Search This Blog

Showing posts with label பெரியார்-தலித். Show all posts
Showing posts with label பெரியார்-தலித். Show all posts

21.5.21

தாழ்த்தப்பட்டோரும் திராவிடர் கழகமும்!

 

தாழ்த்தப்பட்டோரும் திராவிடர் கழகமும்!



தோழர்களே, இன்று யான் கூறப்போகும் கருத்துகள் சில பேருக்குப் பிடிக்காமலிருக்கும். எனினும் தாழ்த்தப்பட்டோர் பெரும்பான்மையோராகக் கூடியிருக்கும் இக்கூட்டத்தில் அம்மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே இன்று பேச ஆசைப்படுகிறேன்.

 

இன்று நம் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்துவரும் இழிநிலையை ஒழித்து, மற்ற சமுதாயம் போன்று வாழ வேண்டுமானால், அம்மக்களின் பேரால் உள்ள பெடரேஷன் தீவிர கொள்கையுடையதாயிருத்தல் வேண்டும். எக்காரணத்தாலோ அவ்வாறில்லை. அதைப்பற்றி யான் குறைவாகவோ வேறு விதமாகவோ பேச இஷ்டப்படவில்லையென்றாலும், திராவிட நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் இழிவுப் பட்டமும், தொல்லைகளும் தீர்க்கப்பட வேண்டுமானால் திராவிட இயக்கத்தினால் தான் முடியுமேயன்றி வேறில்லை ஏன்? திராவிடர் கழகம் என்ற ஒன்றுதான் இந்நாட்டில் பார்ப்பான் என்ற ஒரு சுயநல ஏமாற்றுக் கூட்டமும் பறையன் என்ற பேரால் உழைத்து உழைத்து எலும்புக்கூடு போன்ற தோற்றத்துடன் ஒரு பெருங்கூட்டமும் இருக்கக்கூடாதென்று திட்டம் வகுத்து நடைமுறையில் உருவான போராட்டமும் நடத்தி வருகிறது. இப்படிக் கூறுவதால் என் நண்பர் டாக்டர் அம்பேத்கர் அவர்களால் உங்களுக்கு பலன் ஒன்றும் கிடைக்காது என்று கருதுவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். உங்களுக்கு அவரால் அல்லது அவரது பெடரேஷனின் தொண்டினால் ஒரு சிலருக்குப் பதவி, உத்தியோகம் கிடைக்கலாம். ஆனால், பஞ்சமன், பறையன் என்று சட்டத்திலிருப்பதை ஒழிக்க முடியாது. அந்த இழிநிலை ஒழித்து உங்களை மனிதத் தன்மையடையச் செய்யப்போவது திராவிடர் கழகம் ஒன்றுதான் என்பதை வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி எச்சரிக்கை கூறுகிறேன்.

 

என் நண்பர் ஓமத்தூரார் கூடத்தான் இன்று முதன் மந்திரி, தோழர் பக்தவச்சலம், சுப்பராயன், கோபால் ரெட்டியாரும் தான் மந்திரிகள். தோழர் சிவஷண்முகம் சட்டசபைத் தலைவர். முனுசாமிப்பிள்ளை மாஜி மந்திரி, தோழர் சிவராஜ் மேயராகவும் இருந்தார்; மத்திய சட்டசபை மெம்பருங்கூட ஆனால், இவ்வளவிருந்தும் இன்றைய இந்துலா சட்டப்படி இவர்கள் அனைவரும் பஞ்சமரும் சூத்திரருந்தானே? அதில் ஏதாவது மாற்றமடைந்ததா? எனவே, நமது திராவிட இனத்துக்கு இன்று வேண்டுவது பதவியல்ல; பார்ப்பனியத்தால் பாதாளத்தில் அழுத்தப்பட்டுள்ள நம் இனத்திற்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்க வேண்டிய புரட்சியை நாம் செய்ய வேண்டும். அவ்வித புரட்சிக் கொள்ளையைத்தான் இன்று திராவிடர் கழகம் மேற்கொண்டு தற்போதுள்ள வசதிக்கேற்ற அளவு பணிபுரிந்து வருகிறது.

 

எனதருமை தாழ்த்தப்பட்ட மக்களே, இன்று நீங்கள் முஸ்லீம்களை விட முன்னணியிலிருக்க வேண்டியவர்கள். முஸ்லிம்களுக்கு இனஉணர்ச்சி என்ற முறுக்கையேற்றியது எது? தனித் தொகுதி என்ற தத்துவமே. உங்களுக்கும் அவ்வாறே அளிக்கப்பட்டதை காந்தியாரின், காங்கிரசின், பார்ப்பனியத்தின் சூழ்ச்சிக்கும், மிரட்டலுக்கும், தயவுக்கும் டாக்டர் அம்பேத்கரிலிருந்து காலஞ்சென்ற என் நண்பர் எம்.சி. ராஜா வரையில் ஏமாந்து போனார்கள். இதனால் உங்களின் முன்னேற்றத்திற்குக் கிடைத்த நல்ல அரசியல் வாய்ப்பைத் தற்கொலை செய்து கொண்டதாயிற்றே தவிர வேறில்லை. தனித் தொகுதியிருப்பதால் தான் முஸ்லிம்களின் உண்மைப் பிரதிநிதிகள் இன்று சட்டசபையிலிருந்து அவர்களின் இனத்துக்காக பாடுபடுகிறார்கள். ஆனால், கூட்டுத் தொகுதியால் பிரதிநிதிகள் முதல் தேர்தலில் பெருவாரியான ஓட்டுப் பெற்றும் இரண்டாவது தேர்தலில் காங்கிரசுக்கு கையாள்களாக இருக்கும், சமய சஞ்சீவிகளாக இருந்து வருபவர்கள் வெற்றி பெற நேர்ந்தது. இதை நான் கூறத் தேவையில்லை இன்று சட்டசபையிலுள்ள தாழ்த்தப்பட்ட மேம்பர்கள் காங்கிரசின் கைப்பாவைகளாகத்தானே இருந்து வருகிறார்கள்? இது மட்டுமல்ல; அப்படித்தானே இருக்க முடியும், காங்கிரஸ் தயவில் செல்பவர்கள்? எனவே, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இன்று அவசரமாக வேண்டுவது வயது வந்தோர் அனைவருக்கும் ஓட்டுரிமையும், தனித் தொகுதியுமேயாகும்.


  தாழ்த்தப்பட்ட தோழர்களில் சிலரும், அவர்களின் தலைவரும் திராவிடர் இயக்கத்தைப் பற்றி மறைமுகமாக தவறான பிரசாரம் செய்து வருவதைப்பற்றி அடிக்கடி என்னிடம் அந்த மக்களாலேயே புகார் செய்யப்பட்டு வந்தது. நான் அதைப்பற்றி இதுவரை கவலைப்பட்டதில்லை. இனியும் கூறுகிறேன். தனிப்பட்ட இப்பேர்ப்பட்டவர்களைப் பற்றி நாம் கருத்தில் கூட நினைக்கக் கூடாது. 


ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைக்க வேண்டுகிறேன்.

 

இந் நாட்டைப் பொறுத்தவரை தீண்டப்படாத மக்களின் உரிமைக்காக கடந்த 30- ஆண்டுகளாகவும் இன்றும் போராடி சில காரியங்களில் வெற்றி பெற்றுமிருப்பது சுயமரியாதை இயக்கமும், ஜஸ்டிஸ் கட்சியும், அதாவது இன்று திராவிடர் கழகம் என்ற பேரால் உங்களின் - ஏழைகளின் கட்சியாக விளங்கும் திராவிடர் இயக்கமுமே என்பதை மறப்பவனோ அன்றி மறுப்பவனோ இருப்பானாகில் அவன் மனிதத் தன்மையற்றவன் என்றே கூறுவேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கே பெரிதும் உழைக்கும் திராவிடர் இயக்கத்தைப் பற்றி குழி தோண்டுவதையே அம்மக்களில் ஒரு சிலரின் போக்காக இருந்து வருகிறது. அவர்களின் உட்கருத்தையும் யான் அறிவேன். ஆனால், திராவிடர் கழகம் அதற்கு இடம் கொடுத்து ஏமாந்து விடுமென்று எதிர்பார்ப்பது வீணேயாகும்.

 

கடைசியாக ஒன்று கூற ஆசைப்படுகிறேன். தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் யான் யாரையும் சேர வேண்டாமென்று கூறவில்லை. அதில் நம்பிக்கையுடையவர்கள் அதில் சேர்ந்து திராவிடர் கழகத்தினால் ஏற்படும் நன்மைகளையும்கூட பெற்றுக் கொள்ளட்டும். ஆனால், திராவிடர் கழகத்தில் சேர்ந்துள்ள சேர ஆசைப்படும் தாழ்த்தப்பட்ட தோழர்கள் திராவிடர் கழகக் கொள்கைக்கு ஏற்பவே நடக்க வேண்டும். கருப்புச் சட்டை அணிய வேண்டும். திராவிடர் கழக வெற்றி தாழ்த்தப்பட்டோரின் முக்கிய வெற்றி என்பதை மறக்கக் கூடாது.

 

தவிர, நாட்டுப் பிரிவினையொன்றே நம் இனத்தாருக்கும், நாட்டாருக்கும் நன்மை பயக்கும் என்று மற்றும் இந்துமதத்தின் பேரால் நடக்கும் கொடுமைகளையும், இன்றைய ஆட்சியினரின் போக்கையும் விளக்கிப் பேசினார். தோழர் டி.பி. பழனியாண்டி நன்றிகூற கூட்டம் இரவு 9.30- மணிக்கு முடிவுற்றது.

 

                   ------------------------------- 20.05.1947-இல் தூசூரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. ”குடிஅரசு”, 21.05.1947

30.10.15

பஞ்சமர்களின் பரிதாப நிலை

பஞ்சமர்களின் பரிதாப நிலை

பரிதாபத்துக்குரிய பஞ்சமர்களின் வாழ்வின் சர்வ பாகத்தில்தான் கல் நெஞ்சம் படைத்த மிராசுதார்கள் மகத்தான கொடுமைகள் செய்கிறார்களென்றதில்லை. இன்னும் அவர்கள் ஒத்து வாழாதபடி பல சூழ்ச்சிகளையும் செய்திருக்கிறார்கள். பறை பதினெட்டு ஜாதி என்ற ஒரு கற்பனையை செய்து அவர்களிடம் ஒற்றுமை நிலவா வண்ணம் செய்திருக்கும் குழ்ச்சி மிக மிக பரிதாபகரமானதாகும்.


பரிதாபமே உருவாயமைக்க இந்தக் கூட்டத்துக்கும் இந்த பல ஜாதி கற்பனை அவர்களின் மனதை இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிறது. எப்படி தாங்கள் மிராசுதார் கூட்டத்துக்கே உழைத்துப்போட ஜென்ம மெடுத்திருப்பதாக கருதுகிறார் களோ அதேபோல்  தாங்கள் பல ஜாதிகள்தான் என்ற உணர்ச்சியையும் நியாயமாகவே கொண்டிருக்கிறார்கள்.

பஞ்சமன், பறையன், பள்ளன், வெட்டியான், கோலியன், தச்ச வரத்தான், அச்சு வேளாளன், தீயன், வள்ளுவன் போன்ற பெயர்களையுடைய ஜாதிகள் இந்த கற்பனையின் பாற்பட்டது தான். இக்கூட்டத்துக்கு கடவுள் வழிவந்ததாக சொல்லும் சில மகான்களால் அதாவது தோழர் காந்தி போன்ற மகான்களால் திருக்குலத்தான் என்றும் ஹரிஜனன் இருவிதமான ஜாதிகளை சமீபகாலத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஜாதி வேற்றுமையை கொடுத்திருப்பதற்கு மூலகாரணம் அக்கூட்டத்தின் ஒற்றுமையை பங்கப்படுத்துவ தோடு பிரஸ்தாப வேற்றுமையை பலப்படுத்தி மிராசு தாரன் உடல் நலுங்காமல் உட்கார்ந்து சாப்பிடவும், கொடுமைகளை செய்யவும், ஒரு பெரிய சவுகரியமாய் இருக்கிறது.

இந்த ஜாதிப் பிரிவினைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு மிராசுதாரர்கள் தங்கள் காரியத்தை சாதித்து கொள்வது, உடல் நோகாமல் உட்கார்ந்து தின்பது போன்ற வைகளை அபிவிருத்தி செய்து கொள்வது வெகு விந்தை யானது. ஒரு குறிப்பிட்ட மிராசுதாரனுக்கு சில பஞ்சமர்கள் அடிமை வேலை செய்வதாக வைத்துக் கொள்வோம்.

இவர்கள் அடிமை வேலையில் ஏதாவது தவறுதல் செய்து விட்டாலோ அல்லது தவறுதல் செய்து விட்டதாக மிராசுதார் உணர்ச்சியில் கருதி விட்டாரோ அதற்கு செய்யும் பல தண்டனைகளில் ஜாதியைக் காட்டி கண்ட படி திட்டுவது, கீழ் ஜாதிக்காரனை விட்டு மான பங்கப்படுத்தச் சொல்வது போன்ற கொடுமைகளும் ஒன்றாகும்.

ஒரு பறையன் செய்த குற்றத்திற்கு பறையனை விட கீழ் ஜாதியாக கருதும் வெட்டியானைக் கொண்டு வைவது, அதாவது வெட்டியாரப் பயலை விட்டு உதைக்கக் சொல், வெட்டியாரப்பயலை விட்டு மயிரை அறுக்கச் சொல், வெட்டியாரப் பயலை விட்டு கட்டி வைத்து உதைக்கச்சொல்,
என்பது போன்ற மிக இழிவான வார்த்தைகள் பேசி திட்டுகிறர்கள், ஜாதி பேத உணர்ச்சி மிகுந்த பஞ்சமர்களுக்கு, கீழ் ஜாதிக்கார வெட்டியானை காட்டி ஆண்டைமார்கள் பேசிவிட்டார்களே என்று மனதை ரொம்பவும் புண்படுத்திவரும்.
செய்கையில் நடந்துதுவிட்டால் மனம் நொந்துவிடும். கீழ்ஜாதியாக கருதிக்கொண்டிருக்கும் வெட்டியான்களுக்கு மேல் ஜாதிக்காரர்களை கேவலப்படுத்துவதற்கு தங்களை ஏவிய பெருமை கிடைத்ததற்கு ஆண்டைமார்களால் கிடைத்ததென்ற பெருமைக்காக ஆண்டைமார்களை போற்றுவார்கள்.
இப்படியே பறை பதினெட்டு ஜாதியிலும் நிகழுவதாகும். சோத்துக்கு தாளம் போடும் இக்கூட்டத்துக்கிருக்கும் ஜாதிப் புத்தியை பாருங்கள். இந்த மனப்பான்மையை மிராசுதார்கள் பலப்படுத்திய ஒரு பாவமே அக்கூட்டத்தின் அடிமைச்சங்கிலி என்றும் அறுபடாமலிருந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பொல்லாத ஜாதிபாகுபாட்டால் இன்னும் சில அபாயங்கள் அவர்களுக்கிருந்து கொண்டிருக்கிறது.
இக்கூட்டத்தினரை என்றும் மீளாப்படுகுழியிலாழ்த்தும்படியான புரோகிதக் கோட்பாடுகளும் தாண்டவமாடுகின்றன.
இவர்களுக்குள்ளேயே வள்ளுவர் என்ற கூட்டத்தார் மிக உயர்ந்தவர் களாகவும், குருக்கள்களாகவும் கருதிக்கொண் டிருக்கிறார்கள் இக்கூட்டத்தார் ஜோசியம், ஆரோடம், கைரேகை, புரோகிதம், முதலான தொழில்களையே பெரும்பாலும் கொண்டவர்கள். வள்ளுவக்கூட்டத்தார்.
குறளின் ஆசிரியரான திருவள்ளுவர் மரபின் வழிவந்ததாக சொல்லி கொள்கிறார்கள் என்றாலும், உயர் ஜாதியினர்கள் இக்கூட்டத்தாரையும் தீண்டத்தகாதவர்களாவே கருதிக் கொண்டிருக்கிறர்கள். தங்களை உயர் ஜாதியார் சர்வ துறையிலும் கேவலப்படுத்துகிறார்களே என்ற மான வெட்கமில்லாமல் பஞ்சம சகோதரர்களை.
இந்த ஜாதிமான்கள் (வள்ளுவர்கள்) எல்லாத்துறையிலும் விலக்கிக் கொண்டிருப்பது வெகுவிந்தையானது.
பரிதாபத்துக்குரிய பஞ்சம சகோதரர்களுக்கு இவ்வள்ளுவக் கூட்டத்தார் மோட்ச கை காட்டி மரங்களாம்! எப்படி உயர் ஜாதி இந்துக்களுக்கு பிராமணோத்தமர்கள் மோட்ச கை காட்டிகளோ அதே போல் வள்ளுவர்கள் பறை பதினெட்டு ஜாதிக்கும் மோட்ச கை காட்டிகளாகும்.
பறை பதினெட்டு ஜாதியின் நன்மை தீமைகளுக்கு பிராய சித்த பிம்பங்கள் வள்ளுவர்கள். இந்த வள்ளுவர்கள் கூட்டத்தாரை உயர்வாகக் கருதிக்கொண்டிருக்கும் அடிமை ஜாதியார்கள் தங்களுக்குக் கிடைக்கும் மிக குறைந்த வருவாயிலும் ஒரு பகுதியை வருஷ வர்த்தனை என்ற பெயரால் பொதுவாகவும்,
அவ்வப்போது ஏற்படும் அதாவது புரோகித கற்பனையால் ஏற்பட்டிருக்கும் சில்லரை சடங்குகளின் பெயரால் சில்லறையாகவும் கொடுத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
அது ஒரு பக்கமிருக்கட்டும். அப்பித்து பலப்பட்டி ருப்பதால் சில காலத்துக்கு கிடைக்கும் கொஞ்ச வருமானத்தையும் கொடுத்து விட்டு பட்டினி கிடக்கும் காட்சி மிக பரிதாபகரமானதாய் இருக்கிறது.
ஆகவே பஞ்சமர்களுக்குள்ளும் ஜாதிப்பிரிவினயை அனுஷ்டிப்பது மிராசுதார்கள் குதிரை ஏறவும், வள்ளுவ புரோகிதர்கள் இவர்களை மென்மேலும் பைத்தியக்காரர் களாக்கவும் காட்டு மிராண்டிகளாக்கவும் ஓர் பெரிய வசதியாய் இருக்கிறது.
அதோடும் இந்த பெரும் கற்பனைகளை பரிதாப ஜாதிக்கு புகட்டிய உயர் ஜாதியாருடைய அடிப்படையான நோக்கமெல்லாம் தங்கள் பெண்டாட்டி பிள்ளைகள் பல்லாண்டு பல்லாண்டு ஷேமமாய் இருந்த விடத்திலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கவும் முன் ஜாக்கிரதையாக செய்யப்பட்ட சூழ்ச்சி என்பதை பரிதாப கூட்டத்தார் பூரணமாக உணரவேண்டும். பரிதாப ஜாதியாரின் மாறுதலுக்கு பாடுபடுபவர்கள் இக்கொடுமைகளையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.
                        --------------------------------------------------(புரட்சி 1934)

29.3.15

தலித் விடுதலை முன்னோடி பெரியார் - பாண்டேவிற்கு பதிலடி- 2




இதுதான் யானை என்று உருவகப்படுத்திக் கொண்ட விழி இழந்த அய்வர் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது.பகுத்தறிவு ஒளி மூலம் நமது விழிகளைத் திறந்த சமுதாய மருத்துவராம் தந்தைபெரியாரைப் பற்றி அந்த விழி இழந்தோர் உருவகப்படுத்தியதை விடவும் அதிகமான அளவில் பொய்யும், புனைவுமாக பல உருவகங்களை உலவவிட்டுள்ளனர் பார்ப்பனர்களும் ,பார்ப்பன அடிவருடிகளும்.

எடுத்துக்காட்டாக பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு வீட்டில் பிள்ளையாரை வணங்கினார், வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தார்,பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபடவில்லை,அவர்களை இழிவாகப் பேசினார் என்பது போன்ற பல அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றார்கள். இந்த அவதூறுகள் பெரியார் உயிரோடு இருந்த போதிலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. இந்த அவதூறுகளுக்கெல்லாம் பெரியாராலும், பெரியார் தொண்டர்களாலும் மற்றும் நேர்மையான வரலாற்று ஆய்வாளர்களாலும் தகுந்த ஆதாரங்களுடன் பதில் அளிக்கப்பட்டே வந்துள்ளது.

இருந்தாலும் திரும்பத் திரும்ப அதே அவதூறுகளை இப்போதும் சொல்லிவருகிறார்கள். அந்த வகையில் http://www.tamilhindu.com தளத்தில் பெரியாரின் மறுபக்கம் என்ற பெயரில் ஏற்கனவே புத்தகமாக வந்ததை பதிவு செய்து வருகின்றனர். அந்த தளத்தில் வரும் செய்திகளையொட்டி நாம் மறுமொழி அளித்தால் பதிவு செய்யப்படுவதில்லை. அதோடு நாம் பதில் அளிக்கவில்லை. நழுவி விடுகிறோம் என்ற மாய்மாலப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விடுகின்றனர். இவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கெல்லாம் நாம் ஏற்கனவே நாம் http://thamizhoviya.blogspot.com “தமிழ் ஓவியா” வலைப்பூவில் பதில் அளித்துள்ளோம். குறிப்பாக பெரியார், பெரியார்-தலித், அய்யத்தெளிவு என்ற சுட்டியை சுட்டிப் படித்தால் உண்மையை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பணிப்பளு மற்றும் குடும்பச் சுமை காரணமாக இந்தப் பார்ப்பனக்கும்பலுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க கால தாமதமாகிறது. அதோடு ஏற்கனவே இது குறித்து பதில் அளித்து விரிவான நூல்கள் வந்து விட்ட நிலையில் திரும்பத் திரும்ப எழுத வேண்டுமா? என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

அந்த வகையில் 2004 அம் ஆண்டு “உலகத் தமிழர் சக்தி” ஜூன் 2004 இதழில் “தலித் தலைமை –பெரியாரின் நிலை என்னவாக இருந்தது?” என்ற தலைப்பில் டாக்டர் வேலு அண்ணாமலை அவர்கள்,எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக நான் எழுதிய கட்டுரையை இங்கு தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறேன்.

சமூகப் பொறுப்பில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று கூறியதோடு இந்த கட்டுரையை தட்டச்சு செய்து கொடுத்த எனது இனிய தோழர் “ஆதிஆனந்த்அப்பா” அவர்களின் உதவிக்கு மிக்க நன்றி
****************************************************************************



தலித் விடுதலை முன்னோடி – பெரியார்  என்ற தலைப்பில் 9 பகுதிகளாக 2009 ஆம் ஆண்டே  தற்போது தந்திதொலைக்காட்சியில் பாண்டே  எழுப்பிய அத்துணை கேள்விகளுக்கும் பதில் நம்மாலும்  மற்ற அறிஞர்களாலும் அதற்கு மேலாக பெரியாராலும் பதில் அளிக்கப்பட்டுளதை பதிவு செய்துள்ளோம். இதையெல்லாம் எதையும் பொருட்படுத்தாமல் திட்டமிட்டே மீண்டும் மீண்டும் பாண்டே போன்ற பார்ப்பன சக்திகளால் புதிய குற்றச்சாட்டுக்கள் போல் சுமத்தி வருகின்றனர். இதையெல்லாம் தோலுரித்துக் காட்டவே 2009 ஆம் ஆண்டு பதிவு செய்த கட்டுரைகளை தொகுத்து தந்துள்ளோம். இன்றைய சூழலில் மீண்டும் ஒரு முறை படியுங்கள்!சிந்தியுங்கள்!!

அதற்கான சுட்டி இதோ:-


http://thamizhoviya.blogspot.in/2009/09/blog-post_19.html


http://thamizhoviya.blogspot.in/2009/10/3.html




http://thamizhoviya.blogspot.in/2010/01/7_18.html

http://thamizhoviya.blogspot.in/2010/01/8_20.html

http://thamizhoviya.blogspot.in/2010/01/9_21.html

---------------------------------------------------------------------------------------------

இது போல் இன்னும் ஏராளமான செய்திகள்,தொடர்கட்டுரைகள் தமிழ் ஓவியா வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. படியுங்கள்!!

6.9.14

ஜாதிக்கொடுமை,உயர்வு தாழ்வு ஒழிய - பெரியார்

இருகூர் திராவிட முன்னேற்ற சங்கம் முதலாவதாண்டு விழா

ஜாதிக்கொடுமை, உயர்வு தாழ்வு ஒழிய,

கடவுள் நம்பிக்கையையும், மத நம்பிக்கையையும்,

வினை, விதி நம்பிக்கையையும் அடியோடு ஒழிக்க வேண்டும்.

சகோதரர்களே! சகோதரிகளே!!


உங்கள் சங்க ஆண்டு விழாவில், சங்க சம்மந்தமாகவும் மற்றும் உங்கள் முன்னேற்ற விஷயமாகவும் பெரியோர்களான ராவ்சாகிப் ராமச் சந்திரம் செட்டியார், சின்னப்பாவு, சுப்பையா ஆகியவர்கள் பேசியது கேட்டி ருந்தீர்கள். உங்களது குறைகளை யெல்லாம் எடுத்துக்காட்டினார்கள். உங்களைத் தெருவில் நடக்கவிடாததைப் பற்றியும், உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவிடாமல் தடுத்து கலகம் செய்ததைப்பற்றியும், உங்கள் பிள்ளைகள் படிப்பதனால் இந்த ஊர் உயர்ந்த ஜாதியார்கள் என்பவர் கள் தங்கள் பிள்ளைகளை நிறுத்திக் கொண்டதைப் பற்றியும், மற்றும் ராமநாத புரம் ஜில்லாவில் ஆதிதிராவிட சமூகத்தை மற்ற சமூகத்தார் செய்யும் கொடுமைகளைப்பற்றியும் இங்கு பேசியவர்கள் எடுத்துச் சொன்னதை கேள்க்க எனக்கு மிக மிக ஆத்திரமாய் இருக்கின்றது. ஆனால் இதற்கு யார் ஜவாப்புதாரிகள் என்பதைப்பற்றி யோசித்துப் பார்க்கையில் உங்களை இக் கொடுமை செய்பவர்கள் ஜவாப்தாரியல்ல வென்றும் நீங்களும் இக் கொடுமை அனுபவத்தில் உங்கள் சமூகத்தை உத்தேசித்து பரிதாபப்பட நியாயமில்லை என்றும் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் தங்களது நம்பிக்கை யின் பேரில் தங்களது பழக்க வழக்கங்களின் பேரில் தங்களது மத உணர்ச்சி, மத ஆதாரம் ஆகியவைகளில் உள்ள பற்றுதலின் பேரில் அவர்கள் நம்பும் - வணங்கும் கடவுளின் கட்டளை, செய்கை என்ற உறுதியின் பேரில் தங்கள் முன் ஜென்மத்தின் கர்மம் - பூர்வ புண்ணியம் - தலைவிதி என்கின்ற சுதந்திரத் தின் பேரில் ஒரு உரிமைப்பாராட்டி அம்மாதிரி செய்கின்றார்களே ஒழிய வேறில்லை. அதுபோலவே நீங்களும் பிறர் உங்களை நடத்துகின்ற அந்த மாதிரியான கொடுமைகளை நினைத்து மாத்திரம், அதுவும் அந்த சமயத்தில் மாத்திரம் சிறிது அக்கிரமமாகவும் கொடுமையாகவும் இருப்பதாக கருது கின்றீர்களே ஒழிய இதற்கு காரணமென்ன? இப்படிப்பட்ட ஒரு கொடுமை யானதும், அக்கிரமமானதுமான காரியம் ஏன் நடக்கின்றது? என்கிற விஷயத்திலும் இதை எப்படி அடியோடு ஒழிப்பது? இதற்காக என்ன செய்ய வேண்டியது? என்கின்ற விஷயங்களை நீங்கள் நினைப்பதுமில்லை. அப்படிப்பட்டவைகளை வேறு யாராவது எடுத்துச் சொன்னாலும் அவை களை ஒப்புக்கொண்டு நடவடிக்கையில் நடப்பதற்கு துணிவதுமில்லை. வீணாய் இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சமயங்களில் உங்களில் தனிப்பட்ட வர்களுக்கு ஏதாவது சங்கடம் வந்த காலத்தில் மாத்திரம், இரண்டொரு வார்த்தைகளால் அதுவும் இதன் அஸ்திவாரத்தை கவனியாமல் தனிப்பட்ட நபர் மீதோ வகுப்பார் மீதோ குற்றம் சொல்லி கூப்பாடு போடுவதும் பிறகு நாலுநாள் கடந்து விட்டால் அது மறைந்து போய் பழையபடி ஆய்விடுவதும் வழக்கமாக இருந்து வருகின்றது. பொதுவாழ்க்கையில் உள்ள சில கனவான் களும் உங்களுக்குப் பரிந்து பேசுவதுபோல் வக்காலத்து பேசுவதுபோல் சில வார்த்தைகளைப் பேசிவிட்டு பிறகு அவரவர்கள் சொந்தவேலையை அவரவர்கள் பார்ப்பதும், பிறகு என்றும் போல் சாதாரணமாயிருப்பதும் வழக்கமாக இருக்கின்றது. 

என்னுடைய சுமார் 20, 30 வருஷ­ பொது வாழ்க்கைத் தொண்டில் இந்த சம்பவங்கள் அநேகம் எனக்கு அனுபவ முண்டு. உங்களிடத்தில் ரொம்பவும் அனுதாபமிருப்பது போல் பேசி கண் களில் கண்ணீர் வடித்துவிட்டுப்போவார்கள். பிறகு அவர்கள் வீட்டிற்குப் போனவுடன் பழைய உணர்ச்சிதான் அவர்களிடம் தாண்டவமாடும். இதற்கு உதாரணம் வெளியில் போய்த் தேடவேண்டியதில்லை உங்களிடத்திலேயே இருப்பதை ஞாபகப்படுத்திப் பார்ப்பீர்களானால் விளங்கும். அதாவது உங்களில் பலர் உங்களை விட உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் அய்யர், கவுண்டர், நாயுடு முதலிய ஜாதியார் உங்களைத் தாழ்மையாகக் கருது வதை மாத்திரம் நினைத்து வருத்தப்படுகின்றீர்களே யல்லாமல் பறையர் சக்கிலியர்கள் என்பவர்களை நீங்கள் உங்களிலும் தாழ்ந்த ஜாதியாகக் கருதி அவர்களை உங்களுக்குச் சமமாக நினைத்து சுதந்திரங்கள் கொடுக்க மறுக் கின்றீர்கள். இதற்கு எல்லாம் காரணம் உங்கள் மத உணர்ச்சியும், உங்கள் கடவுள் உணர்ச்சியும், உங்கள் விதி உணர்ச்சியுமேயாகும். மத சம்பிரதாயப்படி நீங்கள் சக்கிலியரை பறையர்களை விட உயர்ந்த ஜாதியாராகவும் கடவுள் அந்தப்படி உங்களைப் படைப்பித்ததாகவும் அதற்குக் காரணம் உங்களு டைய பூர்வஜன்ம கர்மத்தின் விதி யென்றும் கருதுகிறீர்கள். உங்களைத் தாழ்ந்த ஜாதியாய் கருதியிருப்பவர் களும் அப்படியேதான் மத ஆதாரத் தாலும் கடவுள் செயலாலும் பூர்வ ஜன்மாந்தர கர்ம விதியாலும் அப்படிப் பிறந்ததாகக் கருதியிருக்கின்றார்கள்.


 இந்த மாதிரியான மதம் கடவுள் ஜென் மாந்திர விதி ஆகிய மூன்றையும் நம்பியிருக்கின்றவன் இம்மூன்றையும் பாதுகாக்க விரும்புகின்றவன் எப்படி மற்ற மக்களை சமமாகக் கருதக்கூடும்? பணக்காரனும் தான் பணக்காரனா யிருப்பதற்கு இதே காரணம்தான் கருதிக் கொண்டிருக்கிறான். திருடனும் தான் திருடனாய் இருப்பதற்கும், அயோக்கி யனும் தான் அயோக்கியனாய் இருப்பதற்கும், அரசனும் தான் அரசனா யிருப்பதற்கும், கூலியும் தான் கூலியாயிருப்பதற்கும், ஏழையும் தான் ஏழை யாயிருப்பதற்கும், கொடுங்கோல் ஆட்சியில் கஷ்டப்படும் குடிகளும் (பிரஜையும்)தாங்கள் கஷ்டப்படுவதற்கும் மத சம்பிரதாயத்தையும் கடவுள் சித்தத்தையும் பூர்வ ஜன்ம கர்மவிதியையும் காரணமாய் கருதி தங்கள் நிலையில் திருப்தி கொண்டு இருக்கின்றார்கள். இந்த மாதிரி மக்களை உடைய தேசத்தில் எந்த மாதிரியான முன்னேற்றத்தைக் காணக்கூடும்? இந்த தேசத்தை மனிதத் தன்மையுடைய தேசமாகவும், மானமுள்ள தேசமாகவும், சுவாதீனமும் சமத்துவமுமுள்ள தேசமாகவும், ஆகச் செய்யவேண்டுமானால் மேல்கண்ட மூன்றும் அதாவது மதம், கடவுள், விதி ஆகிய மூன்றும் அடியோடு ஒழிக்கப் பட்டாக வேண்டும். அந்தப்படி யில்லாதபட்சம் வெறும் பேச்சுதான் நடை பெறுமே யொழிய காரியத்தில் ஒரு சிறிதும் பயனடைய முடியாது என்று நான் உறுதியாய்ச் சொல்லுவேன்.

சகோதரர்களே! உங்கள் இழிவு அதாவது தாழ்ந்த ஜாதித்தன்மை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. வேதகாலத்தில் இருந்திருக்கின்றது. அரிச் சந்திரன் காலத்தில் இருந்திருக்கின்றது. ராமன் காலத்தில் இருந்திருக் கின்றது. எல்லா ஆழ்வார், நாயன்மார் காலத்திலும் இருந்திருக்கின்றது. அதற்குமேல் இனி எப்போது இருந்திருக்க வேண்டும் என்று சொல்ல ஆசைப் படுகின்றீர்கள்?

மனிதனுக்கு கடவுள் உணர்ச்சி தோன்றிய காலந்தொட்டே இந்த நாட்டில் மேல் கீழ் ஜாதி உணர்ச்சி தோன்றிவிட்டது. கடவுள் பேராலேயே மேல் ஜாதி கீழ் ஜாதி உணர்ச்சிகளை காட்டப்பட்டிருக்கின்றன. இந்துமதம் என்பதில் வைணவத்திலாவது சைவத்திலாவது ஜாதிப்பிரிவு உயர்வு தாழ்வு தத்துவம் காணப்படாத கடவுள்களோ அவதாரங்களோ, திருவிளையாடல் களோ, கடவுளைக் காட்டிய பெரியார்களோ, புராணங்களோ, இதிகாசங்களோ ஏதாவது ஒன்றைக்காட்ட முடியுமா? என்று கேட்கின்றேன். 64 நாயன்மார் களுக்கும், 64 ஜாதிக்காரர்களாய் பிறந்திருக்கிறார்கள். 12 ஆள்வார்களும் 12 ஜாதிக்காரர்களாய் பிறந்திருக்கிறார்கள். இந்து மதத்திற்கு ஆதாரமான - சட்டமான மனுதர்ம சாஸ்திரம் முதலியவைகளை எடுத்துக்கொண்டால், அவைகளில் அளவில்லாத ஜாதியும் அதற்கு தாரதம்மியமும் காணப் படுவதை யாரும் மறுக்கமுடியாது. ஆகவே எந்த நிலையில் எந்த ஆதாரத் தைக் கொண்டு இன்று உங்கள் மத நம்பிக்கைக்காரனும், அதைச்சேர்ந்த கடவுள் நம்பிக்கைக்காரனும், அது சம்பந்தமான வேதம் சாஸ்திரம், புராணம், இதிகாச நம்பிக்கைக்காரனும் உங்களிடம் வந்து ஜாதி பாகுபாடும், ஜாதி வித்தியாசமும் இல்லை என்று சொல்ல முடியும்? என்று கேட்கிறேன்.

இந்து மத சம்பிரதாயப்படி ஜாதி இல்லை என்று உங்களிடம் யார் சொல்ல வந்தாலும் அவர்களை மூடர்கள் என்றோ மோசக்காரர்கள் என்றோதான் கருத வேண்டும். மற்றும் சிலர் தொழில் பாகுபாட்டைக் கண்டு ஜாதி வகுக்கப்பட்டதே ஒழிய பிறவியைக் கொண்டு பிரிக்கப்பட வில்லை. ஆதலால் தொழில் பிரிவு இருக்கத்தான் வேண்டும் என்று சொல்லி “கீதை யில் பகவான் சொல்லுகின்றார்” என்று உங்களை ஏய்க்கக்கூடும். அவர் களும் அதுபோலவே அறியாதவர்களாகவோ, ஏய்க்க வந்தவர்களாகவோ தான் இருக்க வேண்டும். தொழிலுக்காக வந்தாலும் ஏன் பாகுபாடு இருக்க வேண்டும் என்றுதான் கேட்கின்றேன். ஒரு மனிதன் காலையில் தச்சனாகவும், மத்தியானம் வியாபாரியாகவும், இராத்திரியில் உபாத்தியராக வும், ஒருவனை ஒருவன் இம்சைப்படுத்துகின்ற காலத்தில் அவனை உபத்திரவத்தில் இருந்து மீட்பவனாகவும் ஏன் இருக்கக்கூடாது என்று கேட்கிறேன். மறுநாள் காலையில் உழுகின்றவனாகவும், பகலில் நெய்கின்ற வனாகவும், மாலையில் விற்கின்றவனாகவும், இரவில் காவல்காரனாகவும் ஏன் இருக்கக்கூடாது? என்று கேட்கின்றேன். 


ஆகவே பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்று சொல்லுகின்றவர்களும், அந்தணர், அரசர், வணிகன், வேளாளர், குடிமக்கள் என்று சொல்லுகிறவர்களும், இவர்கள் பிறவியினால் என்று சொல்லுகிறவர்களும், இவர்கள் தொழிலினால் என்று சொல்லுகிறவர்களும், ஒரே மாதிரியானவர்களே தவிர இவர்களில் அறிவாளி களோ அல்லது யோக்கியர்களோ இருக்க முடியாது என்றே சொல்லுவேன். இந்தப்படி ஒரு முறையும் நமக்கு வேண்டியதில்லை என்றும் சொல்லுவேன். அது மக்களுக்கு எந்த முறையிலும் எந்த அர்த்தத்திலும் பயன் விளைவிக்க வேயில்லை. 


இவை யெல்லாம் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை, எஜமான், அடிமை, முதலாளி, கூலி முதலிய கொடுமைத் தன்மைகளைத்தான் உண்டாக்க பயன்படுகின்றனவே ஒழிய மக்கள் சமத்துவத்திற்கும், சுதந்திரத் திற்கும் சிறிதும் பயன்படவில்லை. ஆகையால் மக்களில் எந்த வகையிலும் உயர்வு தாழ்வு உணர்ச்சி ஏற்பட முடியாத மாதிரியில் தான் உலக வாழ்க்கை நடப்பு ஏற்பட வேண்டும் அதற்கு தகுந்த மார்க்கமே செலாவணியாகப் பார்க்க வேண்டும். இல்லாதவரை இன்றைய கொடுமைகள் ஒழிய மார்க்கமே இல்லை. இத்தொண்டில் தயவு தாக்ஷண்ணியம் பார்ப்பதும் முன்னே செய்த வேலையை பின்னே அழித்துக் கொண்டு போவதாகும். இந்த விஷயங்கள் வரவர ரத்தக்களரியும் மண்டை உடையவும், உயிர்ச் சேதமும் ஏற்படத் தேவையான நிலைக்கே கொண்டுவந்து விட்டுக் கொண்டிருக்கின்றன. இதைக் கண்டு யாரும் பயந்து விடக்கூடாது. இன்றைய அஹிம்சா தர்மம் என்பவைகள் எல்லாம் பெரிதும் புரட்டுகளாகவே முடிந்துகொண்டு வருவதை நேரில் பார்க்கின்றோம். தந்திரசாலிகள் எல்லாம் அடிபடாமல் தப்பித்துக் கொள்ளவும் சாதாரண ஜனங்களும் யோக்கியர்களும் அடியும் உதையும் மண்டை உடைவும் துப்பாக்கி வெடியும் அடையவும்தான் அஹிம்சா தர்மமாய் இருக்கின்றது. அது எப்படியிருந்தாலும் மனிதன் மனித சுதந்திரம் அதாவது, தெருவில் நடப்பது, குளத்தில் தண்ணீர் மொள்ளுவது, மனிதனுக்கு மனிதன் தொடுவது, முதலிய சுதந்திரங்கள் கூட கொடுப்பதற்கு தன்தன் நாட்டினனாலேயே தன் இனத்தாலேயே தடைப்படுத்தப்பட்டிருக்கும் போது அதுவும் மதத்தின் பேராலும் கடவுள் பேராலும் நடக்கும்போது வேறு நாட்டானிடம் அரசாக்ஷி சுதந்திரம் என்று கேட்கப்படுவதைப் பார்த்தால் இதை எதற்கு ஒப்பிடுவது? என்பது எனக்கு புலப்படவில்லை. ஒன்றா உங்களுக்கு மனித சுதந்திரம் கிடைக்கவேண்டும். அல்லது நீங்கள் இந்த நாட்டிலாவது இதை மதத்திலாவது இந்த சமூகத்திலாவது இல்லாமல் இருக்கவேண்டும். இந்த முடிவைத் தவிர எப்படியோ உயிர்வாழ்ந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டு இப்படியே இருப்பது மிகவும் மானங்கெட்டத்தனமாகும். இவ்விஷயத்தில் பொருத்துப் பொருத்து பார்க்கலாம் என்பதும் பேடியின் கொள்கையேயாகும். எவ்வளவு நாள் பொருப்பது? எவ்வளவு மெள்ளப் போவது? இவற்றிற்கு ஏதாவது நாணையமோ யோக்கியப் பொறுப்பான அர்த்தமோ வேண்டாமா? இந்த நிலைக்காக இதற்கு முன் எத்தனையோ பேர் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் வக்காலத்துப் பேசியாய் விட்டது. எத்தனையோ பேர் தர்ம நியாயம் பேசியாய் விட்டது. அவ்வளவும் பழய நிலையை பலப்படுத்தவே முடிந்தது. “தோலைக்கடித்து துருத்தியைக் கடித்து வேட்டை நாய் ஆய்விட்டது” என்பதுபோல் தேசீயமானது ஒரு பக்கம் அரசியல் சுதந்திரம் கேட்டுக் கொண்டும் மற்றொரு பக்கம் வர்ணாசிரம சுயராஜ்ஜியமும் பெற முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழிப்பாசை மயக்கத்தில் கூட “ஜாதி வித்தியாசம் இருக்கவேண்டும், பரையர் வேண்டும், தீண்டாமை வேண்டும், மனுதர்மம் வேண்டும்” என்று மகாநாடுகள் கூடிப் பேசப்படுகின்றன. இதை ஏன் என்று கேட்க ஆட்கள் இல்லை. தேசிய வீரர்களில் வெள்ளைக்காரன் ஒடிப்போகவேண்டும் என்று சொல்ல மாத்திரம் அனேக ஆட்கள் இருக்கின்றனர்.



சகோதரர்களே! இன்றைய தினம் வெள்ளைக்காரன் இருப்பதா? போவதா? என்பது நமது கவலையல்ல. உங்களுக்கும் அந்தக் கவலை வேண்டாம். நம்மீதும் உங்கள் மீதும் நமது மக்களால் சுமத்தப்பட்ட இழிவு களும் நடத்தப்படும் கொடுமைகளும் ஒழிவதாக வேண்டும் என்பதை முடி வான லக்ஷியமாய்க் கொள்ளுங்கள். அதற்காக உயிரைவிட நீங்களும் உங்கள் பெண்டு பிள்ளைகளும் தயாறாயிருங்கள். இன்றைய தினம் உலகத் தில் பல தேசங்கள் பணக்காரன், ஏழை என்கிற வித்தியாசமும் எஜமான் கூலிக்காரன் வித்தியாசமும் இருக்கக்கூடாது என்று முடிவு கட்டி வேலை செய்து வெற்றியடைந்து கொண்டு வருகிற காலத்தில் நீங்கள் பார்ப்பார ஜாதி பரச்சாதி ஒருவரை ஒருவர் பார்த்தால் தொட்டால் தெருவில் நடந்தால் தீட்டு என்ற கொள்கையை வைத்துக் கொண்டிருந்தால் நமக்கும் அவர்களுக்கும் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்கிறதை யோசித்துப் பாருங்கள். இந்த உணர்ச்சிகள் உங்களுக்கு தோன்றாமல் இருப்பதற்கு காரணம் உங்கள் முட்டாள் தனமும் அதற்கு ஆதரவான உங்கள் மத நம்பிக் கையும் தெய்வ நம்பிக்கையுமே ஆகும். ஆதலால் அதை முதலில்விட்டு விரட்டி அடியுங் கள். பிறகு தானாகவே சுயமரியாதை தோன்றி நியாயமும் சமத்துவமும் கிடைத்துவிடும்.



கடைசியாக சென்ற வருஷம் உங்கள் சங்கத்தை திறந்து வைத்து பல உபன்யாசங்கள் புரிந்து பல உதவியும் புரிந்து உங்கள் முன்னேற்றத்தில் சதா கவலையும் கொண்டு உழைத்து வந்தவரும் இன்றும் இங்கு வந்து உங்களுக்கு அரிய உபன்யாசம் செய்தவருமான திரு. சி.எம். ராமச்சந்திரம் செட்டியார் அவர்களுக்கு அரசாங்கத்தில் ராவ் சாகிப்பட்டம் அளிக்கப் பட்டிருப்பதைக் கேட்க நீங்கள் எல்லோரும் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள். ஆகவே அக்கனவானை உங்கள் சார்பாக நான் பாராட்டுகின்றேன். மற்றும் கோவை சிவிக் அசோசியேஷன் செகரட்டரி திரு. சின்ன அப்பாவு அவர்கள் உங்கள் முற்போக்கில் கவலை கொண்டு அடிக்கடி கவனித்து உங்களுக்கு அரிய புத்திமதிகள் சொல்லி வந்ததற்கும் உங்கள் சார்பாய் நான் மனப்பூர்வமாய் பாராட்டுகின்றேன். கோவை திரு. சுப்பன் அவர்கள் இன்று உங்களுக்கு முக்கியமான பிரசங்கம் செய்ததற்கும் அவரையும் பாராட்டுகிறேன். இந்த முதலாவது ஆண்டு விழாவுக்கு தலைமை வகித்து நடத்தும் பெருமையை எனக்குக் கொடுத்து எனக்கு செய்த வரவேற்புக்கும் நீங்கள் வாசித்துக் கொடுத்த வரவேற்புப் பத்திரத்திற்கும் எனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

-------------------------------------------கோவை, இருகூரில் 03.01.1931 அன்று நடைபெற்ற இருகூர் ஆதி திராவிட சமூகத்தினர்களால் நிறுவப்பட்ட திராவிட முன்னேற்ற சங்க ஆண்டு விழாவில் தந்தைபெரியார் அவர்கள்  ஆற்றிய  தலைமையுரை."குடி அரசு" - சொற்பொழிவு - 11.01.1931

10.6.14

ஆதி திராவிடர் சுயமரியாதை மகாநாடு-பெரியார்


ஆதி திராவிடர் சுயமரியாதை மகாநாடு

தந்தை பெரியார் சென்னை நேப்பியர் பார்க்கில் (தில்லைவனத்தில்) ஆதி திராவிட சுயமரியாதை மகாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானமாவது:

ஆறரைக் கோடி மக்கள் அடங்கிய எங்களுடைய பெரும் சமூகமானது, இந்து மதத்தில் சேர்க்கப்பட்டிருப்பதின் நிமித்தம் தீண்டப்படாதவர்களாயிருப்பதாலும், அம்மதத்தில் சமத்துவ உரிமை இல்லாதிருப்பதாலும், இனி அடுத்து வருகின்ற சென்சஸ் கணக்கில் எங்களை இந்துக்கள் என்று பதியாமலிருக்கும் படியும், சர்க்கார் தஸ்தா வேஜூகளிலும் எங்களை இந்துக்கள் என்ற பதவியிலிருந்து நீக்கி விடும் படிச் சர்க்காரையும், சட்டசபை அங்கத்தினர்களையும் இம்மகாநாடு வேண்டிக் கொள்ளுகின்றது என்ப தாகத் தீர்மானித்திருக்கின்றது.  திருவாங்கூர் ராஜ்ஜியத்திலும் சுமார் 3 வருடங்களுக்கு முன்பாக முது குளத்தூர் என்கின்ற இடத்தில் கூடிய ஒரு எஸ்.என்.டி.பி. யோகத் தில்  அதாவது ஈழவ சமுதாய மகா நாட்டில் இதை அனுசரித்த ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது, இந்து மதத்தில் மனித சுதந்திரம் இல்லாததால் இம் மதத்தை விட்டு வேறு மதத்திற்குப் போய் விடவேண்டும் என்பதாகும்.
இத்தீர்மானம் ஒன்று வரப் போவதாகத் தெரிந்து சில கிறிஸ்தவ பாதிரிகளும், ஆரிய சமாஜிகளும், புத்தமதப் பிரமுகர்களும் அக் கூட்டத்திற்கு வந்திருந்து தங்கள் தங்கள் மதத்தின் பெருமையை எடுத்துச் சொன்னார்கள்.
திரு ஈ.வெ. ராமசாமியும், அம்மகா நாட்டுக்குப் போயிருந்தார். தீர் மானத்தை ஆதரித்துப் பேசியபோது, இது சமயம் வேறு மதத்திற்குப் போக வேண்டியதில்லை. இனியும் சிறிது காலம் பார்க்கலாம் என்றும், அப்படி மதம் மாறுவதாயிருந்தால் மகமதிய மதத்திற்குப் போவது நல்லது என்றும், ஏனெனில், மதத்தின் பேரால் மக்கள் இப்போது மகம்மதிய மதத்தைக் கண்டால் தான் பயப் படுகிறார்கள் என்றும், அதில் பெண்கள் விஷயம் தவிர, மற்ற வழிகளில் உண்மையான சர்வ சுதந்திரமும் இருக்கிறது என்றும், நமது நாட்டில் உள்ள கிறிஸ்தவ மதம் வரவர பார்ப்பன மதம் மாதிரியாகி வருகின்ற தென்றும், அதிலும் ஜாதி உயர்வு பாராட்டப்படுகிறது என்றும், ஆரிய சமாஜம் என்பது பார்ப்பன மதத்தின் வேறு ஒரு ரூபமே ஒழிய வேறில்லை என்றும், பவுத்தக் கொள்கைகள் இப்போதுள்ள மற்ற எல்லா மதங்களின் கொள்கைகளை விட மேலானது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்றும், ஆனாலும் பார்ப்பன மதத்தை அடக்கி நமது நாட்டிற்கு உண்மையான விடுதலை தேடிக் கொடுக்க வேண்டுமானால் இது சமயம்  மகமதிய மதத்தினால் தான் முடியுமென்றும் பேசினார். பிறகு அவர் சொன்ன படியே இப் போது மதம் மாறவேண்டிய தில்லை என் தீர்மானிக்கப்பட்டது.

 இப்போது ஆதிதிராவிட மகாநாட்டிலும் சரி யாக அதே போல் இல்லா விட்டா லும், இந்து மதத்திலிருந்து விலகிக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட் டிருக்கின்றது. அப்படியானால் இனி அவர்கள் என்ன பெயரில் அழைக்கப் படுவது என்று சிலர் கேட்கலாம். ஒரு பெயராலும் அழைக்க வேண்டிய தில்லை என்றும், அவசியமானால் இந்தியன் என்று அழைக்கலாம் என்றும் சொல்லுவோம். மேலும் சர்க்காரில் குறிக்க ஏதாவது ஒரு பெயர் வேண்டாமா என்றால், அதற்காக இப்போது இந்தியாவில் உள்ள 20 கோடி இந்துக்கள் என்பவர் களை எப்படி அரசியல் முறையில் மகம்மதியரல்லா தவர்கள் என்று அழைக்கப்படுகின்றதோ, அது போல் 61/2 கோடி தீண்டப்படாத மக்கள் என்பவர்களை இந்துக்களல்லாதவர்கள் என்று அழைக்கலாம் என்று சொல்லுவோம்.

பார்ப்பனரல்லாதவர்களும், மகமதியரல்லாதவர்களும் இருக்கும் போது இந்துக்களல்லாதவர்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது என்றும், அதனால் எவ்வித இழிவும் ஏற்பட்டுவிடாது என்றும் சொல்லுவோம். அப்படி ஓர் இழிவு ஏற்படுவதாயிருந் தாலும் இந்துக்கள் என்ற பெயரை வைத்துக் கொண் டிருப்பதன் மூலம் ஏற்பட் டிருக்கும் இழிவை விட அதிகமான இழிவாய் விடாது என்பது நமது அபிப்பிராயம்.  இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லாத நிலையில்,  அதன் பேரில் மக்கள் அழைக்கப்படுவது மிகவும் அக்கிரமமான செய்கையா கும். அப்படியிருக்க, அதன் பேரால் மனிதனின் உரிமை களை மறுத்து கோயில், குளம், தெரு, பள்ளிக்கூடம் முதலியவற்றின் உரிமை களை மறுப்பது எல்லாவற்றை யும் விட அக்கிரமும் அயோக் கியத்தனமுமாகும். சாதாரணமாக, இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதைப் பற்றி நாமே தனித்து சொல்லுவதாகவும், அதைப் பற்றிய படிப்பு சிறிதும் இல்லை என்றும், அதுவும் பார்ப்பனர்கள் மீது துவேஷத்தால் சொல்லுவதாகவும் சிலர் சொல்லுகின்றார்கள்.
ஆனால், இப்போது நமது நாட் டில் ஆங்கிலத்திலும், தமிழிலும் வல் லவர் என்றும், சமய ஆராய்ச்சியில் தேர்ந்தவர் என்றும், மிக்க நுண் ணிய அறிவுடையவர் என்றும் பல் லோராலும் மதிக்கப்படும் உயர்திரு வாளர் திருநெல்வேலி கா. சுப்பிர மணியபிள்ளை எம்.ஏ., எம்.எல்., அவர்கள் சுமார் 7, 8 வருடங்களுக்கு முன் செந்தமிழ்ச் செல்வி என்னும் புத்தகத்தில் எழுதி இருப்பதை இங்கு அப்படியே எழுதுகின்றோம்.

"முதல் முதல் மக்கள் உள்ளத்தே பதிய வேண்டியது யாதெனில், இந்து மதம் என்ற ஒரு சமயம் உண்மையில் கிடையாது என்பதும், இந்து மதம் என்பது இந்தியா நாட்டிலுள்ள மக்களின் சமயம் என்று கொள்ளப் படும் சிந்து நதிக் கரையில் உள்ளவர் களைக் குறிக்கும் ஹிந்து என்ற பாரசீகச் சொல்லை கிரேக்கர் இந்து என வழங்க, அவர் வழக் கத்தைப் பின்பற்றி மேலை தேசத்தார் யாவரும் இந்நாட்டிலுள்ளாரை இந் துக்கள் எனவும், இந்நாட்டை இந் தியா எனவும் வழங்கலாயினர். இந்து என்ற சொல் இப்பொருளில் ஆரியம், தமிழ் என பண்டைய இரு மொழி நூல்களிலும் கிடையாது.
இந்நாட்டிலே சமயங்களைப் பற்றிச் சிறிதும் அறியாதவர்கள் தங்கள் மதத்தை இந்து மதம் என்று கூறுவார்கள்.  அய்ரோப் பியம், அமெரிக்கம், ஆங்கிலம் என்ற சொற்கள் வாயிலாக அன்னாரது சொற்களும், நாகரிகங் களும் குறிக்கப்படுவதே யல்லாது சமயம் குறிக் கப்படாமை போல, இந்து என்ற சொல்லும் இமயம் முதல் குமரி வரையில் உள்ள மக்களின் நாகரி கத்தைக் குறிப்பதேயன்றி சமயத்தைக் குறிப்பதன்று. இக்கருத்தைச் சுவாமி விவேகானந்தரும் தமது சொற்பொழிவு பலவற்றி லும் சுட்டிக் காட்டி உள் ளார்.  . . ஒரு சமயத்திற்குப் பெயர் அதன் கடவுளை வைத்தாதல், தலைமை ஆசிரியரை வைத்தாதல், அருள் நூலை வைத்தாதல் எழுது வது முறை. . . கிறித்து மதமும், மகம் மதிய மதமும் தங்களது தலை வரின் பெயரைத் தமக்குப் பெயராகக் கொண்டுள் ளன. அவ்வாறே புத்த மதமும் ஆருகத முமாம். ஆனால் இந்து என்ற சொல்லோ சமயக் கருத்து யாதொன்றையும் குறித் தில்லை.

இக்குறிப்பில் திரு பிள்ளை அவர்கள் சுவாமி விவேகானந்தரும் இதே அபிப்பிராயம் கொண்டதாகக் கூறியிருக்கிறார். எனவே இப்படி ஓர் அர்த்தமே இல்லாத வார்த்தையின் பேரால் மதம் என்று ஒன்றைக் கற் பித்துக் கொண்டு, சமயத்திற் கேற்றபடியெல்லாம் கொள்கை களைச் சொல்லிக் கொண்டு, 20 கோடி மக்களையும், பல வளப்பமுள்ள ஒரு பெரிய தேசத்தையும் பாழாக்கி வருவதை இனியும் எத்தனை காலத்திற்கு மக்கள் பொறுத்துக் கொண்டு இருப்பது என்பது விளங்கவில்லை.

இதைப் பற்றி மற்றொரு சமயம் டாக்டர் எஸ். சுப்பிரமணிய அய்ய ரான ஒரு பார்ப்பனர் அவர்கள், காமன்வீல் என்ற பத்திரிகையில் எழுதி இருப்பதாவது:-
இந்துக்களின் தற்கால நிலை மையைக் கவனித்துப் பார்த்தால் தாறுமாறாகச் சீர்குலைந்து அலங் கோலப்பட்டு இடிந்து பாழாகிக் கிடக்கும் மதம் இந்து மதம் என்றும், பழைய கோட்டை அங்கே சிறிது இங்கே சிறிதாக எவ்வாறு ஒழுங்கு படுத்தி முட்டுக் கொடுத்துப் பழுது பார்த்தாலும் பயன்படாது. தயவு தாட்சண்யமின்றி நெட்டித் தள்ளி ஒதுக்கிவிட்டு ஆதி அடிப்படை களின் மீது நமது தற்கால அவசியத் திற்கும்,  உபயோகத்திற்கும் ஏற்ற தாகச் சாதாரணமான புதுக்கட்டடம் ஒன்று கட்டுவதே உத்தமம் என்று தோன்றுகின்றது என்று எழுதி இருக்கின்றார்."

இன்னும் அநேக பெரியோர் களும் ஆராய்ச்சியாளர்களும் இதே அபிப்பிராயம் கொண்டிருக்கின் றார்கள். இந்நிலையில் குழந்தை மணத்தைத் தடுக்கவும், மக்கள் தெருவில் நடக்கவும், சாமிகளின் பேரால் கோயில்களில் நடக்கும் விபச்சாரத்தனத் தைத் தடுக்கவும், சிறு குழந்தைகளைப் படுக்கை அறையில் தள்ளுவதை ஒழிக்கவும் செய்யப்படும் முயற்சிகளை இம் மாதிரி ஒரு பொய் மதம் தடுப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் எந்த விதத்தில் மானமும், வீரமும், யோக்கியமும் உடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும்.
எனவே, ஆதிதிராவிட மக்கள் தங்களை எப்படி இந்துக்கள் என் கின்ற பதிப்பில் பதியக்கூடாது என்கின்றார்களோ, அது போலவே நாமும் சொல்ல வேண்டியவர்களாய் இருக்கின்றோம். 

ஏனெனில் இந்துக்கள் என்கின்ற பதிப்பில் நம்மைப் பதிந்து கொள்ள நாம் சம்மதிப்பதனால், நமக்கு ஆதி திராவிடர்களை விடக் கீழான நிலையான சூத்திரன் என்கின்ற பதவிதான் கிடைக்கின்றது. அதை நீக்கிக் கொள்ள இதுவரை எந்தச் சீர்திருத்தக்காரரோ, சட்டசபைப் பிரதிநிதியோ, வேறு எந்தச் சமூகத் தவரோ  முயற்சித்ததாகத் தெரிய வில்லை. ஆஸ்திகம் போச்சு கடவுள் போச்சு மதம் போச்சு  சமயம் போச்சு புராணம் போச்சு கலை போச்சு என்று கூப்பாடு போட்டுக் கூலி பெற நம் நாட்டில் ஆட்கள் மலிந்து கிடக்கின்ற தேயல்லாமல், மானம் போச்சு, மனித உரிமை போச்சு, மிருகத்திலும் கீழாச்சு என்று சொல்லி மனிதத் தன்மை பெற யாரையும் காணோம். எனவே நாமும் ஆதி திராவிட சகோதரர்கள் போலவே நம்மையும் இந்து என்னும் தளையில் இருந்து பிரித்துவிடு என்று கேட்கும் நாள் சீக்கிரத்தில் வரும் என்றே கருது கிறோம்.
---------------------------- தந்தை பெரியார் அவர்கள் கட்டுரை - "குடிஅரசு", 21.7.1929

10.3.14

தாழ்த்தப்பட்ட மக்கள் மாநாட்டில் பெரியார்

இராசிபுரம் தாலுகா தாழ்த்தப்பட்ட மக்கள் மகாநாடு

தோழர்களே! இந்நாட்டில் இன்று எங்கு பார்த்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகள் கூட்டித் தாழ்த்தப்பட்ட மக்கள் குறைகளைப் பற்றிப் பேசப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்றும், சுயமரியாதை பெற வேண்டும் என்றும், இந்த 10, 18 வருஷகாலமாகத்தான் வெளிப்படையாகவும், தைரியமாகவும் கிளர்ச்சி செய்யச் சந்தர்ப்பமும் சௌகரிய மும் பெற்றிருக்கிறார்கள் என்பதோடு, உங்களுக்கே இந்த உணர்ச்சியும் இப் போதுதான் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நாட்டில், புராண காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மேம்பாட்டிற் காகப் பொதுவாக உழைத்ததாகவோ, உழைக்க ஆசைப்பட்டதாகவோ காண முடியவில்லை என்றாலும், ஏதோ இரண் டொருவர் நந்தன், பாணன், சொக்கன் என்பதாகச் சிலர் தங்கள் தங்கள் சொந்தத் தில் முக்தி அடையவோ, கடவுளைத் தரிசிக்கவோ என்று பாடுபட்டதாகப் புராணங்களில் காணலாம்.
அவை வெற்றி பெற்றதாகக் கதைகள் இருந்தபோதிலும் அவை நம்ப முடியாததும், சாதிக்க முடியாத பெரிய நிபந்தனைகள் மீது அதாவது நெருப்பில் குளித்து விட்டு வந்தும், கடவுளுடைய சம்மதமும் உத்தரவும் பெற்ற பிறகும் ஏதோ முக்தியோ, மோட்சமோ அடைந்ததாகத்தான் காணப்படுகின்றனவே ஒழிய, இந்த உலகத்தில் மற்ற மனிதர்களைப் போல் மானத்துடன் வாழ முயற்சித்த தாகவோ, வாழ முடிந்த தாகவோ பொய்க் கதைகள் கூடக் கிடையாது.

அது மாத்திர மல்லாமல் இந்து (ஆரிய) அரசர்கள் காலத் திலும், நீங்கள் இன்றுள்ள நிலையைவிட மிக்க கேவலமான நிலையில் நடத்தப்பட்ட தாகத்தான் காண முடிகின்றது. அன்றியும், தமிழ் அரசர்கள் மூவேந்தர்கள் முதலியவர் களுடைய ஆட்சிக் காலத்திலும் நீங்கள் மிக கேவலமாகவே உயிர்வாழ்ந்ததாகத்தான் காணக்கிடக்கிறது.

அவற்றிற்கு உதாரணம் திருவாங்கூர், கொச்சி முதலிய இந்து அரசர்கள் வாழும் நாட்டில் நீங்கள் எப்படி நடத்தப்பட்டீர்கள்? நடத்தப்படுகிறீர்கள்? என்பதைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

இந்து அரசர்கள் அல்லாத முகமதியர் அரசர்கள், கிறிஸ்தவ அரசர்கள் ஆகிய வர்கள் ஆட்சிக் காலமே உங்களை ஒரு அளவுக்காவது மனிதர்களாக நடத்தப் பட்டதாகச் சரித்திரமும் பிரத்தியட்ச அனு பவமும் காணப்படுகின்றது. உண்மையா கவே இந்நாட்டில் முகமதிய அரசர்கள் ஆட்சி 600, 700 வருஷகாலம் நடந்திருக்க வில்லையானால், தாழ்த்தப்பட்ட தீண்டப் படாத மக்களின் எண்ணிக்கை இன்று தோட்டத்தில் முக்கால் பாகம் கிணறு என்பதுபோல் சுமார் 15, 20 கோடி மக்களுக் குக் குறையாமல் இருந்திருக்கும்.
தீண்டப் படாதவர்கள் எண்ணிக்கை இன்று இந்திய ஜனத்தொகையில் 5-ல் ஒரு பாகத்திற்கு உள்ளாக இருப்பதற்குக் காரணம் முகமதிய ஆட்சியே ஆகும். அது பெருகாமல் அந்த அளவுக்கு உள்ளாகவே இருந்து வருவ தற்கும், கூடிய சீக்கிரத்தில் அடியோடு ஒழிந்து போவதற்கும் நம்பிக்கைக்கு இடம் ஏற்படக் காரணமாய் இருப்பது பிரிட்டிஷ் அரசாட்சியின் பயனே ஆகும்.

இந்த இரண்டு ஆட்சியும் எந்தக் கார ணத்தாலோ இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்க வில்லையானால் இந்தியாவில் ராஜ குடும்பமும், பார்ப்பனர் குடும்பமும் தவிர, மற்ற மக்கள் எல்லோரும் தீண்டத்தகாத வர்களாய், தாழ்த்தப்பட்ட மக்களாய்த்தான் இருந்திருக்க வேண்டும். இன்றுகூடப் பார்ப்பனரொழிந்த மற்ற மக்கள் கீழ் ஜாதிக்காரராய் மத சம்பிரதாயப் படியும், பழக்க வழக்கப்படியும் ஏன் அரசாங்க சட்ட முறைப்படியும் குறிப்பிடப் பட்டிருப்பதை யாரே மறுக்க முடியும்?

பழைய கால அரசர்கள் யோக்கி யதைகள் பார்க்க வேண்டுமானால், அவர்கள் மக்களை எப்படி நடத்தினார்கள் என்பதை உணர வேண்டுமானால், ராமன், அரிச்சந்திரன், சந்தனராஜன், பாண்டியன் முதலிய இந்து அரசர்கள் என்பவர்கள் நாடகத்தைப் பார்த்தாலே அறியலாம். முதன் முதலாக அரசன் கொலு மண்டபத் துக்கு வந்தவுடன் என்ன கேட்கின்றான்? மந்திரி! நமது நாட்டில் பிராமணர்கள் ஜபதபம், ஓமம், எக்கியம், யாகம் முதலிய வைகளைச் செய்து சுகமாக வாழ்கின் றார்களா?

அவர்களுக்கு மான்யங்கள் முதலிய வைகள் தாராளமாக விடப்பட்டிருக்கின் றனவா? சூத்திரர்கள், பிராமணர் முதலிய வர்களுக்கு அடங்கி ஒடுங்கி ஒழுங்காகத் தொண்டு செய்து வருகிறார்களா? என்று தானே நகர விசாரணை செய்கிறார்களே ஒழிய வேறு என்ன? ஆனால் இன்றுள்ள பிரிட்டிஷ் ஆட்சியின் நகர விசாரணை எப்படி இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். சமீப காலத்தில் பாராளுமன்றம் என்னும் பார்லிமெண்டைத் துவக்கியபோது, அரசர் பெருமான் என்ன சொன்னார்?

என்னுடைய பிரஜைகள் எல்லோரை யும் அவர்கள் எந்த ஜாதியினராய் இருந் தாலும், எவ்வித வித்தியாசமும் இல்லாமல் எல்லாத் துறையிலும் சரி சமமாய் நடத் துவேன் என்று சொல்லித் திறந்து வைத்தார். அந்தப்படி அவர் நடத்துவார் என்பதற்கு என்ன நம்பிக்கை என்று ராமராஜ்ய ஸ்தா பிதர்களாகிய காந்தியாரும், காந்தி பக்தர் களும்  கேட்கலாம்.

மற்ற காரியங்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி நடந்து கொண்டு வந்தது என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய உங்களைப் பொறுத்தமட்டில் யோக்கியமாகவும் கூடிய அளவுக்கு நீதியாகவும் ஆட்சி புரிந்திருக் கிறது என்று தைரியமாய்ச் சொல்லுவேன்.

இன்று தாலுகா போர்டு, ஜில்லா போர்டு, பஞ்சாயத்துச் சபை, சட்டசபை, இந்திய சட்டசபை ஆகியவைகளில் உங்களுக்கு ஸ்தானம் அளித்து பெரிய சாஸ்திரிகள், கனபாடிகள், சங்கராச்சாரிய சுவாமிகள், ராஜாக்கள், ஜமீன்தார்கள் என்பவர் களுக்குச் சமமாய் நடத்துகிறார்கள். ராம ராஜ் ஜியத்தில் இந்தச் சபைகளுக்கு கக்கூஸ் வாரவோ, பங்கா போடவோ கூட உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.

உதாரணமாக இன்னும் சில அக்கிர காரங்களில்  எச்சிலை எடுக் கவோ, குப்பை கூட்டவோ, கக்கூஸ் வாரவோ கூட உங்களை அனுமதிப்பதில்லை. கும்ப கோணம் முனிசிபாலிட்டி யில் அக்ராகாரத் துக்கு கக்கூஸ் எடுக்கச் சூத்திரர்கள் என்பவர்களை நியமிக்க வேண்டும் என்று பாடுபட்டது உங்களுக்குத் தெரியாதா? இப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களைப் பொருத்தவரை எவ்வளவோ நன்மை செய்து வந்திருப்பதோடு உங்களுக்கு ஒரு மந்திரி ஸ்தானமும் கிடைக்கும் படியான அளவுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்து வம் கிடைக்கும்படி சீர்திருத்தம் வழங்கி யிருக்கிறது.

ஆகவே நான் ஏதோ ராஜ விசுவாசம் உபன்யாசம் செய்வதாய் தேசாபிமான வீரர்களுக்குத் தோன்றலாம். பிரிட்டிஷ் அரசாங்கம் மாத்திரமே அல்லாமல், உலகில் உள்ள அரசாங்கங்கள் எல்லாமே ஒழிந்து போக வேண்டும் என் கின்ற ஆசையுள்ளவன் நான். ராஜாக்கள் என்பவர்களே இன்றைய உலகுக்கு அவசியமில்லாதவர்கள் என்றும் பொது ஜனங்களுடைய சுயமரியா தைக்குக் கேடானவர்கள் என்றும் கருதியும், சொல்லியும் எழுதியும் வருகின்றவன் நான்.

ராஜாக்கள் மாத்திரமல்லாமல் பணக் காரர்கள், ஜமீன்தார்கள், வியாபாரிகள், முதலாளிகள் என்கின்றதான கூட்டங்கள் கூடப் பொது ஜனங்களை அரித்துத் தின்னும் புழுக்கள் ஆனதால் அவை அழிக்கப்பட வேண்டியவை என்றும் கூடச் சொல்லுகிற வன் நான். உங்களைப் பொறுத்த வரை யிலும் நீங்கள் காந்தி ராஜ்ஜியத்துக்கோ, ராமராஜ்ஜியத் துக்கோ கராச்சி சமதர்ம ராஜ்ஜியத்துக்கோ போவதைவிட பிரிட் டிஷ் அரசாங்கம் ஆயிரம் மடங்கு மே லானது என்று பறை அடிப்பேன்.

ராமராஜ்ஜியத்தில் ஆகட்டும், காந்தி ராஜ்ஜியத்திலாகட்டும், கராச்சி திட்ட சமதர்ம ராஜ்ஜியத்திலாகட்டும், வருணா சிரம தர்மமோ, ஜாதிப் பாகுபாடோ, இவைகள் சம்பந்தப்பட்ட பழைய பழக்க வழக்கங்கள் அது சம்பந்தமான கலைகளோ சிறிதுகூட மாற்ற முடியாது என்றும், அவை பத்திரமாகக் காப்பாற்றப்படும் என்றும் மேல் ஜாதியாருக்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட் டிருக்கிறது.

இந்த வாக்குறுதிகள் உங்க ளுக்கு எவ்வளவு ஆபத்து என்பது இப் போது ஒரு சமயம் உங்களுக்குத் தெரியா மல் இருக்கலாம். இந்த வாக்குறுதிகள் எவ்வித முற்போக்குக்கும் முட்டுக் கட்டையாக வந்து தடுத்துக் கொள்ளும்.
ஏதோ ஒரு காலத்தில் விக்டோரியா மகாராணியார், உங்கள் மத விஷயங்களில் பிரவேசிப்பதில்லை என்று வாக்குறுதி கொடுத்ததாகக் கூறிக் கொண்டு, இன்று, அவ்வாக்குறுதியை, ஏதாவது ஒரு பொதுக் கிணற்றில் எல்லோரும் தண்ணீர் இறைத்துக் கொள்ளலாம் என்றாலும், ஏதாவது ஒரு பொது ரோட்டில் எல்லோரும் நடக்கலாம் என்றாலும், ஒரு பொதுச் சத்திரத்தில் எல் லோரும் இருக்கலாம் என்றாலும், விபசாரத் துக்குக் கடவுள் பேரால் பெண்களுக்கு (பொட்டுக்கட்டு) லைசென்சு கொடுக்கக் கூடாது என்றாலும், ஏதாவது ஒரு கடவுள் என்பதைக் கோயிலில் சென்று தரிசிக்கலாம் என்றாலும், பால் குடிக்கும் குழந்தைகளைச் சீலை கட்டத் தெரியாத குழந்தைகளைப் பெண் ஜாதியாக ஆக்கிப் படுக்கை வீட்டிற் குள் விடக் கூடாது என்றாலும் அவ்வாக் குறுதிகள் வந்து முட்டுக்கட்டையாக இருக்கும்படி பயன்படுத்தப்படுகின்றன.

இப்படி இருக்கும்போது, பழைய பழக்க வழக்கங்கள், சாஸ்திரங்கள், கலைகள், தொழில் முறைகள் ஆகியவை காப்பாற் றப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஒரு சமதர்ம ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதென்றால், அந்த சமதர்த ராஜ்ஜியத்துக்குக் காந்தியா ரால் ராமராஜ்ஜியம் என்றும் வருணாசிரம ராஜ்ஜியம் என்றும் பாஷ்யம் சொல்லப்பட்டு இருக்கிறது என்றால் சர்வ வியாதிக்கும் ஒரே மாத்திரை என்பது போல் சகலவித சீர்திருத்தத்துக்கும் இந்த ஒரு வாக்குறுதியே எமனாய் வந்து கொன்றுவிடாதா என்று யோசித்துப் பாருங்கள்.

இந்த வாக்குறுதி யின் கீழ் என்ன என்ன சீர்திருத்தமோ, ஏதாவது ஒரு மாறுதலோ செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இன்று உங்கள் மக்களுக்கு இருக்கும் தரித்திரமும், கொடு மையும் சேர்த்து இந்த ராமராஜ்ஜியத்தை ஆதரிக்கச் செய்கின்றது. ஏன் உங்களைவிட பெரிய ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனரல்லாத மேல் ஜாதி இந்துக்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பசியால், தங் களுடைய சூத்திரப் பட்டம் இந்த ராமராஜ் ஜியத்தில் வருணாசிரம ராஜ்ஜியத்தில், கராச்சி சமதர்ம ராஜ்ஜியத்தில் ஒழியாது என்று தெரிந்திருந்தும், எத்தனை பேர் இன்று அதை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, உங்களில் சிலர் ஆதரிப் பதைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை.

இவ்வளவு தூரம் நான் இவற்றை விவரித்துச் சொல்லக் காரணம், இன்று உள்ள உங்கள்  குறைகள், இழிவுகள் நீங்கி மனிதத் தன்மை பெறுவதற்கு நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியைத் தான் நம்ப வேண்டு மென்றும், அது உள்ள காலத்திலேயே உங்கள் குறைகளை, இழிவுகளை நிவர்த் தித்துக் கொள்ள முயல வேண்டும் என்றும், அரசாங்கத்துக்கு விரோதமாகப் பேசவோ, மக்களுக்குள் விரோத உணர்ச்சி ஏற்படச் செய்கின்றதான, அரசாங்கத்தாரோடு போர் புரிவதாகவோ சொல்லிக் கொள்கின்ற கட்சியிலோ, கூட்டத்திலோ நீங்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும் சொல்லுவதற்கு ஆகவே இவற்றைச் சொல்லுகிறேன்.

நீங்கள் எல்லாம் அப்படிச் செய்ய வில்லையா என்றும், மற்றும் எத்தனையோ பேர் அந்தப்படி அரசாங்கத்துக்கு விரோத மாய் நடந்து கொண்டு வாழவில்லையா என்றும் கேட்பீர்கள். அவர்கள் நிலை வேறு, உங்கள் நிலை வேறு. அவர்களில் சிலர் இன்று மதத்தில் கீழாக மதிக்கப்பட்டாலும், பழக்க வழக்கத்தில் பலர் சமமாக மதிக்கப் படுகிறார்கள். கல்வியில்  சிறிது முன்ன ணிக்கு வந்து விட்டார்கள். உத்தியோகம்,  தொழில்கள் ஆகியவைகளில் எதிலும் போட்டி போடத் தகுதி அடைந்து விட்டார் கள். பார்ப்பனர்கள் சங்கதியோ கேட்க வேண்டியதில்லை.

எல்லா விதத்திலும் மதத்தாலும் பழக்க வழக்கத்தாலும் பிரத்தி யட்சத்திலும் மேல் நிலையில் இருக் கிறார்கள். பாடுபடாமல் வாழ்க்கை நடத்தும் யோக்கியதை அடைந்துவிட்டார்கள். 100க்கு 100 பேர் படித்து இருக்கிறார்கள். 100க்கு 90க்கு மேல் உத்தியோகங்கள் அவர்கள் கைவசம் இருக்கின்றன.
இனி அவர்களுக்கு வேண்டியதெல் லாம் அவர்களோ, அவர்களது அடிமை களோ நாட்டை ஆள வேண்டியது என் பதைத் தவிர வேறு இல்லை. ஆதலால் அவர்கள் அரசாங்கத்தாரோடு போராடவும், சட்டம் மீறுவதும், அரசாங்கத்துக்குச் சதா தொல்லை விளைவிக்கவும் சௌகர்ய முடையவர் களாகயிருக்கிறார்கள்.

இது மாத்திரமல்லாமல் அவர்கள் மதத்துக்கும், பழக்க வழக்கத்துக்கும் விரோ தமாக அரசாங்கம் சில சீர்திருத்தங்களை செய்ய முற்படுவதாலும், அதனால் பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பங்கம் வரும்போல் இருப்பதாலும், அச் சீர்திருத்தங்களைச் செய்ய வொட்டாமலும் செய்து விட்டால் அது அமலில் நடத்தப்படாமலும் இருப்ப தற்கு ஆக வேண்டியாவது, அரசாங்கத்தை வழிமறிப்பதற்காக அரசாங்கத்துக்குத் தொல்லை விளைவிக்க வேண்டியவர் களாக இருக்கிறார்கள்.

ஆதலால், அவர் களுடன் நீங்கள் சேரக் கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன்.

-----------------------------------ராசிபுரம் தாலுகா தாழ்த்தப்பட்ட மக்கள் மாநாட்டில்- தந்தை பெரியார்  29.09.1935 இல்  ஆற்றிய தலைமை உரை-" குடிஅரசு" - சொற்பொழிவு - 06.10.1935