்ளும்? மூளையில் பதிவு செய்து வைக்க முடியும்? அவர்களின் தாய்மார்களுக்கு, வடமொழி எனப்படும் சமஸ்கிருதத்திலா போதிக்கப்பட்டது? அது வெறும் எழுத்து மொழிதானே? இறந்த மொழி (Dead Language) தானே? பேச்சு மொழியாக இருந்ததில்லையே? அந்தப் போதனா மொழிதான் (பயிற்று மொழிதான்) என்ன? என்ன? என்ன? என இசைவாணி கே.பி.சுந்தராம்பாள் போலக் கேட்க வேண்டியிருக்கிறதே!

இங்கே மட்டும் என்ன வாழ்கிறது?

வெளியுலகை எடுத்துக் கொள்வோம். தன் தாய்மொழி மட்டுமே தெரிந்த ஒருவரிடம் வேறு அயல்மொழியில் பேசினால் அவருக்கு என்ன புரியும்? ஏதோ ஒருவகை ஒலி அலைத்திரள் ஆகத்தான் உணரமுடியும். முக்காலா முக்காபுலா - என்றோ, நாக்கமுக்கா, நாக்கமுக்கா, நாக்கமுக்கா - என்ற பாடலைப் பிறர் பாடும்போது அதனைக் கேட்ட நமக்கு என்ன புரிகிறது? அவ்வளவுதான் கருக்குழந்தைக்கும் புரியும்!

ஒளிப்படம் கூறும் உண்மை:

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லென்னார்ட் நில்சன் என்னும் அறிவியல் வல்லுநர் ‘SEM’ - என்கிற ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்பெருக்காடி (Scaning Electron Microscope) உதவியால் கருக்குழந்தை ஒன்றைப் படம் எடுத்துவிட்டார்! அதில், 6ஆம் மாதக் கருக்குழவி, கண்திறந்து பார்க்கிறது, இருட்சிறையைத்தான் பார்க்கிறது. வெளியில் தாயின் குரல் உட்பட வெறும் ஓசையை (Voice and Noise) மட்டுமே செவிப்பொறியால் உணரமுடிகிறது. செய்தி எதுவும் தெரியாது என்று ஆய்வு செய்து கூறியுள்ளார்.

அய்சக் நியூட்டனும் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனும்:

நல்ல நல்ல விஷயங்களைக் கருக்குழந்தைக்குப் போதித்து வந்தால் ஒரு ஞானக் குழந்தையைப் பெற்றெடுக்க முடியுமாம்! எழுதுகிறார் சேதுலிங்கனார். தேவாரம், திருவாசகம் போதித்து வந்தால் சிவஞானக் குழந்தை பிறக்குமாம்! குழந்தை கருவிலிருக்கும்போது அதற்கு வெளியிலிருந்து இயற்பியல் (Physics),வேதியியல் (Chemistry), வானியல் (Astronomy), வான் இயற்பியல் (Astro-Physics) உள்ளிட்ட அறிவியல் போதித்துவந்தால், கலிலியோ, நியூட்டன், எடிசன், அய்ன்ஸ்டீன் முதலான விஞ்ஞானக் குழந்தைகளைப் பெற்றெடுக்கலாமாம்!

கதைக்கிறார் கட்டுரையாளர்! பொறியியல், மருத்துவம், தமிழ் போதித்து வந்தால், கருக்குழந்தை பிறந்தவுடன் அதன் தந்தை மகிழ்ச்சிப் பெருக்கால், எங்கள் வீட்டில் என் மனைவிக்கு இன்று ஓர் இன்ஜினியர் பிறந்திருக்கிறார்? ஒரு டாக்டர் பிறந்திருக்கிறார்? ஒரு தமிழ்ப் பேராசிரியர் பிறந்திருக்கிறார்? என பெருமையுடன் பூரிப்போடு மற்றவர்களிடம் கூறி, என் வீட்டுக்கு வந்து பாருங்கள்! உங்கள் வீட்டிலும், இன்ஜினியர் பிறப்பார்! டாக்டர் பிறப்பார்! பேராசிரியர் பிறப்பார்! என்று சொல்லலாமா? சொல்வார்களா? அப்படிச் சொல்பவர்களைப் பார்த்து வாயால் சிரிக்க மாட்டார்கள்! பின்பக்கப் பொறியால் சிரிக்க மாட்டார்களா? இப்படி எல்லாம் நடக்குமா? நடக்கும் என்கிறாரே தினமணி கட்டுரையாளர்?

புதிய அறிவியல் புகல்வது:

ஒரு மனிதன், பேரறிவாளனாகவோ, பெருங்கலைஞனாகவோ ஆவதற்கு மரபியல் (Heridity), பயிற்றுவிப்பு முதலிய சூழ்நிலை (Environment) இவைதாம் காரணங்கள் என, புதிய (உளவியல்) அறிவியல் புகல்கிறது. உடலமைப்பு, திறன்கள் வழிவழி வரும் மரபணு (Genes) வழி அமைகின்றன. கல்வியறிவு, கலையறிவு, உலகியலறிவு முதலானவை எல்லாம் சூழ்நிலையால் அமைகின்றன.

இரண்டும் இருக்க வேண்டும்:

மீன் நீந்துவதற்கு அதன் வால் முதன்மை (Importance) யானதா? தண்ணீர் முதன்மையானதா? எதை முதன்மை என்று சொல்வது? இரண்டில் எது இல்லாவிட்டாலும் மீன் நீந்த இயலாது. அதுபோல, மரபு வழியா? சூழ்நிலையா? எது முதன்மை? ஏதாவது ஒன்றைச் சொல்வது சரியாகாது! இரண்டும் முதன்மையானவைதான் என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்படி? எப்படி? பெறுவது எப்படி?

இங்கே கூறப்பட்ட இயல்புகளால், பயிற்சிகளால், சூழ்நிலைகளால், கல்வியால், ஒருவன் அறிஞனாக, கலைஞனாக, கல்வியாளனாக, தொழில் முனைவனாக, போர் மறவனாக, அறிவியல் வல்லுநனாக வர - விளங்க முடியுமே தவிர, தன் தாயின் கருப்பையில் இருக்கும்போதே வெளியிலிருந்து புகட்டப்படுகின்ற போதனைகளால், சித்தர் நிறுவன இயக்குநர் சேதுலிங்கனார் கூறுவதைப் போல் ஒரு ஞானக் குழந்தையை எப்படிப் பெற்றெடுக்க முடியும்? முடியாது! முடியாது! முடியவே முடியாது!!!


அமெரிக்க அறிவியலாளரின் ஆய்வு:

நிறைவாக, ஒரு செய்தியினை - அதுவும் ஆய்வு முடிபுச் செய்தியினை எடுத்துரைக்க இருக்கிறோம். ஜான் லாக் என்னும் அமெரிக்க அறிவியலாளர் குழந்தைகள் தாய் வயிற்றில் 7 மாதக் குழந்தையாக இருக்கும்போதே தம் நாவை அசைத்து அசைத்து பேசப் பழகுவதுபோல முயல்கின்றன என்று கூறிய அவர், அப்போதிருந்தே, அம்மாவின் குரலால் பேச்சொலியைக் கேட்டுக் கொண்டு அந்தக் கருக்குழந்தைகள் உட்கார்ந்திருக்கின்றன என்கிறார். அவர், மிக முதன்மையான - உண்மையான ஆய்வு முடிவு ஒன்றைக் கூறி, சேதுலிங்கனார் போன்றோரின் உள்ளங்களைத் தெளிவுபடுத்துகிறார்.

அவர் எழுதுகிறார்: கருக்குழந்தை அபிமன்யு போல, போர்முறையைத் தெரிந்து கொள்வதெல்லாம் புராணத்தில்தான் நடக்கும். அறிவியலில் நடக்காது.

இந்தக் கட்டத்தில், அம்மா பேசுவது வார்த்தை என்பதுகூட குழந்தைக்குத் தெரியாது!. (தகவல்: 5.1.1955 ஆனந்தவிகடன், வாரத் தமிழிதழ்)

புத்தாண்டுப் புதுச்செய்தி:

இனியும் இவ்வண்ணம் எழுதவோ, பேசவோ எவரும் முயல வேண்டாம். அறிவியல் ஆய்வு முடிபினை ஏற்று வாழ முயலுங்கள் என்ற வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

வார்த்தை என்பதுகூட குழந்தைக்குத் தெரியாது!. (தகவல்: 5.1.1955 ஆனந்தவிகடன், வாரத் தமிழிதழ்)

புத்தாண்டுப் புதுச்செய்தி:

இனியும் இவ்வண்ணம் எழுதவோ, பேசவோ எவரும் முயல வேண்டாம். அறிவியல் ஆய்வு முடிபினை ஏற்று வாழ முயலுங்கள் என்ற வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

---------------------------------- பேராசிரியர் ந.வெற்றியழகன் அவர்கள் --- “உண்மை” 16-29 2012 இதழில் எழுதிய கட்டுரை

சமதர்மமும் நாஸ்திகமும் - பெரியார்

என்னை நாஸ்திகன் என்று சொல்லுகிறவர்கள், நாஸ் திகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லு கிறார்களோ, அந்த அர்த்தத்தில் நான் நாஸ்திகன்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன்.

நாஸ்திகத்துக்குப் பயந்தவனானால், எந்த ஒரு காரியமும் செய்ய முடியாது. அதிலும் சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால், நாஸ்திகனால்தான் முடியும். நாஸ்திகம் என்பதே சமதர்மம் என்று பெயர். அதனால் தான் ரஷ்யாவையும் நாஸ்திக ஆட்சி என்கிறார்கள்.

பவுத்தரையும் நாஸ்திகம் என்றதற்குக் காரணம் அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயற்சித்ததால்தான், நாஸ்திகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரம் அல்ல, சமுதாயத்தைச் சீர்திருத்த ஏதாவது பழைய கொள்கைகளை மாற்ற வேண்டுமானால், அந்த மாற்றத்தையும் ஏன் எவ்வித சீர்திருத்தத்தையுமே நாஸ்திகம் என்று தான் சமுதாயப் பிரியர்கள் (பழைமையை மாற்ற விரும்பாதவர்கள்) சொல்லித் திரிவார்கள்.

எங்கெங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ - சமத்துவத்துக்கு இடமில்லையோ அங்கெல்லாமிருந்து தான் நாஸ்திகம் முளைக்கின்றது.

கிறித்துவையும், முகம்மது நபியையும்கூட நாஸ்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கு, அவர்களது சமதர்மப் போக்கும், சீர்திருத்தமுமே காரணமாகும். துருக்கியில் கமால் பாட்சாவும், ஆப்கானிஸ்தான் அமீரும் நாஸ்திகர்கள் என்று அழைக்கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தந்தான் காரணம்.

ஏனென்றால் இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் எல்லாம் கடவுள் கட்டளை என்றும், கடவுளால் சொல்லப்பட்ட வேதங்கள் சாஸ்திரங்கள் ஆகியவைகளின் கட்டளைகள் என்றேதான் சமயப்பிரியர்கள் சொல்லுகின்றார்கள்.

ஆகவே, நாம் இப்போது எதை எதை மாற்ற வேண்டுமென்கிறோமோ அவை எல்லாம் கடவுள் செய்ததாகவும் அல்லது கடவுள் தனது அவதாரங்களையோ, தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப்படுவதால் அவைகளைத் திருத்தவோ, அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட்டளையை மீறினதாக அல்லது கடவுள் கட்டளையை மறுத்ததேயாகும்.

உதாரணமாக, மக்களில் நான்கு ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதென சொல்லப்படுகையில், மேற்படி ஜாதிகள் ஒழிய வேண்டுமானால், அவன் கண்டிப்பாக கடவுளை மறுத்தோ அலட்சியம் செய்தோதான் ஆக வேண்டும். எல்லா மதங்களும், மதக் கொள்கைகளும் கடவு ளாலோ, அவதாரங்களாலோ, கடவுள் தன்மையாலோ ஏற்பட்டது என்று சொல்லப்படுகையில் அம்மத வித்தி யாசங்கள் ஒழிய வேண்டும் என்றும் மதக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்றும் சொல்லும்போது, அப்படிச் சொல்லுபவன். அந்தந்தக் கடவுள்களை கடவுள்களால் அனுப்பப்பட்ட தெய்வீகத் தன்மை பொருந்தியவர்களை அலட்சியம் செய்தவனேயாகின்றான். அதனால்தான், கிறித்தவர் அல்லாதவர் அஞ்ஞானி என்றும், மகம்மதியரல்லாதவர் காபர் என்றும் இந்து அல்லாவர் மிலேச்சர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அன்றியும் கேவலம் புளுகும் ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே இந்து மதக் கொள்கைப்படி நாஸ்திகம் என்று சொல்லப்படும் போது ஜாதியையும், வர்ண தர்மத்தையும் மறுப்பதை ஏன் நாஸ்திகம் என்று சொல்ல மாட்டார்கள்.

ஜாதி உயர்வு - தாழ்வு; செல்வம் - தரித்திரம்; எஜமான் - அடிமை ஆகியவைகளுக்கு கடவுளும், கர்மமும்தான் காரணம் என்று சொல்லுவதானால், பிறகு மக்களுக்கு விடுதலையும், முன்னேற்றமும் எங்கே இருக்கின்றது?

கடவுளையும், கர்மத்தையும் (விதிச் செயல்) ஒழித்தால் ஒழிய, அதற்காக மனிதன் எப்படி பாடுபட முடியும்? மேடும், பள்ளமும் கடவுள் செயலானால், மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டு சமன் செய்வது கடவுள் செயலுக்கு விரோதமான காரியமே யாகும். மனிதன் முகத்தில் தலையில் மயிர் வளருவது கடவுள் செயலானால், அதை சவரம் செய்து ஒழிப்பது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும், அதாவது, ஓரளவுக்கு நாஸ்திகமான காரியமேயாகும். அதிலும் சவரம் செய்யச் செய்ய மறுபடியும் அது வளர்வதை அறிந்தும் மீண்டும் சவரம் செய்வது வடிகட்டின நாஸ்திகமேயாகும். பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதுகூட நாஸ்திகன் தானே! ஏனெனில், கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்துக்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போட்டு அவன் பட்டினியை மாற்றுவது கடவுளுக்கு விரோதமான செயல் தானே? அதாவது, கடவுளை நம்பாத கடவுள் செயலை லட்சியம் செய்யாத தன்மையேயாகும். இப்படியே பார்த்துக் கொண்டே போனால் உலகத்தில் ஒரு ஆஸ்திகனும் இருக்க முடியாது!

ஆதலால், நம்மைப் பொறுத்தவரை நாம் பல மாறுதல்களை விரும்புவதால் அவை கடைசியாக நாஸ்திகமேயாகும். நாஸ்திகமும், சாஸ்திர விரோதமும், தர்மத்துக்கு விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர்திருத்தம் செய்ய முடியவே முடியாது. பொதுவாக நமது நாட்டில் உள்ள தரித்திரம் போக வேண்டுமானால், வேற்றுமைகளைப் போக்க முயற்சிக்கும் சமதர்வாதிகளை (வெள்ளையரை) வைவது மாத்திரம் போதாது, நாஸ்திகம் என்ற சொல்லுக்கு அஞ்சினாலும் முடியாது.

நமது நாட்டினரே ஏழைகளை வஞ்சித்துக் கொள்ளை அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொண்டு இருப்பதால், தினமும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாமர மக்களை விழிக்கச் செய்து, நீங்கள் ஏழைகளாய், தரித்திரர்களாய் இருப்பதற்கு கடவுள் செயல் காரணமல்ல, மக்களின் முட்டாள்தனமேதான் காரணமாகும்.

ஆதலால், நீங்கள் கடவுள் செயலை லட்சியம் செய்யா தீர்கள் என்று சொன்னால்தான், செல்வந்தர்களின் அக் கிரமங்களை பாமர மக்கள் அறிந்து உணரக் கூடும். அப் போது கடவுள் செயலையும், அதிக மூடர்களிடம் கடவுளையும் மறுத்துத்தான் ஆகவேண்டும். இந்த நாட்டில் ஒருபுறம் ஏழைகள் பட்டினி கிடக்க, மற்றோர்புறம் ஒரு சிலர் கோடீ சுவரர்களாக இருந்து கொழுத்துக் கொண்டு டம்பாச்சாரியாய் வாழ்க்கை நடத்துவதும் கடவுள் செயல் என்று தானே சொல்ல வேண்டும்?

ஆகையால், கடவுள் செயல்கள் ஒரு காரியத்திற்கும் மற்றொரு காரியத்திற்கும் மாறுபடுவது போலவே தர்மமும், நீதியும் கூட ஒரு சமயத்துக்கும் மற்றொரு சமயத்துக்கும் மாறுபட வேண்டியதேயாகும்.

ஒரு காலத்தில் அரசர்கள் விஷ்ணு அம்சமெனக் கருதப்பட்டார்கள். ஆனால், இப்போது அரசர்கள் கொள் ளைக்காரர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். அதுபோலவே செல்வவான்கள் இந்தக் காலத்தில் லட்சுமி புத்திரர்களாக இருக்கிறார்கள்.

இன்னொரு காலத்தில் அவர்கள் பெருத்த வஞ்சக பகற் கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கப்பட்டு பலாத்காரத்தில் அவர்களிடமிருக்கும் செல்வங்கள் பிடுங்கிக் கொள்ளப்படும்.

உதாரணமாக, மனுதர்மத்தில் சூத்திரனிடம் பொருள் சேர்த்து வைத்திருப்பதை பிராமணன் பலாத்காரத்தினால் பறித்துக் கொள் ளலாம் என்று இருக்கின்றதை இன்னமும் பார்க்கிறோம். இன்னும் கொஞ்சம் போனால் இதுமாமறி பார்ப்பான் பணம் வைத்திருந்தால் மற்றவர் பிடுங்கிக் கொள்ளலாம் என்று ஏற்படக் கூடும். அப்படி இருப்பது முன்னைய வழக்கத்துக்கு விரோதம் என்பதாக யாரும் சொல்ல முடியாது. காலம் போகப் போக நேரில் உழுது பயிர் செய்ய முடியாதவனுக்கு பூமி இருக்க வேண்டியதில்லை என்றும் அப்படி யிருந்தாலும் சர்க்காருக்கு வரி கொடுப்பது போல் ஒரு சிறு அளவுதான் பாத்தியம் முன்பேயொழிய இப்போது இருப்பது போல் உழுகின்றவன் தன் வயிற்றுக்கு மட்டும் எடுத்துக் கொண்டு பூமிக்குடையவனுக்கு பெரும் பாகம் கொடுப்பது என்கிற வழக்கம் அடியோடு அடிபட்டு போகலாம்.

இதுபோல் இன்று கோவில் கட்டுவது தர்மமாக இருக்கின் றது. ஆனால், பிற்காலத்தில் கோயிலை இடித்து, விக்கிரகங் களை உதைத்து, பள்ளிகளும், தொழிற்சாலைகளும் ஏற்படுத்து வது தர்மம் என்றாகலாம். இதுபோல் அநேக விஷயங்களில் இன்றைய தர்மம் நாளை அதர்மமாக தலை கீழாக மாறக்கூடும். அப்படிப்பட்ட நிலைமை வரும்போது இன்றைய நிலைமை எல்லாம் கடவுள் கட்டளை என்றால் அதை மாற்ற முற்படுகின்றவன் கடவுளையே மறுக்கத் துணிந்தவனாக வேண்டும்.

கடவுளை மறுக்கத் துணிந்தவனே தர்மத்தின் பேரால் உள்ள இன்றைய கொடுமைகளை ஒழிக்க முடியும். அப்படிக்கில்லாமல் கடவுளுக்கும், மோட்சத்துக்கும் பயந்து கொண்டிருப்பவனால் ஒரு காரியமுமே செய்ய முடியாது என்பது உறுதி. இந்நிலையில் சமதர்மம் எப்படிக் கொண்டு வரமுடியும்?

அரசியல், சமூக இயல், பொருளாதார இயல்களில் உள்ள இன்றைய கொடுமையான நிலையும், முட்டாள்தனமான நிலையும், அயோக்கியத் தனமான வஞ்சகச் சூழ்ச்சியுமான எல்லாம் கடவுள் கட்டளையாலும், மோட்ச காரணங்களாலும், சாஸ்திர தர்மங்களாலுமே செய்யப்பட்டு ஏற்பட்டதாகும். ஆகையால்தான், இந்தக் கடவுள் நம்பிக்கை ஒழியாமல் சமதர்மம் கொண்டு வரமுடியாது என்று நான் அவ்வளவு உறுதியாகக் கூறுகிறேன்.


--------------------------திருச்சியில் சமதர்மமும் நாத்திகமும் என்ற தலைப்பில் தந்தை பெரியார் ஆற்றிய அறிவுரை - குடிஅரசு 1930 - விடுதலை 3.12.1967

21.2.12

ராமர் அப்படி என்ன ஒழுக்கத்தைப் போதித்து விட்டார்?

ராமன் ஒழுக்கத்தைப் போதித்தானா?

கேள்வி: உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்கிறதே பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை.

பதில்: அப்படியெல்லாம் எதுவும் நடக்காது என்பது அத்வானிக்குத் தெரியும். ராமருக்கும் தெரியும். முதலில் ராமர் கோவில் கட்டுவதை விட்டுவிட்டு, அவர் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு ராமரின் ஒழுக்கத்தைப் போதிக்கட்டும். - ஆனந்தவிகடன் கேள்வி - பதில், 22.2.2012

ராமர் அப்படி என்ன ஒழுக்கத்தைப் போதித்து விட்டார்?

மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து கோழைத்தனமாக வாலியைக் கொன்றாரே அந்த ஒழுக்கத்தையா?

சக்ரவர்த்தி திருமகன் எழுதிய ராஜகோபாலாச் சாரியாரே வாலி வதம் படலத்தில் ராமனின் கோழைத் தனத்தை நியாயப்படுத்த முடியாமல் மூச்சு முட்டத் திணறி நிற்கிறாரே!

கோழைத்தனமாக மரத்தின் பின்னால் மறைந்து நின்று தன்னைக் கொன்ற ராமனை நோக்கி வாலி என்ன சொல்லுகிறார்?

ராமனே! தசரத சக்கரவர்த்தியின் புத்திரனா வாய். உத்தம குலத்தில் பிறந்த நீ, பெரும் புகழும் அடைந்த நீ, ஏன் இப்படிச் செய்தாய்? உன் நற்குணங்களும், ஒழுக்கமும் உலகம் அறிந்த விஷயம். இப்படியிருக்க நான் வேறொருவனிடம் யுத்தம் செய்துகொண்டு அதில் மனம் முற்றிலும் செலுத்தி வந்த சமயத்தில் என் கண்களுக்குத் தென்படாமல் மறைந்து நின்று என்மேல் பாணம் விட்டு என்னைக் கொன்றாய். உன்னைப் பற்றி ஜனங்கள் சொல்லும் புகழ் மொழிகளுக்கு இது முற்றிலும் விரோதமாயிருக்கிறதே! எல்லாப் பிராணிகளிடமும் கருணை கொண்டவன், தோஷ எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் புலன் களையும், உள்ளத்தையும் அடக்கியாள்பவன், அற வழியில் நிற்பவன், பொறுமை, சாந்தி, தருமம், சத்திய பராக்கிரமம் முதலிய உத்தம குணங்களை எல்லாம் பெற்றவன் என்று கீர்த்தி பெற்றாயே, இப்போது அவையெல்லாம் என்ன வாயின? என்னைக் கொன்று நீ என்ன லாபம் பெறுவாய்? யோசிக்காமல் இந்த அதரும காரியம் செய்தாய். என் மனைவி உன்னைப் பற்றி என்னை எச்சரித்தாள்.

அவள் பேச்சைத் தட்டி விட்டு வந்தேன். நீ வேஷதாரியென்றும், துன் மார்க்கன் என்றும், புல்லால் மூடப்பட்ட பாழுங்கிணறு போன்ற பாவி என்றும் தெரி யாமல், மனைவியின் பேச்சைக் கேளாமல், நான் என் தம்பியுடன் யுத் தத்துக்கு வந்தேன். உனக்கு என்ன தீமை நான் செய்தேன்? உன்னுடன் யுத்தம் செய்யவா நான் வந் தேன்? அதருமத்தில் இறங்கி என்னை மறைந்து நின்று கொன்றாய். நல்ல அரசு குலத்தில் பிறந்து பெரும் பாவத்தைச் செய்தாய். நிரபராதி யைக் கொன்றாய். நீ அரச பதவிக்குத் தகுந்த வனல்ல.

மோசக்காரனான உன்னைப் பூதேவி மணக்க விரும்பமாட்டாள். நீ எப்படித் தசரதனுக்கு மகனாகப் பிறந்தாய்? தருமத்தை விட்டு நீங்கின நீசனால் கொல்லப் பட்டேன். என் கண்ணுக்கு முன் நின்று நீ யுத்தம் செய்திருந்தாயேல் இன்றே நீ செத்திருப்பாய். என்னை நீ வேண்டிக் கொண்டி ருந்தால் ஒரே நாளில் சீதையை உன்னிடம் அழைத்து வந்து விட்டிருப்பேனே! சுக்ரீவனுக்காக என்னைக் கொன்றாயே. ராவணனைக் கொன்று பிரேதத்தைக் கழுத்தில், கயிறு போட்டுக் கட்டி உன்னிடம் இழுத்துக் கொண்டு வந்து விட்டிருப்பேனே! மைதிலியை எவ்விடம் மறைத்து வைத்திருந்தாலும் கண்டுபிடித்து உன்னிடம் ஒப்புவித்திருப்பேனே! பிறந்தவர்கள் இறப்பது விதி. ஆயினும் நீ முறை தவறி என்னைக் கொன்றாய். உன் குற்றம் பெருங்குற்றம்.

இவ்வாறு தேவேந்திர குமாரனான வாலி மரணாவஸ்தையில் ராமனைக் கண்டித்தான்.

வாலியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ராமன் என்ன பதில் சொல்ல முடியும்? ஏதோ சொன்ன தாகவும், அதைக் கேட்டு வாலி சமாதானப்பட்ட தாகவும் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படு கிறது. அதில் சாரம் இல்லை என்று விட்டு விட்டேன். பெரியோர்கள் மன்னிப்பார்கள்.

- ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தி திருமகன், பக்கம் 205-206

கோழைத்தனமாக வாலியைக் கொன்ற ராமனின் பதிலில் சாரம் இல்லை என்று ஆச்சாரியாரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்ட பிறகு, ஆனந்த விகடன்கள் ராமனைக் காப்பாற்றிட முயற்சிப்பானேன்?

ராமனை ஒழுக்கவான் என்று தூக்கி நிறுத்த ஆசைப்படுவானேன்?

பக்தியைக் காப்பாற்றாவிட்டால் பிராமணன் என்ற பிறவி அந்தஸ்து பறிபோய்விடுமே - அதுதானே காரணம்?

----------------------- “விடுதலை” 21-2-2012

20.2.12

இதுதான் மகா சிவராத்திரியின் இரகசியம்!மகா சிவராத்திரி என்று கூறி, நாள் முழுவதும் பட்டினி கிடந்து, இரவெல்லாம் கண் விழித்துப் பயப்பக்தியைக் காட்டும் பக்தர்காள்!


இந்தப் பக்தியின் இரகசியம் என்ன? இதோ:-

ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் ஒரு சுத்த அயோக்கியனும் ஒழுக்கக் கேடனும் ஆவானாம். இதனால் ஊரை விட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோவிலை அடைந்தானாம். அப்போது அந்தக் கோவில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்துவிட்டு வெளியில் சென்று இருந்தான்.

இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்குச் சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்ட வெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோவிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன், பார்ப்பன இளைஞன் பலகாரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு, ஆத்திரத்தில் அவனை அடித்துக் கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.

ஒழுக்கங்கெட்ட அந்தப் பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகா சிவராத்திரி விரத பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களைப் பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈஸ்வரலிங்க சிலைக்கு தீப ஆராதனை செய்தது போலவும் பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பனப் பூசாரியால் கொல்லப்பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம்.

இதுதான் மகா சிவராத்திரியின் இரகசியம்!

எந்த அயோக்கியத்தனம் செய்தாலும் சிவனைக் கும்பிட்டால், மகா சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் பாவம் போகும். மோட்சம் கிடைக்கும் என்றால் இது ஒழுக்கக் கேட்டை ஊக்குவிப்பது ஆகாதா? பக்தர்களே, சிந்திப்பீர்!

----------------"விடுதலை” 20-2-2012