Search This Blog

9.2.12

மனித உடலில் மனம் எங்கு உள்ளது?

மனம் இருப்பது மார்புக் காம்பிலா? - கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு மறுப்பு


மனித உடலில் மனம்:

திருச்சிப் பதிப்பு: தினமலர் நாளேடு, 27.07.2011

இதில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.அந்தச் செய்தியினைக் கீழே படியுங்கள்.

மனித உடலில் மனம் எங்கு உள்ளது? என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர் என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை பண்பாட்டு ஆய்வு மய்யத்தைச் சேர்ந்த குறியீடுகள் - கல்வெட்டு ஆராய்ச்சி யாளர்கள் திருச்சி. சுபாஷ் சந்திரபோஸ், தேசியக் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர் ராம் குமார் மற்றும் ஸ்தபதி ஆகியோர் தெரிவித்ததாவது:

நம் நாட்டு ஞானிகள் மனித உடலில் மனம் எங்கே உள்ளது? என்பதை பல 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்துள்ளனர்.

நம் முன்னோர்களும் ஞானிகளுமாகிய ரிஷிகள் யோக நிலையில் ஆழ்ந்து பலகாலம் தவமிருந்து மனித உடலில் இடதுபுற மார்புக் காம்பின் மேலே உள்ள மனத்தின் இருப்பிடத்தைக் கண்டறிந்துள்ளனர்.

அவ்வாறு கண்டறிந்த இடத்தைத் தாமரை மலரின் வடிவக் குறியீட்டின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிசய ஆய்வு! அபூர்வ ஆய்வு!!

படித்தீர்களா செய்தியை?

என்ன கண்டுபிடிப்பு? எப்படிப்பட்ட கண்டுபிடிப்பு?

மனம் மனித உடலில் மார்புக் காம்பின் மேலே உள்ளதாமே?

மகரிஷிகள் திருவாய் மலர்ந்திருக்கிறார் களாமே?

இதனைப் பேராசிரியர்கள் சொல்லி விளக்கம் - வியாக்யானம் - மகாபாஷ்யம் விளம்பியுள்ளார்களாமே?

மனம் பற்றி இந்த மகரிஷிகளும், ஞானிகளும் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் முகவாண்மையாளர்களாக இருக்கும் பேராசிரியர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?
இப்பொழுது,

இந்த மனம் என்பது என்ன?

அது எங்கிருக்கிறது?

அது எப்படி உருவாகிறது - என்பது அறிவியல் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போமா?

இந்த மனம் எங்கே உருவாகிறது?

மனம் என்பது (Mind) ஒரு பொருள் வடிவில் ஆனது அன்று. (Not a matter). பொருளின் இயக்க ஆற்றல் (Function) மனம் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

மனிதனின் பணி என்ன?

சிந்திப்பது! எண்ணுவது! உழைப்பது!!!

உணர்ச்சி (Emotion). அறிவு (Knowledge) இவற்றிற்கு அடிப்படை.

இது, மாந்தனின் பெருமூளைப் பகுதியில் தோன்றும் இயக்கம் ஆகும்.

நரம்பு மண்டலத்தின் (Nervous System) முதன்மைப் பகுதியாகிய மூளை (Brain) தான் மனம் என்னும் மூளைத்திறன் முகிழ்ப்பதற்கு முதன்மையான களம் ஆகும்.

இதுதான் மனம் என்பது!

உடலுக்குள், உயிர் (Life) என்பதாகத் தனித்து எதுவுமில்லை!

உடலின் பல்வேறு மண்டலங்களின் செயல்திறன்களுக்கும், அவற்றின் இயக்கங்களுக்கும் இடையிலான ஒருமைப்பாடு அல்லது ஒருங்கிணைப்பு என்பதே உயிர் எனப்படுவது (The functions of the various systems in the body and the functional integration or co-ordination, we call life.) இதுபோலவே, பெருமூளையின்கண் உள்ள ஏறத்தாழ 1400 கோடி நரம்பணுக்கள் அல்லது நியூரோ செல்கள் (Neuro Cells) எனப்படும் நியூரான்களில் (Neurons) நிகழும், உடல்-வேதியியல் எதிர்வினை (Physio-chemical reaction) யே மனம் (Mind) என்பதாகும். என, அறிவியலாளர் வரையறை செய்துள்ளனர்.

இவ்வாறு, அறிவியல் கூறியிருக்கும்போது, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஏன் கதை விடுகிறார்கள்?

எப்படி உருவாகிறது இந்த மனம்?

பெருமூளையானது, அறிவுத்திறன், நினைவுத்திறன், உணர்ச்சித்திறன், கற்பனைத்திறன் முதலான மனத்தின் செயல்பாடுகளுக்கு இருப்பிடம் ஆக இருக்கிறது.

இதனால்தானோ என்னவோ,

மனசே! மனசே! குழப்பம் என்ன?

என்றும், ராசாத்தி மனசிலே - இந்த ராசாவின் நெனப்புத்தான்!.....

என்றெல்லாம், திரைப்பாடல்கள் எழுந்துள்ளனவோ?

சிறுநீரகம் என்பதன் செயல்பாட்டால் சிறுநீர் உருவாவது போல, கல்லீரலின் செயல்பாட்டால் பித்தநீர் உருவாவது போல, மூளை(நரம்பு மண்டலம்)யின் செயல்பாட்டால் உருவாவதே மனம்.

பினாத்தல் - பிதற்றல்!

மனம் என்பது பொருள் அன்று; ஓர் உறுப்பு அன்று; அது பெருமூளை நரம்பு மண்டலத்தின் செயற்பாடு என்று அறிவியல் தெளிவாக, திட்டவட்டமாக விளக்கம் கூறியிருக்கும்போது, இந்தக் கல்வெட்டு ஆராய்ச்சியாளப் பேராசிரியப் பெருமக்கள் மனம் என்பது மனித உடலில் உள்ள மார்புக் காம்பின் மேலே உள்ளது - என ரிஷிகள், ஞானிகள் கூறியுள்ளனர் என்று பினாத்துவது சரியா? - என, அறிவியல் மனப்பான்மை உடையவர்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா?

தவமாய், தவமிருந்து

மனம் மார்புக் காம்பின் மேலே இருக்கிறதாமே?

இதை, இந்த, தவளைக்குப் பிறந்த மாட்டுக்குப் பிறந்த மகரிஷிகள் தவமிருந்து கண்டறிந்துள்ளனராமே? யோக நிலையிலிருந்து கண்டுள்ளனராமே? மார்பின் உள்ளே என்று கூறியிருந்தாலும் கொஞ்சம் ஏற்றுக்கொள்ளலாம். மார்புக் காம்பின் மேலே மனம் உள்ளதாமே? இப்படிக் கூறுவதுதான் 7ஆம் அறிவோ?

வெட்கம் கெட்ட வேடிக்கை மனிதர்கள்!

சட்டை அணியும்போது மார்புக்காம்பு மேலேயுள்ள மனம் மறைக்கப்பட்டுவிடுமா? மூடப்பட்டுவிடுமா?

ஆண்களை விட்டுவிடுவோம்!

தாய்க்குலங்களின் மார்பகக் காம்பின்மீது, மழலையர் வாய்வைத்துப் பருகும்போது அவர்களின் மனம் குழந்தையின் வாய்க்குள்ளே பாலோடு பாலாக கரைந்து அல்லது கலந்து உள்ளே போய்விடுமா என்ன?

பின்னர், மனம் மறுபடியும் மார்புக்காம்பின் மேலே வந்து அமர்ந்து கொள்ளுமா என்ன? இப்படிச் சொல்ல, கோவைப் பண்பாட்டு ஆய்வு மய்யப் பேராசிரியர்களுக்கு வெட்கமாக இல்லை?

தாமரையின் தத்துவம்

இந்த மகரிஷியின் இந்தக் கருத்தை நேரடியாகக் கூற, துணிவு இன்றி, தாமரை மலரின் வடிவக் குறியீட்டின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளனராம்!

இந்தத் தாமரை மலர், பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் சின்னம் அல்லவா?

இப்பொழுது அல்லவா இப்படிச் சொன்னதன் அடிப்படைத் தத்துவம் புரிகிறது?

இந்த மகரிஷிகள், யோகிகள், அந்நாளைய பா.ஜ.க.வினர் போலும்!

ஏன் வழங்கக் கூடாது இவர்களுக்கு?

மார்புக் காம்பின் மேலே மனம் இருக்கிறதாம்!

என்ன கண்டுபிடிப்பு?

இந்த ரிஷிகளுக்கும், இதனை வெளிப்படுத்திய கல்வெட்டு ஆய்வாளர்களுக்கும் ஏன் வரும் ஆண்டில் அறிவியல் கண்டுபிடிப்புக்கான உலகின் மிக உயரிய பரிசான நோபல் பரிசு கூட்டாக வழங்கக் கூடாது?

நாமும் நகைப்போம்

மனம் மார்புக் காம்பின் மேலே உள்ளது என்று சொல்வதை உலக அறிவியலாளர்கள் கேட்டால், அவர்கள், தங்கள் வாய்களால் சிரிக்க மாட்டார்கள்! தங்களின் பின்பக்கப் பொறியால் சிரிக்க மாட்டார்களா?

நாமும் அதே பொறியால் நகைப்போமே?

யார் இந்த முன்னோர்?

மனம் இருக்கும் இடம் அதாவது மார்புக் காம்பின் மேலே என்று, நம் முன்னோர் அறிந்திருந்தார்களாம்!

யார் அந்த நம் முன்னோர்?

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த சான்றோர்களா? தொல்காப்பியருக்கு முன் இருந்த தொன்மைத் தமிழர்களா? திருவள்ளுவருக்கு முன்போ பின்போ, சமகாலத்திலோ வாழ்ந்தவர்களா? காப்பிய காலத்தவரா? யார் அந்த முன்னோர்?

எது அந்தப் பல ஆயிரம் ஆண்டு?

பல 1000 ஆண்டுகளுக்கு முன்னே அறிந்திருந்தார்களாம். பல ஆயிரம் ஆண்டுகள் என்றால்?

இலெமூரியா எனப்பட்ட கடலுள் மூழ்கியதாகச் சொல்லப்பட்ட குமரிக்கண்டம் இருந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரா? முதல் இரு தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாகக் கூறப்படும் தொன்மதுரை, கபாடபுரம் எனப்படும் நகரங்கள் இருந்த காலமா?

எந்தப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்?

இவர்கள்தான் சொல்வார்கள் இப்படி?

இவர்கள் குறிப்பிடும் முன்னோர் நம் தமிழினத்துக்கு உரிமையில்லாத ஆரிய இந்துக்கள்! இப்படி உளற, இவரன்றி யாவருளர்? இவர்கள் குறிப்பிடும் பல ஆயிரம் ஆண்டுகள் என்பன ஆரியர்கள் நம் நாட்டில் நுழைந்து தங்கிய காலம்! இவற்றை, வெளிப்படையாகச் சொல்ல வேண்டியது தானே? இப்படிப்பட்ட அபத்தமான -வரலாற்றுக்குப் பொருந்தாத - அறிவியல் உண்மைகளுக்குப் புறம்பான கருத்துகளை இவர்கள் விட்டுவிட வேண்டும். இல்லையேல் விட வைப்போம்.

--------------- பேராசிரியர் ந.வெற்றியழகன் ”உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

0 comments: