Search This Blog

23.2.12

பெரியார் தந்த சமதர்ம வேலைத் திட்டம்

1. அரசாங்க உத்தியோக சம்பளங்கள் மக்களின் பரிசுத்தத் தன்மையைக் கெடுக்கக் கூடியதாகவும், பேராசையை உண்டாக்கக் கூடியதாகவும், இந்தியப் பொருளாதார நிலைமைக்கு மிக மிகத் தாங்க முடியாததாகவும் இருப்பதால், அவைகளைக் குறைத்து உத்தியோகஸ்தர்களுடைய வாழ்க்கையின் அவசிய அளவுக்கு ஏற்றதாகவும் மீத்துப் பெருக்கி வைப்பதற்கு இலாயக்கில்லாததாகவும் இருக்கும்படி செய்ய வேண்டும்.

2. பொது ஜனத் தேவைக்கும், சவுகரியத்துக்கும், நன்மைக்கும் அவசியமென்று உற்பத்தி செய்யப்படும் சாமான்களின் தொழிற்சாலைகள், இயந்திரசாலைகள், போக்குவரவு சாதனங்கள் முதலியவை அரசாங்கத்தாராலேயே நடைபெறும்படிச் செய்ய வேண்டும்.

3. ஆகார சாமான்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், அவற்றை வாங்கி உபயோகிக்கும் பொதுஜனங்களுக்கும் மத்தியில் தரகர்கள், லேவாதேவிக்காரர்கள் இல்லாதபடி கூட்டுறவு ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி அதன் மூலம் விவசாயிகளின் கஷ்டத்தையும் சாமான் வாங்குபவர்களின் நஷ்டத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

4. விவசாயிகளுக்கு இன்றுள்ள கடன்களை ஏதாவது ஒரு வழியில் தீர்ப்பதுடன் இனிமேல் அவர்களுக்குக் கடன் தொல்லைகள் ஏற்படாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

5. குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள், ஒரு குறிப்பிட்ட அளவு கல்வியாவது எல்லா மக்களுக்கும் ஏற்படும்படியாகவும், ஒரு அளவுக்காவது மதுபானத்தின் கெடுதி ஒழியும் படியாகவும். ஓர் அளவுக்கு உத்தியோகங்கள் எல்லா சாதி - மதங்களுக்கும் சரிசமமாய் இருக்கும்படிக்கும் உடனே ஏற்பாடு செய்வதுடன், இவை நடந்து வருகின்றதா என்பதையும் அடிக்கடி கவனித்துத் தக்கது செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

6. மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படிச் செய்வதுடன், அரசியலில் - அரசியல் நிருவாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். சாதிக்கென்றோ, மதத்திற்கென்றோ எவ்விதச் சலுகையோ, உயர்வு - தாழ்வு அந்தஸ்தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாள்வதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.

7. கூடியவரை ஒரு குறிப்பிட்ட ரொக்க வரும்படிக்காரருக்கோ அல்லது தானே விவசாயம் செய்யும் விவசாயிக்கோ வரிப் பளுவே இல்லாமலும், மனித வாழ்க்கைக்குச் சராசரி தேவையான அளவுக்கு மேல் வரும்படி உள்ளவர்களுக்கும், அன்னியரால் விவசாயம் செய்யப்படுவதன் மூலம் பயனடைபவர்களுக்கும் வருமான வரி முறைபோல் நிலவரி விகிதங்கள் ஏற்படுத்த வேண்டும்.

8. லோக்கல் போர்டு, முனிசிபாலிட்டி, கோவாப்பரேட்டிவ் இலாக்கா ஆகிவைகள் இன்னமும் அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு, இவற்றின் மூலம் மேலே குறிப்பிட்ட பல காரியங்கள் நிருவாகம் செய்ய வசதிகள் செய்து, தக்க பொறுப்பும் நாணயமும் உள்ள சம்பள அதிகாரிகளைக் கொண்டு அவைகளை நிருவாகம் செய்ய வேண்டும்.

9. விவகாரங்களையும், சட்டச் சிக்கல்களையும் குறைப்பதுடன் சாவுவரி விதிக்கப்பட வேண்டும்.

10. மேலே கண்ட இந்தக் காரியங்கள் நடைபெறச் செய்வதில் நாமே சட்டங்கள் செய்து, அச்சட்டங்களினால் அமலில் கொண்டுவரக் கூடியவைகளைச் சட்டசபைகள் மூலமும், அந்தப்படி சட்டங்கள் செய்து கொள்ள அதிகாரங்கள் இல்லாதவைகளைக் கிளர்ச்சி செய்து அதிகாரங்கள் பெறவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

----------------தந்தை பெரியார், 29, 30.9.1934-இல் நடந்த சென்னை தென்னிந்திய நல உரிமைச்சங்க மாநாட்டிற்கு அனுப்பிய வேலைத்திட்டம் - பகுத்தறிவு - 23.9.1934

4 comments:

தமிழ் ஓவியா said...

ஊட்டச்சத்து குறைபாடா?


ஊட்டச்சத்து குறைபாடுபற்றி அடிக்கடி பேசப் படுகிறது இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் 40 விழுக்காடு என்றெல்லாம் கூறப்படுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு என்பது எப்படிக் கணக்கிடப்படுகிறது? இதோ:

ரத்தப் பரிசோதனை உட்பட சில மருத்துவப் பரிசோதனைகள் மூலமே ஊட்டச்சத்துக் குறைபாடு எந்த அளவிற்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்றாலும் வயதிற்கேற்ப உடல் எடை, உயரம், முழங்கைக்கு மேல் உள்ள புஜப் பகுதியின் சுற்றளவை வைத்துக் கணக்கிடும் பொதுவான முறையே தற்போது நடைமுறையில் உள்ளது. வயதிற்கேற்ற உயரம் இல்லாவிட்டால், அந்தக் குழந்தை நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பதாக அர்த்தம். உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இல்லாமல் இருப்பது கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு, வயதிற்கேற்ற உடல் எடை இல்லாமல் இருப்பது, நாள்பட்ட, கடுமை யான ஊட்டச் சத்து குறைபாடு உள்ளது என்று பொருள். கை புஜத்தின் சுற்றளவு 12.5 செ.மீ., இருப்பது கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு. 11.5 செ.மீ.க்கும் குறைவாக இருந்தால், குழந்தை மிக மோசமாக ஊட்டச்சத்துக் குறைவுடன் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.23-2-2012

தமிழ் ஓவியா said...

தமிழின் வயது


எழுத்து, சொல், பொருள் என்ற முப் பொருளையும் கூறும் நூல் தொல்காப்பிய மாகும். எந்த வரலாற்று நிகழ்வுக்கும் புறச் சான்றுகள், அகச்சான் றுகள் என்ற இரு நிலை களில் பார்க்கலாம். தமிழ் இலக்கியங்களின் வயது ஏறத்தாழ பத்து முதல் 15 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம். அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது தமிழ் மொழி யின் வயது நாற்பதா யிரம் ஆண்டுகள் இருக் கலாம். தொல்காப்பியர் தற்பொழுது வந்தால், அவரெழுதிய நூல் களைப் படிக்க முடியாது. வரி வடிவம் மாற்ற மடைந்து விட்டது. தொல்காப்பியம் எந்த வடிவில் எழுதப்பட்டிருந் தாலும், தமிழில் வரி வடிவங்கள் ஏராளமாக இருந்திருக்க வேண் டும். இல்லையெனில் தொல்காப்பியம் தோன் றியிருக்கவே முடியாது

பேராசிரியர் முனைவர் ச.வே. சுப்பிரமணியன்

(உலகத் தமிழ் ஆராய்ச்சி மய்ய முன்னாள் இயக்குநர்)

தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் நடைபெற்ற சமீபகால தொல்லியல் ஆய்வுகளின் பின்புலத்தில் சங்க இலக்கியம் எனும் தலைப்பில்... 23-2-2012

தமிழ் ஓவியா said...

காதல்: இலக்கியங்களில் - நடைமுறையில்

காதலர் தினம் என்றாலே குடையைக் கண்ட கோயில் மாடுகள் போல் சிலர் மிரள்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை கோயிலில் மண்டகப் படி நடத்துகிற நினைவோடு ஒரு காவிக் கும்பல் புறப்பட்டுவிடுகிறது - கையில் தாலிக் கயிற்றோடு - கட்டு இப்பவே தாலியை என்று. இப்படிப்பட்ட கற்கால காலிகளின் அதிரடி ஒருபுறம் நடக்க மறுபுறம் அமைதியாய் நாகரி கமாய் காதலர் தினத்தையும் - காதலின் இனி மையையும் மென்மையையும் வரம்பையும் வாழ்க்கை எதார்த்தத்தையும் அலசிக் கொண்டிருந்தது ஒரு அரங்கு.

சென்னை லயோலா கல்லூரி அருகே ஐகஃப் அரங்கில் இந்த அலசல் நிகழ்வில் தங்க ளின் சொந்த வாழ்க்கையையும் அசைபோட் டுக் கொண்டார்கள் பேச்சாளர்களும் பார்வையாளர்களும்.

எட்டாம் வகுப்பு படிக்கும் போதே பள்ளியின் சக மாணவி கொடுத்த காதல் கடி தக் கதையை வரவேற்புரையிலேயே துவக்கி விட்டார் திரைப்பட இயக்குநர் ஏகாதசி. கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழையாய் தனது நினைவுகளோடு சமகால நிகழ்வுகளையும் பின்னிப்பிணைத்தார் அவர்.

பேச்சின் நிறைவில் அவர் சொன்ன காதல் கவிதைகள் - காதலிக்கான கவிதைகள் ‘ஆஹா’ வகையின அவற்றில் ஒன்று.

“எங்கள் வாத்தியார்கள்

சம்பளம் வாங்கினார்கள்

நாங்கள்

காதல் வாங்கினோம்”

காதலை இலக்கியத்தோடு இணைத்துப் பேசினார் கவிஞர் அறிவுமதி. மணவாழ்க் கைக்கு முந்தையது மட்டும் காதலில்லை, அதற்குப் பிந்தையதும் தான். இதற்கோர் சங்க இலக்கியப் பாடலைச் சான்றாக்கினார் அவர்.

வனப்பகுதியில் ஒரு நீர்நிலை. அங்கே வழக்கமாக ஒரு மான் நீர் அருந்தவரும். அன்றும் வந்தது. நீர் நிலையைக் காணவில்லை. ஏனென்றால் சிறியதான அந்த நீர்நிலையை அருகே இருந்த மரங்களிலிருந்து வீழ்ந்த மலர்கள் போர்த்தி மூடிவிட்டன.

அன்றாடம் நீர் அருந்தியமான் வழக்கமான இடத்திற்கு சென்றது. மலர்ப் போர்வையை நீக்கிவிட்டு தண்ணீர் குடிக்க முயற்சி செய்தது. முகத்தை பூக்கள் மேல்வைத்து ‘ம்ச்’ பெரு மூச்சுவிட்டது. மலர்கள் ஒதுங்கிவிட்டன. நீர் அருந்திச் சென்றது மான் என்பது சங்க இலக்கியக்காட்சி

வானம் -நீர்நிலை - மலர்மூடல் - மான் விலக் கல் - நீர்அருந்துதல் எல்லாமே குறியீடுகள் தான். இதற்குள் மனிதவாழ்க்கை - அந்தக் கால குடும்பவாழ்க்கை உறைந்து கிடப்பதை அறிவுமதி அழகாகக் கட்டவிழ்த்தார்.

தலைவியைத் தலைவன் பிரிந்து செல்கிறான்; கொஞ்ச காலம்கழிந்து திரும்பிவருகிறான். வந்தவுடனே தலைவியிடம் இன்பம் நாடி ஓடுதல் கூடாது. தலைவி யின் பெற்றோர், உற்றார் உறவினர் போன்றோர் அவள் மனதில் பல தாக்கங்களை ஏற்படுத்தி இருப்பார்கள். தலைவியின் மனதை அவை மூடிக் கொண்டிருக்கும்.

அந்தச் சூழலில் தலைவியை விட்டுத்தாம் பிரிந்த காலத்தில் ஏற்பட்ட உணர்வுகளை -காயங்களை மெல்லமெல்லவெளிக் கொண்டுவர வேண்டும் - மான் மூச்சுவிட்டு மலர்களை நீக்கியது போல. பின்னர் அதுநீர் அருந்தியது போல இன்பம் நாட வேண்டும். அது தான் இயல்பானதாக உள்ளம் ஒன்றியதாக - இருக்கும் என்பதன் வெளிப்பாடே இந்தப் பாட்டு என அறிவுமதி அழகாகவும் எளிமையாகவும் விளக்கிப் பேசியதை அரங்கப் பார்வையாளர்கள் வியப்போடு உள்வாங்கினர்.

மனிதர்கள் மட்டுமே உணர்வுடையவர்கள், பூமியில் வாழ உரிமை உடையவர்கள் என்று எண்ணாமல் அனைத்து உயிர்களுக்கும் அதைப் பொதுமைப்படுத்தி யவர்கள் பண்டைத்தமிழர்கள் என்பதை இன்னொரு பாடல் மூலம் எடுத்துரைத்தார்.

தலைவியைப் பிரிந்த தலைவன் மீண்டும் ஊர்திரும்பு கிறான்.பெருவேட்கையோடு, தேரினை விரைந்து செலுத்து என்கிறான் பாகனிடம். தேர் விரையும் போது மணிகளால் எழுகின்ற ஒலி வேகத்தில் அங்கே ஆணும் பெண்ணுமாய் மலர்களில் அமர்ந்திருந்த வண்டுகள் சிதறி ஓடுகின்றன. இது தலைவனின் மனதை நெருடுகி றது. தேரை நிறுத்தச் சொல்கிறான், இறங்கிச் சென்று சிறு கொடிகளைக் கொண்டுவந்து அவற்றால் மணிக ளின் நாவைக் கட்டுகிறான். பின்னர் எந்த வண்டுகளுக் கும் இடையூறு இல்லாமல் மெல்ல செலுத்து தேரினை என்கிறான்.

தனது தலைவியைக் காலம் தாழ்த்தும் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் வண்டுகள் போன்ற உயிர்களின் வாழ்க்கைக்கு இடையூறு செய்யக் கூடாது என்று எண்ணியமனம் தமிழ் மனம் என்றார் அறிவுமதி. காதலில் தங்களுக்குள் மட்டுமல்ல மற்ற உயிர்களின் காதலுக்கும் இடையூறு இல்லாமல் விட்டுக் கொடுக்கும் பண்பினை அவர் நயம்படக் கூறினார்.

தமிழ் ஓவியா said...

மேன்மையான மென்மையான காதல்பிறகு ஏன் மரணத்தை நோக்கிப்போகிறது? பாரதிகூட,

“காதல் காதல் காதல்

காதல் போயின் காதல்போயின்

சாதல் சாதல் சாதல்”

என்றானே ஏன்?

பாரதியின் இதேபோன்ற உணர்வை ஒரு சாதாரண கிராமத்துப் பெண் வெளிப்படுத்துகிறாள்.

“ஆசைவச்சேன் உம்மேல

அரளிவச்சேன் கொல்லையில”

ஆசை நிராசையாகிவிட்டால் அரளி விதை தீர்வாகி விடும் என்பது தான் இதற்குப் பொருள் என்பதை அழகாக ஒப்பிட்டார்.

காதலை மறுத்து இளசுகளை வருத்தி உயிர் பறிக்கின்ற பெருசுகளைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்பது அவரது பேச்சின் முத்தாய்ப்பாய் இருந்தது.

“சாகப் போகிறவர்களுக்கு

அவ்வளவு பிடிவாதம் இருந்தால்

வாழப்போகிற நமக்கு

எவ்வளவு பிடிவாதம் இருக்கும்

“பெற்றோருக்காகக்

காதல் சாவதைவிட

காதலுக்காகப்

பெற்றோர் சாவதுபாவமில்லை”

உயிர் இரக்கமே தமிழரின் பண்பு என்று பேசிய அறிவுமதியையும் உயிரிழப்பும் பாவமில்லை என்று பேசவைத்தது காதலின் வலிமை.

காதலர் தினம் வணிகமயமாகிப் போனதை பிரா வுக்கு நாற்பது விழுக்காடு தள்ளுபடி விளம்பர உதாரணத்தோடு எடுத்துரைத்தார் பேராசிரியர் சந்திரா.

காதல் வாழ்வு பெற்றோர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாகப்பதிவு செய்த அவர், இன்று பக்குவப்படாத பள்ளிவயதிலேயே காதல் என்பதை ஊடகங்கள் ஊக்குவிப்பது தவறு என்றார்.

காதல் வேறு காமம் வேறு என்பதைப் போலவே காதல் வேறு பாலினக் கவர்ச்சி வேறு என்பதைக் கல்லூரி மாணவனைக் காதலித்த கல்யாணமான பேராசிரியை ஒருவரின் உதாரணத்தோடு விளக்கினார். பக்குவப்பட்ட வயதில் வாழ்க்கை எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவயதில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கையில் தோல்வியே ஏற்படாது என்பதற்குக் காதல் திருமணம் செய்து கொண்டு 35 ஆண்டுகளாக மகிழ்ச்சியோடு வாழும் தனது வாழக்கையே உதாரணம் என உறுதியாய்ச் சொன்னார்.

அரங்க நிகழ்வுக்குத் தலைமை வகித்த பத்திரிகையா ளர் சு.பொ.அகத்தியலிங்கம் காதல் பற்றிய தனது புரிதலை மாற்றிய மொழிபெயர்ப்புக் கதை ஒன்றுடன் பேச்சைத் தொடங்கினார் .

காதல் திருமணங்கள் தோல்வியில் முடிந்துவிடுவதா கச் சொல்கிறார்கள்.இது கட்டுக் கதை. கயிற்றில் பல காலம் கட்டிப்போடப்பட்ட கன்றுகளை அவிழ்த்து விடும் போது சிறிதுதூரம் தறிகெட்டு ஓடுவது போல, மாற்றம் வருகின்ற காலத்தில் சில தவறுகள் நடக்கவே செய்யும் என்றார்.

பிள்ளைகளுக்குக் காதலிப்பது தவறில்லை என்று சொல்லுங்கள் - அவர்கள் காதலித்தால் உண்மையை உங்களிடம் சொல்வார்கள்; காதலனை அல்லது காத லியை வீட்டுக்கு அழைத்துவா என்று சொல்லுங்கள். உங்களை அவர்கள் கொண்டாடுவார்கள். டைரியில் எழுதி வைப்பதை விடவும் கூடுதலானரகசியத் தகவல் களையும் உங்களோடு பகிர்ந்துகொள்வார்கள். இது தான் இன்றையத் தேவை, இது வெறும் போதனை அல்ல, எனது மகளின் காதல் திருமணத்தை நடத்தி வைத்த - எனது மகனின் காதலையும் வரவேற்கிற வாழ்க்கை அனுபவத்திலிருந்து சொல்கிறேன் என்ற அகத்தியலிங்கத்தின் வாக்குமூலம் அரங்கில் புதிய மன அலைகளை எழுப்பியது.

கூட்டாஞ்சோறு அரங்கில் தமுஎகசவின் குடும்ப ஜனநாயகம் இப்படியாக எதிரொலித்தது. காதலர் தினம் இத்தகையத் தேடல்களோடும் அனுபவப்பகிர்வுகளோ டும் நடக்கும் போது காதல் வாழ்க வெனக் கொண் டாடுவோர் அதிகரிப்பர். சில கோயில் மாடுகளின் கொட்டமும் அடங்கும்; அடக்கப்படும் தானே!

தொகுப்பு : மயிலை பாலு -http://www.theekkathir.in/index.asp