Search This Blog

1.2.12

பெரியாரும் தமிழ் இலக்கியங்களும்

லக மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் கருத்துகளை வழங்கிய உலகப் பேரறிஞர்கள் பலருள்ளும் பெருஞ்சிறப்பினைப் பெற்று விளங்குபவர் தந்தை பெரியார் ஆவார். உலகிற் சிறந்த பேரறிஞர்களான சாக்கிரடீசு, வால்டேர், ரூசோ, காரல் மார்க்ஸ், இங்கர்சால், லெனின் ஆகிய பெருமக்களின் ஒட்டுமொத்தக் கூட்டுச் சிந்தனையாளராகத் திகழ்ந்தவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆவார்.

பெரியார் தாமாகவே சிந்தித்துக் கூறிய கருத்துகளில், மேற்கூறிய பேரறிஞர்கள் பலரும் கூறிய கருத்துகள் அடங்கியுள்ளன என்பதை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.

இத்தகைய பெருமை கொண்ட பெரியார் அவர்கள் உலகளாவிய சிந்தனையாளராக இருப்பினும், தமிழ்நாட்டு மக்களின் தாழ்ந்த நிலையை எண்ணிப் பெரிதும் கவலைகொண்டு, தமிழர்கள் தலைநிமிர்ந்து மானத்தோடும் அறிவோடும் வாழ்வதற்குரிய வழிமுறைகளை வகுத்துத் துறைதோறும் தமிழர்கள் ஆற்றவேண்டிய பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டே வாழ்ந்தார்.

தமது இயக்கத்தைச் சார்ந்த அறிஞர்களையும் கலைஞர்களையும் மக்களுக்குத் தொண்டாற்றுவதில் ஈடுபடுத்தினார் என்றாலும் பெரியாரது எண்ணம் இன்றும் முழுமையாக நிறைவேறாத நிலையையே காண்கிறோம். இதற்குரிய காரணத்தை அறிஞர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆரியர்கள் தங்கள் கடவுள் கொள்கைகளைத் தமிழர்கள் மீது திணித்துத் தலைவிதித் தத்துவத்தை ஏற்கச் செய்து, வருணாசிரம தர்மத்தைத் தமிழ்நாட்டில் நிலைபெறச் செய்ததுதான் தமிழ் மக்கள் முன்னேற்றம் அடையாமல் தாழ்ந்து போனதற்கு முக்கியமான காரணம் என்பதைத் தந்தை பெரியார் ஆய்ந்தறிந்து தெளிந்த காரணத்தினாலேதான், கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று கூறித் தமது கடவுள் மறுப்புத் தத்துவத்தைக் கட்டுரைகள் மூலமும் சொற்பொழிவுகள் மூலமும் தமிழ்நாட்டில் பரப்பத் தொடங்கினார்.

தான் பிறந்த ஜாதி தாழ்ந்த ஜாதியாக இருப்பதற்கும், தான் ஏழ்மையிலே உழலுவதற்கும் தன் தலைவிதிதான் காரணம் என்றும், அந்தத் தலைவிதியை உருவாக்குபவர் கடவுள்தான் என்றும் தமிழர்களை எண்ணச் செய்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் என்பதை உணர்ந்த காரணத்தினாலேதான் தந்தை பெரியார் ஆரியர்களையும், அவர்கள் தங்களுக்குச் சாதகமாக எழுதி வைத்துள்ள இதிகாச புராணங்களையும், மனுநீதி கூறும் வருணாசிரம தர்மத்தையும் எதிர்த்துப் பேசலானார்; எழுதலானார்.

ஜாதி மதமற்ற சமுதாயத்தை உருவாக்க எண்ணிய பெரியார், அதற்குத் தடையாக நிற்கும் சாத்திரங்களையும், இதிகாச புராணங்களையும், அவை கூறும் கடவுள்களையும், கடவுள்பற்றிக் கூறும் மதங்களையும், இலக்கியங்களையும் சாடலானார்.

இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களின் கதைகளாலும் பெரிய புராணம், பாகவதம், கந்தபுராணம் போன்ற பார்ப்பனியம் புகுத்தப்பட்ட இலக்கியங்களாலும் தமிழர்கள் தன்மானம் அற்றவர்களாகவும், பகுத்தறிவு இல்லாதவர்களாகவும் ஆயினர் என்பது பெரியாரின் கருத்தாகும்.

அவற்றின் கதைகள் அநாகரிகமான, ஆபாசமான காட்டுமிராண்டித் தனமான பாத்திரங்களைக் கொண்ட வை என்பதைப் பெரியார் பல்வேறு சொற்பொழிவுகள் மூலமாகவும், நூல்கள் வாயிலாகவும் எடுத்துரைத் துள்ளார்.

இராமாயணம், பாரதக் கதைக ளைக் குறை கூறி விளக்கிய அளவுக்குச் சங்ககால இலக்கியங்களையோ, அய்ம்பெருங்காப்பியங்களையோ குறைகூறிப் பெரியார் விளக்கவில்லை. எனினும் சிலப்பதிகாரக் கதையைக் குறைகூறிச் சொற்பொழிவாற்றியுள்ளார்.

சங்க இலக்கியங்கள் பற்றிப் பெரிதும் குறைகூறிப் பேசாவிட்டாலும், தமிழர்கள் கொள்கைகளுக்கு முரணான கருத்துகள் தமிழ் இலக்கியங்களில் ஏறிவிட்டன என்று கூறியுள்ளார். தேவார திருவாசகங்கள் பார்ப்பனக் கடவுள் கொள்கை களையே கூறுகின்றன என்பதைப் பெரியார் விளக்கியுள்ளார்.

பெரியாரின் கருத்து ஆரியக் கடவுட் கொள்கை கூறப்பெற்ற எந்த இலக்கியமும் தமிழர்களுக்குத் தேவையில்லை என்பதாகும். சான்றாகக் கூறவேண்டுமானால், சங்ககால இலக்கியமான கலித்தொகையுள் ஆரியக் கடவுளர் பற்றி மிகுதியாக வருவதைக் காணலாம். உதாரணத்துக்குச் சில பாடல்களின் கருத்தை நோக்குவோம்.

கலித்தொகைக்கு நல்லந்துவனார் கூறியுள்ள கடவுள் வாழ்த்து ஆரியக் கடவுள்கள் பற்றியதே ஆகும். அந்தணர்க்கு அருமறை பகர்ந்தவன் என்றும், கங்கையாற்றைச் சடையிலே கொண்டவன் என்றும், திரிபுரத்தை எரித்தவன் என்றும், நீலகண்டன் என்றும், எட்டுக் கரங்களை உடையவன் என்றும் சிவன் என்னும் கடவுளைச் சுட்டி, அவன் மூன்று வகையான சிவத்தாண்டவங்களை ஆடியதாக நல்லந்துவனார் கூறுகிறார்.

சங்ககாலத்திலேயே புலவர்கள் உள்ளத்தில் ஆரியப் புராண இதிகாசக் கதைகள் வேரூன்றிவிட்டன என்பதற்கு இந்தக் கடவுள் வாழ்த்து ஒன்றே போதும்.

இவ்வாழ்த்தில், சிவன் உமையொரு பாகனாகிய கதை உள்ளது. சிவன் புலித்தோலை ஆடையாகக் கொண்ட வன் என்ற செய்தியும் கூறப்பட்டுள்ளது. சிவன் புலித்தோலை ஆடையாகக் கொண்ட கதையை எண்ணிப் பார்த்தால் மிகவும் அருவருக்கத்தக்க கதையாக உள்ளது.

தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளுடைய செருக்கினை அடக்க எண்ணிய சிவன், திருமாலை மோகினி உருக் கொள்ளச் செய்து முனிவர்களை மயங்கச் செய்தான். அந்த நேரத்தில் சிவன் பைரவக் கோலம் கொண்டு முனிவர்களின் பத்தினிகளைக் கற்பழித்தான். அதனை அறிந்த முனிவர்கள் அபிசார வேள்வி செய்து சிவன் மீது தமருகம், அக்கினி, மழு, சூலம், புலி முதலியவற்றை ஏவினர். அவ்வேள்வியில் வந்த புலியைக் கொன்று அதன் தோலைச் சிவன் ஆடையாக்கிக் கொண்டான்.

இந்தக் கதை தமிழர்களுக்குத் தேவையா என்பதுதான் பெரியாரின் வினா. சிவனை நீலகண்டன் என்று கூறுவதற்கான கதையும் நம்பக்கூடியதன்று. முப்புரம் எரித்த கதையும் மூடத்தனத்தின் மொத்த உருவமாகவே உள்ளது.

புலவர் பெருங்கடுங்கோ இயற்றிய பாலைக்கலியின் முதற்பாட்டு, தோழி தலைவிக்குக் கூறுவதாக அமைந்தது. தலைவியைப் பிரிந்து பொருளீட்டச் செல்லும் தலைவனை அணுகி, தலைவன் செல்லக் கருதியுள்ள பாலை நிலக் கொடுமைகளைக் கூறி தலைவியின் வருத்தத்தைச் சொல்லி அவனைப் பொருளீட்டச் செல்லாதவாறு தோழி தடுத்து நிறுத்தினாள். இச்செய்தியைத் தோழி தலைவியிடம் கூறி தலைவியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாள்.

இந்தச் செய்தியைக் கூறும் கலிப்பாடலில், பாலைநிலத்து வெம்மையை விளக்கும் வகையில் இரண்டு உவமைகள் கூறப்பெற்றுள்ளன. உவமைகள் பாடலுக்கு இனிமையூட்டும் எனினும், இப்பாடலில் கூறப்பெற்ற உவமைகள் பகுத்தறிவுக்கு மாறாக, மூடநம்பிக்கை கொண்டனவாக உள்ளமை காண்கிறோம்.

கதிரவன் எவ்வண்ணம் சுடுகிறான் என்பதற்கும், வெம்மையால் பிளவுற்ற மலைகள் எவ்வண்ணம் உதிர்கின்றன என்பதற்கும் கூறப்பெற்ற உவமைகளே அவை.

தேவர்களைக் காப்பாற்ற முப்புரங்களைச் சிவன் எரிக்கும்போது அவனது முகம் எத்தகைய வெம்மையைக் கொண்டிருந்ததோ அத்தகைய வெம்மையைக் கதிரவன் கொண்டிருந்தான் என்பது ஓர் உவமை.

சிவன் தனது முக்கண்களால் முப்புரங்களையும் எரித்தபோது அவை எப்படிச் சிதறினவோ அப்படிக் கதிரவனின் வெப்பத்தால் மலைகள் பிளவுற்றுச் சிதறின என்பது இரண்டாவது உவமை.

பாலை பாடிய பெருங்கடுங்கோவுக்குத் தம் பாடலில் உவமை கூற ஆரியக் கதைதானா கிடைத்தது! இப்படிக் கூறியதற்குக் காரணம், அந்தக் கால அரச பரம்பரையினர்கூட ஆரியத்துக்கு அடிமைகளாயிருந்ததுதான் என்பது பெரியார் கருத்தாகும்.

இப்பாடலில் வரும் இன்னொரு உவமைகூட ஆரியக் கதை கொண்டதுதான். புலவர் தம் பாடலில் தலைவியைக் குறிப்பிடும் போழ்து, தலைவி அருந்ததி போன்ற கற்புடையவள் என்று கூறுகின்றார். கற்புக்கு எடுத்துக்காட்டாக இந்த அருந்ததியைக் கூறுவதைச் சங்ககாலப் புலவர்களுக்கு மட்டுமன்றிப் பிற்காலப் புலவர்களுக்கும் வழக்கமா கவே உள்ளதைக் காணலாம். பாமரர்களும்கூட அருந்ததியைப் பற்றி அறிந்து கொண்டுள்ளனர். அவள் கற்புக்கரசி எனக் கருதித் திருமணச் சடங்குகளில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்குமாறு மணமக்களை வற்புறுத்துகின்றனர்.

யார் இந்த அருந்ததி? அவள் என்ன தமிழ்ப் பெண்ணா? தமிழ்நாட்டிலே அவள் எவ்வாறு புகழ் கொண்டாள்? அவளைப் பற்றித் தமிழ்ப் புலவர்கள் பாடிப் புகழ்ந்ததால் வந்த விளைவுதானே.

அருந்ததி கருத்தமன் என்ற வடஇந்திய முனிவரின் புதல்வி என சிவபுராணம் கூறுகிறது. அவளை வசிட்ட முனிவன் மணந்து கொண்டான். வசிட்டன் இராமனின் குலகுரு; ஆரியன். வசிட்டனாகிய தன் கணவன் மீது அருந்ததி அய்யம் கொண்டாள். அஃதறிந்த வசிட்டன் அருந்ததிக்குச் சாபம் கொடுத்தான். அந்தச் சாபத்தின் விளைவே அவள் நட்சத்திரமானது. அந்த நட்சத்திரத்தைப் போன்று தலைவி இருப்பதாகப் புலவர் கூறுவது பகுத்தறிவுக்கு ஏற்றதாகுமா? மூடநம்பிக்கையைப் பாடலிலே புகுத்துவானேன்?

இந்த அருந்ததியின் கற்பைக் கெடுக்க முனைந்தவர்களுள் ஒருவன் சிவன், இவன் எவ்வாறு தமிழர்களுக்கு முழுமுதற் கடவுளாக ஆகமுடியும்? இன்னொருவன் அக்கினி. இவனையும் பகவான் என்கின்றனர். மற்றொருவன் இந்திரன். இவனைப் போன்ற காமாந்தககாரனை எங்குமே காணமுடியாது. இந்திரன், கௌதம முனியின் பத்தினி அகலிகையை அனுபவிக்கப் பலமுறை முயன்று இறுதியாக ஒருநாள் இரவு நடுச்சாமத்தில் சேவல் உருவெடுத்து -_ சேவலைப் போலக் கூவ அகலிகையின் கணவனான கௌதமன் விடிந்துவிட்டதாகக் கருதி நீராட நதிக்குச் செல்லும்படி செய்து அந்த நேரத்தில் கௌதம முனிவர் வேடத்தில் சென்று அகலிகையைக் கற்பழித்தான். இதனை அறிந்த கௌதம முனிவன் இந்திரன் உடல் முழுதும் பெண்குறிகளைப் பெறச் சாபமிட்டான். இதைத்தான் ஆயிரம் கண்களுடைய இந்திரன் என்று புராணிகர்கள் போற்றித் துதிபாடுகின்றனர். இவன்தான் தேவர்களுக்கெல்லாம் வேந்தனாம்.

இப்படிப்பட்ட ஈனர்களைப் போற்றும் ஆரியக் கதைகளை நம் தமிழ்ப் பாக்களில் ஏன் புகுத்த வேண்டும்? இவற்றைப் புகுத்தினால்தான் புகழ் பெறமுடியுமா? புலவர்கள் நல்ல பண்பாடுகளைக் கூறும்பொழுது ஆரியக் கதைகளைக் கலப்படம் செய்துள்ளனர். சங்க நூலான நந்றிணையில் கபிலர் என்னும் அந்தணப் புலவன் பாடிய பாடல்களுள் ஒன்றைக் காண்போம்.

தலைவனின் மலையைப் பற்றித் தோழி கூறுவதாக அமைந்துள்ளது அப்பாடல் (நற்றிணை 32). அந்த மலையைத் திருமாலுக்கும், மலையின் வீழருவியைப் பலராமனுக்கும் ஒப்பிடுகிறார். மலையையும் அருவியையும் ஒப்பிடுவதற்கு மாயோனும், வாலியோனும்தானா கிடைத்தார்கள்? புலவனுக்கு வேறு உவமைகளே கிடைக்கவில்லையா? அதுவும் பெரும் புலவனாகிய கபிலனுக்கு.

அப்படிப் பாடியதற்குக் காரணம் அவனுக்கு வேறு உவமை கிடைக்காததன்று; அதன் மூலம் கடவுள் கொள்கையை நிலைநிறுத்த வேண்டும் என்பதுதான். மாயோனைக் கூறி கடவுள் கொள்கையையும், வாலியோனைக் கூறி திருமாலின் அவதாரமான கண்ணன் கதையையும் நிலைபெறச் செய்வதுதான் ஆரியப் பார்ப்பனனாகிய கபிலனின் எண்ணமாக இருந்திருக்க முடியும்.

கண்ணன் அவதாரம் ஆரியக் கதை. இதைக்கூறி ஆரியக் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பரவுவதற்குக் கபிலன் வித்திட்டிருக்கின்றான். அவன் பார்ப்பனன் அல்லவா? அதனால்தான் இவ்வாறு பாடினான் என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்படிப் பல சான்றுகளைச் சொல்ல முடியும். பண்டைக்காலப் புலவர்களில் பலர் ஆரியப் பண்பாட்டில் மூழ்கியவர்கள் என்பதற்கு.

சங்ககாலத் தமிழர்கள் பலர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக வாழ்ந்திருக்கக் கூடும் என்பதைச் சங்ககாலப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன.

சங்கப் புலவர்களும் கடவுளை வணங்கியிருக்கக்கூடும். தொல்காப்பியர் காலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதாகவே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சங்ககாலத்துக்கு முற்பட்ட பாடல்களைக்கூட சங்ககாலப் பாடல்களாகவே அமைத்துக் கொண்டுதான் தொகை நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்றாலும் இப்பொழுது நமக்குக் கிடைத்திருக்கும் பாடல்கள் யாவும் நான்காயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டவை என்பதில் யாருக்கும் அய்யம் ஏற்படுவதற்கில்லை.

ஆரியர்கள் தமிழ்நாட்டுக் குள் புகுந்து அய்யாயிரம் ஆண்டுகள் ஆயின என்பதும் யாவரும் ஒப்பிய கருத்தேயாகும். ஆரியர்கள் வருவதற்கு முன்னர் தமிழர்களின் கடவுட் கொள்கை யாதாக இருந்தது எனும் ஆய்வு சரிவர நடைபெற வில்லை.

ஆரியர்கள் தமிழகம் வந்து புகுவதற்கு முன்னர் தமிழர்களுக்குக் கடவுள் சிந்தனையே இல்லை என்பது பெரியாரின் ஆய்வு முடிவாக உள்ளது. தம் குடும்பத்தில் வீர மரணம் அடைந்தவர் களைச் சிறப்பிக்கும் பொருட்டும் நினைவுகூரும் வகையிலும் கல் நட்டுப் பெருமை செய்துள்ளனர். அவர் வழி நடத்தலையே வழிபாடு என்று கொண்டிருக்க வேண்டும்.

அளவுக்கு மீறிய மழை பொழிந்து வாழிடம் வெள்ளக்காடாக மாறிய போழ்தும், மழையே பொழியாது பஞ்சம் ஏற்பட்ட போழ்தும், காடுகள் வெப்பத்தால் தீப்பற்றிக் கொண்ட போழ்தும், கொள்ளை நோய் ஏற்பட்டுப் பலர் மாண்ட போழ்தும், இவையாவும் ஏற்படக் காரணம் யாதென அறிவியல் மூலம் ஆராய்ந்து பார்க்க இயலாத நிலையிலே வாழ்ந்தவர்கள், ஆரியர்கள் கூறும் கடவுள்கள்தான் காரணமாக இருக்கக் கூடுமோ என்று எண்ணி ஆரியர்களின் கடவுள் கொள்கையை ஏற்கத் தொடங்கிவிட்டனர் என்பதுதான் பெரியாரின் கருத்து.

அக்கடவுள் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களுள் சிலர் புலவர்களாகவும் இருந்திருக்கக்கூடும். அவர்கள் இயற்றிய பாடல்களிலே அக்கடவுள்கள் பற்றிக் கூறியிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆகவே சங்கப் பாடல்களில் கடவுள்கள் பற்றிய கருத்துகள் உள்ளன என்பதாலேயே பண்டைக் காலத் தமிழர்கள் யாவரும் கடவுளை நம்பியவர்கள் என்று கருதக்கூடாது.

இயற்கையை மட்டுமே பண்டைத் தமிழர்கள் கடவுளாகக் கொண்டனர் என்று கூறி, இயற்கை என்றால் அழகு, அழகு என்றால் முருகு, அந்த முருகு உருவமாகி முருகன் என்ற கடவுள் உருவானார் என்று சில தமிழறிஞர்கள் கூறியுள்ளனர். அவ்வாறு கூறியிருப்பினும், ஆரியர்கள் முருகனை ஆறுமுகன் என்று கூறி அதற்கொரு நம்பமுடியாத ஆபாசமான கதையையும் மக்களிடையே பரப்பிவிட்டனர். அப்பனுக்கு மகன் தோன்றுவது இயற்கை. ஆனால் மகனுக்கு அப்பனைத் தோற்றுவித்தது ஆரியம். இதுவே ஆரியப் புரட்டு என்று கூறுகிறார் பெரியார்.

இத்தகைய ஆரியப் புரட்டுகள் எப்படி எப்படியெல்லாம் தமிழர்களை ஆட்டுவித்துள்ளன என்பதைப் பெரியார் ஆராய்ந்துள்ளார். ஆட்டுவிக்கத் துணை புரிந்த புலவர்களையும், அவர்கள் இயற்றிய புராண இதிகாசக் கதைகளையும், காப்பியங்களையும் குற்றவாளிக் கூண்டிலே பெரியார் ஏற்றுகிறார். இவ்வழக்கை ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டியது நமது கடமையாகும்

------------ முனைவர் இரா.மணியன் எம்.ஏ., பிஎச்.டி., பி.ஓ.எல்., பி.டி.,

(ஆய்வுக்குரிய இக்கட்டுரையாளர் சீரிய பெரியார் பற்றிய சிறந்த சிந்தனையாளர். அவரது இலக்கிய ஆய்வுப் படைப்பு இது. - ஆசிரியர்) - "உண்மை”16-13-2012

0 comments: