Search This Blog

27.2.12

மாணவர்கள் பொது தொண்டில் ஈடுபடலாமா? பெரியார்


மாணவர் கழகத்தின் சார்பாக அழைக்கப்படும் யாரும் மாணவர்களைப் புகழாமல் செல்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். மாணவர்கள் நிலை நிரந்தரமானதல்ல; என்றுமே ஒன்றுபோல் இருப்பதில்லை. நேற்று குழந்தைகளாய் இருந்தவர்கள்தான் இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களாய் படித்து வருகிறீர்கள். நாளை நீங்கள்தான் பெரியவர்களாய் வாழ்க்கை நடத்தப் போகிறீர்கள். இந்த நிலையற்ற பருவத்தில் எது நல்ல காரியம் என்று உங்களால் சிந்தித்துச் சுலபத்தில் அறிந்துகொள்ள முடியாது. மாணவர்கள் தாமாகவே ஒரு நல்ல காரியத்தை ஆராய்ந்தறிந்து அதைச் செய்து முடிக்கக் கூடிய சக்தி படைத்தவர்கள் என்று என்னால் நினைக்க முடிய வில்லை. அவர்களைக் கொண்டு பல நல்ல நல்ல காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்றுதான் நான் அபிப்பிராயப்படுகிறேன். ஆகவே, அவர்கள் தம்மைத் தம் முடைய திரண்ட சக்தியை நல்ல தலைவர்களிடம் ஒப்படைக்க வேண் டும். இப்படிக் கூறுவதற்காக மாணவர் கள் என்மீது கோபித்துக் கொள்ளக் கூடாது. மாணவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்கக் கூடியவர்கள். சொல்லிக் கொடுப்பதைப் படிக்கக் கூடியவர்கள். ஆதலால் தமக்கு எல்லாம் தெரிந்துவிட்டதாக அவர்கள் ஒரு போதும் நினைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி நினைப்பவர்களிடமிருந்துதான் காலித்தனம், கட்டுப்பாட்டுக்கு அடங் காத தன்னிச்சைத்தனம் விரைவில் புறப்படுகிறது. ஆகவே, அவர்கள் மிக ஜாக்கிரதையாக விஷயங்களைச் சிந்திக்கவேண்டும். தம்மால் கூடுமான அளவுக்கு நல்ல தலைவர்களை அவர்கள் தேடித் திரிதல் வேண்டும். எந்த அள வுக்கு தாம் அன்பு செலுத்துகிறார்களோ அந்த அளவுக்கேனும் தம்மீது அன்பு செலுத்தக் கூடிய, தம்மை நல்வழிப் படுத்துவதில் ஆசையும், அக்கறையும் உள்ள தக்க பெரியார்களைத் தேடிப் பிடிக்கவேண்டும் அவர்கள். அந்த வழியில் நாங்கள் முயற்சி செய்து அவர் களில் ஒரு சிலரையாவது எங்களையும், எங்கள் கொள்கைகளையும் நம்பச் செய்து, அப்படிப் பெற்ற சிலரை நாங்கள் எங்களுக்குச் சொந்தமான பெருஞ் சொத்தாக மதித்து நாங்கள் மகிழ்ந்து வருகிறோம்.

மாணவர்களின் உண்மையான தகுதி

மாணவர்கள் நல்ல சோல்ஜர்கள்; நல்ல ஜெனரல்களல்ல. மாணவர்கள் நல்ல சிப்பாய்கள், நல்ல கமாண்டர்களல்ல. ஆகவே, நல்ல சிப்பாய்களைப் போல அவர்கள் பல கட்டு திட்டங் களுக்குட்பட்டு நடக்கவேண்டும்.

தொண்டின் முன்பு சோதனை

மாணவர்கள் பொது நலத் தொண் டில் ஈடுபட நினைக்கும்போது, முதலில் பொதுநலத் தொண்டில் ஈடுபடத் தமக்குத் தகுதியிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். தங்கள் நலன்களை விட்டுக் கொடுக்க, அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும். தங்கள் உயர்வைக் கருதாமல், தங்கள் பட்டத்தைப் பெரிதாகக் கருதாமல், தங்களை சாதாரண சராசரி மனிதனாகக் கருதிக் கொள்ள அவர்கள் முதலில் சம்மதிக்க முடியுமா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். தங்கள் வாழ்க்கையையும், அவர்கள் கூடுமான அளவுக்குச் சராசரி மனிதனுடைய வாழ்க்கைக்கு உட்பட்டதாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.

தற்காத்தல்

ஒரு பக்குவமடைந்த பெண்ணை எப்படி எங்கு வெளியே சென்றால் கெட்டுப் போகுமே என்று தாய், தந்தையர் கவலையோடு காப்பாற்றி வருகிறார்களோ, அதேபோல், மாண வர்கள் தங்கள் புத்தியை, தங்கள் சக்தியைக் கண்ட இடத்திலெல்லாம் செலுத்தாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

தன்னலம் பேணாமை

நீங்கள் உங்களைச் சாதாரண மனிதர்களாக நினைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைச் சவுகரியங்களையும் எவ்வளவு குறைத் துக் கொள்ள முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்ளவேண்டும். உங் களுக்கு மிகமிக அடக்கம் வேண்டும். நீங்கள் மிகமிக தன்னலமற்றவர்களாய் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மாண வர்களால்தான் ஏதாவது உருப்படியான நன்மை ஏற்படும். மாணவர்கள் தம் மைனர் வாழ்க்கைத் தன்மையை அறவே விட்டொழிக்கவேண்டும். மைனர் வாழ்க்கை நடத்தக் கூடியவர்களை இயக்கத்தில் சேர்த்துக் கொண்டால், அவர்கள் தம் சொந்த வாழ்விற்காக இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தம் சொந்த வாழ்விற்குத் தடை ஏற்படும் போது பேசாமல் வெளியேறிவிடுவார்கள். அல்லது எதிர்ப்பு வேலை செய்வார்கள். அல்லது எதிரிகளின் கையாளாக ஆகி விடுவார்கள். அப்படிப்பட்ட நொண்டி மாடுகள் நுழையவொட்டாமல், மாணவர் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும்.
தொண்டிற்குத் தகுதியற்றோர்
பொதுத் தொண்டுக்கு வந்த உடனே தங்களைப் பெரிய மேதாவியாக நினைத்துக் கொள்ளக் கூடியவர்களும், தங்கள் தகுதிக்கு மேலாக போக போக்கியம், பெருமை, தங்களுக்குக் கிடைக்கவேண்டிய விகிதாச்சாரத்திற்கு மேலாக மதிப்பு, தங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று நினைப்பவர்களும், எந்த இயக்கத்திலும் இருக்கத் தகுதியற்ற வர்கள் ஆவார்கள். அப்படிப்பட்டவர் களால் பொதுவாழ்க்கையில் எப்போதும் எந்தக் கொள்கையிலும் நிலைத்திருக்க முடியாது.

அபாயகரமான நோய்

பொதுநலத் தொண்டர் எவருக்கும் உள்ளத்தில் அடக்கம் வேண்டும். தான் என்ற அகம்பாவம் கூடாது; ஏமாற்றம் ஏற்படுமானால், அதைச் சகித்துக் கொள்ளக்கூடிய பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு மற்று மொரு கெட்ட நோய் இருந்து வருகிறது. ஒன்றிரண்டு தடவை மேடை ஏறினால் போதும். ஒன்றிரண்டு தடவை கைதட்டல் கிடைத்துவிட்டால் அதைவிட மேலாகப் போதும். பத்திரிகைகளில் அவர்களால் எழுதப்பட்ட ஒன்று, இரண்டு கதை களோ பாட்டுகளோ வியாசங்களோ வந்துவிட்டால் போதும். உடனே தங்களைப் பெரிய தலைவர்கள் என்றும், ஆசிரியர்கள் என்றும், தங்களை மற்றவர் யாவரும் மதிக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு விடுவார்கள். இது மகா அபாயகரமான நோய். இந்நிலை வந்து விட்டால் எப்படிப்பட்ட இயக்கமும், கொள்கையும் அவர்களை சீக்கிரம் கைவிட்டு விடும். அதற்கப்புறம் அவன் சீக்கிரத்தில் பொது வாழ்வில் வெறுப்பேற்பட்டு எதற்கும் தகுதியற்ற வனாகி விடுவான். ஆகவே தான் அடக்கம் வேண்டும் என்று அவ்வளவு வற்புறுத்திக் கூறவேண்டியிருக்கிறது.

எனது அனுபவம்

நானும் மாணவனாய் இருந்திருக்கிறேன். ஆணவம் பிடித்த மைனராயும் இருந்திருக்கிறேன். சர்வாதிகாரக் காலி யும் இருந்திருக்கிறேன். ஆனால், பொதுத் தொண்டுக்கு வந்த பிறகு சகல சுகத்தையும் கைவிட்டேன். என்னை ஒரு சாதாரண மனிதனாகவே கருதிக் கொண்டு யாராவது கூப்பிடும் வரையில் பின்னணியிலேயே இருந்து வந்தேன். அதனால்தான் என்னால் சலிப்பு இல்லாமல், ஏமாற்றமில்லாமல் பொதுத் தொண்டைத் தொடர்ந்து செய்து வர முடிகிறது. எனக்குரிய பங்கோ மரியாதையோ கிடைக்கவில்லையே என்று நான் ஒரு நாளும் ஏமாற்றமடைந்ததில்லை.

என் வாழ்க்கையில் நடைபெற்ற சாதாரணச் சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அது, 1916 அல்லது 1917 இல் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது நான் ஈரோடு முனிசிபல் சேர்மன் ஆக இருந்த காலம். அப்போது நான் ஒரு பெரிய புரஹாம் வண்டி வைத்திருந்தேன். ஊத்துக்குழி ஜமீன்தார், ஆனரபிள் சம்பந்த முதலியார் மற்றும் 3, 4 பிரபலஸ்தர்கள் என் வீட்டிற்கு வந்திருந்தனர். எல்லோரு மாகச் சேர்ந்து ஒரு இழவு வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கப் போகவேண்டியிருந் தது. ஜமீன்தார் முதலிய எல்லோரையும் வண்டியில் அமர்த்தினேன். வண்டியில் மேற்கொண்டு இடமில்லை. நான் ஒருவன்தான் பாக்கி. வண்டி அவர்களைக் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பி வரவேண்டுமென்றால் நேரமாகி விடும். ஆதலால் என்னையும் உடன் வரவில்லையா என்று ஜமீன்தார் கேட்ட தற்கு, இதோ பின்னால் வருகிறேன் என்று பதில் கூறி, வண்டியை விடு என்று சொல்லிவிட்டு, அவர்கள் அறியாமலே நான் வண்டி மீதேறி கோச்மேன் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். குறிப்பிட்ட இடத்தை வண்டி அடைந்ததும், அவர்கள் இறங்கவும், கோச்மேன் பக்கத்திலிருந்து நான் இறங்குவதைப் பார்த்து அவர்கள் திடுக்கிட்டார்கள். அன்றையிலிருந்து என்னை அவர்கள் ஒருபடி உயர்வாகவே மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜமீன்தார் என்னைக் கண்டால் பெரிய ஞானி என்று குனிந்து கும்பிடுவார். நான் அவரைப் பரிகாசம் செய்வேன். கோச் மேன் பக்கத்தில் உட்காருவதை நான் கேவலமாக மதிக்கவில்லை என்பதையும், விருந்தினர்களுக்காக எனது சவுக ரியத்தை எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்து வருகிறவன் என்பதையும், அவர்கள் அறிந்து கொண்டதினால்தான் என்னை மிக மேலானவனாகக் கருதத் தொடங்கி விட்டார்கள்.

விட்டுக் கொடுப்பது வீணானதோ இழிவானதோ அல்ல

இப்படி நம் சவுகரியத்தைப் பிறருக் காக விட்டுக் கொடுப்பது இழிவல்ல. தப்பிதமுமல்ல. நான் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிய போதுகூட நான் மூன்றாம் வகுப்பில் தான் பிரயாணம் செய்வேன். ராஜகோ பாலாச்சாரியாரும், திரு.வி.க.வும் இரண்டாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வார்கள். திரு.வி.க. அவர்கள் அதற்காக வெட்கப்படுவார், கூச்சப் படுவார். உடம்புக்கு சவுகரியமில்லாத போது நீங்கள் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்வது தவறாகாது என்று நான் கூறி அவர்களைச் சமாதானப் படுத்துவேன். மாணவர்கள் இம்மாதிரி இளமை முதற்கொண்டே தம் வாழ்க்கைச் சவுகரியத்தை மிக எளிதாக்கிக் கொள்ள வேண்டும். சாதாரண உணவில் திருப்தி அடையவேண்டும். நான் காங்கிரஸ் தலைவனாய் இருந்தபோதுகூட எவ்வ ளவோ தர்க்க வாதம் செய்வேன். ஆயினும் ராஜகோபாலாச்சாரியார், திரு.வி.க. ஆகியவர்களின் ஆலோசனை யின் பேரில்தான் எதையும் செய்து வந்தேன். எதிலும் அவர்கள் அபிப்பிரா யப்படியே செய்வேன். விட்டுக் கொடுப் பதில் தலைவர்களை மதிப்பதில், நான் மிக்க தாராளமாக நடந்து வந்தேன். அந்தப்படியே நீங்களும் எதிலும் பிறருக் குக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கத் தயாராகத்தான் இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கே பாத்தியதை

திராவிடர் கழகம் கடைப்பிடித்துள்ள கொள்கைகள் மிகக் கஷ்டமானவை. திராவிடர் கழகம் கூறும் பரிகாரங்கள் கூட மிகக் கசப்பானவையாகத்தான் இருக்கும். இக்கொள்கைகள் பெரும் பாலும் மாணவர்களால்தான் ஈடேற்றப்பட வேண்டும். மாணவர்கள்தான் தம் பின் சந்ததியைப்பற்றி அதிகம் கவலைப் படவேண்டியவர்கள். ஆகவே, அவர்கள் தன் முதியோரைக் காட்டிலும் அதிக உற்சாகத்தோடு திராவிடக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றவேண்டும்.


அறிவின் அடையாளம் அகிம்சை

மாணவத் தோழர்களுக்கு அகிம்சையில் நம்பிக்கை இருக்கவேண்டும்; புண்ணியம் சம்பாதித்துக் கொள்வதற்காக அல்ல. ஹிம்சை சகலருக்கும் பொது, யாவருக்கும் துன்பத்தைக் கொடுக்கக் கூடியது என்பதற்காகத்தான்.

நமக்கு அறிவிருப்பதே நம் காரியங்களை இம்சையின்றி சாதித்துக் கொள் ளத்தான். அறிவு இருக்கும்போது மிருகத்தனத்தை ஏன் நாம் கடைப் பிடிக்கவேண்டும். மனிதத் தன்மைக்கு மிக அவசியமானது அகிம்சைதான்.

நாம்தானே இந்நாட்டில் பெரும் பான்மை மக்களாக இருக்கிறோம். பலாத்காரத்தை வளர்த்தால் நாம்தானே அதற்குப் பலியாக நேரிடும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். முடிவாக ஒன்று சொல்லுகிறேன். நீங்கள் நல்ல எளிய முறையில் வாழப் பழகிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை இலகுவானதாக, இன்பமானதாக இருக்கும். எல்லாவற்றிற் கும் மேலாக உங்களுக்கு அளவற்ற பொறுமையும், அடக்கமும் கீழ்ப்படிதலும் வேண்டும்.

---------------------21.2.1948 அன்று திருச்சியில் நடந்த திராவிடர் மாணவர்கள் மாநாட்டில், பெரியாரவர்கள் ஆற்றிய பேருரையில், மாணவர்கள் எவ்வாறு நடந்துகொள்வது அவர்களுக்கும், இயக்கத்திற்கும் மாண் பைத் தரும் என்ற முறையில் விளக்கிய சிறு பகுதி இது- " குடிஅரசு"- சொற்பொழிவு - 03.04.1948

0 comments: