Search This Blog

Showing posts with label பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம். Show all posts
Showing posts with label பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம். Show all posts

7.10.22

பகுத்தறிவாளர்கள் சொல்லக்கூடாதவை

 பகுத்தறிவாளர்கள் சொல்லக்கூடாதவை

 


 

“நல்ல வேளை’’: நல்ல வேளையாய்ப் பிழைத்தேன்; நல்லவேளையாய் அவர் வந்தார் என்பன போன்றவை சரியல்ல. நல்வாய்ப்பாய் என்றே சொல்ல வேண்டும். காலத்தில் நல்ல காலம் (வேளை) கெட்ட காலம் ஏதும் இல்லை. சூழலே தீர்மானிக்கிறது.

 

அதிர்ஷ்டவசமாய்: அதிர்ஷ்டம் என்பதே குருட்டுத்தனமாய் வருவது (குருட்டாம்பாக்கியம்) என்றே பொருள். இதற்கும் “நல்வாய்ப்பு’’ என்பதே பொருள். அதேபோல் துரதிர்ஷ்டம் என்பதும் சரியல்ல “கெட்ட வாய்ப்பு’’ என்பதே சரி.

 

தெய்வாதீனம்: கடவுள் செயலால் என்ற பொருள் தருவதால் இதைத் தவிர்த்து “இயற்கையாய்’’, “வாய்ப்பாய்’’ என்றே சொல்ல வேண்டும்.

 

வரப்பிரசாதம்: இது கடவுள் அருளால் என்று பொருள் தருவதால் “பரிசு’’ , “வெகுமதி’’ போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

 

கொடுத்து வைத்தது(கொடுப்பனை): முற்பிறவி பயன் என்று இது பொருள் தருவதால் இதைத் தவிர்க்க வேண்டும்.

 

பிரம்மாண்டம்: பிரம்மனால் படைக்கப்பட்ட அண்டத்தைப் போன்று பெரியது என்ற பொருளில் வருவதால் இச்சொல்லைத் தவிர்த்து, “மாபெரும்’’, “மிகப்பெரும்’’ போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

 

தலைவிதி: கடவுளால் ஒவ்வொருவர் தலையிலும் அவர் இப்படித்தான் வாழவேண்டும் என்று எழுதப்பட்டிருப்பதாக நம்பும் மூடநம்பிக்கையின்பாற்பட்டது இச்சொல். எனவே, இதைப் பயன்படுத்தாது, “சூழல்’’, “வாய்ப்பு’’ போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

 

அமரர்: இறந்தவர்கள் தேவர் உலகத்திற்குச் செல்வர் என்ற மூடநம்பிக்கையின்பாற்பட்டது இச்சொல். அமரர் என்றால் தேவர் என்று பொருள். எனவே, இதைத் தவிர்த்து “இறந்தவர்’’, “மரணமடைந்தவர்’’, “மாண்டவர்’, “உயிர்நீத்தார்’’ போன்ற சொற்களையே பயன்படுத்த வேண்டும்.

 

பகீரத முயற்சி: பகீரதன் பெரும் முயற்சி செய்து கங்கையைக் கொண்டுவந்தான் என்பது புராணம். அது மூடநம்பிக்கையின்பாற்பட்டது. எனவே மூடநம்பிக்கையின்பாற்பட்ட இச்சொல் தவிர்க்கப்பட வேண்டும். “மாபெரும் முயற்சி’’ என்று கூறுவதே சரியாகும்.

 

கதிமோட்சம்: கடவுள் அருளால் கிடைக்கக் கூடியது இது என்று நம்பப்படுவதால், இதைத் தவிர்த்து, “தீர்வு’’, “நிம்மதி’’ போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

 

வேதவாக்கு: இது அறியாமையால் சொல்லப்படுவது. வேதம் ஆரியர் நலத்திற்கும் திராவிடர்கள் கேட்டிற்கும் எழுதப்பட்டது. அதில் நற்கருத்துகள் என்று ஏதும் இல்லை. எனவே, அதை உயர்வாக எண்ணி இவ்வாறு சொல்வது தப்பு. “சான்றோர் வாக்கு’’ என்று இதற்கு மாற்றாகச் சொல்லலாம்.

 

இராசி: இது இராசியான வீடு, இவர் இராசியானவர், இந்த உடை, வாகனம் இராசியானது என்று கருதும் மூடநம்பிக்கையின் அடிப்படையில் வருவது இச்சொல். எனவே, இதைத் தவிர்த்துவிட வேண்டும். இதற்கு மாற்றுச் சொல் தேடக்கூடாது.

 

சனியனே: சனி பிடித்தால் தொல்லை தரும் என்ற மூடநம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்படுவது. எனவே, இது தவிர்க்கப்பட வேண்டும்.

 

இராட்சச: இராட்சச என்பது திராவிடர்களை ஆரியர்கள் கொடுமை-யானவர்களாய் சித்தரிக்க பயன்படுத்திய வார்த்தை. எனவே, இராட்சச பலூன், இராட்சச எந்திரம் போன்ற சொற்களைத் தவிர்க்க வேண்டும்.

 

பேய் மழை: பெரும் மழை என்றே சொல்ல வேண்டும். பேய் மழை என்று சொல்வது மூடநம்பிக்கையின் வழிவந்தது.

 

                   ---------------------டிசம்பர் 01-15  ‘உண்மை’ இதழில்  ஒளிமதி  அவர்கள் எழுதியது.........

1.11.16

பொது சிவில் சட்டம் - சில கேள்விகள்


பொது சிவில் சட்டம் - சில கேள்விகள்



சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெற்ற (29.10.2016) பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் தெளிவாக்கப்பட்டுள்ள கருத்துகளும், தகவல்களும் முக்கியத்துவம்வாய்ந்தவையே.

(1) பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட முயற்சிக்கும், பொது சிவில் சட்டத்தை நோக்கிய சில கேள்விகள் உண்டு. மற்ற மதத்தை நோக்கி செலுத்தப்படும் பார்வைக்கு முன்னதாக பி.ஜே.பி. அமைக்கத் துடிக்கும் இந்து ராஷ்டிரத்துக்கான இந்தச் சட்டத்தில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?


 (அ) பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்தும் இந்து மதத்தின் வருணாசிரமம் - ஜாதிக்குத் தடை வருமா?

 (ஆ) சுடுகாடு - இடுகாடுகூட பொதுவாக இல்லாமல் இன்னும் ஜாதி அடிப்படையிலான இடங்கள் இருக்கின்றனவே - அவற்றைத் தடை செய்து இந்துக்கள் அனைவருக்கும் ஒரே சுடுகாடு - இடுகாடு உருவாக்கப்படுமா?

 (இ) இந்து மதத்துக்குள் முரண்பட்ட பல்வேறு பிரிவுகள் இருக்கின்றனவே அவையெல்லாம் அகற்றப்பட்டு ஒரே கோட்பாடு - சீரமைப்புக்குள் கொண்டுவரப்படுமா? எடுத்துக்காட்டாக பல்வேறு திருமண முறைகள் ஒழிக்கப் பட்டு, ஒரே மாதிரியாக ஏற்படுத்தப்படுமா?

 (ஈ) இந்து மதத்துக்குள்ளே சில பிரிவினர்களிடையே பலதார திருமணங்கள் உண்டே - அவையும் தடுக்கப்படுமா?

 (உ) இந்துக்களுக்குள் உணவுப் பழக்கவழக்கங்கள் பலவகைப்பட்ட முறைகளில் உள்ளனவே - வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி, நாய்க்கறி உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கியமாக உண்டே! மாட்டுக்கறித் தடை விதிப்பை அப்பகுதிகளிலும் முற்றாகச் செய்யும் நோக்கம் பின்வாங்கப்படுமா?

 (ஊ) இந்து மதக் கோவில்களில் அர்ச்சகர்களாக பார்ப் பனர்கள் மட்டுமே வர முடியும் என்ற நிலை ஒழிக்கப்பட்டு, இந்து மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினரும் அதற்குரிய பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகராகும் உரிமை வழங்கப்படுமா?

 (எ) இந்து மத வேதங்கள், சாஸ்திர நூல்கள், (மனுதர்மம் உள்பட)உபநிஷத்துகள்,இதிகாசங்கள்,புராணங்கள்எனப்படு பவைகளில் ஜாதியை ஆதரித்தும், பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர் அல்லாதாரை சூத்திர்கள் என்றும், அசுரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும், பெண்களைப் பாவ யோனி யில் பிறந்தவர்கள் என்றும் எழுதப்பட்டுள்ளதே - இந்த அவமரியாதையை அகற்றும் நோக்கத்திலும், அனைவரும் சமத்துவம் என்ற ஒரே பொது நிலைக்குக் கொண்டு வரும் நோக்கத்திலும் அவையெல்லாம் தடை செய்யப்படுமா?

 (ஏ) இந்தியா முழுவதற்கும் மது விலக்குச் சட்டம் கொண்டுவரப்படுமா? (அய்) புதிய கல்வித் திட்டம் ஒன்றைக் கொண்டு வருவதாக உத்தேசித்துள்ளார்களே - அந்தத் திட்டம் பொது சிவில் சட்டத் திற்கு விரோதமான தன்மையில் இருக்குமாதலால் அத்திட்டம் கைவிடப்படுமா? புதிய கல்வித் திட்டத்தின் முகவுரையில் இந்திய நாட்டின் குருகுலக் கல்வி, வேதக் கல்வி அடிப்படையில் குரு - சிஷ்ய உன்னதமான உறவு என்றெல்லாம் கூறப்பட்டுள்ளதே - இப்பொழுது கொண்டுவர உத்தேசித்துள்ள பொது சிவில் சட்டத்துக்கு இந்தக் கல்வி முறை எந்த வகையில் உகந்ததாக இருக்க முடியும்?

 (ஒ) இந்தியாவில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கின்றனவே சி.பி.எஸ்.இ., செகண்டரிஸ்கூல், மெட்ரிகுலேசன், அங்கன்வாடி என்றெல்லாம் பல்வேறு வகையான கல்விக் கூடங்களும், கல்வித் திட்டங்களும் நடைமுறையில் உள்ளனவே இவை யெல்லாம் ஒழிக்கப்பட்டு இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி கொண்டுவரப்படுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் முறையாகப் பதிலும், விளக்கமும் தெளிவோடு சொல்லியதற்குப் பிறகு, பொது சிவில் சட்டம்பற்றிய கருத்துக் கூறுமாறு பொதுமக்களைக் கேட்பதுதானே பொருத்தமாக இருக்க முடியும்? 


இன்னொரு முக்கிய கேள்வி இருக்கிறது. இந்து மதத் துக்குள் தாங்கள் துவிஜாதி (இரு பிறப்பாளர்) தாங்கள் பிர்ம்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் பிர்ம்மாவின் காலில் இருந்து பிறந்தவர்கள் என்பதை அறிவிக்கும் தகவல் பலகையாகக் காட்சியளிக்கும் பூணூலுக்குத் தடை விதிக்கப்படுமா? முஸ்லிம் மதத்தில் பெண்கள் உரிமைப் பாதிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் - அவர்களை மீட்டெடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கவலையுடன் கூறியிருப்பதை ‘வரவேற்கிறோம்.’ பெண்கள் எந்த மதத்தின்கீழ், எந்தப் பதாகையின்கீழ் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கவேண் டியதுதான். கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்த ஊக்கப்படுத்த எந்த மதத் தடைகளையும் தகர்த்துக் கொண்டு உரிமை மறுக்கப் பட்டவர்கள் கொந்தளித்து எழவே செய்வார்கள். அந்தக் கல்வி, அறிவுத் திசையை செப்பனிடுவதாகவும் இருக்க வேண்டும்.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் முஸ்லிம் பெண்கள் பர்தா முக்காடு அணிந்து வருவது அனேக மாக முற்றாக மறைந்துவிட்டது. இந்து மதத்திலும்கூட சில பிரிவுகளில் அது இருந்துதான் வருகிறது. தலாக் முறைகூட சிலநாடுகளில் கடைபிடிக்கவில்லைதான். இந்த முறை இந்தியாவில் இருப்பதால் எல்லா முசுலிம் வீடுகளிலும் இது அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கான விவரங்கள் கிடையாது! நூற்றுக்கு நூறு கல்வியைக் கொடுங்கள்- உரிமைகள் எந்த மதத்தில் மறுக்கப்பட்டாலும் கல்வியின் எழுச்சிக்குமுன் மறுப்புகள் மரித்துப் போய்விடும். 

அடிப்படையைச் செய்யாமல், இலைகளையும், கிளைகளையும் வெட்டிக் கொண்டிருக்கவேண்டாமே! 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டுகளில் கட்டாய கல்வி, அகில இந்திய அளவில் மதுவிலக்கு என்று கூடத்தான் இந்திய அரசமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல், பொது சிவில் சட்டம்தான் முக்கியம் என்று பி.ஜே.பி. சொல்லும்போது, அச்சமும், அய்யமும் கைகோர்க்கின்றன என்பது உண்மையே! 

 ----------------------------------’விடுதலை’ தலையங்கம் 1-11-2016

18.2.15

கடவுளின் மரணம்

(ம.சிங்காரவேலர்  அவர்களின் பிறந்தநாள்   நினைவாக இக்கட்டுரை பதிவு செய்யப்படுகிறது- படியுங்கள்!சிந்தியுங்கள்!! --------------தமிழ் ஓவியா)






ம.சிங்காரவேலர்


தோழர்களே! இன்று நாம் நடத் தும் நாத்திகர் மாநாடு நமது நாட்டில் நடக்கின்ற முதல் மாநாடாகும். இந்த மாநாட்டினால் நம் நாட்டிற்கு நன்மையே உண்டாகும். அறியாதவர்கள் இம்மாநாட்டை கேலி செய்வார்கள், ஆத்திகர்கள் இதனை இகழ்வார்கள், அதிகாரிகள் அடக்குமுறையைக் கையாளுவார்கள், இவை புதிதாக நடக்கும் நிகழ்வல்ல, கடந்த கால வரலாற்றில் முற்போக்கு இயக்கங்கள் தண்டிக்கப்பட்டும் இகழப்பட்டும்தான் வந்துள்ளன.
மூட உலகம் நன்மையளிக்கும் இயக்கங்களை தொடக்கத்திலிருந்தே பழித்தே வந்திருக்கிறது. பழிப்பதோடு மட்டுமின்றி கொடுமைப்படுத்தியும் வந்திருக்கிறது. அறிவியல் அறிவு பரவுவதைத் தடுத்து வந்திருக்கிறது. நாத்திகரான இங்கர்சாலை ஒரு காலத்தில் அமெரிக்கா நாடு பழித்தது. இப்போது அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

பிரித் தானிய நாட்டின் நாத்திகரான பிராட் லாவை அந்நாடு ஒரு காலத்தில் குற்ற வாளிக் கூண்டில் நிறுத்தியது. இப் போது அந்நாட்டில் என்ன நடக்கிறது? இப்போது அந்நாடு அவரது நினைவு நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறது. இந்நிலையில் வருங்காலத்தில் மிக பெரும் நாத்திக மாநாடு நம் நாட்டில் நடைபெறும் என்பதை ந்ன் உறுதியாக நம்புகிறேன்.
நாத்திகர்களின் பெயர் களை நம் மக்கள் மறக்கலாம். ஆனால் அவர்களின் சிந்தனைகள் எப்போதும் மக்கள் நெஞ்சங்களை சிந்திக்க வைத்துக் கொண்டே இருக்கும்.

நாத்திகம் ஒரு பழைமையான கோட்பாடு, அதனை உருவாக்கியதும் மேம்பட வைத்ததும் ஆத்திகமேயாகும், கடவுள் எனுங் கொள்கை உருவாக்கிய தும், அதற்கு எதிராக கடவுள் இல்லை யென்ற கோட்பாடும் தோன்றிவிட்டது.
மனிதன் தாம்பேசும் காலத்திற்கு முன்பு (பேசத் தெரியாத காலத்தில்) அவனிடத் தில் கடவுள் எனும் எண்ணமே இல்லை. பண்டைக் காலத்திலிருந்த மனிதன் கடவுளை நினையாதவனாகவே இருந்தான் அவன் தான் வரலாற்றில் ஆதி நாத்திகனாவான்.

மத வரலாற்றில் உற்சாகம் அளிக்கும் ஒரு செய்தி உண்டு. ஒவ்வொரு மதமும், தமக்கு எதிரான மதத்தினரை நாத்திகராகவே கருதுகின்றன. இந்துவாக இல்லாதவனை ஓர் இந்து அவனை நாத்திகனாகக் கருதுகிறான். ஒரு முக மதியன் முகமதியனாக அல்லாதவனை நாத்திகனாகவே கருதுகிறான்.

இவ் வாறே பெரும்பான்மையினர் கருது கிறார்கள். ஒருவன் நாத்திகனாக இருப்பதில் பெருமை அடைகிறான் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும் புகிறேன், அவன் மதத்தைச் சேராத வனாக இருப்பதுடன் மட்டுமின்றிக் கடவுள் இருப்பதில் நம்பிக்கையற்ற வனாகவும் உள்ளான்.
 
கடவுள் எனும் வார்த்தை மனிதன் உண்டாக்கிய சொல்லாக இருப்பதால், அவன் கடவுளுக்காகக் கோயில்களையும் கட்டத் தொடங்கினான். அவன், மூத் தவர்க்கும், அதிகாரம் உள்ளவர்க்கும் மரியாதையளிப்பது போன்று கட வுளுக்கும் மரியாதை அளிக்கலானான். அவன் தனக்காக எப்படி இசை, நடனம், சடங்கு, விருந்து ஆகியவற்றைப் படைத் தானோ அவ்வாறே தாம் வணங்கும் கடவுளுக்கும் படைத்தான். இவ்வாறே மனிதனைப் போல் கடவுளும் ஆனார்.

முற்காலத்திலிருந்த தந்திரமான மனிதர்கள் வாழ்வதற்கு எளிதான வழியைக் கண்டுபிடித்து, கடவுள் என்ற பதத்தையும் அதற்கான வழிபாட்டை யும் புகுத்தி விட்டனர். கடவுள் எனும் அச்சத்தோடு உறுதியுடன் மனிதன் வாழவும், அனைத்தும் அவற்றால் சாத்தியம் என்பதை அவர்கள் உருவாக்கியதால் புரோகிதர் செல்வாக்குப் பெறும் நிலை ஏற்பட்டு விட்டது.

மனிதனின் கடவுள் பயத்தையும் அச்சத்தையும் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் நன்கு வாழ்ந்தும் களித்தும் இருந்தார்கள். கடவுள் எனும் ஒரு வார்த்தையைப் படைத்து, வழி பாட்டையும், மந்திரச் சடங்குகளையும் ஆத்திக மாளிகையையும் கட்டி அமைத்து விட்டனர்.

மத வரலாற்றில் பல நம்பிக்கைகள் பயனற்றுப் போயின. இந்த நம்பிக்கைகள் தான் ஆத்திக மாகும். இவை வருங்காலத்தில் பயனற் றுப் போகும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆத்திகத்தின் முதன்மையான ஆபத்தான செயற்பாடு என்னவென் றால், அது மனிதனின் துணிவையே நாசமாக்கி விடும். அறியாமை, அவன் சிந்தனையில் ஊறிவிடும். அறிவியல் எண்ணங்களால்தான் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள். ஆத்திகம் மனிதனுக்கு எதிரான தீங்குமட்டுமன்று, அது கொடூரமானது.
கடவுளின் எதிர்காலம் இனி எப்படியோ? ஆனால் அதன்பேரில் கடந்த காலத்தில் நடந்தவற்றை நம்மால் மறக்கவோ பொறுக்கவோ முடியாது. 

நாத்திகம்தான் மனிதன் எண்ணத்தில் உறுதியை உண்டாக்குகிறது. அது ஒன்றுதான் மக்களிடத்திலிருக்கும் சமூக பொரு ளாதார ஏற்றத்தாழ்வை ஒழிக்க உரத்துப்பேசுகிறது. அதுதான் முன் னேற்றப் பாதையிலிருக்கும் தடைகளை அகற்ற உதவுகிறது. மனிதன் மனிதனாக இருக்கவும், இந்தப் பூமியைச் சொர்க் கமாக மாற்றவும் நாத்திகம் தான் அவனுக்குக் கற்பிக்கிறது.
தோழர்களே, நம்முன் முக்கியமான போராட்டம் உள்ளது. நம் வெற்றியில் நாம் பின்தங்கக்கூடாது. நாம் பாது காப்பைத் தேட வேண்டியுள்ளது. ஆத்திகத்தை முழுமையாக நாம் ஒழித்துவிட வில்லை. அதிகாரம், பணம், பிரச்சாரம் ஆத்திகத்திற்கு உதவியாக உள்ளன. பெரும்பான்மையான மக்கள் அறியாமையில் இருந்து கொண்டு ஆத் திகத்தைப் பின்பற்றுகிறார்கள்.

அவர் களை நாம் மீட்க வேண்டியுள்ளது, ஆத்திகம் அதிகாரத்தையும், பணத் தையும் பெற்றிருப்பதால், அது மானு டத்தின் உற்சாகத்தையும், மேம் பாட்டையும் தடுக்கும் தடையாக உள்ளது.

ஹிட்லரிசமும், பாசிசமும் இதற்கு மிக உறுதியான சான்றாகும். மத நம்பிக்கைகளும், காலங்கடந்த புரியாத கருத்துகளும் மனித குரல் வளையைக் கவ்விப் பிடிக்கின்றன. இது ஒரு ஆபத்தான முறையாகும்.
காந்தியடிகள் கூறியவற்றை நாம் நோக்க வேண்டும். அவர் வெளிப் படையாக ஆத்திகத்திற்கு வக்காலத்து வாங்குகிறார். அவர் சாதி அமைப்பில் சீர்திருத்தம் செய்வதற்கு மறுகட்ட மைப்புச் செய்ய ஏங்குகிறார். இவை யெல்லாம் நமது பார்வையில் நாத்திக அடிப்படைக் கொள்கைக்கு முரணான தாகும். அவரால் கூறப்படும் தீண் டாமை, ஆத்திகத்தை வலுப்படுத்தும் திட்டமேயாகும்.
ஆறுகோடி எண்ணிக்கையுள்ள தீண்டத்தகாதோர் பொருளாதாரத்திலும், சமூக வாழ்க்கையிலும் மிகப்பின்தங்கியவராக உள்ளனர். அவர்களுக்கு தேவை கட வுளும் மதமுமா? இல்லை. இவர்களுக்குத் தேவை, நாளும் உண்ண உணவும், வாழ்வதற்குத் தேவையான வேலை வாய்ப்பும் தான்.

நம்முன் மற்றொரு ஆபத்தும் உள்ளது, இந்து மகா சபையினர், சனா தனவாதிகள், முகமதிய வகுப்புவாதத் தினர் சட்ட சபைகளைக் கைப்பற்றப் போராடுகிறார்கள். இதனால், அவர்கள் ஆத்திகத்தை ஒரு வேளை அரங் கேற்றலாம். ஆத்திகத்திற்கு முடி சூட்ட சட்டசபைகளைக் கைப்பற்ற போராடு கிறார்கள். வேண்டாத வாய்ப்புள்ள நம் நாட்டில், இவர்களே நமக்கு மோசமான எதிர்வினையினர் ஆவர்.

தோழர்களே எச்சரிக்கையாக இருங்கள், ஒவ்வொரு கிராமத்திலும், பஞ்சாயத்திலும் ஒவ்வொரு தாலுக்கா விலும் ஊராட்சியிலும் போட்டியிடு வதைத் தவிர்க்க வேண்டாம். சாதிகளின் வஞ்சத்தையும் அதன் கொடுமையையும் வெளிப்படுத்துங்கள், ஆத்திக மூடத் தனத்தை ஒழித்துக் கட்டுங்கள், அன்பு கூர்ந்து நாத்திகத்தையும் பொதுவுடை மையையும் அவ்விடத்தில் அரியணை ஏற்றுங்கள்.

குறிப்பு: மதமூடத்தனம் குறித்தும், இந்துத்துவத்தின் ஆபத்துக்குறித்தும் அந்நாளிலேயே சிங்காரவேலர் துல்லியப் பார்வையில் தொலைநோக் கோடு எச்சரித்துள்ளார். இந்துத்துவா, நம் காலத்தில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி நர்த்தனம் ஆடுகிறது. இப்பேச்சில் சிங்காரவேலர் இறுதியில் கூறியதை, நாம் நிறைவேற்றுவதில் தான் நம் நாட்டின் எதிர்காலம் உள்ளது.
 ------------------------------------- தகவலும் தமிழாக்கமும்: - பா.வீரமணி--
நன்றி: புதிய உலகு டிசம்பர் 2014

11.1.14

அய்யப்பன் நோயைத் தீர்க்கும் லட்சணம் இதுதானா?

பம்பை

பயபக்தியோடு சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் போவதுபற்றி பலூனை ஊது வதுபோல பிரச்சாரத்தைக் கட்டி விடுகிறார்கள். அய்யப்ப பக்தர்களின் ஒழுக்கத்திற்கு எத்தனை மதிப்பெண் (மார்க்)?

போடுபவர் நாம் அல்ல - மூத்த தந்திரி ஒருவர் சொன்ன அந்தத் தகவலை நக்கீரன் (30.9.2009) விலாவாரியாக வெளியிட்டது.

10 வயது முதல் 50 வயதுவரையுள்ள பெண்கள் கோயிலுக்குள் வர அனுமதி கிடையாது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக வயதை மறைத்து ஏராளமான பெண்கள் கோயிலுக்கு வந்திருக்கிறார்கள். அந்தப் பெண்களைத் தடுத்து நிறுத்தாமல், போலீசார் மார்பை வேண்டுமென்றே பிடித்து பதினெட்டாம் படியில் தூக்கி விட்டுள்ளனர்.

தந்திரிகள் வாயில் வெற்றிலை போட்டுக்கொண்டு அய்யப்பனுக்குப் பணி விடை செய்கின்றனர். நெய் அபிஷே கத்தின்போது, தந்திரிகள் தங்கள் தொடை மற்றும் பாதங்களில் கைகளைத் தடவிவிட்டு, மீண்டும் அதே கைகளால் அய்யப்பன் விக்ரகத்தில் படிந்த நெய்யை எடுத்து விற்கவும் செய்கின்றனர். இதனால் அய் யப்பன் சாமி கடும் கோபத்தில் இருக்கிறார்.
கடந்த ஆண்டு அய்யப்பனை தரிசிக்க வந்த பல கோடி பக்தர்களில் 7 பேர் மட்டும்தான் உண்மையான பக்தியுடன் வந்தார்கள். அவர்களுக்கு மட்டும்தான் அய்யப்பனின் அருள் கிடைத்துள்ளது என ஜோதிடத்தில் தெரிய வந்துள்ளது என்று கூறியிருக்கிறார் மூத்த தந்திரி.

ஒழுக்கக்கேடுதான் இந்தத் தரத்தில் இருக்கிறது என்றால், சுகாதாரமும், சுற்றுச்சூழலும் எப்படியிருக்கின்றன?

பக்தர்களின் வருகைக் கணக்குப்படி சன்னிதானம் மற்றும் பம்பாவில் 5000 கழி வறைகளாவது தேவையாம். ஆனால், 2000 தான் உள்ள னவாம்.

சன்னிதானத்தில் சேரும் எல்லாக் கழிவுகளும் பம்பா நதிக்குப் போகிறதாம் - இப்படிச் சொல்பவர் தேவஸ் தானத்தின் தலைமைப் பொறியாளர் கே. ரவிக்குமார்.

பம்பை நதியில் ஆண்டு ஒன்றுக்கு 2000 டன் மனிதக் கழிவுகள் கலக்கப்படுகின்றன. 100 மி.லிட்டர் பம்பை நீரில் 3 லட்சம் எம்.பி.என். கோல் ஃபார்ம் பாக்டீரியாக்கள் உள்ளனவாம். உலகில் இந்த அளவுக்கு மோசமான நதி வேறு எங்குமே இருப் பதற்கு வாய்ப்பு இல்லையாம்.
இதைச் சொல்லுவது நாத்திகர்கள் அல்லர். கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்த இந்தத் தகவலை விலாவாரியாக வெளியிட்டுள்ளதே - இந்தியா டுடே (19.12.2007) - விடுதலை ஏடு அல்லவே!

அய்யப்பன் கோயிலில் மாளிகைபுரத்தம்மனின் தனி சன்னதி உள்ளது. இங்கே தேங்காயை உடைக்கக் கூடாது - உருட்டி வழிபடவேண்டும். இங்கே மஞ்சள் பொடியை அம்பாளுக்குப் படைத்துப் பொட்டாக இட்டுக் கொண்டால் நோய்கள் நீங்கும் என்பதும், வாய் சாமர்த்தியம் கிட்டும் என்பதும் நம்பிக்கையாகும்.
(தினமலர், 16.11.2009).

இதே தினமலர் 15 நாள் கழித்து (1.12.2009) எந்த செய்தியை வெளியிடுகிறது?

இதய நோயாளிகள் சபரிமலை வரும்போது முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சன்னிதானம் மருத்துவர் அதிகாரி டாக்டர் ஹரீந்திரபாபு கூறினார். பயணத்தின் முன் டாக்டரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். சாப்பிட்டுவரும் மருந்துகளை டைரியில் எழுதிக் கொண்டு வரவேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள்.

அய்யப்பன் நோயைத் தீர்க்கும் லட்சணம் இதுதானா?

புண்ணிய நதி பம்பையின் யோக்கியதையும் இதுதானா?

----------------------------------- மயிலாடன் அவர்கள்  1-11-2010 இல் எழுதிய கட்டுரை

9.11.11

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? -அவசியம் படியுங்கள்!





கடவுள் - ஓர் சுவாரஸ்யமான விவாதம்

நான் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியை. ஒரு நாள் அய்ந்தாம் வகுப்பு குழந்தைகளுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். நான் நடத்தத் தொடங்கியது தமிழ்ப்பாடம். தமிழ்ப் பாடத்தில் செய்யுள் பகுதிகளில் இருந்த இறைவாழ்த்துப் பகுதியை குழந்தைகளுக்கு சொல்லித்தர ஆரம்பித்தேன். அப்போது அமைதியாக இருந்த வகுப்பறையில் சாமியெல்லாம் இல்ல டீச்சர் என்று ஒலித்த ஒரு குரலால், நான் அதிர்ந்து போனேன். எனது வகுப்பறையில் இதுவரை பல்வேறு தலைப்புகளில் விவாதங்களையும், கலந்துரையாடலையும், குழந்தைகளை வைத்து நடத்தியுள்ளேன்.

நாம் ஏன் இதைப்பற்றி விவாதிக்கக் கூடாது என்ற எண்ணம் உடனே எனக்குள் தோன்றியது. இன்னொரு பக்கம் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று விவாதிக்கிற அளவுக்கு முதிர்ச்சி இந்த அய்ந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு இருக்குமா? என்கிற வழக்கமான எனது பாழாய்ப் போன ஆசிரிய மூளை சந்தேகித்தது.

சரி! இருக்கட்டும் முயன்றுதான் பார்ப்போமே! என்று பெரியவர்கள்கூட பேசத் தயங்குகிற ஓர் தலைப்பை விவாதமாக அறிவிக்க, கடவுள் பற்றி உற்சாகமாக பேசத் தொடங்கினார்கள் குழந்தைகள், என்னை மிகுந்த ஆச்சரியப்பட வைக்கும் வகையில் நிகழ்ந்த அவர்களது கடவுள் குறித்த விவாதம் எனது புரிதலையும், மூடநம்பிக்கையையும் மாற்றத் தொடங்கியிருந்தது. அய்ந்தாம் வகுப்புக் குழந்தைகளின் கடவுள் குறித்தான விவாதத்தில் ஒரு சிலவற்றை நீங்களும் பாருங்களேன்!


1. நம்மை மீறிய ஒரு சக்தியுண்டு, அது தான் கடவுள், அது நம்மை வழி நடத்தும்.

உன்சக்தி உனக்குள்ளே ஒளிந்து உள்ளது. அதை வெளிக்கொணர முயற்சிப்பதுதான் வெற்றியின் திறவுகோல்.

2. பூமியின் இயக்கமே கடவுள் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டும்.

அறிவியல் பூர்வமாக ஆய்ந்து பார்த்ததில் அது ஈர்ப்பு விசையால் சுழல்கிறது.

3. நாம் செய்யும் பாவம், புண்ணியங்களை கடவுள் கண்காணிக்கின்றார்.
அவர் மட்டும் நம்மைப் பார்க்கிறார். நம்மால் மட்டும் ஏன் அவரைப் பார்க்க முடிவதில்லை?

4.பொன், பொருள், செல்வம், அறிவு எல்லாம் இறைவன் தந்த வரம்தான் நமக்கு.
எனது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நல்ல சிந்தனை, மூலம்தான் அவை கிடைக் கின்றன. இறைவனால் கிடைப்பதில்லை.
5. அன்பான உறவு முறைகளையும் தாய், தந்தை மற்றும் குரு போன்றவர்களின் ரூபங்களில் கடவுள் நமக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார்.

கடவுள் ஏன் அவருக்கு உரிய ரூபத்தில் வரவில்லை? எப்போதுதான் வருவார்? என்தாய் மட்டும்தான். கடவுளின் பயமில்லை.

6.கடவுள் எங்கும் இருக்கிறார். அவர் ஆன்மாவோடு கலந்து இருக்கிறார். நம் நல்ல பழக்க வழக்கம் மூலம் வெளிப்படுவார்.

வடிவம் இல்லாத, உருவமற்ற, பார்க்க முடியாத ஒன்றைத் தொழுவது சிந்திக்கத் தெரிந்த மனிதனுக்கு நல்லது அல்ல.
7. கடவுள் வந்து அருள் தரும்போதுதான் நம்மை மீறி நம் உடல் ஆடும். அது கடவுளின் அருள்.

ஏன் மனிதர்கள் ஆடுகிறார்கள். கற்சிலையான சாமியே ஆடலாமே! வேப்பமரம்தான் சாமி என்றால் அது ஆடட்டுமே.

8. அம்மனுக்குக் கூழ் சமைத்து ஊற்றினால், அம்மை நோய் வராது.

எதனாலே, எதனாலே! பாடத்தில் வைரஸ் கிருமி பாதிப்பதால்தான் அம்மை நோய் வருகிறது என்று விஞ்ஞானப் பூர்வமாக சொல்லப்படுகிறது. நம்ம ஆசிரியரும் அதையேதான் சொன்னாங்க என்று காரசாரமாகவும், பதிலுக்கு பதிலாக பல விவரங்களை முன்வைத்து பேசிய மாணவர்களின் கற்றல்திறனை நினைத்து மகிழ்ந்தேன்.

மேலும் அவற்றைக் கல்வியோடு தொடர்புபடுத்தி பேசிய, அவர்களின் மனவளத்தையும், சிந்தனையையும், சமூக அக்கறையினையும் பார்த்தபோது என் உடல் சிலிர்த்தது. கோபம், கலவரம், கொந்தளிப்பு, சண்டை இவை இல்லாத அழகான விவாதம் நான் எதிர்ப்பார்க்காத வழியில் என் மனதைத் தொடர்ந்தது. இது மாணவர்களுக்குப் புரியாத விஷயம் என்ற கண்ணோட்டத்தில் இருந்த என்னைப் பெரிய அளவிற்கு தெளிவாக்கிப் புரிய வைத்தனர் குழந்தைகள்.


------------------------நன்றி: "புதிய புத்ககம் பேசுது", அக்டோபர் 2011

19.5.11

திராவிடர் கழகத் தலைவர் மீது இனமலரின் அடங்காத வெறி!.

நாகரிகம் தெரியுமா நரிகளுக்கு?

தி(இ)னமலர் ஏடு இன்று இப்படியொரு கார்டூனை வெளியிட்டுள்ளது.

எதைச் சொல்லியாவது திராவிடர் கழகத் தலைவர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்பதுதான் இனமலரின் அடங்காத வெறி.

தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவரைக் கொச்சைப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு என்கிற முறையில் நடந்துகொண்டு வருகிறது.

திராவிடர் கழகத்தை தினமலர் வகையறாக்கள் எதிர்க்கின்றன - சீண்டுகின்றன என்றால் அது நற்சான்றே தவிர வருத்தப்பட என்ன இருக்கிறது? பார்ப்பனர்கள் சரியாக இருக்கிறார்கள். நம் இனமக்களிடத்தில்தான் குழப்பமோ குழப்பம்! திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல் கட்சியல்ல. தேர்தலில் நிற்கக் கூடியதும் அல்ல.

வரவேற்கவேண்டியதை வரவேற்றும், எதிர்க்க வேண்டியதை எதிர்த்தும் செயல்படுவது என்பது திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு என்பது புத்தியுள்ள ஒவ்வொருவருக்கும் தெரியுமே!

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது என்பது நாகரிகத்தின் அரிச்சுவடி! அதேபோல் நல்லது செய்தால் வரவேற்க வேண்டியது என்பது அறிவு நாணயத்தின் பாலபாடம். இவையெல்லாம் தினமலர் பார்ப்பனக் கும்பலுக்கு எங்கேயிருந்து தெரியப் போகிறது?

எங்கே சாவு வரும் - தர்ப்பணம் பண்ணிப் பணம் பறிக்கலாம் என்று கருதும் கழுகுகள் ஆயிற்றே!

தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று எழுதுகிற சோற்றுப் பண்டார - வயிற்றுப் பிழைப்புக் கூட்டம் இப்படித்தான் கார்ட்டூன் போடும்.

ஆளும் பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்களை 13 வருடம் திராவிடர் கழகம் எதிர்த்துத்தான் செயல்பட்டது என்கிற பொது அறிவு கூட இல்லாததுகள் எல்லாம் பேனா பிடிக்கின்றனவே!

இப்பொழுதே தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் யார் யார் என்று ஆள் காட்டி வேலையில் இறங்கிவிட்டது இந்த இனமலர் - இந்தக் கூட்டத்திடம் அரசு எச்சரிக்கையாக இல்லையானால் அரசு வாகனத்தை அதல பாதாளத்தில் இறக்கிவிட்டுவிடும் - எச்சரிக்கை!

---------------------”விடுதலை” 19-5-2011

6.10.10

பகுத்தறிவுப் பார்வையில் நவராத்திரி


நவராத்திரியாம்!

இந்து மதத்தில் பொழுது விடிந்து பொழுது போனால், இந்த மதத் தொல்லைதான்; ஓயாப் பண்டிகைகள்தான், சடங்குக் குவியல்கள்தான். மனிதனின் அறிவு வேறு எந்த உருப்படியான செயலிலும் பாவக் கூடாது - இந்தச் சகதிகளுக்குள் முடங்கி முணுகிக் கிடப்பதுதான் மனித வாழ்வு என்று ஆக்கிவிட்டது இந்த இந்து மதம்.

ஒவ்வொரு மாதமும் பண்டிகை மட்டுமல்ல; ஒவ்வொரு வாரத்திலும்கூட விரதம், படையல் என்று பார்ப்பனப் பிடுங்கல் சுரண்டலுக்கு வழிவகுப்பவை யாகும்.

விநாயகர் சதுர்த்தி கழிந்தது என்றால், இம்மாதத்தில் நவராத்திரி - ஆயுத பூஜை வகையறாக்கள். நவராத்திரி என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்ல - எல்லாம் ஆரிய வடமொழியின் இறக்குமதிச் சொற்கள்தாம்.

கருநாடக மாநிலத்தில் இதே பண்டிகை தசரா என்றும், வங்காளத்தில் துர்கா பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.

ஒரு நாள் அல்ல, இரு நாள்கள் அல்ல, ஒன்பது நாள்கள் (நவ என்றால் ஒன்பது) கொண்டாடப் படுகின்றன.

ஒவ்வொரு நிமிடமும் மனித வாழ்வுக்கு இன்றியமையாத காலமாகும். காலத்தைக் கண்ணாகப் போற்றும் மனிதனும், நாடும்தான் முன்னேற்றப் பாதையில் முனைந்து ஓடும்.

தொடர்ச்சியாக ஒன்பது நாள்களை மதத்தின் பெயரால் பாழ்படுத்தும் ஒரு நாடு எப்படித்தான் முன்னேறித் தொலைய முடியும்?

ஒவ்வொன்றுக்கும் ஒரு வகையான கதையளப்பு! அறிவுக்குச் சற்றும் பொருந்தாத அழுக்கு மூட்டைகள் அவை.

கடவுள் உருவமற்றவர், கண்ணுக்குத் தெரியாதவர், விருப்பு வெறுப்பு அற்றவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் சூலாயுதத்துடனும், வேலாயுதத்துடனும், கபாலத்துடனும், சிங்கத்தின்மீதும், மூஞ்சூறு மீதும், புலியின் மீதும், காகத்தின் மீதும் சவாரி செய்வது போன்ற உருவங்கள் - வழிபாடுகள் - கோயில்கள் என்றால் இந்த முரண்பட்ட, வெட்கம் கெட்ட மூடத் தனத்தை எண்ணி எங்கு போய் முட்டிக்கொள்வது!

ஒவ்வொன்றுக்கும் ஸ்தல புராணக் குப்பைகள் வேறு - பராசக்தியே துர்க்கையாக இருந்து தீமைகளை அழிக்கிறாளாம்; அவளே சரசுவதியாக இருந்து கல்வியையும், அறிவையும் கொடுக்கிறாளாம்; அவளே மகாலட்சுமியாக இருந்து செல்வத்தையும் வாரி வழங்குகிறாளாம்.

இவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகத்திலேயே இந்து மதக்காரர்கள்தான் கல்வியிலும், செல்வத்திலும், ஆற்றலிலும் முதலிடத்தில் இருக்கவேண்டும்.

11 ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் போட்டும் இன்னும் தற்குறித்தனம் ஒழிக்கப்படவில்லை. இன்னும் 77 விழுக்காடு மக்களின் ஒரு நாள் வருமானம் ரூபாய் 20 தான். சீனாக்காரன் கையில் உள்ள இந்தியாவின் நிலப் பகுதிகள் இன்னும் மீட்கப்படவில்லை.

பூஜைகளுக்கும், புராணப் புளுகுகளுக்கும் ஏதாவது சம்பந்தா சம்பந்தம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். சரசுவதி பூஜை கொண்டாடாத நாட்டில் நூற்றுக்கு நூறு படித்திருக்கிறார்களே! முயற்சி வேண்டாம் - பக்தி போதும் என்று போதனை செய்து வளர்க்கப்பட்ட நாட்டிலே புத்தி எப்படி வளப்பம் பெறும் - முன்னேற்றம் எங்கே முளைகட்டும்?

ஆயுத பூஜையாம் - ஆயுதங்கள் மனிதனின் அறிவு வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு காலகட்டத் திலும் மாற்றம் பெறும். அவை மனிதனின் கருவிகள்தான் - அவற்றிற்குப் பூஜை போடவேண்டுமா?

அப்படிப் பார்த்தால் வீட்டைச் சுத்தம் செய்யப்படும் மிக முக்கியமான கருவி விளக்குமாறுதான் - அதற்குப் பூஜை உண்டா? நகர சுத்தித் தொழிலாளி எந்தக் கருவிகளுக்குப் பூஜை போடுவார்?

விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பூஜைக்குரியவை எவை என்ற கேள்விகள் எழாதா?

குண்டூசி கூட கண்டுபிடிக்கத் தெரியாத நாட்டில் ஆயுத பூஜைக்கு மட்டும் குறைவு இல்லை. கடவுள்களின் கைகளில் இருக்கும் கருவிகள் எல்லாம் கொலைக்கருவிகளாகத்தான் இருக்கின்றன - அந்தக் கருவிகளைக் கொண்டு இந்து மதக் கடவுள்கள் சண்டை போட்டுள்ளன - கொலைகளைச் செய்துள்ளன - அதற்காகத்தான் பூஜை புனஷ்காரங்களா?

பூஜை, புத்தியைக் கொடுக்காது - துன்மார்க்கத்தைத்தான் கொடுக்கும் என்பதற்கு நவராத் திரிப் பண்டிகை ஒன்று போதாதா?

-------------------- "விடுதலை” தலையங்கம் 6-10-2010

5.6.10

இந்து மதத்தில் எதுதான் சாமியில்லை?


பைத்தியம்!

மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டை அருகில் ஒரு கிராமம்; பெயர் அண்டமான் என்பது.

இந்த ஊரில் ஒரு விசித்திரம் யாருமே இந்த ஊரில் செருப்பு அணிந்து நடப்பதில்லையாம்.

இன்று நேற்று அல்ல தலைமுறை தலைமுறையாக இந்த நிலைதானாம்.

ஒருக்கால் ஊரில் செருப்புத் தைப்பவர்கள் இல்லையோ! அங்கு இல்லையென்றால் என்ன, பக்கத்து ஊரில் போய் வாங்க முடியாதா, என்ன?

செருப்புகள் வீட்டில் இருக்கத்தான் செய்கின்றன. வெளியூர்களுக்குச் செல்லும்போது, செருப்புகளைக் கையில் எடுத்துக்கொண்டு போய், ஊர் எல்லையைத் தாண்டியபின் செருப்பை அணிந்துகொண்டுதான் போகிறார்கள். அதுபோல இந்த ஊருக்குள் வருபவர்களும் ஊர் எல்லையின் ஆரம்பம்வரை செருப்புகளை அணிந்துகொண்டுதான் வருகிறார்கள். ஊருக்குள் நுழையும்போது மட்டும் காலில் இருந்த செருப்பு கைக்கு மாறிவிடுகிறது.

என்ன ஒரே மர்மமாக இருக்கிறதே இதில் குடிகொண்டு இருக்கும் சூட்சமம்தான் என்ன? அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

இந்த ஊரில் மந்தையம்மன், கருப்பசாமி கோயில்கள் இருக்கின்றனவாம்!

மக்களைக் காக்கும் இந்த சாமிகள் வாழும் ஊருக்குள் செருப்புப் போடுவது மரியாதை இல்லையாம். அதனால்தான் யாரும் செருப்புப் போட்டுக்கொள்வதில்லையாம். (தகவல்: தினகரன் வெள்ளிமலர்).

செருப்புப் போட்டால் மரியாதை குறைவு என்றால், இந்த சாமிகள் இருக்கும் ஊரின் மண்ணைக் காலால் மிதிக்கலாமா? ஒருவன் கால் இன்னொருவன்மீது பட்டால் அவமானகரமாகத்தானே நினைக்கிறார்கள். அதன் காரணமாக அடிதடி சண்டைக்கூட நடப்பது உண்டே! அப்படியிருக்கும்போது மந்தையம்மன் குடியிருக்கும் மண்ணை மிதிக்கலாமா?

அந்த ஊரில் உள்ள குளத்தில் கால் கழுவலாமா? அந்த ஊர் மண்ணில் மலம் கழிக்கலாமா? சிறுநீர் பாய்ச்சலாமா? வாய்க் கொப்பளிக்கலாமா?

இந்த ஊரில் மட்டும்தான் சாமி கோயில்கள் இருக்கின்றனவா? வெளியூர்களிலும் கோயில்கள் இருக்கத்தானே செய்கின்றன. அங்கெல்லாம் போகும்போது மட்டும் இதே ஊர்க்காரர்கள் செருப்பு அணிந்துகொண்டு செல்லுகிறார்களே இது என்ன போக்கிரித்தனம்? அடுத்த ஊர் சாமி என்றால் இளக்காரமா? அந்தச் சாமிகளுக்கெல்லாம் சக்தியில்லை என்று முடிவு கட்டிவிட்டார்களா?

இந்து மதத்தில் எதுதான் சாமியில்லை? பன்றிகூட மகாவிஷ்ணுவின் அவதாரம்தான்! நாய்கூட பைரவக் கடவுளின் வாகனம்தான். அப்படியிருக்கும்போது, அட நாயே! என்று ஒருவனைத் திட்டலாமா?

பக்திப் பையத்தியம் பிடித்தால் மலம்கூட மலர்தானோ? ராமகிருஷ்ண பரமஹம்சர் தம் மலத்தையே புசித்தார் என்பதுதான் அவருக்குள்ள பெருமையாம்! சிரியுங்கள்! பின்பொறியாலும் சிரியுங்கள்!!

--------------- மயிலாடன் அவர்கள் 5-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

14.5.10

இராமாயணமும் பிள்ளையாரும்



பிள்ளைப்பேறு கிடைத்தல் இலாத அலிகளும் (நபும்சகர்கள்) மலடர்களும் கூட ஒரு முறை இராமாயண பாராயணம் செய்தால் கேட்டால், பிள்ளைப்பேறு பெறுவர் என்பது நமது நாட்டில் வேரூன்றிய நம்பிக்கை.

பயனைக் கோரி நம் நாட்டிற்கு பலவிடங்களிலும் நாளும் நாளும் இராமாயண பாராயணம் செய்வது எல்லோர்க்கும் நன்றாகத் தெரிந்தது. அதிலும் கூடப் பயன் கருதிக் கம்பன் இராமாயணத்தைப் பெரும்பாலும் பாராயணம் செய்வதில்லை; பயன் தவறாமல் கை கூடுமென்று வால்மீகி இராமாயணத்தைத் தான் பெரும்பாலும் பாராயணம் செய்வது. கம்ப இராமாயணம் ஓதினாலும் கவி நயம் கருதித்தான் சிற்சில பிராஹ்மணரல்லாதார் ஓதுவது.

பிராஹ்மணரோ தங்கள் தாய் மொழி தமிழேயாயினும் அவர்களுள் பலர், பிழைப்புத் தொழிற்கும் தமிழ்க் கல்வியையே கடைப்பிடித்துள்ளாராயினும், கம்ப ராமாயணத்தைப் பாராயண முறையில் பாராட்டுவது கிடையாது.

ஏன் பாராயண முறையில் பாராட்டுவதில்லை என்று கருதின், எனக்குத் தோன்றுவது, அவர்கள் கம்பன் பெரும் புளுகை நன்குணர்ந்தவர்கள் என்பதுதான். புனைந்த பொய்க்கதையோதில் நற்பயன் தராதென்று கண்டும், பயன் தரினும் மாறுபட்ட தீப்பயன் தருமென்று அஞ்சியும், வாய்மை பேசும் வால்மீகி இராமாயணத்தையே அவர்கள் பாராயணம் செய்கின்றனர்.... வால்மீகி இராமாயணத்தைப் பாராயணம் செய்தால் கிடைக்கும் பயன் பல்வேறு வகைகளென்று முன் இயம்பினவற்றுள் மலடர்களுக்குப் பிள்ளைப் பேறு கிடைக்கும் என்பது ஒன்றன்றோ? அந்தப் பலனைக் கம்ப ராமாயணப் பாராயணம் கொடுக்கும் வன்மை உடையதல்லவென்று சொல்ல இடமிருக்கிறது. ஏனெனில், அதைத் திருப்பித் திருப்பிப் படித்தாலும் ஆணிற்குப் பெண் மீது நினைப்பை ஊக்கவும், பெண்ணிற்கு ஆண் மீது நினைப்பை ஊக்கவும் ஆன செய்யுட்கள் தென்படுவதில்லை.


வான்மீகி ராமாயணமோ அவ்வாறன்று. அதில் ஆங்காங்கு மிகவும் எளிய அழகிய நடையிற் செய்த ஸ்லோகங்களில் கண்கூடுபடுத்தப்பட்டிருக்கிற லதாக் கிரகங்களும், அவைகளில் இருபாலர்கள் இருக்கும் கோலங்களும், செய்யும் கிரியைகளும், தேவபாடையில் மாத்திரம் சொல்லக் கூடியவைகளாய், இப்போதைய அரசாங்க சட்டப்படி, தமிழிற் சொன்னாலோ, தலைபோய் விடச் செய்யக்கூடியவைகள். அத்தகையவைகளைப் படிக்கும், கேட்கும், நபும்சகரைப் பும்சகராக்கக் கூடியவனவும், மலடனைக் கருவிடும் வன்மையனும், மலடியைக் கருவேற்கும் தன்மையோளுமாக ஆக்கக் கூடியவைகளுமான, திரண்ட நீண்டபரந்த விரிந்த விவரங்கள் பிள்ளைப் பேற்றுப் பயனைக் கொடுக்குமென்று வால்மீகி ராமாயணம் படியாத பலருக்கும் உறுதியாகச் சொல்வேன்....

-------------------- பா.வே. மாணிக்க நாயக்கர் - நூல்:-கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் (பக்கம் 49_52)

11.5.10

அட்சய திருதியை என்னும் புரட்டு...




உழைப்பின் பயனை உறிஞ்சி, உழைப்போரை என்றும் வெறும் சக்கைகளாகவே பிழைப்பு நடத்த வேண்டிய நிலையில் வைத்திருப்பதில், இந்து மதக் கலாச்சாரத்திற்கு இணையாக வேறு எதையும் சொல்ல முடியாது.

பொய் மூட்டைகள்

தொன்மைக் காலத்தில், அரசர்கள் ஆண்டபொழுது, சத்திரியர்களுடன் சேர்ந்துகொண்டு, சில சமயங்களில் வைசியர்களையும் இணைத்துக் கொண்டு, சூத்திரர்களைச் சுரண்டுவதற்கு வேதம், இதிகாசம், புராணம், ஜோதிடம் முதலிய பொய் மூட்டைகளைப் பார்ப்பனர்கள் பயன்படுத்தினார்கள்.

நவீன அறிவியல் காலத்திலும் பகுத்தறிவற்ற படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள், பதவியை நாடும் அர-சியல்வாதிகள், பேராசை கொண்ட பணக்காரர்கள் முதலியவர்களை இதிகாச, புராணக் கதைகளைக் காட்டி மதவாதிகளும், ஜோதிடர்களும், சாமியார்களும் ஏமாற்றுவது தொடர்வது பரிதாபத்திற்கு உரியதாகவும் வருந்தத்தக்கதாகவும் இருக்கிறது.

ஓராண்டு முழுவதும்.. .

அதில் ஒன்றுதான் அட்சய திருதியை எனும் ஏமாற்று. இது அண்மையில் சில ஆண்டுகளாக பிரபலம் ஆக்கப்படும் நகைப்புக்கு உரிய ஒரு கூத்து. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், அப்படி வாங்குவோருக்கு எல்லாம் அந்த ஆண்டு முழுவதும் தங்கம் வாங்கிக் கொண்டே இருக்கும் அளவுக்குச் செல்வம் கொழிக்குமாம்! ஆசை வயப்பட்டவர்களுக்குப் பேராசையைத் தூண்டும் ஓர் அற்புதமான மூடநம்பிக்கைக் குளிகை இது.

பாரதம்

இந்த மூட நம்பிக்கையை உண்மையைப் போல் நம்ப வைப்பதற்குப் பயன்படுத்துவது இதிகாசப் புராணக் கதைகள்தானே! அட்சய திருதியையை நம்ப வைப்பதற்கு மகாபாரதத்தில் இருந்து ஒரு கப்சாவைப் பயன்படுத்துகிறார்கள்.

துர்வாசர் என்பவர் முனிவர்களுக்குத் தலைவன். அவனுக்கு ஏராளமான சீடர்கள். அவன் ஏதேனும் அரசரின் இருப்பிடத்திற்குச் சென்றால், அவனுக்கும் அவனுடைய சீடர்களுக்கும் உணவளித்து உபசரிக்க வேண்டும். இல்லை என்றால், முன் கோபியான துர்வாச முனிவரின் சாபத்திற்கு உள்ளாகி அரசன் அவதிப்படுவான்.

ஒருநாள், துரியோதனனின் அரண்மனைக்கு துர்வாசனும் அவனுடைய பார்ப்பனச் சீடர்களும் செல்கிறார்கள் காலை நேரத்தில். நல்ல உணவு கிடைக்கிறது. மனத்திருப்தி அடைந்து துரியோதனனை வாழ்த்தி விடைபெற முனைகிறார், முனிவர் துர்வாசர். அப்பொழுது துரியோதனன் கூறுகிறான்: இன்று அட்சய திருதியை, மிக நல்ல நாள்; உங்களுக்கு விருந்து வைக்கும் நல்ல வாய்ப்பும், உங்கள் அருளும் எனக்குக் கிடைத்தது. இதே சிறப்பைப் பாண்டவர்களும் பெறவேண்டும். ஆகையால் காட்டில் வாழும் அவர்களுடைய இருப்பிடத்திற்குச் சென்று விருந்துண்டு, அவர்களையும் ஆசிர்வதிக்க வேண்டும் என்றான்.

அவ்வாறே செய்வோம் என துர்வாசர், துரியோதனனிடம் கூறிவிட்டுப் பாண்டவர்கள் வாழும் காட்டிற்குச் சென்றான்.

துர்வாச முனிவரின் சீடர்கள் மிகப் பலர். அவர்கள் அனைவருக்கும் உணவு சமைக்கப் பாண்டவர்கள் அவதிப்படுவர்; அவர்களால் முடியாது. திரவுபதியிடம் ஓர் அட்சயப் பாத்திரம் உண்டு. அதில் அள்ளஅள்ள உணவு குறையாது. ஆனால், ஒரு நாளில் ஒரு முறை அதைப் பயன்படுத்திய பின்பு, அதைக் கழுவி வைத்துவிட்டால், அதை மீண்டும் மறுநாள்தான் பயன்படுத்த முடியும். துர்வாசர், காலையில் துரியோதனன் அரண்மனையில் தன் பார்ப்பனச் சீடர் பலருடன் வயிற்றை நிரப்பியாயிற்று. இனி, மதிய உணவிற்குத்தான் பாண்டவர் இருப்பிடம் செல்வார்கள். அதற்குள், திரவுபதி அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்திருப்பாள். துர்வாசரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவ்வளவு பேருக்கும் சமைக்க முடியாது; பசியினால் துர்வாசரின் கோபம் பொங்கி எழும்; பாண்டவர்களைத் தன் சாபத்திற்கு உள்ளாக்குவார்; அவர்கள் அழிவார்கள். இது துரியோதனனின் திட்டம் என்று பாரதத்தில் வியாசர் கதை அளக்கிறார்.

துரியோதனன் வேண்டியபடியே துர்வாசன் பாண்டவரிடம் செல்கிறான்; மதிய உணவு தங்கள் அனைவருக்கும் அளிக்கவேண்டும் எனக் கூறிவிட்டு, ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வருவதாகச் சொல்லி சீடர்களுடன் ஆற்றுக்குச் செல்கிறான்.

கிருஷ்ண பகவான்

பஞ்சபாண்டவர்களின் பத்தினி திரவுபதிக்குக் கவலை கவ்விக் கொள்கிறது. துரியோதனன் எதிர்பார்த்தபடியே, அட்சய பாத்திரத்தை முற்பகலில் பயன்படுத்தி, வந்தவர்களுக்கு விருந்தளித்து, அதைக் கழுவி கவிழ்த்து வைத்திருந்தாள். என்ன செய்வது? உடனே எப்பொழுதும் போல் கிருஷ்ண பகவானின் நினைவு வந்தது. மனதுக்குள் முறையிட்டாள்; பகவானும் வந்தார். அட்சய பாத்திரத்தை எடுத்து வரும்படி கூறினார்: அது பயன்படாது, கழுவியாயிற்று என திரவுபதி கூறினாள். இருப்பினும் பகவான் வற்புறுத்தினார். பாத்திரத்தைக் கொண்டு வந்தாள்; அதில் ஒரு சோற்றுப் பருக்கை ஒட்டிக் கொண்டிருந்தது. பருக்கை ஒட்டிக் கொள்ளாமல் கழுவவேண்டுமெனக் கிருஷ்ணன் அறிவுரை கூறவில்லை. அதற்கு மாறாக, அந்தப் பருக்கையை வாயில் போட்டு விழுங்கினான். உலகில் உள்ளவர்கள் பசியை எல்லாம் அந்த ஒரு சோற்றுப் பருக்கை போக்கிவிட்டது. துர்வாச முனிவரும் அவனு-டைய சீடர்களும் அவ்வாறே வயிறு நிரம்பியதாக உணர்ந்தனர். பாண்டவர்களிடம் வந்து அவர்களை வாழ்த்தினர்.

கதையின் நோக்கம் என்ன?

அட்சயப் பாத்திரத்தின் மகிமையைச் சொல்வதாக வரும் இந்த இதிகாசக் கதை நிகழ்ச்சி எதற்காகச் சொல்லப்பட்டது? ஒன்று, வருண தர்மத்தையும் ஜாதி பேதத்தையும் தனது கீதையில் உபதேசித்த கிருஷ்ணனுக்கு மகிமை ஏற்படுத்தி அவன் மீது பக்தி உண்டாக்க வேண்டும் என்பது. இரண்டு, முனிவர்கள் எனத் தங்களைச் சொல்லிக் கொண்டு, எத்தனை பார்ப்பனர்களுடன் அவர்கள் வந்தாலும் அரசர்கள் அவர்களுக்கு வயிறு நிரம்ப உணவு அளித்துப் பரிசுகள் வழங்கவேண்டும் என்பது. மூன்றாவதாக, இந்நாட்டின் பழங்குடிகளை பல மூடநம்பிக்கைகளில் மூழ்கடித்திருப்பது போதாது என்று, அட்சயபாத்திரம் என்ற மேலும் ஒரு மூடநம்பிக்கையிலும் ஆழ்த்தவேண்டும் என்பது. இந்த மூன்று சூதான திட்டங்களிலும், பார்ப்பனர்கள் இன்றுவரை பெருமளவில் இந்திய மக்களை, இந்துக்கள் எனப்படுவோரை, ஏமாற்றியே வருகிறார்கள்.

அட்சயப் பாத்திரத்துடன் தொடர்புடையது அட்சய திருதியை நாள். அட்சயப் பாத்திரத்தில் உணவு பெருகுவதைப் போலவே, இந்த நாளில் செய்யும் நல்ல காரியம் ஓராண்டு முழுவதும் பலமடங்கு பெருகும் (மற்ற நாளில் செய்யும் நல்ல காரியத்துக்கு மகிமையில்லையா?). அதற்கு ஒரு கதை வேண்டும் அல்லவா?

ஆதிசங்கரர் ஒரு நாள் பிச்சை எடுத்து வந்தார். ஏழைப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றார். ஆதிசங்கரரின் பெருமையை அந்தப் பெண் அறியாதவளாம். ஆகையால் தன்னிடம் இருந்த மாம்பழத்தைப் பிச்சையாகப் போட்டாளாம். (இதில் என்ன சிறுமை அல்லது குறையைக் கதையளப்பவர் கண்டாரோ தெரியவில்லை.) உடனே, ஆதி சங்கரரின் அருளால், அப்பெண்ணின் இல்லத்தில் தங்கத்தால் ஆன கனிகள் குவிந்தனவாம்!

இந்தக் கதையை விளம்பரப்படுத்தி எதை வலியுறுத்துகிறார்கள்? அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், அந்த ஆண்டு முழுவதும், அதற்குச் செலவிட்ட தொகை பல மடங்கு பெருகுமாம்! (அடுத்த ஆண்டு பலன் பெற மீண்டும் தங்கம் வாங்க வேண்டும். எப்படி ஏமாற்றுவித்தை?).

பெரியார்

திட்டமிட்டு, உழைத்து, வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்திற்கு இந்தக்கதை உதவுமா? இந்த மூடநம்பிக்கை,தங்கநகை வணிகம் செய்வோருக்கு லாபத்தைப் பெருக்குவதற்குத்தானே பயன்படும்? ஆகையால் தானே, இந்து மதமும் அதன் அடிப்படையில் அமைந்த கதைகளும், மக்களை ஏமாற்றவும், சோம்பேறிகள் ஆக்கவும் படைக்கப் பட்டிருக்கின்றன எனத் தந்தை பெரியார் கூறினார்.

முடக்கமா? முதலீடா?

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி வீட்டில் முடக்குவது நாட்டின் பொருளாதாரத்தை முடக்குவதற்குத்தானே பயன்படும்! நாட்டின் ஒட்டு மொத்தச் செல்வத்தை உயர்த்தும் முதலீடாக அது இருக்கமுடியுமா? பாமரர்களைச் சுரண்டி, கொள்ளை லாபம் பெறுவதற்குத்தானே தங்கத்தில் மோகம் கொள்ளச் செய்வது உதவும்!

------------------------கு.வெ.கி. ஆசான் அவர்கள் 11-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

5.12.09

பாபர் மசூதி இடிப்பும் - சங் பரிவார் வகையறாக்களும்


திமிரடி என்பது இதுதான்!

1992 டிசம்பர் 6 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் பா.ஜ.க. சங் பரிவார் காவிக் கும்பல் 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்கள் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்துத் துவம்சம் செய்து குதூகலித்தது. உலகமே இது கண்டு நகைத்தது. இந்தியாவின் மதச் சார்பின்மையின் கண்ணியம் இதுதானோ என்று ஏளனம் செய்தது.

ஆண்டுகள் 17 ஓடிவிட்டன. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் வாக்குறுதி அளித்தபடி இடிக்கப்பட்ட இடத்தில் மசூதி மீண்டும் கட்டிக் கொடுக்கப்படவில்லை.

குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்த கதையாக, பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நாடெங்கும் மதக் கலவரங்களை உண்டாக்கி சிறுபான்மை மக்களின் உயிரைக் குடித்தார்கள்.

இந்த அளவில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள், தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தித் தங்களின் உணர்வுகளைத் தெரிவிக்கவும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே நாளில் நியாயம் கேட்டுக் குரல் எழுப்புவதிலும் அர்த்தம் உண்டு.

அதே நேரத்தில் அந்த நாளில் நாங்களும் போராட்டம் நடத்துவோம் என்று இந்து முன்னணி வகையறாக்கள் கூறுவது அவர்களின் மதவெறித் தனத்தின் கேவலத்தைப் பறைசாற்றுவதாகும்.

பாதிக்கப்பட்டவர்கள் உரிமைக்குரல் கொடுக்கிறார்கள் என்றால், அந்தப் பாதிப்புக்குக் காரணமானவர்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க முனைவது எந்த வகையில் நியாயம்?

அடிபட்டவனுக்கு அழக்கூட உரிமையில்லையா? எந்த அளவுக்கு அராஜக புத்தியிருந்தால், இப்படியெல்லாம் செயல்பட முன்வருவார்கள்?

இந்துக்கள் பெரும்பான்மையினர்; முஸ்லிம்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர்தானே என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்கின்ற கொழுப்பா ஆணவமா?

இந்துக்களின் பிரதிநிதிகள் என்று இந்து முன்னணி வகையறாக்களை யார் ஏற்றுக் கொண்டார்கள்? இந்துக்களில் எத்தனை எத்தனை பிரிவுகள் உண்டு? காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் யானைக்கு எந்த நாமம் போடுவது என்று சில நாள்களுக்கு முன்பு கூட தகராறு ஏற்பட்டதே, சில ஆண்டுகளுக்கு முன் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு தெருவில் கட்டிப் புரண்டார்களே!

ராமன் கோயில் விவகாரம் வைணவர்களைப் பொறுத்தது. இதில் சங்கராச்சாரியார் ஏன் தலையிடுகிறார் என்று கூட எதிர்க் குரல் கேட்டதே! திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறைக்குள் காஞ்சி சங்கராச்சாரியார் சென்றது கூட பெரிய பிரச்சினையாக புயலாக வெடித்துக் கிளம்பியதே! இந்த நிலையில் இந்து முன்னணிக் கூட்டம் இந்துக்களுக்கெல்லாம் ஏகப் பிரதிநிதிகள் போல வஸ்தாதுக் காட்டுகிறார்களே!

இதுபோல் அடாவடித்தனமாகப் பேசுவது என்பது ராமகோபாலனுக்குக் கைவந்த கலை. அதன் மூலம் ஒரு தற்காலிக விளம்பரம் கிடைக்கும் அல்லவா? அதற்குத்தான் இந்தச் சில்லறை அறிக்கைகள்.

இந்திய அரசு ஒன்றை உணரவேண்டும். பாபர் மசூதி இடிப்பு என்பது மாபெரும் குற்றமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த மரியாதையைக் கேவலப்படுத்தக் கூடிய செயலாகும். உலகில் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கக்கூடிய இசுலாமியர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படாத காரணத்தால் இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார் வகையறாக்கள், நம்மைத் தட்டிக் கேட்க ஆளில்லை என்ற மனப்பான்மையில், இது போன்ற வல்லடி வழக்குகளில் ஈடுபடுகிறார்கள். வீண் வம்புக்கு வரும் விஷம வேலைகளில் குதிக்கிறார்கள். இதனை அனுமதிக்கக்கூடாது.

எவ்வளவு விரைவாக பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரமுடியுமோ, அவ்வளவு விரைவாக அந்தக் கடமையைச் செய்தால்தான் இந்த நச்சுக் கூட்டத்தினரின் விஷமத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களிடத்திலிருந்து தீவிர உணர்வோடு இளைஞர்கள் உருவாகாமல் இருப்பதற்கும் இதுதான் சரியான மார்க்கமுமாகும்.

------------------------"விடுதலை" தலையங்கம் 5-12-2009

4.12.09

காமக் கொடூரன் காஞ்சிபுரம் பார்ப்பன அர்ச்சகரும்-காப்பாற்றாத கடவுளும்

அப்போதெல்லாம் அவர்களைக் காப்பாற்றிய கடவுள்
இப்போது இவர்களைக் காப்பாற்ற முன்வரவில்லையே; ஏன்?

ஆற்றில் தண்ணீர் குடிக்கச் சென்றது ஒரு யானை, அது தண்ணீர் பருகிக் கொண்டிருக்கும்போது தண்ணீருக்கடியிலிருந்த முதலை ஒன்று யானையின் காலைப் பற்றித் தண்ணீருக்குள் இழுத்தது. யானை வலி தாளாமல் கதறியது. முதலை வாயிலிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கடவுள் பெயரைச் சொல்லிச் சொல்லி கதறியழுதது.

அந்த யானையின் கூக்குரல் கேட்டு கடவுள் அந்த இடத்தில் பிரசன்னமானார். யானையை முதலை வாயிலிருந்து மீட்டுக் காப்பாற்றினார் என்பது ஒரு கதை!

*********************************************

மிருகண்டு முனிவருக்கு பல வருடங்களாகப் புத்திரபாக்கியம் இல்லை. தனக்கு ஒரு மகன் பிறக்கவேண்டும் என்று வேண்டி அவர் போகாத ஊர் இல்லை; பிரார்த்திக்காத கடவுள் இல்லை.

ஒருநாள் கடவுள் மிருகண்டு முனிவர் கனவில் தோன்றினார்.

உனக்கு நீண்டகாலம் வாழக்கூடிய மகன் வேண்டுமா? அல்லது 16 வயது வரையில் மட்டுமே வாழக்கூடிய நற்குணங்கள் படைத்த மகன் வேண்டுமா? - என்று கேட்டார்.

மிருகண்டு முனிவர் 16 வயது வரையில் வாழும் நல்ல குழந்தை கொடுத்தால்போதும் என்று வரம் கேட்கிறார்.

மிருகண்டு முனிவருக்கு ஓர் அழகான குழந்தை பிறக்கிறான்; அவனைப் பாலூட்டிச் சீராட்டி பாசத்தோடு வளர்க்கிறார். மார்க்கண்டேயன் என்பது அவனது பெயர்.

அவனுக்கு 16 வயது நிறையப் போகிறது. 16 வயது நிறைவு நாளன்று மரணத்துக்குக் கடவுளான எமதர்மனின் தூதர்களான யமகிங்கரர்கள் அவனது உயிரை எடுக்க வருகிறார்கள்.

அவன் கோவிலுக்குள் ஓடிப்போய் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு பகவானே காப்பாற்று என்று கதறுகிறான். யமகிங்கரர்களோ பாசக் கயிற்றை வீசுகிறார்கள்.

சிவலிங்கத்தையும் சேர்த்துப் பாசக் கயிற்றால் இழுக்கிறார்கள். அப்போது அங்கே சிவபெருமான் தோன்றி யமனுக்கு சாபம் கொடுத்துவிட்டு மார்க்கண்டேயனைக் காப்பாற்றுகிறார். அது மட்டுமல்ல, அவனுக்கு எப்போதும் 16 வயதுதான் என்று வரமும் தருகிறார்.

இதுவும் ஒரு கதைதான்!

******************************************************************

மயிலாப்பூரில் ஒரு சிவபக்தர். அவருக்கு ஒரு மகள். பூம்பாவை என்று பெயர்.

அவளைத் திருஞான சம்பந்தருக்குத்தான் திருமணம் முடிப்பது என்று சபதமிட்டுக் கொள்கிறார் அந்த சிவபக்தர். ஒருநாள் -

அந்தப் பெண் இறந்து போய்விடுகிறாள். மனமுடைந்த சிவபக்தர் அந்தப் பெண்ணின் உடலை எரித்து சாம்பலை சேகரித்து ஒரு செம்பில் வைத்து பத்திரமாக மூடிவைக்கிறார்.

சில காலம் கழித்து -

மயிலாப்பூருக்கு திருஞான சம்பந்தரே வருகிறார். அவரைத் தனது இல்லத்திற்கு அழைத்து வந்து அவர் முன் சாம்பலடங்கிய செம்பை முன் வைத்து கண்ணீர் மல்க உங்களுக்குத் திருமணம் செய்து தரவேண்டும் என்ற ஆசையோடு வளர்த்து வந்தேன் என்று கம்மிய குரலில் கூறுகிறார்.

திருஞான சம்பந்தர் கவலைப்பட வேண்டாம்; உங்கள் பெண்ணை நான் உயிர்ப்பித்துத் தருகிறேன் என்று கூறிவிட்டு

மட்டிட்ட புன்னைக் கான

மடமயிலைகட்டிட்டம் கொண்டான்

கபாலீச்சுரம் அமர்ந்தான்...

என்ற பதிகத்தைப் பாடினார். என்ன ஆச்சரியம் அந்தப் பெண் உயிரோடு எழுந்துவிட்டாள்!

இதுவும் ஒரு கதைதான்!

********************************************************

திருநாவுக்கரசர் என்னும் அப்பரடிகளுக்கு ஒரு வெறி பிடித்த பக்தர் பெயர் அப்பூதியடிகள்.

தனது பிள்ளைகளுக்கெல்லாம் அப்பர் சுவாமிகளின் பெயரையே சூட்டியிருந்தார்! ஒருநாள்

அப்பர் அவரது வீட்டிற்கு எழுந்தருளினார். அவருக்கு விருந்து படைக்க அப்பூதியடிகள் அறுசுவை உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவரது மகன் தலைவாழை இலை பறித்து வரக் கொல்லைப்புறம் சென்றான். அவன் இலை அறுத்துக் கொண்டிருந்தபோது ஒரு பாம்பு அவனைத் தீண்ட அங்கேயே விழுந்து இறந்துவிட்டான்.

தகவலறிந்த அப்பூதியடிகள் பதறிப் போனார். எனினும் மகன் இறந்த செய்தியை வெளியிட்டால் அப்பர் தன் இல்லத்தில் விருந்துண்ணும் பாக்கியம் தனக்குக் கிடைக்காமல் போய்விடுமே என்று நினைத்து மகன் இறந்த செய்தியையே மறைத்துவிட்டு விருந்து படைக்க முன்வந்தார். அப்பர் கேட்டார் உன்னுடைய இன்னொரு மகன் எங்கே? என்று!

அவரது காலடியில் வீழ்ந்து கதறி நடந்தவற்றைச் சொல்லி மன்னிப்புக் கோரினார் அப்பூதியடிகள்.

அப்பர் சுவாமிகள் அவரது பக்தியை மெச்சினார். ஒரு பாடலைப் பாடினார்;

பாம்பு கடித்து இறந்த மகன் உயிர் பிழைத்து எழுந்து வந்தான்!

- இதுவும் ஒரு கதைதான்!

*********************************************************************

திருச்செங்காட்டாங்குடி என்று ஒரு ஊர். அந்த ஊரிலே ஒரு சிவனடியார். சிறுத்தொண்டர் என்று பெயர். அவர் சிவபக்தர்தான். அவரை அணுகி என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கேட்டதைக் கொடுக்கக்கூடியவர். அவரது இல்லத்துக்கு ஒரு சிவனடியார் வந்தார். வழக்கம் போல் சிறுத்தொண்டர் என்ன வேண்டுமென்று கேட்டார்.

‘‘உன் மகனை வெட்டிக் கறி சமைத்து எனக்கு விருந்து வை’’ என்று கேட்டார் சிவனடியார்.

சிறிதும் தயக்கமின்றி சிறுத்தொண்டர் தனது மகனை வெட்டி பிள்ளைக்கறி சமைத்து சிவனடியாருக்கு விருந்து படைக்க முன் வந்தார்.

பிள்ளைக் கறி கேட்ட அந்த சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான்,

சிறுத்தொண்டர் முன் தோன்றி பக்தா உன் பக்திக்கு மெச்சினேன் என்று பாராட்டி கறி சமைக்கப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தார்.

- இதுவும் ஒருகதைதான்!

திருவாரூரில் மனுநீதிச் சோழன் - தனது அரண்மனை வாயிலில் ஓர் ஆராய்ச்சி மணியைக் கட்டித் தொங்கவிட்டிருந்தான்.

பொதுமக்களுக்கு ஏதாவது குறை என்றால் அந்த மணியை அடித்தால் மன்னனே நேரில் வந்து குறை கேட்டு கோரிக்கையை நிறை வேற்றி வைப்பான்!

ஒருநாள் ஆராய்ச்சி மணி ஒலித்தது. மன்னன் வெளியே வந்து பார்த்தபோது மணியின் கயிற்றை தன் வாயால் கவ்வி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது ஒரு பசு மாடு. அதன் கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று சுரந்து கொண்டே இருந்தது.

மந்திரியை அழைத்த மன்னன்,

‘‘இந்தப் பசுவுக்கு என்ன குறை?’’ என்று கேட்டான்.

‘‘மன்னா, இந்தப் பசுவின் கன்று மீது நமது இளவரசர் தேரேற்றிக் கொன்றுவிட்டார்’’ என்று காரணம் சொன்னார் அமைச்சர்.

அப்படியா? - கன்றை இழந்து தவிக்கிறது இந்தப் பசு; இது போலவே கன்றின் மேல் தேரை ஏற்றிக் கொன்ற எனது மகனை இளவரசனை நடுவீதியில் கிடத்தி தேரை ஏற்றிக் கொன்று விடு என்று கட்டளையிட்டான் மனுநீதிச் சோழன்.

இளவரசனைத் தெருவில் கிடத்தி தேர் ஏற்றி நீதி வழங்கப்பட்டபோது தியாகேசப் பெருமான் தோன்றி கன்றுக் குட்டிக்கும் இளவரசனுக்கும் உயிர் கொடுத்து அருள் பாலித்தார்!

இதுவும் ஒரு கதைதான்!

************************************************************

இதோ இன்னொரு கதை அல்ல - நடந்த உண்மை நிகழ்வு.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக இருந்த தேவனாதக் குருக்கள், கோவிலுக்குள் சாமி சிலையின் பின்புறம் பல பெண்களை அழைத்துச் சென்றுஅந்த மறைவிடத்தில் மன்மத லீலைகள் நடத்தி வந்தார். இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

தேவநாதக் குருக்களின் காமவலையில் சிக்கி வாழ்வை இழந்த எத்தனையோ பெண்களில் ஒரு பெண்போலீசாரிடம் தந்த வாக்குமூலம்:-

நான் காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள மச்சேஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றேன். அப்போது அர்ச்சகர் தேவநாதன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். சாமிக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டிய பிறகு திடீரென அவர் நாக்கை நீட்டு என்றார். உடனே அவர் நாக்கில் ஏதோ மருந்தை லேசாக தடவினார்.

அதை தடவிய சிறிது நேரத்தில் நான் அரை மயக்கத்திற்கு தள்ளப்பட்டேன்.

அப்போது கருவறையில் என்னுடன் உறவு கொள்ள விரும்புவதாக கூறினார். நான் மறுத்தேன்.

அதையும் மீறி எனது சம்மதம் இல்லாமல் என்னுடன் உறவு கொண்டார்.

மேலும் அந்த காட்சியை அவருடையசெல்போனில் படம் பிடித்தார்.

பிறகு அடிக்கடி எனக்கு போன் செய்து, செல்போனில் உனது படம் உள்ளதென மிரட்டி பலமுறை கோவில் கருவறையிலும், வீட்டிலும் என்னுடன் உறவு கொண்டார்.

இப்போது நான் உண்மையை சொல்ல வேண்டிய மனநிலையில் வந்துள்ளேன்.

- இவ்வாறு அந்த பெண் வாக்கு மூலத்தில் கூறி இருக்கிறார்.

***********************************************************************

யானையைக் காப்பாற்றிய கடவுள்; கறி சமைக்கப்பட்ட பாலகனை உயிர்ப்பித்துத் தந்த கடவுள்; தேர் ஏறிக் கொலையுண்ட கன்றையும், இளவரசனையும் காப்பாற்றிய கடவுள்

தான் குடிகொண்டுள்ள கோவிலில் தன் பின்பக்கமே வாழ்விழந்த பெண்களை காமக் கொடூரனின் மிருக இச்சையிலிருந்து காப்பாற்றாமல் சும்மா இருந்து விட்டாரே; ஏன்?

நன்றி: ‘முரசொலி’, 2.12.2009

2.12.09

அய்யப்பனும் - அயோக்கியத்தனமும்!



அய்யப்பனுக்கு அபார சக்தியிருக்கிறது என்றும், அய்யப்பனுக்காக விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை சென்று வந்தால் தீராத நோய்கள் எல்லாம் தீருமென்றும், தீவினைகள் எல்லாம் அகலும் என்றும், சதா பிரச்சாரம் செய்தும் குறுந்தகடுகளை வெளியிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.

ஆனால், நடப்பது என்ன? அய்யப்பப் பக்தர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி மரணம் என்கிற பரிதாப செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மாரடைப்பு ஏற்பட்டு பக்தர்கள் சபரிமலையிலேயே மரணம் என்றும் ஏடுகள் செய்திகளைப் போடுகின்றன. போதும் போதாதற்கு அய்யப்பன் கோயிலில், பிரத்தியேகமாக உள்ள மருத்துவர்கள் இப்பொழுது அறிக்கையினைக் கொடுத்துள்ளனர்.

இதய நோயாளிகள், ரத்த அழுத்தம், கொழுப்பு (கொலஸ்ட்ரால்) பாரம்பரிய இதயநோய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், 55 வயதுக்குமேல் ஆனவர்கள், சபரிமலை ஏறும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

பயணத்திற்குமுன் மருத்துவரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டும். இதயத்தின் செயல்பாட்டைத் தெரிந்துகொண்ட பின்னரே பயணம்பற்றி முடிவெடுக்கவேண்டும்.

அவ்வாறு வரும்போது, வியாதிபற்றிய குறிப்புகளும், சாப்பிடும் மருந்துபற்றிய குறிப்புகளும் டைரியில் எழுதிக்கொண்டு வரவேண்டும்.

மலை ஏறுவதற்கு முன்னர் பம்பையில் அதிக உணவு சாப்பிடக் கூடாது. லேசாக சாப்பிட்டுவிட்டு மலையேறவேண்டும். வயிறு நிறைய சாப்பிட்டால் இதயத்தின் வேலைப் பளுவும் கூடும். மலை ஏறும்போது நெஞ்சு வலியோ, மூச்சுத் திணறலோ, அசாதாரண நிலையோ ஏற்பட்டால், உடனடியாக மலை ஏறுவதை நிறுத்தி, மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறவேண்டும். ஏறும்போது நாடித் துடிப்பு நிமிடத்துக்கு 140 க்குமேல் இருக்கக்கூடாது.

மலையேறும்போது அய்கோர்டின் மாத்திரையை அதிகமாக நாக்குக்கு அடியில் வைப்பதால் ரத்த அழுத்தம் குறைந்து தலை சுற்றல் போன்றவை ஏற்படும்.

மேலும் வழக்கமாக மருந்து சாப்பிடுபவர்கள் மலையேறும்போது ரத்தத்தில் சர்க்கரை குறைந்து உடல் தளர்ச்சி ஏற்படலாம். இதற்காக அவர்கள் கையில் குளுகோஸ் வைத்துக் கொள்ளவேண்டும்!

இவ்வாறு அய்யப்பன் கோயில் சன்னிதான மருத்துவர் ஹரீந்திரபாபு கூறியுள்ளதாக தினமலரே (1.12.2009) கூறியுள்ளது.

இது முழுக்க முழுக்க அய்யப்பன் சக்தியைக் கேலி செய்வதாக இல்லையா? தன்னை நாடிவரும் பக்தர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியாத கடவுள் அய்யப்பன், சக்தி வாய்ந்தவன் என்றும், பக்தர்களின் குறைகளை, கஷ்டங்களை, நோய் நொடிகளை, பாவங்களைப் போக்குபவன் என்றும் சொல்லுவதெல்லாம் பச்சையான பித்தலாட்டம் அல்லவா?

வில்லாளி வீரனே

வீரமணி கண்டனே,

தாங்கி விடப்பா

ஏந்தி விடப்பா

தூக்கி விடப்பா

ஏற்றி விடப்பா

என்று அய்யப்ப சரணம் பாடிச் செல்லும் பக்தர்களைக் காப்பாற்றும் சக்தி அய்யப்பனுக்கு இல்லை என்பதைத்தானே சன்னிதான மருத்துவரின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

எந்தப் பக்தராவது இது கடவுளை அவமதிக்கும் செயல் என்று சொல்லவில்லையே, ஏன்?

இவற்றையெல்லாம்விட மிகக் கேவலமானது அய்யப்பன் பெயரால் நடத்தும் மகரஜோதி பித்தலாட்டம்!

கேரள மின் வாரியத்தைச் சேர்ந்த ஊழியர்கள் செயற்கையாக சூடத்தைக் கொளுத்திக் காட்டுகின்றனர் என்பதை கேரள மாநில முதலமைச்சர், இந்து அறநிலையத் துறை அமைச்சர், அறக்கட்டளைத் தலைவர், கோயில் தலைமை அர்ச்சகர் வரை ஒப்புக்கொண்ட பிறகும் மகரஜோதியை அனுமதிப்பது எந்த வகையில் சரி?

பக்தியின் பெயரால் எந்தப் பித்தலாட்டத்தையும் அரசு அங்கீகாரத்தோடு அரங்கேற்றலாம் என்றால், பக்தியின் யோக்கியதையையும், அரசின் தன்மையையும் தெரிந்துகொள்ளவேண்டாமா?

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது விளங்குகிறதா?

-----------------------" விடுதலை" தலையங்கம் 2-12-2009

30.11.09

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?



கேரளம் _ கேர என்ற மலையாள சொல்லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர். சந்தேகமாக இருந்தால், உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான், சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்டுத் தமிழன் விலைக்கு வாங்கி, தலையில் இருமுடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான். அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்வாகமும் ஏதாவது எண்ணைய் எடுக்கிற நிறுவனத்திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது. அந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது. தேங்காயை விலைக்கு வாங்கிய தமிழன்,அதே தேங்காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்பவும் விலைக்கு வாங்குகிறான். அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான். கேரளக்காரன் தமிழனின் தலையில் இப்படித்தான் மிளகாய் அரைக்கிறான்! அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவிலுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் சரியாகச் சொன்னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்குமாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்கிறார்கள்!

கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்! எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்கமாக, கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஆபாசமாக இருக்கிறது, அய்யப்பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு! அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடுகள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..!

கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.

அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்ததாக கூறப்படும் கேரளத்தில், கேரள மக்கள் அய்யப்பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்றுகிறார்கள்! இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள... அதாவது தன்னை சிலுவையில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்! கொடுமைடா சாமி! நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே! கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு? கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், ஒன்றே ஒன்று தான்! தமிழர்களே! தமிழர்களாக இருங்கள்!!

------------------நன்றி: ஓடும் நதி

28.11.09

சாயிபாபா பாணியில் திருநீறு வருவித்துக் காட்டுதல்



தன்னைத்தானே அவதாரம் என விளம்பரப் படுத்திக் கொள்ளும் சாயிபாபா செய்வது போலவே சாதாரண மந்திரவாதியும் திருநீறு வருவித்துக் காட்டுகிறார்.

அவரது உள்ளங்கை கீழ்நோக்கி இருக்க, கையை இரண்டு மூன்று முறை வட்டவடிவில் அசைக்கிறார். பின் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அவரது விரல் நுனிகளில் இருந்து திருநீறு கொட்டுகிறது. இந்த திருநீற்றின் தரமும் மணமும் கூட சாயிபாபா வழங்கும் திருநீற்றின் தரத்திலேயே உள்ளது. ஏனெனில் இந்த சாமியார் திருநீறு வாங்கும் அதே கடையிலிருந்துதான் இந்த மந்திரவாதியும் திருநீற்றை விலைக்கு வாங்குகிறார்.

தேவையான பொருள்கள்: வாசனை விபூதி, அரிசிச்சோறு வடித்ததில் இருந்து பெறப்பட்ட கஞ்சி, விபூதியை வில்லைகளாக தயாரித்துக் கொள்ள ஒரு தட்டு.

செய்முறை: வாசனைத் திருநீற்றை அரிசிக் கஞ்சி நீரில் கலந்து, சிறு வில்லைகளாக செய்து காயவைக்கவும். இந்த வில்லையைக் கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையில் மறைத்துக் கொள்ளவும். விரைப்பாக வைக்காமல் கையைத் தளர்த்தி வைத்துக் கொள்ள பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.

விபூதி வில்லையைப் பார்வைக்குப் படாமல் விரலிடுக்கில் ஒளித்து வைத்திருக்கும் நிலையிலேயே வணக்கம் சொல்லவும், கை குலுக்கவும், காப்பி குடிக்கவும், சாப்பிடவும், எழுதவும் கூட விரல்களையும் கைகளையும் பயன்படுத்திக் கொள்ளப் பழகி இருக்க வேண்டும். பின் கைகளைச் சுழற்றுங்கள். உள்ளங்கை கீழே போகட்டும். விரைந்த அசைவில் விபூதிக் குளிகையை விரல் நுனிகளுக்குக் கொண்டு வாருங்கள். பொடித்தூளாக நுணுக்குங்கள். பக்தரின் கைகளில் உதிருங்கள்.

மந்திரவாதியின் இதே கைச்சால முறையைச் சாமியார் பயன்படுத்துவதில்லை என்றால் பின் ஏன் அவர் சோதனைக்கு உட்பட மறுக்கிறார்? தனது முறை கைச்சால வித்தை அல்ல என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் மெய்ப்-பிக்க வேண்டாமா? எதைக் குறித்து அவர் அஞ்சுகிறார்? தான் அம்பலப்பட்டு விடுவோம் என்றா? மோசடிக்கு இடம் தராத நிலைகளின் கீழ், அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி, அவரது சக்திகள் அறிவியலுக்கும் மனித புரிதல் திறனுக்கும் அப்பால் பட்டவை என மெய்ப்பிக்க மட்டுமே கைத்திற முறையைத் தாம் கையாளவில்லை என்பதை அவதாரங்கள் முதலில் மெய்ப்பித்தாக வேண்டும்.

இந்த வித்தையை அம்பலப்படுத்த, மனிதர் தம் கைகளை வட்டமாக ஆட்டி, அதே போது தூள் செய்வதற்காக வில்லைகளை விரல்களுக்குக் கொண்டு வரும் நேரம் பார்த்து கையைத் தட்டிவிட்டால் போதும், வில்லை கீழே விழுந்து, அவர் அம்பலப் படுவார்.

கைச்சால வித்தை

கைச்சாலம் என்றால், தம் செய்முறையைப் பிறர் அறிய முடியாத அளவுக்கு மிக வேகமாக வித்தைகளைச் செய்யும் திறன் இந்தக் காரணத்துக்காகத்தான் கைகளையும் உடலையும் அசைக்கிறார்கள். பொருள்களைப் படைத்துக் காட்டுதல், பொருள்களைத் தோற்றுவித்தல், மறைய வைத்தல், ஒன்றை இன்னொன்றாக உருமாற்றுதல் முதலிய சால வித்தைச் செயல் பாட்டை மறைக்க இந்த உடலியக்கம் உதவு கிறது.

---------------நன்றி:- பி.பிரேமானந்து "அறிவியலா, அருஞ்செயலா'

23.11.09

தமிழரின் வளம் கெட்டழியவே கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை தீபம்
பேராசிரியரின் பொருளாதாரப் பார்வை: தீபமும்-திகைப்பும்

பேராசிரியர்
க. அன்பழகன் எம்.ஏ.,

(1947இல் விடுதலையில் வெளியான (கார்த்திகை 7 விய ஆண்டு) தீபமும் திகைப்பும் என்னும் பேராசிரியரின் திருவண்ணாமலை தீபம் பற்றிய கட்டுரை.

தம்முடைய கட்டுரையில் திருவண்ணாமலையில் ஏற்பட்ட தாழம்பூப் பிரச்சினை புராண வரலாற்றினை எடுத்துக்கூறிச் செயற்கைத் தீபம் ஏன் ஏற்றவேண்டும் என்று வினா எழுப்பி, ஒளியே முக்கிய மென்றும் எனவே தான் கடவுள் பெயரால் இவ்விழா வெனின் நூதன மின்சார சக்தியினால் குறைந்த செலவில் தீபத்தைப் போல் பல மடங்கு ஓளியைத் தரக்கூடிய மின்சாரவிளக்கை ஒன்றாகவோ ஓராயிரத்து ஒன்றாகவோ போட்டு (அமைத்து) ஏழை மக்களுடைய பொருளுக்கு அழில்லாமல் செய்யட்டும் உற்சவ காலங்களில் தீவட்டிக்கு பதில் காஸ்லைட் உபயோகிப்பது முறையானால் இது மட்டும் எப்படித்தவறாகும்? அனல் விளக்குக்குப்பதில் மின்சாரத் தொடர் விளக்குகள் அமைத்து கார்த்திகை கொண்டாடும் போதும் தீபம் மட்டும் ஏன் மாற்றம் பெறக்கூடாது என்று தீபத்திருநாள் கொண்டாடுபவர்களுக்கு மாற்றுச் சிந்தனை அளிக்கிறார். தீபம் நமக்குத் திகைப்பாக இருக்கிறது. தீபத்தைப் போற்ற வேண்டாம் என்று முடிக்கிறார்.)


கார்த்திகை நெருங்கி விட்டது! வீடுகளிலெல்லாம் அகல் விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றிவைப்பார்கள். இரவு முழுவதுங்கூட விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றியபடி இருப்பர், செல்வர்கள் வீடுகளிலே பணியாட்களும் பிறரும். அந்நாளிலே திருவண்ணாமலையிலே தீபம். மலை யுச்சியிலே பெருங்கொப்பரை, அது நிறையக் கற் பூரத்துடன் கலந்த நெய், மேலும் மேலும் நெய்யும் திரியும் கொட்டிய வண்ணம் பக்தர்களின் கூட்டம்! தமிழகத்தில் உள்ள பெருவாரியான கோவில்களி லேயும் அந்தந்தக் கடவுள்களின் பொருள் நிலைக் கேற்ற வண்ணம் கார்த்திகை கொண்டாடப்பட்டே வருகின்றது.

தீபத்திற்காக ஆயிரக்கணக்கான மணக்கும் நெய்யும் நூற்றுக்கணக்கான (கேஸ்) பெட்டி கற்பூரமும், கட்டுக்கணக்கிலே திரி நூலும் எரிக்கப்படுகின்றன. வீடுகளிலே ஏற்றப்படும் கோடிக்கணக்கான கை விளக்குகளால் ஆயிரக்கணக்கான குடங்கள் அளவுள்ள எண்ணெய் வீணாக எரின்கிறது. தீப தரிசனத்திற்காக திருவண்ணாமலைக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களால், அவர்களது போக்குவரத்துக்காக ரயிலுக்குச் செலவிடும் தொகையும், வெளியூர்களில் தங்குவதால் ஏற்படும் செலவுத் தொகையும் ஏராளம். அவர்களுக்கு ஏற்படும் பொருள் இழப்பும் ஏராளம்!

நாசப்பட்டியல்

இவ்வளவு பெருங்கூட்டமான மக்கள் ஆண்டிலே ஓரிரண்டு நாட்கள் திருவண்ணாமலையிலே வந்து குவிவதை முன்னிட்டு நூற்றுக்கணக்கிலே கட்டப்பட்டுள்ள சத்திரங்களும், மடங்களும், பாக்கி இருக்கும் முன்னூற்று அறுபத்து மூன்று நாட்களும் பயன்படாமல் வீணாகக் கிடப்பதால் (சில சோம்பேறிகளுக்கு உறையுள் ஆவதைத் தவிர ) அதற்காகக் செலவழிக்கப்பட்ட மூலதனம் பாழாகின்றது. இவ்வளவு பெருங்கூட்டமாக மக்கள் திரளுவதால் இலாபம் அடையும் (கொள்ளையடித்து வாழும்) கோயிற்பூனைகள், செல்வம் மிக்க செட்டியார் இனத்-தாரையும், பிறதமிழரையும் தூண்டிவிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் வெள்ளியிலே வாகனம், நூதனரதம், அற்புத கல்யாண மண்டபம், ஈஸ்வரனுக்குப் பொன்னிலே கவசம், அம்மனுக்கு வைர ஒட்டியாணம் புதிய கோபுரக் கும்பாபிஷேகம், வேத வியாகர்ண பாடசாலை என்பவைகளை அமைக்கச் செய்வதாலும், அவைகளின் விளம்பரத்தின் மூலம் ஏராளமான மக்களை திரளச்செய்துஅந்த பெருங்கூட்டத்தால் பெருங்கொள்ளை கொண்டு கவலையின்றி வாழ்வதற்கு வழிசெய்து கொள்ளுந்தன்மையாலும், ஏற்படும் பொருள் இழப்பு ஏராளம். எவ்வகையானும் தமிழர் கோடிக் கணக்கிலே பொருளைக் கொட்டியழவும் தமிழரின் வளம் கெட்டழியவும் காரணமாகின்றது கார்த்திகை தீபம்.

பொருள் பாழாக்கப்படுவதைத்தவிர மக்களுக்க ஏற்படும் தொல்லையும், தொத்து நோயும், துயரும் பெருந்துன்பமும் அளவற்றவை என்பதோடு, அவர்களுடைய அறிவு அழியுந்தன்மையே திகைப்பை விளைப்பதாம்!

இது பற்றிய புராணக்கதை யாவருக்கும் தெரிந்தே! இதன் படி மும்மூர்த்திகள் சந்திக்கின்றனர். ஏன்? எங்கே? எப்பொழுது? யாருக்கும் தெரியாது. மும்மூர்த்திகளிலே ஒருவர் சிவன், அவரே முழுமுதற் கடவுள் என சைவ மதத்தினர் கூறுவர்! அவர் ஏன் மற்ற சாதாரணக் கடவுளரைச் சந்திக்க வேண்டும்? நமக்குத் தெரியாது! சந்திப்பது ஒப்புரிமை படைத்தவர்களிடத்திலேயே நிகழ்வது இயற்கை. முழுமுதற் கடவுளின் உயர்வை எடுத்துக்காட்ட வந்த இக்கதையில் சிவனைக்காண மற்றிருவரும் சென்ற போது இவை நிகழ்ந்த தாகவாவது கூறியிருக்கலாம். அவ்வாறும் இல்லை. சந்தித்த இடத்திலேயே யார் பெரியவன் என்ற விவாதம் ஏன் தோன்றவேண்டும்? எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தபோது பிரம்மாவும் விஷ்ணுவும், அப்பொழுதே யார் பெரியவன் என்ற சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள விரும்பியதின் விளைவா? மற்ற புராணங்களின்படி விஷ்ணுவின் மகன் பிரம்மா என்ற கதையிருக்க சந்தித்த போது திடீரென்று சந்தேகம் பிறப்பானேன், தந்தைக்கும் மகனுக்குமே? யார்பெரியவர், என்ற விவாதம் மூர்த்திகளிடையிலே நடப்பானேன்? முக்காலத்தையும் உணரும் மூர்த்திகள் ஒருவரையொருவர் சந்திக்கப் போவதையே உணர வில்லை! சந்தித்தால் சச்சரவு ஏற்படும் என்பதை மட்டும்தான் உணரவில்லையா? அன்றி இவைகளை எதிர்பார்த்தேதான் சந்தித்தார்களா? அப்படியானால் முடிவும் அவர்கள் அறிந்ததேதானா? அதற்கு ஏன் ஒவ்வொரு புதுஉருவிலே தோன்ற வேண்டும்? நாமறியோம் என்பது மட்டுமல்ல; மும்மூர்த்திகளேகூட யாரை,எங்கே, எப்பொழுது சந்திக்கவேண்டும் என்ற நிர்ணயமில்லாமலும், ஏன் சந்திக்கவேண்டும் என்ற சிந்தனை இல்லாமலும், என்ன விளையும் என்பதை அறியாமலுமே தான் இருந்திருக்கவேண்டும்!

இது நிற்க. யார் பெரியவர் என்று பிரம்மாவுக்கு விஷ்ணுவுக்கும் இடையிலே வாதம் ஏற்பட்டதே தவிர, கதையின்படி யார் பெரியவர் என்ற முடிவு காணப்படவில்லை. இடையிலே சிவனார் ஜோதியாகி வானளாவினார்! இருவருக்கும் பெரியவருமானார்! அவ்வளவுதான்!

பொய் மூர்த்திகள் இது கிடக்க. ஜோதியாய் நின்ற பெருமான் அடியையும், முடியையும் காணச் சொன்னபோது எப்படிப் பேசினாரோ? அந்த முகந்தெரிந்தால் பிரம்மா - முடியைக் காண்பதும் கடினமாமோ? அசரீரியாகச் சொன்னதாக வைத்துக் கொள்வோம்! அடிமுடியைக் காண விரும்பிய இருவரும் பன்றியும் அன்னமுமாய் உருவெடுப்பானேன்? பன்றியாக பலமுறை உருவெடுத்த பழக்கத்தால் திருமால் தான் உடனே பன்றி வடிவெடுத்தார்! பிரம்மாவாவது ஏன் உயரப்பறக்கக்கூடிய கருடனாக உருவெடுக்கக் கூடாதோ? தெரியவில்லை யென்றோ முடியவில்லை என்றோ கருத முடியுமா? இருந்ததென்றால் இரு மூர்த்திகளும் தங்களின் இயற்கை உருவத்தைவிட இதற்கேற்ற புது வடிவெடுத்துங்கூட காணமுடியாத காரணமென்ன? ஜோதி யென்றால் அடிமுடி இல்லாதது என்றால்முழுமுதற் கடவுளல்லவா? எனவே அடிமுடி இல்லாத ஜோதியாகி நின்றார் என்றால் - இல்லாத அடியையும் முடியையும் காணும்படி கூறியது பொய்யல்லவா? அடி முடி இருந்ததென்றால் இருவரும் காணாததால் காண இயலாததால்மூர்த்திகள், படைப்பவர், காப்பவர் என்று பேசப்படுவது முழுப்பொய்யல்லவா? பின் விஷ்ணுவிற்கு மட்டும் கோயில்களேன்? பிரம்மாவைவிட எக்காரணத்தாலே விஷ்ணு கடவுளென்று கருதப்படமுடியும்?

விஷ்ணுவுக்கோ, பிரம்மாவுக்கோ கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்தும் திறமை யிருந்தாலும் தாங்களும் ஜோதியாகி (தீயாகி) ஜோதியிலே கலந்து அய்க்கியமாகி அடியையோ முடியையோ மட்டுமல்ல; அடி முடி இரண்டையுமே கண்டு திரும்பி வெளிவந்திருக்கலாம். அப்படியானால் சிவன் பெருமை நிலைக்காதே என்றெண்ணிய புராணீகர், விஷ்ணுவை பன்றியாக்கி, பிரம்மாவை அன்னமாக்கி, அரன் பெருமையைத் தடுத்தாட் கொண்டார் போலும்!

தாழம்பூ பிரச்னை

இனி பிரம்மா முடியைத் தேடச்சென்றபோது வந்த தாழம்பூ முடியிலிருந்து வந்ததென்றால், முடியிருந்ததென்றாகிறது! அப்படியானால் பிரம்மாவால் ஏன் அடையமுடியவில்லை? அவரால் அடைய முடியவில்லையென்றால் தாழம்பூவால் மட்டும் கீழ்நோக்கி அவ்வளவு தூரம் வர முடிந்தது? தாழம்பூ தானாகவர வில்லையென்றால் - அது அசேதனம், சேதனமென்று, தானாக இயங்குவதென்று இயற்கையின் தன்மைக் கேற்ப இயல்வது. எனவேதான் கீழே விழுந்தது என்றால் அன்னப்பறவையிடம் எப்படி பேசமுடிந்தது? பொய் சாட்சி கூறியதுதான் எப்படி ? அது கூறவில்லை, அன்னப்-பறவை அடையாளமாகக் கொண்டு வந்ததென்றால், தாழம்பூவைத் தண்டிப்பானேன்? தாழம்பூவைச் சிவனார் தண்டித்ததினின்றும் அது தலைமையிலே இருந்தது என்பதைச் சிவனார் ஒப்புக்கொண்டதாகத் தானே பொருள்? அப்படியானால் ஜோதியின் முடியிலே தாழம்பூவோ தாழைச் செடியோ எப்படியிருக்க முடியும்? எரிந்து சாம்பலாய்ப் போயிருக்காதா? ஜோதியான போது இறைவன் இவைகளை நீக்கிவிட்டாரா? பிறகு தாழையின் கதியென்ன? ஜோதியிலே கங்கை சந்திரன் முதலானோர் தங்கி இருப்பதனால் ஒரு தாழம்பூ ஏன் விழவேண்டும்? இறைவன் தலையிலே சூட்டப்பட்டு விட்டால் பின் என்றும் அழியாது என்ற கூற்று பொய்ப்பதன்றோ? அதுவன்றி இறைவன் முடியினின்று விழும்போது தாழை பொய் சொல்லிற்றென்றால் சிவனின் மகத் துவந்தான் என்ன?

1 1/2 அடி உருவம் ஏன்

இறைவன் ஜோதியாய் நின்றதால்தான் அண்ணாமலையே தேயுஸ்தலம் என்று கூறப்படுவதை ஏற்றுக்கொண்டால் பின் ஏன் தீபம் ஏத்துகின்றனர்? அரனுடைய அடிமுடிகளை அரியும் அயனுமே காணமுடியவில்லையென்றால், அடி முடி இரண்டையுமே எவரும் காணக்கூடிய வகையிலே தீபம் அமைப்பதன் அர்த்தமென்ன? அல்லது அத்தீபத்தைத் கண்டவுடனேயே, மக்கள் இறைவனின் செந்தழல் மேனியையும் அடிமுடிகாண இயலா விண்ணுயர ஓங்கிய உயர்வையும் உணர்கின்றனர் என்றால், தீப விழா நடைபெறும் அதே இடத்தில் அருணாசலேஸ்வரருக்கு ஒன்றரை அடி உயரத்தில் சிலை (விக்ரகம்) எதற்காக? இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக தீபம் ஒளி விட்டும் சிவனாரின் இலிங்க வடிவமும், மூர்த்தி வடிவமும், ஒரு காலைத் தூக்கியருளும் நடராசரும், பொன்முடி தரித்த சுந்தரேசுவரரும் எதைக் காட்டுகின்றன? அடிமுடியற்ற கடவுளைக் காட்ட தீபம் என்றால் தாளம் தவறாமல் அடிவைத்துச் சதிராடும் சாமிக்கும், இசை கேட்டுருகித் தலை (முடி) யசைக்கும் சாமிக்கும் சிலை எதற்காக? தீபம் கண்ட மக்களுக்கு, தீபத்தின் தத்துவம் பேசும் தொண்டர்கட்கும் விக்ரகவணக்கந்தான் எதற்காக? அண்ணாமலை தீபத்தைக் கண்டு ஜோதி வடிவைக் கொண்டு. அங்கெங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளோடு நிறைந்ததை மக்கள் உணர்ந்து கொண்டால் தீபந்தான் எற்றுக்கு? இவைகளை மக்கள் உணர்தல் எளிதோ, ஞானிகளன்றோ உணரவல்லார் எனின், தீபத்தின் பெயரால் மக்களின் பொருள் பாழாக்கப்படுவானேன்?

அகல் விளக்கிலெல்லாம், மின்மினியின் ஒளியைக் காண்பதாகக் கூறும் பக்தர்கள் அண்ணாமலைக்கே ஆண்டு தோறும் செல்வானேன்?

அறிவுடைமையாகுமா ?

அகில உலகையும் அதில் வாழும் மக்களையும் படைத்த முழுமுதற் கடவுள் ஜோதிவடிவினன் என்பதை உலகோருக்கு உணர்த்தவேண்டுமானால், உலகில் பகல் முழுவதும் விளங்கும் பகலவரனையே அதற்கு ஒர் அடையாளமாக்கியிருக்கலாம்! அகல் விலக்குக்கு எண்ணெய்யோ, தீபத்திற்கு நெய்யுந்திரியுமோ வீணாகாது. இவை வீணாவது பற்றிக் கவலையில்லை யென்றேகருதினாலும்,-அரியும் அயனும் அளவிட முடியாத அரன் என்று எடுத்துக் காட்ட எழுதப்பட்ட இறைவன், அவரவர்கள் பொருள் வலிவுக் கேற்பவும், சேர்ந்த நெய், சூடம், திரி இவைகளுக்கேற்பவும் அளவிடப்படுவது அறிவுடைமையாகுமோ?

அண்ணாமலையே ஜோதிவடிவென்றும், அதற்கு அடையாளமாகவே அதன் மேல் தீபமென்றும் கூறினால், ஜோதி வடிவு ஜோதியை ஏன் இழந்தது என்பதையும் முன்பொரு காலத்தில் ஜோதியாகத்தான் இருந்ததென்றால்,அதுவே நெருப்பாக நின்று மாறிவிட்ட பிறகு எதற்காக செயற்கைத் தீபம் என்பதையும் எண்ணிப்பாருங்கள்!

ஒளியே முக்கியமென்றும், எனவேதான் கடவுள் பெயரால் இவ்விழாவெனின் நூதன மின்சார சக்தியினால் குறைந்த செலவில் தீபத்தைப் போல் மின்சார விளக்கை ஒன்றாகவோ, ஓராயிரத்து ஒன்றாகவோ போட்டு (அமைத்து) ஏழைமக்களுடைய பொருளுக்கு அழிவில்லாமல் செய்யப்படும் உற்சவகாலங்களில் தீவெட்டிக்குப்பதில் காஸ்லைட் உபயோகிப்பது முறையானால் அது மட்டும் எப்படித்தவறாகும்? அகல்விளக்குக்குப் பதில் மின்சாரத் தொடர்விளக்குகள் அமைத்து கார்த்திகை கொண்டாடும் போது தீபம் மட்டும் ஏன் மாற்றம் பெறக்கூடாது?

ஆனால், தீபமோ வழக்கம் போல் வந்து போகிறது! தமிழர் பொருளோ என்றைக்கும் எரிகிற நெருப்பிலே எண்ணெய்யாகிறது! தமிழர் வாழ்வோ இன்றளவும் அறியாமை இருளிலே அழிவுறுகின்றது! இந்நிலையை உணர்ந்ததாலேயே தீபம் நமக்குத் திகைப்பாக இருக்கிறது! தீபத்தைப் போற்ற-வேண்டாம்! திகைப்புற்றே கலங்கவேண்டாம்!

5.11.09

மதம் பிடித்தது யாருக்கு? யானைக்கா? மனிதனுக்கா?


அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தலைப்பில், கவிஞர் கண்ணதாசன் எழுதினார்: அதற்குரிய மறுப்பினை பகுத்தறிவாளர் மஞ்சை வசந்தன் (எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்) அர்த்தமற்ற இந்துமதம் எழுதினார். பல பதிப்புகள் வெளிவந்து உலகம் முழுவதும் இதுவும் சென்றடைந்துள்ளது!

இந்து மதம் அர்த்தமுள்ளதா? அனர்த்தம் உள்ளதா? என்று பக்தகோடிகள் கேள்வி கேட்கும் அளவுக்கு பக்த கேடிகளைப் போன்று, வடகலைப் பார்ப்பனர், தென்கலைப் பார்ப்பனர் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயிலில் நடந்துகொண்டவிதம், மந்திரங்களை உச்சரிப்பதைவிட ஆபாசமான வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டு அடிதடியில் இறங்கியுள்ள செய்தி, பார்ப்பன ஏடான ஜூனியர் விகடனே 1.11.2009 அன்று தேதியிட்டு நேற்று (28.10.2009 அன்று) வெளிவந்த இதழிலேயே கட்டுரை வடிவில் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது.

இந்த காஞ்சி வரதராஜபெருமாள் சன்னதியில்தான், சங்கராச்சாரிகளை முதல், இரண்டாவது குற்றவாளிகளாகக் கொண்டு நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்குக்குரிய கொலை சில ஆண்டுகளுக்குமுன் நடந்தது!

வரதராஜப்பெருமாள் அப்படியே ஆடாமல், அசையாமல் பார்த்துக்கொண்டே இருந்தார்; தனது கோயில் நிருவாகி இப்படி அநியாயமாகக் கொல்லப்படுவதற்காக ஒரு சிறு அனுதாபத்தைக்கூட தெரிவிக்காதது மட்டுமல்ல; ஒவ்வொரு சாட்சியாகக் கலைக்கும் பகவத் காரியங்கள் நடைபெறுகின்றன.

பல சாட்சிகள் தலைகீழ் அந்தர்பல்டி அடிக்கிறார்கள்; ஆனால் அந்த வரதராஜப் பெருமாளோ அன்று எப்படி குத்துக்கல்லாய் கிடந்து வேடிக்கை பார்த்தாரோ, அதேபோல இன்றும் உள்ளார்!

இப்போது அதே கோயிலில் அடிதடி ஆபாச வார்த்தைகள் பரிமாற்றம்; ரத்தக் காயங்கள். பகவான் வரதராஜனோ சிவனேன்னு வேடிக்கை பார்த்துண்டிருக்கான்.

பிரச்சினை என்ன சாதாரணமா? அற்ப தேசியப் பிரச்சினையா அல்லது சர்வதேசப் பிரச்சினையா? மிகப்பெரிய தீர்வு காண முடியாத பிரச்சினை அல்லவோ!

அங்குள்ள கடவுள்களுக்கு யார் மரியாதை செய்வது என்பதில் போட்டி! பகவான்கள் மரியாதை இழந்து பரிதாபமான நிலையில் இருப்பதால் ஜூ.விகடனுக்கு எஸ்.ஓ.எஸ். (S.O.S) கொடுத்துள்ளார்கள் போலும்!

நம்மாழ்வார் சந்நிதி அர்ச்சகர் எப்படி ஆரத்தி காட்டலாம், என்று வடகலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரச்சினை கிளப்பி, பகவான்களுக்குப் பாடம் கற்பித்துவிட்டார்கள். அதோடு மட்டுமா? தென்கலைப் பிரிவினர் நையப் புடைத்துவிட்டார்களாம்!

அதென்னய்யா வடகலைப் பிரிவு, தென்கலைப் பிரிவு என்று புதிதாக, அர்த்தமுள்ள ஹிந்துமதம்பற்றி அறியாதார் கேட்கக்கூடும்!

பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில் இந்த வழக்கை பல ஆண்டுகளுக்கு முன்பு விசாரித்தது (நம் ஊரில் உச்சநீதிமன்றங்கள் வருவதற்குமுன் கடைசி அப்பீல் செய்யும் பெரிய கோர்ட் பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில்தான்).

எல்லோரும் வெள்ளைக்கார நீதிபதிகள்தான் அங்கு. அவாளுக்கு வடகலை, தென்கலை சண்டை என்னவென்று விளங்காததால், அவாள் கேட்டள்,“What is Vadkalai and Thenkalai” தென்கலை என்றால் என்னவென்று.

உடனே அவாளுக்கு எளிதில் புரிய வைக்க,“These two partites fight for our English Alphapet) Y and U” (அதாவது பாதம் வைத்த நாமம், பாதம் வைக்காத நாமம்) சண்டை என்றவுடன், வெள்ளைக்கார நீதிபதிகள் கேட்டு சிரி சிரியென்று சிரித்துவிட்டு, அந்தக் கோயில் யானையின் நெற்றியில் எந்த நாமம் வடகலையா, தென்கலையா போடுவது என்பதற்குத்தானே அப்பீல் வழக்கு. அதுவும் நீச்ச பாஷை பேசும் மிலேச்ச ஜட்ஜ்கள்முன்!

யானையின் கருத்தை இதில் கேட்க முடியாதே! அதனால் ஆறு மாதம் வடகலை என்று போடுங்கள்; மற்றொரு ஆறு மாதம் தென்கலை என்று போடுங்கள் என்று விசித்திரத் தீர்ப்பு வழங்கினார்கள்.

நம் நாட்டின் கோர்ட்டுகளைத் தாண்டி வழக்கு பிரிட்டிஷ் பிரிவி கவுன்சிலுக்குச் சென்றபோதிலும், முடிந்தபாடில்லை இன்றுவரை! நேற்று காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் யானைக்குள்ள நாமப் பிரச்சினைபற்றி ஜூனியர் விகடன் செய்தியாளர் தரும் சுவையான தகவல் இதோ:

வடகலை, தென்கலை பிரிவினை பேதத்தின் காரணமாக யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்று இருதரப்பினரிடையே பலத்த போட்டி ஏற்பட்டது தனிக்கதை (மேலே சுருக்கமாக சொல்லப்பட்டது).

.... பின்னரும் பிரச்சினை தொடரவே, இரண்டு பிரிவுக்கும் தனித்தனியே யானைகள் வைத்துக் கொள்வதென முடிவு செய்திருக்கிறார்கள்.

அத்துடனாவது பிரச்சினை முடிவுக்கு வந்ததா? அதுதான் இல்லை.

இருந்தும் திருவிழாக்காலங்களில் யானைகள் வீதியுலா வரும் சமயத்தில், எங்கள் யானைதான் முன்னால் நடந்து வரவேண்டும் என்று மீண்டும் இருதரப்பினரும் வாய்ச்சண்டை போட்டனர். ஆகவே, இரண்டு யானைகளும் ஒரே வரிசையில் ஒன்றுபோல் நடந்து வரவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்!

நம் நாடு 21 ஆம் நூற்றாண்டில் எவ்வளவு முக்கியப் பிரச்சினைகளுக்காகப் போராடுகிறது பார்த்தேளா?

இவ்வளவுக்கும் ஸ்ரீமத் ஆண்டவன் வரதராஜப்பெருமாள் வாயே திறக்கல்லே!

மதம் பிடித்தலைவது இந்த ஆறறிவுள்ள பக்தர்களா? அல்லது ஆறறிவு இல்லாத யானைகளா? இதைக் கண்டுபிடித்துச் சொல்பவருக்கு அந்த யானைமேல் சவாரி! வடகலை யானைமீது ஒருமுறை; தென்கலை யானைமீது ஒருமுறை. ஆனால், ஏககாலத்தில் எப்படி ஏறி அமர்வது? அதுதான் புரியாத புதிர்! அய்யய்யோ, சொல்ல வெட்கமாகுதே!


--------------அகப்பையார் அவர்கள் 29-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை