Search This Blog

2.2.12

காதல் திருமணங்கள் வளரட்டும் - பெரியார்


ங்குக் கழகம் சார்பில் கூட்டம் நடப்பதற்கு முன் வேறு ஒரு புதிய பணியைச் செய்யக் கருதுகிறேன். இங்கு நடைபெறும் இத்திருமணமானது காதல் திருமணம் என்று சொல்லப்படக் கூடியது ஆகும். இதை முதலில் நடத்திவிட்டுப் பிறகு கூட்டத்தை நடத்தலாம் என்றார்கள். நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன். இந்தத் தம்பதிகள் இன்று வாழ்க்கைத் துணைவர்களாக ஏற்றுக் கொள்ளும் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்திருமணம் பற்றி ஒரு சிறு விளக்கம் சொன்னால், தெளிவாக இருக்கும் என்று கருதுகிறேன். இம்மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நேரிலேயே சந்தித்து, தங்களுக்குக் காதல் ஏற்படுத்திக் கொண்டார்கள். இது, இவர்கள் இரண்டு பேர்களின் பெற்றோர்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ, எனக்குத் தெரியாது. என்னிடம் வந்தார்கள், இம்மாதிரி நாங்கள் வாழ்க்கைத் துணைவர்களாக ஏற்றுக் கொள்ள இருக்கிறோம், நடத்திக் கொடுங்கள் என்றார்கள். ஏற்றுக் கொண்டேன்.

இம் மணமக்கள் யார் என்றால், மணமகன் சனார்த்தன ம் அவர்கள் திருச்சி நகர திராவிட கழகத் தலைவர் டி.டி.வீரப்பா அவர்களுடைய மகன். இவர் பி.யு.சி. படித்திருக்கிறார். சோழிய வெள்ளாளர் வகுப்பு. மணமகள் தோழி கிருஷ்ணாபாய், கோயம்புத்தூர் மணவாள நாயுடு என்பவரின் மகள். அவர் ஒரு சர்க்கார் அதிகாரி என்று கேள்விப்பட்டேன். நாயுடு வகுப்பு மணமகள் பி.எஸ்சி. படித்திருக்கிறது. அவர்கள் கதையை இனிமேல்தான் நானும் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறேன்.

மணமகனுக்கு வயது என்ன என்று கேட்டேன். 23 முடிந்து 24ஆவது வயது நடக்கிறது என்றார். மணமகளுடைய வயது 21 முடிந்து 22 நடக்கிறது. சும்மா கூறவில்லை, பரீட்சை சர்டிஃபிகேட்டில் உள்ளபடியாகும். ஆக வயது வந்தவர்கள்தான். எப்படியோ இரண்டு பேர்களும் நேரில் சந்தித்து ஒருவருக்கொருவர் காதலராக ஆகி வந்து விட்டார்கள். இங்கே இது இரண்டு பெற்றோர்களுக்கும் தெரியாது என்று கருதுகிறேன். எனக்குக் கவலையில்லை. இவர்கள் இருவருக்கும் தெரிந்திருக்கிறார்களா என்பதுதான் எனலாம். மணமகன் வசதியான இடத்தைச் சார்ந்தவர்தான். வீரப்பா அவர்கள் எனக்கு முக்கியமாக வேண்டியவர்தான்/ அவர்கள் ஒரு சமயம் என்னைக் கேட்கக் கூடும்.

என்ன என்னைக் கூடக் கேட்காமல் இப்படிச் செய்து விட்டீர்களே என்று அதற்கு நான் என்ன செய்வது? அவர்கள் வயது வந்தவர்கள், படித்தவர்கள். அவர்களாக வந்து காதலராகி விட்டோம். திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். நடத்தித் தாருங்கள் என்றார்கள். நான் நடத்தித் தந்தேன்.

மேல்நாட்டில் எல்லாம் இப்படித்தான். மணமக்கள் இருவரும் தங்களுக்குள் பார்த்து முடித்துக் கொண்ட பிறகுதான் பெற்றோர்களுக்குத் தெரியும். மேல்நாட்டில் ஒருவனிடம், உன் பெண்ணுக்கு எப்போது அய்யா கல்யாணம் என்று கேட்டால், அதற்கு அவன் என்ன அய்யா என் பெண் திருமணம் பற்றி என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்? பெண்ணையே போய்க் கேள் என்பான். அப்படி அங்கெல்லாம் அவர்களுக்குச் சுதந்திரம் தரப்பட்டுள்ளது.

அந்நிலை இந்நாட்டிலும் வளர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். என் அண்ணார் மகன் சம்பத் கூட அப்படித்தான் அவனாகவே பெண் பார்த்து விட்டு, பிறகுதான் எங்களிடம் கூறினான். மற்றும் எங்கள் குடும்பத்தில் அநேக திருமணங்கள் இப்படி மணமக்களே பார்த்து முடித்துக் கொண்டது உண்டு.

(15.4.1962 அன்று சிதம்பரத்தில் வீ.சனார்த்தனம் - கிருஷ்ணாபாய் வாழ்க்கை ஒப்பந்தத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) விடுதலை 18.4.1962

நாம் உயரவில்லை - ஏன்?

தோழர்களே! நம் மக்கள் உயரம் கம்மியாக இருக்கக் காரணம்? ஜாதிக்குள் - உள் வகுப்புக்குள், அதுவும் சொந்தத்துக்கு, இப்படித் திருமணம் செய்து கொள்வதுதான். பல வகுப்புக்குள், பல மாகாணத்துக்குள், பல நாட்டுக்குள் திருமணம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குத் திடகாத்திரமும், அறிவு வளர்ச்சியும் ஏற்படும்.

----------------17.5.1962 அன்று மன்னார்குடி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. விடுதலை 21.5.1962.

திருமணப் பதிவு எளிமையாக்கப்பட வேண்டும்

தோழர்களே! இம்மாதிரித் திருமணங்களை எல்லாம் சிக்கன முறையில் நடத்த வேண்டும். ஊர் முழுவதும் சொல்லி, எல்லோரையும் அழைத்து, ஆடம்பரமாகச் செலவு செய்து திருமணம் செய்யக் கூடாது. இதிலும் பெரிய மாறுதல் அடையணும். இப்போது ரிஜிஸ்தார் முன்னிலையில் ரிஜிஸ்டிரார் ஆபீசுக்குச் சென்று, அங்குதான் இந்தப்படியான திருமணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று இருக்கிறது. இது கூடாது. எப்படிக் கிராமங்களில் ஜனன - மரணக் கணக்குப் பதிவு செய்ய, மணியக்காரர் - கணக்குப் பிள்ளையிடம் பதிவு செய்தால் போதும் என்ற நிலை இருக்கிறது. அப்படியே திருமணங்களையும் அவர்களிடையே பதிவு செய்தால் போதும் என்ற நிலை வரணும். அப்படித் திருமணத்தை அவரிடம் பதிவு செய்து கொண்டு உறவினர்கள், நண்பர்களுக்கு நாங்கள் இன்ன தேதியில் திருமணம் செய்து கொண்டோம் என்று கடிதம் மூலம் தெரிவித்தால் போதும். அல்லது பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து விட்டால், ஆயிரக்கணக்கானவர்களுக்கும் விஷயம் தெரிந்து போகும் என்பதாகக் கூறி முடித்தார்.

------------------25.5.1962 அன்று நச்சலூர் திருமண விழாவில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) விடுதலை 27.5.1962.

0 comments: