Search This Blog

25.2.12

பகவத் கீதை மத நூலா?வாழும் நெறியா?

பகவத் கீதை மத நூல் அல்ல வாழும் நெறியாமே?


திடுக்கிட வைக்கும் தீர்ப்பு

28.1.2012 தினமணி நாளிதழில் பின்வரும் செய்தி வெளி வந்துள்ளது.

பகவத் கீதை மதநூல் அல்ல; அது வாழும் நெறி என்ற தலைப்பில் செய்தி வந்துள்ளது.

பகவத் கீதை மதநூல் அல்ல; அதுவாழும் நெறி எனவும்; சமூகநீதி தாக்கும் நூல்; நன்னெறியைப் போதிக் கிறது என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

பள்ளிகளில் பகவத் கீதையைக் கற்பிக்கும் மாநில அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக் கில் உயர்நீதிமன்றம் ஜனவரி 27 வெள் ளிக்கிழமை இவ்வாறு கூறியுள்ளது.

கருத்துக் கூறுவது கடமை

தீர்ப்புப்பற்றித் திறனாய்வு அல்லது மதிப்பீடு செய்வது என்றில்லாமல், அந்தத் தீர்ப்பில் கூறப்பட்ட கருத்து அடிப்படையில் ஆய்வு செய்வது தேவை என்ற நிலையில் இங்கே கருத்து கூறப்படுகிறது.

முதலில், பகவத் கீதை மதநூலா? அல்லவா? என்பதை ஆய்வு செய்வோம்.

பொதுவாக, நாம் கீதை எனக் குறிப்பிடுவது மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும் என்று சொல்லப்படும் பகவத் கீதையைத்தான்.
இதனை வழங்கியவர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா எனப்படும் கண்ணன் ஆவான்.

முதலில் நமது வினா இதுதான்:

மகாபாரதமும் கீதையும் எந்த மதநூல்? இந்துமத நூல் அல்லவா இது?

கண்ணன் எந்த மதத்தின் கடவுள் இஸ்லாமிய மதக் கடவுளா? இல் லையே?

இந்து மதத்தின் கடவுளல்லவா?

திருமாலின் தசாவதாரங்களுக்குள் ஓர் அவதாரக் கடவுளல்லவா?

நூலாக்கமும் நோக்கமும்

பக்தி, ஞானம், யோகம், தத்துவம், ஆத்மிகம் என்ற பெயரால் கீதை பன்னிப்பன்னி, வலை பின்னிப் பின்னிக் கூறுவதெல்லாம் வர்ண தர்மத்தைத் தானே?

கடவுகளாகிய தன்னால்தான் பிராமண, சத்திரிய வைசிய, சூத்திர என்னும் நான்கு வர்ணங்களும் படைக்கப் பட்டன என்கிறான் கண்ணன்.

சதுர் வர்ணம் மயாசிருஷ்டம் (அத்.4. சுலோ:13)

நான்கு வர்ணங்களும் என்னால் படைக்கப்பட்டவை என்கிறான் கண்ணன்.

நான்கு வர்ண ஜாதி அமைப்பு உலகிலுள்ள எந்த மதத்தில் உள்ளது?

இஸ்லாமியம், கிறித்துவம், யூதம், முதலான பெருமதங்களில் உள்ளனவா இவை?

இந்து மதத்திலேதான் உள்ளன

வேறு எம்மதங்களிலும் இந்த அமைப்பு இல்லையே?

சொல்ல முடியுமா?

வர்ண -- ஜாதி அமைப்பு இல்லை என்றால் இந்து மதமே இல்லையே?

பிறப்பினாலேயே வேறுபாடு கற்பிப்பதும் குலதர்மக் கோட்பாட்டை அப்படியே அணுவளவும் பிசகாது பேணிக் காப்பதும் தானே பகவத் கீதை!

இது எப்படி மத நூல் அல்ல என்று ஆகும்?

வேறு வர்ண - ஜாதிக்காரன் தொழிலைக் கற்றுக் கொண்டு ஒருவன் அதனை நன்றாகச் செம்மையாகச் செய்தாலும் அதுகூடாது.

தன் வர்ண-ஜாதிக்காரன் தொழிலைக் கற்றுக் கொண்டு ஒருவன் அதனை நன்றாகச் செம்மையாகச் செய்தாலும் அது கூடாது.

தன் வர்ண_ ஜாதி சுயதர்மத்தை _ தொழிலை அரைகுறையாகச் செய்து செத்துப் போனாலும் அதுதான் சிறந்தது!
ச்ரேயாந் ஸ்வதர்மோ விகுண:

பரதர்மாத் ஸ்வனுஷ்டிதாத் ஸ்வபாபகியதம்
கர்ம குர்வந்நாப் நோதி கில்பிஷம்
(அத்: 18 சுலோகம்: 44)
இவ்வண்ணம்
வர்ண - ஜாதி _ சுயதர்மத்தைப் பிசகாது செய்தே தீர வேண்டும் என்கிற குலதர்மம் பேணும் ஏற்பாடு இந்து மதத்தில்தானே உள்ளது? இப்படியிருக்க,கீதை மதநூல் அல்ல என்றால் அது எப்படி? எப்படி?

விரும்பத்தகாத வேள்வி முறை

வைதிகச் சடங்கான கேள்வி - அதாவது யாகத்திற்குக் கீதையில் மிகவும் முதன்மை கொடுக்கப்பட்டுள்ளதே!

யக்ஞம் (வேள்வி) செய்யாதவர் களுக்கு இவ்வுலகில் நல் வாழ்க்கை இல்லை அத்.4 : சுலோ: 32)

யாகம் செய்வது இந்து மதத்துக் குரியதல்லவா? இதை வலியுறுத்தும் கீதை எப்படி மத நூல் அல்ல என்று ஆகும்?

வலிமையான வாக்குமூலம்

பகவத் கீதை ஒரு (இந்து) மத நூலா? அல்லவா? - என்பதற்கு விடையாக இந்து மதப் பரப்புரையாளராக இருந்த ஒரு பெரியவர் கூறியிருக்கும் வலிமையான வாக்குமூலத்தினைக் கீழே பார்ப்போமா?

இந்தநூல் (பகவத்கீதை) எல்லா ஹிந்துக்களுக்கும், சம்பிரதாய வித்தியாசமில்லாமல் வேதம் போலவும், உபநிஷத்துக்கள் போலவும் ஒப்புக் கொண்டிருக்கும். ஒரு சாஸ்திரமாக முடிந்து, பல ஆயிர வருஷங்களாக அங்கீகரிக்கப்பட்டு வந்திருக்கிறது.

யாரோ இவர் யாரோ?

இப்படிச் சொன்னவர் யார் தெரி யுமா? சாட்சாத் சக்கரவர்த்தி சி. இராஜ கோபாலாச்சாரியார் அவர்கள்தான்!
தமது,

கண்ணன் காட்டிய வழி என்னும் நூலில் தான் இவ்வண்ணம் வாக்கு மூலம் வழங்கியிருக்கிறார்.
இந்து மதத்தின் சாஸ்திரம் ஆக, இன்று நேற்றல்ல, பல ஆயிரம் ஆண்டு களாக பகவத் கீதை அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளதாம்!
இப்படியிருக்க.

பகவத்கீதை ஒரு மதநூல் அல்ல என்று ம.பி. நீதிமன்றம் தீர்ப்புரை வழங்கியிருப்பது எப்படி என்றுதான் எம் சிற்றறிவுக்கு எட்டவில்லை!

சமூகநீதியைக் காக்கும் நூலாமே!

சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவினர்க்கும் ஏற்படுத்தப்பட்ட சமூக அநீதியை (Social injustice)க்களைந்து அனைத்துப் பிரிவினர்க்கும் முறையான இயல்பான நீதியை வழங்குவதுதானே சமூகநீதி (Social Justice) ஆக இருக்க முடியும்? அத்தகைய சமூக நீதி காக்கும் நூலாமே கீதை? இது சரியா?

வர்ண தர்மக் கட்டளையைப் பின்பற்றித்தான் வாழ வேண்டும்.

அதை நிறைவேற்றுவதைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை.

அவற்றை மீறுவதைவிடத் தாழ்ந்தது எதுவும் இல்லை என்றுதானே கீதை பறைசாற்றுகிறது?

பணிவான தொண்டூழியம் செய்வது தான் சூத்திரர்களின் இயல்பான கர்ம மாகும் கடமையாகும் (அத்:18: சுலோ: 44)
இதன்படி தொண்டூழியம் _ அடிமைத்தனம் மட்டும்தான் சூத்தி ரனின் கடமை.

அவன் படித்தல் கூடாது; பதவியில் அமர்தல் கூடாது; உயர் அலுவல் பார்த் தல் கூடாது. இதுதான் சமூகநீதியா? இப்படிக் கூறும் கீதைதான் சமூகநீதி காக்கும் நூலா! இந்த நூற்றாண்டின் இணை யற்ற நகைச் சுவையல்லவா இது?
மங்கையர் - உழவர் மாபாவியராமே?

பெருமைக்குரிய பெண்ணினத்தையும் உயர்வுக்குரிய உழவன் இனத்தையும்; பாட்டாளிகளையும், தொழிலாளத் தோழர்களையும் பாவப்பட்ட பிறப்பு உறுப்பினின்றும் (பாய யோனி) பிறந்தவர்கள் என்று இழித்துரைக்கிறது கீதை.

மாம்ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேபிஸ்யு பாப யோனிய: ஸ்திரியோ வைச்யாஸ் -_ ததா சூத்ராஸ்தே

பெண்களும் வைசியர்களும் சூத்திரர்களும் பாவ யோனியினின்றும் பிறந்தவர்கள் (அத்:9 -_ சுலோ_ 32)

வைசியர், சூத்திரர், பெண்டிர் பாவிகள் என்று கூடச் சொல்லவில்லை. அவர்கள் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்கிறது கீதை!
இவர்களைப் பெற்ற பெண்களின் பிறப்புறுப்பே(யோனியே) பாவப் பட்டதாமே?

இதுவா சமூக நீதி காக்கும் நூல்!

துடிக்கிறதே உள்ளம்?

பயனை எதிர்பாராத பணியாமே?

கடமையைச் செய்; பயனை எதிர் பாராதே! (அத்_ 2 : சுலோ: 47)

இதனை, நிஷ்காம்ய கர்மம் என் கிறது கீதை.

உழைப்பினால்தான் ஒரு சமுதாயம் உயர முடியும். அதிக உழைப்புக்கு இருக்கும் அடிப்படை ஊக்கமே அதில் உண்டாகும் பலன் _ பயன் விளைவுதானே/

சுரண்டல் கோட்பாடு

கடுமையாக உழை! ஊதியத்தை (கூலியை)ப் பற்றிக் கவலைப்படாதே! என்ற வகையிலான கீதையின் தத்துவம் _ கீதோபதேசம் முதலாளித்துவத்தின் பாதுகாப்புக் கோட்பாடு அல்லவா?

எதுவும் செய்யாமலேயே பலனை எதிர்பார்க்கும் ஏமாற்றுச் சுரண்டும் வர்க்கம் உழைப்பாளிகளை _ பாட்டாளிகளைப் பார்த்து பலனை எதிர்பார்க்காதே! என்று கூறுவது கீதை காட்டும் சுரண்டல் கோட்பாடு அல்லவா?
இதுதான் வாழும் நெறியா?

எடுத்த செயலை நிறைவேற்றும் வகையில் செயலாற்றும் போது, இடையில் உண்டாகும் தடை; முடியும் போது உண்டாகும் என்பனவற்றை முன்னரே எண்ணிப் பார்த்து எதிர் பார்த்துச் செயலிலாற்றுக என்று கருத்தமைந்த,

முடிவும், இடையூறும், முற்றி ஆங்(கு) எய்தும் படுபயனும் பார்த்துச் செயல் (குறள் : 676)
குறளைப்பாருங்கள்!

பயனை எதிர்பார்த்தே செயல்புரிதல் வேண்டும் என்று கூறும் குறள் நெறி வாழும் நெறியா?

பலனை எதிர்பாராமல் பணி செய்! என்று கீதை உரைப்பது வாழும் நெறியா? எண்ணிப் பார்க்க வேண் டாமா?

சிந்தனை செய்யக் கூடாதாமே?

செய்யத் தக்கது, செய்யத்தகாதது என்பதை முடிவு செய்வதில் சாஸ் திரம்தான் உனக்குப் பிரமாணம்.

ஆகவே,
சாஸ்திரங்களில் சொல்லிய முறையை அறிந்து செயல்களைப் புரிக
தஸ்மாச் -_ சாஸ்திரப் ப்ரமாணம்தே கார்யாகார்ய வய்வஸ்தி தவ்ஜ்ஞாத்வா சாஸ்த்ர _ விதானோக்தம் கர்மகர்த்து மிஹார்ஹஸி (அத்.16. சுலோ: 24)

எதையும் சாஸ்திரம் கூறுவதை ஒட்டியே செய்! உன் அறிவைக் கொண்டு ஆராய்ந்து உன்பகுத்தறிவு கூறுவதன் படி செய்யாதே! என்பது கீதை (கண்ணனின்)யின் கருத்து.

இதுதான் வாழும் நெறியா?
தாழும் நெறியல்லவா?

காலடியில் வீழ்ந்துகிட!

எல்லாத் தருமங்களையும் விட்டு விட்டு என் ஒருவனையே சரணமாக அடைவாயாக!
நான் உன்னைச் சகல பாபங்களி லிருந்தும் விடுவிக்கின்றேன் அத்:18 சுலோ:65)
எத்துணை ஒழுக்கக்கேடாக -_ தீயொழுக்கத்தில் திளைத்தவனாக இருந்தாலும் கவலைப்படாதே! சகோதரா!
என்னை வணங்கு! என்னைச் சரண் புகு.

உன்பாபம் எல்லாம் பறந்து போகும்! என்று கூறுவது,

தீவினை, ஒழுக்கக் கேட்டினை ஊக்குவிப்பதாக இல்லையா?

இதுதான் கீதை காட்டும் வாழ்வியல் பாதையா? வாழும் நெறியா? வெட்கம்! வெட்கம்!!

பக்தியும் பாவங்களும்

பக்தி இருந்தால் போதும்; அறச் செயல்; அறநெறி வேண்டியதில்லை; பாவங்கள் ஓடியே போய்விடும்_ என்று அறிவுறுத்தும் மிக மோச மான வாழ்க்கை வழிதான் வாழும் நெறியா?

உணர்வோம்! உணர்த்துவோம்!!

நீதிமன்றத் தீர்ப்பின் கருத்துப்படி, (இந்து) மத நூல் பகவத் கீதை, மக்களுக்கு நல்ல பாதைகாட்டவில்லை!

அது சமூக நீதியைக் காக்கவில்லை!!

அது, வாழும் நெறியாகவும் திகழவில்லை!! என்ற உண்மைகளை ஒவ்வொருவரும் உணர்வோம்! உலகுக்கு உணர்த்துவோம்!! நீதிமன்றத் தீர்ப்புகள் எல்லாம் நிலையானவை அல்ல!

தீர்ப்புகள் திருத்தப்படலாம்!!

--------------------- பேராசிரியர் ந. வெற்றியழகன் அவர்கள் 25-2-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: